Type Here to Get Search Results !

தமிழகம்: சொர்க்கமா, நரகமா?

foxconn workers “எங்கள் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எங்கள் வயல்கள் காய்ந்து கிடக்கின்றன. அதோ மழைநீரை சுமந்து கொண்டு மேகங்கள் திசைமாறிப் போகின்றன. விடாதே. மேகத்தைத் துரத்திப்பிடி. மழை பொழியச் செய்” இந்தக் கவிதை வரிகளின் வேகம் இப்போது, அந்நிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் நமது தொழிலாளர்களுக்கு வரத் துவங்கியிருக்கிறது. முதலாளிகளின் விசுவாசமிக்க வேட்டை நாய்கள் அவர்கள் மீது பாய்ந்து குதறுகின்றன. கோரப்பல் காட்டும் அந்த மிருகங்களை உற்றுப்பார்த்தால் ‘வாய்மையே வெல்லும்’ என அதன் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறது. அப்புறம் ஒரு மெடலும் அதன் நெஞ்சில் குத்தப்பட்டு இருக்கிறது.

அந்த மெடலில் “தமிழ்நாடு வெளிநாட்டு முதலீடுகளின் சொர்க்கம்” என அமெரிக்க பங்குச்சந்தைச் சூதாடிகள் நடத்துகிற ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகையின் வாசகங்கள் இருக்கின்றன. ஹூண்டாய், நோக்கியா, ஃபாக்ஸ்கான், ஃபோர்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவற்றிற்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு ஆற்றி வரும் ’அளப்பரிய’ சேவையில் பரம திருப்தி கொண்டு வழங்கப்பட்ட சான்றிதழ் இது. தஞ்சையில் முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சட்டதுறை அமைச்சர் துரைமுருகன் இதனைச் சொல்லிச் சொல்லி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். சும்மாவா! எத்தனை இந்திய விலா எலும்புகளை உடைத்து, எத்தனை இந்தியக் குரல்வளைகளை நெறித்து பெறப்பட்ட அந்நியப் பரிசு அது.

 புதிய பதிவர்கள்

அறிமுகம் - 41

suja kavithaikaL

சுஜா கவிதைகள் என்னும் இந்த வலைப்பக்கத்தில் இதுவரை 58 சிறு சிறு கவிதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த சுஜாதா என்னும் இந்தப் பதிவர் தன் கவிதைகளைப் பற்றி ‘என்னை சுற்றி நடக்கும் சில விஷயங்களை சிறிது கற்பனையோடு கலந்து கவிதையாக்கும் என் முயற்சி’ என்கிறார். விநாயகர் என்னும் தலைப்பில் எழுதிய கவிதை இது:

பட்டும் பீதம்பரமுமாய்
துண்டும் மாலையுமாய்
நேற்றைக்கெல்லாம் கவனிக்கப்பட்ட
முச்சந்தி விநாயகர்
இன்று நிற்கிறார் கவனிப்பார் இல்லாமல்
தேர்தல் முடிந்த வாக்காளர் போல்

சுஜாதா அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் இந்த நிறுவனங்கள் கொண்டிருந்தாலும் தொழிலாளர்களை நடத்துவதில், சுரண்டுவதில் கடந்த நூற்றாண்டுகளின் அடக்குமுறைப் புத்தியோடுதான் இருக்கின்றன. தொழிலாளர்களின் பணிநிலைமை, பணிப்பாதுகாப்பு பற்றி எந்தக் கவலைகளும் அந்த லாப வெறி பிடித்தவர்களுக்கு இல்லை. ரூபாய் ஐயாயிரத்துக்கும் குறைவான ஊதியத்திற்கு, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிற குடும்பங்களிலிருந்து வாகனங்களில் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு கடும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். நச்சுவாயு கசிவு, பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாவது போன்றவையும் வாழ்வின் இயல்பான நிகழ்வுகளாய் விதிக்கப்படுகிறது. எதிர்க்குரல் எழுப்பி, தங்கள் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்ட அங்குள்ள தொழிலாளர்கள் போராடத் துவங்கியிருக்கின்றனர். ஹூண்டாய், நோக்கியா என ஒவ்வொன்றின் வாசலிலும் அடுத்தடுத்து கோஷங்கள் எழும்புகின்றன. தமிழக காவல்துறை அந்நிய நிறுவனங்களின் பக்கம் நின்று, தொழிலாளர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கிறது. இருந்தாலும், அடுத்த அலையாக இன்னொரு போராட்டம் பெருக்கெடுக்கிறது. அங்கே பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிலாளர்கள் திரண்டு நிற்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கிவரும், செல்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனம் பாக்ஸ்கான். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். நிர்வாகம் எச்சரிக்கிறது. ஒற்றுமையை நிலைகுலைக்க காவல்துறை குவிக்கப்படுகிறது. நிர்வாகத்தின் ஆதரவு சங்கமும் தி.மு.கவின் அங்கமுமான தொ.மு.எ.சவினரோடு பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு குறைவான ஊதிய உயர்வு அறிவிக்கப்படுகிறது. ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூவில் இணைந்து சங்க அங்கீகாரம் கேட்கின்றனர். அப்படி இணைந்த 23 தொழிலாளர்களை நிர்வாகம் வேலைநீக்கம் செய்கிறது. தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்கின்றனர். சி.ஐ.டி.யூவின் தலைமையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக சி.ஐ.டி.யூ மாநிலச் செயலாளர் சவுந்திரராஜன் உட்பட 320 தோழர்கள் கைது செய்யப்படுகின்றனர். பின் நீதிமன்ற அனுமதியோடு அனைவரும் விடுதலையாகின்றனர். ஜாமீனில் வெளிவர முடியாதபடிக்கு மீண்டும் பொய் வழக்கு சுமத்தி தோழர் சவுந்திரராஜன் உட்பட 13 பேரை வேலூர் சிறையிலடைக்கிறது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, தோழர் சவுந்திரராஜன் உட்பட அனைவரையும் கைவிலங்கிட்டு கிரிமினல் குற்றவாளிகள் போல அழைத்து வந்திருக்கிறது தமிழக காவல்துறை. யாருக்காக யார் சதைகள் எப்படியெல்லாம் ஆடுகின்றன?

கைவிலங்கிட்டு அழைத்து வந்ததால் இந்த அரசு ஒன்றும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அசிங்கப்படுத்திவிட முடியாது. ஆங்கிலேயரை எதிர்த்து, தூத்துக்குடி கோரல் மில்லில் நடந்த முதல் வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சிதம்பரனார் கைவிலங்கிடப்படவில்லையா?  இந்த தேசத்தின் அருந்தவப்புதல்வன் பகத்சிங் கைவிலங்கிடப்படவில்லையா? அந்தத் தியாகங்களின் முன்பு இவை மிகச் சாதாரணமானவையானாலும் மகத்தானவை. மென்மேலும் தியாக வெளிச்சம் பரவுவதற்கான திரிகள் இவை. சிறைக்கூடங்கள் இப்படியாவது தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளட்டும். அசிங்கமானதும், அருவருப்பானதும் ஒன்றுதான். அன்றைக்கு அவர்களை கைது செய்தது ஆங்கிலேயர். இன்றைக்கு இவர்களை அதே காரணங்களுக்காக கைது செய்வது ‘தமிழனத்தலைவர்!’

அடக்குமுறைகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. வெயிலுக்கும், வெண்பனிக்கும் மலைகள் அஞ்சுவதில்லை. அதோ, இன்னொரு பக்கம் என்.எல்.சியில் முழக்கங்கள் எழும்புகின்றன. கேட்க மறுத்து தமிழக அரசு காதுகளைப் பொத்திக்கொள்ளும் வார்த்தைகள் அவற்றில் ஒலிக்கின்றன. “தமிழகம் உள்ளூர்த் தொழிலாளிகளுக்கு நரகம்!”.

கருத்துரையிடுக

10 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. நெத்தியடி பதிவு சார். மிகவும் விழிப்புணர்வுமிக்க சிந்திக்கவைக்கும் எழுத்து நடை. அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 2. தொழிலாளிகளை தங்கள் வீடு பிள்ளைகள் போல நடத்தும் , ஷெல் (provide a/c vechicles for staff pick up, drop- shell shared service centre, ஐபிஎம், மெரிட் uk (pay staff home net bill) , டாயிச் வங்கி போன்ற நிறுவனங்கள் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா.

  பதிலளிநீக்கு
 3. //இன்றைக்கு இவர்களை அதே காரணங்களுக்காக கைது செய்வது ‘தமிழனத்தலைவர்!’ //

  அதனால் தமிழனத் தலைவரிடம் கூட்டணி சேராமல் இருந்துவிடப் போகிறீர்களா இல்லை கடந்த ஆட்சியில் ஜெயலலிதா செய்த அட்டுழியங்களுக்காக இப்போது போயசுக்கு காவடி எடுக்காமல் இருந்துவிடப் போகிறீர்களா?

  எளிய தொண்டர்களின், தலைவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது உங்களது கட்சிதானேயன்றி, கருணாநிதியோ ஜெயலலிதாவோ ஹுண்டாயோ அல்ல. அவர்களது மக்கள் விரோதக் கடமையைத்தான் அவர்கள் சரியாகச் செய்துள்ளனர். நீங்கள்தான் சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக போலியாக நடித்து மக்களையும், போராடும் உழைப்பாளிகளையும் அவமானப்படுத்துகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. //ஆங்கிலேயரை எதிர்த்து, தூத்துக்குடி கோரல் மில்லில் நடந்த முதல் வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சிதம்பரனார் கைவிலங்கிடப்படவில்லையா? இந்த தேசத்தின் அருந்தவப்புதல்வன் பகத்சிங் கைவிலங்கிடப்படவில்லையா? அந்தத் தியாகங்களின் முன்பு இவை மிகச் சாதாரணமானவையானாலும் மகத்தானவை. மென்மேலும் தியாக வெளிச்சம் பரவுவதற்கான திரிகள் இவை. சிறைக்கூடங்கள் இப்படியாவது தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளட்டும். அசிங்கமானதும், அருவருப்பானதும் ஒன்றுதான். அன்றைக்கு அவர்களை கைது செய்தது ஆங்கிலேயர். இன்றைக்கு இவர்களை அதே காரணங்களுக்காக கைது செய்வது ‘தமிழனத்தலைவர்!’//

  this lines show ur tempo in writing. super sir. who will realise this.

  பதிலளிநீக்கு
 5. கிழ‌க்கிந்திய‌ க‌ம்ப‌னிக‌ளுக்கு, அப்போதைய‌ முக‌லாய ம‌ன்ன‌ர்க‌ளும், பிற‌ குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ளும் செய்த‌தை, இன்று இந்திய‌ மைய‌ அர‌சும், மாநில‌ அர‌சுக‌ளும் அந்நிய‌ முத‌லீட்டு க‌ம்ப‌னிக‌ளுக்கு செய்கின்ற‌ன‌. அன்று அர‌சர்க‌ளுக்கு மேலைநாட்டு சாராய‌ங்க‌ளும், பொருள்க‌ளும், இன்ன‌பிற‌வும் த‌ந்து கிழ‌கிந்தியக் க‌ம்ப‌னி இட‌ங்க‌ளை பெற்றுக் கொண்டு அர‌சையே தன் விருப்ப‌த்திற்கு வ‌ளைத்து, பின் நாட்டையே பிடித்து வ‌ள‌ங்க‌ளை சூறையாடிய‌து. இப்போது, அதே சரித்திர‌ம் வேறு பெய‌ரில் ஆட்சியாளர்க‌ளையும், அதிகார‌ மைய‌ங்க‌ளையும் த‌னியாய் க‌வ‌னித்து 'உல‌க‌ம‌ய‌மாக்க‌லாய்' திரும்பி வ‌ந்திருக்கிற‌து. அப்போதைய‌ சில‌ர், பிரிட்டீஸ்கார‌ன் புக‌ழ் பாடி அவர்க‌ளின் பிழைப்பை ம‌ட்டும் பார்த்து கொண்ட‌து போல், இன்றும் சில‌ர் அந்நிய‌ க‌ம்ப‌னிக‌ளின் நோக்க‌ம் அறியாது, வீடு, அலுவ‌ல‌க‌ம் வாட‌கைக்கு விடுவ‌து முத‌ல், பெண்க‌ளைத் திரும‌ண‌ம் செய‌வ‌துவ‌ரை `அந்நிய‌ க‌ம்ப‌னியா' என மோக‌ம் கொண்டு தேடி அலைகின்ற‌ன‌ர்.

  பதிலளிநீக்கு
 6. பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை சம்பள உயர்வுக்கு போராடுகின்ற தொழிற்சங்கத்தினரை ஒரு குற்றம் செய்யபவராக பாவித்து சிறை படுத்துவது மிகவும் வருந்தத் தக்கது, கண்டனத்துக் குரியது. இருக்கிற வேலையையே பாதுகாப்பதிற்கும், சம்பள உயர்விற்கும் தொழிற்சங்கங்களின் ஈடுபாடு இல்லாமல் எந்த ஒரு நிறுவனமோ அரசாங்கமோ தொழிலாளர்களுக்கு தானாக முன் வந்து கொடுத்ததில்லை.

  ஒரு குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளியின் குடும்பம் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து முன்னேற வைப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. அனுபவத்தில் உணர்ந்தவன். தொழிற்சங்கங்களின் உதவியின்றி சம்பளம் என்றும் தானாக உயர்ந்ததில்லை. வெறும் படித்தவர்கள் மட்டும் நல்ல வசதியோடு இருப்போம், மற்றவர்களைப் பற்றி கவலைப் படாமல் தன் குழந்தைகளை படிக்க வைக்க அல்லல் படும் இத் தொழிலாளிகளுக்குப் ஆதரவாக நிற்கும் தொழிற்சங்கங்களை எள்ளி நகையாடுவதும் வருந்தத் தக்கதே. தன் வேலைக்கோ அல்லது தன் சுய கௌரவத்திற்கோ பாதகம் வரும் வரை இதன் பயனை உணருவது கடினம்.

  ஒரு அரசாங்கம் நல்ல தொழிற்சாலைகளை மட்டும் அல்ல, அதில் வேலை செய்யும் தொழிலாளிக்கும் உதவிட வேண்டும். அந்த நிலங்களை கையகப் படுத்தியவர்களையும் கணக்கில் கொண்டு உதவிட வேண்டும். இது சம்பந்தமாக TV யில் வந்த உரையாடலை கீழ்கண்டு பார்க்கவும்.

  http://www.pathivu.net/tv_shows/?m=view&vid=26552&id=3

  அதில் பேசும் மக்களின் குரல்களையும் சேர்த்துக் கேளுங்கள்.

  பதிலளிநீக்கு
 7. Class Character reflects. One of the richest family in the world ruling Tamil Nadu. We can not expect justice. Our Class will give abefitting reply. Earlir V.P.C, even at that time, the present C.M, was CM, now V.P.C's brought up A.S, Karunanidhi will reep for this in near future. Let us make 23rd programme call by CITU a grand sucess.

  பதிலளிநீக்கு
 8. //மென்மேலும் தியாக வெளிச்சம் பரவுவதற்கான திரிகள் இவை. சிறைக்கூடங்கள் இப்படியாவது தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளட்டும். அசிங்கமானதும், அருவருப்பானதும் ஒன்றுதான். அன்றைக்கு அவர்களை கைது செய்தது ஆங்கிலேயர். இன்றைக்கு இவர்களை அதே காரணங்களுக்காக கைது செய்வது ‘தமிழனத்தலைவர்!//

  நெத்தியடி பதிவு

  பதிலளிநீக்கு
 9. இதே போல பன்னாட்டு நிறுவனங்களின் அட்டூழியங்களை எதிர்த்த 'குற்றங்களுக்காக' மேற்கு வங்கத்தில் இருக்கும் சிபஎம் அரசும் தமிழகத்து 'தமிழினத் தலைவர்'யைவிட ஒரு படி மேலே சென்று அடக்குமுறை ஏவி விட்டதே ஏன்? அப்போது மாதவராஜ் தொழில்மயமாக்கம் என்று நியாயப்படுத்தினாரே ஏன்?

  பதிலளிநீக்கு