அயோத்தி: அன்சாரி காத்திருக்கிறார்!

AYODHYA_243197e ‘ஊர்வலம், பேரணிகளுக்குத் தடை’, ‘கேன்களில் டீசல், பெட்ரோல் விற்கத் தடை’, ‘மொத்தம் மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்பத் தடை’ என அரசின் ஏகப்பட்டத் தடைகளோடு நாடு முழுவதும் பெரும் எச்சரிக்கை முஸ்தீபுகள் செய்யப்பட்ட ‘அயோத்தி’ வழக்கின் தீர்ப்புக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் ஒரு இடைக்காலத்தடை விதித்திருக்கிறது. அந்த தீர்ப்பு குறித்து இன்னொரு தீர்ப்பு வருவதற்கு இந்த நாடு இனி காத்திருக்க வேண்டும். பொறுமையற்ற, கொந்தளிப்பான, எரிச்சல்மிக்க, சொல்லப்போனால் இதற்கெல்லாம் அவசியமற்ற இந்த நேரத்தில், தீர்ப்புக்காக காத்திருக்கும் ஒரு மனிதரைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும்.

1961ல் தொடுக்கப்பட்ட ‘அயோத்தி வழக்கின்’மனுதாரர்களில் உயிரோடு இருக்கும் ஒரே மனிதரான ஹசீம் அன்சாரி. ‘மசூதியைக் காட்டிலும் தேசமே முதன்மையானது’ என்று  சொல்வதைக் கிண்டலாகவோ, நடிப்பாகவோ பலரும் கருதக்கூடும். அயோத்தியில் இருக்கும் அவரது வீட்டை இப்போது செய்தியாளர்கள் திரும்பவும் முற்றுகையிடுகின்றனர். ஊடகங்களின் கூத்துக்கள் அனைத்தையும் கடந்தகாலங்களில் பார்த்துவிட்ட அவர், வர இருக்கிற ‘அயோத்தி தீர்ப்பு’ தவிர மற்ற விஷயங்களையேப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

“நேற்று கியான்தாஸை சந்தித்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன்” என்று அவர் சாதாரணமாகச் சொல்கிறார். தாஸ் வேறு யாருமில்லை. ‘அகரா பரிஷத்தின்’ தலைவரும், புகழ்பெற்ற ஹனுமன் கோவிலின் குருக்களுமாவார். இந்த சர்ச்சையில் எதேனும் தீர்வு குறித்து அவர்கள் இருவரும் பேசியிருக்கக் கூடுமோ என நினைக்கத் தேவையில்லாமல் அவரே சொல்கிறார். “நீதிமன்ற வழக்கு தனி. அதனை எங்களுக்கிடையே அனுமதிப்பதில்லை. கொஞ்சம் கூட சந்தேகப்பட முடியாத உணர்வுகளை அவர் முகத்திலும், குரலிலும் பார்க்க முடிகிறது.

“எங்களிடையே கசப்புகள் இருந்ததில்லை. வழக்கு ஆரம்பிக்கும்போதும் நண்பர்களாயிருந்தோம். வழக்கு நடந்த காலங்களிலும் நண்பர்களாயிருந்தோம்” இப்படித்தான் இதர மனுதாரர்களோடு அவரது நட்பும், உறவும் இருந்திருக்கிறது. அயோத்தியின் உள்ளூர்வாசிகள் ஹசீம் அன்சாரியைப் பற்றி நிறையச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மாலையிலும் ‘திகம்பர அகாராவின்’பரமஹன்ஸ் தாஸ் வீட்டுக்கு அன்சாரி சைக்கிளில் சென்று சீட்டு விளையாடுவாராம்! “நானும் பரமஹன்ஸும் சைக்கிளில் கோர்ட்டுக்கு ஒன்றாகவேச் செல்வோம். நான் அழுத்துவேன். அவர் பின்னால் உட்கார்ந்திருப்பார். ஒருதடவை நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டிய ஆவணங்களை அவர் கொண்டு வரவில்லை. நான் என்னிடமிருந்ததை நகலெடுத்துக் கொடுத்தேன்” என நினைவு கூர்ந்த அன்சாரி “அப்போதெல்லாம் சூழல் சேதமடையவில்லை” என்கிறார்.

அவரது வீட்டிலிருந்து ரோட்டைக் கடந்தால் இருக்கும் ‘பிரச்சினைக்குரிய இடத்தை’ அணுகுவதற்கு இன்று நான்கு அடுக்குகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவைகளைப் பார்த்தவாறே, 1949 டிசம்பரில் கடைசியாய் அவர் மசூதிக்குச் சென்ற நாளை எண்ணிப் பார்க்கிறார். அன்று இரவுதான் ராம்தாஸ் என்னும் உள்ளூர் சாது ஒருவன் மசூதியின் சுவர்களைத் தாண்டி உள்ளே சென்று ராமர் சிலைகளை வைத்ததாகவும் சொல்கிறார். அது நடந்து 12 வருடங்களுக்குப் பிறகுதான் வழக்குத் தொடுத்ததாகக் குறிப்பிடுகிறவர், “இது உள்ளூர் பிரச்சினை. பிரச்சினையின் முகத்தையே அரசியல்வாதிகள் மாற்றிவிட்டனர். இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் இப்பிரச்சினையை வேறு வகையில் கையாண்டிருப்போம்” என்கிறார். குளத்தைத் தேடி வரும் மீன்களைப் போல அரசியல்வாதிகளைச் சித்தரிக்கிற அன்சாரி “எப்படி குளத்தைவிட்டு மீன்கள் வெளியே இருக்க முடியும்” எனச் சிரிக்கிறார்.

அயோத்தி, அதன் வழக்கமான கதியில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு இருக்கின்றனர். குல்தீப்சிங் என்னும் ஜவான், “இப்போது அமைதியாக இருக்கிறது. தீர்ப்புக்குப் பிறகு வேறு மாதிரியாகலாம். நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்.

நகரத்தில் தொற்றிக்கொண்டிருக்கும் பதற்றம் தன்னை அணுகாமல் அன்சாரி இருக்கிறார். ‘செப்டமர் 24 தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். இத்தோடு முடியட்டும் என ஆசைப்படுகிறேன். ரொம்ப காலமாக இழுத்துக்கொண்டு இருக்கிறது. 1947க்கு முன்னால் இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் சகோதரர்களாக அழைக்கப்பட்டனர். மீண்டும் அப்படியொரு காலம் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்கிறார்.

“ஒருவேளை முஸ்லீம்களுக்கு எதிராக இந்தத் தீர்ப்பு இருக்குமானால், நீங்கள் உச்சநீதிமன்றம் செல்வீர்களா?” என்று அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. உடனடியாக, “மாட்டேன். அரசியல்வாதிகள் மேலும் அரசியல் செய்யட்டும். சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லட்டும். நான் இதனோடு 49 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். ஒரு முடிவுக்கு வருவதையே விரும்புகிறேன்” என மறுக்கிறார். அவரது வீட்டு முகப்பில் இருக்கிற துருப்பிடித்த உலோகத்தட்டில் இருக்கும் ‘முகமது ஹசீம் அன்சாரி, மனுதாரர், வழக்கு எண் 4/89’ என்ற எழுத்துக்களும் சரியாகத் தெரியாமல் அன்சாரியின் களைப்பைச் சொல்கின்றன.

ஆதாரம் : Hashim Ansari -- A Long Wait  (அவுட்லுக்)

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. " குளத்தைத் தேடி வரும் மீன்களைப் போல அரசியவாதிகளைச் சித்தரிக்கிற அன்சாரி “எப்படி குளத்தைவிட்டு மீன்கள் வெளியே இருக்க முடியும்” எனச் சிரிக்கிறார்"........Today's politicians

    பதிலளிநீக்கு
  2. அயோத்தியில் இருக்கிற ஒரு சாதுவிடம் இருந்து ஏன் இப்படி ஒரு குரல் வரவில்லையென்பதும், அப்படி ஒருவரிடம் ஏன் அவுட்லுக் பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிடவில்லையென்பதும் இங்கு விவாதத்துக்குரியது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு.ஆனா காஸ்மீர் அயோத்தி பிரச்சினையில் அதிகம் பேர் பின்னூட்டம் விடமாட்டாங்க.

    மனிதனை மனிதன் நேசிக்கும் போது அவன் சார்த்த மதத்தைப் பற்றிய நினைப்பு எவருக்கும் வருவதில்லை. இதை வைத்து அரசியல் செய்பவர்கள் கூட, ஒரு கட்டத்துக்கு மேல் பருப்பு வேகாது என்பதால் எல்லோரும் ஒதுங்கி நின்னு தான் பார்ப்பாங்க. நீதி மன்றத்தின் தீர்ப்பு எப்பிடி வந்தாலும், அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு எங்கும் பிரச்சனை வருமா என்று தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் அயோத்தி, கஷ்மீர் பிரச்சினையில் இருந்து மக்கள் விலக ஆரம்பித்து விடுவார்கள். 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' பாட்டு மனசை விட்டுப் போகமாட்டேங்குது.

    பதிலளிநீக்கு
  4. //அயோத்தியில் இருக்கிற ஒரு சாதுவிடம் இருந்து ஏன் இப்படி ஒரு குரல் வரவில்லையென்பதும், அப்படி ஒருவரிடம் ஏன் அவுட்லுக் பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிடவில்லையென்பதும் இங்கு விவாதத்துக்குரியது என நினைக்கிறேன்//
    பிரச்சினையே இது தான். எல்லாவற்றிலும் நாம் colored glass வழியாக பார்த்தால் தப்பாகத்தான் தோன்றும்! எல்லாவற்றிற்கும் உள்நோக்கம் பார்ப்பது எதற்கும் தீர்வாகாது!

    பதிலளிநீக்கு
  5. //
    //அயோத்தியில் இருக்கிற ஒரு சாதுவிடம் இருந்து ஏன் இப்படி ஒரு குரல் வரவில்லையென்பதும், அப்படி ஒருவரிடம் ஏன் அவுட்லுக் பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிடவில்லையென்பதும் இங்கு விவாதத்துக்குரியது என நினைக்கிறேன்//
    பிரச்சினையே இது தான். எல்லாவற்றிலும் நாம் colored glass வழியாக பார்த்தால் தப்பாகத்தான் தோன்றும்! எல்லாவற்றிற்கும் உள்நோக்கம் பார்ப்பது எதற்கும் தீர்வாகாது! //

    மறுக்கிறேன்.... எப்போதும் சிருபான்மையினர் மட்டும் தியாகியாக்கப்பட வேண்டும் என்கிற பொதுப்புத்தி. பொதுப்புத்தியின் அடிப்படையிலேயே பெரு ஊடகங்கள் செயல்படுகின்றன...

    மாதவராஜின் கேள்வி நியாயமானதே!

    பதிலளிநீக்கு
  6. தோழர் மாதவராஜ், உங்கள் விரைந்த செயல்பாடு மறுபடியும் மறுபடியும் என்னை வியக்க வைக்கிறது. அன்சாரியையும் பரம்ஹன்சையும் நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. உங்களது பின்னூட்டக்கேள்வியிலும் நியாயம் இருக்கிறது.
    -சோழ. நாகராஜன்

    பதிலளிநீக்கு
  7. பெரும்பான்மையினர் விட்டுக்கொடுக்க வேண்டும், சிறுபான்மையினர் அனுபவி்க்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் சொல்கின்றார்கள்.

    உலகில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள், அவர்கள் இந்துக்களுக்கு என்ன சலுகை கொடுத்திருக்கின்றார்கள்,.

    இஸ்லாத்தில் கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்றிருக்கிறது ஒரு சட்டம். என் கோவில் இடிக்கப்பட்டு உன் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. எனவே உன் கோவில் இடிக்கப்பட வேண்டும் என் கோவில் கட்டப்படவேண்டும் என ராமன் சொல்வதில் தவறு இருக்கிறதா.

    பதிலளிநீக்கு
  8. //இது உள்ளூர் பிரச்சினை. பிரச்சினையின் முகத்தையே அரசியல்வாதிகள் மாற்றிவிட்டனர். இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் இப்பிரச்சினையை வேறு வகையில் கையாண்டிருப்போம்” என்கிறார். குளத்தைத் தேடி வரும் மீன்களைப் போல அரசியல்வாதிகளைச் சித்தரிக்கிற அன்சாரி “எப்படி குளத்தைவிட்டு மீன்கள் வெளியே இருக்க முடியும்” எனச் சிரிக்கிறார்.//

    பாபர் நாமாவில் பிற மத சகிப்பினை வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதை அப்படியே தனது மூச்சாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் அன்சாரி என்று சொல்லத்தூண்டுகிறது உங்களின் பதிவு. பரந்த இந்தியாவின் பிரச்சனையாக மாறும் இது என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்தான். தவிரவும், அயோத்தியில் இருக்கும் ஒரு சாதுவிடம் கேட்டால் பாபர் மசூதியே ராமன் கோவிலை இடித்துக்கட்டப்பட்டதுதான் என்று முழங்குவார். இதில் என்ன சந்தேகம்?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!