Type Here to Get Search Results !

இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பெண் தனியாக வாழ வேண்டுமாம்!

single-woman இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெண், குடும்பமாக இல்லாமல், தனியாக இருப்பதே சிறந்தது எனக் குரல்கள் அங்கங்கு ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. உறவுகள் பெண்களுக்கு பெரும் சுமையானவை எனும் கருத்துக்கள் அவைகளில் பொதிந்து இருக்கின்றன. ‘பெண்கள் தனியாக இருப்பதன் அனுகூலங்கள்’ என்று ஒன்-இண்டியாவில் கட்டுரை எழுதி  ஒருவர் பட்டியலிட்டு இருக்கிறார்.

அவைகளில் முக்கியமானவை:

1.பின்னிரவுகளிலும் நீங்கள் வெளியே சென்று வர முடியும். வீட்டிற்கு திரும்பும் போது, உங்களை கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்.

2.உருக்கமான படங்களை நண்பர்களுடன் பார்க்கும்போது, தேம்பியழலாம். யாரும் உங்களைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்.

3.ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு, விருப்பமான தொடரைப் பார்க்கலாம். கால்பந்தாட்டம் அல்லது கிரிக்கெட்டைப் பார்க்க சேனல்கள் மாற்றப்படுகிற கவலையெல்லாம் வேண்டியதில்லை.

4.உலகத்தின் எல்லா நேரமும் உங்களுக்கானது. உங்கள் தோழிகளின் பிரியத்திற்குரிய காரியங்களைச் செய்ய முடியும்.

5. காலையில் நீங்கள் விழித்தெழும்போது, நீங்கள் பார்க்க எப்படி இருக்கிறீர்கள் என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லாதது மிக அருமையான விஷயம்.

6.நண்பர்களுடன் இருப்பதற்கான நேரம் எப்போதும் வாய்க்கும். அதிக நேரம் நண்பர்களுடன் இருக்க முடிவதாக, தனியாக இருக்கும் பெண்கள் சொல்கிறார்கள்.

7. பணியிடங்களில், பதவி உயர்வு பெற்று வேறு ஊர்களுக்குச் செல்லும்போது, பிரிந்து, விட்டுச் செல்கிற கவலைகள் இல்லை.

இந்தக் கருத்துக்கள் சுயம், சுதந்திரம் என்கிற பேரில் மேலோட்டமாகவேத் தெரிகிறது. இன்னும் ஆழமாக யோசிக்க நிறைய உண்டு.

இன்றைய சமூகத்தில் குடும்பம் என்கிற அமைப்பு அதிகார பீடங்களுக்கு ஒத்திசைவாய் கருத்துக்களைக் கொண்டதாகவும், பரப்புவதாகவும் இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக பெண்களுக்கு பெரும் தளைகளும், கட்டுப்பாடுகளும் விதிப்பதாகத்தான் இருக்கின்றன. இதில் ஆண்களே குடும்பத்தின் அதிகார ருசி கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

அவைகளை எதிர்த்து, அதற்குள்ளிருந்தே போராடுவதுதான் வழியாக இருக்கும். ஆணும், பெண்ணும் சேர்ந்து நிற்க வேண்டிய களமிது! அதற்கான போராட்டத்தை இப்போதுதான் பெண்கள்  துவக்கி இருக்கிறார்கள். கேள்விகள் இப்போதுதான் பிறந்துகொண்டு இருக்கின்றன. அதை விட்டு, அதிலிருந்து விலகி ஆணும் பெண்ணும் தனித்தனி மனிதர்களாய் வாழலாம், வாழ முடியும் என்பதெல்லாம் பிரச்சினையின் தீர்வாகாது. மனிதன் ஒரு சமூக விலங்கு. இது விஞ்ஞானம்.

இன்னும் பேச நிறைய இருக்கிறது. நீங்களும் கொஞ்சம் பேசலாமே!

கருத்துரையிடுக

21 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. பெரியாரின் 132 வது பிறந்த நாள் செப் 17. அவர் 1920-30 களில் சொன்ன புரட்சிக் கருத்துக்கள் நடை முறைக்கு வந்து கொண்டுள்ளன். பேராசிரியர் அறிஞர் சந்திரசேகர் ஒரு முறை பெரியாரிடம் கேட்டார்.பெண்ணுரிமை என்கிறீர்களே அவர்களுக்கு என்ன் தான் வேண்டும்? என்று. உடனே பெரியார் சொன்னார், ஒன்றும் ஸ்பெசலாக வேண்டாம்,ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றதோ அவையனைத்தும் பெண்களுக்கு இருந்தால் போதும் என்று.அவர் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்" புத்தகத்திலுள்ள பல புரட்சிக் கருத்துக்கள் இன்றைய புரட்சியாளர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைக்கும். திருமணம் கிரிமினலாக்கப் பட வேண்டும், என்கின்றார்.ஆண்களின் பெண்ணடிமையை அதுதான் சட்ட மாக்குகின்றது என்கின்றார்.ஆண்கள் பெண்களை நண்பர்களாக,சமமாக நடத்தும் காலம் இப்போதே, ஏன் அமெரிக்க போன்ற நடுகளிலே வாழும் தமிழ் இளைய தலைமுறையிலேயே வந்து விட்டது என்பதுதான் உண்மை.

  பதிலளிநீக்கு
 2. பெண்களுக்கு சுதந்திரம் என்பது டி.வி. பார்ப்பது, இரவில் நேரம் கழித்து வருவது, என பட்டியலிட்டு வேண்டி கேட்பதில் இல்லை. சமுதாயம் சார்ந்த, குடும்ப நலன் மீது பிடிப்பு கொண்ட ,அவர்களுக்கு அவர்களாகவே எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் என்பது எதுவும் அவர்க்ளை பாதிக்க கூடாது என்பதில் தான் சுதந்திரத்தின் முக்கியத்துவம் உள்ளது. இன்று பெரியார் எதிர்பார்த்த நமக்கு மன்னிக்கவும் ஆண்களுக்கு இணையான சுதந்திரம் கிடைத்துள்ளது. இருப்பினும் அது குடும்பம் கூசும் விதமாகவும் , பாதிக்கும் விதமாகவும் இருக்க கூடாது ,நம் சமுகம் இப்போது தான் பெண்களுக்கான சுதந்திரன் என்ற பயன்பாட்டையே உள் வாங்கியுள்ளது, ஒரு சமுகமே மாறீனால் தான், பட்டியலிட்ட அனைத்தும் சாத்தியமாகும். ப்கிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. சமுதாய மாற்றங்களை (அவை என்ன தீங்கு பயப்பதானாலும்) யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இப்போதே ஆணும் பெண்ணும் கல்யாணமில்லாமல் சேர்ந்து வாழும் கலாசாரம் பெரு நகரங்களில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம்.

  பதிலளிநீக்கு
 4. தமிழன்!

  ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்பது சரிதான். ஆணே இல்லாமல் பெண்ணும், பெண்ணே இல்லாமல் ஆணும் தனித்தனியாய் வாழ்வது இயல்பாய் இருக்குமா?

  பதிலளிநீக்கு
 5. மதுரை சரவணன்!

  பெண்களுக்கான சுதந்திரம் இன்னும் வாய்க்கவில்லை. அதுகுறித்த பிரக்ஞைகளும், கேள்விகளும், போராட்டங்களும் சென்ற நூற்றாண்டிலிருந்துதான் அதிகமாய் தென்படுகின்றன. இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. நிச்சயம் அது நிகழும். ஆனால், அது ஆணும், பெண்ணும் முற்றிலும் சார்பில்லாமல் தனித்தனியாய் வாழ்வதாய் இருக்காது.

  பதிலளிநீக்கு
 6. DrPKandaswamyPhD !

  நீங்கள் சுட்டிக்காட்டுகிற முறையிலும் கூட ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்கிறார்களே. இங்கே பெண் தனியாய் இருப்பதுதான் சவுகரியம் என்றல்லாவா சொல்லப்படுகிறது! தனியாய் என்றால் ஆண்கள், குழந்தைகள் என யாரும் இல்லாமல். உறவுகள் அனைத்தும் சுமையென அல்லவா சொல்லப்படுகிறது!

  பதிலளிநீக்கு
 7. தாய்லாந்து , ஹாங்காங் போன்ற நாடுகளில் பெண்கள் தனியாக வாழ பழகிக்கொண்டனர்..

  தாங்கள் மிக சுதந்திரமாக சந்தோஷமாக இருப்பதாகவும் சொல்கின்றனர்..


  மேலும் மணமுடிக்கும் முன்பும் பின்னும் ஆண் சுத்தமாக இருப்பானென்று நம்பிக்கை குறையுதாம்..

  அதனால் பொறுப்புகளும் பெண்கள் அதிகமா சுமக்க விரும்புவதில்லையாம்..

  இது என் கூட வேலை செய்யும் பெண்களின் கருத்து..

  அவர்கள் நேரம் கிடைக்கும்போது முதியோர் இல்லத்துக்கோ, அனாதை இல்லத்துக்கோ சென்று உப்யோகமாக கழிக்கவும் செய்கிறார்கள்..

  திருமணம் என்பதே சேவை.. நிறைய தியாகம் இருக்கிறது இருவருக்கும்..

  தோல்விகளும் உண்டு..

  இதையெல்லாம் ஏற்பவர் மட்டுமே திருமண வாழ்வை முழுமையாக அனுபவிக்க இயலும்..

  மற்ற சுத்நதிர பேர்வழிகள் திருமணம் செய்யாமல் , குழந்தை பெறாமல் இருப்பது நல்லது..

  பதிலளிநீக்கு
 8. சுதந்திரம் என்பது தனித்து
  வாழ்வதல்ல; தனித்துவமாய்
  வாழ்வது.
  நாள் போக போக புரிந்து
  கொள்வார்கள்.

  பதிலளிநீக்கு
 9. சந்தான கிருஷ்ணன்!

  //சுதந்திரம் என்பது தனித்து
  வாழ்வதல்ல; தனித்துவமாய்
  வாழ்வது.//

  எவ்வளவு எளிமையாகவும், அர்த்தங்களோடும் சொல்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 10. இது யாரோ ஜாலிக்கு எழுதிப் போட்டிருக்கற லிஸ்ட் மாதிரித் தெரியுது. விஷய்ம் தெரியுமா? ஒரு காலத்துல இப்படி ஒரு வாழ்க்கையை நானும் கன்ஸிடர் பண்ணி இருக்கேன். ரொம்ப சீரியஸாவே!

  பதிலளிநீக்கு
 11. யாரும் யாருடனும் என்பதிலிருந்து இவன் எனக்கு மட்டும் அல்லது இவள் எனக்கு மட்டும் என்று மாறும் இடத்திலிருந்து குடும்ப அமைப்பு தோன்றுவதாய் "வால்கா முதல் கங்கை வரை" யில் சொல்லப்பட்டிருக்கும். பின்னாளில் அதே குடும்ப அமைப்பு பெண்களுக்கு எதிரானதாய் மாறிப்போனது. இந்த இடத்தில் மாற்றங்களின் மூலம் தவறுகளை களைந்து குடும்ப அமைப்பை தொடர்வதுதானே சரியானதாய் இருக்க முடியும்! குடும்பம் என்கிற அமைப்பையே உடைப்பது சரியாய் இருக்குமா? வானமளக்கும் பறவைகளுக்கும் கூடென்ற ஒன்று வேண்டும்தானே. கூண்டுகளை கூடுகளாக்கும் முயற்சியே என் தேர்வு!!

  பதிலளிநீக்கு
 12. //அவைகளை எதிர்த்து, அதற்குள்ளிருந்தே போராடுவதுதான் வழியாக இருக்கும். ஆணும், பெண்ணும் சேர்ந்து நிற்க வேண்டிய களமிது! அதற்கான போராட்டத்தை இப்போதுதான் பெண்கள் துவக்கி இருக்கிறார்கள். கேள்விகள் இப்போதுதான் பிறந்துகொண்டு இருக்கின்றன. அதை விட்டு, அதிலிருந்து விலகி ஆணும் பெண்ணும் தனித்தனி மனிதர்களாய் வாழலாம், வாழ முடியும் என்பதெல்லாம் பிரச்சினையின் தீர்வாகாது.// நூற்றுக்கு நூறு சரியாகச் சொன்னீர்கள். குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படையில் தான் பொதுவுடைமை என்பதையும் மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும் என்பதையும் கட்டமைக்க முடியும்... அது என்ன எல்லோரும் சமூக விலங்கு, சமூக விலங்கு என்கிறீர்கள்? மனிதனும் விலங்கும் ஒரு காலத்திலும் சமமில்லை. பின் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 13. எல்லாமே நாம் எடுத்துக்கொள்ளும் priorities தான். குடும்பம், உறவு என்றாலே விட்டுக்கொடுத்தல் கண்டிப்பாக இருவருக்கும் தேவை. அது இருபக்கமும் இருக்கும் வரை பிரச்சனைகளின் தீவிரம் குறைவாக இருக்கும். ஒருபக்கம் மட்டுமே இருக்கும் பொழுதுதான் பிரச்சனைகள் தீவிரமாகின்றன். விட்டுக்கொடுத்தலுடன் வாழும் வாழ்க்கையா அல்லது தனியானதொரு வாழ்க்கையா என்பது அவரவர் விருப்பங்களைப் பொறுத்தது. பதவிகளைப் பெற நேரம் வேண்டுமெனில், குடும்பத்தின் நேரம் குறையும். குடும்பத்தில் ஆதரவு இல்லையெனில் பெண்ணின் விருப்பம் பொறுத்து அது விட்டுக்கொடுத்தலா, சுதந்திரமா என்ற நிலைக்கு தள்ளும். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். தெளிந்து முடிவு எடுத்து வருத்தப்படாமல் இருப்பது அவரவர் சூழ்நிலை பொறுத்தது. பொதுவாக கருத்து சொல்ல இயலாது. நான் குடும்ப்பம் என்று தேர்வு செய்யலாம். என் தோழி தனித்து இருப்பது என்று முடிவு செய்தால் அதை மதிக்கும் உணர்வு எனக்கு வேண்டும். ஆனால் இத்தகைய ஒரு சூழ்நிலை குழந்தைகளைப் பாதிக்கும் என்றால் நான் அதை விரும்ப மாட்டேன். வாழ்க்கை சூழ்நிலை கொண்டு மிக கவனமாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் இவை.

  பதிலளிநீக்கு
 14. தீபா சொவது மாதிரி இது சும்மா கிண்டலுக்கு எழுதியது மாதிரி தான் தெரியுது. இது மாதிரி சுதந்திரத்தை தீவிரமா யாராவது விரும்பினா அவங்க கூட ஆண் இல்லை வேறு எந்த ஜீவராசியும் இருக்காது. இவங்க வீட்டு வெளியே பொது இடத்தில அலுவலகத்தில் கூட யாரோடும் ஒத்துப் போகாமல்
  முழிப்பார்கள். வருமானம் வரலை என்றால் அடுத்த வேலை சோறு அதைத் தொடர்ந்து மீதி எல்லாம் காலி. பின் புறப்பட்ட இடத்துக்கும் வெகு பினால் போய் கேவலப் பட வேண்டி வரும்.
  முதிர்ச்சி இல்லாத வயதில் இப்படி எல்லாம் தோணும். அதை எல்லாம் சீரியஸா எடுக்கக் கூடாது.

  பதிலளிநீக்கு
 15. //இதில் ஆண்களே குடும்பத்தின் அதிகார ருசி கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.//

  மேலுக்கு இது போன்று தெரிந்தாலும், உண்மையில் பெரும்பாலான குடும்பங்களில் பெண்களின் சொல்தான் - அதை வெளியில் சொல்லிக்கொள்ள ஆண்வர்க்கம் விரும்புவதில்லை அல்லது கெளரவக்குறைவாக நினைப்பதுதான் சமுதாயத்தில் பெரும்பாலும் ஆணாதிக்கம் மட்டுமே உள்ளதாக காட்சிப்படுத்தப்படுகிறது.

  ஆனால் இருபாலரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள்தான் குடும்பங்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

  அல்லது ஒருவருக்கொருவர் இணைந்து எடுக்கும் முடிவுகள்தான் எனவே இது போன்ற முடிவுகள் virtcham சொல்வது போன்று முதிர்ச்சியில்லாத முடிவுகளாக எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது.

  பதிலளிநீக்கு
 16. எந்தவொரு முற்போக்கான இயக்கத்தையும் அதன் கோரிக்கைகளையும் தடம் புரளச் செய்வதற்குத்தான் இத்தகைய அதிமேதாவித்தனமான வாதங்கள் எப்போதுமே முன்வைக்கப்படுகின்றன என்பது உலக வரலாறு; முதலாளித்துவத் தனிநபர் வாதம் மேலோங்கியிருக்கிற இந்நுகர்வு கலாசாரச் சூ(சு)ழலில் சிக்கித் தவிக்கிற படித்த மற்றும் பணிபுரிகிற பெண்களுக்கு இத்தகைய திசை திருப்பல்கள் கொஞ்சம் கவர்ச்சியாகவே இருக்கும்; பெண்ணுரிமைப் போராளிகளின் பக்கம் இவர்கள் போய்விடக்கூடாது எனும் 'அக்கறை'யுள்ள ஆணாதிக்கவாதிகளின் நோக்கம் பெண்ணிய வாதிகளின் இந்த வாதத்தில் பொதிந்துள்ளது; எதிரும் புதிருமானவற்றின் இணக்கம் என்பது இயற்கை விதி;மனித சமூகத்தில் அந்த இணக்கத்தின் நிறுவன வடிவமாகக் குடும்பம் அமைந்துள்ளது; ஒரு வர்க்க சமூகத்தில் அனைத்து வகையான நிறுவனங்களுமே ஆளும் வர்க்கத்தவரின் ஆதிக்கத்தில்தான் இருக்கும்; அதுபோன்றதொரு நிலைமை குடும்பம் எனும் அமைப்பிலும் இருப்பது இயல்பே; சுரண்டலற்ற அமைப்பு சாத்தியப்படுகிறபோதே குடும்ப உறவில் இருக்கும் ஏற்றத் தாழ்வும் முழுமையாக நீங்கும்;எப்படிச் சுரண்டல் அமைப்புக்கு எதிரான போராட்டமென்பது அதற்குள்ளேயேதான் சாத்தியமோ அதே போன்றதுதான் பெண் விடுதலைக்கான போராட்டமும் ஆணாதிக்கக் குடும்ப உறவில் தொடர்ந்துகொண்டே நடத்தப்பட்டாக வேண்டும்; வேறு குறுக்கு வழி ஏதுமில்லை.

  பதிலளிநீக்கு
 17. இன்று பெரியார் எதிர்பார்த்த ஆண்களுக்கு இணையான சுதந்திரம் கிடைத்துள்ளது. இருப்பினும் அது குடும்பம் கூசும் விதமாகவும் , பாதிக்கும் விதமாகவும் இருக்க கூடாது ,நம் சமுகம் இப்போது தான் பெண்களுக்கான சுதந்திரம் என்ற பயன்பாட்டையே உள் வாங்கியுள்ளது,

  இன்னும் அரைநூற்றாண்டில் பெண்கள் தங்களின் உண்மையான சுதந்திரத்தை உணர்வார்களா? என்று எதிர்பார்த்துக் கொண்டுருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 18. ஆணாதிக்கம், பெண்ணியம், போராட்டம், சுதந்திரம் என்று பேசிப் பேசி குடும்பங்கள் சிதறுண்டு போக ஆரம்பித்திருப்பதுதான் மிச்சம். குடும்பம் நிலைக்க அடிப்படையான விட்டுக் கொடுப்பது, தியாகம், தன்னலனைவிட குழந்தைகள் நலனைப் பெரிதாக நினைத்தல் போன்றவை அடிமைத்தனமாக உருவகப்படுத்தப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 19. பிறப்புறுப்பு, ஓவரி, கர்ப்பப்பை, மாதவிடாய், மார்பகம், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இவையெல்லாம் இல்லை என்றால்... (மட்டுமே...)

  உடலில் எங்கெல்லாம் ஆண்கள் தொட்டால் பெண்களுக்கு கூச்சம் உண்டாகுமோ அங்கெல்லாம் எந்த கூச்சமும் உண்டாகாமல் போனால்... (மட்டுமே...)

  //"இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பெண் தனியாக வாழ வேண்டுமாம்!"//

  அப்படித்தான் வாழ்ந்து ஆக வேண்டும்...
  வேறு வழி இல்லை...

  ஏனென்றால், இப்பெண்களால் ஆண்களுக்கோ, மனித சமுதாய உற்பத்திக்கோ எப்பலனும் இல்லையே...  ...இதேபோன்று ஆண்களுக்கும் சொல்லலாம்...

  பதிலளிநீக்கு
 20. வந்து கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் என நன்றிகள்.

  இப்படியொரு கருத்து ஜாலியாக பகிர்ந்துகொண்டவை எனவும் சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருப்பின் சந்தோஷமே.

  நான் குடும்ப அமைப்புக்கு ஆதரவாக இந்தப் பதிவை எழுதிடவில்லை. குடும்ப அமைப்பிலிருக்கும் எல்லாக் கோளாறுகளையும் ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் எதிர்க்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. சம உரிமை, சுதந்திரம் என்ற பெயரில் இன்றையப் பெண்கள் செய்துவரும் அட்டூழியங்களைப் பார்க்கும்போது, தனியாக வாழ்வது என்பது அவர்களுக்குத் தேவைதான். நினைத்ததை எல்லாம் செய்வதற்கு கலாசாரம் எதற்கு? பண்பாடு எதற்கு? லெஸ்பியன்/ஹோமோ செக்ஸ்/சுய இன்ப உறவுகள் இளம் வயதில் சுகமாக இருக்கும். ஆனால், கடைசிவரை நிலைக்குமா?

  பதிலளிநீக்கு