விடுதலையின் பேரில்...

iraq war “ஈராக்கை விடுவிப்பதற்கான போராட்டம் முடிந்துவிட்டது” என முறைப்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்து விட்டார். ஏழு வருடங்களுக்கு முன்பாக ஈராக்கிற்குள், பெரும் மிருகம் போல நுழைந்து துவம்சம் செய்த அமெரிக்கப்படைகள் சில தினங்களுக்கு முன்பு வெளியேறிக்கொண்டு இருக்கின்றன. ‘ஈராக்கை விடுவிக்க அமெரிக்கா பெரும் விலையை கொடுத்துள்ளது” என்று ஒபாமா இப்போது உலகுக்கு தெரிவித்துள்ளார். ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன, ஈராக்கை விடுவிக்கப் போகிறோம் என தொடுக்கப்பட்ட இந்த அகோரமான யுத்தம், வரலாற்றின் சில பக்கங்களை மனித ரத்தத்தினால் எழுதி வைத்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் அமெரிக்கா பயன்படுத்தும் ‘விடுதலை’ என்னும் பதம், எவ்வளவு எதிர்மறையானது என்பது மீண்டுமொரு முறை தெளிவாகியிருக்கிறது. யுத்தம் தொடங்கிய சில தினங்களில், 2003ல் ‘விசை’ பத்திரிகைக்காக ’டைகிரிஸ் அமைதியாக ஓடவில்லை’ என நான் எழுதிய கட்டுரை ஒன்றின் கடைசிப் பகுதியை இங்கே பகிரத் தோன்றுகிறது.

னித இழப்புகள், வேதனைகள், காயங்கள் எதையும் பொருட்படுத்தாமல்  இதைச்  சாதனையாகவும், உலகுக்குச் செய்த நல்ல காரியமாகவும் மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்கா. இதுவரை மேற்கொண்ட எந்தப் போருக்கும், அந்த நாட்டை விடுவிக்கப் போகிறேன் என்கிற காரணத்தைத்தான் முன்வைத்திருக்கிறது அது.  வேறு எந்த நாடும் தனது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு இப்படியொரு மென்மையான, ஜனநாயக  முகத்தை காட்ட முடிந்ததில்லை. இதற்கு அந்நாட்டின் வரலாறும், கலாச்சாரமும் வேர்களாக இருக்கின்றன.

அமெரிக்கா தோன்றிய மறுகணமே 'விடுதலை' என்கிற வார்த்தையைத்தான் பிரயோகித்தது.  முப்பது லட்சம் மக்கள் அங்கு அடிமைகளாக இருந்தனர். 1861ல் உள்நாட்டுக் கலகம் வெடிக்க, ஆபிரகாம் லிங்கன்  தலைமையில் அரசு என்பது மக்களுக்காக, மக்களால் என்று புரட்சிகரமான தோற்றத்தை அமெரிக்க 'விடுதலை' கொள்கிறது. ஆனால் அவர் கண்ட கனவுகள் நடைமுறைக்கு வரவில்லை. அடிமைகளின் விடுதலை என்னும் பிரகடனம்  சுதந்திரத்திற்கான பாதையென நகர்ந்து,   சாதுரியமாக புதிய முதலாளித்துவ அமைப்பின் வாசலில் போய் தன் கதையை முடித்துக் கொண்டது.  கையில் தீபத்தை ஏந்தி கம்பீரமாக நிற்கும் சுதந்திர தேவியின் சிலை உலகின் முன்னே விடுதலையின் பிம்பமாக்கப்படுகிறது. ஆனால் அதைப் பார்க்கும் போதெல்லாம் சிலுவையில் அறையப்பட்ட ஏசு போலவே தோன்றுகிறது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் எல்லையை விரிவு படுத்தும் வெறியில் 1898ல்  ஸ்பானிய அமெரிக்க யுத்தம் நடந்தது. இங்கிருந்துதான் அமெரிக்காவின் படையெடுப்புகள் உலகில் ஆரம்பமாகின்றன. இரண்டு உலக யுத்தங்கள் அமெரிக்காவை உலகின் தனிப் பெரும் சக்தியாக  உருவாக்கி இருந்தன. மற்ற நாடுகள் போரை நேரடியாக எதிர் கொண்டு பாதிக்கப்பட்டபோது  அமெரிக்கா பூகோளரீதியாக ஐரோப்பியாவில் நிகழ்ந்த போரிலிருந்து வெகு  தொலிவிலிருந்தது.. அச்சுநாடுகள் தோற்று போர் முடிவுறும் வேளையில் வேண்டுமென்றே ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டுகளை போட்டு  உலகத்தையே அதிரச் செய்தது. உலகின் எதிர்காலத்தை தனது கையில் எடுத்துக் கொண்டதற்கான ஆணவ அறிவிப்புதான் அது.

சோஷலிச முகாமின் பலம் பொருந்திய நாடாக சோவியத் ரஷ்யா இருந்தவரையிலும்  இந்த 'கருணை'யையும், 'விடுதலையையும'  மிகப் பெரிய யுத்தமாக இல்லாமல் சிறிய அளவில், சதியின் வடிவில் செய்து கொண்டிருந்த அமெரிக்கா இப்போது எல்லாவற்றையும் மிக வெளிப்படையாக நடத்த துணிந்திருப்பது தெரிகிறது.  முந்தைய வளைகுடா யுத்தம்,  ஆப்கானிஸ்தான் யுத்தம்,  இந்த ஈராக் யுத்தம் அதைத்தான் காட்டுகிறது. ஐரோப்பியா முழுவதையும் தனது குடையின் கீழ் கொண்டு வர அன்று ஜெர்மனி நினைத்தது. உலகம் முழுவதையும் தனது குடையின் கீழ் கொண்டு வர இப்போது அமெரிக்கா நினைக்கிறது. இந்த அசாத்தியமான தைரியத்தை சோவியத் வீழ்ச்சியே அமெரிக்காவுக்கு தந்திருக்கிறது.

அதுதான் பீரங்கிகளின் அணிவகுப்பின், புகை மண்டலத்தின், தீப்பிழம்புகளின் பிண்ணனியில் அமெரிக்க அதிபர் புஷ் டி.வி யில் தோன்றி "நாங்கள் முன்னேறுகிறோம்." என்று கொக்கரிக்கிறார்.  எத்தனையோ தேசங்களின், எத்தனை எத்தனையோ மனிதர்களின் அவலக்குரல்கள் மோதியும் அசையாத அந்த பாறை முகத்தில் ஒரு சிறு  வலி கூடத் தெரியவில்லை.  தனது மிருக இராணுவத்தை அனுப்பி சேகரித்த எத்தனையோ லட்சம் மனிதர்களின் சதைகளிலிருந்தும், இரத்தத்திலிருந்தும் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் ருசித்து  உருவான அந்தத் தோற்றம் வரலாற்றின் கறையாக உற்றுப்பார்த்தால் தெரியும்.  காலம் முகங்களை மட்டுமே கிளிண்டன் என்றும், முதல் புஷ் என்றும், ரீகன் என்றும் கார்ட்டர் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆயுதங்களைப் போலவே பொய்களும் திட்டமிட்டு தயாரித்து உலகம் முழுவதும் ஏவப்படுகின்றன.  முதல் ஐந்து  நாட்கள் போரிலேயே வெள்ளை மாளிகையும்,  பெண்டகனும்  சி.என்.என்,  எம்.எஸ்.என், பி.சி,  ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தலங்களில் இருந்து இந்த பொய்களை திசைகள் முழுவதும் போய் விழச்செய்தன. ' சதாமின் குடியரசுப் படைகள் ஈமெயில் மூலம் சரண் அடைவது குறித்து செய்திகள் அனுப்பினர்' ... 'உதவிப் பிரதம மந்திரி டாரிக்அஜிஸ் காயப்பட்டார் '.... 'சதாம் உசேன் கொல்லப்பட்டார்'. பாக்தாத்தில் அமெரிக்க வீரர்களுக்கு மக்களின் உற்சாக வரவேற்பு', பாஸ்ராவில் சதாமுக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி'.  அடுத்து வந்த நாட்களில் இவை பொய்களாக அறியப்படுவதற்குள் புதிய பொய்களின் சரமாரியான அடுத்த தாக்குதல்.  போர் ஆரம்பித்து மூன்று வாரங்கள் ஆகப் போகிறது. 

இந்தப் பொய்களை உண்மைகளாக்குவதற்கு பீரங்கிகளோடும்  போர் விமானங்களோடும் சேர்ந்து இந்தச் செய்தி நிறுவனங்களும் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன.  போரில் தங்கள் இராணுவம் செய்யப்போகிற சகிக்க முடியாத அழிவுகளையும் சதாம் மீதே சுமத்த முன்கூட்டியே அறிக்கைகள் விடப்படுகின்றன. பிப்ரவரி 12ம் தேதி நேஷ்வில்லேவில் அமெரிக்க அதிபர் பேசும் போது  "அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தால் சதாம் உசேன் சாதாரண மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப் போவதாக"  எச்சரித்து,   மேலும் " இதனால் போரில் சாதாரண மக்களை கொன்ற பழியை அமெரிக்கா மீது சுமத்த பார்க்கிறார்"  என்றும்  தகரக் குரலில் குறிப்பிட்டார்.  அதேநாளில் இராணுவக் கமிட்டி செனட்டில் பேசிய உதவி அட்மிரல் லோவெல் ஜேக்கபி " போர் மூண்டால் சதாம் உசேன் ஈராக்கில் போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் என அனைத்து அடிப்படை வசதிகளையும் துண்டித்து பெரும் மனித அழிவுகளை அவரே ஏற்படுத்தி நம்மீது பழி சுமத்துவார் " என்று பேசியுள்ளார்.

அதே நேரம் ஈராக்கில் ஆக்கிரமித்த பகுதிகளெங்கும் படைவீரர்கள் மிக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட  துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிக்கிறார்கள்.  சதாம் ஒருவரே இந்த யுத்தத்திற்கு காரணம் என்று அதில் சொல்லப்படுகிறது. சதாமினால்தான் ஈராக் தேசம் முன்னேறாமலும், மக்கள் அடிமையாகவும் இருப்பதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சதாம் இல்லாத தேசம் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று  நம்ப வைக்கப்படுகிறது. மாறி மாறி போர்களால் சிதைந்து  உருக்குலைந்து போன ஒரு தேசத்தில் ஒரே ஒரு மனிதனை அகற்றி விட்டால் இத்தனை சித்திரவதைகள் தங்களுக்கு நேராது  என்பது  ஈராக் மக்களின் அந்தரங்க மனதில் படியவைக்கப்படுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பலவீனமான மனிதர்கள் தங்கள் மண்ணில் ஆயுதங்களோடு வந்து நிற்கிற அந்நியர்களைப் பார்த்து மெல்ல புன்னகைக்க   ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவுதான். காத்திருந்த சக்தி வாய்ந்த காமிராக்கள் மிக நுட்பமான அந்த தருணங்களை விழுங்குகின்றன. தொலைக்காட்சிகளில் கூட்டுப்படைகளிடம்  உணவுப்பொட்டலங்களை ஈராக்கிய மனிதர்கள் சிலர் வாங்குகிறார்கள். பீரங்கிகளுக்கு குழந்தைகள் கையசைக்கிறார்கள். கிழிக்கப்பட்ட சதாமின் படத்தின் கீழே இரண்டு மூன்று பேர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.  உலகமே  பார்க்கிறது.  புத்திசாலித்தனமான பொய்கள் ஈராக்கியர்களையும், உலகத்தையும் அசைக்கின்றன.

உண்மைகளும், மனிதர்களும் குண்டுகளுக்கு பலியாகி ஈராக் மண்ணில் எந்தக் காமிராவின் கண்களும் படாமல் தூசி படியக் கிடக்கின்றனர்.  'சதாம் உலகத்துக்கே பேரழிவு உண்டாக்கும் இரசாயண ஆயுதங்கள் வைத்திருக்கிறார்', 'செப்டம்பர் 11க்கு காரணமான அல்-கொய்தாவுடன் சதாமுக்கு தொடர்பு இருக்கிறது ', 'ஈராக்கில் ஜனநாயகம் இல்லை'  ன்ற பிரச்சாரங்களால் அவை மூடப்பட்டிருக்கின்றன. இந்தப் போர் சதாம் உசேனுக்காக இல்லை என்பது  புஷ்ஷுக்கும், பிளேருக்கும் தெரியும்.  தங்கள் சொல்படி கேட்கிற ஒரு மாற்று அரசை அமைத்து எண்ணெய் வளத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடான ஈராக்கை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே இத்தனை நாசவேலைகள்.  அங்கு ஒரு இராணுவ தளத்தை அமைத்து அரபு உலகத்தை நடுக்கமுறச் செய்து என்றென்றும் தங்களுக்கு கப்பம் கட்ட வைப்பதற்குத்தான் இத்தனை உயிர்பலிகள்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி போரைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஆராயாமல், யுத்தம் மெற்கொள்ளும் நாடுகளே, யுத்தத்திற்குப் பிறகு ஈராக்கை புனரமைக்கும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் பணிவோடு கோபி அன்னன் கேட்டுக் கொண்டுள்ளார்.  குதறப்பட்டிருக்கிற ஈராக்கை புனரமைக்கிற பொறுப்பு இந்த 'தலைவர்'களிடம் கொடுக்கப்பட்டிருப்பதுதான் அவர்களுக்கு கொடுக்கப்படுகிற தண்டனையா?  இதைத்தானே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். போர் தொடங்குவதற்கு முன்னரே  அமெரிக்காவின் இரண்டு மிகப் பெரிய தனியார் கம்பெனிகள் அந்தக் காரியத்தைச் செய்ய முன்வந்திருக்கின்றனவாம்.  கோபி அன்னன் அதற்கு மேற்பார்வையாளராக இருக்கலாம்.

சதாம் உசேன் கொல்லப்படலாம். கைது செய்யப்படலாம். அல்லது எங்காவது தப்பி ஒடிவிடலாம். அங்கங்கு சதாமை வெறுப்பவர்கள் சந்தோஷங்களைக் கொண்டாடலாம்.  யார் ஆண்டாலும் கவலைப்படாத அப்பாவி மக்களால் அமெரிக்க, பிரிட்டன் வீரர்கள் கதாநாயகர்களாய் பாக்தாத் வீதிகளில்  வலம் வரலாம். ஒரு இராணுவ அதிகார அமைப்புக்கு எதிராக அடக்கிவைக்கபட்ட உணர்வுகள் தற்காலிகமாக பீறிட்டு வெளிப்படலாம். இதெல்லாம் உண்மையான தோற்றங்கள்தானா? நிரந்தரமான காட்சிகள்தானா? விலை மதிப்பற்ற உயிர்களையும், அவர்களது கனவுகளையும் யாரால் புனரமைக்க முடியும் .  கண்முன்னால் தங்கள் பிரியத்திற்குரிய யாவும் தீயில் கருகியதையும், இடிந்து விழுந்ததையும் பாரத்த ஒரு தேசத்தின் ஆன்மா நம்பிக்கை கொள்வதற்கு என்ன மீதமிருக்கும் .

ஐந்து வயது குழந்தையின் மூளை சிதறிப் போனதே அந்தத் தாயின் அடிவயிற்றுக் கேவலை யாரால் அணைக்க முடியும். தன் குடும்பத்திலிருந்த பதினைந்து பேரையும் இழந்துவிட்டு  வானத்தை நோக்கி அல்லா என்று கதறுகிறாரே ரசாக் காசிம்,  அவரை எந்த ஜனநாயகம் தேற்றப் போகிறது. பாக்தாத்தின் மார்க்கெட்டில் ஏவுகணைகள் தாக்கி நூற்றுக்கணக்கில் இறந்து போன மக்கள் அந்த மண்ணோடு மண்ணாகத்தானே கலந்திருப்பார்கள். அதைப் பார்த்து, துடித்து, அந்த நினைவுகளில் யுத்தத்தின் கருநிழல் படிந்து போனவர்கள் எதை வரவேற்க காத்திருப்பார்கள். தொடர்ந்து குண்டுகள் சத்தங்களையும், போர் விமானங்களின் இரைச்சலையும்,, தீப்பிழம்புகளையும் பார்த்து  வெறித்துப் போன ஒரு சமூகம் எதில் அடங்கி நிலை கொள்ளப் போகிறது. அந்த முகங்கள்தான் இந்த யுத்தத்தின் உண்மையான முகம்.

பம்பாயில் ரித்திஷ் சின்ஹா என்பவர் தயாரித்திருக்கும் ஒரு நிமிடமே ஓடக்கூடிய 'போர் அல்லது அமைதி'  என்னும் சின்னஞ்சிறு குறும்படத்தில் சொல்லப்படுகிற செய்திதான் இந்த யுத்தம்  தந்துவிட்டுப் போயிருக்கிற உலகம்.  குண்டுகள் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிற  நகரத்தில் ஒரு பெண் மருத்துவமனையில்  உடலின் ஒவ்வொரு அணுவும் வலியில் துடிக்க தன் குழந்தையை பெற்றெடுக்கிறாள். வெளியே அவளது கணவன் குண்டு ஒன்றுக்கு பலியாகி இறந்து போகிறான். குழந்தையைப் பார்த்து  தன் கணவனையும், குண்டுகள் சத்தத்தையும் அந்த பெண் மறப்பாளா, அல்லது அந்த நினைவை சுமப்பாளா? காலம் என்பது எல்லாவற்றையும் மறக்க வைக்கும். ஆனால் யுத்தம் காலத்திற்கே வடுவாகிப் போகிறது.

சென்ற வளைகுடாப் போரில் 1991 மார்ச் 8ம் தேதி சௌதி அரேபியாவில் இருந்து அமெரிக்க சார்ஜெண்ட் டேன்வில்ச் தனது  அம்மாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகள் இவை.

"..அந்த காரில் சடலமாய் ஒரு ஈராக்கியன் இருந்தான். அகலத் திறந்திருந்த கண்கள் மௌனமான அலறலில் உறைந்திருந்தன. நான் சுட்டு வீழ்த்திய அந்த மனிதனை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அதை செய்திருக்காவிட்டால் அவன் போர்க்கைதியாக பிடிபட்டிருப்பான். விடுதலை பெற்று  தன் வீட்டிற்குச் செல்லும் நாளை எண்ணிக் கொண்டிருப்பான்.  என்னைப் போலவே..."

போர்க்களத்தில் இறந்துபோன ஒருவனும்,  அவனைக் கொன்ற ஒருவனும்  ஒரு புள்ளியில் ஒன்றாகவே இருக்கின்ற அனாதி வெளி  நிழலாடுகிறது. வெப்பம் மிகுந்த அந்த மணற்பிரதேசத்தின் ஒரு இரவின் தனிமையில் டேன்வில்ச்சிற்கு தன் வீட்டின் ஞாபகம் தாகமாய் தகிக்க வெளிப்பட்ட உணர்வில் ஒரு அடர்த்தியான சோகம் இருக்கிறது. அந்த ஈராக்கியனுக்கு தன்னைப் பொறுத்த வரையில் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டதாகவே தோன்றியிருக்கிறது. புஷ் அறிவித்திருக்கும் 'ஈராக்கிய விடுதலை' இது கூட இல்லை. சூன்யம். சூன்யம் மட்டுமே!

சதாம் தூக்கி எறியப்படுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அமையப் போவது எந்த வகையான அரசு? எந்த வகையான ஜனநாயகம்?அதிகமானோர் ஷியாக்கள்.  அவர்கள் ஈரானோடு ஒரு நல்ல உறவை வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள். அது அமெரிக்காவுக்கு ஒத்து வராது. அமெரிக்காவின் அடுத்த இலக்குகளில்  ஈரானும் ஒன்று. சிறுபான்மையினரான குர்து இன மக்கள் சுயாட்சி கேட்பார்கள். தங்களுக்கென்று அரசு அமைக்க விரும்புவார்கள்.  இது துருக்கிக்கு ஏற்புடையதல்ல. பிடிக்காது.  நிச்சயம் எதிர்க்கும். அமெரிக்கா துருக்கியைத்தான் ஆதரிக்கும்.  ஈராக்கில் உள்ள பெரும்பான்மை, சிறுபான்மை இரண்டு பேருக்குமே அமெரிக்காவின் தலையீட்டால் எந்த எதிர்காலமும் இல்லை.  இது அமெரிக்காவுக்கும் தெரியும். பிறகு என்ன விடுதலை?

ஒரு நிலையான அரசு, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய  அரசு எதுவும் உடனடியாக அமைவதில் சாத்தியமில்லை. ஒரு தறி கெட்ட, இலக்குகள் அற்ற, வெளியில் ஈராக்கிய மக்களின் எதிர்காலம் ஸ்தம்பித்துப் போகும். இனக்கலவரங்களும், உள்நாட்டுக் கலவரங்களும் அன்றாட வாழ்க்கையாகும்.  எண்ணெய் வயல்கள் 'விடுதலை' பெற்று அமெரிக்காவை நோக்கி பாயும்.  போர் சமயத்தில் குழந்தைக்கு அக்கறையோடு பிஸ்கெட் கொடுத்து போட்டோ பிடித்துக் கொண்ட அந்த அமெரிக்காக்காரன் அப்போது  வேறு ஒரு நாட்டில் கையில் துப்பாக்கியையும், பிஸ்கெட்டுகளையும் வைத்துக் கொண்டு குழந்தை ஒன்றை தேடிக் கொண்டிருக்கக் கூடும். பாலைவனத்து  மண்ணில் வெப்பம் அடங்காமல் சதா நேரமும்  தகித்துக் கொண்டேயிருக்கும்.

டைகிரிஸ் நதியில் இருட்டு விழுந்து கிடக்கிறது . பாக்தாத்தின் ஆன்மாவாய் சலசலத்து வேகமாய் ஓடும் அந்த பழுப்பு நிற நதி எல்லாம் முடிந்து போன மாதிரி ஒடுகிறது.  'பாக்தாத் எண்ணெயில் வரைந்தது (Oil painting) அல்ல ; நீரில் வரைந்த(water colour) ஓவியம் போல இருக்கிறது' என்று புகழ் பெற்ற எழுத்தாளர் காவின் யங் ஒருமுறை சொல்லியிருக்கிறார். இப்போதோ பாக்தாத்  மனித இரத்தத்தால் வரையப்பட்டிருக்கிறது.  நைல் நதி ஓரத்து இதிகாச கிரேக்க நாட்டிற்கு ஒப்பான பாக்தாத்தில் பிணங்களின் வாடை . பாக்தாத் என்றால்  ' கடவுளால் உருவாக்கப்பட்டது' என்றும் 'அமைதியின் நகரம்' என்றும் அர்த்தங்கள்.  இப்போது அமெரிக்கா அதனை உருவாக்கப் போகிறதாம். ஆதியில் கடவுள் உலகைப் படைத்தபோது மண்ணில் நீர்த்திவலைகள் மீது கடவுளின் ஆவி அசைந்து கொண்டிருந்ததாமே,  இப்போது டைகிரிஸ் நதியின் மீது என்ன அசைந்து கொண்டிருக்கும்?

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. போர் எதிர்ப்புக்குரல்கள் ஓய்ந்த மயான அமைதியில் ஒரு சிறிய சப்தம் இது.அமெரிக்கா திரும்பிய போர் வீரர்களுக்கு யார் சோறு போடுவது?புதிய களம் ஏதாவது கண்ணுக்கு தெரிகிறதா என்று இனி தேடலாம்.

    அப்பத்தை பிரிக்காத அமெரிக்க குரங்கு மொத்த அப்பத்தையும் ஈரானுக்கே இந்தா என கொடுத்து விட்டது மட்டுமே தற்போதைக்கு மிச்சம்.

    ஈரான் இப்போது அணு ஆயுத நாடாமே!இன்னுமொரு அணு ஆயுதப் போட்டிக்கு அஸ்திவாரம் போட்டாகி விட்டது வளைகுடாவில்.

    பதிலளிநீக்கு
  2. சென்ற பின்னூட்டம் போட்ட பின் திடீர்ன்னு ஒரு ஞானோதயம்.இசங்கள் எதுவாக இருந்தாலும் மனிதனுக்கு போர் வெறி மட்டும் அடங்குவதேயில்லை.

    கம்யூனிச போர்வையில் ரஷ்யா செய்த நேரடி (உதாரணம் ஆப்கானிஸ்தான்)மறைமுக யுத்தங்களும்(இந்தியா உட்பட),

    கம்யூனிசத்துக்கும் அப்பாலும் தனக்கென்று ஒரு கலாச்சாரம்,பண்பாடு இருக்கிறதென்று தனி நாடு கேட்ட செச்சின்யா படுகொலைகளையும் சரித்திரம் பதிவு செய்தே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு நண்பரே...

    ஈராக்கில் அமெரிக்கா செய்த நேரடி வன்முறையும் ஈழத்தில் தமிழர்மேல் இந்தியா செய்த மறைமுக வன்முறையும் ஒரேமாதிரியானவை. பணவெறிபிடித்த முதாலாளிவர்க்கம் தொடர்ந்தும் இப்படி இருக்க முடியாது. காலம் மாறும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!