Type Here to Get Search Results !

ஆபத்தை விதைத்து பசி அறுவடை

லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் திறந்தவெளியில் அழுகிக் கொண்டிருக்கிறது. இது அதிர்ச்சி தரக்கூடியது. ஆனால் இது புதியதுமல்ல ஆச்சரியப்படத்தக்கதுமல்ல நினைவிருக்கக் கூடும். 2001-ம் ஆண்டு இதே நிலைமை இருந்தது. ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழைகள் ஆந்திராவின் தானியக்கிடங்குகளை நோக்கி அணிவகுத்தார்கள். உச்ச நீதிமன்றம் மத்திய அரசாங்கத்தை புரட்டி எடுத்திருக்கிறது. அது சரியானதுதான். “பசியால் வாடிக்கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் ஒரு நாட்டில் ஒரு குண்டுமணி தானியத்தை கூட வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாதகச்செயல்” என்று தனது கோபத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் தேவைப்படுவோருக்கு இந்த தானியங்களை கொடுக்கும்படி அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

தி ஹிந்து பத்திரிகையில் வந்த திரு. சாய்நாத் அவர்கள் எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்திருப்பவர் க.கனகராஜ்

கடுமையான வார்த்தைகள் ஆயினும் வரவேற்கத்தக்கது. ஆயினும் நீதிமன்றம் இந்த பிரச்சனையில் இன்னும் சற்று தூரம் சென்றிருக்க வேண்டும். பட்டினி கிடப்போர் சாப்பிடுவதை விட இப்படி அழுகி வீணாய் போவதை இந்திய அரசாங்கம் ஏன் அனுமதிக்கிறது என்று பார்த்திருந்தால் நீதிமன்றம் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதலாய் சென்றிருக்கும். அது வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளோரை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோரின் எதிரியாக பார்த்திருக்கிறது. எனவேதான் ஒருவருக்கு சேரவேண்டிய தானியத்தை இன்னொருவருக்கு தருவதாக அது குறிப்பிட்டிருக்கிறது. வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளோரின் மீது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மாயமான தோற்றங்கள், அதன் மூலம் யாருக்கு இத்தானியங்களை கொடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறதோ அந்த ஏழைகளின் எண்ணிக்கையை ‘குறைப்பதற்கு’ முயல்கிறது. எனவே, இந்த தீர்ப்பின் ஒரு பகுதியை இந்திய அரசாங்கம் மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற முன்வரும். வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளோர் என்று சொல்லப்படுவோர் அவர்கள் பெறும் சிறு உதவியையும் இழப்பதற்கு இது பயன்படும்.

பட்டினி கிடப்போரை சாப்பிடச் சொல்வது அரசாங்கத்தை பொறுத்தமட்டில் அதன் “மானியச்சுமையை” அதிகரிக்கும்.

இந்த உணவு தானியங்கள் அழுகிப் போவதற்கு முன் விநியோகிக்க வேண்டும் என்கிற இந்த தீர்ப்பின் முக்கியமான பகுதியை அரசு புறக்கணிக்கும். அரசு, இந்திய உணவுக்கழக அதிகாரிகள் உணவு தானியங்களை சரிவர பாதுகாக்காமல் இருந்ததற்காக கோபித்துக்கொள்ளும். ஆனால், சேகரித்ததில் பாதியை மட்டுமே பாதுகாப்பதற்கான வசதியை வைத்திருக்கக் காரணமானவர்கள் யார்? இந்த தானியங்களை அரசாங்கம் விநியோகித்திருக்கலாம் அல்லது பொது விநியோக முறையின் மூலம் குறைந்த விலைக்கு விற்றிருக்கலாம். இந்த இரண்டுமே இந்திய அரசாங்கத்திற்கு ஏற்புடையதாக இருக்காது. இது அதனுடைய தத்துவத்திற்கும் பொருளாதாரத்திற்கும் எதிரானது. பட்டினி கிடப்போரை சாப்பிடச் சொல்வது அரசாங்கத்தை பொறுத்தமட்டில் அதன் “மானியச்சுமையை” அதிகரிக்கும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவுக்கான மானியத்தில் ரூ. 450 கோடியை வெட்டியதில் வெற்றிபெற்ற அரசாங்கம் இதையெல்லாம் செய்யும் என்று எதிர்பார்க்க முடியுமா?

அனைவருக்குமான திட்டங்களை, பொதுவிநியோக திட்டமானாலும் சரி, சுகாதாரமானாலும் சரி, இரண்டு வாதங்களை அவர்கள் முன்வைக்கிறார்கள். 1) பணம் கிடையாது 2) அனைவருக்குமான திட்டத்திற்கு போதுமான தானியம் கிடையாது.

இந்த நாடு 49 டாலர் பில்லியனர்களை (ரூ. 4600 கோடியும் அதற்கு அதிக மாகவும் சொத்து வைத்திருப்போர்) உருவாக்கியிருக்கிறது. இதே பத்தாண்டு காலத்தில் டாலர் மில்லியனர்கள் ஒரு லட்சம் பேரை உருவாக்கியிருக்கிறது. ஆனால், பட்டினி கிடப்போருக்கு சோறிட மட்டும் அதனிடம் பணமில்லை. இந்த பட்ஜெட்டில் மட்டும் வெறும் மூன்று தலைப்பின் கீழ் கொழுத்த பண முதலைகளுக்கு ரூ. 5 லட்சம் கோடியை வரிவிலக்காக கொட்டியழுத அரசாங்கம் பசியாற்ற பணமில்லை என்கிறது.

போதுமான தானியம் உற்பத்தியாக வில்லையா? கடந்த 20 ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான விவசாயிகளை உணவு தானியப்பயிர்களை வளர்ப்பதிலிருந்து விரட்டியிருக்கிறோம். அவர்களையெல்லாம் பணப்பயிர்களை வளர்க்க செய்திருக்கிறோம். உணவுப்பயிர்களை வளர்த்தால் கூடுதல் இடுபொருள் விலைகள், கூடுதல் கடன், இன்னும் ஏராளமாய் சுமைகள் என்றால், அவர்கள் மாறாமல் என்ன செய்வார்கள்? நாம் ஆபத்தை விதைத்தோம், பசியை அறுவடை செய்கிறோம்.

இதன் விளைவு 2005-2008-ம் ஆண்டு காலத்தில் ஒரு இந்தியனுக்கு ஒரு நாளைக்கு கிடைக்கும் சராசரி உணவுப்பொருள் 436 கிராம். இது அரை நூற்றாண்டுக்கு முன்னதாக 1955-1958 காலத்தில் கிடைத்ததையும் விட குறைவு. அப்போது இது 440 கிராமாக இருந்தது. பருப்பு வகைகளை தனியாக எடுத்துக் கொண்டால் இந்த ஒப்பீட்டுக்காலக்கட்டத்தில் பாதியாக குறைந்திருக்கிறது. 1955-1958-ல் 70 கிராமாக இருந்தது. 2005-2008-ல் 30 கிராமாக குறைந்திருக்கிறது.

ஆனால், இதனால் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் “சாதனை உற்பத்தி” படைத்து விட்டதாகச் சொல்லும் அரசின் ஜம்பத்தை நிறுத்திவிட முடியவில் லை. 2001-2003-ம் ஆண்டு “சாதனை உபரி” நினைவில் இருக்கிறதா? அந்த வருடங்களில் நாம் பல பத்து லட்சம் டன் தானியங்களை ஏற்றுமதி செய்தோம். அதுவும் இந்தியாவில் வாழ வழியற்றோ ருக்கு நாம் கொடுக்கும் விலையை விட குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யப் பட்டவையோ ஐரோப்பிய கால்நடைகளுக்கு உணவானது. பூவுலகிலே உணவு பாதுகாப்புமிக்க உயிரினம் அதுதான். கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாய் கிடக்கும் இந்த நாட்டில் பல லட்சம் டன் தானியங்கள் அழுகிக்கிடக்கிறது. ஏதோ ஒருநாள் இவையும் கூட தனியார் வியாபாரிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படும்.

கடந்த 20 ஆண்டுகளில் விவசாயத்தில் பொது முதலீடு சீரழிக்கப்பட்டது. விவசாயத்திற்கு நிதி ஒதுக்காமல் அதை அழிவை நோக்கி தள்ளிவிட்டு போதுமான தானியம் இல்லை என்பதைவிட கோமாளித்தனம் ஏதேனுமுண்டா? அனைவருக்கும் உணவு வழங்க வேண்டுமென் பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உணவுப்பயிர்களை பயிரிடுவதை உத்தரவாதப்படுத்துங்கள். விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுங்கள். அவர்களின் விளைபொருளை வாங்கிக்கொள்வதற்கு சிறந்த ஏற்பாடுகளை செய்யுங்கள். அப்போது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உணவு உற்பத்தி என்கிற இந்தச்சவாலை இவ்வளவு விரைவில் வெற்றிகொள்ள முடியுமா என்று.


கொஞ்சம்போல் கர்ப்பிணி என்று சொன்னால் அது எத்தனை நகைக்கத்தக்கதோ அதேபோன்றுதான் கொஞ்சம்போல் அனைவருக்கும் என்பதும்.

மாறாக தேசிய ஆலோசனைக்குழு கூடி 150 மாவட்டங்களில் ‘அனைவருக்குமான’ உணவை உறுதிசெய்யப்போவதாக முடிவெடுத்திருக்கிறது. ‘அனைவருக்குமான’ என்பதன் அர்த்தம் அரிசியோ, கோதுமையோ மூன்று ரூபாய் விலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கு 35 கிலோ வழங்கப்படும். இந்த ‘அனைவருக்குமானது’ கோதுமை அல்லது அரிசியோடு நின்று விடும். இதில் பருப்பு அடங்காது; எண்ணெய் அடங்காது; மளிகை சாமான்கள் அடங்காது. எல்லாவற்றையும் விட இந்தியாவில் நான்கில் ஒரு பகுதிக்கு மட்டும்தான் இது பொருந்தும். கொஞ்சம்போல் கர்ப்பிணி என்று சொன்னால் அது எத்தனை நகைக்கத்தக்கதோ அதேபோன்றுதான் கொஞ்சம்போல் அனைவருக்கும் என்பதும்.

அனைவருக்குமான பொதுவிநியோகம் என்பதும் குறிப்பிட்டோருக்கான விநியோகம் என்பதும் ஒரே நோக்கத்தை அடையும் இரண்டு வழிகள் அல்ல. இரண்டும் வெவ்வேறு நோக்கம் கொண்டது. ஒன்று அனைவருக்குமானது அல்லது அனைவருக்குமானது அல்ல. அரசின் இந்த முயற்சி குழப்பத்தையே உருவாக்கும்.

அரசின் இந்த முயற்சி பசியை நிலப்பரப்போடு இணைப்பதாகும். மற்ற மாவட்டங்களிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் என்னாவது. அவர்களுக்கெல்லாம் பசியில்லையா? இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்கள் என்ன செய்வார்கள்?

ஒரிசாவில் கஞ்சம் மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம். இங்கிருந்து நான்கு லட்சம் பேர் குஜராத்திலுள்ள சூரத்திற்கு சென்றுள்ளனர். கஞ்சம் மாவட்டம் இந்த 150 மாவட்டங்களுக்குள் அடங்கும். பசியோடு சூரத்திற்கு இடம் பெயர்ந்த இவர்களுக்கு இந்த தானியம் எப்படி கிடைக்கும். சூரத்திலுள்ள கடைக்காரர் , “வா மகனே, சட்டத்தை நான் பார்த்து விட்டேன். இதோ இருக்கிறது உன்னுடைய 3 ரூபாய் அரிசி” என்று ஒன்றும் சொல்லிவிடமாட்டார்.

இதனிடையே இந்த இடம்பெயர்ந்தவர்கள் அவர்களுடைய 1 கிலோ 3 ரூபாய் அரிசியை வாங்க மாட்டார்கள். இந்த அரிசி மீதப்படும். உடனடியாக அரசாங்கம் இந்த 150 மாவட்ட பட்டியலிலிருந்து கஞ்சம் மாவட்டத்தை நீக்கிவிடும். மஹாராஷ்டிராவிலுள்ள தானே மாவட்டம் பசியால் வாடும் ஆதிவாசி மக்களைக் கொண்டது. இந்த மாவட்டமும் கிலோ 3 ரூபாய் அரிசி திட்டத்தில் வரும். இவர்கள் ஒரு அடியெடுத்து வைத்தால் அடுத்த ஊர் மும்பைதான். அங்கு ஒரு கிலோ அரிசியின் விலை 30-லிருந்து 40 ரூபாய். விளைவு, தானேயில் பெரும்பாலான மலிவு அரிசி மும்பைக்கு இடம்பெயரும்.

அல்லது விவசாயக்கூலிகளை எடுத்துக்கொள்வோம். வயதுவந்த ஒரு கூலித் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 750 கிராம் தேவைப்படும். குழந்தைகளையும் உள்ளடக்கிய 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு 3 கிலோ அரிசி தேவை. அவர்களால் ஒரு நாளைக்கு இரண்டே முக்கால் கிலோ வுக்கு மேல் வாங்கமுடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படி வைத்துக் கொண்டால் ஒரு மாதத்திற்கு 82.5 கிலோ தேவை. புதிய “அனைவருக்குமான திட்டம்” 150 ரூபாய்க்கு 35 கிலோ அரிசியை கொடுக்கும். மீதி 47.5 கிலோ அரிசியை ஒரு கிலோ 22 ரூபாய் அல்லது அதற்கு மேலும் அதிகமாக கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இதற்கு ரூ.1000 தேவைப்படும். இதற்கு அவர்கள் எங்கே போவார்கள்.

கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் இருக்கிற போதும் லட்சக்கணக்கானோர் வருடந்தோறும் காலகண்டி அல்லது பொலாங்கிரிலிருந்து வேலை தேடி வெளியிடத்திற்கு செல்கிறார்கள். ஆந்திராவில் செங்கல்சூளைக்கு குறைந்த கூலிக்கு பல பேர் வேலைக்குப்போகிறார்கள். இது ஏன்? ஒரு பிரதான காரணம் கிராமப்புற வேலை உறுதியளிப்புத்திட்டம் ஒரு குடும்பத்திற்கு 100 நாளைக்கு மேல் வேலை கொடுப்பதில்லை. ஆந்திராவின் செங்கல்சூளையில் 5 பேர் கொண்ட குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் 180 - 200 நாட்கள் வரை வேலையிருக்கும். வேலை உறுதியளிப்புச்சட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. பொது விநியோகத்திட்டம் குறிப்பிட்டோருக்கு மட்டுமானது. சுரண்டல் மட்டும்தான் அனைவருக்கும் பொதுவானது.

ஆயினும் விவாதம் எப்படி நடத்தப்படுகிறது என்றால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ கொடுப்பதா? 30 கிலோ கொடுப்பதா? என்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் இதுகுறித்து முடிவெடுக்கவேண்டிய இடத்தில் மாண்டேக் சிங் அலுவாலியாவும் பிரணாப் முகர்ஜியும் இருக்கிறார்கள். மனசாட்சி இல்லாதவர்களிடம் இரக்கத்தை பற்றி பேசுகின்ற நிலை இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இதுதான் நடைபெறுகின்றது.

சில நல்லவர்கள் இவற்றையெல்லாம் சட்டமாக்க முயலுகிறார்கள். அரசும் ஏற்றுக்கொள்கிறது. பிறகு அதை பலவீனப்படுத்துகிறது. பின்னர் திட்டக்கமிஷன் இந்த முயற்சிகள் அனைத்தையும் சாத்தியமற்றது என்று நிராகரிக்கிறது. மீண்டும் அது கைவிடப்படுகிறது. பிறகு நிதி அமைச்சகம் எங்கே பணம் இருக்கிறது என்று சொல்லுகிறது. அதன் பிறகு இது பொருத்தமற்றதாக மாற்றப்படுகிறது.


டிக்கன்ஸின் ‘ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் வருவது போல் சிலர் வருகிறார்கள்.

நடைமுறையில் அனைத்தும் தோற்கடிக்கப்படுகிறது. குறிப்பிட்டோருக்கானது என்பதே நடைமுறைக்கு வருகிறது. அதன் பிறகு டிக்கன்ஸின் ‘ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் வருவது போல் சிலர் வருகிறார்கள். அவர்கள் சுமார்ட்கார்டு, பிரத்யேக அடையாள எண்கள், உணவு ஸ்டாம்ப்கள், பணத்தை மாற்றுவது என்பது பற்றியெல்லாம் பேசுகிறார்கள்.

உணவு பாதுகாப்பு சட்டம் இப்போதிருக்கிற வடிவத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறையை பலவீனப்படுத்துவதாகவும், நீர்த்துப்போகச் செய்வதாகவுமே இருக்கிறது. அது அனைவருக்குமான உணவைப் பற்றி பேசுகிறது. குறிப்பிட்டோருக்கல்ல. நாம் அதை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டு ஒவ்வொரு நிலையிலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வழிகாட்டு நடைமுறையை பலவீனப்படுத்துகிறோமா? அல்லது பலப்படுத்துகிறோமா? என்று பார்க்க வேண்டியுள்ளது. இப்போதைய உணவு பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகளை பலவீனப்படுத்துவதாகவே இருக்கிறது. இதில் மட்டும் கவனம் செலுத்துகிற போது இதர துறைகளை நாம் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். நாம் இப்போது சத்தான உணவு, வேலை, மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பது போன்ற ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். ஒரே ஒரு முறை இந்த தேசத்திற்காக அதைச் செய்யுங்கள்.

நன்றி: தீக்கதிர்

கருத்துரையிடுக

6 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. ஒருநாள் ஆட்டோவில் பயணம் செய்த‌போது, என் கணவரும், ஆட்டோ ஓட்டுநரும் நாட்டு நடப்பைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் சொன்னது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

  "நம்மளாவது பரவாயில்லை சார். இருக்கிற விலைவாசியையும், உணவுத் தட்டுப்பாட்டையும் பார்த்தால், நம் குழந்தைகளுக்கெல்லாம் ஒருவேளை சாப்பாடு கூடக் கிடைக்குமோ, கிடைக்காதோ? எதிர்காலச் சந்ததியர்களுக்கு என்ன நிலைமையோ? தெரியவில்லை" வருத்தப்பட்டு சொன்னார் ஆட்டோ ஓட்டுநர்.

  நாடு இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அவர் சொன்னது உண்மையாகி விடுமோ என்று பயமாகத்தான் உள்ளது.

  பதிலளிநீக்கு
 2. //நாடு இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அவர் சொன்னது உண்மையாகி விடுமோ என்று பயமாகத்தான் உள்ளது.//

  சிபிஎம் தேர்ந்தெடுத்தால் இந்த பிரச்சினையை தீர்த்துவிடுவார்கள். டாடா அல்லது டௌ கெமிக்கல்ஸ் அல்லது சலீம் குழுவினர் போன்று யாரையாவது 'கூட்டி'க் கொண்டு வந்து விவசாய நிலங்களை தொழில்கழகங்களாக மாற்றி விலைவாசியைக் கட்டுப்படுத்தி நாட்டை வல்லரசாக்கிவிடுவார்கள்.

  அதை விட குறுக்கு வழி ஒன்றும் உள்ளது. அது ஜெயலலிதாவிற்கோ அல்லது கருணாநிதிக்கோ யாரைப் பார்த்து கட்சி கை காட்டுகிறதோ அவர்களுக்கு ஓட்டு போடுவது.

  *****

  இந்த பின்னூட்டத்தை போடும் அளவுக்காவது முதுகெலும்பு உள்ளதா மாதவராஜ் அல்லது அதையும் கட்சியிடம் அடகு வைத்துவிட்டீர்களா? இந்த ஒரு விசயத்தில் மட்டுமாவது உங்கள் மாமனாரை நீங்கள் பாலோ செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 3. அன்பு மாதவ்

  ஒருமுறை நீங்கள் சொன்னது ஞாபகம் இருக்கிறது. பிரண்ட்லைன் இதழின் வெள்ளி விழா சிறப்பிதழ் பற்றிய விவாதத்தின் பொது சொன்னீர்கள்: உங்களை மிகவும் கவர்ந்த பத்திரிகையாளர் சாய்நாத் என்று.

  அண்மைக் காலத்தில், பத்திரிகை வாயிலாக பொருளாதார அசமத்துவத்தையும், சமூக அநீதியையும் எழுதும் மிக மிக மிக அரிய மனிதருள் மாணிக்கம் சாய்நாத். இன்னொருவர்: ஹர்ஷ் மேந்தர். (ஐ ஏ எஸ் அதிகாரியான ஹர்ஷ் மேந்தர் குஜராத் கலவரத்தில் மதவெறியின் பேயாட்டத்தைக் கண்ணெதிரே பார்த்து அதிர்ந்து போனவர்- பெரும்பான்மை வகுப்புவாதத்தின் தகிடு தத்தங்களை நேரடியாக சந்தித்தவர். அப்போது அவர் எழுதிய கட்டுரை முதலில் கண்ணீரையும் அடுத்து ஆவேசத்தையும் கிளர்த்த வல்லது. பின்னர் தொடர்ச்சியாக ஞாயிற்றுக் கிழமைகளில் ஹிந்து நாளேட்டில் சிறப்புப் பகுதியில் (Sunday Magazine) கவனிக்கப் படாத மக்களது வாழ்க்கை அவலங்களை, சவால்களை, போராட்டங்களை ஆவணப் படுத்தி வருபவர். அவரைப் பற்றி தனியே எழுத வேண்டும்).

  சாய்நாத்தின் இந்தக் கட்டுரை, அவரது வழக்கமான கேலி, நையாண்டி பாணியிலிருந்து சற்றே விலகி, தீவிர உணர்வுகள் கொப்புளிக்க எழுதப்பட்டிருப்பது. கனகராஜ் அதை நல்ல வாசிப்புத் தமிழில் கொணர்ந்ததற்கு வாழ்த்துப் பெறவேண்டியவர். உங்களுக்கு எனது அன்பும், பாராட்டுதல்களும்.

  ஹிந்துவில் ஆகஸ்ட் 12 அன்று பிரசுரமான இந்த அற்புதமான கட்டுரைக்கு நான் அனுப்பியிருந்த பதில் கடிதம். ஹிந்து நாளேட்டில் ஆகஸ்ட் 14 அன்று வெளியானது . உங்கள் பார்வைக்கு.

  The shameless indifference of our policymakers towards the deteriorating development levels of people and growing conditions of hunger and starvation are unpardonable. The advocates of neo-liberal policies have no time for the lesser mortals. The twin India they have created, one shining and the other suffering, is for all to see. Barring the Left parties, there is no voice heard from major political formulations. Popular pressure requires to be mounted on the UPA government to bring about proactive, concrete and quantitative measures to restore dignity in the lives of the poor.

  S.V. Venugopalan,

  Chennai


  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 4. திரு.சாய்நாத் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை உண்டு. பல வருடங்களாக அவரின் கட்டுரைகளை படித்து வருகிறேன். விவசாயிகளின் தற்கொலை, கிராம பொருளாதாரம் பற்றி அவர் பல ஆயிரம் மைல்கள் பயணித்து, அருந் தகவல்களை திரட்டி எழுதும் உழைப்பும், மனித நேயமும் பாரட்டுக்குரியன.

  தகவல்கள், data and information பற்றி சரி. ஆனால் அவற்றை கொண்டு அவர் சொல்லும் முடிவுகள் அல்லது கருத்துக்கள் மீது பல நேரங்களில் மாற்று கருத்து உண்டு. Interpretation of data and his sweeping comments and conlusions about the much maligned ‘neo liberal’ polices since 1991.

  கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 5,00,000 கோடிகள், பட்ஜெட்டில் வரி தள்ளுபடி என்பது sweeping and inaccurate comment. பட்ஜெட்டில் அதற்கான சுட்டி இது :

  http://indiabudget.nic.in/ub2010-11/statrevfor/annex12.pdf

  மிகவும் பின் தங்கிய, வறண்ட பகுதிகளில் புதிய தொழில்கள் துவங்க நிறுவனங்களுக்கு ‘ஊக்கம்’ அளிக்க, வரி சலுகளை பல ஆண்டுகளாகவே உள்ளன. உதாரணமாக புதிய மாநிலமான உத்ராஞ்சலில், தொழில் துவங்கினால், பத்து ஆண்டுகளுக்கு உற்பத்தி மற்றும் இதர வரிகளில் கணிசமான அளவு சலுகை. இவை அந்த பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழில்களை துவங்க ஒரு ஊக்கி என்ற அளவில் தான் பார்க்க வேண்டும். உண்மையாக சொன்னால், ‘தூய’ சந்தை பொருளாதார கொள்கைகள் படி, இது போன்ற ‘சலுகைகளை’ அரசு அளிக்க கூடாது. பாரபட்ச்சம் இல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே வரி விகுதங்கள் தான் இருக்க வேண்டும்.

  மேலும் டீசல், சமையல் எண்ணைகள், உரம் மற்றும் இதர விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான வரி சலுகைகள், பெரும் அளவில் இதில் அடங்கும்.
  மென்பொருள் ஏறுமதிகளை ஊக்குவிக்க STPIகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை தான் இதில் பெரிதாக சொல்லாம். அதுவும் கூடிய விரைவில் நீக்கப்படும். 1991இல் மிக அபாயகரமான அன்னிய செலவாணி பற்றாகுறை ஏற்பட்ட போது, ஏற்றுமதியாளர்களை அனைவருக்கும் 100 சதம் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. To encourage exports which earn foreign exchange for India. பிறகு படிப்படியாக அந்த சலுகை விலக்கப்பட்டது. அதே போல் தான் இந்த ‘சலுகைகளும்’.

  அவரின் லாஜிக் படி பார்த்தால், 1970களில் உச்சபட்ச வருமான வரி சுமார் 98%, சுங்க வரி சுமார் 200 சதம், உற்பத்தி வரி சுமார் 50 சதம் அளவில் இருந்தன. இன்று வருமான வரி 34 சதம் தான் உச்சபட்ச அளவு. சுங்க வரி 20 சதம் அளவுதான். உற்பத்தி வரி 15 சதம் தான் சராசரி. இந்த அளவிற்க்கு குறைக்காமல் இருந்திருந்தால், சாய்நாத் அவர்களின் லாஜிக் படி இன்று பல கோடி கோடிகள் நிகர வரி வசூல் குவிந்திருக்க வேண்டும். ஆனால் வரிகளை மிக குறைத்தால் தான், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து, இன்று பல லச்சம் கோடிகள் வரி வசூல் உயர்ந்தது. அன்றைய விகிதங்கள் தொடர்ந்திருந்தால், அன்று கிடைத்த நிகர் அளவுதான் இன்றும் கிடைத்திருக்கும். Reduction and rationalization of tax rates encourage entrerprise, investment and kindle the intiative for expansion and growth. That is the lesson from history.

  அவருக்கு அடிப்படை பொருளாதரம் தெரியவில்லை என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

  சுதந்திர இந்திய வரலாற்றில் என்றும் இல்லாத அளவு வரி வசூல் மழை. 25வருடங்களுக்கு முன் இதை கனவு கூட கண்டிருக்க முடியாது. இந்த அபரிமிதமான வரி வசூலை, உருப்படியாக, நேர்மையாக செலவு செய்ய வேண்டியது அரசின் தார்மீக கடமை. அதை அப்படி செய்ய கூடாது என்று தாரளமயமாக்கலை முன்மொழிந்தவர்கள் சொல்லவில்லையே ! பெரும் அளவில் அரசின் செலவுகளில் ஊழல் மலிந்து, உரியவர்களுக்கு செல்லாமல், நடுவில் திருடப்படுவது அனைவரும் அறிந்த open secret. இதற்க்கு அம்பானிகளை, பெரும் தொழில் முனைவோரிகளை கோபிப்பது சரியல்ல.

  தான்ய உற்பத்தி கூடி உள்ளது உண்மைதான். ஆனால் அது அதிகரித்த வேகத்தை விட ஜனத்தொகை அதிகரித்து வருவதால் தான், இந்த குறைந்த விகிதம் per capita availability of grains and pulses. விவசாயத்தில் சென்ற 20 ஆண்டுகளில் புதிய முதலீடுகள் குறைவு என்பது உண்மைதான். அதற்கு முக்கிய காரணம், தாரளமயமாக்கல் கொள்கை விவசாயத்தில் இன்றும் அனுமதிக்கப்படவில்லை. நில உச்ச வரம்பு சட்டம் உள்ளது. 2000 ஏக்கர்கள் போன்ற பெரும் கார்பரேட் (அல்லது கம்யூனிச நாடுகளில் இருந்தது போன்ற கூட்டு பண்னைகள்) இன்றும் உருவாக வழியில்லை. அப்போதுதான் economies of scale and modern farming technology backed by huge private investments சாத்தியம்.

  பதிலளிநீக்கு
 5. பார்க்கவும் :

  http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html

  விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

  பொது விநியோகத்தை பரவலாக்குவதை பற்றிதான் இந்த கட்டுரை. அதற்க்கு முழு ஆதரவு இல்லாதற்க்கு உண்மையான காரணம் ஊழல் மற்றும் cynical attitude of officials, politicians and PDS staff.

  http://www.rediff.com/money/2007/jun/12pds.htm

  Corruption rendering PDS ineffective

  வெட்டியாக ராணுவத்திற்க்கும், காமன்வெல்த் விளையாட்டுகளுக்கும், தேவையில்லாத பல அரசு அலுவலகங்களுக்கும் செலவிடப்படும் பல லச்சம் கோடிகளை இதற்கு செலவு செய்வது ஒன்றுதான் வழி.

  பதிலளிநீக்கு
 6. in continuation with my last comment :

  பார்க்கவும் :
  http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
  விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

  பொது விநியோகத்தை பரவலாக்குவதை பற்றிதான் இந்த கட்டுரை. அதற்க்கு முழு ஆதரவு இல்லாதற்க்கு உண்மையான காரணம் ஊழல் மற்றும் cynical attitude of officials, politicians and PDS staff.

  http://www.rediff.com/money/2007/jun/12pds.htm
  Corruption rendering PDS ineffective

  வெட்டியாக ராணுவத்திற்க்கும், காமன்வெல்த் விளையாட்டுகளுக்கும், தேவையில்லாத பல அரசு அலுவலகங்களுக்கும் செலவிடப்படும் பல லச்சம் கோடிகளை இதற்கு செலவு செய்வது ஒன்றுதான் வழி.

  பதிலளிநீக்கு