சிரமங்கள், மலைப்புகள், ஆதரவுகள்…

சிரமம்தான். காமிராவின் நுட்பங்கள் தெரிந்த, அதன் மொழி கைவரப்பெற்ற ஒருவரை காமிராவின் முன் உட்காரவைத்து பேட்டி எடுப்பதில் இவ்வளவு இருக்கிறது என்பதை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமாகிய பாலுமகேந்திராவை பேட்டி எடுக்கும்போதுதான் தெரிந்தது. சென்றமுறை சென்னையில் அவரைப் பார்க்கும்போது, சினிமா குறித்த பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டவர், “ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பேட்டியை வைத்துக் கொள்ளலாம்” எனச் சொல்லியிருந்தார்.

முதலில் என்ன காமிரா என்று கேட்டு திருப்தியடைந்தார். காமிராவின் கோணம், லைட்டிங், ஃபிரேம் என ஒவ்வொன்றையும் வந்து சரிபார்த்த பிறகே எதிரே போய் அமர்ந்தார். ஒரு காமிராவை ஒரே இடத்தில் வைத்து விட்டு, இன்னொரு காமிராவை கையில் வைத்து அங்குமிங்கும் நகர்ந்து படம் பிடிக்கவும் திட்டமிட்டு இருந்தோம். “அது வேண்டாம்” என மறுத்துவிட்டார். தனது தோற்றம் குறித்து அவர் கொண்ட கவனம் புரிந்தது.

பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, இடையில் ஆடியோ சரியாக இருக்கிறதா என எங்கள் உதவியாளர் ஒருவர் எழுந்து நடமாடவும், கடுமையாக கோபித்து, பேட்டியை நிறுத்தி எழுந்து கொண்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. பேசாமல் அவர் எதிரே உட்கார்ந்திருந்தேன். அவரே சமாதானமாகி, திரும்ப உட்கார்ந்து ஒத்துழைத்தார். பேட்டியில் வார்த்தைகள் தெளிவாகவும், நிதானமாகவும் இருந்தன. முடிந்த பிறகு, அவர் அறைக்கு என்னை அழைத்து நட்பாகவும், பிரத்யேகமாகவும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். நன்றி சொல்லி விடைபெற்றேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நேற்று வரை சென்னையிலிருந்து இயக்குனர் மகேந்திரன் குறித்த ஆவணப்படத்திற்கான அடுத்தக் கட்ட வேலைகளை முடித்துக்கொண்டு இன்று காலையில்தான் சாத்தூருக்குத் திரும்பினோம். இயக்குனர் ‘யார்’ கண்ணன் அவர்களது பேட்டி இந்த ஆவணப்படத்தில் மிக முக்கியமானதாய் இருக்கும்.

‘உதிரிப்பூக்கள்’ படத்திலிருந்து ‘கை கொடுக்கும் கை’வரை இயக்குனர் மகேந்திரனிடம் உதவி இயக்குனராய் பணிபுரிந்திருக்கிறார் அவர். படப்பிடிப்புகளில் நடைபெற்ற சின்னச் சின்ன சம்பவங்கள், சுவாரசியான நினைவுகள் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறார். பேட்டியின் போது, சில இடங்களில் அவரது கண்கள் கலங்கின. இயக்குனர் மகேந்திரன் மீதான மதிப்பும், மரியாதையும் எங்களுக்கு மேலும் கூடியது. “அவரிடம் பணிபுரிந்து இன்று நான் வெளியே வந்து இயக்குனராக இருக்கிறேன் சார். ஆனால் நான் ஒரு நல்ல உதவி இயக்குனர் மட்டுமே” என்று சொல்லிய வார்த்தைகளில், கண்ணனும் உயர்ந்து நின்றார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக எடுத்தும் இன்னும் அவரிடம் பெற வேண்டியது இருப்பதாகவேப் பட்டது. அவரிடம் சொன்னோம். தனக்கு சில முக்கியமான பணிகள் இருப்பதாகவும், இன்னொருநாள் வைத்துக்கொள்ளலாம், பேசுவோம் எனவும் சொல்லி இருக்கிறார்.

இன்னும் ரஜினிகாந்த், சுஹாசினி, ராதிகா, ரேவதி, சாருஹாசன், அஸ்வினி, சரத்பாபு, மோகன், பிரதாப் போத்தன், வடிவுக்கரசி, சுந்தர் என அவர் படத்தில் நடித்தவர்கள், இளையராஜா, எடிட்டர் லெனின் என அவரோடு பணியாற்றியவர்கள், நடிகர் கமல் போன்ற அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா குறித்து அக்கறை கொண்ட எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரது பேட்டிகள் வேண்டியிருக்கிறது. ஒவ்வொருமுறையும் சென்னை சென்று பேட்டிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. இயக்குனர் மகேந்திரன் குறித்த செய்திகள், அவர் இயக்கிய படங்கள் என சேகரிக்க வேண்டி இருக்கிறது. யோசிக்க யோசிக்க மலைப்பாகத்தான் இருக்கிறது.

நண்பர்கள் தோளோடு நிற்கின்றனர். எங்கெங்கோ இருந்தும், கேள்விப்பட்டு வலையுலகில் சிலர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு இயக்குனர் மகேந்திரன் பற்றிய தகவல்களை தந்த வண்ணம் இருக்கின்றனர். பத்திரிகை நண்பர்கள் சிலர் அவர்களால் ஆன உதவிகளைச் செய்வதாய் தோள் தட்டியிருக்கின்றனர். சில பதிவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஒத்துழைப்பு இம்முயற்சியில் எப்போதும் உண்டு என கரம் நீட்டியிருக்கின்றனர். இதுதான், இந்த ஆதரவுதான் மேலும் அடுத்த அடி எடுத்து வைக்க உற்சாகமளிக்கிறது....

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒரு முறை பாலு மகேந்திராவைச் சந்திந்திருக்கிறேன்...

    மிக நிதனமாகப் பேசுவதை, ஒரு எழுத்துவிடாமல் கேட்க வேண்டும் போல் இருக்கும்....

    ஆவணப்படம் சிறப்பாக வர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அபாரமான உழைப்பைக் கொடுத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. தமிழின் மிகச் சிறந்த இயக்குனர் ஒருவரைப்பற்றிய அற்புதமான ஆவணப்படம் உருவாகி வருகிறது என்பதை அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    தோள் கொடுப்பதற்கு இன்னுமொரு தம்பியும் இருக்கிறான் மாதவ் அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. மகேந்திரன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். 'கை கொடுக்கும் கை' கேள்விப்பட்டதில்லையே? ஒன்றிரண்டு விவரம் கொடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. சிறந்த நோக்கம்.அருமையான முயற்சி!

    கரும்புத்துண்டுகளை கிண்ணத்தில் இட்டு தரப்போகிறீகள்.காத்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  5. ப‌ணத்துக்காக, ப‌லான‌ ப‌ட‌த்தைக்கூட‌ இய‌க்க‌த் த‌யாராயிருக்கும்
    எத்த‌னையோ இய‌க்குன‌ர்க‌ளுக்கு இடையே,
    இந்த‌ 21ஆம் நூற்றாண்டிலும் த‌ர‌ம்,ம‌னித‌ம்,ஈர‌ம்,இய‌ல்பு க‌லந்து
    உயிரூட்டி த‌மிழ்ப் சினிமாவை ஒரு வீச்சுக்கு கொண்டு சென்று
    த‌ன்னையும், த‌ண்மையும் இழ‌க்காதவ‌ர்க‌ளில், திரு ம‌கேந்திர‌ன்
    ம‌கத்தான‌வ‌ர். உங்க‌ள் முய‌ற்சி நிச்ச‌ய‌ம் வெற்றி பெறும். த‌ர‌த்திற்கென‌
    ஒரு த‌னி ம‌ரியாதை த‌லைமுறை மாறினாலும் நிற்கும் என்ப‌தை
    இன்றைய‌ ம‌னித‌ ய‌ந்திர‌ங்க‌ள் பிரிந்து கொள்ள‌ட்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!