Type Here to Get Search Results !

காதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்!

karanji-2 கவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்டமாக நிகழ்த்தி வருகின்றனர். இதனைக் கண்டித்தும். இத்தகைய கொலைகள் நடைபெறாமல் தடுப்பதற்கும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என பல்வேறு ஜனநாயக இயக்கங்கள்  வலியுறுத்தி வருகின்ற சூழ்நிலையில், இந்து திருமணச்சட்டத்தில் உள்ள ஒரே ரத்தம் சம்பந்தமான உறவுமுறைக்குள் திருமணம் செய்துகொள்வதற்கு தடை கொண்டுவர வேண்டுமெனக்கூறி சாதி மறுப்பு திருமணத்திற்கும், காதல் திருமணத்திற்கும் ஆதரவாக மகாராஷ்ராவிலுள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

வர்ணாசிரமக் கொடுமையை உயர்த்திப்பிடிக்கும் பிற்போக்கு இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ்., பாஜக, சிவசேனா, மற்றும் நவநிர்மாண் சேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்திலிருந்து சுமார் 200 கி.மீ.தொலைவிலுள்ள கிராமம் காரன்ஜி. சந்திரபூர் மாவட்டத்தில் இக்கிராமம் உள்ளது. இச்சிறு கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டுச்சுவர்களுக்கும் இளம் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு நம்பிக்கையுடன் வருகின்ற காதலர்களை வரவேற்பதற்காக காதலர்களின் வண்ணக்குறியீடாம் இந்த இளம்சிவப்பு.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 காதல் திருமணங்களை இக்கிராம மக்கள்  நடத்திவைத்துள்ளனர்.அதிலும் குறிப்பாக இத்திருமணங்களில் வெவ்
வேறு சாதிகளை சார்ந்த மணமகன், மணமகள் என்ற சாதி மறுப்பு திருமணங்களே அதிகமாகும்.இந்த எண்ணிக்கையானது படித்தவர்கள் இருக்கும் நகர்ப்புறங்களில் நடக்கும் திருமணங்களை விட அதிகமானதாகும். இக்காதல் திருமணங்களை எதிர்க்கும் பழைமைவாதிகள் ஒரு கும்பலாக இருந்து கொண்டு அவ்வப்போது இத்திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அத்தயை முட்டுக்கட்டைகளை புறம்தள்ளி, சாதி மறுப்பு திரும
ணங்கள் நடத்திவைக்கப்படுகின்றன.

கடந்த 2005 ம் ஆண்டு அசோக் கர்பள்ளிவர் மற்றும் அவரது காதலி மீனாட்சி துள்மலி ஆகிய இருவரும் பக்கத்து கிராமத்திலிருந்து வந்து காரன்ஜீ கிராமத்திலுள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அசோக் கர்பள்ளிவர், கும்பர் என்ற சாதியினை சார்ந்தவர். மீனாட்சி துள்மலி தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர். எனவே இத்திருமணத்தை இவ்விரு குடும்பத்தை சார்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இவர்களை கொல்வதற்காக ஆயுதங்களுடன் காரன்ஜி கிராமத்திற்கும் வந்தார்கள். ஆனால் இக்கிராமமக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக திரும்பிச் சென்றனர்.

அசோக் கர்பள்ளிவர் மற்றும் மீனாட்சி துள்மலி மணமக்களுக்கு காரன்ஜி மக்கள் வீடு மற்றும் வேலை அளித்து தங்கள் கிராமவாசிகளாகவே மாற்றிவிட்டனர். சிலநாட்களுக்குப் பிறகு அவர்களுடைய பெற்றோர்களுடன் பஞ்சாயத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இரு குடும்பத்தையும் இணைத்து வைத்துனர். இன்று அவர்களுடைய இரு பெண்குழந்தைகளும் படிப்பதற்காக காரன்ஜி கிராமப்பள்ளிக்கூடத்திற்கு சென்று வருகின்றன என்று அக்கிராமப்பஞ்சாயத்தின் துணைத்தலைவர் துகாஸ் பட்ருஜீ வானாடி பெருமையுடன் கூறுகிறார்.

குறிப்பாக அசோக் கர்பள்ளிவர் மற்றும் மீனாட்சி துள்மலி ஆகியோரின் திருமணத்திற்கு பிறகு பல காதல் திருமணங்களும், சாதி மறுப்பு திருமணங்களும் செய்து வைக்கப்பட்டுள்ளன. இப்பொழுதெல்லாம் அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து மட்டுமின்றி, உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலிருந்தும் வந்து எங்கள் கிராமத்தில் திருமணம் செய்கின்றனர். அத்தகைய காதலர்களின் குடும்பத்தினருடன் முதலில் பேச்சு வார்த்தையின் மூலம் சமாதானப்படுத்துகிறாம். சிலநேரங்களில் இத்தகைய முயற்சி வெற்றி பெற்று அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யப்படுகிறது,

அதேநேரத்தில், குடும்பத்தினரால் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகும் காதலர்களுக்கு ஒருசாதியை சார்ந்த மக்களின் சார்பாக திருமணபத்திரிக்கை அச்சடிக்கப்படுகிறது. மற்றொரு சாதியை சார்ந்த மக்களின் சார்பாக இனிப்பு பலகாரங்கள் செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நாளில் அக்காதலர்களுக்கு பஞ்சாயத்தின் சார்பாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இத்தகைய திருமணங்கள் திருவிழா போல் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இவற்றிக்கான செலவுகளை கிராமமக்கள் ஒவ்வொரு குடும்பமும் சமமாக பிரித்து கொள்கிறார்கள்.

மேலும் துகாஸ் பட்ருஜி கூறுகையில், ஏதோ ஒருநாள் இரவில் இத்தகைய மாற்றம் என்பது நடைபெறவில்லை. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வரை ஆதிக்க சாதியினரின் கடுமையான தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட கிராமம்தான் காரன்ஜி. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஆதிக்க சாதியினருக்கும் இடையில் சாதி மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமத்தின் பொது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கே தடை இருந்தது, வேறு சாதியை சார்ந்தவரை மணப்பவர்கள் ஓன்று தற்கொலை செய்து கொள்ளவேண்டும் அல்லது அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். 2003ம் ஆண்டிற்கு பிறகுதான் இத்தகைய மாற்றம் என்பதே ஏற்பட்டது. குறிப்பாக அசோக் கர்பள்ளிவர் மற்றும் மீனாட்சி துள்மலி ஜோடியின் காதல் திருமணத்திற்கு பிறகுதான் சாதிய பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டன என்கிறார்.

தங்கள் கிராமத்தோடு நிற்கவில்லை மக்கள். தங்கள் வெற்றிக்கதை அருகில் உள்ள கிராமங்களிலும் நடைபெற வேண்டும் என்பதற்காக சுற்றியுள்ள 52 கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒருவார பயிற்சி முகாமை நடத்தியுள்ளனர். தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் இதை நடத்திக் காட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளார்கள்.

நன்றி : தீக்கதிர் & indiatogether

கருத்துரையிடுக

5 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. நல்ல ஒரு செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  நம் மாநிலத்திலும் திருமண உதவி திட்டத்தில் கலப்பு திருமணம் செய்யும் மணமக்களுக்கு கூடுதல் ஊக்க தொகை வழங்கலாம்.

  சாதி பாகுபாடு ஓரளவு குறைய அது வழி வகுக்கும்.

  பதிலளிநீக்கு
 2. அக்கிராம மக்களின் சேவை பாராட்டுக்குரியது.
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. நன்றி : தீக்கதிர் !!!!

  நன்றி : தீக்கதிர் !!!!

  பதிலளிநீக்கு
 4. பாராட்டத்தகுந்த சாதனை. படித்தவர்கள் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்கிறார்கள். படிக்காதவர்கள் வாழக் கற்றுக்கொள்கிறார்கள். படித்த நாம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், படிக்காதவர்களிடமிருந்து!

  பதிலளிநீக்கு