அந்த 44 நாட்கள் - நான்காம் பகுதி

இன்னும் சில கணங்கள் அப்படியே கடந்திருந்தால், விபரீதங்கள் நடந்திருக்கும். அதற்குள்  மாயகிருஷ்ணன் வாசல் பக்கத்தில் நின்று கொண்டு "தலைவரே, தலைவரே' என்று பரமசிவத்தைப் பார்த்து கையிலிருந்த மொபட் சாவியைக் கண்பித்துக் கொண்டிருந்தார். சிலர் பரமசிவம் அருகில் பாதுகாப்பாக நின்று வெளியே அழைத்துச் சென்றனர். தாறுமாறாக வசவுகள் அவரைத் துரத்திக் கொண்டிருந்தன. மாயகிருஷ்ணன் தனது மொபட்டில் அவரை ஏற்றிக் கொண்டதை பார்த்தேன். கூடவே கணேசன், முருகப்பன், இன்னும் சிலர் சிறு கூட்டமாகச் சென்றனர்.

இப்போது மொத்தக் கூட்டமும் கிருஷ்ணகுமார் பேச்சை அமைதியாக கவனிக்க ஆரம்பித்தது. "எதுவும் முடிந்து போகவில்லை. இந்த இரவு இப்படியே கழிந்துவிடப் போவதில்லை. நாம் அனைவரும் இங்கே ஒற்றுமையாகத் தானே இருக்கிறோம். எதை, எப்படி நாம் இழந்துவிட முடியும்? நாம் நிறைய பேசலாம். ஆனால் இந்த மண்டபத்தைச் சுற்றிலும் தெருக்கள், மனிதர்கள் இருக்கிறார்கள். வாருங்கள். நாம் வைப்பாற்றங்கரைக்குச் செல்வோம். அங்கு உட்கார்ந்து பேசிக் கொள்வோம்." எல்லோரும் அங்கிருந்து வைப்பாற்றை நோக்கி அந்த ஒன்பது மணி இரவில் நடக்க ஆரம்பித்தோம். வழிநெடுக, ஆற்றாமையும், அடங்காத கோபமும், எதையோ பறிகொடுத்த சோகமுமாய் தோழர்கள் வந்தார்கள். முனிசிபல் தெருவைக் கடந்து, கிணற்றுக் கடவுத் தெரு வழியாக ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பிள்ளையார் கோவில் படித்துறை வழியாக இறங்கி ஆற்றங்கரை மணலில் உட்கார்ந்து கொண்டார்கள். ஒருவர் முகம் ஒருவர் தெளிவாக புலனாகாத மங்கிய இருட்டு.

கிருஷ்ணகுமார் ஒப்பந்தத்தில் இருக்கிற சாதகமான விஷயங்களைத் தொகுத்தார். "இரண்டரை ஆண்டுகளாக போராடி வந்த ஊதிய முரண்பாடு கோரிக்கை வெற்றி பெற்றிருக்கிறது. முடிந்து போன விஷயமாகக் கருதப்பட்ட கடைநிலைத் தோழர்களுக்கு பிரமோஷன் என்னும் நமது கோரிக்கை உயிர் பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தால் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அனேகச் சின்னச் சின்ன கோரிக்கைகள் நிறைவேறி இருக்கின்றன. இப்போது நம்முன் நிற்கும் மிக முக்கியமான பிரச்சினை வேலை நிறுத்தத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட பதினெட்டு ஆபிஸர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டும். நிர்வாகம் அவர்களை மட்டும் ஏன் உள்ளே வரச் சொல்லாமல் வெளியே நிறுத்துகிறது? நமக்குள் பயத்தை விதைக்கத்தான். இன்னொருமுறை இங்கு இப்படி ஒரு வேலைநிறுத்தம் நடக்கக் கூடாது என்பதை நம் மூளைக்குள் உறைய வைப்பதற்காகத்தான். வரலாற்றில் இப்படிப்பட்ட சோதனைகளை, அனுபவங்களை, பலத்த அடிகளைத் தாங்கிக் கொண்டுதான் தொழிலாளி வர்க்கம் மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டு வருகிறது.”

“இந்த பதினெட்டுத் தோழர்கள் நமக்காக போராடியவர்கள். அவர்களுக்கும், இந்தக் கோரிக்கைகளுக்கும்  சம்பந்தமில்லை. அவர்களுக்காக நாம் அனைவரும் போராட மாட்டோமா? அவர்களுக்காக எந்தத் தியாகமும் நாம் செய்ய மாட்டோமா? ஒரு வாரத்தில் ஐ.ஓ.பியில் கலந்து நல்ல முடிவை இந்த நிர்வாகம் எடுக்காத பட்சத்தில் நீங்களும், நானும் அவர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இதே சாத்தூரில் இருக்க மாட்டோமா? எது சாத்தியம். எது சாத்தியமில்லை. இன்னொரு போராட்டம் நடத்த முடியாதவர்களே உடைந்து போவார்கள். நொறுங்கிப் போவார்கள். தொடர்ந்து போராடுகிறவர்கள் கலங்க மாட்டார்கள். இந்த இரவு மட்டுமல்ல, எல்லா இரவுகளும் விடிந்தே தீரும்." உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டே போனார். கூட்டம் அவரது வார்த்தைகளுக்குப் பின்னால் வழி கண்டு பயணம் செய்து கொண்டிருந்தது. "இங்கு முடிவு செய்வோம். இப்போதே முடிவு செய்வோம். சொல்லுங்கள். அந்த ஆபிஸர்களை உள்ளே எடுக்கா விட்டால் இந்த தேதியில் இருந்து நாம் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என்று முடிவு செய்வோம். இதோ நாங்கள் செயற்குழு உறுப்பினர்கள் முதலில் பந்தலில் உட்காருகிறோம்." என அறிவித்தார். கூட்டம் கரகோஷங்களால் அதை ஆமோதித்தது.

"இதோ இருக்கிறார்கள்  பாதிக்கப்பட்ட நமது அலுவலர்கள். இன்று அவர்களை நாமே அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்தக் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வோம். அந்தக் குடும்பங்களில் நாமும் இணைந்து கொள்வோம். அதுதான் நமது முடிவுறாத கடமையை நமக்கு உணர்த்தும். அந்தக் குடும்பங்களை நமது தோளில் தாங்குவோம்." பேசிக்கொண்டே இருந்தார். இப்போது உருவங்கள் தெளிவாகி ஒருவர் முகம் ஒருவருக்கு புலனாகிக் கொண்டிருந்தது. "நாளை மறுநாள், அக்டோபர் 14ம் தேதி, 44 நாட்கள் வேலைநிறுத்தம் செய்து பணிக்குத் திரும்பப் போகிறீர்கள். விரைவில் நாம் மீண்டும் கூட இருக்கிறோம் என்னும் சிந்தனையோடு கிளைகளுக்குள் காலடி எடுத்து வையுங்கள்." முடித்துக் கொண்டார். சிலர் எழுந்து கேள்வி கேட்டார்கள். மீண்டும் சின்னச் சின்னதாய் உற்சாகம் தளிர்த்துக் கொண்டிருந்தது.

எல்லோரும் ஊருக்குள் வந்தோம். முக்கணாந்தல் ரோட்டில் வரும்போது எதிரே பரமசிவம் ஐந்தாறு தோழர்களோடு வேகமாக வந்தார். "சேர்மனை பார்த்து பேசிவிட்டோம். நம்மோடு அந்த ஆபிஸர்களும் அக்டோபர் 14ம் தேதி பணியில் சேர ஒப்புக்கொண்டுவிட்டார்." என அறிவித்தார். எல்லாம் மாயாஜாலமாக இருந்தது. பரமசிவத்தோடு இருந்தவர்களில் ஒருவர் எல்லாவற்றையும் சொன்னார். கூட்டத்தில் அவமானம் இழைக்கப்பட்டதும் பரமசிவமும் அவரது ஆதரவாளர்களும் சேர்மன் தியாகராஜனை அப்போதே வீட்டில் போய் சந்தித்து இருக்கிறார்கள். ஆபிஸர்களை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் தான் வெளியில் நடமாடமுடியாது என்று பரமசிவம் பரிதாபமாக புலம்பி இருக்கிறார். அதற்கு நான் என்ன செய்யட்டும், ஐ.ஓ.பியில் கேட்காமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சேர்மன் சாதாரணமாகச் சொல்ல, பரமசிவம் மேலும் பரிதாபமாக கெஞ்ச ஆரம்பித்திருக்கிறார். கண்ணெல்லாம் பொங்கி நிற்கும் அவரைப் பார்த்து. "இரும்யா... "என்று இரண்டு மூன்று பேருக்கு போன் செய்திருக்கிறார். "சரிய்யா... அவங்களையும் எல்லோரையும் போல வேலையில் ஜாய்ன் பண்ணச் சொல்லிருவோம். அவங்கக்கிட்ட, பணியில் எடுத்துக் கொள்ள வேண்டி தனித்தனியா கடிதம் எழுதி வாங்கிக் கொடுத்துருங்க." என்று சொல்லியிருக்கிறார். இத்தனை காலமும் அந்த ஐ.ஓ.பி பூதம அவரது போனிலேயேத்தான் இருந்திருக்கிறது!

எல்லோருக்குள்ளும் ஒரு நிம்மதியான மனோநிலை பரவியது. அதேநேரம் தோழர்கள் வெளிப்படையாக அப்போதே சாத்தூர் வீதிகளில் பேச ஆரம்பித்தார்கள். "இதுவரைக்கும் முடியாது என்று சொன்ன சேர்மன், ஒரு மணி நேரத்தில் எப்படி முடிவை மாற்றிக் கொண்டார்?". "மண்டபத்துல அந்த விரட்டு விரட்டலன்னா இவரும் சேர்மனை பாக்க ஒடியிருக்க மாட்டார். அவரும் சம்மதிச்சிருக்க மாட்டார்". "ஆபிஸர்களை சேர்க்கலன்னா தோழர்கள் அனைவரும் கிருஷ்ணகுமார் பக்கம் போயிருவாங்க, அதை உடைப்பதற்கு நிர்வாகம் இப்படித்தான் செய்யும்"

வாழ்வின் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. கிருஷ்ணகுமார் போஸ்பாண்டியனோடு டீக்குடித்துக் கொண்டே சொன்னார். "இந்த நிர்வாகத்துக்கு சுண்டு விரலால் செய்யக் கூடிய ஒரு காரியத்துக்கு எத்தனை தோழர்களை எத்தனை நாட்களாக அலைக்கழிக்கிறது. அதிகாரத்தின் திமிரும், வேரும் இதுதான்". அங்கேயே நின்று  பேசிக்கொண்டு இருந்தோம். அங்கங்கே குழுகுழுவாக தோழர்கள் நின்றிருந்தனர். நாற்பத்து நான்கு நாட்களின் அனுபவம் எல்லோருக்குள்ளும் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், மறியல், ஊர்வலம், கைது, பிரச்சாரங்கள், என கடந்த நாட்கள் ஒவ்வோருவரிடமும் கருப்பு வெள்ளையாக கரைபுரண்டு கொண்டு இருந்தது. முஷ்டி உயர்த்திய கோஷங்கள் கேட்டுக் கொண்டு இருந்தன.

இரவு ஒரு மணிக்கு மேல் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து விடிகாலையில் திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறி பூச்சிக்காட்டு மண்ணில் இறங்கிய போது காலை எட்டு மணியாகியிருந்தது. பழகிய இடங்கள் இன்னொரு உலகத்திற்குள் என்னை அழைத்தன. இந்த 44 நாட்களில் இரண்டு தடவைதான்  ஊருக்கு வந்து அம்மாவைப் பார்த்திருந்தேன். ஷேவ் செய்யாமல், மெலிந்து போயிருந்த என்னைப் பார்த்து அம்மா அழுதார்கள். உள்ளே போய் கட்டிலில் படுத்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அம்மா இரண்டு கடிதங்களைக் கொண்டு வந்து தந்தார்கள். அம்மு எழுதியிருந்தாள். அதுவரை எங்கோயிருந்த எனக்குப் பரிச்சயமானவர்கள் எல்லாம் மெல்ல நெருங்கி வந்து என்னைப் பார்ப்பது போலிருந்தது.

பத்து மணிக்கு கேஷ் கீ எடுத்துக் கொண்டு வங்கியின் கிளைக்குச் சென்றேன். வேலைநிறுத்தத்தில் பங்கு பெறாத மேலாளர் நடராஜன் "வாங்க" என்று சிரித்தார். அவர் எதோ சொல்ல வருவதாகத் தெரிந்தது. கேஷ் ரூமைத் திறந்த போது உள்ளேயிருந்து வெக்கையும், புழுக்கமும் முகத்தில் அடித்தன. 44 நாட்கள் நுழையாமல் இருந்த காற்றோடு நானும் அந்த அறைக்குள் நுழைந்தேன்.

சிறிது நேரத்தில், செம்மறிக்குளத்திலிருந்து சோமு போனில் கூப்பிடுகிறார் என போஸ்ட் ஆபிஸிலிருந்து வந்து சொன்னார்கள். சென்றேன். பரப்பாடியில். 44 நாட்கள் பூட்டியிருந்த  வங்கிக்கிளையின் வாசலுக்கு ஊர்மக்கள் சேர்ந்து இன்னொரு பூட்டு போட்டு இருப்பதாகவும், வேலைக்கு சென்ற நம் தோழர்கள் மீது தாக்குதல் நடத்த வருவதாகவும் பதற்றத்தோடு சொன்னார். அவரிடமும் கேஷ் கீ இருந்தது.யாரும் போக முடியாது.. கிருஷ்ணகுமாருக்கு போன் செய்து காத்திருந்தேன். அவருக்கும்  விஷயம் தெரிந்திருக்கிறது. அந்தக் கிளையின் தோழர்களை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் செய்யச் சொல்லியிருப்பதாகச் சொன்னார். கூடவே, பரமசிவம், கணேசனும் நம் சங்கத்துக்கு எதிராக பேசுவதாகவும் குறிப்பிட்டார்.

எப்படிப்பட்ட முரண்பாடு இது எனத் தோன்றியது. போராடிய சமயத்தில் வத்றாப்பிலிருந்தும், கடையநல்லூரிலிருந்தும் மக்கள் ஆதரவாக வந்து நின்றதும் இங்குதான் நடந்திருக்கிறது. வாடிக்கையாளர்களோடு மரியாதையாக, பிரியமாக பழகுவதும் நமது போராட்டத்தின் பகுதி என்று புரிய வைக்க வேண்டி இருக்கிறது.. இரண்டு மூன்று நாட்கள் கழித்து காமராஜ் போன் செய்தான். “சாத்தூருக்கு வந்துட்டுப் போ ஒருநாள்” என்றான். “என்னடா” என்றான். “சும்மாத்தான். வாயேன்” என்றான். குரலே சரியில்லாமல் இருந்தது. திரும்பவும் கேட்டேன். “இல்ல... கிருஷ்ணகுமார் உடம்புக்கு சுகமில்லன்னு காரைக்குடி போய்ட்டார்.  சங்க அலுவலகத்துக்கு யாரும் வர்றதில்ல.. வெறிச்சுன்னு இருக்கு” என்றான்.

கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கிய போது இருட்ட ஆரம்பித்திருந்தது. சங்க அலுவலகத்திற்குச் சென்றேன். பூட்டியிருந்தது. ஓட்டுக்கூரைக்குக் கீழே முன்பக்கச்சுவரின் மீது கைவைத்துத் துழாவிப் பார்த்தேன். சாவி இருந்தது. திறந்து உள்ளே சென்ற போது மௌனமும், புழுக்கமும் தவிக்க வைத்தது. பின்பக்கக் கதவைத் திறந்து மெயின் ரோட்டையும், இயங்கிக் கொண்டிருந்த சாத்தூரையும் பார்த்தபடி நின்றிருந்தேன். மேற்கே ஆற்றோரம் அந்த புளிய மரத்தின் மீது ஆயிரக் கணக்கில் பறவைகள் கத்தி கொண்டிருந்தன. சரியாக போன வாரம் இது போலத்தான் தோழர்கள் கொதித்துப் போயிருந்தனர். நினைவுகள் சுற்றிச் சுற்றி வந்தன. இப்போது காட்சிகள் மாறி விட்டிருந்தன. கடந்த நாட்கள் எல்லாம் ஆச்சரியமாக இருந்தன. அந்த நேரத்தின் வேகம், சூடு எல்லாம் ஆறிப் போய் இருந்தாலும் கனமாய் உணர முடிந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எதிர் நீச்சல் போட்டாலும் வெள்ளம் அடித்துச் செல்வதாகவே காலம் தெரிகிறது. கொஞ்சம் கரை ஒதுங்கி ஆசுவாசப் படுத்தி மீண்டும் எதிர் நீச்சலுக்குத் தயாராக வேண்டி இருக்கிறது, அப்படித்தான் தோழர்கள் அங்கங்கு சென்று அவரவர்களாக  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் கோரிக்கைகள், கோபங்கள், போராட்டங்கள் என அடர்த்தியாகிற போது முஷ்டி உயர்த்திக் கொண்டு கூடி வந்து நிற்கிறார்கள்.

எந்தப் போராட்டமும் பெரும் வெற்றிகளைக் கொண்டு வந்து குவிக்கவில்லை. இழந்து கொண்டிருக்கிறவர்கள் மேலும் இழந்து போகாமல் தற்காத்துக் கொள்கிற உயிரின் துடிப்பாகவே போராட்டங்கள் முன் வந்து நிற்கின்றன. மரம் சும்மாயிருந்தாலும் காற்று சும்மா இருக்க விடுவதில்லை என்னும் மாவோவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் இப்போது மிகத் தெளிவாக புரிகிறது. அரசும், இந்த அமைப்பும் திட்டமிட்டு, தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். போராடாதவர்கள் அடிமைகளாக, தங்களைச் சுரண்டுகிறவர்களுக்கே சேவகம் செய்யக்கூடிய இழிநிலைக்கு ஆளாகிறார்கள். காட்டுக்குள் சிங்கம் மற்ற மிருகங்களை  இஷ்டத்திற்கு கொன்று அலைகிறபோது ஒருநாளைக்கு ஒரு மிருகத்தை மட்டுமே சாப்பிடலாம் என சிங்கத்திடம் வேண்டுகிற பரிதாபமானவர்களாக மனிதர்கள் இருக்க முடியாது. அவர்களை ஒன்று படுத்தி சிங்கத்தையும் எதிர்க்கலாம் என்னும் சிந்தனையை உருவாக்கும் பணியைத்தான் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் செய்து வருகின்றன.

இந்த தொடர் முயற்சியில் கிருஷ்ணகுமார் பேசிக்கொண்டு இருக்கிறார். சோலை மாணிக்கம் ஆவேசமாக கோஷங்கள் போட்டுக் கொண்டு இருக்கிறார். சோமு கேள்விகளை முன் வைக்கிறார். எஸ்.ஏ.பி நள்ளிரவில் வந்து கதவைத் தட்டி ஜீவாவை, பகத்சிங்கை அறிமுகம் செய்து வைக்கிறார். காமராஜ் 'என் தோழனே' என்று கைப்பற்றி நிற்கிறான். மூர்த்தி ரோனியோ சுற்றுகிறான். அன்புக்குரிய பொதுச் செயலாளருக்கு என்று எத்தனையோ தோழர்கள் கடிதங்கள் எழுதிகொண்டு இருக்கிறார்கள். பிரியமும், உரிமையும் கலந்த உறவாக அது பரிணமித்து நீண்டு கொண்டே இருக்கிறது.

கதவைச் சாத்திவிட்டு படியிறங்கி பிலால் கடைக்குச் சென்று டீ குடித்தேன். வாகனங்களும், மனிதர்களும் அங்குமிங்குமாய் போய்க் கொண்டு இருந்தனர். அந்த நேரத்திலும் தண்ணீரை சுமந்து கொண்டு மாடுகள் ஊருக்குள் சென்று கொண்டு இருந்தன. "ஆபிஸுக்கு யாரும் வந்தார்களா' என்று டீக்கடையில் கேட்டேன். "காமராஜ் சார் வந்துட்டுப் போனாங்க. வரதன் சார் இனுமத்தான் வருவாங்க." என்று டீக்கடைப் பையன் சொன்னான். மீண்டு சங்க அலுவலகம் சென்று லைட்டைப் போட்டு உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வரதராஜப் பெருமாள் "எப்படா வந்தே' என்றபடியே நுழைந்தான். எல்லோருக்கும் எப்போதும் உற்சாகத்தை அவனால் தரமுடிகிறது என்று தெரியவில்லை.

சாத்தூர் புறநநகர்ப் பகுதியில் தங்கியிருந்த காமராஜைப் பார்க்கச் சென்றோம். அவனோடு சாப்பிட்டு சங்க அலுவலத்திற்கு வந்து பேசிக் கொண்டு இருந்தோம். அம்முவைப் பற்றி விசாரித்தான். 44 நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். இன்னும் பல இரவுகள் வேண்டும் போல் இருந்தது. தலைமையலுவலகத்திற்குப் போனால் நம் தோழர்களே உற்சாகமற்றும், எதோ அதிர்ச்சியோடும் பார்ப்பது போல் இருக்கிறது என்று அவன் சொன்னது தாங்க முடியாததாய் இருந்தது. பரமசிவமும், கணேசனும் சேர்மனை சந்தித்து அடிக்கடி  பேசுகிறார்கள் என்பது சகிக்கமுடியாததாய் இருந்தது. மெல்ல மெல்ல ஏணிகளில் ஏறுகிறோம் என நினைத்திருந்த சமயத்தில் மொத்தமாய் பாம்பு கடித்து மீண்டும் ஆரம்ப இடத்திற்கே கொண்டு வந்து விட்டது போலிருந்தது.

(இந்த சிறு தொடரின் இறுதிப்பகுதி விரைவில்...)

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //மெல்ல மெல்ல ஏணிகளில் ஏறுகிறோம் என நினைத்திருந்த சமயத்தில் மொத்தமாய் பாம்பு கடித்து மீண்டும் ஆரம்ப இடத்திற்கே கொண்டு வந்து விட்டது போலிருந்தது. //

    nanbarey padikkum pothey manam kanakkirathu...

    vali niraintha natkal.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பதிவை படித்த பின்புதான் தெரிகிறது,சங்கம் என்றால் இப்படி எல்லாம் பாடுபட வேண்டுமா என்று!!!
    அதே போல் சங்கத்தில் ஒற்றுமை இருந்து நியாயமான கோரிக்கையாக இருந்தால், அதிகார வர்க்கம் ஒன்றும் செய்ய முடியாது!!! அவசியம் ஒற்றுமை தேவை!!!

    இனி வரும் காலத்தில் ஒற்றுமையாக பாடுபடுங்கள்!!!

    வாழ்த்துக்கள்!!!

    அருமையான பதிவு!!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!