தமிழ்ச் சினிமாவும் இயக்குனர் மகேந்திரனும்!
சினிமா என்பது தொழில். சினிமா என்பது கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கக் கூடியது. சினிமா என்பது பொழுது போக்குச் சாதனம். மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுத்தால்தான் ஓடும். இப்படியான் அபிப்பிராயங்களை வளையமாக அமைத்துக் கொண்டு சினிமா எடுக்கப்படுகிறது. நமது மக்களும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் கனவுப்பிரதேசமாக சினிமா ஆக்கிரமித்துக் கொள்கிறது, ஒரு மாயக்கம்பளமாகி சினிமா விரிந்து மக்களை வாழ்விலிருந்து நாடு கடத்துகிறது. சினிமாவின் நாயகர்களும், நாயகிகளும் தேவர்களாகவும், தேவதைகளாகவும் பூஜிக்கப்படுகிறார்கள். இந்த மயக்கங்களுக்குள் சினிமா என்னும் கலைச்சாதனம் பலநேரங்களில் தன் அற்புதங்களை இழந்து, யதார்த்தங்களை பறிகொடுத்து, விடுகின்றன. இப்படியான சினிமாவை நிஜ வாழ்வுக்குள் மீட்டுக்கொண்டு வருகிற முயற்சிகளும் அவ்வபோது உலகம் முழுவதும் வெளிப்படவேச் செய்கின்றன.
ஒருவகையான மேற்கத்திய கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருந்த, வெறும் சாகசங்கள் நிறைந்த நாயகத்தன்மைக்கு உதாரணமான எம்.ஜி.ஆரின் பிடியிலிருந்த தமிழ்ச்சினிமா, அவைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட காலமாக எண்பதுகள் இருந்தன. புழுக்கத்தில் கிடந்த காமிராக்கள் புதிய காற்றை சுவாசித்தன. புதிய வெளியை தரிசனம் செய்தன. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று கரம் கூப்பாமல் மண்வாசனையோடு பாரதிராஜா காலடி எடுத்து வைத்தார். ருத்திரைய்யா எட்டிப் பார்த்தார். துரை, பாரதி வாசு போன்றவர்களிடம் தாகம் இருந்தது. இவர்களோடு பயணப்பட்டு தமிழ்ச்சினிமாவை நிமிர வைத்தவர்களில் இயக்குனர் மகேந்திரனும் ஒருவர்.
ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’படத்தில் ”ந்ம்மைப் போல சாதாரண ஜனங்களுக்கு பெரிய சொத்தே இந்த ரோஷம்தான்” என்று ஒரு வசனம். வரும். அதையே ஒரு முழுத் திரைப்படமாக்கி இருப்பார் மகேந்திரன். தனது மேலதிகாரி எஞ்சினியர் கூப்பிடுகிறான் என்றவுடன், சோப்பு நுரை அப்பிய ஷேவ் செய்துகொண்டிருந்த முகத்தோடு அப்படியே வருவான் காளி. “என்ன இது..” என்று அதிர்ச்சியோடும் எரிச்சலோடும் எஞ்சினியர் கேட்பான். “உடனே வரணும்னு சொன்னீங்களாம்” என்று காளி வெறுப்போடு சொல்வான். முள்ளும் மலரும் படத்தின் இந்தக் காட்சியை தமிழ்ச்சினிமா மறக்காது. ஒரு கை போன பிறகும், நாயகன் எழுந்து நிற்பதும், நடப்பதும், கோபப்படுவதும், விட்டுக்கொடுப்பதும் அந்த ரோஷத்தால்தான். சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் படைக்க வேண்டும் என இயக்குனர் மகேந்திரனுக்குத் தெரிந்திருந்தது.
அதற்கு முன்பு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கெல்லாம் வசனகர்த்தாவாக இருந்தவருக்குள், சினிமாவின் மொழி என்பது முற்றிலும் வேறாக இருந்திருப்பது விசித்திரம்தான். சத்யஜித் ரேவை தன் வாசலுக்கு மேலே வைத்து பார்த்துக்கொண்டு இருந்த அந்த மனிதர், முள்ளும் மலரும் படத்திற்கு முன்பு எத்தனை வலியோடு தன் நாட்களை சினிமா உலகில் கடந்திருப்பார், எதையெல்லாம் சகித்துக் கொண்டிருப்பார் என்பது புரிகிறது.. அந்த மனிதருக்குள்தான் ‘உதிரிப் பூக்கள்’படமும் இருந்திருக்கிறது என்பதை பார்த்த பிறகு, மகேந்திரனின் கனவுகளை புரிய முடிந்தது. மனித மனதின் ஆழங்களை அந்தப் படம் மிக எளிமையாக சித்தரிக்கும். ஏக்கங்களையும், வக்கிரங்களையும் மிக இயல்பாக காட்டும். அவைகளையொட்டித்தான் தமிழ்ச்சினிமாவுக்கு ‘அழகிய கண்ணே’ என ரீங்காரமிட்டபடி, தன் உயரத்தை அளந்து பார்க்கும் தெம்பு வந்தது.
பிறகு வந்த அவருடைய படங்களில் முக்கியமானவை என்றால் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘பூட்டாத பூட்டுக்கள்’, ‘மெட்டி’, ‘நண்டு’, இவைகளைச் சொல்லலாம். தனது முதலிரண்டு படங்களின் உயரத்தை அவரால் தொட முடியாமலே போய்விட்டது உண்மை. எட்டி எட்டிப் பார்த்து, ‘கை கொடுக்கும் கை’, ‘ஊர்ப்பஞ்சாயத்து’ என சமரசங்களும் செய்துபார்த்து, ஒரு கட்டத்தில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார் மகேந்திரன். ரொம்பநாள் கழித்து என்.எப்.டி.சி மூலம் வந்த ‘சாசனம்’ வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இயக்குனராக மகேந்திரனின் வருகையும், அவர் தந்த படங்களும், அவருடைய தோல்விகளும் சில முக்கியச் செய்திகளை தமிழ்ச்சினிமா குறித்து சொல்வதாகவே தெரிகின்றன.
அவருடைய முக்கியமான படங்களைப் பற்றி எவ்வளவோ பேச இருக்கின்றன. அவ்வளவு மெனக்கெட்டு, கரைந்து, ஈடுபாட்டுடன் காட்சிகளை கவிதைகளாக தந்திருப்பார். ‘ஜானி’ திரைப்படம் மகேந்திரனைத் தவிர வேறு யார் எடுத்திருந்தாலும், அதன் சித்தரிப்பு யோசிக்க முடியாத் அளவுக்கு மாறிப் போயிருக்கும். உணவு பரிமாறும் போது கணவனின் இலையில் வைக்கும் சோற்றுப் பருக்கைகளும், விருந்துக்கு வந்தவனின் இலையில் அவளது தலையிலிருந்து சிந்தும் மல்லிகைப் பூக்களும் ‘பூட்டாத பூட்டுக்கள்’ படத்தின் கனத்தைச் சொல்லும். பெண்மனதின் புதிர்களை சொல்லாமல் சொல்லும் அழ்கு ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் இருக்கும். ’மை சன், மை சன்’ என வரும் தந்தையை தெருவில் போட்டு அடிக்கும் ஒரு ம்கனை முதல்முறையாக தமிழ்ச்சினிமாவில் காட்டியது ‘மெட்டி’யில்தான்.
அவர் படத்தில் வரும் மரணக் காட்சிகள் எல்லாமே சினிமாவின் அர்த்தத்தையும் இலக்கணத்தையும் சொல்வதாக இருக்கும். மெட்டி படத்தில் ஒரு காட்சி வரும். அம்மா இறந்து போவாள். மயானத்திற்கு தூக்கிச் சென்ற பிறகு, தரையில் கிடத்தியிருந்த இடத்தில் சுற்றிலும் பூக்கள் இறைந்து கிடக்க், வெற்றிடத்தில் அம்மாவின் உருவம் தெரியும். ராதிகா அப்படியே அதில் விழுந்து அழுவார். உதிரிப் பூக்கள் படத்தில் அஸ்வினியின் மரணமும், விஜயனின் மரணமும் துயரங்களை அதன் முழுச் சுமையோடு பார்வையாளருக்குள் செலுத்தக் கூடியதாக இருக்கும்.
காட்சி, காட்சியாக இன்னும் நினைவில் எல்லாம் அசைந்து கொண்டு இருக்கின்றன உயிரோடு!
அப்பேர்ப்பட்ட கலைஞர் எப்படி தமிழ்ச்சினிமாவில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாமல் போனார்? அவருடைய படங்களிலேயே, கொஞ்சம் கொஞ்சமாக ’மகேந்திரன்’ எப்படி இல்லாமல் நீர்த்துப் போனார்? சினிமா குறித்து பெரும் கனவுகள் கொண்ட அந்த மனிதரின் பாதையை எது வழிமறித்து நின்றது? இப்போது தனிமையில் இருக்கும் அவருடைய நினைவுகளும், பார்வைகளும் எதைச் சுற்றி இருக்கும்? இப்படியான கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தன. அவரிடம் உட்கார்ந்து பேச வேண்டும் போலத் தோன்றும். இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இயக்குனர் மகேந்திரன் குறித்த ஒரு ஆவணப்படம் எடுக்கத் திட்டமிட்ட்டு இருக்கிறோம். அவரும் சம்மதித்து உள்ளார். விரைவில் எங்கள் ஆவணப்படக்குழு சில நாட்கள் அவரோடு கூடவே இருக்கப் போகிறது!
அதுபற்றி தொடர்ந்து இங்கு பேசுவோம்!!
‘தலை’ விதி
அருகில் செல்லவே முடியாத துர்நாற்றம் வீசும் கார்ப்பரேஷன் லாரியின் குப்பைக்குள்ளிலிருந்து தவறி கீழே விழுந்தது. காகிதம் என்று அருகில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டு, ஃப்ளக்ஸின் காரநெடியில் முகம் சுளித்து, சின்னதாய் தும்மி அங்கிருந்து நகர்ந்தது கழுதை. மோப்பம் பிடித்து வந்த நாய் அதைக் கவ்விக் கொண்டு காய்ந்த மலங்களின் மீது இழுத்தபடி ஓடி, கொஞ்சதூரத்தில் போட்டு விட்டுச் சென்றது. பஸ் ஒன்றை ஓவர்டேக் செய்த லாரியின் சக்கரத்தில் சிக்குண்டு, சிதைந்து, புழுதியோடு சுருண்டு முட்செடிக்குள் மாட்டித் தொங்கியது.
கடந்த இருபது நாட்களாக நகரம் முழுவதும் போகிற வருகிற மனிதர்களையெல்லாம் வானுயர நின்று பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த தலைவரின் ஆயிரக்கணக்கான தலைகளில் ஒன்று அது.
(வலைப்பக்கம் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதியதை ’தலை’ப்பு மாற்றி இட்ட மீள்பதிவு.)
அந்த 44 நாட்கள் - இறுதிப் பகுதி
'அவர்கள் கம்யூனிஸ்டுகள். அவர்கள் தீவீரவாதிகள். எப்போதும் போராட்டத்திற்குத்தான் ஊழியர்களை தள்ளுவார்கள், அவர்கள் இருக்குற இடம் விளங்காது' என்றெல்லாம் பரமசிவம் அவர் பாட்டுக்கு போகிற வருகிற இடங்களிலெல்லாம் கடுமையாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். பெருமாள் கோவிலில் தோழர்கள் அவரைத் தாக்கச் சென்றது, எங்களது ஏற்பாடுதான் என்றும், எங்களை ஒழித்துக்கட்டினால்தான் வங்கியும், சங்கமும் உருப்படும் என முரட்டுத்தனமாக பேசினார். நிர்வாகம் இந்தக் காட்சிகளை ரசித்தது. மேலும் இடைவெளிகளை அதிகமாக்க திட்டமிட்டது. பரமசிவத்திற்கு எப்போதும் நிர்வாகத்தின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. அவர் சொல்லும் மாறுதல்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த முக்கிய சமயத்தில்தான் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கழுத்து எலும்பு தேய்ந்து அவதிப்பட்டு, கிருஷ்ணகுமார் சாத்தூருக்கு வரவில்லை. காரைக்குடியிலிருந்து சோலைமாணிக்கம் போனில் சாத்தூர் வரச் சொல்லும் சமயங்களில் நானும் செல்வேன். சங்க அலுவலத்திற்கு தோழர்களிடமிருந்து முன்பைப் போல கடிதங்கள் நிறைய வருவதில்லை. சோர்வும், வெறுமையும் எங்களை ஆக்கிரமிக்கத் துவங்கின.
சங்கக் கணக்கை முடக்கி வைக்க பரமசிவமும், கணேசனும் கடிதம் கொடுத்து விட்டார்கள் என அறிந்தபிறகு, விபரீதம் அறிந்து கிருஷ்ணகுமார் சாத்தூர் வந்தார். சங்க விரோத நடவடிக்கை என குற்றம் சாட்டப்பட்டு இருவருக்கும் விளக்கம் கேட்கப்பட்டது. செயற்குழுவிற்கு இருவரும் வரவில்லை. தீர்மானம் முன்மொழியப்பட்டு இருவரும் பொறுப்புகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ‘பரமசிவத்தோடும், கணேசனோடும் நிர்வாகம் பேசக்கூடாது. நாங்கள்தான் சங்கம்’ என கடிதம் கொடுத்தோம்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒற்றுமையும், புத்தெழுச்சியுமாய் வளர்ந்த அமைப்புக்கு பழுது ஏற்பட்டு விட்டது. இணக்கங்களை ஏற்படுத்த முடியாமல், அல்லது சரியான புரிதலுக்கு தக்க சமயத்தில் வரமுடியாமல் போனதன் விளைவு ஒரு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு சிறிய அமைப்புக்குள், அது தாங்க முடியாத அளவுக்கு தவறான புரிதல்களும், உள்நோக்கங்களும் பரவி விடுகிற போது இதுதான் நேரும் போலும். தொழிற்சங்கம் குறித்த புரிதலற்றவர்கள் தலைவர்களாவதும், அவர்களை அர்ப்பணிப்பும் பொதுநலனும் கொண்டவர்களாக வளர்த்தெடுக்க முடியாமல் போனதுமே இப்படியான பின்னடைவுகளுக்கு காரணமாகி விடுகிறது. ஊழியர்கள், ஊழியர்களது நலன் மட்டுமே முன்னுக்கு வராத அரசியல், நாற்காலிகளாக தலைவர்களின் மூளைக்குள் ஊடுருவி விடுவதன் விளைவும் இது. அனைவரின் கருத்தைக் காட்டிலும், தன் கருத்து உயர்வானது என்னும் சமூக விஞ்ஞானத்திற்குப் புறம்பான கருத்துக்களில் ஊறிய தலைவர்களை பக்குவப்படுத்தத் தவறிய சங்கம் இந்த பின்னடைவுகளை சந்திக்க நேருகிறது. இதையெல்லாம் அப்போது கனரா வங்கி ஊழியர்களின் தலைவர்களில் ஒருவராயிருந்த தோழர்.சுந்தரம் ஒருநாள் பேசிக்கொண்டு இருக்கும்போது புரிய வைத்தார். இதுவும் ஒரு பாடம், இதைக் கடந்துதான் முன்னேறியாக வேண்டும் என அவர் வழிகாட்டவும் செய்தார்.
44 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட கடைநிலை ஊழியர்களுக்கு பதவி உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போனது. தலைமைக்குள் உருவாகிய பிரிவால் நிர்வாகம் உற்சாகம் பெற்று அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. மீண்டும் தோழர்கள் போராட்டத்துக்கு வருவார்களா என்ற தயக்கம் சங்கத்தலைமைக்கே இருந்தது. கீழே ஊழியர்களிடமோ பெரும் மௌனம். அவர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.செயற்குழுத் தோழர்கள் மட்டும் பங்கேற்கும் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு,. தினந்தோறும் இரண்டு தோழர்களாக ஒரு வாரம் தலைமையலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடத்தினோம். சின்னச் சின்ன அசைவுகளை ஏற்படுத்தி மீண்டும் இயக்கத்தை நகர்த்த ஆரம்பித்தோம்.
க்ணேசன், பரமசிவம் முயற்சியில் இங்கிருந்து பல தோழர்களை சேர்த்துக் கொண்டு, ஐ.என்.டி.யூ.சிக்காரர்களோடு இணைந்து புதிய சங்கம் ஆரம்பித்து விட்டார்கள் என செய்திகள் அடிபட்டன. அதன் தலைவர் கணேசன் என்றும், பொதுச்செயலாளர் சிதம்பரம் என்றும் சொன்னார்கள். நிர்வாகம் அவர்களை அங்கீகரித்து அவர்களோடு
பேச்ச்சுவார்த்தையெல்லாம் நடத்தியது.
தோழர்களை ஒருமுகப்படுத்தி நிலைமைகளை புரியவைக்கவும், தோழர்களோடு சங்கத்தின் உறவை உறுதி செய்துகொள்ளவும் பொதுக்குழுவைக் கூட்டலாம் என நினைத்தோம். அதை முடிவு செய்ய ஒரு செயற்குழு அறிவிக்கப்பட்டது.. சங்க அலுவலகத்திற்கு எங்களுக்கு முன்பே நிறைய தோழர்கள் வந்திருந்தார்கள். "வாங்க...வாங்க..." என்று கிருஷ்ணகுமார் கம்பீரமாக வரவேற்றார். டீக்கடைத் தம்பியிடம் 'இன்னும் இரண்டு டீ கொண்டு வாப்பா" என்று வரதராஜப் பெருமாள் சொன்னான். 'அப்புறம் செய்தி தெரியுமா' என்று உற்சாகமாக கிருஷ்ணகுமார் "அதியமான், வள்லாலார்னு இரண்டு கிராம வங்கிகள் புதிதாய் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கு. நமது எல்லைகள் விரிவடைகின்றன" என்று சொன்ன போது, காமராஜ் 'ஆஹா' என்றான். நானும் சோமுவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தோம். ரொம்ப நாளக்குப் பிறகு சங்க அலுவலகம் பழைய கலகலப்பை கண்டிருந்தது.
பொதுக்குழுவிற்கு தோழர்கள் வருவார்களா என்பதுதான் எல்லோருடைய கவலையாக இருந்தது. நிதிநிலையும் மோசமாக இருந்தது. சங்க அலுவலகத்திற்கு வாடகை பாக்கியே மூன்று மாதங்கள் இருந்தது. செயற்குழு உறுப்பினர்கள் அருகிலுள்ள கிளைகளுக்குச் சென்று தோழர்களைச் சந்தித்துப் பேசுவது என முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரம் ஒரே அலைச்சலாக இருந்தது. சோலை மாணிக்கம் காரைக்குடிப் பகுதியில் ஸ்கூட்டரில் அலைந்து கொண்டிருக்க நானும் வரதராஜப் பெருமாளும் சின்னச் சின்ன ஊர்களில் பஸ்ஸுக்காக காத்திருந்தோம். சோமு, சங்கரலிங்கம், காமராஜ், கிருஷ்ணகுமார், என எல்லோரும் ஆளுக்கொரு திசையில் ஓடிக்கொண்டு இருந்தார்கள்.
கிளைகளின் உள்ளே அடியெடுத்து வைத்ததும், முகம் பார்த்து மலர்கிற தோழர்கள் இருக்கிறார்களா எனத் தேடினோம். 'வாங்க...வாங்க...' என அவர்கள் உற்சாகமாக குரல் கொடுத்ததும், தொலைந்தது கிடைத்து விட்டது போல சந்தோஷம் வந்தது. சிலர், எங்களைக் கவனிக்காமல் வாடிக்கையாளர்களோடு மிகத் தீவீரமாகப் பேச ஆரம்பித்தார்கள். காத்திருந்து அவர்களிடம் பேசி, பொதுக்குழுவிற்கு வாருங்கள் என அழைத்தோம். சிலர், 'உங்களுக்குள்ளேயே நீங்கள் சண்டை போட்டுக் கொண்டால் நாங்கள் யாரை நம்பி நிற்பது' என கேள்வி கேட்டார்கள். "இனும ஸ்டிரைக்கிற்கே போக மாட்டோம் எனச் சொல்லுங்கள். வர்றோம்' என்றார்கள். அந்தக் கிளையில் இருக்கும் இன்னொரு தோழர் "ஆமா நாம என்ன சன்மார்க்க சங்கமா நடத்திக் கொண்டு இருக்கிறோம்.. போப்பா.... சங்கம்னா போராடத்தான் வேண்டி இருக்கும். ஒனக்கு இன்னிக்கு ஊதிய உயர்வு களையப்பட்டு சம்பளம் கூடியிருக்கே...அதை வேண்டாம்னு சொல்லிருவியா..' என எதிர்க்கேள்வி கேட்டார். அங்கங்கு உரையாடல்களை ஏற்படுத்தி விட்டு நாங்கள் பயணம் செய்து கொண்டு இருந்தோம்.
பொதுக்குழுவிற்கு தோழர்கள் செல்ல வேண்டாம் என பரமசிவமும், கணேசனும், ஐ.என்.டி.யூ.சிக்காரர்களும் கடுமையான பிரச்சாரம் செய்தார்கள். ”அவர்களோடு சேர்ந்தால் பணி மாறுதல் கிடைக்காது, பதவி உயர்வும் கிடைக்காது” என நிர்வாகமும் உயரதிகாரிகளை வைத்து ஊழியர்களை மிரட்டியது. பொதுக்குழுவிற்கு சில தினங்களுக்கு முன்னர் சங்க அலுவலகத்தில் மலம் கரைத்து திறந்திருந்த ஜன்னல்கள் வழியே ஊற்றப்பட்டு இருந்தது. சி.ஐ.டி.யூத் தோழர்கள் அரணாய் எங்களோடு வந்து நின்றனர்.
பொதுக்குழு அன்று காலை ஒன்பது மணி வரை பத்து இருபது தோழர்களே வந்திருந்தனர். உள்ளுக்குள் விரக்தி தலை தூக்கியது. இதற்கு முன்பெல்லாம், பொதுக்குழுவிற்கு முந்தின நாள் இரவே ஐம்பது பேருக்கு மேல் வந்து சாத்தூரில் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். காலை ஒன்பதரை மணிக்கு மேல் காரைக்குடியிலிருந்து மொத்தமாய் இருபது தோழர்கள் போல வந்தனர். மதுரை, நெல்லை, தூத்துக்குடியிலிருந்து என அடுத்தடுத்து தோழர்கள் வர ஆரம்பித்தார்கள். பதினோரு மணிக்கு இருநூற்றுக்கும் மேல் தோழர்கள் வந்து மண்டபத்தை நிறைத்து விட்டார்கள். மேலும் வந்துகொண்டும் இருந்தார்கள்.
ஒருவரோடொருவர் கை கொடுக்கவும், நலம் விசாரிக்கவும் என நேரம் மலர ஆரம்பித்தது. ஒரே பேச்சுச் சத்தம். எல்லோரும் புதிதாய் பிறந்தவர்கள் போலத் தெரிந்தார்கள். மண்டபத்தின் வெளியே கூடினோம். சாத்தூர் வெயிலும் நட்பாகத்தான் தெரிந்தது. "தொழிலாளர் ஒற்றுமை ஒங்குக... தொழிற்சங்க ஒற்றுமை ஒங்குக.." என ஈரக்குலையிலிருந்து சோலைமாணிக்கத்தின் கோஷம் கிளம்பியது. தொடர்ந்து தோழர்களின் குரலும் வெடிக்க, தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் நின்று திரும்பிப் பார்க்க ஆரம்பித்தார்கள். மேலும் மேலும் என குரல்களில் வேகம் பிடிக்க, அந்த செந்நிறக் கொடி மெல்ல மெல்ல பூக்களை சிந்தியபடி உயரே செல்ல ஆரம்பித்தது.
"நூறாயிரம் தடவை தடுமாறி இருக்கிறது.
தலை குப்புற விழுந்திருக்கிறது.
சிராய்த்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் எழுந்திருக்கிறது தொழிலாளர் இயக்கம்"
என்னும் அந்த ஆப்பிரிக்க கவிதை வரிகளை கொடி அசைந்து அசைந்து சொல்லிக் கொண்டிருந்தது.
*
அந்த 44 நாட்கள் - நான்காம் பகுதி
இன்னும் சில கணங்கள் அப்படியே கடந்திருந்தால், விபரீதங்கள் நடந்திருக்கும். அதற்குள் மாயகிருஷ்ணன் வாசல் பக்கத்தில் நின்று கொண்டு "தலைவரே, தலைவரே' என்று பரமசிவத்தைப் பார்த்து கையிலிருந்த மொபட் சாவியைக் கண்பித்துக் கொண்டிருந்தார். சிலர் பரமசிவம் அருகில் பாதுகாப்பாக நின்று வெளியே அழைத்துச் சென்றனர். தாறுமாறாக வசவுகள் அவரைத் துரத்திக் கொண்டிருந்தன. மாயகிருஷ்ணன் தனது மொபட்டில் அவரை ஏற்றிக் கொண்டதை பார்த்தேன். கூடவே கணேசன், முருகப்பன், இன்னும் சிலர் சிறு கூட்டமாகச் சென்றனர்.
இப்போது மொத்தக் கூட்டமும் கிருஷ்ணகுமார் பேச்சை அமைதியாக கவனிக்க ஆரம்பித்தது. "எதுவும் முடிந்து போகவில்லை. இந்த இரவு இப்படியே கழிந்துவிடப் போவதில்லை. நாம் அனைவரும் இங்கே ஒற்றுமையாகத் தானே இருக்கிறோம். எதை, எப்படி நாம் இழந்துவிட முடியும்? நாம் நிறைய பேசலாம். ஆனால் இந்த மண்டபத்தைச் சுற்றிலும் தெருக்கள், மனிதர்கள் இருக்கிறார்கள். வாருங்கள். நாம் வைப்பாற்றங்கரைக்குச் செல்வோம். அங்கு உட்கார்ந்து பேசிக் கொள்வோம்." எல்லோரும் அங்கிருந்து வைப்பாற்றை நோக்கி அந்த ஒன்பது மணி இரவில் நடக்க ஆரம்பித்தோம். வழிநெடுக, ஆற்றாமையும், அடங்காத கோபமும், எதையோ பறிகொடுத்த சோகமுமாய் தோழர்கள் வந்தார்கள். முனிசிபல் தெருவைக் கடந்து, கிணற்றுக் கடவுத் தெரு வழியாக ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பிள்ளையார் கோவில் படித்துறை வழியாக இறங்கி ஆற்றங்கரை மணலில் உட்கார்ந்து கொண்டார்கள். ஒருவர் முகம் ஒருவர் தெளிவாக புலனாகாத மங்கிய இருட்டு.
கிருஷ்ணகுமார் ஒப்பந்தத்தில் இருக்கிற சாதகமான விஷயங்களைத் தொகுத்தார். "இரண்டரை ஆண்டுகளாக போராடி வந்த ஊதிய முரண்பாடு கோரிக்கை வெற்றி பெற்றிருக்கிறது. முடிந்து போன விஷயமாகக் கருதப்பட்ட கடைநிலைத் தோழர்களுக்கு பிரமோஷன் என்னும் நமது கோரிக்கை உயிர் பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தால் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அனேகச் சின்னச் சின்ன கோரிக்கைகள் நிறைவேறி இருக்கின்றன. இப்போது நம்முன் நிற்கும் மிக முக்கியமான பிரச்சினை வேலை நிறுத்தத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட பதினெட்டு ஆபிஸர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டும். நிர்வாகம் அவர்களை மட்டும் ஏன் உள்ளே வரச் சொல்லாமல் வெளியே நிறுத்துகிறது? நமக்குள் பயத்தை விதைக்கத்தான். இன்னொருமுறை இங்கு இப்படி ஒரு வேலைநிறுத்தம் நடக்கக் கூடாது என்பதை நம் மூளைக்குள் உறைய வைப்பதற்காகத்தான். வரலாற்றில் இப்படிப்பட்ட சோதனைகளை, அனுபவங்களை, பலத்த அடிகளைத் தாங்கிக் கொண்டுதான் தொழிலாளி வர்க்கம் மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டு வருகிறது.”
“இந்த பதினெட்டுத் தோழர்கள் நமக்காக போராடியவர்கள். அவர்களுக்கும், இந்தக் கோரிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை. அவர்களுக்காக நாம் அனைவரும் போராட மாட்டோமா? அவர்களுக்காக எந்தத் தியாகமும் நாம் செய்ய மாட்டோமா? ஒரு வாரத்தில் ஐ.ஓ.பியில் கலந்து நல்ல முடிவை இந்த நிர்வாகம் எடுக்காத பட்சத்தில் நீங்களும், நானும் அவர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இதே சாத்தூரில் இருக்க மாட்டோமா? எது சாத்தியம். எது சாத்தியமில்லை. இன்னொரு போராட்டம் நடத்த முடியாதவர்களே உடைந்து போவார்கள். நொறுங்கிப் போவார்கள். தொடர்ந்து போராடுகிறவர்கள் கலங்க மாட்டார்கள். இந்த இரவு மட்டுமல்ல, எல்லா இரவுகளும் விடிந்தே தீரும்." உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டே போனார். கூட்டம் அவரது வார்த்தைகளுக்குப் பின்னால் வழி கண்டு பயணம் செய்து கொண்டிருந்தது. "இங்கு முடிவு செய்வோம். இப்போதே முடிவு செய்வோம். சொல்லுங்கள். அந்த ஆபிஸர்களை உள்ளே எடுக்கா விட்டால் இந்த தேதியில் இருந்து நாம் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என்று முடிவு செய்வோம். இதோ நாங்கள் செயற்குழு உறுப்பினர்கள் முதலில் பந்தலில் உட்காருகிறோம்." என அறிவித்தார். கூட்டம் கரகோஷங்களால் அதை ஆமோதித்தது.
"இதோ இருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட நமது அலுவலர்கள். இன்று அவர்களை நாமே அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்தக் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வோம். அந்தக் குடும்பங்களில் நாமும் இணைந்து கொள்வோம். அதுதான் நமது முடிவுறாத கடமையை நமக்கு உணர்த்தும். அந்தக் குடும்பங்களை நமது தோளில் தாங்குவோம்." பேசிக்கொண்டே இருந்தார். இப்போது உருவங்கள் தெளிவாகி ஒருவர் முகம் ஒருவருக்கு புலனாகிக் கொண்டிருந்தது. "நாளை மறுநாள், அக்டோபர் 14ம் தேதி, 44 நாட்கள் வேலைநிறுத்தம் செய்து பணிக்குத் திரும்பப் போகிறீர்கள். விரைவில் நாம் மீண்டும் கூட இருக்கிறோம் என்னும் சிந்தனையோடு கிளைகளுக்குள் காலடி எடுத்து வையுங்கள்." முடித்துக் கொண்டார். சிலர் எழுந்து கேள்வி கேட்டார்கள். மீண்டும் சின்னச் சின்னதாய் உற்சாகம் தளிர்த்துக் கொண்டிருந்தது.
எல்லோரும் ஊருக்குள் வந்தோம். முக்கணாந்தல் ரோட்டில் வரும்போது எதிரே பரமசிவம் ஐந்தாறு தோழர்களோடு வேகமாக வந்தார். "சேர்மனை பார்த்து பேசிவிட்டோம். நம்மோடு அந்த ஆபிஸர்களும் அக்டோபர் 14ம் தேதி பணியில் சேர ஒப்புக்கொண்டுவிட்டார்." என அறிவித்தார். எல்லாம் மாயாஜாலமாக இருந்தது. பரமசிவத்தோடு இருந்தவர்களில் ஒருவர் எல்லாவற்றையும் சொன்னார். கூட்டத்தில் அவமானம் இழைக்கப்பட்டதும் பரமசிவமும் அவரது ஆதரவாளர்களும் சேர்மன் தியாகராஜனை அப்போதே வீட்டில் போய் சந்தித்து இருக்கிறார்கள். ஆபிஸர்களை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் தான் வெளியில் நடமாடமுடியாது என்று பரமசிவம் பரிதாபமாக புலம்பி இருக்கிறார். அதற்கு நான் என்ன செய்யட்டும், ஐ.ஓ.பியில் கேட்காமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சேர்மன் சாதாரணமாகச் சொல்ல, பரமசிவம் மேலும் பரிதாபமாக கெஞ்ச ஆரம்பித்திருக்கிறார். கண்ணெல்லாம் பொங்கி நிற்கும் அவரைப் பார்த்து. "இரும்யா... "என்று இரண்டு மூன்று பேருக்கு போன் செய்திருக்கிறார். "சரிய்யா... அவங்களையும் எல்லோரையும் போல வேலையில் ஜாய்ன் பண்ணச் சொல்லிருவோம். அவங்கக்கிட்ட, பணியில் எடுத்துக் கொள்ள வேண்டி தனித்தனியா கடிதம் எழுதி வாங்கிக் கொடுத்துருங்க." என்று சொல்லியிருக்கிறார். இத்தனை காலமும் அந்த ஐ.ஓ.பி பூதம அவரது போனிலேயேத்தான் இருந்திருக்கிறது!
எல்லோருக்குள்ளும் ஒரு நிம்மதியான மனோநிலை பரவியது. அதேநேரம் தோழர்கள் வெளிப்படையாக அப்போதே சாத்தூர் வீதிகளில் பேச ஆரம்பித்தார்கள். "இதுவரைக்கும் முடியாது என்று சொன்ன சேர்மன், ஒரு மணி நேரத்தில் எப்படி முடிவை மாற்றிக் கொண்டார்?". "மண்டபத்துல அந்த விரட்டு விரட்டலன்னா இவரும் சேர்மனை பாக்க ஒடியிருக்க மாட்டார். அவரும் சம்மதிச்சிருக்க மாட்டார்". "ஆபிஸர்களை சேர்க்கலன்னா தோழர்கள் அனைவரும் கிருஷ்ணகுமார் பக்கம் போயிருவாங்க, அதை உடைப்பதற்கு நிர்வாகம் இப்படித்தான் செய்யும்"
வாழ்வின் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. கிருஷ்ணகுமார் போஸ்பாண்டியனோடு டீக்குடித்துக் கொண்டே சொன்னார். "இந்த நிர்வாகத்துக்கு சுண்டு விரலால் செய்யக் கூடிய ஒரு காரியத்துக்கு எத்தனை தோழர்களை எத்தனை நாட்களாக அலைக்கழிக்கிறது. அதிகாரத்தின் திமிரும், வேரும் இதுதான்". அங்கேயே நின்று பேசிக்கொண்டு இருந்தோம். அங்கங்கே குழுகுழுவாக தோழர்கள் நின்றிருந்தனர். நாற்பத்து நான்கு நாட்களின் அனுபவம் எல்லோருக்குள்ளும் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், மறியல், ஊர்வலம், கைது, பிரச்சாரங்கள், என கடந்த நாட்கள் ஒவ்வோருவரிடமும் கருப்பு வெள்ளையாக கரைபுரண்டு கொண்டு இருந்தது. முஷ்டி உயர்த்திய கோஷங்கள் கேட்டுக் கொண்டு இருந்தன.
இரவு ஒரு மணிக்கு மேல் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து விடிகாலையில் திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறி பூச்சிக்காட்டு மண்ணில் இறங்கிய போது காலை எட்டு மணியாகியிருந்தது. பழகிய இடங்கள் இன்னொரு உலகத்திற்குள் என்னை அழைத்தன. இந்த 44 நாட்களில் இரண்டு தடவைதான் ஊருக்கு வந்து அம்மாவைப் பார்த்திருந்தேன். ஷேவ் செய்யாமல், மெலிந்து போயிருந்த என்னைப் பார்த்து அம்மா அழுதார்கள். உள்ளே போய் கட்டிலில் படுத்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அம்மா இரண்டு கடிதங்களைக் கொண்டு வந்து தந்தார்கள். அம்மு எழுதியிருந்தாள். அதுவரை எங்கோயிருந்த எனக்குப் பரிச்சயமானவர்கள் எல்லாம் மெல்ல நெருங்கி வந்து என்னைப் பார்ப்பது போலிருந்தது.
பத்து மணிக்கு கேஷ் கீ எடுத்துக் கொண்டு வங்கியின் கிளைக்குச் சென்றேன். வேலைநிறுத்தத்தில் பங்கு பெறாத மேலாளர் நடராஜன் "வாங்க" என்று சிரித்தார். அவர் எதோ சொல்ல வருவதாகத் தெரிந்தது. கேஷ் ரூமைத் திறந்த போது உள்ளேயிருந்து வெக்கையும், புழுக்கமும் முகத்தில் அடித்தன. 44 நாட்கள் நுழையாமல் இருந்த காற்றோடு நானும் அந்த அறைக்குள் நுழைந்தேன்.
சிறிது நேரத்தில், செம்மறிக்குளத்திலிருந்து சோமு போனில் கூப்பிடுகிறார் என போஸ்ட் ஆபிஸிலிருந்து வந்து சொன்னார்கள். சென்றேன். பரப்பாடியில். 44 நாட்கள் பூட்டியிருந்த வங்கிக்கிளையின் வாசலுக்கு ஊர்மக்கள் சேர்ந்து இன்னொரு பூட்டு போட்டு இருப்பதாகவும், வேலைக்கு சென்ற நம் தோழர்கள் மீது தாக்குதல் நடத்த வருவதாகவும் பதற்றத்தோடு சொன்னார். அவரிடமும் கேஷ் கீ இருந்தது.யாரும் போக முடியாது.. கிருஷ்ணகுமாருக்கு போன் செய்து காத்திருந்தேன். அவருக்கும் விஷயம் தெரிந்திருக்கிறது. அந்தக் கிளையின் தோழர்களை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் செய்யச் சொல்லியிருப்பதாகச் சொன்னார். கூடவே, பரமசிவம், கணேசனும் நம் சங்கத்துக்கு எதிராக பேசுவதாகவும் குறிப்பிட்டார்.
எப்படிப்பட்ட முரண்பாடு இது எனத் தோன்றியது. போராடிய சமயத்தில் வத்றாப்பிலிருந்தும், கடையநல்லூரிலிருந்தும் மக்கள் ஆதரவாக வந்து நின்றதும் இங்குதான் நடந்திருக்கிறது. வாடிக்கையாளர்களோடு மரியாதையாக, பிரியமாக பழகுவதும் நமது போராட்டத்தின் பகுதி என்று புரிய வைக்க வேண்டி இருக்கிறது.. இரண்டு மூன்று நாட்கள் கழித்து காமராஜ் போன் செய்தான். “சாத்தூருக்கு வந்துட்டுப் போ ஒருநாள்” என்றான். “என்னடா” என்றான். “சும்மாத்தான். வாயேன்” என்றான். குரலே சரியில்லாமல் இருந்தது. திரும்பவும் கேட்டேன். “இல்ல... கிருஷ்ணகுமார் உடம்புக்கு சுகமில்லன்னு காரைக்குடி போய்ட்டார். சங்க அலுவலகத்துக்கு யாரும் வர்றதில்ல.. வெறிச்சுன்னு இருக்கு” என்றான்.
கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கிய போது இருட்ட ஆரம்பித்திருந்தது. சங்க அலுவலகத்திற்குச் சென்றேன். பூட்டியிருந்தது. ஓட்டுக்கூரைக்குக் கீழே முன்பக்கச்சுவரின் மீது கைவைத்துத் துழாவிப் பார்த்தேன். சாவி இருந்தது. திறந்து உள்ளே சென்ற போது மௌனமும், புழுக்கமும் தவிக்க வைத்தது. பின்பக்கக் கதவைத் திறந்து மெயின் ரோட்டையும், இயங்கிக் கொண்டிருந்த சாத்தூரையும் பார்த்தபடி நின்றிருந்தேன். மேற்கே ஆற்றோரம் அந்த புளிய மரத்தின் மீது ஆயிரக் கணக்கில் பறவைகள் கத்தி கொண்டிருந்தன. சரியாக போன வாரம் இது போலத்தான் தோழர்கள் கொதித்துப் போயிருந்தனர். நினைவுகள் சுற்றிச் சுற்றி வந்தன. இப்போது காட்சிகள் மாறி விட்டிருந்தன. கடந்த நாட்கள் எல்லாம் ஆச்சரியமாக இருந்தன. அந்த நேரத்தின் வேகம், சூடு எல்லாம் ஆறிப் போய் இருந்தாலும் கனமாய் உணர முடிந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எதிர் நீச்சல் போட்டாலும் வெள்ளம் அடித்துச் செல்வதாகவே காலம் தெரிகிறது. கொஞ்சம் கரை ஒதுங்கி ஆசுவாசப் படுத்தி மீண்டும் எதிர் நீச்சலுக்குத் தயாராக வேண்டி இருக்கிறது, அப்படித்தான் தோழர்கள் அங்கங்கு சென்று அவரவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் கோரிக்கைகள், கோபங்கள், போராட்டங்கள் என அடர்த்தியாகிற போது முஷ்டி உயர்த்திக் கொண்டு கூடி வந்து நிற்கிறார்கள்.
எந்தப் போராட்டமும் பெரும் வெற்றிகளைக் கொண்டு வந்து குவிக்கவில்லை. இழந்து கொண்டிருக்கிறவர்கள் மேலும் இழந்து போகாமல் தற்காத்துக் கொள்கிற உயிரின் துடிப்பாகவே போராட்டங்கள் முன் வந்து நிற்கின்றன. மரம் சும்மாயிருந்தாலும் காற்று சும்மா இருக்க விடுவதில்லை என்னும் மாவோவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் இப்போது மிகத் தெளிவாக புரிகிறது. அரசும், இந்த அமைப்பும் திட்டமிட்டு, தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். போராடாதவர்கள் அடிமைகளாக, தங்களைச் சுரண்டுகிறவர்களுக்கே சேவகம் செய்யக்கூடிய இழிநிலைக்கு ஆளாகிறார்கள். காட்டுக்குள் சிங்கம் மற்ற மிருகங்களை இஷ்டத்திற்கு கொன்று அலைகிறபோது ஒருநாளைக்கு ஒரு மிருகத்தை மட்டுமே சாப்பிடலாம் என சிங்கத்திடம் வேண்டுகிற பரிதாபமானவர்களாக மனிதர்கள் இருக்க முடியாது. அவர்களை ஒன்று படுத்தி சிங்கத்தையும் எதிர்க்கலாம் என்னும் சிந்தனையை உருவாக்கும் பணியைத்தான் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் செய்து வருகின்றன.
இந்த தொடர் முயற்சியில் கிருஷ்ணகுமார் பேசிக்கொண்டு இருக்கிறார். சோலை மாணிக்கம் ஆவேசமாக கோஷங்கள் போட்டுக் கொண்டு இருக்கிறார். சோமு கேள்விகளை முன் வைக்கிறார். எஸ்.ஏ.பி நள்ளிரவில் வந்து கதவைத் தட்டி ஜீவாவை, பகத்சிங்கை அறிமுகம் செய்து வைக்கிறார். காமராஜ் 'என் தோழனே' என்று கைப்பற்றி நிற்கிறான். மூர்த்தி ரோனியோ சுற்றுகிறான். அன்புக்குரிய பொதுச் செயலாளருக்கு என்று எத்தனையோ தோழர்கள் கடிதங்கள் எழுதிகொண்டு இருக்கிறார்கள். பிரியமும், உரிமையும் கலந்த உறவாக அது பரிணமித்து நீண்டு கொண்டே இருக்கிறது.
கதவைச் சாத்திவிட்டு படியிறங்கி பிலால் கடைக்குச் சென்று டீ குடித்தேன். வாகனங்களும், மனிதர்களும் அங்குமிங்குமாய் போய்க் கொண்டு இருந்தனர். அந்த நேரத்திலும் தண்ணீரை சுமந்து கொண்டு மாடுகள் ஊருக்குள் சென்று கொண்டு இருந்தன. "ஆபிஸுக்கு யாரும் வந்தார்களா' என்று டீக்கடையில் கேட்டேன். "காமராஜ் சார் வந்துட்டுப் போனாங்க. வரதன் சார் இனுமத்தான் வருவாங்க." என்று டீக்கடைப் பையன் சொன்னான். மீண்டு சங்க அலுவலகம் சென்று லைட்டைப் போட்டு உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வரதராஜப் பெருமாள் "எப்படா வந்தே' என்றபடியே நுழைந்தான். எல்லோருக்கும் எப்போதும் உற்சாகத்தை அவனால் தரமுடிகிறது என்று தெரியவில்லை.
சாத்தூர் புறநநகர்ப் பகுதியில் தங்கியிருந்த காமராஜைப் பார்க்கச் சென்றோம். அவனோடு சாப்பிட்டு சங்க அலுவலத்திற்கு வந்து பேசிக் கொண்டு இருந்தோம். அம்முவைப் பற்றி விசாரித்தான். 44 நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். இன்னும் பல இரவுகள் வேண்டும் போல் இருந்தது. தலைமையலுவலகத்திற்குப் போனால் நம் தோழர்களே உற்சாகமற்றும், எதோ அதிர்ச்சியோடும் பார்ப்பது போல் இருக்கிறது என்று அவன் சொன்னது தாங்க முடியாததாய் இருந்தது. பரமசிவமும், கணேசனும் சேர்மனை சந்தித்து அடிக்கடி பேசுகிறார்கள் என்பது சகிக்கமுடியாததாய் இருந்தது. மெல்ல மெல்ல ஏணிகளில் ஏறுகிறோம் என நினைத்திருந்த சமயத்தில் மொத்தமாய் பாம்பு கடித்து மீண்டும் ஆரம்ப இடத்திற்கே கொண்டு வந்து விட்டது போலிருந்தது.
(இந்த சிறு தொடரின் இறுதிப்பகுதி விரைவில்...)
வம்பரங்கம் -2
என் நண்பர் ஒருவர் இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி இருந்தார். ஃபேஸ்புக்கில் இந்த விவாததை ரவிசங்கர் எழுப்பி இருந்தார். நம் கல்வி முறை மட்டுமல்ல, நம் மனசாட்சி குறித்தும் எழுப்பப்பட்ட முக்கிய கேள்வி இது.
“நாம் நம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை. ஆனால் அரசு கல்லூரிகளில் சேர்க்க விரும்புகிறோம்”
இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன?
அந்த 44 நாட்கள் - மூன்றாம் பகுதி
வைப்பாற்றுப் பாலத்தைத் தாண்டி, சாத்தூர் கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி சங்க அலுவலகத்திற்குச் சென்றோம். கண்ணனை முன்னே நடக்க விட்டு ”என்ன சோமு! அமைதியா இருக்கீங்க” என்றேன். ”பரமசிவமும், இன்னும் நமது சங்க தோழர்கள் சிலரும் ஐ.என்.டி.யூ.சி தலைவர்களோடு நெருக்கமாயிருக்காங்க. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மூலமாகத்தான் இந்த பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு” என்று சொன்னார். சங்க அலுவலகத்தில் சில தோழர்கள் மட்டுமே இருந்தனர். ”ஸ்ரீராம் லாட்ஜில் செயற்குழுக்கூட்டம். கிருஷ்ணகுமார் போயிருக்கார்” என்று தகவல் சொன்னார்கள். ஸ்ரீராம் லாட்ஜுக்குச் சென்றோம். பிலால் கடையிலிருந்து ”என்ன மாமா, எப்ப வந்தீங்க” என்று குரல் வேகமாக வந்தது. சாத்தூர் அந்தக் காலை பதினொரு மணி வேலையின் பரபரப்போடு இருந்தது. எத்தனை முறை இதே தெரு வழியாக அலைந்து திரிந்திருக்கிறோம். இந்தச் சாலையை எல்லாக் கணங்களிலும் பார்த்திருக்கிறோன். கடைகள் பூட்டப்பட்ட நடு இரவுகளில் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் கொள்ளிவாய்ப் பிசாசுகள் போல நான், கிருஷ்ணகுமார், காமராஜ் சிகரெட் பிடித்துக் கொண்டு சங்கம், நிர்வாகம், குடும்பம், காதல், சினிமா, இலக்கியம் எனப் பேசிப் பேசி கடந்திருக்கிறோம். வேலைக்குச் சேர்ந்து ஐந்தாண்டுகள் ஆகப் போகின்றன. புதுப்புது மனிதர்களோடு, புதுப்புது சிந்தனைகளோடு உலவித் திரிந்த காலங்கள் எல்லாம்.
கிருஷ்ணகுமாரும், பரமசிவமும், சோலைமாணிக்கமும் நின்றிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி ஐ.என்.டி.யூ.சி பொதுச்செயலாளர் சிதம்பரம் டீக்குடித்துக் கொண்டு இருந்தார். அங்கங்கே தோழர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். சிதம்பரம் அருகில் சென்று 'என்னண்ணே... எப்படியிருக்கீங்க' என்றேன். ”இருக்கேம்ப்பா” என்றவரிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. பேசிக்கொண்டு இருக்கும் போதே ”இதுக்கு மேல இழுக்க முடியாதுப்பா... ஸ்டிரைக்கை ஒரு மாதிரி முடிச்சிர வேண்டியதுதான்” என்றார். வித்தியாசமாகப் பட்டது. லாட்ஜுக்குச் சென்றோம். இரண்டு சங்கங்களின் சப் கமிட்டி முதலில் பேசி ஒரு முடிவெடுத்து, பிறகு இரண்டு சங்கங்களின் செயற்குழுவில் உட்கார்ந்து பேசலாம் என முடிவு செய்யப்பட்டது. எம்ப்ளாயிஸ் அசோஷியேஷன் சார்பில் பரமசிவம், கிருஷ்ணகுமார், கணேசன், சோமு, ராதாகிருஷ்ணனும், எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் பரிமளச்செல்வம், சிதம்பரம், மாரியப்பன், சண்முகநாதன், கிருஷ்ணன், என்.டி.கோமதிநாயகம் லாட்ஜின் ஒரு அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். நானும், கண்ணனும், காமராஜும், இன்னும் சிலரும் வெளியே நின்று பேசிக் கொண்டு இருந்தோம்.
நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல விஷயத்தைக் கேள்விப்பட்டு வெளியூரிலிருந்தெல்லாம் தோழர்கள் சாத்தூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். மதியம் இரண்டு மணிக்குள்ளாக இருநூற்றுக்கும் மேலாக தோழர்கள் சாத்தூர் தெருக்களில் நடமாடிக் கொண்டு இருந்தார்கள்.
லாட்ஜுக்குள் சென்றுவிட்டு வந்த கண்ணன் 'கவுத்திருவாங்க போலுக்கு' என்று சொல்லிக் கொண்டே வந்தார். அகஸ்டினிடம் போய் எதையோச் சொல்ல அவர் என்னிடம் வந்து “என்ன நடக்குது உள்ளே" என்று கண்கள் சிவக்க கேட்டார். நான் ”ஒண்ணும் தெரியலயே” என்றேன். ”டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆபிசர்களை திராட்டுல விடப் போறீங்களா” என்றார். ”இல்லயே” என்றேன். “உள்ளே அப்பிடித்தான் பேசுறாங்களாம்" என்றார்.
நான் கண்ணனை அழைத்தேன். ”என்ன கண்ணன் ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லி எதாவது பிரச்சினையை உண்டு பண்ணிராதீங்க. அதெப்படி டிஸ்மிஸ் ஆனவங்களை விட்டுட்டு நாம் வேலைக்குப் போவோம்?” என்று கோபப்பட்டேன். ”பாவம். நீங்க குழந்தை'” சொல்லிவிட்டு ”நம்ம தூத்துக்குடிக்காரங்களை சாத்தூருக்கு வரச் சொல்லி போன் பண்ணப் போறேன்” என்று வேகமாக சென்றுவிட்டார்.
மெல்ல மெல்ல வெளியே சூழலின் தன்மை மாறிக் கொண்டு இருந்தது. லாட்ஜுக்குள் சென்றேன். என்னை ஜன்னல் வழியாகப் பார்த்து சோமு வெளியே வந்தார். ”என்ன நடக்குது உள்ளே... வெளியே ஒரு மாதிரி பேசுறாங்க” என்றேன். "என்ன பேசுறாங்க" என்றார். "டிஸ்மிஸ் ஆன ஆபிசர்களைப் பத்தி என்ன முடிவு?'”கேட்டேன். "அதுதான் பிரச்சினை. சேர்மன் ஐ.ஒ.பிக்குக் கடிதம் எழுதி நல்ல முடிவெடுப்பாராம்.. அதுவரைக்கும் காத்திருக்கணுமாம்.' என்றார். 'அதெப்படி அவரை நம்புறது... மத்த கோரிக்கைகள்?' என்றேன் "ஊதிய முரண்பாடு சாதகமா முடிஞ்சிரும். மெஸஞ்சர் பிரமோஷன் கஷ்டம் என்றுதான் நெனைக்கிறேன். அடுத்த போர்டுல வச்சு முடிவெடுப்பாங்களாம்'. என்றார். "இதுக்கு நாம எப்படி ஒத்துக்க முடியும்?' என்றேன். "ஒத்துக்கலன்னா அவங்க போயி செட்டில்மெண்ட் போட தயாரான மாதிரித் தெரியுது". எனக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தோன்றவில்லை. "கிருஷ்ணகுமார் என்ன சொல்றார்?' என்றேன். "என்ன செய்ய முடியும் அவரால. பேசிப் பார்க்கிறார். ஒண்ணு புரிஞ்சிக்க. உள்ளே நாம மைனாரிட்டி. நம்ம சங்கத்துல இருக்குற பரமசிவமும், கணேசனும் இப்ப ஐ.என்.டி.யூ.சி யூனியன் பக்கம்!” என்று சொல்லி என் கையை அழுத்திப் பிடித்துவிட்டுச் சென்றார். அவர் கைகள் நடுங்கியதா, என் கைகள் நடுங்கியதா என்று தெரியவில்லை.
கேள்விப்பட்டதும் காமராஜ் கடுமையாகிப் போனான். ”எப்படியும் பேசி முடிச்சிட்டு செயற்குழுக் கூட்டம் கூட்டுவாங்கள்ள அப்ப வச்சிக்கலாம்” என்றான். நேரம் ஆக, ஆக பல இடங்களிலிருந்தும் தோழர்களின் வருகை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. நான்கு மணிக்கு மேல் சப்கமிட்டி விவாதங்கள் முடிந்தது. கிருஷ்ணகுமார் முகம் என்னவோ போலிருந்தது. தோழர்கள் சூழ்ந்து கொண்டார்கள். ”எந்த பாதிப்பும் இல்லாமல் போராட்டம் முடிவுக்கு வரும் கவலைப்படாதீர்கள்'” என்று சொல்லிக்கொண்டு இருந்தார். இரண்டு சங்கங்களின் செயற்குழுக்களும் தலைமையலுவலகத்தின் முன்புறம் நடக்கும் என்றும் அதற்குப் பிறகு நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் பரமசிவம் அறிவித்தார். தோழர்கள் அனைவரையும் பெருமாள் கோவில் மண்டபத்தில் இருக்குமாறும், பேச்சுவார்த்தையின் விபரங்களை வந்து தெரிவிப்பதாகவும் கிருஷ்ணகுமார் சொன்னார். நானும், காமராஜும் அவனது லூனா வண்டியில் தலைமையலுவலகம் சென்றோம்.
இரண்டு சங்கங்களின் சார்பிலும் முப்பது பேர் கூடியிருந்த அந்த செயற்குழுவில் கனத்த அமைதி நிலவியது. நிர்வாகம் எந்தளவுக்கு இறங்கி வந்திருக்கிறது என்பதை பரமசிவம் தெரிவித்தார். ஏற்கனவே சோமு என்னிடம் பேசியதுதான். “டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களை திரும்பவும் உள்ளே கொண்டு வரும்' என்பதற்கு எப்படி இந்த நிர்வாகத்தை நம்புவது” என நான் கேட்டேன். "நம்பித்தான் ஆக வேண்டும். டிஸ்மிஸ் செய்வது என்பது போர்டில் எடுக்கப்பட்ட முடிவு. அதில் சேர்மன் மட்டும் எப்படி தனியாக முடிவெடுக்க முடியும்?” என்றார் பரமசிவம். எல்லோரிடமும் கருத்து கேட்கப்பட்டது. எங்கள் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகுமார், சோலைமாணிக்கம், சங்கரலிங்கம், சோமு, நான், காமராஜ் உட்பட பனிரெண்டு பேர்கள் மட்டும் "நாம் வேலைக்குத் திரும்பும்போது நம்மோடு டிஸ்மிஸ் ஆனவர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும்" என வலியுறுத்தினோம். பரமசிவமோ "அவர்கள் நிச்சயம் வேலைக்கு வருவார்கள். ஒரு வாரம் மட்டும் காலதாமதமாகும். என்னை நம்புங்கள்" என்றார். அமைதிதான் நிலவியது.
"வாருங்கள். சேர்மனோடு பேசிப் பார்ப்போம்” என்று பேச்சுவார்த்தைக்கு பரமசிவம் எழுந்தார். கிருஷ்ணகுமாரும் உற்சாகமற்றுச் சென்றார். எப்பேர்ப்பட்ட ஆளுமை கொண்ட ஆகிருதி அவர். எவ்வளவு பெரிய கூட்டத்தையும் தன் அற்புத பேச்சாற்றலால் உறையவும், உருகவும் வைக்கிற கிருஷ்ணகுமார் பேசுவதற்கு எதுவுமில்லாமல் நின்றது பெரும் அவலமாயிருந்தது. மொத்தம் நான்கைந்து பேர் போல வங்கிச் சேர்மனின் கேபினுக்குள் சென்றார்கள். மற்ற தோழர்கள் தலைமையலுவலகத்தின் வெளியே வந்து காத்திருந்தோம்.
ஒருமணி நேரம் கழித்து உள்ளேயிருந்து வெளியே வந்தவர்களின் கையில் ஒப்பந்த நகல் இருந்தது. நானும், காமராஜும் கிருஷ்ணகுமார் அருகில் சென்றோம். முகம் வெளுத்துப் போயிருந்த அவர் உதட்டைப் பிதுக்கினார். "யாரை கேட்டு கையெழுத்துப் போட்டீங்க... நீங்க கையெழுத்துப் போடாம வெளியே வந்திருக்க வேண்டியதுதானே" என ஆவேசத்தோடு கத்தினான். "காமராஜ்.. நிதானமாப் பேசு. நா மட்டும் வெளியே வந்து...?” என்றார். "இதோ நாங்க இருக்கோம்... நம்ம மக்கள் இருக்காங்க..." என கைகளை அகல விரித்து விசும்பினான். கிருஷ்ணகுமார் பதற்றப்படாமல் அவன் தோளில் கைவைத்து ஆசுவாசப்படுத்தினார். அவர் கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். பரமசிவம், கணேசன், சிதம்பரம், எல்லோரும் முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். ”வாங்க... பெருமாள் கோவில் மண்டபத்துக்கு போவோம்?” என்றார் கிருஷ்ணகுமார். எதையோ இழந்த மாதிரி உணர்வு அழுத்தியது. சோலைமாணிக்கம் அவருடன் நடந்துகொண்டு இருந்தார்.
“கொஞ்ச நேரம் எங்காவது உட்கார்ந்துவிட்டுப் போவமா?” என்றார் சோமு. பைபாஸில் நடந்து வைப்பாற்றங்கரையோரம் போய் உட்கார்ந்து கொண்டோம். சூரியன் மறைந்து கொண்டிருந்த காட்சியை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம். "கிருஷ்ணகுமார் கையெழுத்துப் போடாமல் வெளியே வந்து நாம் போராட்டத்தை தொடர்ந்திருந்தால் என்ன?” என்றேன். "ஒரு போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிக்கும்போது அது உடைந்தால் பெருத்த இழப்புக்கள் ஏற்படும். நாளைக்கே ஐம்பதுக்கு மேற்பட்ட கிளைகள் திறந்துவிடும். நம்மோடு ஒரு நூறு கிளையின் தோழர்கள் இருந்தாலும் மெல்ல மெல்ல வீரியம் குறைய ஆரம்பிக்கும். இதுவரை நிர்வாகம் மட்டுமே நமக்கு எதிராக இருந்தது. நாளை முதல் நம்மோடு இருந்தவர்களும் எதிரியாவார்கள். இதையெல்லாம் வேலைநிறுத்தத்திற்கு முன்பே நாம் யோசித்திருக்கணும். எவ்வளவு தூரம் போராட்டத்தை இவர்களை நம்பி கொண்டு செல்வது என்பது வரை திட்டமிட்டு இருக்கணும். இருக்கிற மாதிரி இருக்கிற இந்த ஒற்றுமை இப்போது குலைந்தால் காலாகாலத்துக்கும் நாம் எந்திரிக்க முடியாமல் அடி விழும்” என்றார். அந்த புதிய ஆபிசர்களுக்கும், இந்தக் கோரிக்கைகளுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் எதற்காக போராடினார்கள்? எதற்காக டிஸ்மிஸ் ஆனார்கள்? இன்று அவர்களை மட்டும் வெளியே விட்டு நாம் எப்படி வேலைக்குச் செல்வது? எத்தனை கனவுகளோடு அந்த ஆபிசர்களின் குடும்பம் இருந்திருக்கும்? யோசித்ததையெல்லாம் ஒரு பைத்தியம் போல முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். சோமு எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். மெல்ல இருள் சூழ ஆரம்பித்தது. "வாங்க போவோம்" என்று எழுந்தார்.
பெருமாள் கோவில் மண்டபத்தில் கொந்தளிப்பு மிக்க ஒரு அமைதி நிலவிக் கொண்டு இருந்தது. மண்டபத்துக்கு வெளியேவும் ஏராளமான தோழர்கள் நின்றிருந்தார்கள். புகை நடுவே உருவங்களாக இருந்த காட்சியாக புலப்பட்டது. ஒரு ஜன்னலோரம் சென்று தலையெட்டிப் பார்த்தேன். மனித வெக்கையும், வேர்வையும் சுமந்த இறுக்கமாக இருந்தது. உள்ளே பரமசிவம் ஒப்பந்த நகலை வாசித்துக் கொண்டிருந்தார். முடிந்ததும் அடங்காத அமைதி நிலவியது. "எங்களுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க காம்ரேட்ஸ்?" என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். கூட்டத்திலிருந்து முன்னுக்கு வந்து அருகில் இருந்த ஜன்னல் மீது ஏறி நின்றார் போஸ் பாண்டியன். புதிதாக பணியில் சேர்ந்து வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட அலுவலர்களில் அவரும் ஒருவர்.
மொத்தக் கூட்டமும் ஒரு கணம் திகைத்து அமைதி காத்தது. போஸ் பாண்டியன் திரும்பவும் சுற்றிலும் இருப்பவர்களை நிதானமாக பார்த்தவாறு "நாங்க திரும்பவும் வேலைக்கு வருவதற்கு என்ன உத்திரவாதம் இருக்கு" என்று கேட்டார். அவரது முகம் வலியில் துடித்துக் கொண்டிருந்தது. எல்லோருக்குள்ளும் முட்டிக் கொண்டிருந்த அவஸ்தையை உடைத்துப் போட்டுக் கொண்டு வெளியே வந்து விழுந்தன வார்த்தைகள். நிச்சயம் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அலுவலர்கள் குறித்து ஒரு பெரும் விவாதமும், சச்சரவும் வரும் என எதிர்பார்த்திருந்தார்கள். தலைவர்களுக்கு நேராக எப்படி விமர்சனத்தை ஆரம்பிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தவர்கள் இப்போது கூட்டத்தின் முன்னே வர ஆரம்பித்தார்கள். ஒப்பந்த நகலை வாசித்துக் கொண்டிருந்த பரமசிவத்திற்கு என்ன பதில் சொல்வது என குழப்பமடைந்து, அருகிலிருந்த கிருஷ்ணகுமாரைப் பார்க்க ஆரம்பித்தார். அவரும் எதையோ சொல்ல வாயெடுத்தார். "நீங்க பேச வேண்டாம். தலைவரே நீங்க சொல்லுங்க" என்று சங்கரலிங்கம் கரகரவென குரலில் குறுக்கிட்டார்.
"ஒப்பந்தத்திலேயே தெளிவா சொல்லியிருக்கே. நிர்வாகம் ஐ.ஓ.பியில் கலந்தாலோசித்துவிட்டு முடிவு செய்யும் என்று எழுதியிருக்கே" என்று பரமசிவம் விளக்க ஆரம்பித்தார். "என்ன முடிவு" என்று போஸ் பாண்டியன் திரும்பவும் கேட்டார். "இன்னா பாருங்க. நிச்சயம் நல்ல முடிவா எடுக்கும்" என பரமசிவம் அழுத்தமாக பேசினார். "அதுக்கு என்ன உத்திரவாதம் என்றுதான் திரும்பத் திரும்ப கேட்குறேன்". என்று இப்போது போஸ் பாண்டியன் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். "இப்படி நம்பாம பேசினா எப்படி? சேர்மன் சொல்லியிருக்கார். நிச்சயம் உங்களையெல்லாம் உள்ளே எடுப்பாங்க. நான் சொல்றேன். போதுமாங்க" கொஞ்சம் வேகமாக பரமசிவமும் பேச ஆரம்பித்தார். "நாங்க ஒங்களையே நம்பலயே. அப்புறம் எப்படி சேர்மனை நம்ப முடியும்?" என்று இன்னொரு மூலையில் இருந்து குரல் கேட்டது. சங்கரலிங்கம் கோபமாக பரமசிவத்தை நோக்கி கை நீட்டியபடி நின்றிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. இந்த சங்கரலிங்கம்தான் பரமசிவம் மேல் அத்தனை பிரியமாகவும், குடும்ப நண்பராகவும் இருந்தவர். எல்லாவற்றையும் தாண்டி மனிதர்களை சங்கம் யோசிக்க வைக்கிறது. தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், உறவுகளை மீறிய உணர்வும், அறிவுத் தெளிவும் மனிதர்கள் பக்குவப்படுவதற்கான லட்சணங்களாயிருக்கின்றன.
கூட்டம் முழுவதும் இப்போது கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. மாறி மாறி கேள்விகளாய் பாய்ந்து கொண்டிருந்தன. பரமசிவம் அருகில் இருந்த கிருஷ்ணகுமார் எல்லாவற்றையும் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ”இப்போது நீங்கள் எதுவும் பேச வேண்டாம்” என கிருஷ்ணகுமாரிடம் சொல்லிவிட்டு வந்த சோலைமாணிக்கம் "அவர் பேசினா இந்தக் கூட்டத்தை சமாளிச்சிருவாரு. மத்தவங்க பேசட்டும். ஊழியர்களின் உணர்வுகளை தலைமையிலிருப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்" என்று என்னிடம் மெல்லிய குரலில் சொன்னார்.
"ஸோ காம்ரேட்ஸ்... நீங்க எல்லாம் நாளை மறுநாள் எங்களை விட்டுட்டு வேலைக்குத் திரும்பப் போறீங்க. இல்லையா" என்று போஸ்பாண்டியன் மீண்டும் உரத்த குரலில் கேட்டார். 'டிஸ்மிஸ் செய்யப்பட்ட பதினான்கு ஆபிஸர்களும் உள்ளே வர்ற வரைக்கும் நாம யாரும் வேலைக்குத் திரும்பக் கூடாது. நிர்வாகம் ஐ.ஓ.பியில் கலந்தாலோசித்து நல்ல முடிவு சொன்ன பிறகு போவோம்." என நூற்றுக்கணக்கில் குரல்கள் கோஷங்கள் போல எழும்பி எழும்பி பெருமாள் கோவில் மண்டபத்தை திணறடித்தன. அந்த தெருவில் உள்ளவர்கள், மண்டபத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அங்கே கூட ஆரம்பித்தார்கள்.
பெரும் கலகத்தின் கிளர்ச்சி போல காட்சிகள் உருமாறிக் கொண்டிருந்தன. தலைவர் பரமசிவத்தை நோக்கி மரியாதையற்ற வார்த்தைகள் கூட்டத்திலிருந்து தெறிக்க ஆரம்பித்தன. அவரை நோக்கி சிலர் பாய முயன்றனர். கிருஷ்ணகுமார் எழுந்து, "தோழர்களே...தோழர்களே" என்று எதோ சொல்ல வந்தார். அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்தனர். அருகில் நின்றிருந்த ஒரு தோழர் "போச்சு...போச்சு..சங்கமே போச்சு" என்று முணுமுணுத்தார்.
(இந்த சிறு தொடரின் அடுத்த காட்சிகள் விரைவில்...)
அந்த 44 நாட்கள் - இரண்டாம் பகுதி
(இத்தொடரின் முதல் பகுதி இங்கே)
சப் இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டபிள்களும் தலைமையலுவலகத்தில் வந்திறங்கினர். மக்கள் அவர்களைப் பார்த்து அசந்துவிடவில்லை. தாங்கள் வங்கியின் சேர்மனோடு பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். சப் இன்ஸ்பெக்டர் உள்ளே சென்று சேர்மனோடு பேசினார். கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தார். 'ஐந்து பேர் மட்டும் பேச வரலாம்' என்றார். 'நீங்க போங்க...நீங்க போங்க' என்று அவர்களே சிலரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். இடைகாலில் இருந்து வந்திருந்த ஒரு முஸ்லிம் பெரியவரும் அவர்களோடு பேச்சு வார்த்தைக்குச் சென்றார். சப்-இன்ஸ்பெக்டரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். நாங்கள் சேர்மன் கேபின் ஜன்னல் அருகில் நின்று கொண்டிருந்தோம். அமைதியாகச் சென்று கொண்டிருந்த பேச்சு வார்த்தையில் அந்த முஸ்லிம் பெரியவரின் குரல் திடுமென ஓங்கி ஒலித்தது. 'நீங்க சொல்ற மாதிரி தப்பானவங்க இல்ல அவங்க. ஒவ்வொருத்தர்ட்டயும் எவ்வளவு அன்பா, மரியாதையா பழகுவாங்க என்பது எங்களுக்குத்தான் தெரியும்' என்றார். சேர்மன் பேசாமல் இருந்தார்.
'அவங்க கோரிக்கையை செஞ்சு கொடுக்குற பவர் இவர்ட்ட இல்லன்னு சொல்றார்...என்ன செய்ய...' என்று சப்-இன்ஸ்பெக்டர் இடையிடையே சொல்லிக் கொண்டிருந்தார். 'இவராலச் செய்ய முடியலன்னா...இவர் எதுக்கு இங்க இருக்கார்" என்று வத்றாப்பில இருந்து ஒருவர் கேட்ட கேள்வி பாமரத்தனமாக இருக்கவில்லை. 'பேசிக்கிட்டு இருக்கோம்...இவர் என்னடான்னா...மோட்டு வளையப் பாத்துட்டு இருக்கார்..' "ஒரு அரை மணி நேரம் பேசுறதுக்குள்ள பொது மனுசங்க எங்கக் கிட்டயே இப்படி மாத்தி மாத்தி பேசுறாரே...இவர் அந்த ஸ்டாஃப்களை என்ன பாடு படுத்தியிருப்பார்' என்று அவ்வப்போது அந்த கிராமத்து எளிய மனிதர்கள் பேசியது வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த தோழர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. சிறிது நேரத்தில் அவர்கள் எல்லோரும் வெளியே வந்தார்கள். 'அந்த ஆள் ஒண்ணும் சரியான ஆளாத் தெரியல... நீங்க விடாதீங்க' என்று சொல்லிப் புறப்பட்டர்கள்.
நாங்கள் சங்க அலுவலகத்தில் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டோம். பணியில் சேர்ந்து நிரந்தரம் ஆகியிராத அலுவலர்கள் பதினைந்து பேர் போல வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். நிர்வாகம் அவர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக ஒரு தகவலை சங்கத்தலைவர் பரமசிவம் சொன்னார். அவருக்கு இப்படியான தகவல்கள் எப்படியோ தெரிந்துவிடுவதாய் இருந்தன. ஆரம்பத்திலிருந்தே அவர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடச் சொல்ல வேண்டாம் என்பது சங்கத்திற்குள்ளே ஒரு கருத்தாக இருந்து வந்தது. இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை, அவர்களைப் போகச் சொல்லி விடலாம் என்று பேசப்பட்டது. பார்போம், என்ன செய்து விடுவார் இந்தச் சேர்மன் என்றும் ஆவேசக் குரல்கள் எழுந்தன. எது குறித்தும் ஒரு தெளிவான கருத்தும், பார்வையும், அணுகுமுறையும் யாரிடமும் இருக்கவில்லை.
வேலைநிறுத்தம் என்கிற மிகப் பெரிய ஆயுதத்தை கையிலெடுக்கும் போது, அனுபவமிக்க தலைவர்களையோ, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழகத் தலைவர்களையோ கலந்து ஆலோசித்திருக்கவில்லை. அவர்களைக் கேட்டிருந்தால் காலவ்ரையறையற்ற வேலைநிறுத்தம் வேண்டாம் என்றே ஆலோசனை தந்திருப்பார்கள் என்பதை சோமு போன்ற தோழர்கள் சொன்னார்கள். எல்லாம் நதியின் ஓட்டத்தில் இழுத்துச் செல்லப்படுவதைப் போல இருந்தார்கள். தலைமைக்குள் ஒருவரையொருவர் நம்ப முடியாமல், சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டே ஒடிக் கொண்டிருந்தார்கள். உறுப்பினர்களின் ஒற்றுமையின் மீதுதான் போராட்டம் உறுதியாக இருந்தது. அடுத்தக் கட்டமாக திருநெல்வேலியில் நடந்த வங்கி நிர்வாகக் குழுக் கூட்டத்தின் முன் தர்ணா நடத்துவது என முடிவெடுத்தோம்.
ஒரு மாதத்திற்கும் மேலாகி இருந்தது. விசாகா லாட்ஜுக்கு பணம் கொடுக்க முடியாமல் நாங்கள் தூத்துக்குடி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தங்கிக் கொண்டோம். சவரம் செய்யப்படாத முகங்களோடு தோழர்கள் காட்சியளித்தார்கள். எல்லா போராட்ட மையங்களிலும் நிலைமை அப்படித்தான் இருந்தது. தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் தோழர்களை அடிக்கடி ஒருவரையொருவர் சந்திக்க வைத்தன. ஒன்றாய் இருப்பது நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் உருவாக்கி விடுகிறது. நாட்கள் ஆக, நாட்கள் ஆக தோழர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி நிர்வாகக்குழுக் கூட்டத்திலாவது, இயக்குனர்கள் நிலைமையை உணர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தர ஒப்புக் கொள்வார்கள் என நம்பினார்கள். தர்ணா நடத்திகொண்டு இருந்த போது சங்கத்தலைவர்கள், இயக்குனர்கள் குழுவை சந்தித்துப் பேசச் சென்றார்கள். மொத்த இயக்குனர் குழுவும் சேர்மன பேசுவதையும், செய்வதையும் ஆமோதித்துவிட்டு கார்களில் நகர்ந்தார்கள். பாலாஜி பாலகிருஷ்ணன் கார் முன்னால் பாய்ந்து மண்ணள்ளிப் போட்டு, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டது தாங்க முடியாததாக இருந்தது. அதிகாரத்திலிருந்தவர்கள் எந்தச் சலனமும் இல்லாமல் அந்தக் காட்சியைக் கடந்து சென்றனர்.
அடுத்த சில தினங்களில், புதிதாக வேலைக்குச் சேர்ந்து பணி நிரந்தரம் ஆகாத பதினான்கு அலுவலர்களை, வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டததற்காக நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டிருந்தது. நிர்வாகம் தாக்குதல் நடத்தத் துவங்கிவிட்டது என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. தோழர்களிடையே கோபமும் ஏற்பட்டது. பயமும் ஏற்பட்டது. போராட்டத்தின் உறுதியை நிர்வாகம் குலைக்க முயற்சிக்கிற போதே, நிர்வாகமும் பயந்து போயிருக்கிறது என்பதும் தெரிந்தது. எச்சரிக்கையாகவும், அதே நேரம் தீவீரமாகவும் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டியிருந்தது. போராட்டத்தை அடுத்தக் கட்டக்த்துக்கு நகர்த்த வேஎண்டும் என செயற்குழுவில் விடிய விடிய விவாதித்தோம்.. சங்க செயற்குழுவின் முடிவுகள் நிர்வாகத்துக்கு முன்னதாகவே போய்விடுகின்றன என கிருஷ்ணகுமாரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் சோமு.
தலைமையலுவலகத்தின் முன்பு மறியலுக்கு நாள் குறிக்கப்பட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் தலைமையலுவலகத்தின் முன்பு கோஷங்களிட்டு நிறைந்திருந்தார்கள். ஏராளமாக காவல்துறையினரும் காணப்பட்டார்கள். பொது மேலாளர் வந்த காரை மொத்தமாய் சென்று மறிக்கவும் பெரும் கூச்சல் எழும்பியது. காவல்துறையினர் இடையில் புகுந்து தோழர்களை அப்புறப்படுத்தினார்கள். அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தார்கள். போலீஸ் சூழ தலைமையலுவலகம் முன்பு உட்கார்ந்திருந்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் தோழர். எஸ்.ஏ.பெருமாள் அப்போது அங்கு வந்து எங்களை வாழ்த்திப் பேசினார். அவரது பேச்சில் அனல் தெறித்தது. 'எங்கள் தோழர்களுக்கு எதாவது நேர்ந்தால், நாங்கள் இதற்கு மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.' என அறிவித்த போது பெரும் ஆரவாரம் எழுந்தது. நாங்கள் ஊர்வலமாய் சாத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டோம். போலீஸ் ஸ்டேஷன் வளாகம் கொள்ளாமல், சாலை வரை நிரம்பி அங்கேயே உட்கார்ந்திருந்தோம். வேன் இல்லை, வரும் என்றார்கள். திருச்சிக்குக் கொண்டு செல்லப் போவதாய்ச் சொன்னார்கள். எதிரில் இருந்த தபால் அலுவலகத்தில் கார்டு வாங்கி 'எங்களை கைது செய்திருக்கிறார்கள். விரைவில் திரும்பி வருவோம்' என மனைவிக்கும், பெற்றோர்களுக்கும் கடிதம் எழுதிய சிலரை பார்க்க முடிந்தது.
மதியம் கடந்து, சாயங்காலம் ஆகியது. அங்கேயே தோழர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சாத்தூர் நகரமே எங்களை பார்த்து நின்றது. தாசில்தார் முன்பு பேச்சு வார்த்தை நடக்க இருப்பதாக காவல்துறையினர் சொன்னார்கள். இந்தப் பிரச்சினையை இன்றோடு முடிவுக்கு கொண்டு வரப் போவதாகச் சொன்னார்கள். தோழர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். இரவு ஏழு மணிக்கு மேல் சேர்மன் காரில் வந்தார். சலசலப்பு ஏற்பட்டது. உள்ளே சென்றவர் ஒரு கல்லை கையில் வைத்துக்கொண்டு என் மீது கூட்டத்திலிருந்து எறியப்பட்டது என்று தாசில்தாரிடம் காண்பித்திருக்கிறார். பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தலைவர்கள் 'இது அவருடைய வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லாக இருக்க வேண்டும். எங்கள் தோழர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள்' என்று மறுத்திருக்கிறார்கள். பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நபார்டுக்கும், நிதியமைச்சகத்துக்கும் கடிதம் எழுதுவதாகச் சொன்னதையே சொல்லியிருக்கிறது நிர்வாகம். வெளியே நின்றிருந்த ஒரு கான்ஸ்டபிள் 'இப்படி ஒரு பைத்தியக்காரனை எங்கும் பாத்தது இல்லீங்க' என்று எங்களிடம் சொல்லி சிரித்துக் கொண்டார். பேச்சு வார்த்தை முடிவுக்கு வராமல் சேர்மன் காரில் ஏறியபோது காவல் நிலையம் என்று பார்க்காமல் அனைவரும் 'சேர்மன், ஓழிக...சேர்மன் ஒழிக...' என பெருஞ்சத்தத்தோடு எழுப்பிய கோஷத்தில் எல்லோருக்குள்ளும் சிலிர்ப்பு ஏற்பட்டது. இரவு ஒன்பது மணிக்கு மேல் அனைவரின் பேரெழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுவித்தார்கள்.
விடிய விடிய கிருஷ்ணகுமாரோடு, காமராஜோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டு விடிகாலை நான்கரை மணிக்கு தூத்துக்குடி புறப்பட்டேன். காற்றின் பரவசம் எதுவும் இருக்கவில்லை. கலக்கமாய் இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெளிவாக எந்தத் திட்டமும் இருக்கவில்லை. கோபம் மட்டும் இருந்தது. இது ஆபத்தானது. பணிநீக்கம் செய்யப்பட்ட அலுவலர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. பலசரக்குக் கடைகளில் கடன்கள் ஏறிக்கொண்டு போக அன்றாடம் செலவுக்கும் கஷ்டப்படும் சூழலில் பலர் இருந்தார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு என்னும் கேள்வி மெல்ல மெல்ல மேலெழும்பிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. நிர்வாகத்தின் கோரப்பல்லிடையில் எச்சில் ஒழுகிக் கொண்டு இருந்தது. அடுத்த சில நாட்களில் தூத்துக்குடியில் உள்ள ஒரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர் மூலமாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு சங்கத்தலைவர் பரமசிவம் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டோம். அவர் எங்கள் சங்கத்தோழர்களை விட ஐ.என்.டி.யூ.சி யூனியன் மக்களோடு நெருக்கமாய் இருந்தார். கிருஷ்ணகுமார், சோமு, காமராஜ், நான் இன்னும் சில தோழர்களை கொக்கிகள் என்று அடைமொழி கொடுத்து பேச ஆரம்பித்திருந்தார்.
சாத்தூர் மையத்தில் நாங்கள் இல்லாவிட்டாலும் தூத்துக்குடிக்கு செய்திகள் வந்து கொண்டிருந்தன. நிர்வாகம் சில கோரிக்கைகளை நிறைவேற்றித்தர ஒப்புக் கொண்டிருப்பதாய் பரமசிவம் பேச ஆரம்பித்திருக்கிறார். யாரிடம் சொல்லப்பட்டது என்பதற்கு எந்த பதிலும் சரியாக இல்லை. 'நல்லது நடந்தால் சரிதானே..எப்படி நடந்தது என்பதெல்லாம் தேவையா' என்று ஒருவித முரட்டுத்தனமான பதிலே அவரிடம் இருந்து வர ஆரம்பித்தது. இந்த தகவல்கள் தோழர்களை அசைக்க ஆரம்பித்தன. எதோ ஒன்று நடந்து முதலில் உள்ளே செல்வோம் என்கிற ஒரு பொது மனநிலையை தருவிக்கச் செய்தது. இரண்டு சங்கங்களின் கூட்டுச் செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்பது என்று தீர்மானித்தோம். 1988 அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடியில் இருந்து நானும், சோமுவும், கண்ணனும் காலையிலேயே புறப்பட்டுச் சென்றோம். காலவரையரையற்ற வேலை நிறுத்தம் நடக்க ஆரம்பித்து அன்றோடு நாற்பத்து இரண்டு நாட்கள் முடிந்து நாற்பத்து மூன்றாம் நாள் துவங்கியிருந்தது.
”ஊதிய முரண்பாடு, மெஸஞ்சர்களுக்கு பதவி உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும், வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட அலுவலர்கள் அனைவரையும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் வேலைநிறுத்தத்தை தொடர வேண்டும்' என்று கண்ணன் ஆக்ரோஷமாக பஸ்ஸில் சொல்லிக் கொண்டு வந்தார். சோமு அமைதியாக இருந்தார். கண்ணன் விடவில்லை. ”என்ன அமைதியா இருக்கீங்க...செயற்குழுவில் என்ன முடிவெடுக்கப் போறீங்க” என்று கேட்டுக் கொண்டே வந்தார். 'அதெப்படி....எதுவுமில்லாமலா போராட்டத்தை வாபஸ் வாங்குவோம்?' என்று பட்டும் படாமல் சோமு சொன்னார். 'தலைவர்களை நம்ப முடியாது... நீங்க பாட்டுக்கு எதாவது முடிவெடுப்பீங்க... பிறகு காலத்தின் கட்டாயம், அது இது என்று எதாவது சமாளிப்பீங்க' என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே கண்ணன் இருந்தார்.
(இந்த சிறு தொடரின் அடுத்த காட்சிகள் விரைவில்...)
அந்த 44 நாட்கள் - முதல் பகுதி
உற்சாகமும், வலியும் நிரம்பிய நாட்கள்தான் அந்த 44 நாட்களும். இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது திரும்பிப் பார்க்கிறபோது சிலிர்ப்பாகவும், அதிசயம் போலவும் தெரிகிறது. அந்த அனுபவங்களை மறுவாசிப்பு செய்கிறபோது, தொழிற்சங்கம், போராட்டம் குறித்தெல்லாம் புதிய பார்வைகளும், அணுகுமுறைகளும் தேவை என்பதை உணரமுடிகிறது. அந்த தளங்களில் தீவீரத்தோடு செயலாற்றுவதற்கான தேவை இருப்பதையும் அறிய முடிகிறது.
இடதுசாரி பார்வையும் அணுகுமுறையும் கொண்ட எங்கள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கமும், ஐ.என்.டீ.யூ.சி (காங்கிரஸ்) பாரம்பரியத்தில் வந்த பாண்டியன் கிராம வங்கி எம்ப்ளாயிஸ் யூனியனும் இணைந்து நடத்திய வேலை நிறுத்தம் அது. மிகச் சாதாரணமாக ஒன்றிரண்டு நாட்களில் நிர்வாகம் அடிபணிந்துவிடும் என்று பாண்டியன் கிராம வங்கியில்ஆரம்பித்த அந்த வேலைநிறுத்தம் 44 நாட்கள் நீண்டது. ஊதியங்களில் உள்ள முரண்பாடு, கடைநிலை ஊழியர்களின் பிரமோஷன் போன்றவைதாம் முக்கிய கோரிக்கைகள். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் பேசி வந்தும், இந்தக் கோரிக்கைகள் குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது, ஸ்பான்ஸர் வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி)தான் முடிவெடுக்க வேண்டும் என நிர்வாகம் ஒரேயடியாகச் சொல்ல, வேலைநிறுத்தத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.
துரோகங்களும், நம்பிக்கைகளும் கொண்ட கதையாக அது உருவெடுத்தது......
1988ம் வருடம் ஆகஸ்ட் 30ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் ஆரம்பமாகியது. காலையிலேயே ஊரிலிருந்து தூத்துக்குடி விசாகா லாட்ஜுக்கு புறப்பட்டேன். அம்மா எப்போது வருவாய் என கேட்டார்கள். தெரியாது என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். எனக்கு முன்னரே திருச்செந்தூரிலிருந்து சோமு வந்திருந்தார். சங்கரலிங்கம், கண்ணன், அகஸ்டின், அருள்ராஜ், கனகராஜ், ராமர், ராஜரத்தினம் என பல தோழர்கள் வந்திருந்தனர். ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கிக்கொண்டு எந்தெந்த கிளைகள் திறக்கப்பட்டிருக்கிறது, அவைகளை எப்படி பூட்டுவது, யார் யாரையெல்லாம் சந்திப்பது என திட்டமிட்டோம். இது போலவே திருநெல்வேலி, தென்காசி, சாத்த்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி என ஒவ்வொரு பகுதியிலும் தோழர்கள் தினந்தோறும் வந்து சந்திக்க, விவாதிக்க இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஓரிரு நாட்களில் வேலைநிறுத்தம் முடிந்துவிடும் என்கிற நினைப்பில் எங்கும் உற்சாகத்தில் தோழர்கள் இருந்தனர்.
சிலர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இருபது கிளைகள் போல இயங்கிக் கொண்டிருந்தன. காசாளர்களாக பணிபுரிந்து வந்த தோழர்கள் கேஷ் பார்க்கும் சாவியோடு வெளியே வந்துவிட்டதால் பல கிளைகளில் இயக்கமில்லை. ஆனால் அதுபோன்ற கிளைகளில் ஊழியர்கள் யாராவது பணிக்குச் சென்றால், நிர்வாகம் வேறு யுக்திகளை காட்டியிருந்தது. அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் காலையில் பணமெடுத்து வந்து வரவு செலவுகளை முடித்து அன்றே போய் திரும்பவும் கட்டி விட வேண்டும். அப்படி சில கிளைகள் இயங்கின. அந்தக் கிளைகளில் பணிபுரிபவர்களிடம் முதலில் பேச வேண்டும் என திட்டமிடப்பட்டது.
நிர்வாகம் குறிவைத்து எத்தனையோ தோழர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. உயர் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் சொந்த பந்தங்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தாரை மிரட்டியச் சம்பவங்கள் நடந்தன. எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கள் முகாம்களில் வந்து நாட்கணக்கில் வெறும் தரையில் படுத்து உறங்கிய அற்புதமான தோழர்களையெல்லாம் அப்போது பார்க்க முடிந்தது.
லேபர் கமிஷனரோடு பேச்சுவார்த்தைகள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்க, தலைமையலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. நிர்வாகம் கொஞ்சமும் தன்னிலையில் இருந்து இறங்குவதாகத் தெரியவில்லை. அவ்வப்போது சாத்தூரில் கூடும் செயற்குழுக் கூட்டங்களில் கலந்துவிட்டு நானும் சோமுவும் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்துவிடுவோம். அந்த சமயங்களில்தான் இன்னொரு செயற்குழு உறுப்பினராயிருந்த காமராஜ், பொதுச்செயலாளராக இருந்த கிருஷ்ணகுமாரை எல்லாம் சந்தித்து பேசிக்கொள்ள முடியும்.
வீட்டிற்குச் சென்று பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தன. முதலில் நான்கைந்து நாட்கள் விசாகா ஓட்டலிலேயே சாப்பிட்டு வந்த எங்களுக்கு பிறகு பணம் இல்லை. தூத்துக்குடியிலிருந்த தோழர்கள் தங்கள் வீடுகளிலிருந்து உணவு கொண்டு வருவார்கள். சிகரெட்டு குடித்து வந்த நானும் சோமுவும் மெல்ல பீடிக்கு மாறிக் கொண்டோம். இது போன்ற நிலைமைகள் எல்லா இடங்களிலும் இருந்தன.
நிர்வாகம் விவசாயிகளுக்குக் கடன் கொடுக்காமல், அரசுத் திட்டங்களை செயல்பட விடாமல் தங்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது. அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இந்தச் செய்திகள் தடித்த எழுத்துக்களில் வெளியாகி இருந்தன. சோமு அதனை அம்பலப்படுத்தி ஒரு பிரசுரம் எழுதச் சொன்னார். உட்கார்ந்து விவாதித்து ஒன்று தயாரித்தோம். விவசாயிகளுக்கு இந்த அரசும், வங்கிகளும் என்னவெல்லாம் கடந்த காலத்தில் துரோகம் செய்தன என்பதையெல்லாம் விளக்கி, எப்போதுமில்லாத கரிசனம் இப்போது நிர்வாகத்திற்கு விவசாயிகள் மீது பொங்கி வருவதற்கு காரணம் எங்களின் வேலைநிறுத்தம் என்பதை புரிய வைத்திருந்தோம். விவசாயிகளுக்கு எதிராக போராடும் ஊழியர்களை நிறுத்துகிற குள்ள நரித்தனம் எனச் சுட்டிக்காட்டியிருந்தோம். அடுத்த சில நாட்களில் அனைத்து நகரங்களிலும் சைக்கிள் பேரணி நடத்தினோம். வீதியெங்கும் 'உங்கள் ரத்தம் எங்கள் ரத்தம் என்றும், எங்கள் ரத்தம் உங்கள் ரத்தம்' என்றும் முழக்கமிட்டு நின்றோம். பெரும்பாலும் கூட்டங்களில் அமைதியாயிருக்கிற அகஸ்டின் ஆவேசத்தோடு தன் சொந்த ஊரில் தெருதெருவாக கோஷமிட்டுச் சென்றார். எல்லோருக்குள்ளும் தீ பரவி தகதகவென இருந்தார்கள்.
எதோ ஒரு கிராமத்தில் தன் பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்துவிட்டு அடகுவைத்த நகைகளை திருப்புவதற்கு காத்திருக்கும் எளிய மனிதர்களின் முகங்கள் உள்ளுக்குள் தெரியத்தான் செய்தன. அவசரத்துக்கு பணம் எடுக்க முடியாமல் பூட்டியிருக்கும் வங்கியின் கதவுகளை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் பெருமூச்சுக்கள் கேட்கத்தான் செய்தன. குற்ற உணர்ச்சி தனிமைகளில் மேலோங்கி வரும். இந்த அமைப்பில் ஒரு பகுதியினர் தங்கள் வாழ்வுக்கும், உரிமைக்கும் போராடுவது, இன்னொரு பகுதியினருக்கு எதிரானதாக பேசப்படுகிறது. எந்தவொரு போராட்டமும் பொதுத்தன்மை பெற்றுவிடக் கூடாது என்று அதிகார மையங்கள் மிகத் துல்லியமாக திட்டமிட்டு காட்சிகளை முன்வைக்கின்றன. முஷ்டி உயர்த்தி ஜிந்தாபாத் முழக்கமிடுகிறவர்கள் தனிமைப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சமூகக் கட்டமைப்பிலேயே உருவாக்கம் பெற்றிருக்கின்றன. தொழிலாளி வர்க்கத்துக்கு இந்தத் தடையை அகற்றுவதுதான் மிகப் பெரிய காரியமானதாகத் தெரிகிறது. பொதுமக்களின் அவதிக்கு தொழிலாளர்கள் ஒருபோதும் காரணம் இல்லை. அவர்களை வீதியில் கொண்டு வந்து நிறுத்தியதற்கு நிர்வாகமும், அரசின் குளறுபடித்தனமான ஆணைகளும் தான் காரணம். இதை இதரத் தரப்பினருக்கு புரிய வைப்பதில்தான் ஒரு போராட்டத்தின் தாக்கமும், வெற்றியும் அடங்கியிருக்கிறது.
அரசு தலையிட வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களின் அலுவலகங்கள் முன்பு தர்ணாக்கள் நடைபெற்றன. வாரத்துக்கு இருமுறையாவது அனைத்து முன்னணித் தோழர்களும் ஒரு இடத்தில் சந்திக்கிற மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தன. இந்த காலத்தில் ஒவ்வொரு தோழருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை தொகுக்க முடிந்தால் ஒரு காவியத்துக்கு இணையான சம்பவங்கள் இடம்பெறக்கூடும்.
நிர்வாகத்துடன் எங்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் எதோ சமரச முயற்சியில் ஈடுபடுகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டு இருந்தன. “இப்போது அதைப்பற்றி பேச வேண்டாம்” என கிருஷ்ணகுமார் எங்களை எச்சரித்தார். ஒருவரை ஒருவர் முழுமையாக நம்ப வேண்டிய களத்தில், இடத்தில் நிற்கும்போது இப்படியான சிந்தனைகள் எழுவது போராட்ட முனையை கூர் படுத்த ஒரு போதும் உதவாது எனப் புரிந்தாலும், உள்ளுக்குள் எதோ எச்சரிக்கை மணி விடாமல் ஒலிக்கத் தொடங்கியது.
அங்கங்கு சில முணுமுணுப்புக்களும் எழ ஆரம்பித்துக் கொண்டு இருந்தன. சில கிளைகள் மேலும் திறக்கப்பட்டன. தோழர்கள் அங்கு சென்று அந்த ஓட்டைகளை அடைக்க முயற்சித்தனர். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளை திறந்து வைக்கப்பட்டு இருக்கும். மீண்டும் தோழர்கள் அந்த கிளையை முற்றுகையிடுவார்கள். விடாப்பிடியான மன உறுதி கொண்ட தோழர்கள் போராட்டத்தை வெற்றியின் பக்கம் இழுத்துக் கொண்டு இருந்தனர். தோல்வி என்பது, பெற்ற சகல உரிமைகளையும் உடைத்துப் போட்டுவிடும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். நிர்வாகமோ எந்தச் சலனமும் இல்லாமல் அனைவரையும் பார்த்துக் கொண்டு எப்போது சோர்வடைவார்கள் என காத்திருந்தது.
அலட்டிக் கொள்ளாமல் இருந்த நிர்வாகத்தை அலற வைக்கிற ஒரு நிகழ்ச்சி நடந்தது. எப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிற சம்பவம் அது. வத்றாப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், இடைகால் போன்ற பகுதியிலிருந்து பொதுமக்கள் மூன்று லாரிகளில் தலைமையலுவலகம் நோக்கி புறப்பட்டு வந்தனர். அந்தப் பகுதிகளில் பணிபுரிந்து வந்த தோழர்கள் பொது மக்களின் அன்பை எப்படி சம்பாதித்து வைத்திருந்தனர் என்பதை உலக்குக்கு அறிவித்த நாள் அது. ஆவேசத்தோடு தலைமையலுவலகத்தை முற்றுகையிட்டு நின்றனர் மிகச் சாதாரண எளிய மனிதர்கள். 'வங்கிகளில் பணி புரியும் எங்கள் மக்கள் அவர்கள். அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். நியாயம் கேட்க வந்திருக்கிறோம்' என்று ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கொண்டு லாரியிலிருந்து இறங்கி தலைமையலுவலகத்தை நோக்கி நடந்தார். வங்கியின் சேர்மனோடு தாங்கள் பேச வேண்டும் என்றனர் அந்த மக்கள். உள்ளே நிர்வாகத்திற்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. காவல்துறைக்கு போன் செய்தார்கள்.
(இந்த சிறு தொடரின் அடுத்த காட்சிகள் விரைவில்...)
நெஞ்சுக்கு நீதி
முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு நினைத்தது. எனவே ஒரு சட்டம் இயற்றி முயலிடம் அறிவித்தது.
“முயலே நான் சொல்வதைக் கேள். நான் இனி மேல் முன்கூட்டியே சொல்லாமல் உன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன். கதவைத் தட்டி முன் அனுமதி பெற்றுத்தான் வருவேன். சொல்லாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால், நீ பயப்படாமல் என்னிடம் புகார் செய்யலாம். அந்த உரிமையை உனக்கு கொடுக்கிறேன்”
இப்படி ஒரு சட்டத்தையும், உரிமையையும் அறிவித்த பிறகு ’இந்தச் சட்டத்தை முயல் சரியாக பயன்படுத்துமா, பயன்படுத்தாதா?’ என யோசித்த பாம்பு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் முயலின் வீட்டுக்குள் புகுந்து முயலின் குட்டி ஒன்றை விழுங்கி விட்டது. பின்னர் வெளியே வந்து நின்று கொண்டது. முயல் புகார் செய்ய வருகிறதா இல்லையா என காத்திருந்தது.
நீண்ட நேரம் ஆகியும் முயல் வெளியே வரவில்லை. பாம்புக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. பொறுமையிழந்து முயலின் வீட்டுக்குள் பாய்ந்து சென்று முயலைப் பிடித்து கேட்டது.
“நான் கொண்டு வந்த சட்டத்தை நீ ஏன் பின்பற்றவில்லை?”
முயல் அமைதியாகப் பதில் சொன்னது.”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.”
பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் இப்படி அறிவித்தது:
“இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்”.
(இது ஒரு மீள் பதிவு. ‘எல்லாம் சட்டப்படிதான்’ என்னும் சீனப் பழங்கதை. தலைப்பு அதுவாகவே இப்படி மாறியிருக்கிறது!)
தமிழக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால், பழிவாங்கப்பட்டு இருக்கும் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கருக்கும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பதிவர் சங்கருக்கும் ஆதரவளிப்போம். அரசின் அடக்குமுறைக்கு நமது கண்டனங்களைத் தெரிவிப்போம். |
முதலமைச்சர் கருணாநிதிக்கு இப்படி ஒரு குத்து!
தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் பொய்களுக்கும், உண்மைக்கு புறம்பான அறிக்கைகளுக்கும் அளவில்லாமல் போய்விட்டது.
அண்மையில் உத்தப்புர தலித் மக்களுக்காக குரல்கொடுத்த சி.பி.எம் தோழர்கள் மீதும், அவர்களோடு அணிவகுத்த தலித் மக்கள் மீதும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தமிழக காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து கண்டனங்களும், பிரச்சாரமும் எழுந்தபோது போது த்மிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டார். நாளிதழ்களில் வந்திருந்தது.
மதுரையில் இந்த சம்பவம் நடந்த அதே நாளில் உத்தப்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கைய்ழுத்திட்ட பத்திரிக்கை குறிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் சொல்கிறார். ”உத்தப்புரத்தில் கடந்த சில வருடங்களாக இரு சாதி மக்களிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவிவருவதாக சில அரசியல் கட்சிகள் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் உண்மையில் உத்தப்புரத்தில் அனைத்து சாதியினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்திற்க்காகவும், சுயநலத்திற்காகவும் உத்தப்புரம் கிராமத்தை பயன்படுத்தி வருகிறார்கள். எங்களுக்குத் தேவையான அடைப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நல்ல முறையில் செய்து வருகிறது.” என அந்த பத்திரிகைக் குறிப்பு தெரிவிப்பதாகவும் சொல்லி இருந்தார்.
இரண்டு வருடங்கள் பிரச்சினையே இல்லை என்றால், இரண்டு வருடங்களுக்கும் மேலாக உத்தப்புரத்தில் காவல்துறையினரை இரவு பகலாக ஏன் வைத்திருக்க வேண்டும்? அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தருகிறது என்றால், ஏன் இன்று வரை பஸ் நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைத்துத் தரவில்லை? தலித் மக்கள் பகுதிக்குள் செல்லும் ஊரின் சாக்கடையை ஏன் மூடவில்லை?
இதையெல்லாம் மூடி மறைத்து, வெளியிட்ட முதலமைச்சரின் அறிக்கை இப்போது பொய்யோ பொய்யென அம்பலமாகியிருக்கிறது. .21.7.2010 தேதி ஜூனியர் விகடனில் உத்தப்புரம் பஞ்சாயத்துத் தலைவர் புஷ்பம் அளித்துள்ள் பேட்டி இது:
”எங்கள் ஊரில் அமைதி நிலவுறதா நான் அறிக்கை வெளியிடவே இல்லை. போலீஸ் உயர் அதிகாரி ஒருத்தர்தான் இந்த மாதிரி பேட்டி கொடுக்கச் சொன்னார். இப்படிப் பொய்யான பேட்டி கொடுத்தா, எங்க சாதி மக்களே என்னைத் திட்டுவாங்க. பேட்டி குடுத்துட்டு மருந்தக் குடிச்சிட்டுச் செத்துரவான்னு நான் நறுக்குத் தெறிச்ச மாதிரி கேட்டதும் அந்த அதிகாரி திரும்பிப் போயிட்டார். ஆனா அடுத்த நாளே பத்திரிகையில் என் பெயரில் சென்னையில் இருந்து அறிக்கை வந்துடுச்சு. என்னமோ குளறுபடி நடக்குது”.
இப்போது குளறுபடியும் தெளிவாகிவிட்டது.
குட்டும் உடைந்திருக்கிறது.
குத்தும் விழுந்திருக்கிறது!
புதிய பதிவர்கள் அறிமுகம் -3
புதிய பதிவர்களை அடிக்கடி அறிமுகம் செய்ய ஆசைதான். குறைந்தபட்சம் ஐந்து பதிவர்களையாவது அறிமுகப்படுத்த வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதிருக்கிறது. அதுதான் இந்த கால் இடைவெளிக்கு காரணமாகிறது.
இந்த பதிவில் அறிமுகமாகும் புதிய பதிவர்கள்.....
16.சித்ர குப்தன்:
மதுரையைச் சேர்ந்த இந்த பதிவரின் வலைப்பக்கம் ஒன்று சேர். இதுவரை ஒரு பதிவு எழுதியிருக்கிறார். தொழிற்சங்க இயக்கம் வலுப்பெற வேண்டிய அவசியத்தை தனது முதலாவது பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார். சமூக அக்கறையும், பார்வையும் இவரிடம் வெளிப்படுகிறது
17.prabhadamu:
ஆழ்கடல் களஞ்சியம் என்பது இவரது வலைப்பக்கத்தின் பெயர். சிங்கப்பூரில் இருக்கிறார். உடல்நலம், இயற்கைவளம், உணவுவகைகள், பெண்கள் நலம் குறித்த பதிவுகள தொடர்ந்து எழுதி வருகிறார். ஆறு மாதத்திற்குள் 200 பதிவுகள் எழுதி இருக்கிறார். தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த வலைப்பக்கத்தில் இருக்கின்றன.
18. சுடுதண்ணி:
இவரது வலைப்பக்கத்தின் பெயரும் சுடுதண்ணி தான்! இவரது பதிவுகள் தொழில்நுட்பம் சார்ந்து இருப்பது பொதுத்தன்மையாய் இருந்தாலும் சுவாரசியமாக இருக்கின்றன. விமானம், கணிணி, மென்பொருள் குறித்து பேசும் பதிவுகளில் ராஜசேகர் ரெட்டி மரணம், மங்களூர் விமான விபத்து, கண்ணியில் தொடர்ந்து இயங்குபவர்களுக்கான பிரச்சினைகள் என ஆராய்வதாக பதிவுகள் இருக்கின்றன.
19. கோபி:
கவிதை என்பதுதான் இவரது வலைப்பக்கத்தின் பெயரும். திருச்செங்கோட்டுக்காரர். ஹைக்கூ கவிதைகளாக பொழிந்து கொண்டு இருக்கிறார். சில நல்ல கவிதைகளை தவறவிட முடியாது.
‘’நிலவுக்குள்
நட்சத்திரம் - என் அன்பியின்
மூக்குத்தி.’’ என்கிறார்.
20. சுப்புராஜ்
சென்னையில் வசிக்கும் கட்டிடப் பொறியாளரான இவரது வலைப்ப்க்கம் சில்வியாமேரி. நாற்பதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். பெரும்பாலும் சிறுகதைகள்தாம். நடப்புச் செய்திகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் நேரிடையாகச் சொல்வதாக இருக்கின்றன.
21. பார்வையாளன்:
இவரது வலைப்பக்கம் பிச்சைக்காரன். நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். வினைகளும், எதிர்வினைகளுமாய் இவரது பதிவுகளில் விவாதங்களுக்கான வெளி இருக்கிறது. சினிமா , இலக்கியம், நடப்புச் செய்திகள் என இவரது பார்வைகள் படர்ந்திருக்கின்றன.
22. ராகவேந்திரன்:
துர்வாசர் என்னும் வலைப்பக்கத்தை கொண்டு இருக்கும் இவர் 2008ல் இருந்து பதிவுலகில் இயங்கி வந்தாலும் மிகச் சொற்பமாகவே எழுதி இருக்கிறார். ஆக்டோபஸ், போலி மதிப்பெண் சான்றிதழ், சமீபத்திய ஜெயமோகன் கட்டுரை குறித்து என இப்போது தொடர்ந்து எழுதுகிறார்.
பதிவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரவேற்போம். ஆதரவளிப்போம்.
(புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை jothi.mraj@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தீராத பக்கங்களில் அறிமுகப்படுத்த முடியும்.)
ஆக்டோபஸ் பற்றி கிளி சொல்லும் குறிப்புகள்
பத்திரிகையை விரித்து, அந்த ஆக்டோபஸை தன் கிளியிடம் காட்டி, “நீயும் இருக்கிறாயே” என்று எரிச்சல்பட்டான் ஜோஸ்யக்காரன்.
“எளிதாகவும், அதிகமாகவும் கிடைப்பவைகளுக்கு இந்த உலகத்தில் மதிப்பில்லை” என்றது கிளி.
“தத்துவம் போல உளறாதே. எத்தனை காலமாய் நீயும் சீட்டு எடுத்துப் போடுகிறாய். இதோ பார், ஒரேநாளில் எங்கேயோ போய்விட்டது!”
“எங்கே போய்விட்டது ஐயா?. அது கண்ணாடி நீர்த்தொட்டிக்குள் இருக்கிறது. நான் இந்த கம்பிக் கூண்டிற்குள் இருக்கிறேன்!”
“இது ஒரு சமாதானமா? ஆக்டோபஸுக்கு அப்படி ஒரு ராஜ மரியாதையும், உபச்சாரமும் கிடைக்கிறதாம்.”
கிளி வாய்விட்டு சிரித்தது. ”எனக்கு கிடைக்கும் சில நெல்மணிகள் போல அதற்கும் கொஞ்சம் உணவு. வேறென்ன்?”
“இந்த வாய்க்கொன்றும் குறைச்சல் இல்லை. அதற்கு இன்று எப்படிப்பட்ட பேர் தெரியுமா?. எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள்”
“காலம் காலமாய் என்னைப் பற்றி எத்தனை பாடல்கள் காற்றில் மிதந்து கொண்டு இருக்கின்றன. உலகத்து இலக்கியங்கள் எல்லாம் என்னைப் பேசிக்கொண்டு இருக்கின்றன. அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா?”
கிளி ஜோஸ்யக்காரன் அமைதியானான்.
“வருத்தப்படாதீர்கள் ஐயா! ஆக்டோபஸ் வெற்றி பெற்றவர்கள் பக்கம் இருக்கிறது. நீங்களும் நானும் தோற்றவர்கள் பக்கம் இருக்கிறோம்.”
இருண்ட முகங்கள்
வீட்டில் ஒரு டார்சலைட்டை யார் கண்ணிலும் படாமல் அவன் வைத்திருந்தான்.. இருள் சூழ்ந்த சமயங்களில் உடனடியாக அதை எடுத்துக் கொள்வான்.
விளையாட்டாய் வெளிச்சத்தை கையால் பொத்தியபோது, அவனாலேயே நமப முடியாமல் விரல்கள் செந்நிற இளம் தண்டுகளாய் ஒளிர்ந்தன. திரும்பத் திருமப அந்த அழகை பார்த்துக் கொண்டான். அப்படியே தன் முகத்தில் வெளிசசம் அடித்து கண்ணாடியில் பார்த்தபோது அவனே பயப்படும் அளவுக்கு விகாரமாக இருந்தது. இன்னொருமுறை தன்னை அப்படிப் பார்க்க விருப்பமே இல்லை. அடுத்தவர்கள் முகத்தில் வெளிச்சத்தை பாய்த்து, அவர்கள் கண்கள் கூசிப் போய், தங்கள் முகத்தைப் பொத்திக்கொள்வதைப் பார்ப்பதில் அலாதியான சுகம் வந்தது.
தேவைப்பட்ட இடத்தில் தேவைப்பட்ட நேரத்தில் வெளிச்சம் அடிக்கவும், தன்னை இருட்டில் வைத்துக்கொண்டு அடுத்தவர்கள் மீது பிரயோகிக்கவும் டார்ச் லைட்டில் ஏற்பாடு இருப்பதை அறிந்து கொண்டான். வெளிச்சம் தன்னிடம் மட்டுமே இருப்பதாய் பாவித்துக்கொண்டான்.
நாளாக, நாளாக அவனுக்கும் அந்த உண்மை தெரிந்து போனது. வீட்டில் எல்லோருமே ரகசியமாக அவரவர்க்கென்று ஒரு டார்ச் லைட் வைத்திருந்தார்கள்.
முகம் இருண்டு போனது.
(பி.கு: முன்னர் கவிதை போல எழுதிய ஒன்றை சரிசெய்து பார்த்தபோது இப்படி வந்திருக்கிறது)
வம்பரங்கம் -1
காலையில் விநாயகமுருகனின் ‘சிரிப்பு வருது’ கவிதையைப் படித்தாலும் படித்தேன், இன்று முழுவதும் நகைச்சுவை மிக்க காட்சிகளும், செயுதிகளும், அரட்டைகளும் அதிகமாகவேப் போய்விட்டது..
கவிதையைப் படித்த சிறிதுநேரத்தில் தினகரன் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் இப்படியொரு செய்தியோடு இந்தப் படங்களையும் படிக்க நேர்ந்தது.
சென்னை அண்ணா நகரில் புதுப்பிக்கப்பட்ட விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்காவை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பந்துவீச, துணை முதல்வர் ஸ்டாலின் உற்சாகமாக பேட் செய்வதை பிரமுகர்கள் ரசிக்கின்றனர்.
![]() | ![]() |
’பிரமுகர்களோடு’ இப்போது நீங்களும் இதனை ரசித்திருப்பீர்கள்.
சரி, இந்த அற்புதமான ஆட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் தமிழில் நேரடி வர்ண்னை செய்தால் என்ன சொல்வார்?
ஆட வர்றீங்களா?
மாதவராஜ் பக்கங்கள் -25
நமது அன்பு பதிவரும் என் பிரிய மக்காவுமான் பா.ராஜாராம், எனக்கு அவ்வப்போது இடும் அன்புக் கட்டளை ஒன்று உண்டு. கட்டளை என்று சொல்லக் கூடாது. கோபப்படுவார். ஆசையெனக் கொள்வோமே. இலக்கிய ரீதியான பதிவுகளில் இன்னும் நான் தீவீரமாய் இயங்க வேண்டும் என்பதுதான் அது. சர்ச்சைகள், பிரச்சினைகள், அரசியல் என இறங்கி பகிரங்கமாய் என் கருத்தை வெளியிடும் போதெல்லாம் அவருக்கு அயற்சி வந்துவிடும். “என்ன மாது! அடங்கேன்” என உரிமையுடன் தோளில் கை போட்டுச் சொல்வார். அந்த நேரம் சிறு எரிச்சல் வந்தாலும், பிறகு புன்னகையையும், பிரியத்தையும் வாரிக்கொள்கிற ஸ்பரிசம் அது. அவரது எழுத்துக்களைப் போலவே .வாழ்வின் லயம் இசைத்துக் கொண்டு இருக்கும் மனிதர் அவர்.
ஒவ்வொரு பிரச்சினையும், ஒவ்வொரு அனுபவமாகிற்து. கணங்கள் ஒவ்வொன்றும் நமக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கின்றன. அவைகள் உடனடியாகவோ, கால இடைவெளியோடோ நம்மிடமிருந்து வெளிப்படுகின்றன. இந்த உடனடி வினைக்கு, எதிர்வினையும் உடனடியாக இருக்கின்றன. அவைகளுக்கு நோக்கங்களும், உள்நோக்கங்களும் இருக்கின்றன அல்லது கற்பிக்கப்படுகின்றன. இலக்கியப் பார்வை, புரிதல் தாண்டி அங்கு அரசியல் அதிகம் அறியப்படுகிறது. எனது சில சொற்சித்திரங்களுக்கு அந்த நிலைமை ஏற்பட்டுள்ளதை அறிவேன். இன்னும் சில காலம் தாண்டி அவை பேசப்படும், கவனிக்கப்படும் என்பதையும் அறிவேன்,
காலத்தில் ஊறி வெளிப்படும் எழுத்துக்கள் எல்லோருக்கும் வசீகரமானதாகிறது. அதில் ஒரு நிதானமும், பக்குவமும் இருக்கிறது என்பதையும் சொல்லவேண்டும். அதைத்தான் மக்கா பா.ரா எழுத வேண்டும் என ஆசைப்படுகிறார் போலும். அப்படி எழுதிய சில சமீபத்திய பதிவுகள் இலக்கிய ஆளுமைகளால் கவனிக்கப்பட்டு இருக்கின்றன, பாராட்டப்பட்டு இருக்கின்றன் என்பதையும் பார்க்கிறேன்.
அற்புதமான நாடகக் கலைஞரும், குறும்பட (பாப்பம்பட்டி ஜமா) இயக்குனருமான கருணா அவர்கள் ‘பால்ய ருசி’யை அனுபவித்து பின்னூட்டமிட்டு இட்டிருந்தார்.
தீராத விளையாட்டுத் தாத்தாவை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அற்புதமான சிறுகதை படித்தது போலிருக்கிறது என்றார். தமிழ் படைப்புலகில், ஆண் பெண் உறவு குறித்து அக்கறையாகவும் , ஆரோக்கியமாகவும் எழுதுகிற மிகச்சிலரில் அவரும் ஒருவர் என்பதால் எனக்கு சந்தோஷமாயிருந்தது.
இது போதாது என்று, இன்று காலை எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் “தீராத விளையாட்டுத் தாத்தாவை படித்தேன். மாது! நீங்கள் நாவல் எழுதும் நேரம் வந்திருக்கிறது என நினைக்கிறேன்” என்றார். என்ன பேச என்று தெரியாமல் நெகிழ்ந்து போனேன். சாய்ங்காலம் வீட்டுக்கு வந்தால் எழுத்தாளர் வண்ணதாசனின் மெயில் ஒன்றும் வந்திருந்தது. அவருக்குத்தாம் எழுத்துக்களும், அர்த்தங்களும், எப்படி வசப்படுகின்றன!
இதுதான் அந்தக் கடிதம்:
அன்புமிக்க மாதவராஜ்,
வணக்கம்.
வயதாகி வந்த காமம் சித்திரத்தைத் தாண்டிச் செல்கிறது இந்த தீராத விளையாட்டு.. கணபதி தாத்தாவாக நான் இருக்கிறேன். அவர் வாங்கிவைத்திருக்கிற ராஜேஸ்வரியின் மகளுக்கான் பொம்மையாகவும் நானே இருக்கிறேன்.
இறந்து போன உறவினரின் ட்ரங்குப் பெட்டியைத் திறந்து பார்க்கிற நேரத்தில், அந்த இறந்துபோன மனிதனின் மொத்த வாழ்வையும் அல்லவா நாம், சம்பந்தத்துடனும் சம்பந்தமின்றியும் திறந்து பார்க்க நேர்கிறது. எங்கள் தாத்தா இறந்துபோன பின் திறந்து பார்த்த அவருடைய மரப் பெட்டியில் இருந்த எத்தனையோ பழுப்புக் காகிதங்களில் எனக்கு ரொம்பப் பிடித்தவை அவர் வேலைபார்த்த UPASI என்று மயில் படம். பதிக்கப்பட்ட தேயிலைத் தோட்ட அலுவலகம் சார்ந்த வெற்று உறைகளும், ஒரு மாட்டு வாகடப் புத்தகமும் தான்.
தாத்தாவுக்கு பசு மாடுகள் பிடிக்கும். தாத்தாவின் வாடை தொழுவிலும், தொழுவின் வாடை தாத்தாவிடமும் அடிக்கும். தாத்தா இறந்த பிறகு ஒரு பசுவுக்கு நானே பேறுகாலம் பார்த்தேன். ஒரு கன்றுக்குட்டி முன்கால்கள்
மேல் முகம்பதிய இந்த மண்ணுக்கு வருகிற நேரத்தின் அற்புதம் இன்னும் என்னை,பார்க்கிற ஒவ்வொரு கன்றுக்குட்டியையும் தடவிக்கொடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தோல் கண்ணுக் குட்டிகள் பற்றிச் சொல்ல வேண்டும் எனில் அது இன்னொரு துயரக் கதை.ஏசுவைத் தச்சனின் மகன் என்கிறார்கள். அந்த வகையில் தாத்தா ஏசுவின் தகப்பனாக இருக்கத் தகுந்தவர். மாட்டுக்கும் கன்றுக்குட்டிக்கும் புண்ணாக்குத் தண்ணீர் வைக்கிற தொட்டிகளை அவரே செய்வார். அழகழகான மரப்பட்டைகளால் ஆன அந்தத் தொட்டிகளின் நேர்த்தியும், கன்றுக்குட்டிகள் குனிந்து அருந்தும் உயரத்தில் அவர் அதைச் செய்திருக்கிற கச்சிதமும் நான் ஏதாவது ஒரு கதையெழுதும்போது பிடிபட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எங்கள் தாத்தாவுக்கும் கிளி போல ஒரு பொண்டாட்டியும் குரங்கு போல வைப்பாட்டியும்’ உண்டென்று சொல்வார்கள். கிளி தன் எணபது வயது வரை எங்களுக்குப் பழம் கொடுத்து விட்டே பறந்து போனது. நான் கடைசிவரை அந்தக் குரங்கைப் பார்க்கவே இல்லை. நிச்சயம் அதுவும் பழம் தரும்படியாகவே இருந்திருக்கும்.
கடிதம் படித்த உற்சாகத்தில் அவருக்கு போன் செய்து பேசினேன். “அதிகம் பேசாதீர்கள் எழுதுங்கள் மாது!” என்றார்.
ஆகட்டும் அப்படியே.... கண்பதி தாத்தாவோடு நான் பேச ஆரம்பிக்கிறேன்!
தீராத விளையாட்டுத் தாத்தா
”ஏலே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு இங்க. போய் வெளையாடுங்க.. இல்லன்னா வீட்டுக்குப் போய்ப் படுங்க.” சத்தம் போட்டார்கள். ஓடுவதுமாய், பிறகு கொஞ்ச நேரம் கழித்து எதாவது சந்து பொந்து வழியாக பொன்னாச்சி வீட்டுத் திண்ணைப் பக்கம் போய் நிற்பதுமாய் இருந்தோம். பத்துப் பனிரெண்டு வயசுதான் இருக்கும் எனக்கு. ஆணுக்கும் பெண்ணுக்குமான விவகாரம் ஒன்றை நடுத்தெருவில் வைத்து அந்த இரவில் கூட்டம் கூட்டமாய் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
”இப்ப என்னவே சொல்றீரு, காந்தியக் கல்யாணம் செஞ்சுக்கிறீரா?” கூட்டத்தில் ஒருவர் அதட்டலாகவும், நக்கலாகவும் கேட்டார். பெண்கள் பக்கமிருந்து கிண்டலும், சிரிப்புச் சத்தங்களும் பொங்கின. யாரையும் பார்க்காமல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார் கண்பதி தாத்தா. இன்னொரு பக்கம் காந்தியக்காவும் உடகார்ந்திருந்தார்கள். எப்போதும் சிரித்துக் காட்சியளிக்கும் காந்தியக்காவின் முகம் விறைத்துப் போயிருந்தது. “அவளையும் கேளுங்க” என்றார்கள் யாரோ. “காந்தி, நீ என்ன சொல்ற?” என்றார்கள். அந்த இடம் அமைதியானது. “நா இவரயே கல்யாணம் பண்ணிக்குறேன்” என்றார்கள் அமைதியாக. “ஐயோ!” என்று காந்தியக்காவின் புருஷன் தலையிலடித்துக் கொண்டு எங்கோ ஒடினான். அவனைச் ச்மாதானப்படுத்த் சிலர் ஓடினார்கள்.
“கல்லுக் கணக்குல புருஷன் இருக்கான், போயும் போயும் இந்தக் கெழவனைப் புடிச்சிருக்காப் பாருங்க”, “என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு!”, ”அப்படி என்னதான் இவரு செஞ்சாராம்?”, “இந்தக் கெழவன் இருக்குற பவுசுல கொமரில்லா கேக்குது”. அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். வேல் தாத்தாவுக்கு சரியாக காது கேட்காது. பக்கத்திலிருப்பவர்களிடம், “அவன் என்ன சொல்றா?”, “அவ என்ன சொல்றா” என விசாரித்து முடித்து “ச்சீ செருக்கியுள்ள” என ஒரு பாடு தீட்டித் தீர்த்தார்கள். உள்ளே தலையெட்டி,, பொன்னாச்சியப் பார்த்து “ஏளா, ஒந்தம்பியப் பாத்தியா” என்று வயிற்றெரிச்சலைக் கொட்டினார்கள். பொன்னாச்சி தலையிலடித்துக் கொண்டார்கள்.
அதற்குமேல் கூட்டத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காந்தியக்காவின் வீட்டிற்குள் கண்பதி தாத்தா செல்வதை சிலர் பார்த்திருக்கிறார்கள். பிடித்துக்கொண்டு வந்து இந்தத் திண்ணையில் உட்காரவைத்து ஆள் ஆளாளுக்குப் பேசி தீர்த்தபடி இருந்தார்கள். வேல் தாத்தா கூட்டத்தாரிடம் “முதலூருக்குப் போயி கண்பதியோட பொண்டாட்டியையும், மவ, மருமவன் எல்லோரையும் கூட்டிட்டு வாங்க. இன்னிக்கு ராத்திரி கல்யணாம் பண்ணி வசிருவோம்” என்றார்கள். காரை அமர்த்தி முதலூருக்குப் புறப்பட்டார்கள். எப்படியும் அவர்கள் திரும்பி வருவதற்கு இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகும் என்றார்கள். சுவாரசியமான அந்தக் காட்சி எப்படி இருக்கும் என அவரவர்கள் விவரித்துக்கொண்டு இருந்தார்கள்..
“போதும்.வீட்டுக்குள்ள வந்து படு” அம்மா என்னை கண்டிப்பான குரலில் சத்தம் போட்டார்கள். மனமில்லையென்றாலும், அதற்கப்புறம் வேறு வழியில்லை. அம்மா, பொன்னாச்சி, இன்னும் சில பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். கண்பதி தாத்தாவுக்கு ஏற்கனவே பல கல்யாணங்கள் இதுபோல் நடந்திருப்பதும், கரட்டுக்காட்டுவிளை ஆச்சி, தனது புருஷன் கண்பதி தாத்தாவோடு சேர்ந்து வாழ்ந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன என்பதும் அன்றைக்குத்தான் தெரிய வந்தது. ஐந்து பெண்களுக்கு மத்தியில் தன்னோடு ஒரே ஆணாகப் பிறந்த ஆசைத்தம்பியின் செய்கைகளால் துடித்துப் போயிருந்தார்கள் பொன்னாச்சி. தன் அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் எங்கள் அம்மா.
காலையில் திண்ணை வெறிச்சென்று இருந்தது. கூட்டமும், சத்தமுமாக இருந்த தெரு அமைதியாக இருந்தது. பெண்கள் குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். என்ன நடந்தது என்பதை யாரிடமும் கேட்க முடியவில்லை கரட்டுக்காட்டுவிளை ஆச்சியோடு பேசிக்கொண்டே வெற்றிலையிடித்துக்கொண்டு இருந்தார்கள் பொன்னாச்சி. அங்கங்கு பெரியவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து விஷயம் விளங்கியது. இரவில் கரட்டுக்காட்டுவிளை ஆச்சியும், கண்பதி தாத்தாவின் மகளும் வந்திருந்தார்களாம். மண்ணள்ளிப் போட்டார்களாம். விளக்குமாத்தால் கண்பதி தாத்தாவை அடித்தார்களாம்.. கண்பதி தாத்தாவும், காந்தியக்காவும் தங்கள் பழக்கத்தை விட்டுவிடமென்று சொல்லி கூட்டம் கலைந்து இருக்கிறது.
கரட்டுக்காட்டுவிளை ஆச்சி அவ்வளவு அமைதியாகவும், லட்சணமாகவும், சின்ன உருவமாகவும் இருப்பார்கள். “என்னப்பூ எப்படியிருக்கே” என்று எங்களை அருகில் அழைத்து உச்சி முகரும்போது உருகிப் போவோம். பொன்னாச்சியும், கரட்டுக்காட்டுவிளை ஆச்சியும் ஒரே ஊர்தான். வேலைகள் எல்லாம் முடித்து சாப்பிட்ட பிறகு இருவரும் உள்முற்றத்தில் உட்கார்ந்து பேசும் பால்யகாலக் கதைகளை திகட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தங்களுக்கு அவர் வேண்டவே வேண்டாம் என்று கரட்டுக்காட்டுவிளை ஆச்சியும் அவரது மகளும் அன்றைக்கு சாயங்காலம் போய்விட்டார்கள்.
நெல் அவிக்க, வீட்டு வேலைகளில் பொன்னாச்சிக்கு ஒத்தாசைகள் செய்ய காந்தியக்கா வரவில்லை அப்புறம். கணபதி தாத்தா குனிந்த தலை நிமிராமல் பக்கத்தில் உள்ள தாரங்கதாரா கெமிக்கல்ஸில் வேலைக்கு போய்வந்து கொண்டு பொன்னாச்சியின் வீட்டில்யே இருந்தார். பொதுவாகவே யாரோடும் பேசிக்கொள்ளாத அவர் மேலும் ஒடுங்கிப் போயிருந்தார். அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் நாங்கள் சென்று “ஓல்டெல்லாம் கோல்டு” என்று ‘ஓடி விளையாடு தாத்தா’ படத்தில் வரும் பாட்லை சத்தமாய் பாடுவோம். அவரோ கன்னத்தில் கைவைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டு இருப்பார்.
சில மாதங்களில் ஆச்சி வீட்டிற்கு அவரது வரத்து குறைந்து போனது. இடையில் சில நாட்கள் வராமல் “ஒவர் டைம்’ என்றவர், பிறகு வாரக் கணக்கில் வராமல் இருந்தார். என்ன ஏது என்று விசாரித்ததில் ஆத்தூர் அருகே யாரோ ஒரு பெண்ணுடன் வீடு பிடித்து வாழ்ந்து வருவதாக தெரிய வந்திருக்கிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என விட்டுவிடார்கள். கூடி கூடிப் பேசிக் கிடந்த ஊரும், தெருவும் மறந்து போனது.
வருடங்கள் கழித்து, ஆறேழு வயதில் ராஜேஸ்வரி என்னும் ஒரு பெண் குழந்தை, ஐந்து வயதில் நடராஜன் என்னும் ஒரு ஆண் குழந்தையுடன் பொன்னாச்சி வீட்டிற்கு கண்பதி தாத்தா வந்தார். அப்போது நான் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டு இருந்தேன். “எவ்வளவு வளந்துட்டான்” என என் கையைப் பிடித்தார். மெல்ல விலக்கிக்கொண்டு நின்றேன். கண்பதி தாத்தா வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாராம். அவருடன் வாழ்ந்த பெண், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனுடன் சென்றுவிட்டாளாம். ஆத்திரமும், அழுகையுமாய் இருந்தார்கள் ஆச்சி. ‘அவன வெளியே போகச் சொல்லு’ என வேல் தாத்தா கத்தினார்கள். கணப்தி தாத்தா தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு குழந்தைகளும் அவர் அருகிலேயே நின்றன.
வீட்டு வேலைகளை செய்துகொண்டு, முக்காணியில் இருந்த ரைஸ்மில்லை மேற்பார்வை செய்துகொண்டு ஆச்சி வீட்டிற்கு விசுவாசமானார் கண்பதி தாத்தா. அருகில் உளள் பள்ளியில் குழந்தைகள் படித்தன. ஜிப்பா, வேட்டியெல்லாம் எங்காவது வெளியில் போனால்தான். பண்டிகை, விசேஷங்களின் போது சொந்த பந்தம் என வீடு முழுவதும் நிறைந்திருக்க, கண்பதி தாத்தா வளவுக்குள் போய் மாடுகளுடன் இருப்பார். எங்காவது ஒரு சுவரில் சாய்ந்து முதுகைச் சொறிந்து கொண்டு இருப்பார். கூப்பிட்டால் வந்து நிற்பார். கரட்டுக்காட்டுவிளை ஆச்சி அவரை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.
வேல் தாத்தா இறந்த பிறகு நடந்த ஒரு கோவில் விசேஷத்தின் போது பொன்னாச்சியின் வீட்டில் கூடமாட வேலை செய்யும் இளம்பெண் ஒருத்தி தென்பட்டாள். கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த எனக்கு அந்தப் பெண் அப்படியொரு வனப்பும், இளமையுமாய் தெரிந்தாள். ரைஸ்மில்லில் வேலை பார்க்கிறவளென்றும், இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருப்பாளென்றும் சொன்னார்கள். அவளை அங்கங்கு நின்று பார்ப்பதும், ரசிப்பதுமாய் ஒரு கிறக்கத்தில் அந்த கோயில் விசேஷம் கழிந்தது. அவளது சிரிப்பும் பார்வையும் என்னிடம் தங்கியிருந்தன.
ரைஸ்மில்லிலேயே பெரும்பாலும் தங்கியிருக்க நேர்ந்த கண்பதி தாத்தா அந்தப் பெண்னையும் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டாரென்று யாரோ சொன்னார்கள். ஆச்சரியத்தோடு எரிச்சலும் வந்தது.. “இங்க வேல செய்ய வந்துருக்கும்போதே பாத்தேன். அவ நிக்கிறதும், பாக்குறதும் சரியில்லாமாத்தான் இருந்தது “ என்று ஆச்சி சொன்னார்கள். “ஆமா, ஒங்க தம்பி ஒரு மன்மதக்குஞ்சு, அவதான் மயக்கிட்டா. போங்கம்மா.” என அம்மா சத்தம் போட்டார்கள். அந்த விஷயத்தை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெண்ணுக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு ஆச்சி “ ஏளா, ராஜேஸ்வரி ஒனக்கு இன்னொரு தம்பி பொறந்திருக்கனாம்ல” என்று கேலி செய்து கொண்டிருந்தார்கள். படிப்பதை நிறுத்தி, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த பத்துப் பனிரெண்டு வய்தில் ராஜேஸ்வரி, புரிந்தும் புரியாமல் நின்றாள். கைக்குழந்தையோடு ரைஸ்மில் பெண்ணும் கணபதித் தாத்தாவை விட்டு இன்னொருவனுடன் போய்விடத்தான் செய்தாள்.
ரைஸ்மில் விற்கப்பட்டது. ராஜேஸ்வரிக்கு திருமணமாகி வேறொரு ஊருக்குச் சென்று விட்டாள். நடாஜன் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான். நான், அண்ணன் தம்பி வெவ்வேறு ஊர்கள் என்றானோம். என் தங்கை அம்பிகாவுக்கும், அவள் காதலித்த மாமன் மகன் மோகனுக்கும் திருமண்மாகி பொன்னாச்சி வீட்டிலேயே வசித்து வந்தார்கள். ஆச்சிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. காலங்கள் ஒடிக்கொண்டு இருந்தன.
ஆச்சியின் கடைசி நேரங்களில், “அக்கா, அக்கா” என கண்பதி தாத்தா பரிதவித்துக் கொண்டிருந்தார். அவரது குரலில் இளகியிருந்த பாசம் வேதனை நிறைந்ததாயிருந்தது. கரட்டுக்காட்டுவிளையாச்சியும், அவரது மகளும் அதற்கப்புறம் கூட கண்பதி தாத்தாவை ஊருக்கு அழைத்துச் செல்லவில்லை. ‘என் அக்கா வாழ்ந்த வீட்டிலேயே நானும் இருந்து செத்துப் போகிறேன்” என்று கண்பதி தாத்தா அங்கேயே இருந்துகொண்டார். அம்பிகாவிடம் சோறு சாப்பிட்டுக்கொண்டு, முடிந்த வீட்டு வேலைகள் செய்துகொண்டு, வீட்டின் எதாவது ஒரு மூலையில் தன்னை சாத்திக்கொண்டு இருப்பார். ஆட்களும், பேர்களும் புழங்கி அடங்கியிருந்த வீட்டில், யாரோ பேசுவதைக் கேட்பது போல சுவரில் காதை வைத்து கிடப்பார். எப்போதாவது தனது மகள் ராஜேஸ்வ்ரியைச் சென்று பார்த்து ஒன்றிரண்டு நாட்களில் திரும்பி வந்துவிடுவார்.
ஒரு மத்தியானம் கடைக்கு எதோ சாமான் வாங்கப் போனவர் பின்னால் ஓடிவந்த மாடு அவரது இடுப்புப் பகுதியில் முட்டித் தள்ளியிருக்கிறது. எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் இருநது வந்தவரால் எழுந்து நடக்க முடியவில்லை. வயதும் எண்பது கிட்ட இருக்கும். க்ரட்டுக்காட்டுவிளை ஆச்சி அப்போதும் வந்து பார்க்கவில்லை. அம்பிகாதான் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.. வளவில் ஒரு கயிற்றுக் கட்டிலிலேயே வாழ்க்கை அவருக்கு சுருங்கியிருந்தது. மல்லாந்து படுத்துக் கிடந்தவர் முகத்தில் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்திருக்கிறது... சில மாதங்கள் அப்படியே இருந்தவர் ஒருநாள் இறந்து போயிருக்கிறார். உடல் அவரது சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறது.
அவர் எப்போது இறந்தார் என்பது எனக்குத் தெரியாது.. அம்பிகாதான் பிறகு ஒருநாள் எல்லாவற்றையும், அவள் வீட்டிற்கு சென்றிருந்தபோது, குரல் தழுதழுக்க சொல்லிக்கொண்டு இருந்தாள். “ராஜேஸ்வரி மகளுக்கு ஒரு பொம்மை வாங்கி வைத்திருந்திருக்கிறார், அவர் பெட்டியிலிருந்தது” என்று சொல்லும்போது வாய்விட்டு அழுதாள்.
நாற்ப்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கண்பதி என்கிற ஒரு மனிதரைப் பற்றிய எனது நினைவுகளின் தொகுப்பு. இது. கரட்டுக்காட்டுவிளையாச்சிக்கு மாறாமல் தெரிந்த அவர் எனக்கு ஒவ்வொரு காலத்திலும் வேறு வேறு மனிதராகவே தெரிந்திருக்கிறார் என்பது எழுதும்போது புரிகிறது.. கிண்டல், கேலி, கோபம், வெறுப்பு படிந்த ஒரு மனிதர் இத்தனை காலத்துக்குப் பிற்கு ஒரு புதிராகத் தெரிகிறார்.
பெண்களைச் சீண்டுவது, தொந்தரவு செய்வது என்றெல்லாம் யாரும் சொல்லி அவரைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. மதம் மாறி, ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்து கொண்டது உட்பட இருயதுக்கும் மேலான திருமணங்கள் செய்து வாழ்ந்திருக்கிறார். அந்தப் பெண்களும் இவரைவிட்டு இன்னொருவருடன் வாழச் சென்றிருக்கிறார்கள். பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆண்கள் யாருடனும் இயல்பாக பேசாத மனிதர் அந்தப் பெண்களோடு என்ன பேசியிருப்பார்! கலகலப்பாக சிரித்தே பார்த்தறியாத ஒரு மனிதரிடம் அந்த பெண்கள் எப்படி பழகியிருப்பார்கள்! பொன்னாச்சி, கரட்டுக்காட்டுவிளையாச்சியும் அவ்வளவு பால்யகாலச் சினேகிதிகளாயிருந்தும் கண்பதி தாத்தா மீது இருவரும் கொண்டிருந்த பார்வைகள் முற்றிலும் மாறிப் போனதற்கு நம் குடும்ப அமைப்புகள் மட்டும்தானா காரணம்? காந்தியக்காவின் புருஷன் பிறகு என்ன ஆகியிருபபான்?
யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.. தன் அண்னனின் மனைவி ஜமீலா, அந்த நாடோடி தானியாரின் பாடலில் கரைந்து, அவனோடு கலந்து ஸ்டெப்பி புல்வெளி தாண்டி ஓடிய சித்திரத்தை சிறுவனாக மனதில் இருத்தி, பிறகு சிங்கிஸ் ஐத்மத்தாவ் எழுதிய நாவல் வாழ்க்கையை எவ்வளவு அழகாக்குகிறது. இப்போது என்னிடம் சில சித்திரங்கள் இருக்கின்றன.
காதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்!
கவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்டமாக நிகழ்த்தி வருகின்றனர். இதனைக் கண்டித்தும். இத்தகைய கொலைகள் நடைபெறாமல் தடுப்பதற்கும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்ற சூழ்நிலையில், இந்து திருமணச்சட்டத்தில் உள்ள ஒரே ரத்தம் சம்பந்தமான உறவுமுறைக்குள் திருமணம் செய்துகொள்வதற்கு தடை கொண்டுவர வேண்டுமெனக்கூறி சாதி மறுப்பு திருமணத்திற்கும், காதல் திருமணத்திற்கும் ஆதரவாக மகாராஷ்ராவிலுள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
வர்ணாசிரமக் கொடுமையை உயர்த்திப்பிடிக்கும் பிற்போக்கு இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ்., பாஜக, சிவசேனா, மற்றும் நவநிர்மாண் சேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்திலிருந்து சுமார் 200 கி.மீ.தொலைவிலுள்ள கிராமம் காரன்ஜி. சந்திரபூர் மாவட்டத்தில் இக்கிராமம் உள்ளது. இச்சிறு கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டுச்சுவர்களுக்கும் இளம் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு நம்பிக்கையுடன் வருகின்ற காதலர்களை வரவேற்பதற்காக காதலர்களின் வண்ணக்குறியீடாம் இந்த இளம்சிவப்பு.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 காதல் திருமணங்களை இக்கிராம மக்கள் நடத்திவைத்துள்ளனர்.அதிலும் குறிப்பாக இத்திருமணங்களில் வெவ்
வேறு சாதிகளை சார்ந்த மணமகன், மணமகள் என்ற சாதி மறுப்பு திருமணங்களே அதிகமாகும்.இந்த எண்ணிக்கையானது படித்தவர்கள் இருக்கும் நகர்ப்புறங்களில் நடக்கும் திருமணங்களை விட அதிகமானதாகும். இக்காதல் திருமணங்களை எதிர்க்கும் பழைமைவாதிகள் ஒரு கும்பலாக இருந்து கொண்டு அவ்வப்போது இத்திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அத்தயை முட்டுக்கட்டைகளை புறம்தள்ளி, சாதி மறுப்பு திரும
ணங்கள் நடத்திவைக்கப்படுகின்றன.
கடந்த 2005 ம் ஆண்டு அசோக் கர்பள்ளிவர் மற்றும் அவரது காதலி மீனாட்சி துள்மலி ஆகிய இருவரும் பக்கத்து கிராமத்திலிருந்து வந்து காரன்ஜீ கிராமத்திலுள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அசோக் கர்பள்ளிவர், கும்பர் என்ற சாதியினை சார்ந்தவர். மீனாட்சி துள்மலி தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர். எனவே இத்திருமணத்தை இவ்விரு குடும்பத்தை சார்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இவர்களை கொல்வதற்காக ஆயுதங்களுடன் காரன்ஜி கிராமத்திற்கும் வந்தார்கள். ஆனால் இக்கிராமமக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக திரும்பிச் சென்றனர்.
அசோக் கர்பள்ளிவர் மற்றும் மீனாட்சி துள்மலி மணமக்களுக்கு காரன்ஜி மக்கள் வீடு மற்றும் வேலை அளித்து தங்கள் கிராமவாசிகளாகவே மாற்றிவிட்டனர். சிலநாட்களுக்குப் பிறகு அவர்களுடைய பெற்றோர்களுடன் பஞ்சாயத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இரு குடும்பத்தையும் இணைத்து வைத்துனர். இன்று அவர்களுடைய இரு பெண்குழந்தைகளும் படிப்பதற்காக காரன்ஜி கிராமப்பள்ளிக்கூடத்திற்கு சென்று வருகின்றன என்று அக்கிராமப்பஞ்சாயத்தின் துணைத்தலைவர் துகாஸ் பட்ருஜீ வானாடி பெருமையுடன் கூறுகிறார்.
குறிப்பாக அசோக் கர்பள்ளிவர் மற்றும் மீனாட்சி துள்மலி ஆகியோரின் திருமணத்திற்கு பிறகு பல காதல் திருமணங்களும், சாதி மறுப்பு திருமணங்களும் செய்து வைக்கப்பட்டுள்ளன. இப்பொழுதெல்லாம் அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து மட்டுமின்றி, உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலிருந்தும் வந்து எங்கள் கிராமத்தில் திருமணம் செய்கின்றனர். அத்தகைய காதலர்களின் குடும்பத்தினருடன் முதலில் பேச்சு வார்த்தையின் மூலம் சமாதானப்படுத்துகிறாம். சிலநேரங்களில் இத்தகைய முயற்சி வெற்றி பெற்று அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யப்படுகிறது,
அதேநேரத்தில், குடும்பத்தினரால் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகும் காதலர்களுக்கு ஒருசாதியை சார்ந்த மக்களின் சார்பாக திருமணபத்திரிக்கை அச்சடிக்கப்படுகிறது. மற்றொரு சாதியை சார்ந்த மக்களின் சார்பாக இனிப்பு பலகாரங்கள் செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நாளில் அக்காதலர்களுக்கு பஞ்சாயத்தின் சார்பாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இத்தகைய திருமணங்கள் திருவிழா போல் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இவற்றிக்கான செலவுகளை கிராமமக்கள் ஒவ்வொரு குடும்பமும் சமமாக பிரித்து கொள்கிறார்கள்.
மேலும் துகாஸ் பட்ருஜி கூறுகையில், ஏதோ ஒருநாள் இரவில் இத்தகைய மாற்றம் என்பது நடைபெறவில்லை. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வரை ஆதிக்க சாதியினரின் கடுமையான தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட கிராமம்தான் காரன்ஜி. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஆதிக்க சாதியினருக்கும் இடையில் சாதி மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமத்தின் பொது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கே தடை இருந்தது, வேறு சாதியை சார்ந்தவரை மணப்பவர்கள் ஓன்று தற்கொலை செய்து கொள்ளவேண்டும் அல்லது அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். 2003ம் ஆண்டிற்கு பிறகுதான் இத்தகைய மாற்றம் என்பதே ஏற்பட்டது. குறிப்பாக அசோக் கர்பள்ளிவர் மற்றும் மீனாட்சி துள்மலி ஜோடியின் காதல் திருமணத்திற்கு பிறகுதான் சாதிய பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டன என்கிறார்.
தங்கள் கிராமத்தோடு நிற்கவில்லை மக்கள். தங்கள் வெற்றிக்கதை அருகில் உள்ள கிராமங்களிலும் நடைபெற வேண்டும் என்பதற்காக சுற்றியுள்ள 52 கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒருவார பயிற்சி முகாமை நடத்தியுள்ளனர். தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் இதை நடத்திக் காட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளார்கள்.
நன்றி : தீக்கதிர் & indiatogether
பால்ய ருசி
கூடு கட்டிய காக்கைகள் எப்போதாவது கரையும் வேப்ப மரத்தில் இப்போது பகலெல்லாம் மைனாக்களின் சத்தங்கள் நிறைந்து தெறிக்கின்றன. காற்று இல்லாவிட்டாலும் அடர்ந்த இலைகள் சடசடத்த்துக் கொண்டேயிருக்கின்றன. பொறுக்கி, கூறு போட்டு, விற்று விளையாட நானும், என் இளம் தோழியும் இல்லாமல் வேப்பம்பழங்கள் வெறுமனே அதனடியில் சிந்திக் கிடக்கின்றன.
குறுகுறுப்புடன் குனிந்து ஒரு பழம் எடுத்தேன். தலையில் காகத்தின் எச்சில் விழுந்தது. சிறு அருவருப்புடன் தொட்டுப் பார்த்தபோது, அங்கே ஒரு வேப்பங்கொட்டையும் தட்டுப்பட்டது.
இதுதான் உங்கள் சமத்துவமோ, கலைஞரே!
மிருகவெறியோடு, தமிழக காவல்துறை தாக்கியிருக்கிறது. சமத்துவபுரத்தைத் தந்தவர் என்றும், வாழும் பெரியார் என்றும் அழைக்கப்படுகிறவரின் ஆட்சியில்தான் இந்த கொடூரத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
உத்தபுரம் குறித்து ஏற்கனவே தீராத பக்கங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. ஆதிக்கசாதியினரால் எழுப்பப்பட்ட சுவரின் ஒருபகுதி, சி.பி.எம் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தின் வருகையொட்டி இடிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் அதன் வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பேருந்துகள் நிற்கும் அரச மரத்தின் அருகே ஒரு நிழற்குடை அமைக்க வேண்டுமென தலித மக்கள் கேட்கிறார்கள். அரசு மறுத்து வருகிறது. ஆதிக்க சாதியினரோ, அங்கு நிழற்குடை கட்டக் கூடாது, பரம்பரை பரம்பரையாய் புழங்கிவரும் அரசமரத்தையொட்டிய அந்த பகுதியை தங்களுக்கு பட்டா போட்டுத் தர வேண்டுமென எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அதாவது தலித் மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உட்காரக் கூடாது, நிற்க வேண்டும் என்பதுதான் இதன் சூட்சுமம்.
இந்தப் பிரச்சினையை நேர்மையாக, சமத்துவமாக தீர்த்து வைக்காமல் உத்தப்புரத்தில் எப்போதும் காவல்துறையினரை நிறுத்திவைத்து அமைதி காத்துக்கொண்டு இருக்கிறது தமிழக அரசு. இதுகுறித்து ஆதிக்கசாதியினருக்கும், தலித் மக்களுக்கும் பிரச்சினை வரும்போதெல்லாம் காவல்துறை தலித் மக்களை தாக்கும். கைது செய்யும். பொய்வழக்கு போடும். தலித் மக்கள் குடியிருப்புகளை நொறுக்கும். இதுதான் ‘அமைதி’ காக்கும் லட்சணம்!
இந்தக் கொடுமைகளை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. நேற்று சி.பி.எம் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவருமான தோழர். சம்பத், சி.பி.எம் பாராளுமன்ற உறுப்பினர் தோழர். டி.ஏ.ரெங்கராஜன், எம்.எல்.ஏக்கள் நன்மாறன், எஸ்.கே மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட முற்றுகைப் போராட்டம் மதுரை ஆட்சியர் வளாகத்தில் நடந்திருக்கிறது.
உத்தப்புரத்தில் பஸ் நிறுத்தத்தில் ஒரு சின்ன நிழற்குடை அமைக்க மறுத்த அரசு, காவல்துறையை ஏவிவிட்டிருக்கிறது. பெண்கள், தோழர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டு இருக்கின்றனர். தோழர். சம்பத், தோழர். டி.கே ரெங்கராஜன் ஆகியோரும் தாக்குதல்களுக்குள்ளாகி இழுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
சாதீயத்தின் வேர்கள் புரையோடிப்போயிருக்கும் இந்த மண்ணில் அதனை எதிர்த்துப் போராடுகிறவர்களுக்கு இந்த அரசு கொடுத்திருக்கும் வெகுமதி இது. ‘சமத்துவம்’ என்பதற்கு இங்கே காவல்துறையினரின் தடிகளே அர்த்தம் எழுதி இருக்கின்றன. இந்த அரசுகளுக்கு மனு வழங்கியிருக்கும் கொடைதான் இந்தத் தடிகளூம்!
(இதுகுறித்து எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் கண்டன்ம் இங்கே)