Type Here to Get Search Results !

முகம் சுளிக்கும் விஷயமல்ல இது!

சிலர் ரசித்து இருந்தாலும், ‘ஜெ என்றால்...’ என்னும் நேற்றைய எனது பதிவு இன்னும் சிலருக்கு முகம் சுளிக்க வைத்து விட்டதோ எனவும் தோன்றுகிறது. ‘மட்டமான ரசனை’ என்று உரிமையோடு கடிந்து கொண்டவர்களும்,  ‘அய்யே’ என்றவர்களும் இருந்தார்கள். அதில் அரசியல் இருப்பதாக நினைத்து பேசியவர்களும் இருந்தார்கள்.

ஆம், எல்லாம் மறந்து (ஆம், எல்லாம் மறந்து) அந்தக் குழந்தையை, குழந்தைமையை மட்டும் ரசிக்கவிடாமல் எது நம் மண்டையை அடைத்துக் கொண்டு இருக்கிறது?

எழுத யோசித்து, பிறகு வேண்டுமென்றுதான் அப்படி ஒரு பதிவை எழுதினேன். ஒரு எழுத்தை, உலகில் ஒருவருக்கு மொத்தமாய் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, அது அவர்தான், அவர் மட்டும்தான் என உறுதி பூண்டு கொண்டால் நான் என்ன செய்ய? அந்தக் குழந்தை என்ன செய்ய..? அது ஒரு எழுத்து. அவ்வளவுதான். வழமையாகிப் போயிருப்பது நமது தவறான புரிதல்களே.

அடுத்தது, ‘அப்படி’ ஒரு விஷயத்தை பொதுவெளியில், எழுதினால் தைரியம் என்கிறார்கள். இப்படி ஒன்று நடந்தால், நம் வீடுகளில், நன்றாகத் தெரிந்தவர்களிடம் சொல்லிச் சிரிக்க முடிகிறபோது ஏன் எழுத்து மட்டும் முகம் சுளிக்க வைக்கிறது?

எஸ்.வி.வேணுகோபாலன் இதுகுறித்து தெளிவாகச் சொல்லி இருந்தார். “ஒரு குழந்தை புதிதாக தான் கற்றுக் கொண்டிருக்கும் ஓர் ஆங்கில எழுத்தின் வடிவில் அத்தனை அதிசயித்து லயித்து அதே போன்ற ஒன்றைத் தனது "வெளிப்பாட்டிலிருந்தே" காண முடியும் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் ஏற்பட்ட குதூகலத்தைக் கொஞ்சமும் ஒளிவு மறைவு இன்றித் தனது சொந்தத்திடம் முக்கியமாகத் தாயிடம் 'தனக்கு இது தெரிந்திருக்கிறது' என்று சத்தமாகப் பகிர்ந்து கொள்வதில் அருவருக்க என்ன இருக்கிறது?”

மேலும், தான் சமீபத்தில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்று, ‘இது’சம்பந்தமாகவே இருப்பதையும் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டு அனுப்பி வைத்திருக்கிறார். முகம் சுளிக்காமல் படிக்கலாம். இது உடல்நலம் சம்பந்தப்பட்டது மக்களே!

(காலைக்) கடன் பட்டார் நெஞ்சம் போல்..........

பொதுத்துறை நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அந்தப் பெண்மணிக்கு திங்கட்கிழமை தொடங்கி சனி வரையிலும் அலுவலகத்தில் வேலை.  ஞாயிறு தவறாமல் மருத்துவமனையில் போய் நிற்க வேண்டும்.  அவரது நான்கு வயதுக் குழந்தைக்காக.  குழந்தைக்கு ஒரு நோயும் இல்லை.  எந்தச் சிகிச்சையும் இல்லை.  பின் எதற்காக....?    வாரம் முழுவதும் வேறு எந்தக் குழந்தையைப் போன்றே சாதாரணமாக உணவு எடுத்துக் கொண்டாலும், விளையாடினாலும், படித்தாலும் ஒரு முக்கியமான செய்கையை மட்டும் அந்தக் குழந்தையால் செய்து கொள்ள முடியவில்லை.  Bowels Clearance என்று சொல்கிறோமே அது.  அதாவது குடலிலிருந்து கழிவுகளை அகற்ற முடிவதில்லை.  அதற்காக வாராவாரம் 'இனிமா' கொடுத்து வேலையை முடித்துக் கொண்டிருந்தனர்.

அப்புறம் நண்பர் ஒருவரது ஆலோசனைப்படி மருத்துவர் ஒருவரை அணுகியிருக்கின்றனர்.  அவர் சொன்னாராம்: "தினமும் காலையில் எழுந்ததும் டாய்லெட்டில் உட்கார வையுங்கள் பார்க்கலாம்".  அது வீண் வேலை என்றிருக்கிறார் குழந்தையின் தாய்.  "பரவாயில்லை.  தினம் ஒரு பத்து நிமிடம் வீணாகவே போகட்டும்.  உட்கார்ந்து பார்த்துவிட்டு வரட்டும்...அது அவனது அன்றாடப் பழக்கமாகட்டும். ஒன்றும் தப்பில்லை..." என்றிருக்கிறார் மருத்துவர்.  இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணிக்கு ஞாயிற்றுக் கிழமை டூட்டியிலிருந்து ஓய்வு கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இனி(மா) தேவையில்லை என்றானது.

இதைத் தான் 'டாய்லெட் டிரெயினிங்' என்று சொல்கின்றனர்.  இதை விவாதிக்குமுன் ஒரு விஷயம். நீங்கள் பள்ளியில் தமிழ் இலக்கணம் படித்தவரா...அப்படியானால் 'இடக்கரடக்கல்' என்ற ஒன்றை அறிந்திருப்பீர்களே. இடக்கரடக்கல் காரணமாக இந்த 'முக்கி'யமான விஷயத்தை 'வெளி'யில் யாரும் பேசுவதில்லை.  சரி செய்து கொள்ளத் தக்க வேண்டிய வாழ்வியல் அம்சத்தைப் பலரும் 'சிக்கல்' ஆக்கிக் கொள்கின்றனர். ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஊழல்கள் பகிரங்கமாக நடக்கிற தேசத்தில், தவிர்த்தே ஆகவேண்டிய ஆபாசமும் வன்முறையும் 'U' சான்றிதழோடே திரையில் அனுமதிக்கப்படுகிற சூழலில், மலம் கழிப்பதைப் பற்றிப் பேச மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிற சமூக நிலைமையை என்னவென்று சொல்வது!

நமது உடலில் உள்ள வேறு சில உறுப்புக்களைப் போலவே திருவாளர் ஆசனப்பகுதியும் மிகவும் நளினமானவர் (Sensitive). நான்கு பேர் எதிர்ல் கூடுமானவரை நம்மைச் சங்கடப்பட வைக்காமல் எச்சரிக்கையும் செய்பவர்.  மூளையாகிய  தலைமைச்  செயலகத்தின் (எழுத்தாளர் சுஜாதாவிற்கு நன்றி!) நேரடி கண்காணிப்பில் - முழு கட்டுப்பாட்டில் இயங்குபவர் என்பதால் அவருக்குரிய மரியாதையைக் கொடுத்துவிடுவது நல்லது.

பிறந்த குழந்தையின் குடல் சுத்திகரிப்பைக் கவனியுங்கள்.  முற்றிலும் திரவ ஆகாரத்தில் இருக்கும் குழந்தை ஒரு நாளைக்கு ஏழு முறை 'போனாலும்', ஏழு நாளைக்கு ஒரு முறை போனாலும் அது இயல்பானது, மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு ஓடவேண்டியதில்லை என்று வீட்டுப் பெரியவர்களுக்கு பாரம்பரிய அறிவு போதித்திருக்கிறது.  குடல் சதைகள் தங்களது வளர்ச்சியை, இயக்கத்தை முழுமையடைகிற பருவம் அது.

ஆனாலும் நவீன காலத்தில், பிறந்த இரண்டாவது நாளே குழந்தைக்கு ஏதோ பிரச்சனை என்று மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர் விவரமறியாத ஒரு பெற்றோர். அதற்கும் ஓர் அறுவை சிகிச்சை செய்து பார்த்து 'எல்லாம் நார்மல், ஒரு வாரம் பொறுத்து எப்படி ஆகுது என்று பார்த்துவிட்டு சிகிச்சையைத் தொடரலாம்' என்று சொல்லியிருக்கிற அளவு இன்று மருத்துவத்துறை மனித நேயமற்ற வர்த்தகத் தன்மைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

குழந்தை வளர்கிற பருவத்திலேயே குடல்சுத்தமும் அன்றாட நடவடிக்கைகளில்  ஒன்று என்பதைப் பழக்கிவிடவேண்டும்.  அது ஏதோ யார் எதிரிலும் பேசக் கூடாத விஷயமாகவும், அருவருப்பான செய்கையாகவும் பெரியவர்கள் உருவகித்துவிட்டால் குழந்தைகளும் சொல்லப் பயந்து அல்லது கூசிப் போய் இயல்பான வெளிப்பாட்டை (தங்களது படைப்பாற்றலைப் போலவே) மறுத்துக் கொண்டு வளர்கின்றனர்.
உடலில் செரிமான இலாக்கா வேலை செய்வது குறித்த அனிச்சை செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்த மாபெரும் ரஷ்ய அறிவியல் அறிஞர் இவான் பாவ்லோவ் அது குறித்த உலக ஞானத்திற்குப் பெரிய பங்களிப்பு செய்தவர்.  பாவ்லோவ் பரிசோதனை என்பது, அவர் ஒரு நாயைக் கொண்டு செய்ததாகச் சொல்லப்படும் ஒரு முக்கியமான அறிவியல் நடவடிக்கை.  குறிப்பிட்ட நேரத்தில் அன்றாடம் மணியின் ஓசையை எழுப்பியதும், நாய்க்கு அருகில் உணவு வந்து சேரும். அதற்குப் பழகிக் கொள்ளும் நாய்க்கு, ஒரு சில நாட்கள் கழித்து மணியின் ஓசைக்குப் பிறகு காலித் தட்டை வைத்தாலும் கூட எச்சில் ஊறவே செய்கிறது.  (இந்தச் சோதனை மூலம் அவர் இன்னொரு புதிய நிரூபணத்தையும் வைத்தவரானார்.  கருத்துதான் முதலில் தோன்றியது.  பொருள் என்பது அப்புறம்தான் என்ற கருத்து முதல்வாத தத்துவார்த்தக் கோட்பாடுகளுக்கு எதிரான  பொருள்முதல்வாதச்  சிந்தனையாளர்களின் கூற்றுக்கு ஆதரவாக இருந்தது இந்த அறிவியல் சோதனை).

இப்படி, காலைக் கடன்களை முடிக்க அவரவருக்குரிய திட்டப்படி செயல்படுவதில் தவறில்லை.  அது குடல் தன்னைத் தகவமைத்துக் கொள்ள உதவும்.  சிலருக்கு நடைப்பயிற்சி முடித்துவிட வேண்டும். சிலருக்குச் செய்தித்தாள் வாசிக்கக் கிடைக்காவிட்டால் வேலை நடக்காது. அன்பர்கள் சிலர், 'பாயிலர்ல வென்னி ஊத்தி மேல நெருப்பு பத்த வச்சாத் தான்ப்பா எறங்குது' என்கிற தரிசனத்தில் டீயும் சிகரெட்டும் தேடிக் கொண்டிருப்பார்கள்.  அவரவர் தங்களுக்கு ஆரோக்கியமான ஒரு வழியில் இந்த விஷயத்தை (Routine) முடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
சொல்லிவிட்டால் முடிந்ததா....அவரவர் பிரச்சனை அவரவர்களுக்குத் தான் தெரியும்.  அப்படியானால் மலச்சிக்கல் என்ற உலக மாந்தரை வாட்டி எடுக்கும் ஒரு பிரச்சனை ஏனய்யா இருக்க வேண்டும் என்றால், நமது பொறுப்பையும் தட்டிக் கழிக்க (!) முடியாது.  நமது உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றோடு தொடர்புடையது இது.

உணவில் நார்ச்சத்து குறையக் குறைய, மாவுப்பொருளும் எளிதில் செரிக்க இயலாத உணவுவகைகளும் சேரச் சேர குடல் சிரமத்திற்கு ஆளாகிறது.  நாம் அருந்தும் தண்ணீரின் அளவு தேவைக்கான அளவு கிடைக்காமல் போவதும் வேதனைப்பட வைக்கிறது. மனிதக் கழிவில் முக்கால் பங்கு தண்ணீர் வெளியேற்றம்.  அப்படி இல்லாமல் இறுக்கமான முறையில் இருந்தால், அது நமது வாழ்வின் - மனத்தின் இறுக்கங்களையும் பிரதிபலித்துக் கொண்டிருக்கக் கூடும்.  மனச் சிக்கல்களும் மலச் சிக்கல்களுக்கு இட்டுச் சென்று விடுகிறது.

சரிவிகித உணவு, தேவையான அளவு தண்ணீர், எளிய உடற்பயிற்சி,  விரிந்த பார்வையும், பரந்த மனமும் கொண்ட அன்பின் இழையோட்டமிக்க வாழ்க்கை முறை போன்றவை பிரச்சனைகளை உருவாக்குவதில்லை.    சலித்த (கோதுமை) மாவு பயன்படுத்திவிட்டு சலித்துக் கொண்டிருப்பதைவிட,  சலிக்காத மாவு பயன்படுத்தினால் நிறைய நார்ச் சத்து கிடைக்கும்.  ஆப்பிள் போன்ற பழங்களில் தோலில் தான் நிறைய  நார்ச்சத்து.  ஈவிரக்கமில்லாமல் அதைச் சீவித் தள்ளிவிடவேண்டாம்.

இரவு அதீத கண் விழிப்பு, காலையில் தாமதமான திருப்பள்ளியெழுச்சி ஆகியவை அன்றாட வழக்கங்களில் உடைசல் ஏற்படுத்துகின்றன.  குழந்தைகள் காலையில் ஒன்றும் சாப்பிடாமல் பள்ளிக்கு ஓடுவார்கள்.  அல்லது காலைக் கடனை வீட்டிலும் முடிக்க நேரமில்லாமல், பள்ளியில் அனுமதி கேட்கவும் வழியில்லாமல் அதனாலேயே தலைவலி, சோர்வு என்று உபரியாகவும் சிக்கல்களைத் தேடிக் கொள்வார்கள்.  இது தவிர்க்கப்படவேண்டும்.

ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலோ, பெண்களுக்கு  கருப்பைக் கட்டிகளினாலோ, நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், சரியான செரிமானம் அற்ற போக்கு (Irritable bowel syndrome ) ஆகியவை காரணமாகவும் மலச் சிக்கல் வரலாம்.  பெண்கள் பேறுக்காலத்தின்போதும்  மலச்சிக்கலை  அனுபவிக்கின்றனர் .

உறக்கம் வருவதற்காக, உளவியல் பிரச்சனைகளுக்காக, கால்சியம் அல்லது இரும்புச் சத்து தேவைக்காக, அமில முறிவிற்காக.... என்றெல்லாம் எடுத்துக் கொள்கிற மருந்துகள் மலச் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை.  தவிர்க்க வேண்டிய மருந்துகளைத் தவிர்த்துவிட வேண்டும்.  மற்ற மருந்துகளின் பக்க விளைவுகளைச் சரி செய்ய, நிறைய பச்சைக் காய்கறி, பழவகைகள், தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

இதைத் தவிர்த்துவிட்டு, எப்படியாவது சிரமப்பட்டாவது  வெளியேற்றி  விடவேண்டும்  என்று முக்கிப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  இல்லாவிட்டால், அது குடலிறக்கம் (ஹெர்னியா), மூலம் போன்ற புதிய பிரச்சனைகளை உருவாக்க நேரும்.  அதேபோல் அடிக்கடி மலமிளக்கி மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆசனவாய் மற்றும் குடல் சதைகளின் இயல்பான செயல்பாடுகளில் அதாவது அவற்றின் அதிகாரங்களில் குறுக்கிடும் ஜனநாயக விரோதப் போக்காகும். எனவே விளைவுகள் விபரீதமாகவே இருக்கும்.  'குடலைக் கழுவி உடலை வளர்' என்று இப்படியான மருந்து விற்றால், யாரது உடலை வளர்க்க என்று தெரிந்து கொள்வது நல்லது. 

வெளியேற்றும்  அளவு,  உட்கொண்ட  உணவிற்கு விகிதாச்சாரமாயில்லையோ, குறைந்திருக்குமோ என்று ஐயப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ' பழையன கழிதலும், புதியன புகுதலும் ' ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்துக்  கொள்ள   வேண்டும்.  நடுத்தர வயதைக் கடந்தபிறகு, இப்படி இல்லாமல் இருந்தால், அதுவும் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு மலம் கழிக்கும் தன்மையில் (Regular Frequency உள்பட) எந்த வேறுபாடு இருந்தாலும், உடனே செரிமான உறுப்புகள் பற்றிய சோதனை செய்து கொள்வது  நல்லது.

கோடான கோடி மனிதர்களுக்குச் சுத்தமான குடிநீரோ, கழிப்பறை வசதியோ செய்துதர மறுக்கும் நாட்டில் நோய்களைத் தடுப்பதைவிட மருத்துவமனைகளைப் பெருக்குவதில் தீவிரம் காட்டும் ஆட்சியாளரையே   பார்த்துக் கொண்டிருக்கிறோம். தூய்மை அற்ற பாதையில், கல்லில், முள்ளில் நடக்கும்போது நம்மைக் காக்கும் செருப்புகள் அந்தக் கசடுகளைத்  தாங்குவதாலேயே    தாங்கள் வீட்டிற்குள் (அல்லது ஆலயங்களுக்குள்) நுழைய முடியாமல் நிறுத்தப் படுகின்றன. அதைச் செப்பனிடுபவர்களும் தான்.

அதேபோலவே,  நமது குடலையும்,  உடலையும்  சுத்தப்படுத்திவிட்டு வெளியேறுகிற  மலத்தைப் பற்றிய நமது தவறான புரிதல் காரணமாகவே அதுவும் அருவருப்பாகப் பார்க்கப்படுகிறது. அதை அகற்றிச் சுத்தம் செய்து தலையில் அள்ளிச் செல்வோரும்  கேவலமாக நடத்தப்படுகின்றனர். 

இந்த நூற்றாண்டிலும் மனித மலத்தை மனிதன் சுமப்பதைவிடவும் மலச்சிக்கல் ஒன்றும் பெரிய போராட்டமில்லை.  மாற மறுக்கும் மனச் சிக்கல்களை உடைக்காமல் ஆரோக்கியமான சமூகமும் இல்லை..

-மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம்.டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளில் இருந்து எஸ்.வி.வேணுகோபாலன்.

 

கருத்துரையிடுக

16 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. //ஆம், எல்லாம் மறந்து (ஆம், எல்லாம் மறந்து) அந்தக் குழந்தையை, குழந்தைமையை மட்டும் ரசிக்கவிடாமல் எது நம் மண்டையை அடைத்துக் கொண்டு இருக்கிறது?
  //

  அங்காடித்தெரு விமர்சனம் எழுதும்போது ஜெயமோகன் வசனம் பற்றி எழுத விடாமல் எது உங்கள் மண்டையை அடைத்ததோ அதேதான்.

  பதிலளிநீக்கு
 2. Sorry for my immatured comments yesterday, if it has offended you anyway. Sorry.

  As a goodwill gesture, just wanted to warn you in advance. Otherwise nothing personal. If other party also misconceived the same way like we did, who knows what will happen. Reminds me the bus yerippu, dinakaran yerippu, etc. So got scared of these.

  Again sorry.

  பதிலளிநீக்கு
 3. மதி.இண்டியா!
  ’ஜெ’ என்பது ‘ஜெ’ என்னும் எழுத்தைத்தான் என எத்தனை தடவை சொல்றது...

  பதிலளிநீக்கு
 4. சேது தோழர்!
  நீங்கள் ஏன் ஸாரி கேட்க வேண்டும். நிச்சயமாய் உங்கள் பின்னூட்டம் எனக்கு சில வெளிச்சங்களைத்தான் தந்தது. உங்களை புண்படுத்திவிட்டேனோ என வருத்தமாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. அருமைத் தோழர் எஸ்.வி.வி!
  உங்கள் அருமையான கட்டுரை குறித்து கருத்துக்கள் ஏன் வரவில்லையெனத் தெரியவில்லை....

  பதிலளிநீக்கு
 6. அன்பு மாதவ்!

  இடக்கரடக்கல் காரணமாக பேசப்படாத இன்னொரு விஷயத்தை அங்காடி தெரு திரைப்படத்தில் நாம் பார்த்திருப்போம்...ஆண்கள் கூட தமிழ் திரைப்படங்களில் கேஸ் விடுவது கூட இல்லாத சூழலில் நவ நாகரீக இளம் பெண்ணொருத்தி தொடர்ந்து குசு விட்டுக் கொண்டிருந்ததது பெண்ணின் உடலை வெறும் இனிப்பு மிட்டாயாகவே காட்டும் தமிழ் திரை உலகில் வசந்த முயற்சி ...

  உலகத்திலேயே குசுக்காக காதலை இழந்தது நீதான் எனநாயகி சொல்லும் போது அவளுக்கும் குசு வர நாயகனும் நாயகியும் விகற்பமில்லாது தோழமையுடன் சிரிப்பது போன்ற காட்சி என் கனவில் தோன்றியது ...

  உங்கள் இரு கட்டுரையையும் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் தளத்தின் வலது பக்கமிருக்கும் கு.அ. வின் வாக்கியங்களை படிக்க வேண்டுகிறேன் ...

  நன்றி மாதவ், P.V.V,S.V.V

  பதிலளிநீக்கு
 7. எனக்கு அந்த பதிவு அரசியல் கிண்டல் போல் தெரிந்தது! அதனால் தான் தைரியம் என்று பாராட்டினேன்!

  எம்புட்டு அரசியல் இருக்கும்னு எதிர்பார்க்கல!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்!

  பதிலளிநீக்கு
 8. எல்லோருடைய உடலிலும் சிறிதளவு மலம் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும் மலம் அள்ளுபவர்களையோ, சுமப்பவர்களையோ, சக மனிதனாக ஏற்பதில் இந்த சமூகம் காட்டும் தயக்கம் பெரிதும் வருத்தத்திற்குரியது.
  'தோட்டியின் மகன்' நாவலில் மலம் அள்ளுபவர்களின் வாழ்வியல் முழுமையாக விவரிக்கப்பட்டிருக்கும்.

  பதிலளிநீக்கு
 9. பேசுபவர்களை பொருத்து,விஷயமும் சாரமும் இறங்குகிறது மாது.

  இதையே,நானோ நேசமித்ரனோ,கட்சி சார்பல்லாதவர்கள் யாருமோ இதை எழுதி இருந்தால்(வெளிப்படையாய் கட்சி சார்பற்றவர்கள்) இதன் ரசனை வேறு.

  நீங்கள் எனும் போது,தலைப்பு தொடங்கி எழுத்து எடுத்து செல்லும் இடம் இவ்வாறாகவே இருக்கிறது.(எனக்கும்,இப்பவரையில் குஷி கூட.)

  இது வேறு,

  but, it leads there..

  to the vulnarable point. :-)

  இதை என்னால் மறுப்பதிற்கில்லை.

  பதிலளிநீக்கு
 10. வால் பையன் சார்!

  மாதவ் விளக்கம் அளித்து தனி பதிவு போட்ட பிறகும் விட மாட்டேங்க்றேலே ...

  உங்க கிட்டேயும் இம்புட்டு அரசியல் இருக்கும்னு நான் எதிர்பார்க்கல!

  வவ்வ்வ்வ்வ்வ்வ்!

  பதிலளிநீக்கு
 11. தோழர் ராஜாராம் !

  //**பேசுபவர்களை பொருத்து,விஷயமும் சாரமும் இறங்குகிறது மாது.**/

  பார்க்கும் பார்வைகளை பொறுத்தும்தான் !

  பதிலளிநீக்கு
 12. கும்மி அவர்களே!

  //**எல்லோருடைய உடலிலும் சிறிதளவு மலம் இருந்துகொண்டுதான் இருக்கின்றது**//

  அருமையாக சொன்னீர்கள்!

  மலம் முழுவதும் வெளியேற்றப் பட்ட உடல் என்று எதுவும் இல்லை

  பதிலளிநீக்கு
 13. இதை நான் கிட்டத்தட்ட எதிர்பார்த்தேன்...
  உங்களது முந்தைய பதிவில் ஏற்பட்ட பார்வைகளின் வித்தியாச அனுபவத்தின் நிழல், உடல் நலப் பதிவின் மீதும் கவியும் என நான் புரிந்து கொண்டேன்.

  இடுகை இடுபவரின் மனநிலை, வாசிப்பவரின் எதிர்வினை, அதன் தாக்கத்தில் படைப்பாளிக்குள் எழும் உள்மனச் செயல்பாடு....இவற்றின் வேகம் புத்தகமாக அல்லது பத்திரிகையில் எழுத்தாக வரும் பொது வெளிப்படுவதைவிட வேறு தளத்தில் இயங்குகிற ரசத்தையும் நுகர்கிறேன்...

  "(காலைக்) கடன் பட்டார் நெஞ்சம் போல் ..." கட்டுரை, மலச் சிக்கலைக் குறித்து யோசித்த உடல் நலக் கட்டுரை என்றாலும் அது சமூகத்திடமிருந்து பெற்றதை மீண்டும் சமூகத்திற்கு வழங்குகிற ஒரு தொடரின் அடுத்தடுத்த பதிவுகளில் ஒன்று.
  ஒவ்வொரு முறை உடல் நலம் பற்றிய இடுகை விழும்போதும், வலைப்பூவின் வாசகர்களது எதிர்வினை அதை இன்னும் செம்மைப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.
  இந்த முறையும் காத்திருக்கிறேன்.....

  தகழியின் "தோட்டியின் மகன்" நினைவுகளைக் கிளர்த்தியுள்ள நண்பருக்கு வந்தனங்கள்..முதன்முறை அதை வாசித்து அடுத்த நான்கைந்து தினங்கள் திண்டாடிப் போயிருந்தேன்.

  தமிழ்செல்வனின் அறிவொளி இயக்க அனுபவங்களின் பதிவான அற்புதக் கட்டுரைத் தொகுப்பு இருளும் ஒளியும் நூலில் ஓரிடம் வருகிறது. தொண்டர்கள் ஊர்ப்புறத்தே இருக்கும் ஒரு வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்டு நிற்கின்றனர். அந்த வீட்டுப் பெண் எங்க வீட்டில் எல்லாம் தண்ணி வாங்கிக் குடிச்சா ஊருக்குள் பிரச்சினாயாப் போகும் என்கிறாள்.

  அருந்ததியர் வீடு அது....

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 14. முகம் சுழிப்பவர்கள் அமுதன் இயக்கிய ஆவணப்படமான 'பீ' யை பார்க்க கடவது. ஒரு மனிதன் கழிக்கும் மலத்தை பிறிதொரு மனிதன் சுமக்கும் கொடுமையை.....ஆங்.... என்ன சார்? இந்திய ராக்கெட் கடல்ல உளுந்துடுச்சா? அடடா.... என்ன, செவ்வாய் கிரகத்துக்கு இந்திய மனுஷன் போகப்போறானா? சூப்பர் சார்...என்னா தொழிநுட்பம் சார் நம்ம தொழிநுட்பம் சார் நம்ம தொழிநுட்பம்! சும்மாவா சொன்னாங்க!
  இக்பால்

  பதிலளிநீக்கு
 15. காலைக்கடனப் பத்தி விரிவாவே சொல்லியிருக்கீங்க. சமயங்கள்ல புது இடங்களில் இல்ல அலுவலகத்துல, ஏன் சில வீடுகளில் கூட டாய்லெட் சுத்தமா இல்லாலதுனாலேயும் நாம போகத் தயங்குவது உண்டு. இதுவும் கூட மலச்சிக்கலுக்கு ஒருவகைக் காரணமே! பாத்த உடனேயே 'போகத்' தோனுற மாதிரி சில டாய்லெட்டுகளும் இருக்கு, நம்ம கடைக்கு வந்து பாருங்க தலைவரே!
  (http://ponmaalai.blogspot.com/2010/05/blog-post_07.html)

  பதிலளிநீக்கு
 16. //இந்த நூற்றாண்டிலும் மனித மலத்தை மனிதன் சுமப்பதைவிடவும் மலச்சிக்கல் ஒன்றும் பெரிய போராட்டமில்லை. மாற மறுக்கும் மனச் சிக்கல்களை உடைக்காமல் ஆரோக்கியமான சமூகமும் இல்லை..//thank for sharing
  -மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம்.டி. (ஓமியோபதி) 's book . good thought.

  பதிலளிநீக்கு