Type Here to Get Search Results !

இவள், அவன், இன்னொரு அவன்

இப்படி நடக்குமா என்றும் தோன்றியது. நடக்க வேண்டும் என்றும் சிந்தனை உந்தியது. தம்பி பாலு, மிகச்சாதாரணமாக இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு, “இன்னிக்குத்தாண்ணே இவளுக்கு இரண்டாம் கல்யாணம்” என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டான்.

அம்மு சென்னைக்குச் சென்றுவிட்ட இந்த ஒருமாத காலத்தில், கடந்த பத்து நாட்களுக்கும் மேல் என் கூடவே இருக்கிறான் பாலு. உத்தபுர ஆவணப்பட வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவன். அவனது நித்திய கண்டம் என்னும் கதையை ஏற்கனவே தீராத பக்கங்களில் பகிர்ந்திருக்கிறேன். பதினெட்டு வருடத்திற்கு முன்பு எழுதிய கதை அது. அப்போது அவன் இருபது வயதுக்கும் குறைவாகத்தான் இருந்திருப்பான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவனுக்கு நேர்ந்த அனுபவங்கள் விநோதமானவை. அதிர்ச்சியானவை. வாழ்வின் சகல பகுதிகளிலும் எட்டிப்பார்த்தும், இருந்தும் வந்திருக்கிறான். அவைகளைப் பற்றியெல்லாம் அவ்வப்போது இங்கு பகிரலாம்.

வீட்டிலிருந்தால் காலையில் எழுந்து டீ போட்டுத் தருவான். குக்கரில் அரிசி வைக்காமல், பாத்திரத்தில் பொங்குவான். வடிதண்ணீர் சூடாய் தந்து “இதக் குடிங்கண்ணே.... தேவாமிர்தம் போல இருக்கும்” என்பான். எப்போதோ வாழ்ந்த ஊரும், வீடும் அந்த நேரம் அருகில் வரும். புத்தகங்களை அலமாரியில் இருந்து எடுத்து வைத்துக்கொண்டு தவம் போல படித்துக் கொண்டே இருப்பான். திடுமென வாய்விட்டுச் சிரிப்பான். “என்னடா..” என்று காத்திருந்தால் சுவாரசியமான ஒரு கதை அந்த வேதாளத்திடமிருந்து வரும். அப்படி அறிய நேர்ந்ததுதான் இதுவும்.

அவனுக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்திருக்கிறது. கணவன் மீது ரொம்பப் பிரியமாய் இருப்பாளாம். தீப்பெட்டி அட்டை ஒட்டுவதில் காசைச் சேமித்து, அவனுக்கு ஆசை ஆசையாய் சட்டைகள் எடுத்துத் தருவாளாம். ‘அத்தான்’ என்று கூப்பிடுவதில் அப்படியொரு பாசம் பொங்குமாம். ஒரு வருடத்திற்குள் எல்லாம் கரைந்து போயிருக்கிறது. எந்நேரமும் இவளை அந்த வீட்டில் கரித்துக் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். ‘மலடி’, ‘மலடி’ என்று வாய்கூசாமல் தெருவெல்லாம் கேட்க ஊதியிருக்கிறார்கள். அடுத்த வருடத்திற்குள், சாதி சனங்களை வைத்துப் பேசி இவளை விலக்கிவைத்தும் விட்டார்கள். இவளது அவன் இன்னொரு பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தும் கொண்டானாம்.

இதற்குப் பிறகு நடந்ததுதான் முக்கியமானது. அவனது வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி, இன்னொருவன் மனைவியில்லாமல் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறான். இவள், அந்த இன்னொரு அவனுக்கு இரண்டாம் தாரமாய் இப்போது வாழ்க்கைப்பட்டு இருக்கிறாளாம். அதே தெருவில் போய் வாழப் போகிறாளாம். சொல்லிவிட்டு, பாலு கடகடவென சிரித்தான். “அண்ணே, இப்போ அந்த மொதப் புருஷங்காரன் இவ வாங்கிக் கொடுத்த சட்டையைப் போட்டுக்கிட்டு தெருவுல நடக்க முடியுமாண்ணே” என்றான். நான் அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தேன். திரும்பவும் சிரித்தான். “இப்ப இவளுக்கும் அந்த இன்னொருவனுக்கும் குழந்தை பெறந்து, அவனுக்கு குழந்தை பெறக்கலன்னா..” என்று அடக்க மாட்டாமல் சிரித்து, “தாயளி சாகட்டும்” என்றான் கோபத்தோடு.

நான் அவனிடம் மெல்ல “அந்த இரண்டாம் புருஷன் இவளை எப்படி நடத்துவான்னு எதிர்பார்க்குற. இவளை அவனும் கொடுமைப்படுத்த மாட்டான்னு நினைக்கிறியா?” கேட்டேன். கொஞ்சமும் யோசிக்காமல், “இருக்கட்டும்ணே. குழந்தையப் பெத்துக்கிட்டு வந்துர வேண்டியதுதான. என்ன கெட்டுப் போச்சு” என்று கொஞ்சம் நிறுத்தி, “அண்ணே, இந்த உலகத்துல வாழுறதுக்கு வழியா இல்ல..” என முடித்தான்.

நான் பாலுவையேப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவனோ, வீட்டிற்கு வெளியே போய் சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு, எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தான்.

கருத்துரையிடுக

7 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. என் பார்வையில் எந்த பெண்ணின் மீது எந்த தவறும் இல்லை.

  மனது பிடித்து இருந்தால், இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு.

  மற்ற படி பாலு சொலவது போல, குழந்தை பேருக்கு யாரிடம் குறை உள்ளது என்று அறிய வேறு ஒருவரிடம் உடல் உறவு கொட்னுதான் அறிய வேண்டும் என்று இல்லை. இன்று பல எளிய மருத்துவ முறைகள் உள்ளன, ஆறு நிமிடத்தில் சொல்லி விடுவார்கள் உடல் குறை கணவனிடமா, மனைவியிடமா என்று, உடனே தேவையான சிகிச்சை எடுத்து கொள்ளலாம்.

  இந்த மாதிரி பிறர் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிடும் தெரு. கிராம கலாசாரத்தை விட சென்னை அபார்ட்மென்ட் கலாச்சாரம் எவ்வளவோ மேல்.

  பதிலளிநீக்கு
 2. என்ன அருமையான சிறு கதை. எழுதிடறேன் மாதவராஜ்.

  அமாம் நேரே போய் கை குலுக்கி ஒரு புத்தகம் கொடுத்து வாழ்த்தனும்னு தோனல. எனக்கு தோனுது.

  இரா.எட்வின்

  பதிலளிநீக்கு
 3. \\என்று அடக்க மாட்டாமல் சிரித்து, “தாயளி சாகட்டும்” என்றான் கோபத்தோடு\\ அதேதான்!!!!

  பதிலளிநீக்கு
 4. நிச்சயமாய் நான் படித்த சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளில் இதும் ஒன்று..


  www.narumugai.com

  பதிலளிநீக்கு
 5. http://narumugai.com/forum/viewtopic.php?f=21&t=28&p=131&sid=d7b8f1f8c0da10838ceafdf545c4ca0e#p131

  பதிலளிநீக்கு
 6. இப்படி நடக்குமா என்றும் தோன்றியது. நடக்க வேண்டும் என்றும் சிந்தனை உந்தியது

  பதிலளிநீக்கு
 7. அழகான கதை மாதவ் சார். இது காலங்காலமாய் நடந்து வந்த சமூக கொடுமைக்கான விடிவு காலம். 60 வயதில் ஆண் எத்தனையாவது மணம் புரிந்தாலும் ஏற்கிற சமூகம், ஒரு பெண் - விதவை - ஆதரவற்றவள் - தனக்கென ஒரு துணையைத் தேடும் போது அந்த மறுமணம் நிச்சயம் அதே மனப்பாங்குடன் வாழ்த்த இந்த சமூகம் கடமைப்பட்டது.

  பதிலளிநீக்கு