Type Here to Get Search Results !

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்!

இன்றைய (27.4.2010) வேலைநிறுத்ததைப் பார்த்து நேற்று வினவுத் தோழர்கள்  சிரித்திருந்தார்கள்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறுவதாயிருப்பினும், இந்த பந்த்தும், வேலைநிறுத்தமும் விலைவாசிக்கு எதிரான போராட்டமாக அடையாளப்பட்டு இருக்கிறது. நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுகிறது என்று மத்திய அரசு தொடர்ந்து ஒரு பக்கம் கூவிக்கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் எப்போதுமில்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மத்தியதர வர்க்கம் முட்டி மோதி  சமாளிக்கிறது. அடித்தட்டு மக்களோ மூச்சுத் திணறிப் போயிருக்கிறார்கள். இந்த விலைவாசி உயர்வு தானாகவே முளைத்ததுமல்ல, விண்ணிலிருந்து விழுந்ததுமல்ல. இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளும், நடவடிக்கைகளுமே இப்படியொரு விபரீத நிலைமைக்கு காரணமாயிருக்கின்றன. முழுமுழுக்க பெரும் பணக்காரர்களுக்காகவே அரசு அல்லும் பகலும் செயல்பட்டு வருவதால், இங்கு ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

தங்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவும், தொடர்ந்து எதிர்க்கவுமே இத்தகைய வேலைநிறுத்தங்கள் திட்டமிடப்படுகின்றன.

இந்த வேலைநிறுத்தங்களில் சி.ஐடி.யூ, ஏ.ஐடி.யூ.சி போன்ற சங்க ஊழியர்கள் பெரும்பாலும் கலந்துகொள்கின்றனர். இந்த ஊழியர்கள் அனைவரும் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. முழுக்க இடதுசாரி சிந்தனைகளைக் கொண்டவர்களும் இல்லை. பல்வேறுதரப்பட்ட கருத்துக்களும், தொடர்புகளும் கொண்டவர்களாக இருக்கின்றனர். தங்கள் நலன், தங்கள் கோரிக்கை குறித்து யோசிக்கிற, அதற்கு போராடுகிறவர்களாகவே பலரும் இருக்கின்றனர். ஆனால் விலைவாசி உயர்வு போன்ற ஒரு பொதுவான, மக்களின் பிரச்சினைக்கு அவர்களை போராட அழைத்திருப்பதும், வைத்திருப்பதும் முக்கியமில்லையா? ‘எல்லோருக்கும் வந்ததுதானே, தனக்கும்’ என்னும் மனோபாவத்தில், எதையும் ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிற ஜனத்திரளில் ‘உங்களுக்காகவும், எங்களுக்காவும், எல்லோருக்காகவும் நாங்கள் போராட இருக்கிறோம்’ என்று முன்குரல் கொடுப்பது எவ்வளவு முக்கியமானது என்பது இயக்கம் குறித்து தெளிவு உள்ளவர்களுக்குப் புரியும். ஒருநாள் சம்பள இழப்பு என்பதை, தங்களது சிறு தியாகமாக இந்த போராட்டத்திற்கு அவர்கள் தருகிறார்கள். அதில் சிலர் தவறுகிறவர்களாகவும் இருப்பார்கள். அதையே சுட்டிக்காட்டி, குத்திக்காட்டி, நோக்கத்தை சிறுமைப்படுத்துவதும், இயக்கத்தைப் பார்த்து சிரிப்பதும் யாருக்குத் துணை போகும்? நிச்சயம் மக்களுக்காக அல்ல.

இடதுசாரிக் கட்சிகளின் முன்முனைப்பில், மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவிக்க, வேலைநிறுத்தங்கள் நடத்தப்படுகின்றன. இப்படி ஆதரவு தெரிவிக்கும் பல கட்சிகள் முதலாளித்துவ சார்புடைய கட்சிகளே. அவர்கள் நாளைக்கு ஆட்சிக்கு வந்தால், இந்த அரசைக் காட்டிலும் மோசமானவர்களாக இருக்கக் கூடும். ஆனால் அந்தக் கட்சிகளின் பின்னால் இருக்கும் பெரும்பகுதி மக்களிடம் விஷயங்களைக் கொண்டு செல்லவும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இடதுசாரிக் கட்சிகள் இதுபோன்ற வேலைநிறுத்தங்களையும், அதற்கான பொதுகூட்டங்களையும் பயன்படுத்துகின்றன. இதனையே, இடதுசாரிக் கட்சிகளின் சந்தர்ப்பவாதமாக இங்கு சொல்லப்படுவதுமுண்டு. மக்களை நம் பக்கம் திருப்பாமல், நம் பக்கம் கொண்டு வராமல் எதையும் இங்கு சாதித்துவிட முடியாது. அதுதான் இன்று இந்தியாவில் இருக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கான சவாலே. அதை நடைமுறைப்படுத்துவதில், திட்டங்கள் வகுப்பதில் தவறுகள், பிசகுகள் நேர்ந்திருக்கலாம். தோற்றிருக்கலாம். ஆனால் தொடர்ந்து மக்களிடம் நல்லது கெட்டதை கொண்டு சென்று, எது சரி, எது தவறு என்பதை உணரச் செய்து, அவர்களே இந்த அரசைத் தீர்மானிக்கிறவர்களாக உருவாக்கும் பெரும் பொறுப்பை இடதுசாரிக் கட்சிகளே முன்னின்று செய்கின்றன. அதற்கு நிதானமும், அவகாசமும் தேவைப்படலாம். ஆனால் தவறுகளையும், பின்னடைவுகளையும் மட்டுமே சுட்டிக்காட்டி, சிரிப்பது யாருக்காக? நிச்சயம் மக்களுக்காக அல்ல.

இந்த வேலைநிறுத்தங்களால் எந்த உடனடி விளைவுகளும் ஏற்பட்டு விடாது என்று கூற முடியாது. அரசுக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான ஒரு மனோபாவத்தை உருவாக்கும் முயற்சி. அரசின் தவறுகளை அம்பலப்படுத்தும் காரியம். சகல ஆயுதங்களோடும் இருக்கிற வலிமை வாய்ந்த ஒருவன் மீது எறியப்படுவது சிறுகல்லாகவே இருக்கலாம். ஆனால் அதில் ஒரு ஆவேசம் பொதிந்தே இருக்கும். இந்தத் துளிகளை மேலும் மேலும் பெருக்கி வெள்ளமாக்குவதுதான் இயக்கம். ஆனால் அந்தத் துளிகளையும் சாக்கடையாக பரிகசிப்பதால் என்ன நல்ல விளைவு ஏற்படும்? நிச்சயம் மக்களுக்கு அல்ல.

எல்லோரையும், எல்லாவற்றையும் விமர்சிப்பது யாருக்கும் எளிது. சௌகரியமும் கூட. செயல்பூர்வமாக களத்தில் நிற்பது முக்கியம். மைதானத்தில் இறங்காமல் காலரியைச் சுற்றி ஓடியபடி “கோல், கோல்” என்று முழக்கமிடுவதில் என்ன அழகு இருக்கிறது? நிச்சயம் அவர்களுக்கு அல்ல!

(பி.கு: ஆரோக்கியமான, நாகரீகமான, தடித்த வார்த்தைகளற்ற பின்னூட்டங்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும்!)

கருத்துரையிடுக

11 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. every efforts/attempts/opposition will do some effects.It may be small changes.But all resistances will create an improvement.The improvements may not be to our expectations..It must be understand in that way only...A tall building cannot be constructed within a day...many factors are reasons for any changes...All we have to unite and struggle with the government..All struggles and all resistances against the government's anti policies of people must be supported whoever conducted..It need not be ridiculed.

  பதிலளிநீக்கு
 2. //மைதானத்தில் இறங்காமல் காலரியைச் சுற்றி ஓடியபடி “கோல், கோல்” என்று முழக்கமிடுவதில் என்ன அழகு இருக்கிறது?//

  ரொம்ப சரியாச்சொன்னீங்க...

  சி.பி.எ.ம் மை பார்த்து சிரிக்கிறீர்கள்... சரி அது இருக்கட்டும்.. நீங்க எப்போது களத்தில் குதிப்பீர்கள்... நீங்கள் எவ்வாறு விலைவாசி உயர்வு போன்ற மக்களை வதைக்கும் ப்ரெச்சனைகளுக்கு குரல் குடுக்கப்போகிரீர்கள்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதிலே இல்லை அவர்களிடம்..

  இது வரையில், "இதுதான் எங்களது திட்டம்" என்று அவர்கள் ஒரு நாளும் சொல்லியதில்லை....

  யாரையும் எதையும் செய்யவிடாமல் பேசவிடாமல் தடுக்க முயல்கிற அவர்களது செயல் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களின் செயலாகப்படவில்லை, மாறாக அது ஒரு சர்வாதிகார செயலாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.....

  பதிலளிநீக்கு
 3. கண்மூடித்தனமாக எதிர்பதே.... புரட்சி என்கின்ற பக்குவத்தை வினவு உணரவேண்டும்... நான் வினவின் ரசிகன் கொஞ்ச நாட்களாய் மனது நெருடுகிறது...

  பதிலளிநீக்கு
 4. //. இப்படி கள்ளழகர் ஆத்துல இறங்குவதை வைத்து தோழர்கள் வேலைநிறுத்தத்திற்கு தண்ணி தெளித்துவிட்டனர்.//

  //எனவே அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்க பொறுப்பாளர் என்ற பதவியுடன் சி.பி.எம்-லும் பொறுப்பில் இருப்பவர்கள் “மாஸ் கேசுவல் லீவு” என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம். இதுதான் இந்தியாவையே முடக்கிப் போடும் சி.பி.எம்மின் பாரத் பந்தாம். ஒரு நாள் காலை 6 முதல் மாலை 6 வரை சம்பிரதாய வேலைநிறுத்தம் என்பதே பம்மாத்து வேலை. அதையும் மதுரை அழகர் பெயர் சொல்லி கேலிக்கூத்து ஆக்கிவிட்டார்கள் நமது போலி கம்யுனிஸ்ட்டுகள்.//

  பதிலளிநீக்கு
 5. தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து சங்கத்திலேயே சி.பி.எம் கட்சி இப்படி தில்லாலங்கடி வேலை செய்து வேலை நிறுத்தம் செய்வது போல நடிக்கிறது என்றால் இந்தியா முழுவதும் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? இன்னுமா இந்த ஊரு இவுகளை கம்யூனிஸ்ட்டுன்னு கூப்பிடுது?

  பதிலளிநீக்கு
 6. விமர்சனம் என்பது உண்மையில் தவறுகின்ற சந்தர்ப்பங்களை சரிசெய்து கொள்ளத்தான் என்பதை மக்களுடன் மக்களுக்காக வேலை செய்யும் அனைவரும் புரிந்துதான் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் இந்தப் புரிதல் உங்களுக்கு இல்லாத்து வருந்த தக்கது. உங்கள் மீதான விமர்சனங்களை மக்களுக்கு எதிரானதாக முன்வைப்பதில் தர்க்கபூர்வமான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதையும் விமர்சனமாக முன்வைக்கிறேன்.

  மேலும், ஒரு இந்திய இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களில் பங்குகொண்டவர் என்ற முறையில் எல்லா தரப்பு மக்கள் திரள் அணிகளையும் பொது வேலைக்கு முன் வர வைத்திருப்பதையே சாதனையாக (தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்றோ அல்லது இன்றைய விலைவாசி உயர்வுக்கான முதலாளித்துவ பொருளாதாரம் உலக அளவில் தோற்றுக் கொண்டிருப்பதை விளக்கியோ இல்லாமத வழிமுறைகளில்) பேசுவது சரியா... அப்படியானால் தொழிற்சங்கம் பற்றிய மார்க்சிய வரையறைகளை ஆசான்கள் சொல்லித் தந்த முறைமை இதுதானா..

  இப்படி கேட்டால் விமர்சனம் செய்வது எளிது, செயலில் இறங்குவதுதான் கடினம் என்று சொன்னால், என்ஜிஓ க்கள் கூடத்தான் புரட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக உங்களை விடவும் கடிமாகத்தான் வேலை செய்கிறார்கள். அதற்காக அவர்களை பற்றி விமர்சனம் செய்து எப்படி வேலை செய்ய வேண்டும் என்றா பேச முடியும். அதே நேரத்தில் தவறுகின்ற தருணங்களை குறிப்பாக சுட்டிக் காட்ட மறந்தால் எந்த இயக்கமாக இருந்தாலும் அதனுடைய அரசியல் க்கு கூட நேர்மையில்லாமல் போவது இயல்பாக நடந்து விடும்.

  ஆள்பலத்தின் அடிப்படையில் அணுகுகிறது உங்களது கட்டுரை. ஆனால் அரசியல் வேலைநிறுத்தமாக இதனை மாற்றவும், அரசு பற்றிய முடிவு செய்வதில் இந்த ஜனநாயக முறையில் வாய்ப்பு இல்லை என்ற புரிதல் தங்களுக்கு ஏற்படவும் (கலக்டர எல்லாம் எலக்சன்ல மாத்த முடியாதுலா), அந்ந அரசு அமைப்பை உலக வங்கி யின் என்ஜிஓ டைப் வேலைகள் பயன்படுத்துவதையும் தாங்கள் வலைப்பின்னலின் சரடைப் புரிந்து கொள்ளவும், முதலாளித்துவ கட்சிகளின் அணிகளில் ஆள் பிடிக்கலாம் என்ற முறையில் காங்கரசின் பின்னால் வால் பிடித்த வரலாற்றில் இருந்து தங்களது கட்சி பாடம் கற்றுக் கொள்ளவும், போராட்டமும் பொதுக்கூட்டமும் மாத்திரமே மக்களை அணிதிரட்ட உதவாது என்ற முறையில் அரசியல் ரீதியாக உலகமயம், பார்ப்பன பாசிச எதிர்ப்பு என்ற முறையில் ஒன்றிணைய வேண்டும் என்றும், முதலாளித்து அமைப்பு முறைக்கு எதிரான மனோபாவத்தை ஏற்படுத்துவது முதன்மையான பிரச்சினையா அல்லது இது ஏன் வேண்டாம் என்பதை அறிவியல் முறைப்படி மக்களிடம் பேசுவது முதன்மையானதா என்ற புரிதல் தங்களுக்கு ஏற்பட வேண்டும் என்றும், சிறு கற்களை பொறுக்கிதான கட்ட்ட‍ம் கட்ட முடியும் என்றும் அதற்கு கூழாங்கற்கள் மாத்திரமே உதவாது என்ற புரிதல் ஏற்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

  இப்படி நினைப்பதை அப்படியே சொன்னால் மேலிருந்து கிடைத்த சோ கால்டு சுதந்திரம் போல இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவீர்கள் என்பதற்காகத்தான் இதனை விமர்சனமாக முன்வைத்து விவாதிக்க தாங்களும் முன்வந்து சரி தவறை முடிவுசெய்து அதன்பிறகு அதில் சரியானதை மக்களுக்கு தெரிவிக்கலாம் என கருதுகிறேன். இதுதானே சரியான அணுகுமுறை. கம்யூனிசம் வென்ற நாடுகளில் இந்த முறை சரி எனத்தானே நிரூபிக்கப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 7. சுதந்திரப்பொரட்டத்தில் ஈடுபட்டு, சந்தர்ப்பவசத்தால் தெலுங்கானா பொரட்டத்தில் இணைந்து செயல்பட்டவரின் வாரிசுகள் தீவிரவாதம் .ஆயுதகடத்தல்.போதைக்கடத்தல் என்று சீரழிந்த கதைதான் "கிருஷ்ணா நதிக்கரையில்" என்ற என் குரு நாவல்.வெளியாகி ஒரு மாதம் ஆகிறது.இந்தப்பா விகளில் யாரோ படித்துவிட்டு எனக்கு குண்டக்கமண்டக்க அஞ்சல் அட்டை அனுப்பியுளார்கள்....மாதவ்ஜி இவர்களை பொருட்படுத்தாதீர்கள்....காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 8. மிக மிகச் சரியானதொரு வார்த்தைப் பிரயோகம்’........அரசாங்கத்தை எதிர்க்கும் strike என்பது சகல ஆயுதங்களோடு...சர்வ வல்லமையோடு இருப்பவன் மீது எறியப் படும் சிறு கல் என்பது..’ அது சரி,இருப்பவன் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தைக் காட்டிலும், இல்லாதவன் இருப்பவனிடம் உள்ள இருப்பை பகிர்ந்து கொள்ளக் காட்டும் அவசரம் ஒரு யதார்த்தமாய் போய் விட்டது, இங்கு!!!

  பதிலளிநீக்கு
 9. "தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து சங்கத்திலேயே இப்படி தில்லாலங்கடி வேலை செய்து வேலை நிறுத்தம் செய்வது போல நடிக்கிறது என்றால் இந்தியா முழுவதும் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?"

  A responsible trade union not only protect the rights of the workers but also need to safeguard the job of the employee.

  This is not like attacking the govt forces from tribal belt and leave them in lurch to face the brunt of the police retaliation.

  Hope you will understand one day.

  பதிலளிநீக்கு
 10. மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த ஆறு வழக்கறிஞர்கள் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பேச வந்த கருணாநிதிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டினார்கள். கடந்த ஆண்டு போலீசார் நீதிமன்றத்தில் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பொறுப்பான நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகவே அந்த எதிர்ப்பு காட்டப்பட்டது.

  சட்டமன்றத்தில் மறுநாள் பேசிய கருணாநிதி இந்த கறுப்புக்கொடி போராட்டத்தை அம்பேத்கர் சிலை திற்ப்பு விழாவிற்கு எதிரான ஒன்றாக மடைமாற்றி பேசினார். அச்சட்டமன்றத்தில் அவரது கூட்டத்தினிடையில் அவரது சமாளிப்பை உங்களது கட்சி சட்டமன்ற தலைவர் பாராட்டி உள்ளார். மடைமாற்றி பிரச்சினையை தலித் விரோத இயக்கம் என முத்திரை குத்த நினைத்த்தை கண்டித்து எந்த கருத்தையும் பாலபாரதி பேசவில்லை. மாறாக சட்டப்படிதான் போராட்டம் நடத்த வேண்டும் என ம.உ.பா.மையத்திற்கு அறிவுறுத்தி உள்ளார்.

  அந்த வக்கீல்கள் கொடூரமாக தாக்கப்பட்டது, அதுவும் நீங்கள் மிகவும் மதிஃக்கும் நீதிமன்ற, சட்டமன்ற, பத்திரிக்கை யாளர்கள் முன்னாலே நடந்த இந்த கொடூரம் தினத்தந்தி போன்ற மக்கள் பெரும்பான்மையோர் வாசிக்கும் பத்திரிகைகளில் வெளிவந்த பிறகும், தங்களது கருத்து இந்த சம்பவத்தில் என்ன என சொல்லாத்து, இது போன்ற சம்பவம் நடந்த்தை மறக்க வேண்டும் என கருணாநிதி கோரியதை நீங்களும் ஏற்று அமைதி காப்பதாக புரிந்து கொள்ள லாமா என தோன்றுகிறது.சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆன பிறகும் தங்களது எதிர்வினை எதுவும் இல்லாமல் இருப்பது சரியா...

  பதிலளிநீக்கு
 11. ? அவர்களுக்கு!

  தவறான தகவல் தந்து, அதை உண்மை போல சித்தரிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள்.

  ஜனநாயகத்தில் கறுப்புக்கொடி காட்டுவது குற்றமல்ல என்றுதான் எம்.எல்.ஏ பாலபாரதி தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் அவருக்கும், அமைச்சருக்கும் நடந்த உரையாடல் இதுதான்.

  பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஒரு பிரச்சனை வருகிறபோது அதை நிதானமாக கையாண்டு முதல்வர் நேற்று பேசி இருக்கிறார். கறுப்புகொடி காட்டிய குழுவினர் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த போராட்டத்தை முறைப்படுத்தி இருக்க வேண்டும். அடிதடி சண்டை என்று சென்றதால் பிரச்சனை வேறுவிதமாக சென்றுவிட்டது.

  அமைச்சர் துரைமுருகன்: கறுப்பு கொடி காட்டப் போகிறோம் என்று யாரும் போலீசாரிடம் சொல்லவில்லை. அனுமதியும் கேட்கவில்லை. திருட்டுத்தனமாக கொண்டு வந்த கொடியை காட்டுவார்கள். அதை அப்படியே விழாவில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா?

  பாலபாரதி: கறுப்புக் கொடி காட்ட போலீஸ் அனுமதி கொடுப்பதே இல்லை. ஆகவேதான் தங்கள் உணர்வுகளை காட்ட போலீசுக்கு தெரியாமல் கறுப்புக் கொடி காட்டி இருக்கிறார்கள்.

  துரைமுருகன்: அனுமதி கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்தே இவர்கள் கறுப்புக் கொடி காட்டி காலித்தனம் செய்வார்கள். அதை எவனாவது பார்த்துக் கொண்டு பொறுத்து இருப்பானா? திமுகவில் மானம் உள்ளவன் கிடையாதா? உங்கள் தலைவர் முன்பு யாரும் கறுப்புக் கொடி காட்டினால் உங்கள் தொண்டர்கள் சும்மா இருப்பார்களா?

  பாலபாரதி: நேற்றைய நிகழ்ச்சியில் முதல்வர் நேர்த்தியாக சமாளித்தார். ஆனால் துரைமுருகன் இங்கு இவ்வளவு ஆவேசமாக பேச வேண்டியது இல்லை. இதை கையாண்ட முறையில்தான் கோளாறு என்று கூறுகிறேன்.

  இதனை தாங்கள் உங்கள் வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் உள்நோக்கம் கற்பித்துக் கொள்ளுங்கள். அதுதானே உங்களுடைய தீவீரப் பணியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு