-->

முன்பக்கம் , , � மீண்டும் சிறுவனானேன்!

மீண்டும் சிறுவனானேன்!

வெயில் ‘வந்து பார்’ என்றது. வெக்கைப் பிழம்புகளோடு காற்றும் கொதித்தது. செடிகளும் மரங்களும் இளமையிழந்து பஞ்சடைந்து போயின. கொடுக்காப்புளி மரத்திலிருந்து விட்டு விட்டு வந்த அணில் குரல் ‘ஐயோ, ஐயோ’வென ஒலித்தது. வெளியில் மிதக்கின்ற ஒன்றிரண்டு வண்ணத்துப் பூச்சிகளும், தட்டான்களும் எங்கோ கரையொதுங்கி விட்டன போல. தண்ணீர்க்குழாய் வாயில் அலகு விட்டு குருவியொன்று தண்ணீர் தேடிக்கொண்டு இருந்தது. உதிர்ந்த சருகு போல கிடந்தது தெரு.

ஞாயிற்றுக்கிழமை சுகம் அற்றுப்போயிருந்தது. குழந்தைகள் டி.வியில் புகுந்துகொள்ள, புத்தகம், கம்ப்யூட்டர், இசை எதிலும் மனம் ஒட்டாமல் கிடந்தேன். தூரத்தில், இன்னும் வீடுகள் கட்டப்படாத பிளாட்களில் காலையிலிருந்து  சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். கோடையின் சந்தோஷம் அவர்களிடமிருந்தது. அவ்வப்போது அவர்களைப் பார்த்து, பார்த்து ஏக்கமும், தவிப்பும் அடைந்து கொண்டு இருந்தேன்.

மதியம் மூன்று மூன்றரை மணி போலிருக்கும். திடுமென காற்று சுழன்று அடித்தது. குளிர்நது வீசியது. அதிர அதிர வானம் கொட்டியது. குழந்தைகளும் நானும் வாசலில் வந்து அதிசயம் போல பார்த்தோம். சந்தோஷம் பிய்த்துக் கொண்டு வந்தது. ஒரு கணத்தில் சூழல், வாழ்க்கை, ரசனை என எல்லாம் வேறு வேறு வண்ணங்களாகி விடுகின்றன.

“இங்கேயே நிற்பதற்கு, மொட்டை மாடியில் டாங்க்கை காலி செய்து, மழைத் தண்ணியை அதில் பிடிச்சு விடுங்களேன்” என்றாள் மனைவி. குடையோடு கொஞ்ச நேரம் நின்று வேலை செய்தவன், பின் குடையை விட்டு வெளியேறி மழையை ‘வந்து பார்’ என்றேன். முதலில் பதறிய மனைவி, பிறகு ரசிக்க ஆரம்பித்தாள். ‘நானும் வர்றேன்பா’ என்ற மகனை அடக்கினாள். மகள் வேகவேகமாய் என் மழைக் குதூகலத்தை போட்டோக்களாய் பிடிக்க ஆரம்பித்தாள்.

04

“கொட்டி யிடிக்குது மேகம்;
கூகூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளம் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையு மிடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா”

மகாகவியின் வரிகள்  பொங்க ஆரம்பித்தன. மேலே வந்த அப்பா, “ஏல என்ன இப்படி சின்னப் பையன் மாரி ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க” எனச் செல்லமாய்க் கடிந்து கொண்டார்கள். தூரத்தில் கிரிகெட் விளையாடிய சிறுவர்களை இப்போது அங்கே காணோம். செடிகளும், மரங்களும் இளமைக்குத் திரும்பியிருந்தன புத்தம் புதுசாய்!

Related Posts with Thumbnails

22 comments:

 1. நானே மழையில் நனைந்த சுகம் உங்கள் பதிவில்....

  ReplyDelete
 2. மழையனுபவம் தந்தது எழுத்து. :)

  ReplyDelete
 3. வறட்சியில் வாழும் இதயத்திற்கும் இந்த மழையும் அதன் அனுபவமும் கொஞ்சமேனும் குளிரூட்டித்தான் விடுகிறது....

  ReplyDelete
 4. Mazhai Oru Arputham!! Andha arputhathaiyum athai rasikkum manathaiyum Pathivil appadiye kondu vanthu irukkireergal!

  Nandri!!

  ReplyDelete
 5. வெறும் சத்தம் மட்டும் வரும் காற்றாடிக்கு கீழே அமர்ந்து அம்மாவுக்கு போன் செய்தபோது "இடியும் மின்னலுமாயிருக்கிறது, அப்புறமாய் பேசு" என்றார்கள். ஊரில் மழை என்ற தகவலே குளிர்ச்சியாக இருந்தது. மழை ஈரத்தில் நனைந்த தீராத பக்கங்களை வாசிப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

  ReplyDelete
 6. மழையில் நனைவது என்பது மிகவும் குதூகலமான ஒன்றுதான் அதிலும் நண்பர்களுடன் கூட்டாக மொட்டை மாடியில் ஆட்டம் போட்ட நிகழ்வுகளை மீட்டெடுத்தது உங்கள் இடுகை.

  ஆனால், வேறு சிலவும் தோன்றியது,
  செல்லுலாய்டுகளே நம் காதலையும், கனவுகளையும், குதூகலத்தையும் நிர்ணயிக்கின்றன என்றொரு விமர்சனப் பார்வை நினைவுக்கு வந்தது.

  அந்த வகையில் எழுத்தும் எழுத்தாளரும் நம்மை அறியாமல் நமது குதூகலத்தினுள், காதலில், கனவுகளில் நுழைகிறாரோ என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 7. மாதவராஜ் உங்கள் பதிவுகள் அருமை

  தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

  இப்படிக்கு
  டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

  கணேஷ் பாபு

  ReplyDelete
 8. நானே மழையில் நனைந்த மாதிரி இருந்தது!

  ReplyDelete
 9. உங்கள் புகைப்படமும், அதற்கேற்ற பாரதியின் வரிகளும் அப்படியே உங்கள் உணர்வுகளை காட்சியாக்கியிருக்கிறது. நன்றி பகிர்வுக்கு. மழையை கண்டால் பெரியவர்களும் சிரியவர்களாகிவிடுகிறோம். இந்த மழை அடிக்கடி வாரதா என்றும் நம்மை இளமையாக வைத்திற என்று ஏங்க வைக்குது இந்த பதிவு.மீண்டும் ஒரு முறை நன்றி.

  ReplyDelete
 10. மழையை ரசிக்க கூட சாத்தூர், ஆண்டிபட்டி, குணசீலம் போன்ற கிராமங்கள் சார்ந்த பகுதிகள் தேவை இன்று.

  சென்னையில் நீங்கள் மழையை ரசிக்க முடியாது. saalai எங்கும் தண்ணீர் தேங்கி போதுமடா சாமி என்று ஆகி விடும்.

  ReplyDelete
 11. இனிமே இப்படி பூச்சாண்டி போட்ட்டொவெல்லாம் போட்டு பயமுறுத்துணிங்கனா . அப்றம் வரவே மாட்டேன் ஆமா !

  ReplyDelete
 12. உணர்வுகளை அழகா சொல்லி இருக்கிறீர்கள் . அருமை !
  பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன்

  ReplyDelete
 13. மழை மழை நோக்குதலும் நனைதலும் தான் எத்தனை இன்பம் .நனையும் போது நாமும் மழையும் ஒன்றாகிவிடுகிறோம் அல்லவா?

  ReplyDelete
 14. கோடை மழையின் சுகமே தனிதான்.
  அம்முவுக்கு நன்றி, மொட்டை மாடிக்கு அனுப்பியதற்கு.

  ReplyDelete
 15. எங்க ஊருக்கு மழையை வரக் கூறுங்கள்.ஆசையாக உள்ளது.
  தமிழ்நாட்டில் அதிக வெப்பம் இங்க தாங்க---விமலா வித்யா

  ReplyDelete
 16. //மகாகவியின் வரிகள் பொங்க ஆரம்பித்தன.//

  அருமை

  ReplyDelete
 17. நல்ல பகிர்வு :)

  வரிகள் அருமை :)

  ReplyDelete
 18. கோடை மழை அற்புதமான அனுபவம். என்னோடு அதனை ரசித்த அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete