மாதவராஜ் பக்கங்கள் - 22

கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கிறது இன்று. வங்கியில், சுழல் விசிறிக்கு அடியில் கவுண்டரில் இருப்பதை இளைப்பாறுவதாக உணர்கிறேன். அரக்கப் பரக்க மனிதர்கள் பஸ்ஸுக்காக அலைந்து கிடக்கும் மதுரை மாட்டுத்தாவணியும், புழுதியில் மிதக்கும் ராமநாதபுரத்து சாலைகளும், விரிந்து சுத்தமாய் இருக்கும் காரைக்குடி தெருக்களும் இப்போது நிதானமாய் தெரிகின்றன. வேர்வை காய்ந்த நினைவுகளில் இப்போது ஒரு இளங்காற்று தழுவிச் செல்கிறது.

மூன்று நாட்கள் தொடர்ந்த பயணம் களைப்பாய் இருந்தாலும், ‘நேற்று இன்னேரம்’ என்று நினைக்கும் போது ஒரு சுகம் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. ஒருநாள் மதுரை, அடுத்தநாள் இராமநாதபுரம், நேற்று காரைக்குடி என எங்கள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் நடந்த வட்டாரக்கூட்டங்களில் ஆவேசமாய் பேசிவிட்டு, தோழர்களோடு உடகார்ந்து திட்டமிட்டு, அதற்கப்புறம் இரவு பத்து பதினோரு மணிக்கு மேல் பஸ்ஸில் கிளம்பி, ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் வந்து வீட்டுக்கதவை தட்டி நின்றபடி இந்த மூன்று நாட்களும் கடந்திருக்கின்றன.

போகும்போது வேர்வையிலும், புழுக்கத்திலும் நசநசக்கும் மதுரை மாட்டுத்தாவணி, திரும்பி இரவில் வரும்போது விளக்குகளின் வெளிச்சத்தில் வேறொரு கோலமாய் இருக்கிறது. கீழே கால்வைத்ததும் ‘சார் மெட்ராசுக்கா” என்று கொஞ்சம் பேர் மாறி மாறி கேட்டுக்கொண்டே கூட வருகிறார்க்ள். அப்போதும் பெரும் கொப்பரைகளில் பலகாரங்கள் வெந்து கொண்டு இருக்கின்றன. பூக்களை தொடுத்துக் கொண்டு வரிசையாய் பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பக்கத்தில் பேப்பர்கள் விரித்து குழந்தைகள் தூங்குகின்றனர். பாய்லர்களில் ஆவி பறக்கிறது. செல்போன், டிவிடி கடைகளில் பாட்டுச் சத்தங்கள் அலறுகின்றன. பிளாட்பாரங்களில் மனிதர்கள் காத்துக் கிடக்கிறார்கள் கொத்துக் கொத்தாய்.

வெயில் காலங்களில் பயணம் செய்வது பெரும் கொடுமை. பஸ்ஸில் ஏறி, நெரிசலில் அவிந்து உட்கார்ந்து இருக்கும் நேரத்தில், டிரைவர் ஏறி  கதவைச் சாத்தி, பஸ்ஸை இயக்க ஆரம்பிக்கிற அந்தக் கணம் எப்பேர்ப்பட்டதாயிருக்கிறது. எதோ ஒருசில நாட்கள் இப்படி பயணம் செய்வதற்கே பெரிதாய் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த நாம் அலுத்துக் கொள்கிறோம். பலருக்கு வாழ்க்கையே இப்படித்தான் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் அம்முவின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லையென்று, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றோம். கோர்ட், டை சகிதம் அருகிலிருந்தவர், தினம்தோறும் காலையில் சென்னைக்குச் சென்றுவிட்டு, மாலையில் மதுரைக்கு  திரும்புவதாகச் சொன்னார். அப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கத்தான் செய்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம். இப்படியெல்லாம் தூக்கமற்று அலைந்து திரிந்து விட்டு, வீட்டிற்கு வந்து  தரையில் கால்நீட்டி படுக்கும்போது இருக்கிற சுகம் இருக்கிறதே, அது எந்த விமானத்திலும் கிடைக்காதப்பா!

 

ன்றும் வீட்டில் இருக்க முடியாது. திருநெல்வேலியில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் சாயங்காலம் 6 மணிக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 'BIRD MAN', வள்ளித்தாய், A life for Birds  என்று மூன்று ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு, அவை குறித்து பேசப்படுகின்றன. பேராசிரியர் தொ.பரமசிவன், டி.தருமராஜன், மற்றும் நானும் பேசுகிறோம். அவை குறித்த அனுபவங்களோடு வருகிறேன்.

 

ன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள். பல வருடங்களாக நேரில் சென்று பார்த்து வந்து கொண்டு இருந்தோம். இந்த தடவை செல்ல முடியவில்லை. காலையில் தொலைபேசியில் பேசி வாழ்த்துக்கள் சொன்னோம். சந்தோஷப்பட்டார்.

மூன்று, நான்கு நாட்களாக வலைப்பக்கம் சரியாக வரமுடியவில்லை. இரண்டு பதிவுகள் மட்டும் எப்படியோ எழுதியிருந்தேன். நண்பர்களின் பதிவுகள் எதையும் படிக்க முடியவில்லை. கூகிள் ரீடர் நிரம்பி வழிகிறது. ஆற அமர உட்கார்ந்து படிக்க வேண்டும். நண்பர்கள் மன்னிப்பீர்களாக!

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //இப்படியெல்லாம் தூக்கமற்று அலைந்து திரிந்து விட்டு, வீட்டிற்கு வந்து தரையில் கால்நீட்டி படுக்கும்போது இருக்கிற சுகம் இருக்கிறதே, அது எந்த விமானத்திலும் கிடைக்காதப்பா!//

    உண்மை மாதவ் அண்ணா, அந்த சுகமே தனி. ஆவணப்பட விழா அனுபவங்களுக்காக காத்திருக்கிறோம்.

    மதிப்பிற்குரிய ஜெயகாந்தன் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. என்னடா உடனே நன்றி சொல்லி மறுமொழி தருவாரே... பதிலே இல்லையே என்று பார்த்தேன்...

    காரைக்குடி எனது சொந்த ஊர் உங்கள் வார்த்தைகளில் பார்த்ததும் போய் வந்த திருப்தி...

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சில நேரங்களில் ஓட்டங்களும் ஸ்வாரஸ்யமாய்த்தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  5. //விரிந்து சுத்தமாய் இருக்கும் காரைக்குடி தெருக்களும் //

    காரைக்குடி என்னோட ஊர்.
    நன்றி தோழரே!! :-)

    பதிலளிநீக்கு
  6. மதவ்ஜி! சனிக்ககிழமை மாலை ஒரு மணிக்கு கிளம்பி நாகர்கொவில்,அங்கிருந்து இரவு சேலம் போய் ஞாயிறு இரவு மதுரை வருவேன். இது தவறு என்பதை என் உடல் பதிக்கப்பட்ட பிறகுதான் உணர்ந்தேன்.ஆலொசனை கூற வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை.உங்களைவிட வயதிலாவது மூத்தவன் என்ற வகையில் கூறுகிறேன்.தயவுசெய்து அலைச்செலை குறையுங்கள்...காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  7. Happy Birthday to Jayakantan Sir.

    I have seen in my childhood the selfless sacrifices of trade union leaders going on hunger strike for getting wage revision and regularising the contractual position to permanent, etc, for the workers of an industry. Striking part is the leader was not working in that industry but fighting for their rights, living with the minmum wages provided by the trade union.

    Your selfless action will not go waste. Ithu oru unnathamana seyal.

    Anbudan,
    Swami

    பதிலளிநீக்கு
  8. ராம்ஜி யாஹூ!
    நன்றி


    செ.சரவணக்குமார்!
    தம்பி எப்படியிருக்கீங்க. உங்கள் பக்கங்களுக்கு ரொம்ப நாளாய் வரவில்லை. நேற்று வந்து படித்தேன். உங்களுக்கு மெயிலில் எழுதுகிறேன்.

    ஆ...ஆ...புரிந்துவிட்டது!
    காரைக்குடி உங்கள் சொந்த ஊரா.... ஆஹா. எனக்குப் பிடித்தமான ஊர்களில் அது ஒன்று. இன்னும் விரிவாக எழுதுவேன்.


    விடுதலைவீரா!
    மிக்க நன்றி நண்பரே!


    அன்புடன் அருணா!
    ஆமாங்க. ஓடி முடித்த பிறகு சுகமாக இருக்கும். அந்த உணர்வில் அடுத்த ஓட்டத்துக்கு தயாராகி விடுகிறோம்.


    செந்தில்நாதன்!
    காரைக்குடி உங்களுக்கும் சொந்த ஊரா...! அருமையான ஊர் நண்பரே!


    காஸயபன்!
    அறிவுரைகளுக்கு மிக்க நன்றி தோழரே. நிச்சயமாய் மனதில் குறித்துக் கொள்கிறேன்.


    சுவாமி!
    வாங்க. எப்படியிருக்கீங்க.
    புரிதலுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!