-->

முன்பக்கம் , , � காதலுக்கு மரியாதை அல்லது கொலைகளுக்கு மரியாதை!

காதலுக்கு மரியாதை அல்லது கொலைகளுக்கு மரியாதை!

திட்டமிட்டு, இரக்கமற்று நடத்தப்பட்ட அந்தப் படுகொலைகளுக்கான தீர்ப்பின் வரிகளைப் படிக்கும்போது அதிர்ச்சியாய் இருக்கிறது. அதை எதிர்த்து நிற்கும் அந்தப் பெண்ணைப் பார்க்க பெருமையாய் இருக்கிறது. பதிவர்கள் முகிலன், கார்த்திக் மற்றும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே சுருக்கமாக பதிவு எழுதி இருந்த போதிலும், இதுகுறித்து மேலும் சொல்வதற்கும், சிந்திப்பதற்கும் இருப்பதாகப் படுவதால்....

 

பிராமண ஜாதியைச் சேர்ந்த சுஷ்மா திவாரி என்னும் பெண், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரபு என்னும் பையனைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள். அவளது மொத்தக் குடும்பமும் எதிர்க்கிறது. சுஷ்மா தனது கணவனோடும், அவனது குடும்பத்தாரோடும் வாழ்ந்து வருகிறாள். ஒருநாள் ஏழு மாத கர்ப்பிணியான சுஷ்மா அவளது உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கும் நேரம், சுஷ்மாவின் அண்ணன் திலிப் இன்னும் சிலரோடு சென்று சுஷ்மாவின் கணவன் பிரபு, அவனது தந்தை, அவனது உடன்பிறந்த சிறுவர்களைக் கொன்று விடுகிறான். கொதித்துப் போகும் சுஷ்மா, தனது அண்ணன் மற்றும் தன் குடும்பத்தாரின் மீது  வழக்குத் தொடுக்கிறாள். மும்பை உயர்நீதிமன்றத்தில் அவளது அண்ணனுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கிறது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. தூக்குத்தண்டனை விலக்கப்பட்டு, 25 வருடங்கள் சிறைத்தண்டனையாக உச்சநீதிமன்றம் தீர்ப்பை திருத்தி எழுதுகிறது.

மரணதண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் குரல் எழும்பி வரும் இந்த காலக்கட்டத்தில் தூக்குத்தண்டனை விலக்கப்பட்டது சரியான விஷயம்தான். அதுகுறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்தான் இப்போது சர்ச்சைக்கும், விவாதத்துக்கும் உரியதாய் முன்வந்திருக்கின்றன.

 

 • தன் குடும்பத்தின் மரியாதையை தக்கவைப்பதற்காக இந்தக் கொலையை திலீப் செய்திருக்கிறான். (Therefore, to preserve the family honour, Dilip had taken the revenge of the so-called insult of his family.)

 

 • சம்பந்தமில்லாதவர்களும் தன் குடும்ப விவகாரங்களில் மூக்கை நுழைத்து கேலியும் கிண்டலும் பேசுவதால் கஷ்டப்பட்டு இருக்கிறான். தனது இளைய தங்கையினால் தன் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அவமானத்தை துடைக்க வேண்டுமென்பது திலிப்பின் சிந்தனையில் ஏழு நீண்ட மாதங்களாக இருந்திருக்கிறது. (At times, he has to suffer taunts and snide remarks even from the persons who really have no business to poke their nose into the affairs of the family. Dilip, therefore, must have been a prey of the so-called insult which his younger sister had imposed upon his family and that must have been in his mind for seven long months.)

 

 • திலிப்பின் அம்மா சுஷ்மாவை திரும்ப அழைப்பதற்காக முயற்சி செய்திருப்பது சாட்சியத்தால் தெரிய வருகிறது. சுஷ்மாவின் அக்கா கல்பனாவும் அவளைப் பார்க்க கல்லூரிக்குச் சென்றிருக்கிறாள். அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மாறாக சுஷ்மா தொடர்ந்து கல்லூரிக்குச் சென்றதன் மூலம் இந்த சமூகத்தோடு கலந்தவளாயிருந்தாள். இதுதான் குறிப்பாக, திலிப்பிற்கு அடிபட்ட காயத்திற்கு மேலும் அவமானம் தருவதாக இருந்திருக்கிறது. (It has come in evidence that the mother of Dilip tried to lure back Sushma and so did her other married sister Kalpana who actually went to meet Sushma in her college. Those efforts paid no dividend. Instead, Sushma kept attending the college, thereby openly mixing with the society. This must have added insult to the injury felt by the family members and more particularly, accused Dilip)

இதுபோன்ற வரிகள் திரும்பத் திரும்ப வருகின்றன. நோக்கம் திலிப்பின் தண்டனையைக் குறைப்பது என்றாலும் உள்நோக்கம் வேறாகப் புரிய நேரிடுகிறது. இந்த அமைப்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், பழமைகளின் இறுக்கங்களையும், அதில் உடைப்பு ஏற்படுத்துவதை தாங்கிக்கொள்ள முடியாது என்பதையும் கோடிட்டுக் காண்பிக்கிறது.

‘சுஷ்மா கல்லூரிக்குத் தொடர்ந்து சென்றதன் மூலம் சமூகத்தோடு கலந்தவளாயிருந்தாள்’ என்னும் தீர்ப்புரை வார்த்தைகளுக்குள் எத்தனை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. சுஷ்மா வெளியே தலைகாட்ட முடியாமல், கல்லூரிக்குச் செல்ல முடியாமல், சமூகத்தோடு கலக்க முடியாமல் இருந்தால் அவளது அண்ணன் பிரபுவுக்கு பழிவாங்கும் எண்ணம் வந்திருக்காது என்பதுதானே இதன் பொருள்? அவள் இந்த சமூகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவளது குடும்பத்தின் கோபம் தணிந்திருக்கும் என்பதுதானே சொல்லாமல் சொல்லும் தர்க்கம்? மதிப்புமிக்க நமது நீதி தேவதைகளின் குரல்கள் இப்படியா ஒலிக்க வேண்டும்?

 

நிறைய சினிமாப்படங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திருக்கலாம். தங்கள் வீட்டுப் பெண்ணோ, ஆணோ தங்களைவிட பொருளாதாரத்திலோ, ஜாதியிலோ வேறுபட்ட எதிர் பாலினத்தைக் காதலித்துவிட்டால் போதும். தானும், தன் சதைகளும் சேர்ந்தாட கொதித்துப் போகும் பாத்திரங்கள் பல நினைவுக்கு வரலாம். “நம்ம அந்தஸ்து என்னாவது”, “நம்ம கௌரவம் என்னாவாது”, ”நம்ம மானமும், மரியாதையும் கப்பலேறுது”, ”நாலு பேரு நம்மையும், நம் குடும்பத்தையும் பத்தி என்னப் பேசுவாங்க”, “நாம எப்படி வெளியே தலைகாட்டுவது” போன்ற காத்திரமான வசனங்களைக் கேட்டு இருக்கலாம். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நம்பியார் அடுத்த தலைமுறையிலும் கல்யாணகுமாரும், தேவிகாவும் இணையாமல் இருக்கக் காத்திருப்பார். இவர்களெல்லாம் வில்லன்களாகவோ, அல்லது மனம் ஒதுக்கும் மனிதர்களாகவோ பார்வையாளர்களுக்குள் செலுத்தப்பட்டு இருப்பார்கள்.

பாண்டவர் பூமி படம் இதில் வித்தியாசமானது. பாசம், அன்பு, சந்தோஷம் பொங்கும் குடும்பத்தில் ஒரு பெண், விரோதம் பாராட்டும் இன்னொரு குடும்பத்துப் பையனை காதலித்துத் திருமணம் செய்துகொள்வாள். குடியே முழுகிப்போனதாய் வீடு சோகத்தில் தவிக்கும். அம்மா இறந்துபோவாள். உருத்தாய் இருக்கிற அண்ணன்களில் ஒருவன் தங்கையையும், அந்தப் பையனையும் வெட்டிக் கொன்றுவிடுவான். இந்த இடத்தில் எத்தனைப் பார்வையாளர்களுக்கு அந்த அண்ணன் மீது கோபமும், வெறுப்பும் வந்திருக்கும்? ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம், ஆயிரம் மாற்றங்கள்’எனும் பாடலின் வரிகள் நிறைந்திட அந்தக் குடும்பத்தின் மீது பிரியமும், அதைக் கெடுத்திட்ட தங்கையின் மீது கோபமுமே படிந்திருக்கும்.

அவரவர் வீட்டிற்கு வெளியே ஒரு நியாயம் இருப்பதையும், அவரவர் வீட்டிற்குள்ளே வேறொரு நியாயம் இருப்பதையும்தான் பாண்டவர் பூமி சொல்கிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து விலகி, தர்க்க ரீதியாக யோசித்தால் இந்த உண்மை விளங்கும். வீட்டிற்கு வெளியே வந்து நிற்கச் செய்யும். உச்ச நீதிமன்றமோ அந்த வீட்டிற்குள்ளே இருந்துகொண்டு தீர்ப்பு எழுதியிருப்பது போல இருக்கிறது. அந்த தீர்ப்பில் காணப்படும் ‘மரியாதைக் கொலை’ என்னும் சொல்லாடல் நடுங்க வைக்கிறது. சமூகத்தில் காலகாலமாய் புரையோடி இருக்கும் அத்தனை அழுக்குகளையும் தோலாய் வரித்துக்கொண்டு நீண்டு நெளிந்து கொண்டு இருக்கிறது. நாகரீக உலகத்தை விழுங்கிக் கொண்டு இருக்கிறது.

சுஷ்மாவின் வழக்கையும், வாழ்க்கையையும் அறியும்போது ‘காதலுக்கு மரியாதை’ படத்தைப் பற்றிய இதுவரையிலான மதிப்பீடுகள் உடைந்து நொறுங்குகின்றன. மறுவாசிப்புக்கு உட்படுத்த நேரிடுகிறது. அந்தப் படம் காதலுக்கு மரியாதை பற்றிப் பேசுகிறதா? குடும்பத்தின் மரியாதை பற்றி பேசுகிறதா? ‘குடும்ப மரியாதையை இளையவர்கள் நீங்கள் பேணுங்கள், காதலுக்கு மரியாதையை முதியவர்கள் நாங்கள் செய்கிறோம்’ எனச் சொல்வது போல இப்போது கேட்கிறது. படத்தில் வரும் விஜய், ஷாலினி குடும்பங்கள் மதரீதியாக வேறுபட்டிருந்தாலும், அந்தஸ்தில், மரியாதையில் சமமானவையாகவே இருக்கின்றன. ஒருவேளை விஜய் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்து சாதாரண இளைஞனாயிருந்தால் ஷாலினியின் அண்ணன்கள் நிச்சயம் கடைசிவரை வெறியோடு அலைந்து இருவரையும் வெட்டிப் போட்டு இருப்பார்கள். கொலைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு இருக்கும். அதுதான் சுஷ்மாவுக்கு நேர்ந்திருக்கிறது.

 

ந்த மரியாதைக் கொலைகளைச் செய்வது சொந்தமும், சொந்த ஜாதியும், சொந்த மதமுமே. குடும்பத்தை, ஊரைப் பகைத்துக்கொண்டு காதலித்து ஓடிப்போன இளம் ஆண் பெண்களே இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு இரையானவர்களாய் இருக்கிறார்கள். இந்த மண்ணெங்கும் இரத்தம் சொட்ட சொட்ட அப்படியான கதைகள் நிறைந்திருக்கின்றன. வட இந்தியாவில் மிக அதிகமாகவும், குறிப்பாக பஞ்சாபிலும், ஹரியானாவிலும் இதுபோன்ற கொலைகள் அடிக்கடியும் நடந்துகொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் சாட்சியங்களற்று, கவனத்துக்கு வராமல் போன கொலைகளாகவே இவை இருக்கின்றன. 2007ம் ஆண்டில் மட்டும், காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு, கவனத்துக்கு வந்த இதுபோன்ற கொலைகளின் எண்ணிக்கை 655. தேசத்துக்கும், மண்ணுக்கும், மனித நாகரீகத்துக்கும் மரியாதையாகவா இருக்கிறது?

பெண்களே குடும்பத்தின் விளக்காகவும், விளக்குமாறாகவும் பார்க்கப்படுவதால்தான் இதுபோன்ற மரியாதைக்கொலைகள் நடக்கின்றன தங்கள் வீட்டிலிருந்து போகின்ற பெண்ணானாலும், வீட்டிற்கு வருகின்ற பெண்ணானாலும், இந்த ‘மரியாதைப் பார்வை’க்கு பங்கம் நேராமல் இருக்க வேண்டும் என்பது விதியாக பேணப்படுகிறது. அவளால் அவமானமோ, கறைகளோ ஏற்பட்டால் அதைக் கழுவிவிடவே இந்தக் கொலைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. அது தவறே இல்லையென்னும் புரிதல் குடும்பம், சமூக அமைப்புக்குள்ளே இருக்கிறது. ஊர்ப் பஞ்சாயத்திலேயே முடிவுசெய்யப்பட்டு பல மரியாதைக் கொலைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

பெண்களுக்கான உரிமைகள் குறித்து பிரக்ஞை ஏற்படுத்தப்பட்டு, அதற்கான உரையாடல் நடத்தப்பட்டு இன்று கொஞ்சம் சுதந்திரவெளியில் பெண்கள் பிரவேசிக்க ஆரம்பித்திருப்பதைக் காணமுடிகிறது. அதில் துளிர்க்கும் காதல் சாதி, மத அடையாளங்களைத் தாண்டுகிறது. தாங்கிக்கொள்ள முடியாத பழைய சமூகம் தனது பிடியை மேலும் இறுக்குகிறது. அப்படித்தான் இளம் ஆண்களின், பெண்களின் இரத்தம் மரியாதையோடு சிந்திக்கொண்டு இருக்கிறது.

 

.நா.சபையின் அறிக்கையொன்றில் இந்தியாவிலும், இன்னும் சில நாடுகளிலும் இதுபோன்ற மரியாதைக் கொலைகள் நடப்பதாக பதிவு செய்யப்பட்டு இருந்திருக்கிறது. பா.ஜ.கவின் இராஜ்யசபா எம்.பியாக இருந்த அலுவாலியா என்பவர் U.N.'s Social, Humanitarian and Cultural Committee யின் பிரதிநிதியாக கலந்துகொண்டு, ஐ.நாவின் அறிக்கையை மறுத்திருக்கிறார். அவை உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்றும் இந்தியாவில் அப்படி எதுவும் நடக்கவில்லையென்றும் சொல்லி உண்மைக்கும், இந்தியாவுக்கும் மரியாதை செய்துள்ளார். இதுவே அரசின்  நிலைபாடாகவும் இருக்கிறது. ஜாதி விட்டு, மதம் விட்டு திருமணம் செய்யப்படுவதை சட்டம் அனுமதிக்கிறது. உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டால் ரூ.50000/- கொடுக்கிறது. படிப்பு, பணி ஆகிய இடங்களில் முன்னுரிமை அளிக்கிறது. எல்லாம் சரிதான். ஆனால் பாதுகாப்பு?

ஒரு தார்மீக கோபத்தோடு அரசு குறுக்கீடு செய்தாக வேண்டிய நேரம் இது. இதுபோன்ற காதலர்களின் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். எதிர்காலம் குறித்து நிச்சயமான  அக்கறை காட்டப்பட வேண்டும். இந்தக் கொலைகளை மரியாதை என்ற அடைமொழியோடு அடையாளப்படுத்த  முயற்சிக்காமல், காட்டுமிராண்டித்தனமானது என நீதித்துறை சுட்டிக்காட்ட வேண்டும். மரியாதைக் கொலைகள் செய்பவர்கள் மீது கடும் தண்டனை (மரண தண்டனை தவிர்த்து) விதிக்கப்பட வேண்டும். 

இந்த மரியாதைக் கொலைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருவதில் முன் நிற்கின்றன  இடதுசாரிக் கட்சிகளும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும். இவ்வகையிலான காதலர்களைக் காப்பாற்றுவதிலும், கொலைகளை அம்பலப்படுத்துவதிலும் தன்னால் இயன்றவரை முயற்சிகளைச் செய்கின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய ஒரு சமூகத்தில், இதுபோன்ற மரியாதைக் கொலைகள், அந்த பாகுபாடுகளைத் தக்கவைத்துக் கொள்ளவே நடத்தப்படுகின்றன என்கிற அடிப்படை புரிதலை ஏற்படுத்த பிரச்சாரம் செய்கின்றன. அமைப்பையே புரட்டிப் போடும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டால் ஒழிய இந்தக் கொடுமைகளுக்கு ஒரு தீர்வு வராது. அதற்கான ஒரு மெழுகுவர்த்தியை இப்போது ஏற்றி வைத்து இருக்கிறாள் சுஷ்மா!

 

sushma thiwariருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இதுபோன்ற சமூக நோய்கள் இருக்கின்றன. அதிலொன்றுதான் என் பிரச்சினையும். எத்தனையோ பேர் இதுபோல மதத்தின் பேராலும், ஜாதியின் பேராலும் கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.” என்ற உறுதியோடு சுஷ்மா உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வரிகளை எதிர்த்து போராடுகிறாள்.

 

இன்னொரு திருமணம் செய்துகொள்ளப் போவதில்லையெனவும், இனி தன் குழந்தைதான் தனக்கு எல்லாமே என்று சொன்னாலும் அன்பிற்குரிய சுஷ்மா எல்லோருக்காகவும் நம்முன் நிற்கிறாள். கடந்த காலத்தின் இருட்டு, எதிர்காலத்திற்குள்ளும் ஊடுருவி விடக்கூடாது என நம்முன் நடக்கிறாள். தன் கைக்குழந்தையோடு அவள் நம்பிக்கையாக உலகின் முன்னே காட்சியளிக்கிறாள்.

Related Posts with Thumbnails

20 comments:

 1. சுஷ்மாவின் உறுதிக்கு ஒரு (ஓ)ட்டு!

  ReplyDelete
 2. /சுஷ்மா கல்லூரிக்குத் தொடர்ந்து சென்றதன் மூலம் சமூகத்தோடு கலந்தவளாயிருந்தாள்’ என்னும் தீர்ப்புரை வார்த்தைகளுக்குள் எத்தனை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன/
  உண்மைதான் ...கோடி அர்த்தங்க்ள்!

  ReplyDelete
 3. கொடுமை!
  அதை விடக் கொடுமை, நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் வரிகள்.

  இந்த மாதிரி காட்டுமிராண்டிகளின் அட்டகாசம், இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது வெட்கக்கேடு.

  ReplyDelete
 4. இந்த மாதிரி காட்டுமிராண்டிகளின் அட்டகாசம், இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது வெட்கக்கேடு
  sariyana varigal
  ----------------------------------
  ungaludaya books kuwait irundu yappdi vagalam anuppevaika mudiyuma Azeem

  ReplyDelete
 5. ‘சுஷ்மா கல்லூரிக்குத் தொடர்ந்து சென்றதன் மூலம் சமூகத்தோடு கலந்தவளாயிருந்தாள்’ என்னும் தீர்ப்புரை வார்த்தைகளுக்குள் எத்தனை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. சுஷ்மா வெளியே தலைகாட்ட முடியாமல், கல்லூரிக்குச் செல்ல முடியாமல், சமூகத்தோடு கலக்க முடியாமல் இருந்தால் அவளது அண்ணன் பிரபுவுக்கு பழிவாங்கும் எண்ணம் வந்திருக்காது என்பதுதானே இதன் பொருள்? அவள் இந்த சமூகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவளது குடும்பத்தின் கோபம் தணிந்திருக்கும் என்பதுதானே சொல்லாமல் சொல்லும் தர்க்கம்? மதிப்புமிக்க நமது நீதி தேவதைகளின் குரல்கள் இப்படியா ஒலிக்க வேண்டும்?
  ////
  அநியாயம்

  ReplyDelete
 6. இது ஒரு கொடுமையன் விஷயம். அதுவும் ஒரு நீதிபதி இதை ஆமொதிபதுபோல் தீர்ப்பு வழங்குவது இன்னும் மோசமான செயல். இதைவிட மோசம் இது போன்ற மரியதை கொலைகள் இன்னும் மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் நடக்கிறது. அப்பேற்பட்ட கொலைகள் போலீசாரிடம் தெரிவிப்பதே இல்லை. முதல் அறிக்கை கூட பதிவு ஆகவில்லை. மேலும் இது எல்லாமதம் மற்றும் ஜாதிகளிலும் நடக்கிறது

  ReplyDelete
 7. தீர்ப்பினை முழுதும் படிக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றும் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு உளறக் கூடாது.
  குற்றம் இழைத்தவர் ஏன் இழைத்தார் என்ற பிண்ணணியை அலசும் போது எழுதப்பட்டவை அவை,அதை சரி என்று தீர்ப்பு சொல்லவில்லை என்பதை கவனிக்கவில்லையா.கொடுக்கப்பட்ட தண்டனை 25 ஆண்டுகள். மேலும்
  நீதிபதிகள் தூக்கு தண்டனையை வெறும் ஆயுள் தண்டனை அல்லது 10ஆண்டு தண்டனை என்று குறைக்கவில்லை.உணர்ச்சி வசப்பட்டு படிக்க் வேண்டிய முற்போக்கு இலக்கியம் அல்ல தீர்ப்புகள்.

  ReplyDelete
 8. அனானி நண்பருக்கு வணக்கம்.
  //குற்றம் இழைத்தவர் ஏன் இழைத்தார் என்ற பிண்ணணியை அலசும் போது எழுதப்பட்டவை அவை//
  உண்மை. அதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன். இங்கே நான் என்ன உளறி இருக்கிறேன் ஐயா?
  It is because of this that we have ventured to consider the mindset of accused No.1, Dilip and the vicious caste grip that might have catapulted the crime committed by him. என்று சொல்லப்படும் தீர்ப்பில், திலிப்பின் mindsetஐ எப்படி கோர்ட் பார்த்திருக்கிறது என்பதையே எனது பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன்.

  தீர்ப்பைப் பற்றி நான் குறை கூறவில்லையே. இதனை honour killing என்று சொல்லப்படுவதை இன்று நாடு முழுவதிலுமுள்ள பல அமைப்புகள் விவாதிக்கிறார்கள். அதைத்தான் நானும் இங்கே சொல்ல முயன்றிருக்கிறேன்.

  சரி, நண்பரே! முற்போக்கு இலக்கியம் மேல் உங்களுக்கு அப்படியொரு கோபம்? புரிகிறது.

  ReplyDelete
 9. சில நேரத்தில்.....
  காதலுக்கு மரியாதை!!!!

  பல நேரத்தில்......
  கொலைகளுக்கு ம்ரியாதை!!!!

  ReplyDelete
 10. அண்ணா! தெளிவாய் பதிவு செய்துள்ளீர்கள்.மரண தண்டனை குறித்த உங்களது பார்வை பெரும்பாலான பதிவர்களிடமிருந்து மாறுபட்டதாலே நான் இது சம்பந்தமாய் ஒரு இடுகை இட நேர்ந்தது.

  ஒரு மேல்முறையீட்டு மனுவில் தண்டனை குறைக்கப்பட்ட பட்சத்தில் அந்த தண்டனை குறைப்பிற்கான காரணத்தை விளக்குவது இயல்பான ஒரு விஷயம். அது அந்த குறிப்பிட்ட நீதிபதியின் வழக்கின் மீதான பார்வையை சார்ந்தது....அதில் அவர் அளித்த விளக்கங்கள் குறித்தான விஷயங்களில் விவாதிப்பதை ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வைப்பதோ இயக்கங்கள் காண்பதோ ஒரு முற்போக்கான சிந்தனையாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.

  ReplyDelete
 11. மாதவாரஜ் சிறப்பான பதிவு..
  னமத் நாட்டின் நீதி மன்றங்கள் இப்படி தொடர்ந்து அதிர்ச்சிகரமான தீர்ப்பை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இவைகளை பொதுவெளியில் விவாதத்திற்கு உட்படுத்தாமல் மாற்றங்களை கொண்டுவர இய்லாது.

  ReplyDelete
 12. எனக்கும் இதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடுமோ என்ற பயத்தில்தான் அமைதியாக இருந்துவிட்டேன்.

  சில வழக்குகளில் பென்ச்களில் சில நீதிபதிகள் ஒரு கருத்தையும், சில நீதிபதிகள் எதிரான கருத்தையும் கொண்டு, பெரும்பான்மையாக ஒரு தீர்ப்புக் கொடுக்கிறார்கள். ஒரே சாட்சிகள், ஒரே வாதங்கள், அதே சட்டங்கள், ஒரே நேரத்தில் அருகருகே அமர்ந்திருப்பவர்களுக்கு வெவ்வ்வெறு கருத்துக்கள் தோன்றுகிறதே, அப்படியென்றால் தீர்ப்புகள் சட்டங்கள் மற்றும் வாதங்களின் அடிப்படையிலா.., அல்லது தனிமனிதனின் எண்ணங்களில் அடிப்படையிலா..,


  என் குழப்பங்களைச் சொல்லி இன்னும் உங்களை நான் குழப்பவிரும்பவில்லை..,

  ReplyDelete
 13. Very nice post..
  Its really bad to hear that news

  ReplyDelete
 14. இது போன்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் நீதியின் பிடியிலும் சிக்கிச் சிதைவுறுவது ஏமாற்றத்திற்குரியது! எத்தனை வளர்ந்தாலும் இந்த மாதிரியான சம்பவங்கள் சமூகம் மாற்றங்களுக்கு ஆட்படவில்லை என்றே தோன்றுகிறது!

  ReplyDelete
 15. ஐந்திணை!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  அன்புடன் அருணா!
  நன்றிங்க.


  ஜோ!
  பகிர்வுக்கு மிக்க நன்றி.


  அஜீம்!
  நன்றி.


  பிரியமுடன் பிரபு!
  நன்றி.

  ReplyDelete
 16. rsrirams!

  நீங்கள் சொல்வது உண்மையே. இத சமூகம் கண்டுகொள்ளாமல் செல்வதுதான் ஆபத்து.  பொன்ராஜ்!
  நன்றி.


  அண்டோ!
  நன்றி.


  நட்புடன் ரமேஷ்!
  நன்றி.

  ReplyDelete
 17. சுரேஷ்!
  சரியெனப்படுவதை சொல்லிவிடலாம். தயக்கம் வேண்டியதில்லை. பகிர்வுக்கு நன்றி.  மதன் இளங்கோ!
  நன்றி.


  கயல்!
  உண்மைதான். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 18. கல்வியும், சமூக புரிதலும் ஏற்றம் கொள்ளாதவரையில் இது போன்ற விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். சென்னைக்கும் தென் தமிழ் நாட்டு பகுதிகளுக்கும் இடையே காதல் + குடும்பம் + வாழ்க்கை என்ற விஷயங்களில் மிக வேறுபாடு இருக்கிறது. பொதுபுத்தி சார்ந்த வளர்ப்பு முறை - சாதிய சமூக குழப்ப அமைப்பு என காரணங்கள் பல இருந்தாலும் - இந்த பெண் போல எதிர்த்து காட்டினால் மாற்றத்திற்கான வாய்ப்பு உண்டு.

  ReplyDelete
 19. susmava nenija mikavum prumaiya iruku !!!!!.iapdiye ovarutharum payahtha vitu vaaranum

  ReplyDelete