பதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்!

selvaperumal

கடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லையே என இடையில் இரண்டு மூன்று முறை ஞாபகத்துக்கு வந்து, ‘சரி வேறு முக்கிய வேலைகளில் ஈடுபட்டுக்  கொண்டு இருப்பார்’ என நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் கான்சரினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்தார் என்பது கடைசி வரை எனக்குத் தெரியாது. இன்று காலையில் அவர் காலமாகிவிட்டார் என தோழர்கள் கணேஷ் மற்றும் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் சொன்னபோது அதிர்ச்சியாய் இருந்தது. புலன்களால் அறியப்பட்டு,  அருகில் இருந்த மனிதராய் உணரப்பெற்ற ஒருவரின் இடம் இப்போது வெற்றிடமாக இருக்கிறது. மௌனம் என் தொண்டையில் அடர்த்தியாய் திரண்டு நிற்கிறது.

இடதுசாரிச் சிந்தனைகளோடு தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தவர் அவர். சூடான நடக்கும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதும், விவாதிப்பதும் அவரது அடையாளம். வினவுத் தோழர்களோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பார். தீண்டாமை, இந்துத்துவாவைச் சாடுவார். வாசிப்பவர்கள், பின் தொடருபவர்கள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் எழுதிக்கொண்டே இருப்பார். சென்னை சென்ட்ரல் சிறைச்சாலை இடிக்கப்படப் போகிறது என்றவுடன் எழுதிய இந்த இரண்டு (1, 2) பதிவுகளும் அழுத்தமானவை. இப்படியானவர் சிலசமயம் ‘எமிலி ஜோலாவின் காதல் கதைகள்’ என்றும், ‘காவியம் படைத்த அரசியல் கவிஞன்’ என்றும் இலக்கியத்தின் பக்கமும் அழகாகவே எட்டிப் பார்ப்பார். ஆச்சரியமாய் இருக்கும்.

2008 டிசம்பரில் ஒருமுறை அவரை எழுத்தாளர் சங்க மாநாட்டில், சென்னையில் வைத்து சந்தித்து இருக்கிறேன். பிளாக் உலகத்தில் அப்போதுதான் நான் அடியெடுத்து வைத்திருந்த சமயம். தேடி வந்து சந்தித்தார். அவர் எழுதியவற்றை படித்து எனக்குள் இயல்பாக எழுந்திருந்த உருவமாக இல்லாமல் மெலியவராய், சின்ன வயதுக்காரராய் தோற்றமளித்தார். வலைப்பக்கங்களில் நான் நன்றாக எழுதுவதாகவும், தொடர்ந்து எழுதவேண்டும் எனவும் பாராட்டிவிட்டுப் போனார்.

அவர் சி.பி.எம் மாநில அலுவலகத்தில் முக்கிய ஊழியர் என்பது தாண்டி வேறு எதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  செல்வபெருமாள் என்பது அவரது இயற்பெயர். கட்சிப்பணிகளுக்கிடையே  சமயம் கிடைக்கும்போது வலைப்பக்கம் எழுதி வந்திருக்கிறார். 2005லிருந்து இதுவரை 338 பதிவுகள் எழுதியிருக்கிறார்! இன்றுதான் ப்ரொபைலில் பார்த்தேன். வயது நாற்பது என்று இருந்தது. தோழர்களிடம் தொலைபேசியில் விசாரித்தபோது குரல் தழுதழுக்க “மூனு பெண்குழந்தைங்க அவருக்கு. முதல் குழந்தை ஏழாம் வகுப்பு.... இரண்டாவது குழந்தை ஐந்தாம் வகுப்பு.... கடைசிக்குழந்தை ஒன்றாம் வகுப்பு..” என்றனர். ஈ.மெயிலில் அவர்கள் அனுப்பி வைத்த போட்டோவில், அவருக்குப் பின்னால் குழந்தை வரைந்திருந்த கோடுகள் கொண்ட சுவர் இருந்தது. அவரது கடைசிக்குழந்தையின் சிந்தனையாய் இருக்கலாம்.

பூட்டியிருந்த கதவைத் திறந்து பார்த்தது போலிருந்தது இன்று அவர் வலைப்பக்கம் சென்றபோது. நிறைய எழுதியிருக்கிறார். பதிவுகளை ஒவ்வொன்றாய் புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். வாசித்துக்கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருந்த ஒரு மனிதனின் ஆன்மா அங்கே இருக்கிறது.

santhipu

 

பதிவர் சந்திப்பு அவர்களின் இறுதி நிகழ்ச்சி இன்று…

கருத்துகள்

43 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //குழந்தை வரைந்திருந்த கோடுகள் கொண்ட சுவர் இருந்தது. //

    :-(

    பதிலளிநீக்கு
  2. நல்ல சிந்தனையாளராக விளங்கிய அவரின் இழப்பு வருத்தத்தில் ஆழ்த்துகிறது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. செல்வபெருமாள் அவர்களை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு என்
    இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவர் பதிவுகளில் வாழ்வார்.

    பதிலளிநீக்கு
  4. தோழர் சந்திப்புக்கு எனது அஞ்சலிகள்! :-(

    வலையில் கடுமையாக மோதினாலும், நேரில் நன்றாக பழகும் பண்புக்கு சொந்தக்காரர்!

    பதிலளிநீக்கு
  5. "சந்திப்பு" என்ற பெயரில் தொடர்ந்து இடதுசாரி சார்போடு எழுதி வந்த தோழர் செல்வபெருமாள் இழப்பு மிகவும் வருந்தத்தக்கது.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சியினர், வலை நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவர் நினைவாக அவரது பதிவுகள் என்றும் நிலைக்கும் நிற்கும்.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் வருத்தமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ///குழந்தை வரைந்திருந்த கோடுகள் //

    :((

    --வித்யா

    பதிலளிநீக்கு
  8. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. குடும்பத்தாருக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    செல்வபெருமாள் அவர்களின் இழப்பை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு, குடும்பத்தாருக்கு மன தைரியமும், வலிமையும் கொடுக்க இறைவனை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  10. செல்வ பெருமாள் அவர்களின் மறைவுக்கு என் அஞ்சலிகள் .

    அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  11. தங்களது இப்பதிவினூடகவே செல்வபெருமாளை அறிகிறேன். நான் அறியும்போது அவர் அகன்றுவிட்டார். ஆனாலும் பதிவுலகில் அவர் தடமிட்டுள்தென்பது ஆறுதலாக இருக்கிறது. தொலைவிலிருந்தவாறு அவரது எண்ணச் சித்திரங்களுக்குள் செல்ல முடிகிறது.
    இப்போது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது பதிவின் முக்கியத்துவம். கொஞ்சம் பின்னோக்கிய காலத்தில் தினக்குறிப்புகளில் எழுதும் வழக்கமே இருந்திருக்கிறது. அச்சேற வேண்டிய எத்தனையோ தினக்குறிப்பேடுகளும் அதற்கு முன்னமேயான ஏடுகளையும் இழந்த சமூகமல்லவா நம் சமூகம்.
    நினைவோடைகளில் பயணிக்க வைத்துள்ளது இந்தப் பதிவு.

    தோழரின் இழப்பால் வாடும் குடுபத்தவர்களுக்கு இரங்கலையும், அனைத்துள்ளங்களுடன் என் மெளனத்தையும் இணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. பெரிய அளவுக்கு அவரோடு பழகிய அனுபவம் இல்லையென்றாலும், மூன்று நாட்கள் திருவனந்தபுரத்தில் நடந்த ஊடகப் பட்டறையில் தோழர்கள் எஸ்.ஏ.பி, பேராசிரியர் சந்திரா, முருகன், எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோரோடு நாங்கள் இருவரும் இருந்தோம். அப்போதுதான் வலைப்பதிவுலகத்தில் நாம் செய்ய வேண்டியவை ஏராளமான இருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசினார். அதன்பிறகுதான் எனது வலைப்பூ உருவானது.

    எத்தகைய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கு "அதி தீவிரவாதிகள்" அவரைத்தாக்கி தொடர்ந்து எழுதிவந்ததே சாட்சி. மகஇகவினரைப் பார்த்து உங்கள் திட்டம் எங்கே என்று கேட்டு ஓட ஓட விரட்டினார் சந்திப்பு செல்வப்பெருமாள். அவர் எழுதுவதை நிறுத்தியபிறகுதான் மாதவராஜ் மற்றும் என்னைப் போன்றவர்களை "எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்" என்று கூப்பிட்டு வம்புக்கு இழுத்தார்கள்.

    இனி நமது சந்திப்பு எப்படி நடக்கும், தோழர் செல்வப்பெருமாள்..?

    பதிலளிநீக்கு
  13. தோழர் செல்வப்பெருமாள் நல்ல சிந்தனையாளர் என்பதை அவரது தளத்தினூடாக அறிய முடிகிறது. அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  14. Last week his comrades asked me to come and see him.Com.Selvaperumal wanted to meet me in person.So far we did not meet each other.During his admission at Stanley hospital daily I used to talk to him.Our comradeship so far through cell phone and internet only.From last week being a heart patient My health also didn't permit to see him..At last my dear comrade gone with the soil.At every stage and every article he used to discuss with me..From office he used to chat daily abt the political status of our country..Such a "'Political conscious" and knowledge he had in the short span of age-He is a examble for the friendship....Vimalavidya

    பதிலளிநீக்கு
  15. சந்திப்பு அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  16. அன்பு மாதவ்

    செய்தியறிந்த உடனே மறைந்த ஓர் உற்ற தோழனுக்கு உகந்த மரியாதையைச் செய்திருக்கிறீர்கள். பதிவுலகத்தோழனுக்கான முதல் அஞ்சலி பதிவுலகத்திலிருந்து செய்யப்பட்டிருப்பது கண்ணீரைப் பெருக்குகிறது. எளிமையின் கம்பீரம் புகைப்படத்திலும் பூண்டிருக்கும் முகம். அவர் மறைந்தாலும் சுவரெழுத்துக்களாகப் பதிந்துபோயிருக்கின்றன அவரது வாழ்வின் தடங்கள். செவ்வணக்கங்கள் தோழா, சின்னச் சிங்காரவேலராக எழுந்துகொண்டிருந்த உனது படைப்புலகத் தெறிப்புகளுக்கும்......

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  17. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  18. :-((
    மிகுந்த மனவருத்ததைத் தருகிறது!
    சந்திப்புக்கு அஞ்சலிகல்!

    பதிலளிநீக்கு
  19. ஷாக் நியூஸ் ஸார்..!

    ஆரம்பக் கட்டத்தில் எனது அனைத்துப் பதிவுகளுக்கும் தவறாமல் வந்து பின்னூட்டங்கள் இடுவார்..!

    நான் ஒரு சமயம் அனானி பின்னூட்டங்களை காரணம் சொல்லி புலம்பியபோது பின்னூட்டமிட்டும், போன் செய்தும் தைரியம் சொன்னவர்..

    வெளிநாட்டில் இருக்கிறார் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்..

    பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  20. தோழர் செல்வபெருமாள்!

    தவறான ஒரு கட்சியுடன (சிபிஎம்) அவர் இணைந்திருந்தாலும், தவறான தலைமையினால் அவர் வழிநடத்தப்பட்டிருந்தாலும். ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கொள்கையை பிரச்சாரம் செய்ய இவரை அவரது கட்சி பயன்படுத்தியிருந்தாலும், இணையவே முடியாத கோடுகளாக தீவிர அரசியல் முரண்பாடு கொண்டிருந்தாலும் தோழர்.செல்வபெருமாளின் மறைவு, மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. உயிர்கொல்லி நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இவர் எழுதுவதை நிறுத்தியபின்னர் சி.பி.எம் கட்சியில் வேறு எவருமே இவரின் செய்து வந்த வேலையை தொடராமல் போனது செல்வபெருமாள் எனும் தனிநபரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. இப்படிப்பட்ட நபரை சந்திக்க முயலாமலே இருந்த்து தவறோ என இப்போது சிந்திக்க தூண்டுகிறது. தோழருக்கு செவ்வணக்கம். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  21. உங்களது அறிமுகத்திலிருந்து நண்பர் சமூகத்தை முன்னேற்ற பாடுபட்டவர் என்று அறிய முடிகிறது.

    அவரது வாரிசுகளான அவரது தூய எண்ணங்கள் நிறைவேற உறுதி எடுப்போம்.

    தகவலுக்கும் நினைவு கூறலுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  22. மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது தங்கள் பதிவு! ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  23. மனம் மிகவும் கஷ்டமாயிருக்கிறது!

    என்ன சொல்ல!

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  24. தோழர் செல்வப்பெருமாளுக்கு எமது அஞ்சலி!

    பதிலளிநீக்கு
  25. தோழர் அவர்களின் இழப்பு வருந்ததக்கது. மதவாதமும், இறுகிய மனப்போக்குகளும், குழுவாதங்களும், பொதுபுத்தி சார்ந்த விமர்சனமற்ற எழுத்துக்களும் நிறைந்த பதிவுலகில் சமூகச்சிந்தனையுடன் எழுதும் இதுபோன்ற தோழர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது குடும்பத்தின்ருக்கு அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  26. மனம் கனத்தது. பேரிழப்பு அவரது குடும்பத்தினருக்கு. அவர்கள் இத்துயரிலிருந்து மீளவும் அவர் ஆன்மா சாந்தியடையவும் அனைவரும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  27. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அவரது குடும்பத்தார்க்கு இந்தப் பேரிழப்பைத் தாங்கும் சக்தி வர வேண்டும். அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  28. வலைப்பதிவுலகத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கி இடதுசாரி கருத்துகளை முதலில் பரப்பிய தோழர் செல்வபெருமாள் சந்திப்பு என்ற தனது வலைப்பூ மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனதோழர் இறந்த சேதி என்ணை மிகவும் பாதித்துள்ளதோடு ஒரு அகச்சிறந்த தோழர் நம்மோடு இல்லை என்று நினைப்பதே வருத்தமளிக்கிறது. சமரசமற்ற போராளியின் குணத்தோடு தொடர்ந்து தனது கட்சி பணிகளுக்கு இடையில் தொடர்ந்து அவர் ஆற்றிவந்த பணி அவரின் உடல்நிலை காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் முதல் அவர் எழுதவில்லை என்றதும் சரியான இடதுசாரி சிந்தனையை தனது எழுத்துகளால் வலைப்பூவில் பரவசெய்த தோழரின் இழப்பு இட்டுநிரப்பமுடியாத வெற்றிடமாக தொடரும். சந்திப்புக்கு எனது வீரவணக்கம்

    பதிலளிநீக்கு
  29. Some people keep scoring goals wihout making any noise and without any celebration. Selvaperumal is one such player with strong political convictions. On first glance, he would look like an 'ordinary' typist in a political party's office. Talk to him, he would draw you into political and ideoloical discussions, taking care not to offend you even when he contradicts you.
    One of the comments in this blog is that he was misled by a wrong party and wrong leadership. There cannot be a more misleading comment on him than this. In this moment of grief, let us not create the impression that Selvaperumal did not have the intellectual, political and ideological sharpness to understand whether he was in the right party or not. That is a great disservice to his memory.

    பதிலளிநீக்கு
  30. குடும்பத்திற்கு இழப்பைத் தாங்கும் ம்ன உறுதியைத் தர பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  31. அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  32. தோழர் செல்வப்பெருமாள் அவர்களுக்கு எனது அஞ்சலி!

    பதிலளிநீக்கு
  33. \\ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அவரது குடும்பத்தார்க்கு இந்தப் பேரிழப்பைத் தாங்கும் சக்தி வர வேண்டும். அஞ்சலிகள்.\\
    :-(

    பதிலளிநீக்கு
  34. சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலிகள்.
    அவரது குடும்பத்தாருக்கு அவரது இழப்பை தாங்கும் வலிமையை,கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. இடதுசாரி சிந்தனைகளை நேர்மையாக சொல்வதற்கும், அதிதீவிரவாதிகளின் தவறான பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கவும் சரியான இணையதளமோ பதிவோ இல்லையே என நான் ஒரு நாள் ஒரு தோழரிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அவர், "தோழர் செல்வபெருமாள் சந்திப்பு என்கிற பெயரில் பதிவு எழுத துவங்கியிருக்கிறார்" என்றார். அன்று முதல் தினமும் அலுவலகம் வந்ததும், செல்வபெருமாள் ஏதேனும் புதிதாக இன்று எழுதி இருக்கிறாரா என பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அவருடன் நிறைய விவாதித்திருக்கிறேன் (வேறு வேறு பெயர்களில்). இரண்டு அல்லது மூன்று முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியதில்லை. நிச்சயமாக அவரது மறைவு ஒரு பேரிழப்புதான் என்னை போன்றோர்க்கு. அவரது பதிவுகளை அச்சில் ஏற்ற முடிந்தால் அதுவே நாம் அவருக்கும் அவரது பதிவுகளுக்கும் செய்யும் அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  36. மிட்க முடியாத இழப்பு இது. பதிவுலகம் ஒரு நல்ல பதிவரயும், உலகம் ஒரு நல்ல மனிதரையும் இழந்து நிற்கிறது. அண்ணாரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  37. தோழர்.செல்வபெருமாள் அவர்களை “சந்திப்பு” என்ற blog மூலம் அறியக்கண்டேன். அவருடைய பதிவுகள் அதற்கு வரும் எதிர்வினைகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் எத்தனை பொறுமை, தான் கொண்ட சிந்தனையில் கொள்கையில் என்ன தெளிவு என ஆச்சரியமளிக்கும், மேலும் அவர் மேதினம் பற்றி ஒரு பிரசுரம் வெளியிட்டார். அவரின் பதிவு வராமல் போனதற்கான காரணம் தெரியாமலேயெ இருந்தது.இன்று துக்கமான செய்தி, காலன் அவரை கான்சரில் அழைத்துச் சென்றுவிட்டான், அவர் தம் குடும்பத்தினருக்கும் நணபர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  39. I was not knowing much about him.Today morning Com.R.Jawahar and Com.Veeramani (Delhi) were telling about him reg how he helped our comrades and enthused them in computer and blog spots. I was of the opinion that he is senior. After seeing his photo and profile in your blog, iam shockedand not able to console myself.

    பதிலளிநீக்கு
  40. ஆன்மா சாந்தியாக இருக்கட்டும் தோழர்,செல்வபெருமாள்.

    பதிலளிநீக்கு
  41. பதிவர் சந்திப்பின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்.. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  42. எனக்கும் அவரைத் தெரியும். நான் தீக்கதிரில் பணியாற்றியபோது அவரைத் தெரியும். அப்போதெல்லாம் தமிழ் எழுத்துக்களுக்கு லாக் வைத்து அந்த சாஃப்ட்வேரை விற்பார்கள். வாங்கியவரைத் தவிர யாரும் உபயோகிக்க முடியாது. அந்த லாக்கை உடைத்து எல்லோரும் உபயோகிக்கலாம் என்று கொடுத்தவர் செல்வ பெருமாள். அப்போது அவரது அறிவை நினைத்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் அவர் சாஃப்ட்வேர் என்ஜினியரெல்லாம் இல்லை. அவரது மறைவு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!