நரேந்திர மோடியின் ஆயுத பூஜை
ஜம்மு-காஷ்மீரில், தீவீரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்கள் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று கொஞ்ச காலத்துக்கு முன்பு பத்திரிகையில் வந்தது. ஜம்மு-ஜாஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அதற்கு கண்டனங்களையும், வருத்தங்களையும் தெரிவித்தார். “நான் நம் ஜனாதிபதி அவர்கள் குழந்தைகளோடு உரையாடுவது போன்ற புகைப்படங்களை பார்க்கவே விரும்புகிறேன்” என்று அவர் சொன்னார்.
இங்கோ, ஒரு மாநில முதல்வர் பயங்கரமான ஆயுதங்களை வைத்து பூஜையே நடத்தி போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். விஜயதசமியன்று குஜராத் முதல்வர் மோடி, தனது அதிரடிப்படையினரின் ஏ.கே 47 உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வழிபாடு நடத்தியிருக்கிறார்.
“ஒரு போர் வீரன் இப்படிப்பட்ட வழிபாடு நடத்தலாம், ஆனால் மோடி ஒரு சிவிலியன். எப்படி நடத்தலாம்” என்று சாத்திர ரீதியான, அரசியல் அமைப்பு ரீதியான விவாதங்கள் நடக்கின்றன.
“ஒரு காவலாளி எந்நேரமும் தன் ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும். எப்படி இன்னொருவரிடம் கொடுக்க முடியும்.” ஒழுக்க விதிகள் மீறப்பட்டு இருக்கின்றன என்பதும், இந்திய ஊடகங்களில் வெளிவந்து கொண்டு இருக்கின்ற முக்கியமான சர்ச்சைகளும் ஒன்று.
மோடி என்னும் ‘இந்து’ செய்தால் இங்கு அது வெறும் சடங்கு மட்டுமே!
இங்கே இந்துத்துவாவின், பாசிசத்தின் முகம் ஒன்று கோரப்பல்லைக் காட்டியபடி அப்பட்டமாய் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறதே, அது இந்த மேதாவிகளின் கண்களுக்குத் தெரியவில்லையா? “தன் மக்களை காப்பதற்கு பயன்படும் ஆயுதங்களை வழிபடுவதில் என்ன தவறு” என்ற மோடியின் வசனங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?
தீவீரவாதம், பயங்கரவாதம் எல்லாவற்றுக்கும் சில முகங்களை வைத்தே காட்சிப்படுத்துபவர்கள் மோடியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். தீவீரவாதத்தின் ஊற்றுக்கண் எங்கு இருக்கிறது என்பது அப்போது புரியும்.
வாழ்நாளெல்லாம் அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணுக்கு இன்னொரு அவமானம்.
அபாயச்சங்குகள் அலறுகின்றன.
*
மாதவராஜ் பக்கங்கள் 11
புழுக்கத்தில் இருந்த தமிழ்ச்சினிமாவுக்குள் தென்றலின் தீண்டலாய் பாவிய மொழி படத்திற்கு இரண்டாவது பரிசாம். தமிழ்ச்சமூகத்தின் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு போனால் போகிறது என்று சிறப்புப் பரிசாம். இந்தப்படங்களையெல்லாம் தாண்டி ரசனையை, சிந்தனையை, பண்பாட்டை சீரழிக்கும் சிவாஜி படத்திற்கு 2007ம் ஆண்டு சிறந்த பட விருதாம். ரஜினி சிறந்த நடிகராம். இந்தச் செய்தி, எரிச்சலிலும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. பெரிய அளவில் எல்லோராலும் பேசப்பட்ட பருத்திவீரனை தமிழக அரசு தொலைத்து விட்டது போல. எடுக்கப்பட்ட விதத்தில் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருந்த கல்லூரியை கணக்கில் வைத்துக் கொள்ளவேயில்லை போலிருக்கிறது.
2008ம் ஆண்டு விருதுகளுக்கும் அதே கொடுமைதான். சீரியஸாய் ஆரம்பித்து காமெடியாகி எல்லோரையும் குழப்ப சுனாமியில் மூழ்கடித்த தசாவதாரம் படம் சிறந்த படமாம். ஒரே நேரத்தில் பத்து மாறுவேடப் போட்டிகளில் கலந்து கொண்ட கமல் சிறந்த நடிகராம்.(இவருக்கு இந்த படத்தில் பின்னணிக்குரலுக்கு வேண்டுமானால் பரிசு கொடுக்கலாம்). தமிழ்ச்சினிமாவுக்கு இன்னொரு அத்தியாயம் எழுதியதாய்ச் சொல்லப்படுகிற சுப்பிரமணியபுரத்தில் ஒரு பிண்ணனிப் பாடகருக்கு மட்டும் விருது கிடைத்திருக்கிறது.
முன்னணி நடிகர்களை கைக்குள் வைத்துக்கொள்வது என்னும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் தந்திரம் அப்பட்டமாய் தெரிகிறது. இந்த அரசியல் ஆலிங்கனத்தில் குருவிக்காரன் எப்படி விடுபட்டுப் போனார் என்பதற்கு என்ன கிளைக்கதை இருக்கிறதோ தெரியவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. சன் டி.வியின் டாப் டென்னுக்கும், தமிழக அரசின் விருதுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
மீண்டும் தமிழ்ச்சினிமாவிற்குள் புதியவர்களும், புதிய சிந்தனைகளும் ஒரு மறுமலர்ச்சி போல பிரவேசித்திருக்கிற காலம் இது. கனவுகளோடும், நம்பிக்கைகளோடும் எதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்போடு அவர்கள் இருப்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தமிழக அரசு இந்த விருது மூலம் சொல்கிற செய்தி என்ன? பிரம்மாண்டமான படங்கள் பக்கம்தான் தமிழக அரசு நிற்கும் என்பதுதானா? உளி இங்கே சிலைகளை செதுக்கவில்லை, உடைத்துக் கொண்டு இருக்கிறது. அதன் சத்தம் நாராசமாய் கேட்கிறது.
தமிழக அரசு இந்த விருதுகளின் மாண்புகளையும், மதிப்பையும் சீர்குலைத்துவிட்டது. தமிழ்ச்சினிமாவின் மீது கரியை பூசியிருக்கிறது. நல்ல கலைஞர்கள் இப்படிப்பட்ட ‘கலைஞரிடம்’ இருந்து விருதுகளை இனி எதிர்பார்க்க மாட்டார்கள். உலகத் தமிழ் மாநாட்டை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது!
பி.கு: சிவாஜி படத்திற்கு ஏன் விருது என்று பதிவர் சுரேஷ் ஆராய்ந்து வயிறு வலிக்கச் செய்திருக்கிறார். நல்ல பதிவு.
*
அர்த்தமுள்ள கழுதை
செல்லமாகத் திட்டும்போதும், கோபமாகத் திட்டும்போதும் நம் கிராமங்களில் ‘சீ, கழுதை’ என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம். முட்டாள்தனத்தின் குறியீடாகவே இன்று வரை நம் சமூகத்தில் கழுதை சுட்டிக்காட்டப்படுகிறது. ‘மாடு மாடுன்னு உழைப்பது’ என்கிற பதம் போல ‘பொதி கழுதை’ என்ற பிரயோகமும் இருக்கிறது. தவறு செய்கிறவர்களுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேலே உட்கார வைப்பது ஒரு இழிவான தண்டனையாக இருந்திருக்கிறது. ‘கழுதைக் காது’ என்று சொல்வதில் கிண்டல் இருக்கிறது.
இவை யாவையும் குறிப்பிட்டு பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் ‘தமிழ்ச் சமூகத்தில் கழுதை’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். சங்க இலக்கியங்களில் இருந்து இன்றுவரை நம் பேச்சு வழக்கத்தில் கழுதை எப்படியெல்லாம் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதையும், அதற்கான காரண காரியங்களையும் விளக்கி இருக்கிறார். கழுதை ‘மூதேவியின் வாகனமாக’ இருப்பது, கழுதை கத்தினால் நல்ல சகுனம் என்பது போன்ற பல நாட்டார் வழக்காற்றியலோடு தொடர்பு கொண்ட கருத்துக்களை விளக்கி இருக்கிறார்.
கழுதையை வைத்து நம் சமூகத்தில் புழங்கும் பழமொழிகளையும், அதற்கான விளக்கங்களையும் பேராசிரியர் அவர்கள் தொகுத்திருப்பது சுவையானது!
‘அழுதப் பிள்ளை சிரிச்சதாம், கழுதப் பாலைக் குடிச்சதாம்’
‘வண்ணானுக்கு உழைத்த கழுதையும்
வாணியனுக்கு உழைத்த காளையும் சரி’
‘பனைவெட்டின இடத்துல
கழுதை வட்டம் போட்டது போல’
‘ஊருக்குப் போனானாம் வண்ணான்
ஒசந்துச்சாம் கழுதை”
“கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா”
‘அத்துதாம் கழுத எடுத்ததாம் ஓட்டம்’
‘கழுத கெட்டா குட்டிச் சுவரு’
இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
சலவைத் தொழிலில் பயன்பட்டு வந்த கழுதையின் பங்களிப்பு குறைந்து விட்டது எனவும், இப்போது ஆற்றில் மணல் கடத்தவும், காய்ச்சப்படுகிற கள்ளச்சாராயத்தை கொண்டு செல்லவும் வாகனமாக க்ழுதை மாறிவிட்டதெனவும் பேராசிரியர் கட்டுரையை முடிக்கும்போது பெருமூச்சு வருகிறது.
*
புகை நடுவினிலே
“ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே...” சுடலை நீட்டி முழக்க ஆரம்பித்து விட்டான். தண்ணி போட்டு விட்டானென்றால் இதுதான் அவனுக்கு விநாயகர் ஸ்தோத்திரம். இன்னும் ஒரு மணிநேரத்துக்கு கச்சேரி தொடரும். சும்மா சொல்லக்கூடாது. ஆச்சரியமான குரல்வளம்தான். கேட்க உண்மையிலேயே நல்லாயிருக்கும். சுருதி பிசகாமல் ஏற்றி இறக்கி பாடுவான். நேரில் பார்க்கும் போதுதான் சிரிப்பு வரும். முகம் படு தீவீரமாய் இருக்கும். முதுகு வளையாமல் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பான். ஒரு கைதேர்ந்த பாகவதரைப் போல தலையாட்டவும், தொடை தட்டவும் செய்வான்.
புத்தகம் படித்துக்கொண்டிருந்த பார்த்திபனுக்கு இதை ரசித்துக் கேட்க முடிகிறதுதான். இந்த பாட்டுக்களுக்குப் பிறகு நடக்கிற சமாச்சாரங்கள்தான் பிடிக்காது. கட்டாயம் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் பொண்டாட்டி வள்ளியோடு சண்டை போடத்தான் செய்வான் சுடலை. பாவம்... அந்த வள்ளியை அவன் அடிக்கும்போது பார்க்க சகிக்காது. முடியைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு முதுகில் ஓங்கி ஓங்கி குத்துவான். பற்களை நறநறவென கடித்துக்கொண்டு பிசாசாய் நிற்பான். போன தடவையெல்லாம் பார்த்திபன் கோபம் தாளாமல் செருப்பைக் கழற்றிக்கொண்டு “ச்சீ... செருக்கியுள்ள...”என்று அடிக்கப் போய் விட்டான். சக்திக்கனி அக்காவும், சொர்ணமும் இவனைப் பிடித்துக்கொண்டு “எய்யா... நீ உள்ள போய்யா... போயிருய்யா..” என்று கதற ஆரம்பித்து விட்டனர். இவனுக்கு அடங்கவில்லை. திமிறினான். கடைசியில் இவன் அப்பாவும், பெரியப்பாவும் வந்து சத்தம் போட்ட பிறகுதான் அமைதியானான். “போய்... அத மொதல்ல நிறுத்துங்க...” என்று மூச்சிரைத்தான். ஞானதுரை “ஏல.. சொடல..” என்று அதட்டுப் போட்டார். சுடலை நின்றான். வள்ளி கொஞ்சமும் எதிர்ப்புக் காட்டாமல் சேலையைச் சுருட்டிக்கொண்டு திண்ணையில் போய் உட்கார்ந்தாள். சுடலையையே பார்த்தாள். அவன் வேகமாய் அங்கிருந்து நடந்து தெருவில் இறங்கி மறைந்தான். குடிசைக்குள் வள்ளியும், அவளது மூன்று குழந்தைகளும் அழும் சத்தம் இரவில் ரொம்ப நேரம் கேட்டுக்கொண்டு இருந்தது. வெளி தெரியாத இருட்டில் புதைந்து கிடக்கும் சோகத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கிற பாடலாக ஒலித்தது.
“நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே” என்று சுடலை இறுமாப்புடன் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான். ஒரே சிரிப்பும் கைதட்டலுமாய் கேட்டது. அங்கங்கு வாசல் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு அம்மாக்களும், குமரிகளும் உட்கார்ந்திருந்தார்கள். சுடலை முன்னால் ஒரு சிறுவர் பட்டாளமே கூடியிருந்தது. ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் ஆளுக்கொன்றாய் தங்கள் விருப்பங்களைத் தெரிவிப்பார்கள். “சுடலை...! ராக்கம்மா கையத் தட்டு...”, “சுடலை... சுடலை.... ராஜா கைய வச்சா...” என நச்சரிப்பாய் இருக்கும். சுடலை அவைகளில் எதையும் பாடமாட்டான். தன் விருப்பம் போலத்தான் பாடுவான். அதைத்தான் கேட்க வேண்டும். வள்ளி இந்த சமயங்களில் தன்னை மறந்து சுடலையை ரசிப்பாள்.
காலையில் பஞ்சாயத்து போர்டு பக்கத்தில் ஒரு காக்கி கால்ச்சட்டை போட்டுக்கொண்டு குப்பைக் கூட்டும் போது இந்த சுடலைதான் நேற்றிரவு அப்படியிருந்தானா என்று பார்த்திபனுக்கு இருக்கும். இவனைக் கண்டதும் “ஐயா..... கும்புடுறேங்க..” என்று சொல்கிற பவ்யமும், பயமும் இருக்கிறதே.... இவனுடைய பள்ளி மாணவர்கள் கூட அப்படி ஒருநாளும் சொன்னதில்லை. தீபாவளி பொங்கல் வந்துவிட்டால். இவன் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வருகிற வரை ஜோடியாய் காத்திருப்பார்கள். இவனைப் பார்த்துக் கும்பிட்டு “கேளு... புள்ள...” என்று மஞ்சள் பற்கள் தெரிய சுடலை வள்ளியை இடித்துச் சிரிப்பான். அவள் கேட்கும் முன்னால் பார்த்திபன் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு நகருவான். “தெக்க இருந்து அழகா... லட்சுமி அடுத்த தைக்குள் வருவாங்க பாருங்க ஒங்களுக்கு..” என வாழ்த்துவார்கள். அந்தப் பெருமையில்தான் இவன் அம்மா சொர்ணம் இவர்களை குடிவைப்பதாய் சொன்னபோது பார்த்திபன் மறுக்காமல் இருந்துவிட்டாள். அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இப்போது படுகிறது.
கிழக்குப் பக்கம் அந்தக் குடிசை இடிஞ்சுபோய் ரொம்ப நாள் சும்மாத்தான் கிடந்தது. இடிந்தது தவுந்தது பூசிக்கொண்டு பராமரிக்காவது செய்யட்டுமே என்றுதான் சொர்ணம் அவர்களை அங்கு குடியமர்த்தினாள். இப்போது இரவுகளில் இவர்கள் சண்டையை சமாதானம் செய்து வைப்பதும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு வேலையாய்ப் போனது. அதுகூட ஒரு பாசாங்குதான். எல்லோருக்கும் பார்க்கவும், ரசிக்கவும், சிரிக்கவும், அசைபோடவும் நிறைய நிறைய இருந்தன.
நிஜமாகவே வருத்தப்பட்டவன் பார்த்திபன்தான். கோபம் வந்தால் அதென்ன உடனே கையை நீட்டுவது என்று கொதித்துப்போவான். சாம்பல் நிரப்பிய மிட்டாய்ப்பெட்டியும், அகப்பைக்கனை வெளியே தெரியும் வாளியோடும் வள்ளி வீடுகளின் பின்பக்கம் கதவுகளை தட்டுகிற காலைகளில் இரவின் அழுகை காய்ந்து ஒரு நிரந்தர சோகமாய் முகத்தில் பாவியிருக்கும். தெருப்புழுதியில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, வீட்டுத் தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்தபடி எங்கேயோ பார்த்தபடி வள்ளி உட்கார்ந்து கொண்டிருப்பதை இவன் பள்ளிக்கூடத்திற்குப் போகிற சமயங்களில் பார்த்திருக்கிறான். ஒருநாள் மத்தியானம் பட்டாணித்தாத்தா வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது இரண்டாவது மகன் காலைப் பிடித்தபடி இருக்க, “அம்மா, பகட வந்திருக்கேன்” குரல் கொடுத்தபடி சாப்பாட்டுக்கு வாசலில் நின்ற கோலம் ரொம்ப பரிதாபமாய் இருந்தது. அப்போதுகூட “ஏலே... ஒங்கப்பன் சுடலையும் இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னால இப்படித்தான் வந்து நிப்பான். இருளாயி காலை விடவே மாட்டான்” என்று பட்டாணித்தாத்தா சொல்லிக்கொண்டு இருந்தார். லேசாய் சிரித்து மகன்காரன் தலையைக் கோதிவிட்டபடி வள்ளி குனிந்து நின்றபோது பார்த்திபனுக்கு சுடலையின் மீதுதான் கோபம் வந்தது. அன்றைக்கு ராத்திரி தூங்கிக்கொண்டிருந்த சுடலையை வள்ளி முத்தமிட்டதும், விழித்துக்கொண்டவனுக்கு ஒருநாளும் இல்லாத திருநாளாய் இருந்ததுவும் பார்த்திபனுக்கு எப்படித் தெரியும். “என்னளாக் கிறுக்காப் பிடிச்சுட்டு ஒனக்கு..” என்ற சுடலையை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தமாய் கொடுத்துக்கொண்டே இருந்தாள். அந்த இரவும்கூட வள்ளி அழுதுகொண்டுதன் இருந்தாள் என்பது யாருக்குத் தெரியும்.
பாட்டு நின்று குழந்தைகள் அழும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. பார்த்திபன் நினைத்த மாதிரி சண்டைதான். அதற்கெல்லாம் பெரிய காரணங்கள் என்று எதுவும் சுடலைக்குத் தேவையாயிருப்பதில்லை. அவன் கோபப்படும்போது வள்ளி சிரித்துக்கொண்டே எதாவது சொல்வாள். அவனுக்கு இன்னமும் கோபம் அதிகமாகும். சட்டென கைநீட்டுவான். “யார்ட்டயாவது கெஞ்சி கூத்தாடி தண்ணி வாங்கி அடிச்சிட்டு வந்து இங்க வந்து ஓட்ட அதிகாரம் பண்ணத்தான் நீ லாயக்கு” என்பாள். அவ்வளவுதான். அந்த இடமே அல்லோலப்படும். உட்கார்ந்திருந்த சிறுவர்கள் ஓவென்று இரைந்துகொண்டே தள்ளி நிற்பார்கள். சுட்லை தன் வீரபராக்கிரமங்களை காண்பிக்க ஆரம்பிப்பான்.
இன்றைக்கு இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பார்த்திபன் எழுந்து, வீட்டிலிருந்து வெளியே போனான். “ஏல சொடல! இப்ப சும்மா இருக்கப் போறியா... இல்லையா?” என்று அதட்டினான். சுடலை இவனை ஒருதரம் உற்றுப் பார்த்தான். திரும்பவும் வள்ளியை அடிக்க ஓடினான்.
“ஏய்யா... பார்த்திபா! நீ அங்க போகாத... குடிகாரப்பய ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசினாலும் நமக்குத்தான் அசிங்கம்..” பார்த்திபனின் அம்மா வாசலில் நின்று இவனைக் கூப்பிட்டார்கள்.
பார்த்திபன் வேகமாக இரண்டு எட்டு வைத்து சுட்லையை இழுத்துப் போட்டான். தரையில் போய் மல்லாக்க விழுந்தான் அவன். எல்லோரும் சிரித்தார்கள். விழுந்த வேகத்தில் எழுந்து நின்று இவனை நோக்கி மூச்சிறைக்க வந்து முறைத்தான்.
“அவ.... எம் பொண்டாட்டி...”
”அதுக்கு இப்பிடித்தான் போட்டு அடிப்பியா...”
“அவ எம் பொண்டாட்டி...”
“பார்த்திபா...! இங்க வந்துருய்யா. இந்த நேரம் பாத்து அவியளும் வீட்டுல இல்லைய. ஏ...முருகேசு வீட்டு அப்பா! கொஞ்சம் இங்க வாங்களேன்..”
”யம்மோவ்! இப்ப நீங்க சும்மா இருக்கப் போறீங்களா இல்லியா. ஏல... என்ன மொறைக்கிற.... பேசாம போய் உக்காரு. தூக்கிப் போட்டு மிதிச்சிப்புடுவேன்..பாத்துக்க”
“நீ போயி ஒன் வேலையப் பாரு வாத்தியாரே..” அழுத்தமாய்ச் சொன்னான் சுடலை.
பார்த்திபனுக்கு முகத்தில் அடித்த மாதிரி இருந்தது. ”அட நாயே..!” என்று அவன் கையைப் பிடித்து தரதரவென தெருவுக்கு இழுத்துக்கொண்டு வந்தான்.
திமிறிய சுடலை ஓடிப்போய் கல்லை எடுத்து பார்த்திபனை எதிர்த்து நின்றான். “பக்கத்துல வந்தா பாத்துக்க...”
கூடியிருந்த அத்தனை பேரும் அரண்டு போனார்கள்.பார்த்திபனும் ஆடித்தான் போனான். அதற்குள் யார்யாரெல்லாமோ வந்தார்கள். சுடலை எல்லோரையும் தாறுமாறாகப் பேசினான். அடங்காமல் நின்றான். பெட்டிக்கடை செல்லச்சாமி ஓடிப்போய் சுடலையைப் பிடித்து சாத்த ஆரம்பித்தான். கொஞ்சம் பேர் பார்த்திபனை இழுத்துச் சென்றார்கள். சுடலை கெட்ட வார்த்தைகளால் எல்லோரையும் ஏசிக்கொண்டே ஓட ஆரம்பித்தான். கீழே விழுந்தான். வெறியோடு மண்ணைப் போட்டு குத்தினான். வள்ளி தன் மூன்று குழந்தைகளையும் இறுகக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருப்பதை அந்த வேகமான கணத்திலும் பார்த்திபன் கவனித்தான்.
“நா அப்பவே சொன்னேன் அங்க போகாதேன்னு. கேட்டியா?”
“அடச்சீ சும்மாயிருங்க. நாளைக்கு அவன அங்க குடிவைக்கக் கூடாது. சொல்லிட்டேன்..”
“சரிப்பா... சொல்லிர்றேன்..”
சத்தங்கள் எல்லாம் கொஞ்ச நேரத்தில் அடங்கிப் போயின. பார்த்திபனுக்கு அன்று தூக்கம் வரவில்லை. எல்லோர் முன்னாலும் சுடலை எடுத்தெறிந்து பேசிவிட்டானே என்றிருந்தது. ஊரில் இருக்கும் பெரியவர்கள் கூட இவன் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். “வணக்கம் தம்பி..” என பார்த்ததும் மரியாதை செய்வார்கள். விடிந்ததும் முதல் வேலையாய் காலி பண்ணச் சொல்லிவிட்டாலும், வள்ளியை நினைக்க வேண்டியிருந்தது. மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு அவள் தவிக்க வேண்டுமே என்றிருந்தது. பேசாமல் சுடலை இல்லாமல் அவள் வாழ்க்கை நடத்தலாம் என்றெல்லாம் எண்ணியபடி பார்த்திபன் ஒருவழியாய் தூங்கிப் போனான்.
காலையில் அவனை சுடலைதான் எழுப்பினான். “ஐயா... ஐயா.... வாத்தியார் ஐயா...” வெளியே குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
“ஏல... சொடல... போ வெளியே.... நீல்லாம் ஒரு மனுஷனா?” சொர்ணம் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தாள். பார்த்திபன் எழுந்து வெளியே சென்றான்.
“ஐயா...! கும்புடுறேனுங்க! அம்மா இப்பவே வீட்ட காலி பண்ணச் சொல்றாங்க... நாங்க எங்கய்யா போவம்? அம்மாக் கிட்ட நீங்கதாச் சொல்லணும்”
“இல்ல சொடல. காலி பண்ணிரு.”
“ஐயா ஐயா நீங்க அப்பிடிச் சொல்லக்கூடாது ஐயா..”
“இன்னா பாரு சொடல. வரவர நீ மோசமாப் பேசுற. குடிச்சுட்டு வந்து ஒம்பொண்டாட்டியப் போட்டு கண்டபடி அடிக்கிற. கேட்டா எதுத்துப் பேசுற. நேத்து என்னையே கல்லத் தூக்கி எறிய வந்தே..”
“ஐயோ சாமி. அப்பிடிச் சொல்ல மாட்டேன்யா. நீங்க தெய்வம் மாரி. ஒங்களயா.... ஒங்களயாய்யா.... “ கைகளால் தலையை மடார் மடாரென அடித்துக் கொண்டான். “இனும சத்தியமா... எம்புள்ளைங்க சத்தியமா குடிக்கவே மாட்டேன்யா..”
“இதெல்லாம் இங்க வேணாம். காலி பண்ணிரு. இல்லேன்னா நானே வந்து சட்டிச் சாமானையெல்லாம் தூக்கியெறிஞ்சிருவேன்”
“ஐயா... ஐயா... ஒங்க வாயால அப்பிடிச் சொல்லாதீங்க. நீங்க நல்லாயிருக்கணும். தெரியாமச் செஞ்சுட்டேன். இந்த ஒரு தடவையும்...”
“அடச்சீ! சும்மாக் கெட...” வள்ளி வேகமாய் வந்தாள். “வா. வீட்டுக்குப் போவம்” சுடலையை அழைத்தாள்.
“நீ சும்மாயிரு. ஐயா... என்னய வேண்ணா அடிச்சுக் கொன்னு போட்டுருங்க. அதுகளை வீட்டை விட்டு வெரட்டாதீங்கய்யா”
“இன்னா பாரு. இப்ப வீட்டுக்கு வரப்போறியா இல்லையா? “ வள்ளி சுடலையை அதட்டினாள். பார்த்திபனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. பார்த்திபனுக்கு அவமானமாய் இருந்தது.
“இல்ல வள்ளி. ஐயாக்கிட்டச் சொல்லி எப்படியும்...” என்றவனை “வெளக்குமாரு பிஞ்சிப் போகும் பிஞ்சி!” என்று பிடித்துத் தள்ளினாள். அதே அழுத்தமான முகத்தோடு பார்த்திபனை நோக்கி “ஐயா... நாளைக்கு காலி பண்ணிர்றோம்” சொல்லிவிட்டு, சுடலையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். பார்த்திபன் அதிர்ந்து போய் நின்றிருந்தான்.
“இந்தப் பொட்டச்சிக்கு எவ்வளவு திமிர்னு பாத்தியா! வீடு வீடா பொறுக்கித் தின்னாலும் திமிரப் பாத்தியா..! இவ கொடுக்கிற எடத்துலத்தான் அந்த கிறுக்கன் அந்த ஆட்டம் போடுறான்!” சொர்ணம் என்னவெல்லாமோ ஆற்றாமையில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
நடந்து கொண்டிருந்த வள்ளிக்கு கொஞ்சம் நிம்மதியானது போலிருந்தது. கனன்று எரிந்த தீயில் லேசாய் நிதானம் ஏற்பட்டிருந்தது. வாத்தியார் ஐயா பாவம் என்று நினைத்துக் கொண்டாலும், சுடலை குடி போதையில் அவர்கள் யாருக்கும் அடங்காமல் நின்ற நிலையை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க ஆசையாயிருந்தது. எதிரே ஓடிவந்த இரண்டாவது மகனை வாரியெடுத்து “ஏம் புள்ளா..” என்று உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தாள்.
பார்த்திபன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் புரியவில்லை.
(1993ல் எழுதிய சிறுகதை இது)
*
திசை மாறவும் வேண்டாம், குறி தவறவும் வேண்டாம்!
உன்னைப் போல் ஒருவன் படத்தை முன்வைத்து எழுந்த விமர்சனங்களும் விவாதங்களும் ஆரோக்கியமானச் சூழலாகவே இருந்தன.
ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கல்ல என்பதையும், அதன் ஒவ்வொரு காட்சியும், வசனமும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் நமது பதிவுலகம் ஆராயந்து பார்த்திருக்கிறது. காட்சிகளுக்குப் பின்னாலும் நுட்பமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இருப்பதை சமீபத்திய சில நாட்களில் நமது பதிவுலகம் பெரும் உரையாடல் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
இரண்டாவது, இந்தப் படத்தின் மையப்பொருளாகப் பார்க்கப்படும் இந்துத்துவா நிலைபாடு குறித்து சில கருத்துக்கள் பொதுவெளியில் உரக்கப் பேசப்பட்டன. இந்த தேசத்திற்கு மிக அச்சுறுத்தலான, சாபக்கேடான சங்கதி ஒன்று அம்பலப்படுத்தப்படவும், பகிரங்கப்படுத்தவும் அவை உதவும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இவைகளின் ஊடாக நடந்த கருத்து மோதல்களும், முரண்பாடுகளும் தனிநபர்கள் மீது தாவியது வருத்தமளிக்கிறது. குறிகள் திசைமாறி இருப்பது நிஜமாகவே வேதனையளிக்கிறது.
கருத்துக்களைப் பார்க்காமல்- இவர் இன்னார், இப்படித்தான் கருத்துச் சொல்வார் என்ற தொனியில்- இப்போது விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த ஜாதியைச் சேர்ந்தவர், இந்த அமைப்பைச் சேர்ந்தவர், இந்த கட்சியைச் சேர்ந்தவர், இன்னாருக்குத் தெரிந்தவர் என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தால் அங்கு சுதந்திரமான கருத்துக்களுக்கு இடமில்லை என்றாகிவிடும். வெளிப்படையானத் தன்மைக்கு கல்லறை கட்டுகிறோம் என்றுதான் அர்த்தம். இது தொடருமானால், இந்த விஷயம் குறித்து இவர்தான் பேச முடியும், இவர் பேச முடியாது என்கிற நிலைமை உருவாகும். அது மிகவும் ஆபத்தான போக்காகி விடும். தன் கருத்தைத் தவிர மற்றவர்களை ஓரங்கட்டுகிற பாசிச அரசியல் அதற்குள் மெல்ல புகுந்துவிடும்.
இதன் நீட்சி இப்போது கொடூரமாக காட்சியளிக்க ஆரம்பித்திருக்கிறது. உன்னைப் போல் ஒருவனில் ஆரம்பித்து, கமலிடம் சென்று இப்போது பாரதியாரில் வந்து நிற்கிறது. “சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடியதாலேயே பாரதியின் பார்ப்பன-இந்துவெறிச் சார்பு நிலையை மறைக்க முடியுமா?” என்று ஒருவர் அனானியாக வந்து, முந்தையப் பதிவில் கேட்டு இருக்கிறார். பிறப்பின் அடிப்படையில் பாரதியையும் பார்க்கிற அவலம் நேர்ந்திருக்கிறது. ஒரு மகாகவிக்கு இப்படியொரு இழிநிலை ஏற்பட்டிருக்க வேண்டாம். ஜாதி, மதங்களைக் கடந்தவர் என்றெல்லாம் சொல்லி யாரிடமும் நிருபிக்க வேண்டிய அவசியம் பூணூலைக் கழற்றி எறிந்த அந்த நெருப்புக் கவிஞனுக்கு இல்லை.
பார்ப்பனீயம்தான் எதிர்க்கப்பட வேண்டியதே தவிர, பார்ப்பனர்களல்ல. இதர ஜாதி மக்களை அடக்கி, ஒடுக்கி வைக்கிற மேலாதிக்க பார்ப்பனியத்தை இந்த சமூகத்திலிருந்து அகற்றுவதற்கு இங்கு அனைவரும் சேர்ந்தே செயல்பட வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும், யாரிடமிருந்து வந்தாலும் அவைகளை வரவேற்கிற தெளிவும், தெம்பும் வேண்டும். சந்தேகக்கண் கொண்டு அவைகளை கிள்ளி எறிவதும், முத்திரை குத்தி அந்தக் கருத்துக்குரியவர்களை புறந்தள்ளுவதும் சமூக மாற்றத்துக்கு ஒருபோதும் உதவாது.
‘அவரவர் அவரவர் இடத்திலேயே இருங்கள், யாரும் கோடுகளைத் தாண்டாதீர்கள்’ என்னும் விதியையே இந்த முத்திரைகள் நிர்ணயிக்கும். மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும் என்னும் சமூக விஞ்ஞானத்துக்கு புறம்பான பார்வையை செலுத்தும். “நான்கு வர்ணங்களைப் படைத்த நானே அவைகளை மாற்ற முடியாது” என்னும் அர்த்தத்தில் “தஸ்ய கர்த்தாரம மாம், வித்ய கர்த்தார-மவ்யம்” என கீதையின் நாயகன் சொன்ன ஆணவ மொழிக்கே உதவும்.
*
யார் இந்து பாசிஸ்டு?
உன்னைப் போல் ஒருவனை முன்வைத்து நான் சொல்லிய சில கருத்துக்களை பதிவர் சுகுணா திவாகர் அவர்கள் எதிர்பாராத எதிர்வினைகளாக கருதியிருக்கிறார். அவைகளின் மேலான தனது கருத்துக்களை மேலும், ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் முன்வைத்திருக்கிறார். சமூகத்தின் பொதுவெளியில் நடக்க வேண்டிய இதுபோன்ற விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் அவருக்கு என் நன்றிகள் முதலாவது.
அவர் குறிப்பிட்ட குழப்பங்களும், மயக்கங்களும் எனக்குள் நீடிக்கிறதா, இந்து பாசிஸ்டு என்பது யார் எனவெல்லாம் பேசுமுன் அவருக்கு என்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. ஜெயலலிதாவை நான் சகித்துக்கொண்டதில்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பு ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் குறித்து என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறது என்பதை அறியேன். என் தனிப்பட்ட கருத்துக்களுக்கு, நான் சார்ந்திருக்கும் அமைப்பை தயவுசெய்து இழுக்க வேண்டாம். என்னுடைய புரிதலில் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிற தோழர்கள் கூட பின்னூட்டங்களில் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திரைப்படங்களுக்கு வெளியே கமல்ஹாசன் என்னும் கலைஞர் தன்னை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நான் குறிப்பிட்டு இருந்தவைகளைப் பற்றிச் சொல்லும்போது “நாத்திகராய், பகுத்தறிவுவாதியாய் இருப்பதல்ல பிரச்சினை. ஒடுக்கப்பட்ட மக்களின்பால் அக்கறையுள்ளவராகவும், தனது ஒரு அசைவுகூட ஆதிக்கத்திற்குத் துணைபோய் விடக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதுதானே சமூக அக்கறையுள்ள கலைஞனின் பணி?’’ என்று கேட்டு இருக்கிறார். அப்படியே நான் ஒப்புக்கொள்கிறேன். அதில் அவர் தவறி இருக்கிறார் என்பதை நானும் எனது பதிவுகளில் சுட்டிக் காட்டி இருக்கிறேன். அப்படி தவறி விட்டதாலேயே அவரை இந்து பாசிஸ்டு என்று சொல்லிவிட முடியுமா என்று கேள்வி வருகிறது. இந்த ரீதியில் கணக்கெடுக்க ஆரம்பித்தால் எத்தனை கலைஞர்கள் இந்து பாசிஸ்டுகளாக இல்லாமல் மிஞ்சுவார்கள்?
தொடர்ந்து “கமலின் படங்களிலும் நடவடிக்கைகளிலும் புகைமூட்டம் மாதிரியான குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இந்த குழப்பம் கமலுக்கா, நமக்கா என்பதிலும் குழப்பம் இருக்கிறது. ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் கமல் தன்னை ஒரு இந்துபாசிஸ்டாகத்தான் இந்த படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்”. எனச் சொல்கிறார் சுகுணா திவாகர். ஆக, இதர விஷயங்களில் கமல் பற்றிய மதிப்பீடுகளில் புகைமூட்டம் போன்ற குழப்பங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், இந்தப் படத்தைப் பொறுத்த வரையில் அவர் இந்து பாசிஸ்டுத்தான் என்று அடித்துச் சொல்கிறார் அவர். கமல் என்னும் தனிப்பட்ட கலைஞர் ‘இந்து பாசிஸ்டு’ எனச் சொல்லப்படுவதில் சுகுணா திவாகருக்கும் குழப்பங்கள் இருப்பதை உணர முடிகிறது. ஆக, அவரது ‘இந்து பாசிஸ்டு’ என்னும் மதிப்பீடு இப்போது உன்னைப் போல் ஒருவன் என்கிற படத்தைப் பொறுத்த வரையில் என்பதை அவரே தெளிவு படுத்தி இருக்கிறார்.
அடுத்து இதிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. படத்தில் கமல் ஏற்றுக்கொண்டு இருக்கிற பாத்திரம் ‘இந்து பாசிஸ்டா’ அல்லது இந்தப் படத்தை தமிழுக்குக் கொண்டு வந்ததில் கமலுக்கு இருக்கும் பங்கையும், நோக்கத்தையும் முன்வைத்து இந்த ‘இந்து பாசிஸ்டா”. இதற்கான பதில் சுகுணா திவாகர் அவர்கள் ‘’படைப்பு என்பது படைப்பாளியின் துணையில்லாமலேயே அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறதா மாதவராஜ்? பிளாக் மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்காமல் துரோகால், வெட்னெஸ்டே மாதிரியான படங்களை ரீமேக் செய்கிற கமலின் தேர்ந்தெடுப்பிற்குப் பின் எந்த அரசியலுமே இல்லையா தோழர்?’’ என்று கேள்வி கேட்பதில் தெளிவாக இருக்கிறது.
இப்போது யார் இந்து பாசிஸ்டு என்கிற புரிதலுக்கு நாம் வரவேண்டி இருக்கிறது. அப்போதுதான் கமலின் ‘இந்த தேர்ந்தெடுப்பு’ அவரை இந்து பாசிஸ்டு என்று சொல்லக் கூடுமா என்று தெரியும். மிக விரிவான, ஆழமான விளக்கங்களுக்கெல்லாம் போகாவிட்டாலும் சில அடிப்படையான தன்மைகளையாவது உள்வாங்கிக் கொள்வது அவசியம்.
ஒரு குறிப்பிட்ட இனம், மதம், மொழி போன்றவைகளின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு சமூத்தின் மீது தங்கள் மேலாதிக்கத்தை நிறுவி, இதர பகுதி மக்களை ஒடுக்குவது என்பது பாசிசத்திற்கான சுருக்கமான பதம். இப்போது இந்து பாசிசம் என்றால் என்னவென்று புரிந்திருக்கும். இந்துக்களை ஒன்றுபடுத்துவது, இந்துக்களின் தேசமாக இந்த நிலப்பரப்பை அறிவிப்பது மற்றும் ஆக்குவது, இந்துக்கள் அல்லாதவர்களை ஒடுக்குவதுதான் இந்து பாசிசம்.
இந்து என்கிற சொல்லைக் கொடுத்ததே ஆங்கிலேயன்தான். முதலில் வேத மதமாகவும், சமய மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பிறகு வைணவ சைவ மதங்களாகவும் உருமாறிக்கிடந்த இந்தியாவில் ஆங்கிலேயன் பூகோள ரீதியாக வரையறுப்பதற்குக் பயன்படுத்திய வார்த்தையை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய பாசிச சக்திகள் தங்களுக்குரியதாய் எடுத்துக்கொண்டு, அதற்கு தொன்மையான அர்த்தங்களையும், கடந்தகால மகிமைகளையும் கற்பித்து, உருவேற்றி இன்று உன்மத்தம் கொண்டதாய் நம்முன் நிறுத்தி வைத்திருக்கிறது. 1905ல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தபோது அதை எதிர்த்து ஒன்றாக நின்று போராடிய இந்துக்களும், முஸ்லீம்களும் 1947ல் இந்த தேசமே இரண்டாக பிரிக்கப்பட்டபோது எதிரேதிரே நின்று ஒருவரையொருவர் கொன்று குவிக்க, தேசமே ரத்தக்களறியானது. இன்றுவரை நீடிக்கிறது. அப்படியொரு வரலாற்றுச் சிதைவினை துவக்கி வைத்தது இந்து பாசிசம் இங்கு.
கிலாபத் இயக்கத்திலிருந்து நாம் இந்து பாசிசத்தின் வேர்களை அறிய வேண்டி இருக்கிறது. இந்துக்களும், முஸ்லீம்களும் சேர்ந்து நின்று அப்போது ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள். எப்போதுமில்லாத ஒற்றுமை உருவானது. “கிலாபத் கிளர்ச்சி காலத்தில் இந்துக்கள் வெளிப்படையாக முஸ்லீம்கள் கையிலிருந்து தண்ணீர் வாங்கிக் குடித்தனர். முஸ்லீம்களும் அவ்வாறே செய்தனர். இந்து முஸ்லீம் ஒற்றுமையே கோஷமாகவும், கொள்கையாகவும் அறிவிக்கப்பட்டது. மசூதி மேடையிலிருந்து போதனை செய்ய இந்து தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர்” என்று பிரிட்டிஷ் அரசின் அதிகாரபூர்வ ஆண்டறிக்கை சொல்லியது.
இது சற்றும் பிடிக்காத, இந்த ஒற்றுமையை வெறுத்த இந்துத்துவாவின் பிதாமகன் கோல்வார்கர் இப்படி எழுதிகிறார்: “மக்கள் முதல்முறையாக ஒரு தேசீய வாழ்க்கை வாழப்போகிறார்கள் என்ற கருத்து பரப்பப்பட்டது. இந்த மண்ணில் வசிக்கும் அனைத்து மக்களும் சேர்ந்துதான் தேசம் என்றும், அந்த மக்கள் அனைவரும் ஒரு பொதுவான தேசிய மேடையில் இணைந்து சட்டரீதியான முறையில் போராடி விடுதல பெற வேண்டும் என்று கூறப்பட்டது. ஜனநாயகம் பற்றிய தவறான எண்ணங்கள் இக்கருத்துக்கு வலிமை சேர்த்தன. நம்முடைய நாட்டை முன்பு ஆக்கிரமித்தவர்கள் மற்றும் நமது எதிரிகளை நமது மண்ணுக்கு பொருத்தமில்லாத ‘இந்தியன்’ என்ற பெயரில் அழைக்கத் தலைப்பட்டோம். நம்முடைய போராட்டத்தில் அவர்களும் சேர்வதற்காக அவர்களையும் திரட்ட முற்பட்டோம். இந்த நஞ்சின் விளைவு நம் அனைவருக்கும் தெரிந்ததே. நமது எதிரிகளை நமது நண்பர்கள் என்று நம்புவதன் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள நாம் அனுமதிக்கிறோம். நமது உண்மையான தேசியத் தன்மையை நமது கரங்களாலேயே சீரழித்துக்கொண்டு இருக்கிறோம்”. இந்து பாசிசத்தின் மிக முக்கியமான முகம் இது. இந்துக்கள் அல்லாதவரோடு சேர்ந்து எந்தப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது, அது இந்துக்கள் அல்லாதவரோடு பகைமையை ஏற்படுத்தாமல், ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் அது. தன் எதிரிகளை நண்பர்களாகிக் கொள்ளக் கூடாது என்று உபதேசம் சதாகாலமும் செய்யும் அது.
கமல்ஹாசனின் ஹேராம், குருதிப்புனல் இரண்டிலுமே கமலின் நண்பர்களாக இருப்பவர்கள் முஸ்லீம்களே. ஷாருக்கானின் பிம்பத்தை வைத்து யோசித்தால், கோல்வார்கரின் வார்த்தைகள் எப்படி நொறுங்கிப் போயிருக்கின்றன என்பதை அறிய முடியும். படம் பார்க்கும் எந்த இந்துவுக்கும் ஷாருக்கான் பிடித்தமானவராகவே இருப்பார். குருதிப்புனல் படத்தில் தீவீரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அப்பாஸ் என்னும் அதிகாரியோடு ஒன்றிணைந்து களம் இறங்குவார் கமல்ஹாசன். இவராவது, குடும்பத்திற்காக கடமை தவறுகிற கோழையாய் நடித்திருப்பார். ஆனால் உறுதியோடு தன் மரணத்தையும் பொருட்படுத்தாத அதிகாரியான அப்பாஸ் என்னும் பாத்திரத்தின் மீது எந்த இந்துவுக்கு பகைமை வரும்? இந்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும் ஹாரிப் என்னும் முஸ்லீம் பாத்திரத்தோடு சேர்ந்துதான் தீவிரவாதிகள் கையாளப்படுகிறார்கள். கமல்ஹாசன் என்னும் பாத்திரம் சந்தேகப்பட்டாலும், ஹாரிப்பின் உறுதி பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறதே! அதிலும் கடைசியில் அவனுக்குத் தெரியாமல் அவன் கையில் சுடும் இந்து போலீஸ் அதிகாரியைவிட ஹாரிப்பே எல்லோர் மனதில் நிமிர்ந்து நிற்கிறான. கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து இப்படிப்பட்ட பாத்திரங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கோல்வார்கர் குறிப்பட்ட நஞ்சையும் கமல்ஹாசன் பார்வையாளர்களுக்கு ஊட்டியிருக்கிறாரே? இந்த அசைவுகள் எந்த ஆதிக்கத்திற்கு துணை போகக் கூடியன?
இன்னொரு முக்கிய நிகழ்வையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கமல்ஹாசன், மருதநாயகம் என்னும் வரலாற்றுப் படம் ஒன்றை எடுக்கத் துணிந்ததும், இந்துவாக இருந்து முஸ்லீமாக மாறிய கான்சாகிபின் சரித்திரம் என்னவென்பதும் நமக்குத் தெரியும். ஆங்கிலேயருக்கு எதிராக வீரத்துடன் போரிட்டு மடிந்த அந்த வரலாற்றுப் பாத்திரம் வெளிவந்திருந்தால் மூஸ்லீம்கள் குறித்து எழுப்பப்படும் கட்டமைப்புகளுக்கு என்ன சேதாரங்களை உருவாக்கி இருக்கும் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இராமகோபாலன் உள்ளிட்டவர்கள் எழுப்பிய கடுமையான கூப்பாட்டையும், கூச்சலையும் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்டவராகவும் கமல்ஹாசன் இருக்கிறார்.
இதற்காக நான் உன்னைப் போல் ஒருவன் படத்தையோ, கமல்ஹாசனையோ வக்காலத்து வாங்குவதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். இந்து பாசிஸ்டாக இருக்க வேண்டிய லட்சணங்கள் கமலுக்கு இல்லை என்பதைத்தான் சொல்கிறேன். இதனை நான் கமல்ஹாசன் மீதுள்ள மயக்கத்தினால் சொல்லவில்லை. இந்து பாசிஸ்டு என்பதன் அர்த்தம் புரிந்ததால் சொல்கிறேன். அந்த வார்த்தை மிகக் கொடூரமானது. அதன் அரசியலும், வரலாறும் அப்படியொரு வன்மம் நிரம்பியது.
இதையெல்லாம் பேசவைத்த சுகுணா திவாகர் அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.
*
ஆயிரம் பூக்கள் மலரட்டும்!
இதே செப்டம்பர் 24ம் நாள்தான் color of paradise ஈரானியப்படம் குறித்து சென்ற வருடம் என் முதல் பதிவை எழுதியிருந்தேன். சரியாக ஒரு வருடமாகிறது. இதோ எனது 340வது பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன். திரும்பிப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு எழுத்துக்களை, மனிதர்களை அறிமுகம் செய்தபடி காலம் வேகமாக ஒடி வந்துகொண்டு இருக்கிறது.
எழுத வந்தது, எதுவும் புரியாமல் நின்றது, மெல்ல மெல்ல இந்த வெளி பழக்கமானதெல்லாம் ஏற்கனவே இங்கு சொல்லி இருக்கிறேன். பதிவுலகம் எப்படியான சித்திரங்களை எனக்குள் தந்து கொண்டு இருக்கிறது என்பதையும் ஏற்கனவே இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். இவைகளுக்கப்பால், இந்த ஒரு வருடத்தின் முடிவில் பதிவுலகம் எனக்குத் தந்திருக்கும் அனுபவங்களையும், சில ஆசைகளையும் இந்த நேரத்தில் நண்பர்கள் உங்களிடம் தெரிவிக்கத் தோன்றுகிறது.
மீண்டும் எதையாவது எழுத வைத்திருப்பது இந்தப் பதிவுலகம்தான். பைத்தியம் பிடிக்க வைத்திருக்கிறது திரும்பவும் எழுத்துக்களின் மீது. அதே நேரம் புத்தகம் வாசிப்பது நிறைய குறைந்து போன வருத்தம் நிரந்தரமாக அருகில் உட்கார்ந்திருக்கிறது. வாங்கி , படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் அலமாரியிலோ, மேஜையிலோ இருந்துகொண்டு என்னைக் கேலி செய்துகொண்டு இருக்கின்றன. கிடைக்கும் நேரம் கம்யூட்டரை நோக்கியே கண்களும், கைகளும் செல்கின்றன. வரையறையற்ற நாட்களாகவே நகர்ந்துகொண்டு இருக்கின்றன. குறைந்தபட்ச திட்டமிடுதல்கள் அவசியமாய்த் தோன்றுகிறது. முயற்சிக்க வேண்டும்.
எதை இங்கு எழுதி கிழித்து விட்டேன் என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது. அச்சில் வெளிவந்திருக்கிற மார்க்ஸ், சேகுவேரா, காந்தியின் மரணம், காதல், உலகமயமாக்கல், இந்திய சுதந்திரம், குறித்த எனது புத்தகங்களை தொடர் பதிவுகளாக கொண்டு வந்திருக்கிறேன். அவைகளை வாசித்தவர்களும், அதற்கு கருத்துரையிட்டவர்களும் குறைவுதான் என்றாலும், எப்போதும், யாரும் படித்துக் கொள்வதற்கு என்னால் ஆன காரியத்தைச் செய்திருக்கிறேன். அது போதும். ரஜினிக்கு கருணாநிதி கொடுத்த தண்டனை என்றால் அதிகம் படிக்கும் நம் மக்கள் பகத்சிங்கிற்கு ஆங்கிலேயன் கொடுத்த தண்டனையை எழுதினால் தள்ளியே நிற்கிறார்கள். என்ன செய்ய?
பெரும் உரையாடல் வெளியாக பதிவுலகம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் உடனடியாக அரங்கேறுகின்றன. சந்தோஷமே. இன்னும் பக்குவமும், ஆரோக்கியமான தொனியும் நமக்கு வேண்டும் என்றே நினைக்கிறேன். வார்த்தைகளில் இன்னும் அழுத்தமும், ஆழமும் அதே நேரம் நாகரீகமும் வேண்டும் என்றே உணர்கிறேன். இதையும் என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொல்லிக் கொள்கிறேன்.
வரும் பின்னூட்டங்கள், எவ்வளவு தீவீரமான எதிர்வினைகளாக இருந்தாலும், அவைகளை அனுமதிக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அதேநேரம் மரியாதைக்குறைவான, தரக்குறைவான, தனிப்பட்ட காழ்ப்புனர்ச்சிகளோடு கூடிய பின்னூட்டங்களை நிச்சயம் அனுமதிக்க மாட்டேன். சில பிரச்சினைகள் பற்றிய எனது புரிதலோடு நான் பேச ஆரம்பித்தால் போதும். அனானிகள் எங்கிருந்து வருவார்களோ, தெரியவில்லை. தாறுமாறாய் வந்து திட்டுவார்கள். குறிப்பாக இந்துத்துவாவைப் பற்றி எழுதிவிட்டால், அவர்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சமீபத்தில் சவார்க்கரைப் பற்றி நான் எழுதியதற்கு ‘fuck your mother' என்றெல்லாம் பின்னூட்டங்கள். தாயைப் பற்றி அவர்கள் புரிதல் அவ்வளவுதான் அவர்களுக்கு என்பதைத் தாண்டி அதில் சொல்ல வேறு என்ன வேண்டியிருக்கிறது.
சமீப காலமாய்த்தான் பதிவுலகத்தில் அதிகம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அற்புதமான, ஆரோக்கியமான, புதிய எழுத்துக்களை அதிகம் காணமுடிகிறது. அச்சு உலகம் அறியாத இந்த எழுத்துக்களை புத்தகமாக கொண்டு வரும் முயற்சிதான், ‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’! தினம்தோறும் நண்பர்கள் மெயிலுக்குச் சுட்டிகளை அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாய் வாசித்துக் கொண்டு இருக்கிறோம். அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது... சுட்டிகளை, சுட்டிக் காட்ட! நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
இன்னும் செய்ய வேண்டியதும், செய்ய நினைத்து பாதியிலே நின்று போனதும் இங்கு நிறைய இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது, தடை செய்யப்பட்ட இலக்கியம் குறித்த தொடர். ஐந்து புத்தகங்களோடு நின்றுவிட்டது. அதை இனி தொடர வேண்டும். அதிகமாய், பதிவுலகில் அடுத்தவர்களின் எழுத்துக்கள் குறித்து என் பதிவில் எழுதாமல் வந்திருக்கிறேன். இனி அதையும் செய்ய வேண்டும். புதியவர்களை அறிமுகப்படுத்துவது அதன் முக்கிய காரியமாக இருக்கும்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அதுதான் பதிவுகள் இருக்கவே இருக்கிறதே....! இதுவரை இங்கு வந்து இரண்டு லட்சம் பக்கங்களுக்கு மேல் வாசித்தவர்களுக்கும், சகபயணிகளாய் இணைந்திருக்கும் 279 நண்பர்களுக்கும் எனது நன்றி. எல்லோருக்கும் நன்றி.
கருத்துக்களமாக உருப்பெற்று வரும் இப்பதிவுலகம் இன்னும் புதிய புதிய எழுத்துக்களோடும், சிந்தனைகளோடும், திசைகளோடும் வளரட்டும். மாவோ சொன்னது போல ஆயிரம் பூக்கள் மலரட்டும்!!
பி.கு: வலைப்பதிவில் அனுபவங்களை எழுதும் தொடரில் என்னை எழுத அழைத்த தமிழ்நதி அவர்களுக்கு நன்றி. இது அப்படி ஒரு பதிவும் கூட.
*
நானும் உங்கள் நண்பன்தான்...!
மெயின் ரோட்டில் பஸ்ஸும், லாரியும் கிளப்பிய புழுதியில் எரிச்சல் அடைந்தவனாய் மாரியம்மன் கோவில் தெருவில் திரும்பினேன். வாகனங்களின் இரைச்சல் தாங்க முடியவில்லை.
டீக்கடையருகே முதுகு காட்டி நின்றிருந்த அவனைப் பார்த்ததும் ஆச்சரியமாயிருந்தது. 'சொல்லவேயில்லையே.... சென்னையிலிருந்து எப்போது வந்தான்' அருகில் சென்ற பிறகுதான் அப்படி தோன்றியது. பின்னாலிருந்து அவன் கண்களை மூடினேன்.
“யாரு” என்று வேறு குரல் கேட்டதும் கைகளை விலக்கி அவமானத்தில் நின்றேன். திரும்பியவன் முகத்தில் மீசை இல்லை.தாடி இருந்தது. செண்ட் வாசனையும் அதிகமாய் இருந்தது
"மன்னிக்கவும்... என் நண்பன் ரவி என்று நினைத்து..." முடிக்காமல் மெல்ல முணுமுணுத்தேன்.
"பரவாயில்லை...நானும் உங்கள் நண்பன்தான்.... டீ சாப்பிடுறீங்களா?"
"இருக்கட்டும். நன்றி...வர்றேன்...."
வேகமாய் திரும்பியவன் கொஞ்சதூரம் நடந்ததும் திரும்பிப் பார்க்கத் தோன்றியது. அவனும் என்னைப் பார்த்து புன்னகைத்தான். நானும்தான். என்னைக் கடந்து சென்ற சைக்கிள் மணிச்சத்தம் உற்சாகமாய் ஒலித்தது.
(இது ஒரு மீள் பதிவு)
*
உன்னைப் போல் ஒருவனை முன்வைத்து.....
நேற்றிரவு செல்வேந்திரனின் பதிவைப் படித்த போதுதான் உன்னைப்போல் ஒருவன் படத்தை முன்வைத்து எதோ சர்ச்சைகள் உருவாகி இருப்பதாகப் பட்டது. காலையில் உண்மைத்தமிழனின் பதிவில் ‘உன்னைப்போல் ஒருவன்’ பட விமர்சனப் பதிவுகளின் பட்டியல் வழியாக ஒவ்வொன்றாக படிக்க நேர்ந்தபோதுதான் பதிவுலகம் சூடாகி இருப்பதை அறியமுடிந்தது. இன்னும் விவாதங்களுடன் பதிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன.
A wednesday மற்றும் உன்னைப்போல் ஒருவன் இரண்டையுமே பார்க்க முடிந்ததால் எனக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்களை மிகச்சுருக்கமாக மட்டுமே நேற்றைய பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். எனக்கு ஏற்பட்டு இருந்த சில கேள்விகளை லேசாய் கோடிட்டு மட்டும் காண்பித்து இருந்தேன். இப்போது பார்த்தால், நான் பதிவிடுவதற்கு முன்பே ஆரம்பித்து இங்கு ஒரு விஷயம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்திருக்கிறது.
கமலின் இந்தப்படம் முழுக்க முழுக்க இந்துத்துவா ஆதரவுப்படம் என்றும், அப்படியெல்லாம் இல்லை என்றும் ஆரம்பித்து, நீண்டு, கமல்ஹாசன் என்னும் கலைஞன் மீது அவரவர்கள் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்து இருக்கிறோம். படைப்பு குறித்த விமர்சனத்திலிருந்து, படைப்பாளி நோக்கிய விமர்சனத்திற்கு தாவி இருக்கிறோம். இந்த இடத்தில் நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பும், அக்கறையும் நாம் கொண்டிருக்கிறோமா என்பதை கொஞ்சம் நிதானித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்கிறேன்.
அரைநூற்றாண்டுக் காலம் தமிழ்ச்சினிமாவில் முக்கியப் பாத்திரமாக இருந்த ஒருவரை, சினிமா பற்றிய ஞானம் உள்ள சினிமாக் கலைஞரை, மனிதநேயமிக்க எத்தனையோ காட்சிகளை கண்முன் நிறுத்தியவரை, எத்தனையோ அற்புதமான படங்களை தமிழ்த் திரையுலகத்திற்குத் தந்தவரை சட்டென்று “ஒரு இந்துப் பாசிஸ்டு” என்று முத்திரை குத்துவது சரியல்ல. சில காட்சிகளை முன்னிறுத்தி, ஒரு கலைஞனை ஒட்டுமொத்தமாய் மதிப்பிடுவது நல்லதல்ல. அதிலும் அவரது பிறப்பை முன்னிறுத்தி பேசுவது ஆரோக்கியமானதல்ல.
நான் உட்பட பலரும் சுட்டிக்கட்டியிருக்கிற சிக்கலான கையாளல் இந்தப்படத்தில் இருக்கிறதுதான். தீவீரவாதம் என்றாலே முஸ்லீம்கள் என்னும் தோற்றத்தை இந்தப்படம் தருகிறதுதான். கமல்ஹாசன் அவர்களுக்கு இப்போது என்று இல்லை, ஹேராம் படத்திலும் ‘இந்துத்துவா’ குறித்த அவருக்கு இருக்கும் தெளிவின்மை தெரியும். குருதிப்புனலிலும் தீவீரவாதம் குறித்த கோளாறான பார்வைகள் வெளிப்படும். அதை அவரிடம் உள்ள குழப்பங்களாகவும், ஒரு சிக்கலானப் பிரச்சினையைப் புரிந்து கொள்வதில்/அணுகுவதில் ஏற்படும் மயக்கங்களாகவுமே உணர வேண்டியிருக்கிறது.
அத்வானியின் ரதயாத்திரையொட்டி நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ‘முஸ்லீம்கள் இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் அல்ல, வந்தேறிகள்’ என்றெல்லாம் இந்துத்துவாவின் பஜனைகள் ஆரம்பித்தன. இதுகுறித்து அப்போது வாய்திறந்து பேசிய ஒரே தமிழ்ச் சினிமாக் கலைஞர் கமல்ஹாசன்தான். “அப்படியென்றால் கைபர் போலன் வழியாக வந்தவர்கள் யாராம்” என்று
அவர் எதிர்க்கேள்வி கேட்டது அன்று பத்திரிகைகளால் பரவலாக பேசப்பட்டது. தமிழகத்தில் பலர் வாயடைத்துப் போனார்கள். இது வெறும் செய்தி மட்டுமல்ல. சமூகப்பார்வை கொண்ட ஒரு கலைஞனின் குரல். தன்னை இன்றும் நாத்திகராகவும், பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவராகவும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கியதில்லை. அதையெல்லாம் மறந்துவிட்டு, நாம் அவரை இன்று ‘இந்து பாசிஸ்டு’ என்று அவசரப்பட்டு சொல்லிவிடக் கூடாது.
'சங்கம் எனது ஆன்மா' என்னும் கட்டுரையில் முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இப்படி எழுதினார். "மெக்கா முஸ்லீம்களுக்கு புனிதஸ்தலம்தான். ஆனால் இந்தியா அவர்களுக்கு புனிதத்திலும் புனிதமாக இருக்க வேண்டும். மசூதிக்குச் சென்று நமாஸ் செய்யட்டும். நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், மக்காவையும் இந்தியாவையும் முன்னர் வைத்து அவர்கள் யாரைரேனும் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அவர்கள் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்." இந்த வார்த்தைகள் அன்று பெரிதாக பேசப்பட்டன. முஸ்லீம்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று சித்திரம் தீட்ட இந்துத்துவா சக்திகளால் எல்லா இடங்களிலும் சங்கு ஊதப்பட்டன. வாஜ்பாயின் இந்த வாதத்தை அப்படியே திருப்பி, “ஒரு இந்துவுக்கு இந்தியா புனிதத்திலும் புனிதமாக இருக்கவேண்டும். ராமர் பிறந்த இடம் இந்துக்களுக்கு புனிதமாக இருக்கலாம். ஆனால் ஒரு இந்துவின் முன்னால் அயோத்தியா இந்தியாவா என்று கேட்டால் அவர்கள் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று இந்திய சமூகம் எழுந்து நின்று சொல்லவில்லையே! சமூகத்தின் பொதுப்புத்தியில் கேள்விகள் அற்றுப் போயிருக்கிறது. மிக எளிதாக பாசிச சக்திகள் மனிதர்களை உண்மை போலும் நம்ப வைக்கின்றன.
ஆம். இது ஒரு சிக்கலான காலம். வரலாற்றில், அரசியலில் ஒரு தெளிவான வரையறைகளுக்கு வரவிடாதபடிக்கு பொதுமனிதர்களை குழப்பத்தில் நிற்கவைத்திருக்கிற காலம். ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்பது பாசிச சக்திகளால் திரும்ப திரும்ப பேசப்பட்டு, ஊடகங்களால் திரும்பத் திரும்ப ஊதப்பட்டு தோற்ற மயக்கங்களையும், காட்சிப்பிழைகளையும் இந்த நிலப்பரப்பு முழுவதும் நிரப்பி வைத்திருக்கிற காலம். அதிர்ச்சிகளும், பரபரப்புகளும் சூழ, செய்வதறியாது மனிதர்கள் திணறி நிற்கும் காலம். சிந்தனைகளில், செயல்களில் தடுமாற்றங்களை ஏற்படுத்தும் காலம். இதில்தான் பாசிச சக்திகள் மற்றும் ஆதிக்க சக்திகள் ஆதாயம் பெற்றுக்கொண்டு இருக்கின்றன. கமல்ஹாசன் என்னும் கலைஞனும் இந்த சுழலில் அகப்பட்டு நிற்கலாம். அவரை அவருக்கு அடையாளம் காட்டி வெளிக்கொண்டு வருவதுதான் பொறுப்பான செயலாய் இருக்கும். “நீ இப்படித்தான்” என அவரைத் தள்ளிவைப்பது முறையாகுமா?
அரசியலையும், தத்துவங்களையும் விட்டு விட்டு மனிதாபிமானம் மட்டுமே பேசுகிறவர்கள் பிழை செய்யக்கூடும் என்பதற்கு வரலாறு நெடுக பல சாட்சிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கும் அற்புத குணங்களை பிறகு காலம் பேசத் தவறியதும் இல்லை. கமல்ஹாசன் என்னும் ஒரு கலைஞனை இந்த இடத்தில் வைத்து யோசிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். உன்னைப் போல் ஒருவன் படத்தில் இருக்கும் தவறான கற்பிதங்கள், சித்தரிப்புகள் குறித்து அவரிடம் ஆயிரம் கேள்விகள் நாம் கேட்கலாம். கேட்க வேண்டும். எந்த விவாதமும் இன்றி, முன்முடிவுகளுக்கோ அல்லது இறுதி முடிவுகளுக்கோ வரவேண்டாமே. அது யாருக்கு சாதகம் என யோசித்துப் பார்த்தால் எல்லாம் தெளிவாகும். அவரை நம்மவராக பாவித்து, அவர் நம்மோடு சேர்ந்து நிற்பதற்கான இடத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவரை எதிரே நிற்கவைத்து இழந்துவிடக் கூடாது. அப்படி ஒரு கலைஞர் அவர்.
சரியோ, தப்போ, ஒரு விவாதம் நடைபெறுவதன் மூலம் சில புரிதல்கள் ஏற்படும். கருத்துக்கள் உருமாற்றம் பெறும், உரமேறும். பேசப்படாத கருத்துக்களும், வெளிப்படுத்தப்படாத சிந்தனைகளும் நல்வினைகளுக்கு தூண்டுபவையாக இருப்பதில்லை. அந்த வகையில் இந்துத்துவா குறித்தும், தீவீரவாதம் குறித்தும் பொதுவெளியில் இப்படியான உரையாடல்களை ஏற்படுத்தியதில் ‘உன்னைப்போல் ஒருவன்’ வெற்றி பெற்றிருக்கிறதே!
*
‘உன்னைப் போல ஒருவன்’ தந்திருக்கும் அனுபவம்
முகம் காணாமல் அரக்கப் பரக்க இயங்கிக்கொண்டு இருக்கும் சென்னை என்னும் ஒரு பெருநகரத்தில் தொடர்பற்ற சில சம்பவங்களும், மனிதர்களும் காண்பிக்கப்படுகின்றனர். காரணமறிய விழையும் பார்வையாளனுக்கு சுவராசியம் மேலோங்க, அதிலொரு மனிதன் கட்டி முடிக்கப்படாத ஒரு பெரிய கட்டிடத்தின் மேலேறி உச்சிக்குச் செல்கிறான். இந்த இடம் மிக முக்கியமானதாகிறது. உயரத்திலிருந்து அவன் டிஜிட்டல் நுட்பத்தோடு ஒரு செஸ் விளையாட்டை நடத்துகிறான். கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு இருக்கும் செல்போன் மூலம் தன் முதல் காயை நகர்த்த ஆரம்பிக்கிறான். போலீஸ் கமிஷனருக்கு அழைப்பு விடுக்கப்பட, அவர் பதிலுக்கு கீழேயிருந்து தன் காயை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார். பெரும் படைபலத்தோடு கீழே இருப்பவனை, ஒற்றை மனிதனாய் மேலிருப்பவன் நெருக்கடிக்குள்ளாக்குகிறான். விரிந்து கிடக்கும் சென்னை ஆடுகளமாகிறது. முதலில் பார்த்த தொடர்பற்ற மனிதர்கள் இப்போது ஒவ்வொருவராய் அந்த ஆட்டத்தின் காய்களாகின்றனர். சிறையில் இருக்கும் நான்கு தீவீரவாதிகளும் திடுமென கட்டங்களுக்கு வந்து நிற்கவும், திரையின் வசமாகிப் போகின்றனர் பார்வையாளர்கள்.
மேலே இருப்பவனே அனைத்துக் காய்களின் அசைவுகளையும் தீர்மானிக்கிறான். போலீஸ் கமிஷனரின் அசைவையும் அவனேச் சொல்கிறான். எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிகிறது. கீழே இருப்பவர்களுக்கு அவன் எங்கிருக்கிறான் என்பதை அறிய முடியாமல், ஆட வேண்டிய அல்லது அசைய வேண்டிய நிர்ப்பந்தம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அசைவுக்கும் காலக்கெடு விதிக்கப்பட, ஆட்டத்தின் வெப்பம் கூடுகிறது. இறுதியில் சில காய்கள் எதிர்பாராமல் வெட்டப்படுகின்றன. ஆட்டம் முடிவுக்கு வருகிறது. உயரத்தில் இருப்பவன் சாதாரண மனிதனாக இறங்கி தன் வீடு நோக்கிச் செல்கிறான். கீழேயிருந்து விளையாடிய போலீஸ் கமிஷனர், தோற்றுப்போகாமல் நிம்மதியடைந்தாலும், ஆட்டத்தின் நினைவுகள் அலைக்கழிக்கின்றன.
‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினை இப்படியும் பார்த்துக் கொள்ளலாம். உரையாடல்கள் மூலமே அசையும் இந்தப் படம், பார்வையாளனுக்குள் சில குறிப்பிட்ட தாக்கங்களையும், சமூகத்தின் முக்கியப் பிரச்சினை மீதான பார்வைகளையும் செலுத்துவதுதான் இந்தப்படத்தின் சிறப்பு. அதைவிட நோக்கம் என்றால் சரியாய் இருக்கும்.
தீவீரவாதத்தால் அலைக்கழிக்கப்படுகின்ற இந்தக் காலக்கட்டத்தின் ஒரு சாதாரணன் படுகிற வலியையும், பொதுவெளிகள் நிச்சயமற்றதாய் பயமுறுத்துவதையும் இந்தப்படம் பேசுகிறது. சம்பந்தமில்லாத மனிதர்கள் பலியாகி, குடும்பங்களுக்குள் பெரும் வேதனை நினைவுகள் சுருண்டு கிடப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. சமூகத்தின் பிரச்சினை ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு, சினிமா என்னும் கலை பேசியிருக்கிறது. அதுவும் பிம்பங்களையும், மயக்கங்களையும் செலுத்துகிற ஆட்ட பாட்டங்கள் இல்லாமல் பேசியிருக்கிறது. அந்த அளவில் ‘உன்னைப்போல் ஒருவன்’ முக்கியமான ஒரு திரைப்படம்தான். தமிழில் கொண்டு வந்ததற்கு கலைஞன் கமல்ஹாசனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளலாம்.
படத்தின் ஆரம்பத்திலேயும், பிறகு அவ்வப்போதும் இசைக்கும் ‘தீம் மியுசிக்கில்’ முதல் விமர்சனம் வருகிறது. இஸ்லாம் மதத்தின் குறீயீடாக ஆரம்பித்து, உற்று கவனித்தால் ‘சம்பவாகி யுகே யுகே’ என முடிகிறது. “நான் இந்துவாக, முஸ்லீமாக, கம்யூனிஸ்டாக இருக்கலாம். அது முக்கியமல்ல’ என்று பிற்பாடு பேசுகிற, சாதாரண/பொது மனிதனாக (comman man) நடித்திருக்கும் கமல்ஹாசன் அப்படியொரு இசையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு கேள்விதான். “உலகில் எப்போதெல்லாம் அநீதிகள் தோன்றுகிறதே அப்போதெல்லாம் நானே மீண்டும் தோன்றி உலகைக் காப்பாற்றுவேன், அனைத்துக்கும் நானே காரணம்’ என்கிற கீதா உபதேசத்தின் குறியீடாக இருக்கும் அந்த வார்த்தைகளோடு கூடிய இசைவடிவம் கதைக்கு வேறு அர்த்தங்களை, கற்பிக்கிறது. பார்வையாளர்களின் புலன் வழியே வேறு முலாம் பேசுகிறது. அந்த ‘சம்பவாகி யுகே யுகே’வானது உயரத்தில் போய் பொதுமனிதன் உட்கார்ந்து கொள்வதற்கு என்ன தோற்றத்தை உருவாக்கும்? அதை நிச்சயப்படுத்துவது போல, ஆட்டத்தின் முதல் அசைவு நகர்ந்ததும் பொதுமனிதன் “நடந்தது நன்றாகவே நடந்தது” என்று போலீஸ் கமிஷனிரிடம் பேசுகிறார். இது a wednesdayயில் இல்லாதது. கவனிக்கத்தக்கதும், ஆபத்தானதும் ஆகும். மதவேறுபாடுகளைக் கடந்து படத்தில் பேசப்படும் வசனங்களுக்கு ஊடே ஏன் இந்த ‘சுருதி’பேதம்?
இன்னொன்று அந்த பப்பெட் ஷோ. இரட்டைக் கட்டிடத் தகர்ப்பு பற்றி முசரப் கேட்க, புஸ் கொட்டாவி விடுவது பெரும் கிண்டல். ஆனால் படத்திற்கு சம்பந்தமில்லாதது போலத் தோன்றினாலும், தீவீரவாதம் என்றால் மூஸ்லீம்கள்தான் என விதைக்கப்படும் பிம்பங்களை இந்தப் படமும் உருவாக்குகிறதே? வருத்தமாயிருக்கிறது. இன்றைய வரலாற்றில், அரசியலில் ‘பயங்கரவாதம்’ மற்றும் ‘தீவீரவாதம்’ குறித்து வேண்டுமென்றே விதைக்கப்படும் சொல்லாடல்களை, புரிதல்களை, தகர்க்க முடியாதது படத்தின் தோல்வியாகப்படுகிறது. மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டும் வளர்த்துவிட முடியாது.
வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதி போலீஸ் கமிஷனரிடம் வந்து தனக்கு செக்யூரிட்டி கேட்பதுபோல் தமிழில் காட்சி வருகிறது. ஹிந்தியில் ஒரு சினிமாக் கதாநாயகன் வருவதாகவும் “இவங்கதான் நம்ம ஹீரோக்கள், பாருங்க” என்று போலீஸ் கமிஷனர் சொல்வார். இப்படி ஒரு கிண்டல் தொனி சினிமாக் கதாநாயகர்கள் மீது வரவேண்டாம் என கமல்ஹாசன் ஏன் நினைக்க வேண்டும். அதுபோல, A wednesdayவில் இந்த அமைப்பின் மீதும், அரசு மீதுமான வசனங்கள் கடுமையாய் இருக்கும். இங்கே மெல்லிய முனகலாய் மட்டுமே ஒலிக்கிறது.
ஹிந்தியில் அந்தப் பொது மனிதனின் கோபம் மிக நுட்பமானது. எளிமையாய் சொல்லப்பட்டு வலிமையாய் பார்வையாளனுக்குள் இறங்குவது. நேற்றுவரை கூடவே எலக்டிரிக் டிரெய்னில் வந்து ஹலோ சொல்லிச் சிரித்த, நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டி வாழ்த்துக்களைப் பெற்ற ஒரு இளைஞன், இந்தப் பொதுமனிதன் எலக்டிரிக் டிரெய்னில் பயணம் செய்யாத ஒரு வெள்ளிக்கிழமையில், வெடிகுண்டுகளுக்கு இரையான புள்ளியில் இருந்து துவங்குவது. தமிழில் கமல்ஹாசன் பெரும் கலவரங்களைப் பற்றிப் பேசுகிறார். கோரக் காட்சிகளை குரல்வழியே சித்தரிக்கிறார். அனுபவங்களைத் தாண்டிய இந்த மன உணர்வு முக்கியமானது என்றாலும், காட்சிப்படுத்தும்போது அவனை ஒரு சாதாரண/பொது மனிதனிலிருந்து விலக்கி வைக்கின்றன.
தன் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரைத் துப்பாக்கியால் கமல்ஹாசன் துடைப்பது போல இன்னும் சில முக்கியக்காட்சிகளைச் சொல்லலாம். ஆனால் சொல்லாமல் விட முடியாதது, கமல்ஹாசன் இடதுகையால் கையொப்பம் இடுவதும், அதுகுறித்து கேட்கும்போது, அவர் காந்தி பற்றி சொல்வதும். தன்னைப்போலவே காந்திக்கு இரண்டு கைபழக்கமும் உண்டு என்கிற தகவல் இங்கு முக்கியமானது. அதுதான் இடதா, வலதா என்கிற குழப்பம் கமலிடம் நீடிக்கிறது போலும்! இவையெல்லாமே, ஹிந்தியில் இருந்து தமிழில் படத்தை ஆக்கும்போது கமல்ஹாசன் செய்த மாற்றங்கள்.
ஹிந்தியில் A Wednesday படம் பார்த்ததாலேயே இந்தப் படம் பார்க்கவேண்டும் என ஆவல் ஏற்பட்டது. படம்பார்த்து முடித்தபின், A Wednesdayவை முதலில் பார்க்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அதே நேரம் சினிமாவையும், அதன் மொழியையும் அறிந்து வைத்திருக்கும் கலைஞன் கமல்ஹாசனுக்கு எங்கு குழப்பங்களும், தடுமாற்றங்களும், சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இந்தப்படம் பார்த்தது, அப்படியொரு அனுபவமாகி இருக்கிறது.
படம் பார்க்கும்போது பொதுமனிதனாக கமல் வருகிறார் என்கிற பிரக்ஞை வருவதை தவிர்க்க முடியவில்லை. நஸ்ருதின்ஷாவிடம் அது தெரியவில்லை. ஸாரி இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
*
நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த தண்டனை!
சேனலை மாற்றிக்கொண்டு வரும்போது வாலி பேசிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். ‘என்னதான் சொல்கிறார்’என்று சில கணங்கள் நிதானிக்க, அந்த காமெடி ஷோவை பார்க்க நேர்ந்தது. ‘தனக்கு வாழ்வு கொடுத்தவர்’ என்று கருணாநிதியைப்பற்றி ஊனும் உயிரும் உடன்பிறப்புக்களும் உருகப் பேசிக்கொண்டு இருந்தார் கவிஞர். சும்மா சொல்லக்கூடாது. மடை திறந்த வெள்ளம் போலத்தான் பேச்சும் வருகிறது. எதோ ஒரு பாட்டு எழுதியிருந்தாராம். அதில் எழுத்துப் பிழைகள் இருந்ததை கருணாநிதி சுட்டிக் காண்பித்தாராம். வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடையில் இடையினம் வரக்கூடாது என்றாராம். எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசினம் என்று புகழ்ந்து, அரசியலுக்கும் இன்று அப்படியே பொருந்துகிறது பாருங்களேன் என்று சொல்லவும், கருணாநிதி முகத்தில் புன்னகை பூக்க, ஸ்டாலின்+ கனிமொழி,+தயாநிதி மாறன் குலுங்கிச் சிரிக்க, ரஜினிகாந்த் வாய்விட்டுச் சிரிக்க, கூட்டம் ஆரவாரிக்க, எப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி. என்ன தவம் செய்தனர் இந்த தமிழ் மக்கள். சுதாரிக்கும்முன், அடுத்த கதை வாலியிடமிருந்து! எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கும் பாடலுக்கு “நான் அளவோடு ரசிப்பவன்..” என்று முதல்வரி எழுதி, அடுத்தவரிக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கும்போது கலைஞர் அங்கு வந்தாராம். சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் நெட்வொர்க்குக்கே தாங்க முடியவில்லை. எதோ தடங்கலாகி சில கணங்கள் காணாமல் போனது. திரும்பச் சரியானபோது, எல்லோரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது? யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார்.
அவ்வப்போது மேடையில் கவிஞர் வைரமுத்துவைவையும் காண்பித்தார்கள். ‘இன்றைக்கு எதாவது கவிதை மன்றமா’ என யோனை வந்தது. வழக்கமாக, ‘கருணாநிதிதானே மேடையில் நடுவராக இருப்பார், இங்கு வாலி மேடையில் நடுவராகவும், கலைஞர் பார்வையாளராகவும் இருக்கிறாரே’ என கூடவே வியப்பும் வந்தது. மேடையில் மத்தியமந்திரிகள் ஜெகத்ரட்சகன், ராஜா கூடவே சுப.வீரபாண்டியன் போன்றோரையும் காண்பிக்கவும், இது வேறு என்ற தெளிவு வந்தது. மேடையின் பின்னணியில் அண்ணாவோடு கலைஞர் பவ்யமாக சிரித்து குனிந்து நிற்பதைப் பார்த்தவுடன், கலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது. இப்படி எல்லாம் வந்தபின் பார்த்தே விடுவது என்கிற தைரியமும் வந்தது.
இன்ன வார்த்தைகள் என்று கிடையாது. வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் ‘எம் பணி கைதட்டி சிரித்துக் கிடப்பதே’ என்பதாய் கீழே இருந்தார்கள். முதல்வரிசை நடுவில் முதலமைச்சர் கருணாநிதிம், நடிகர் ரஜினிகாந்த்தும் இருக்க, அப்புறமும், இப்புறமும், மனைவி, குழந்தைகள், பேரன்மார், அமைச்சர்கள் புடைசூழ்ந்திருந்தனர். பின்புறம் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தார், இன்னும் பலர் வரிசையாய் உட்கார்ந்திருந்தனர். இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை. தாங்கள் தயாரித்த ‘நினைத்தாலே இனிக்கும்’படம் டாப் டென்னில் முதல் படமாய் காண்பித்து சன் டிவி நிறுவனம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் போதுதான், கலைஞர் டி.வி இந்தக் காட்சியைக் காண்பித்துக் கொண்டிருந்தது.
ஜெகத்ரட்சகன் ‘கலைஞரின் பேச்சாற்றல்’ என பேச வந்தார். ராமாயாண வரிகளையெலாம் மனப்பாடமாய் சந்தசுதியோடு ஒப்பித்து இடையிடையே, கலைஞரை ‘ஆறரை கோடி தமிழ்மக்களின் இதயநாயகன்’ என கொண்டாடித் தீர்த்தார். சிறைக்குச் சென்று, கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி, சட்டமன்றத்துக்குள் நுழைந்தாராம். அப்போது அனந்தநாயகியம்மாள் “என்ன கலைஞரே! மாமியார் வீடு எப்படி இருந்தது” என்று கேட்டாராம். உடனே அவர் “உங்கள் தாய்வீடு நன்றாக இருந்தது” என்றாராம். எப்பேர்ப்பட்ட பேச்சாற்றல் என போற்றினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. சுற்றிலும் எல்லோரும் சிரிக்கும்போது ரஜினி என்ன முகத்தை இறுக்கமாகவா வைத்திருக்க முடியும். தேமேன்னு சிரித்தார். அவ்வப்போது கால்களை ஆட்டி தன்னை உற்சாகப்படுத்திக்கொண்டார். கருணாநிதி எதைச்செய்தாலும் அதில் ஆழ்ந்த பொருளிருக்குமாம், நாணயம் மிக்கவர் அண்ணா என்பதால்தான் அவரது படத்தை ருபாய் நோட்டில் இல்லாமல் நாணயத்தில் பொறிக்க வழிசெய்தாராம் முதலமைச்சர். ஆமாம், இந்த காங்கிரஸார் எந்தக் காரணத்திற்காக காந்தி படத்தை ருபாய் நோட்டில் பதித்தார்கள் என்று தெரியவில்லையே?
தொடர்ந்து உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகவும், கொஞ்சம் தெளிவாகவும் பேசினார் மத்திய மந்திரி ராஜா. அண்ணா, பெரியாரை எல்லாம் அந்த அரங்கத்தில் பேசியது கொஞ்சம் ஆற்றுப்படுத்தியது. கலைஞர் தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளவும், பகுத்தறிவுக் கொள்கை மிக்கவர் எனச் சொல்லிக்கொள்ளத் தயங்கியது இல்லை என்றதோடு நில்லாமல் கடவுள், ஆன்மீகம் குறித்த கடுமையான விமர்சனங்களையெல்லாம் பெரியாரின் வார்த்தைகளோடு குறிப்பிட்டார். இந்த ‘ஈயாடவில்லை’ என்னும் பதத்திற்கான அர்த்தங்கள் ரஜினியின் முகத்தில் தெரிந்தன.
அப்புறம் யார்..? நம்ம வைரமுத்து அவர்கள். உடலை முறுக்கேற்றி, எல்லோரையும் விஞ்சிவிட வேண்டும் என்ற முஸ்தீபோடு வந்தார். தனக்கேயான அந்த விசித்திர உடல்மொழியோடு, ’கலைஞரின் எழுத்தாற்றலை’ அரங்கமெங்கும் நிரப்பினார். ‘அண்ணா ஒரு எழுத்தாளர், ஆனால் கலைஞர் எழுத்தாளர் மட்டுமல்ல, படைப்பாளியுங்கூட’ என்று தனது மேதமையால் கருணாநிதியை அளக்க ஆரம்பித்தார். ‘காளிதாசன், ஷேக்ஸ்பியருக்கும் இணையான, அதற்கும் மேலான உவமைகளைக் கையாண்டவர் கலைஞர்’ என்று அவரது உலக இலக்கிய அறிவை வெளிப்படுத்திய போது ‘அப்படியா’ என்றும் மொத்தக் கூட்டமே புல்லரித்துப் போயிருந்தது. ரஜினியின் புருவங்கள் உயர்ந்து நின்றன. சகிக்கமுடியாமல் டி.வியை அணைத்துவிட்டேன்.
அந்தக் காலத்து அரசவைகளில், நம் புலவர் பெருமக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து சங்கடமடைந்தேன். எட்டையபுரத்து அரசவையில் கவிஞராய் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு, ‘பன்றியைபோல மண்ணிடைச் சேற்றில்’ கிடந்தேன் என சுயசரிதையில் எழுதிய பாரதி விஸ்வரூபமெடுத்து நின்றான். கருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும்? சிறுவயதில் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’யை முழுமையாகப் படித்து அவர் மீது பெரும் மதிப்பு கொண்டவனாய் இருந்ததுண்டு. எல்லாவற்றையும் காலம் கரைத்துக்கொண்டு இருக்கிறது. போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.
ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.
*
தோல் காப்பியம்!
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத்தோட்டத்திலே கண்ணம்மாவிற்காகக் காத்திருக்கும் பாரதி, “மேனி சிலிர்க்குதடி” என்று உருகிப் போகிறார். அவர் மட்டுமல்ல, எந்த மனிதருமே மகிழ்ச்சி, அதிர்ச்சி, பரவசம், திகைப்பு, குதூகலம் என்ற உணர்வுகள் மிகுந்து போகும் நேரத்தில் உடலின் வழி அந்த உணர்ச்சிகளை பிரதிபலிக்கவே செய்கின்றனர்.மயிர் கூச்செரியும் அபாய கரமான விளையாட்டுக்கள் என்றுவிளம்பர வாசகங்கள் எழுதப்படுகின்றன. ‘திடீர்னு சொன்னா என்ன பண்ண முடியும், கோபிக்கு உடம்பு படபடன்னு வந்திருச்சு’ என்று சிறுகதைகளில் ஒரு வரியைக் காண முடிகிறது. சினத்தால் சிவந்தது முகம் என்றோ, கரி படிந்தது போலானது என்றோ கவிஞர்கள் வண்ண வண்ண வருணிப்புகளில் இறங்குகின்றனர். ‘சார், டி.கே.பட்டம்மாள் பாட்டுன்னா என்ன நினைச்சீங்க, பாருங்க சொல்லும்போதே எப்படி புல்லரிக்குதுன்னு’ என்பது போன்ற புளகாங்கித நேரங்களில் தங்கள் கையில் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அதிசயத்தைப் பெருமையுற சொல்கிறவர்கள் எண்ணற்றோர் உண்டு.
நமது உடலின் மேலுறையான தோல் ஓர் அபாரமான உணர்ச்சி தெரிவிப்பாளர். அதாவது உடலுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மட்டுமல்ல, உடலினுள் உள்ள பிரச்சனைகளையும் தோல் குறியீடாக உணர்த்தவல்லது. தோலின் அரிய சேவையை நாம் அங்கீகரித்தாக வேண்டும். அந்த அங்கீகாரம் அதனைப் பராமரிப்பதில் வெளிப்படுவது நமக்கு நல்லது.
மனித உடலுக்குக் கவசமாக அமைந்துவிடுகிற தோல் உண்மையான பொருளிலும் நமக்குக் கவசமானதுதான். பாதுகாப்பு ஏற்பாடுகளில் தோலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. எடுத்துக்காட்டிற்கு, தொடு உணர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்களேன். பேசிக்கொண்டே இருக்கும்போது ஏதோ கடித்த உணர்வை வைத்து சட்டென்று கையில் ஏறிக் கொண்டிருக்கும் எறும்பை ஓங்கி ஓர் அடி அடித்துக் கதையை முடித்து விடுகிறீர்கள். சமையலறையில் பதட்டமான காலை நேரம் ஒன்றில் இறக்கி வைத்த குக்கரில் பட்டு விடுகிற கை, சூடுபட்டுக் கொண்டதும் தானே விலகிக் கொண்டு விடுகிறது. கல், முள், கண்ணாடித் துண்டு எதன் மீது கால் பட்டாலும் காலுக்குச் சொந்தக்காரர் எச்சரிக்கை அடைவது தோல் உணர்த்தும் வலியினால்தான். ஆனால், சிலர், ‘சே, என்ன எப்ப பார்த்தாலும் ஏதாவது வலிச்சிக்கிட்டு, உயிரை வாங்கிட்டு’ என்று சலித்துக் கொள்வதுண்டு.
இயல்பான இந்த வலியுணர்ச்சி உயிரினத்திற்கு இயற்கை அளித்திருக்கும் கொடை. இதில் தோல் நமக்காற்றும் சேவையை, இம்மாதிரி சேவை கிடைக்கப் பெறாதவர்களான நோயாளிகளைப் பார்த்தாலே நமக்கு புரியும். நரம்புகளில் ரத்த ஓட்டம் பாதிப்புற்று இருக்கும் தொழு நோயாளிகள் தொடு உணர்ச்சியை உணர்வது இல்லை. சூட்டையோ, வலியையோ தோல் உணர்த்த இயலாத நிலை அது.
தோல், உள்ளிருக்கும் உடல்நிலை மாற்றங்கள், கோளாறுகள், பாதிப்புகள் போன்றவற்றின் தகவல் சொல்லியும் கூட. நெஞ்சு வலி என்று துடிப்பவர் களுக்கு இதயத்தில் தான் பிரச்சனையா என்று அறிந்து கொள்வதற்குக் கேட்கப்படும் முக்கிய வினாக்களில், ‘நிறைய வியர்த்துக் கொட்டியதா’ என்பதும் ஒன்று.
பல நூறு விதங்களில் தோலுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்றாலும் அதிகமாகக் காணப்படுகிற பெரிய அளவிலான பிரச்சனைகள் ஒரு பத்து, பன்னிரெண்டு தான் இருக்கும். அவற்றை இரண்டு விதங்களிலிருந்தும் நோக்க முடியும். உடலின் உள்ளுறுப்புகளின் பாதிப்பின் பிரதிபலிப்பாக அவை தோன்றக்கூடும். அல்லது, இவை பின்னர் உடல் உறுப்புகளின் பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும். முன்னதற்கு அந்த உள் பிரச்சனை என்ன என்று கண்டறிந்து அதன் தீர்விற்கு ஏற்பாடு செய்தால்தான் தோலில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். பின்னதற்கு, தோலின் பிரச்சனையைக் களையாவிட்டால், உள் உறுப்புகளில் நேரவிருக்கும் பாதிப்பைத் தவிர்க்க முடியாது.
எடுத்துக்காட்டாக, ஒருவருக்குத் தோலில் எளிதில் ஆறாத புண்கள் இருக்குமானால், அந்த அறிகுறியை வைத்து நீரிழிவு (சர்க்கரை) பிரச்சனை இருக்கிறதா என்று மருத்துவர் அதற்குரிய பரிசோதனைகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும். அதேபோல், சரியாகக் குணப்படுத்தி கொள்ளாமல் அப்போதைக்கு ஏதோ ஆயின்ட்மென்ட் போட்டு அமுக்கி வைக்கப்படும் சிரங்கு வகைகள் ஒழுங்காக கவனிக்கப்படா விட்டால் அந்த அழுத்தி வைக்கப்படும் பிரச்சனைகள் (Suppressed problems) பின்னர் சுவாசக் கோளாறுகளாக மாற வாய்ப்புண்டு. இப்படி தோல் எச்சரிக்கை அறிவிப்பாளராகவும் செயல்படுகிறது.
எனவே, தோல் பராமரிப்பு முக்கியமாகிறது. அந்தப் பராமரிப்பு விஷயத்திற்குச் செல்லுமுன், தோலில் மேற்புறமும், உட்புறமும் குடியிருக்கும் முக்கியமான சிலரது பாரம்பரிய உரிமையை நாம் புறக்கணிக்கக் கூடாது. நமது தோலில் சுமார் 300 - 400 கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன. இவற்றால் நமக்கு ஆக வேண்டிய வேலைகள் நிரம்ப உண்டு. வியர்வைக் கழிவுகளோடு சேர்ந்து வெளியேறும் இறந்துபோன செல்களையும், திசுக்களையும் இந்த கிருமிகள் தான் தின்று செரிக்கின்றன. உடலைப் பாதுகாக்கின்றன. உடலுக்கு ஒருவித வாசனையையும் தருகின்றன. காவல்துறை வளர்க்கும் மோப்ப நாய்கள் இந்த வாசனையை வைத்துத்தான் குற்றவாளியை மோப்பம் பிடிக்கின்றன. எனவே, கிருமிகளின் குடியுரிமை முக்கியமானது. மெரினா கடற்கரையை அழகுபடுத்த வேண்டுமென்று மீனவர்களை அடித்துத் தள்ளி வெளியேற்றுகிற அரசு நடவடிக்கையைப் போன்றது தான், நம்மவர்கள் பலர் ‘பாடி ஸ்பிரே’ எனப்படும் உடலுக்கு மருந்தடிக்கிற வேலை. அது வியர்வை வெளியேறும் துவாரங்களை மூடுகிறது. கிருமிகளை வாழவிடாது செய்துவிடுகிறது. தோலின் எதிர்ப்புச் சக்தி வீழ்ந்துவிடுகிறது. குளியல் போடும்போது கூட அதிக வேதியல் பொருள்கள் கலந்திராத மிதமான சோப்பினைப் பயன்படுத்துவது நல்லது.
எண்ணெய்ப் பசை இருக்கும் உடல் சகிக்கமுடியாதது என்று நினைத்துவிடக் கூடாது. தோலின் செல்கள் கொழுப்புச் சக்தியாலானவை. எனவே, நமது உணவில் தேவையான கொழுப்பு தவிர்க்கப்படக் கூடாதது. கொழுப்பை ஒரேயடி யாகத் தவிர்த்துவிட்டால் முதுமை சேருமுன்பே தோலில் சுருக்கம் தோன்றிவிடும். வியர்வையும் அவசியமானது. உடல் சீரான வெப்ப நிலையைத் தற்காத்துக் கொள்ள அதன் போக்கில் கண்டு பிடித்திருக்கும் ‘ஏ/சி’ ஏற்பாடு அது. வியர்வையே வராத ஆள் என்றால் அவர் வேறு பல சமிக்ஞை களையும் கூட தோல் மூலம் அறிந்து கொள்ள முடியாது.
உடைகள் பெரும்பாலும் பருத்தி ஆடைகளாக, உடலை இறுக்காதவையாக இருந்தால் நல்லது. உடலின் தோல் எதிர்கொள்ளும் அலர்ஜி பிரச்சனை களில் குறிப்பிட்ட வகை துணிமணியினால் ஏற்படும் அரிப்பும் அடங்கும். உள்ளாடைகளை டிடர்ஜெண்ட் வகையறாக்களின் தாக்குதலுக்கு உட்படுத்தாமல், சாதுவான வகை சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.
நமைச்சல் உள்ளிட்ட பலவகை தோல் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கக் கூடும். உளைச்சல் (Stress) நேரங்களில் சிலருக்கு “அப்படியே தலை முடியைப் பிச்சிக்கிட்டு ஓடலாம் போலிருக்கு” என்று தோன்றுவதில்லையா. மண்டை காய்ஞ்சிருச்சு என்ற சொல்வழக்கும் இதில் சேர்ந்ததுதான். உடலின் அரிப்புகள்கூட தோல்வி மனநிலை, ஏதோ பறி கொடுத்த உணர்வு, மன அழுத்தம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக இருக்கும். அதனால்தான் சீப்பு, ஸ்கேல் இப்படி எது கிடைக்கிறதோ அதை எடுத்து ஆசை தீர முதுகு அரிப்பைச் சுரண்டி நிம்மதி அடைபவர்களைக் காணமுடியும். அந்த ரணத்திற்கு அப்புறம் சிகிச்சை தேடவேண்டும்! எனவே, மன அழுத்தத்திற்கு உளவியல் ரீதியான சிகிச்சை முறைகளையும், தீர்வினையும் காணாமல் பிரச்சனை தீராது. எக்சிமா எனப்படும் ஒருவகை தோல் நோயும், ஆஸ்துமாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவரிடம் மாறி மாறி இருக்க வாய்ப்புண்டு. அல்லது ஒரே மனிதருக்கே கூட இரண்டும் இருப்பதுண்டு. மாற்று மருத்துவத்தில் சிகிச்சை எடுப்பதன் மூலம் இரண்டையும் கட்டுக்குள் வைத்து நிவாரணம் தேடலாம்.
சொரியாசிஸ், லுக்கோடர்மா போன்ற தோல் பாதிப்புகள் அதிக விவாதத்தில் இருப்பவை. சொரியாசிஸ் என்பது, தோலின் தன்மை செதில் செதிலாக மாறி ஏற்படுத்தும் அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகள். அப்படியே தோல் துகள்களாகக் கொட்டும். அது சுற்றி இருக்கும் சுற்றங்களை அருவருப்பு அடைய வைக்கிறது. அத்தகைய பாதிப்புற்றவர்களுக்கு முக்கியமாகத் தேவை அரவணைப்பே தவிர புறக்கணிப்பு அல்ல. இது ஒன்றும் தொற்று நோயல்ல. சாதாரண குடும்ப வாழ்க்கைக்குத் தடையும் இல்லை. எதனால் சொரியாசிஸ் வருகிறது என்பது தீரக் கண்டு பிடிக்கப்படாமையால், அதற்கான தீர்வும் இன்னும் அறியப்படாமல் இருக்கிறது. ஆனால் மாற்று மருத்துவ முறைகளில் கட்டுப்படுத்தி வைக்க முடிகிறது.
லுக்கோடர்மா என்பது தோலின் நிறமிக்கு ஏற்படும் பாதிப்பால் உடலில் சில பகுதிகள் மட்டுமே வெளுத்துத் தனித்துத் தெரிவதாகும். பல காலமாக இதை ஒரு தீவிர நோய் என்றும், ஏன் வெண் குஷ்டம் என்றும் சொல்லி தொழு நோயாகவும் அடையாளப்படுத்தி இருந்த தவறான போக்கு இன்று மாறிவருகிறது. இது நோயுமல்ல, தொற்றக் கூடியதுமல்ல, இதை வெண்குஷ்டம் என்று அழைக்கக் கூடாது, வெண் புள்ளிகள் என்றுதான் சொல்ல வேண்டுமென்று தமிழகத்தில் இயக்கமே நடத்தப்படுகிறது. பொதுவாக, தமது கணவருக்கு இப்படி வெண்புள்ளிகள் ஏற்பட்டால் மனைவி பொறுத்துக் கொள்கிறார் என்றாலும், மனைவியருக்கு இப்படி ஏற்பட்டால் கணவர்கள் தள்ளி வைத்து விடுகின்றனர் என்பதும் கசப்பான உண்மையாக இருக்கிறது. மக்கள் மத்தியில் தவறான புரிதல் இருப்பதால் ஏற்படும் சமூக புறக்கணிப்பு மாற அரசு முறையான விழிப்புணர்வு அறிவிப்புகள் செய்ய வேண்டுமென்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்தது, கறுப்பா சிவப்பா பிரச்சனை. இதில்தான் நிறமிகளின் வேலை இருக்கிறது. மரபுவழியாக அவரவருக்கு அமையும் நிறத்தை தோலின் நிறமிகள் தீர்மானிக்கின்றன. அமையும் நிறத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, ‘வெளுப்பு தான் எனக்கு வேண்டும் கலரு’ என்று பலர் நிறமாற்ற வேதியல் ஏற்பாடுகளை முயற்சி செய்து பார்த்து நொந்து போகின்றனர். பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாந்த நபர்களில் ஒருவர் அந்த கம்பெனி மீது வழக்கு போட்டு வெற்றி பெற்றதும், சாதுரியமாக அந்த நிறுவனம் விளம்பர வாசகங்களை மாற்றித் தொடர்ந்து அதே வேலையைச் செய்து கொண்டிருப்தும் கண்ணுக்கு நேரே நடப்பவை. பலவகை கிரீம்கள் தோலுக்கு உகந்ததல்ல என்பது ஒன்று. நிறத்தை வைத்து ஆளை மதிப்பிடுவது ஆதிக்க மனோபாவம் என்பது அடுத்தது. தலைமுடியும், மீசையும் கருகருவென்று இருக்க வேண்டுமென்று துடிக்கும் இளைஞருக்கு, தான் மணமுடிக்கும் பெண் மட்டும் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டுமென்று தோன்ற லாமா என்று நையாண்டிப் பாடல்கள் பல தமிழில் உண்டு.
புறந்தூய்மை நீரால் அமையும் என்ற வள்ளுவர் அகத்தூய்மை பற்றியும் பேசி இருக்கிறார். துணி வெளுக்க மண்ணுண்டு, தோல் வெளுக்க சாம்பருண்டு என்ற பாரதி மனம் வெளுக்க வழியில்லையே என்று சமூக விமர்சனத்தை முத்துமாரியை அழைத்துச் செய்தார். உடலின் உள்ளுறுப்புகளின் நிலையையும், உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் தோல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அன்றாடம் விலை உயர்ந்த சோப்புக் கட்டியைக் கரைத்துக் குளித்துவந்தால் மட்டும் போதாது என்பதுதான் இந்த இலக்கியங்கள் சொல்வது.
தோல் கவசமாக இருப்பது உடலுக்கு மட்டுமல்ல, உணர்வுகளுக்கும்தான். அன்பின் வழியது உயிர்நிலை என்று குறள் கூறும் இலக்கணத்தின்படியான நேயமிக்க வாழ்க்கை முறையில்தான் மனிதருக்குப் பெருமையே இருக்கிறது. அப்படி இல்லாத மனிதர் எவரும் எலும்பும், தோலும் போர்த்திய உடல் என்று வள்ளுவர் இகழ்கிறார். தோல் இப்படி தனது கண்ணியத்தை இழந்துவிடாத ‘மெய் சிலிர்க்கும்’ மேலான வாழ்க்கை வாழ வேண்டாமா நாம்?
(ஓமியோபதி மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், எம்.டி., அவர்களது
மருத்துவக் குறிப்புகளின் உதவியோடு எழுதியவர் எஸ்.வி.வேணுகோபாலன்)
*
வளையல் சத்தம்
எப்போதாவது ஜன்னலைத் திறந்தால் அவள்தான் தெரிவாள். ஒட்டி இருந்த காம்பவுண்டில் அந்த வீடுதான் நேர் எதிரே. கல்யாணமான புதிது என்பதால் பெரும்பாலும் ஜன்னல் மூடித்தான் இருக்கும். பார்க்கிற நேரமெல்லாம் அந்த வீட்டு முகப்பில் உட்கார்ந்தே இருப்பாள். விரல்கள் தீப்பெட்டி அட்டைகளை ஓட்டிக்கொண்டே இருக்கும். அப்படியொரு வேகம். வளையல் சத்தம் ஓயாது. இளம் வயதுதான். நிமிர்ந்து ஒருகணம் பார்த்துவிட்டு குனிந்துகொள்வாள். கண்களில் இருந்த எதோவொரு சோகத்தை வளையல்கள் தெளித்துக்கொண்டு இருந்தன.
வீட்டில் இவள்தான் சில செய்திகளை அவ்வப்போது சொன்னாள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டதாம். புருஷன் பம்பாயில் எதோ கடையில் இருக்கிறானாம். அங்கு கொஞ்சம் கலவரமாய் இருந்ததால் இங்கு அவளது அம்மா வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டானாம். நாலைந்து மாதங்கள் ஆகிவிட்டதாம். இன்னும் இரண்டு மாதங்களில் கூட்டிக்கொண்டு சென்றுவிடுவானாம். அந்தப் பெண்ணின் முகமும், வளையல் சத்தங்களும் இப்போது புரிந்தது. ஒளியிழந்த கண்கள் தாழ்ந்தே இருந்தன.
இவள் பிரசவத்திற்கு ஊருக்குச் சென்றிருந்தபோது, சினிமாத் தியேட்டர்களில் மாலைகளை கழிக்கும்படி ஆயிற்று. ஒருநாள் அந்தப்பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தாள். சரியாக பின்சீட்டில் ஒருவனோடு உட்கார்ந்திருந்தாள். முகம் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கணவன் வந்திருக்கிறான் என்பது புரிந்தது. தெரிந்தவள் போல நேருக்கு நேர் பார்த்து சகஜமாக சிரித்தாள். ஆச்சரியம்தான். விளக்கு அணைக்கப்பட்டு படம் போடப்பட்டது. வளையல் சத்தங்கள் இப்போதும் ஓயவில்லை. அவை சிரித்துக்கொண்டே இருந்தன.
*
பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடிய அறிஞர் அண்ணா...
உண்மைகளை வெடிப்புறப் பேசியவர் அவர். பெரும் கலகக்காரர். தமிழ் மண்ணில் வேம்புவாய் நிற்கும் அவருக்கு இன்று 131வது பிறந்த நாள். மக்கள் மட்டுமில்லாமல், அவரது சிலைகளுக்கு மாலை அணிவிப்பவர்களும் இந்த நாளில் அவரது சிந்தனைகளையும், செயல்களையும் நினைத்துப் பார்த்தாக வேண்டும்.
அறிஞர் அண்ணா 1968ம் ஆண்டு, பெரியாரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று திராவிட இயக்கத்தினருக்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பெரியாரின் பணிகள் இந்த சமூகத்தில் என்னவாக இருந்தது, அவரைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அவருக்கே உரிய மொழியில் சொல்லியிருக்கிறார். இந்த நாளில் அதனைப் பகிர்ந்து கொள்வது சரியாய் இருக்கும் எனத் தோன்றுகிறது.
திராவிடக் கழகம் என்றோ, திராவிட முன்னேற்றக் கழகம் என்றோ நேரடியாக குறிப்பிடாமல் அண்ணா எழுதியிருக்கிறார். புதிய கடமைகளை குறித்து வைக்கிறார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணாவின் இந்த எழுத்துக்களை மறுவாசிப்பு செய்யும்போது வரலாற்றின் பிழைகள் முன்வந்து நிற்கின்றன.
நீங்களே படித்துப் பாருங்கள்.....
-----------------------------------
இந்தக் கிழமையை விழாவாகக் கொண்டாடும் தோழர்கள் பெரியாரின் பெருந்தொண்டினைப் பற்றி பேசிவிட்டு பெருமூச்செறிவர். ஏன்? இலேசாக தமது தோழர்கள் உள்ளத்திலே கூட ஒரு சந்தேகம், கொஞ்சம் சஞ்சலம் உண்டு. அதாவது இந்த உழைப்பு தக்கதோர் வெற்றியைப் தந்துவிட்டதா, அல்லது சூதகரின் சூழ்ச்சி காரணமாக உழைப்பு வீணாகி விட்டதா என்ற எண்ணம்.
பத்திரிகைப் பாராட்டுதல், பாமாலை, பூமான்களின் பவுன்மாலை, சர்க்கார் தரும் பட்டம், பதவி, மாலை ஆகியவைகளை வெற்றிச் சின்னமெனக் கொள்வதாயின், பெரியார் வெற்றி பெற்றவரல்ல. ஆனால் வாலிப உள்ளங்களின், நன்றி கலந்த அபிஷேகமே வெற்றிக்கான சின்னம் எனில் பெரியார் பெருவெற்றியை நெடுநாட்களுக்கு முன்னதாகவே பெற்றுவிட்டார் என்று திட்டமாகக் கூறலாம்.
சட்டசபைக்கு அழைத்துச் செல்ல மாட்டார். பட்டம் வாங்கித் தரமாட்டார். பதவியில் நம்மை உட்கார வைக்க மாட்டார். பணம் காசு தர மாட்டார். ஒரு பாராட்டுரை கூட வழங்க மாட்டார் என்பதையெல்லாம் அனுபவபூர்வமாக தெரிந்திருந்தும், ஆயிரமாயிரம் இளைஞர்கள் அவருக்குத் துணை நிற்பது வேறு எங்கும் காணமுடியாத அற்புதம். பெரியாரின் பெரும் வெற்றி இது.
பிற கட்சிக்காரர்கள், குறிக்கோள் மட்டும் கொண்டவர்களல்ல, நடைமுறைக்கான, அன்றாட வேலைத்திட்டமும், உடனடியாக நடத்தியாக வேண்டிய வேலைத் திட்டமும் உடையவர்கள். எனவே, அவர்களுக்கு லாபநட்டக் கணக்குப் பார்த்துக்கொள்ள அதற்கு ஏற்றபடி திட்டத்தைத் திருத்தி மாற்ற, புதுப்பிக்க வசதியுண்டு. பெரியார் துவக்கி நடத்தி வரும் கட்சிக்கு உடனடி வேலைத் திட்டம் ஒன்றும் இல்லை. உழைத்து மெருகேற்றி அந்த மெருகு ஏறினதன் பலனாக பிறகு சமூகமே ஒரு புதிய பயனுள்ள தோற்றம் அளிக்க வேண்டும். இலாப நட்டக் கணக்கு பார்க்க முடியாது. வசதி கிடையாது. கதிர் தோன்று முன்புவரை, புல்லுக்கும், நெல்லைத் தரபோகும் பச்சைக்கும், பார்க்கும்போது வித்தியாசம் தெரிய முடியாதல்லவா? அதுபோல கதிர் காணாமுன் கணக்குப் பார்க்க முடியாது. வெறும் பச்சை என்றெண்ணி விடுவோ ஏமாளிகள். கதிர் முளைக்க வேண்டும். அதனால் பயிரைக் கசக்கிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர் கோமாளிகள். பெரியாரின் உழவுமுறையை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது. வயலிலே இருப்பது ஆறுமாதப் பயிரல்ல. ஒரு தலைமுறைப் பயிர். பல தலைமுறைகளாகக் கறம்பாகக் கிடந்த வயலிலே உள்ள பயிர். அறுவடைக்குக் காலம் பிடிக்கும்.
நாம் மேற்கொண்டுள்ள வேலை ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே, அது போன்றது. எனவேதான் உடனடியாகக் கண்ணுக்குத் தெரியக்கூடிய மற்றக் கட்சிககாரர்கள் காட்டுவது போன்ற ‘அன்றாட’வெற்றிகள் நமக்கு இல்லை. ஆனால், நாம் அடைந்துள்ள வெற்றி, கறம்பைத் திருத்தி வயலாக்கி இருக்கிறோம். ஆம்! சூழ்நிலையை மாற்றி இருக்கிறோம். மனப்போக்கை மாற்றி இருக்கிறோம்.
வெற்றி பெற்றாயிற்று. பெரியாரின் பெருந்தொண்டு பயன் தந்தாகிவிட்டது என்று உறுதியுடன் கூறலாம். மகிழ்ச்சியுடன் சொல்லலாம். பெரியாருக்கு உளம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கலாம். தெரிவிப்பதுடன், “பெரியாரே! தாங்கள் அரும்பெரும் உழைப்பினால் உண்டாக்கி வைத்த சூழ்நிலையை நாங்கள் இனி பயன்படுத்துவோம், தங்களுக்கு மேலும் தொல்லை நிறைந்த வேலை தரமாட்டோம். இந்தச் சூழ்நிலையை ஏற்படுத்தத் தாங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். உண்டாக்கினீர்கள். இனி நடக்க வேண்டிய காரியம், கிடைத்த சூழ்நிலை கெடாதபடி பாதுகாத்துக் கொள்வதுடன், அன்றாட வேலைகள், உடனடித் திட்டங்கள் ஆகியவற்றைச் செய்வது. அதனை நாங்கள் தாங்கள் மகிழும் வண்ணம் செய்து முடிப்போம்” என்று உறுதி கூறி அவருக்கு மனதில் வெற்றி கிட்டிவிட்டது! இனி வேலை நடக்கும்! அதற்கான அருமை மக்கள் உள்ளனர் என்ற மகிழ்ச்சியுடன் கலந்த நம்பிக்கை பிறக்குமாறுச் செய்திடுவதுதான் பெரியார் வார விழாவின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
சுரங்கத்திலிருந்து, சிரமப்பட்டுத் தங்கத்தை தோண்டி எடுத்தாகிவிட்டது. பெரியாரின் பெரு வெற்றி இது. எடுத்துப் பார்க்கும்போது பாறை போலத்தான் தோன்றும். அடுத்த கட்டம், வெட்டி எடுக்கப்பட்ட பாறை உருவில் உள்ளதை, ‘ரசாயண’ ‘விஞ்ஞான’ முறைப்படி உடைத்து, பிரித்து, துடைத்துத் ‘தங்கம்’ என்று சகலரும் தெரியும்படிச் செய்வதுடன், அதனால் பயனுள்ள பணிகள் செய்து காட்ட வேண்டும். சுரங்கத்திலிருந்து பொன்னை வெட்டி எடுத்துவரும் காரியம் ஆபத்தானது. சிரமமானது. அதற்கு அலாதியான திறம், முறை வேண்டும். கருவிகளும் அதற்குத் தனி, பெரியாரிடம் இவைகளுக்கான திறம் ஏராளம். எனவே அவரால் முடிந்தது. நமது நன்றி அதற்காக.
ஆனால், வெட்டி எடுத்துக் கொண்டு வந்த தங்கத்தைப் பதம் செய்ய, பக்குவம் செய்ய, முறை செய்ய, கருவி வேறு. செய்ய வேண்டிய பொறுப்பையும் பெரியாரிடமே தருவது நமது கையாலாகாத்தனத்தை காட்டிக்கொள்வதாகும். மீண்டும் மீண்டும். மேலும் மேலும் சுரங்கம் தோண்டும் வேலையையே செய்யும்படி பெரியாரைத் தூண்டிக்கொண்டிருப்பதும் நன்றி கெட்ட செயலாகும்.
இதனை உணர்ந்து புதுப்பணியினை மேற்கொள்வோம். நீர் கவலையற்றுக் களிப்பதுடன், நம்பிக்கையுடன் எங்கள் வேலையைக் கவனித்துக்கொண்டு, தட்டிக்கொண்டு, பெருமையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டு இருங்கள் என்று இந்த விழாவன்று நாம் பெரியாருக்குக் கூற வேண்டும். அதுவே அவருக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதை.
-----------------------------------
படித்து முடித்த பிறகு இரு கேள்விகள் முன்வருகின்றன. அவை பெரியார் மற்றும் அண்ணாவின் கனவுகள் பற்றியவை. வேதனையானவை.
*
பாரதியார் ஏன் எழுதவில்லை...
தாஜ்மஹால் என்றதும் சிறைக்கம்பிகளின் ஊடே காதலியின் கல்லறையைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஷாஜஹான் என்னும் செய்திதான் நினைவில் தானாக வருகிறது. தாஜ்மஹால் என்னும் வார்த்தை அப்படி ஒரு நெருக்கமானதாக இந்த மண்ணில் இருக்கிறது.
தாஜ்மஹாலை நேரில் பார்த்தவர்களும் அதைப்பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள். எனக்கு மட்டுமல்ல, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கும் இலக்கிய ஆர்வத்தை அதிகமாக்கிய தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் மூன்று முறை தாஜ்மஹாலுக்கு சென்று வந்ததைப் பற்றி ஒருமுறை சொன்னார். பதினெட்டு வயதில் முதன் முறையாக பார்த்தபோது, காதலின் மகோன்னதமான காட்சியாக மனதிற்குள் விரிந்ததையும், முப்பது வயதில் அடுத்தமுறை சென்ற போது, ‘இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள் என உழைப்பின் சாட்சியாகவும், ஐம்பது வயதில் பார்க்கும்போது ‘ஐயோ, இந்த உலக அதிசயமான சலவைக்கல் சுற்றுப்புறச்சூழலால் மங்கிக்கொண்டு வருகிறதே’ என துயரமாகவும் இருந்ததாகச் சொன்னார்.
மணிரத்னம், ஷங்கர், போன்றவர்களும் கூட தாஜ்மஹாலைச் சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேயே போகாமல் ’தாஜ்மஹால்’ என ஒரு படமே எடுத்துவிட்டார் நமது பாரதிராஜா. “தாஜ் மஹால் ஒரு பணக்காரனின் சலவைக் கண்ணீர்” என்றெல்லாம் ஏராளமான கவிதைகள் குவிந்திருக்க, ‘தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும்’ என ஒரு கவிதைத் தொகுப்பையே கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் நா.காமராசன். தாஜ்மஹாலின் வண்ணங்களும், கோணங்களும் அற்புதமான ஒவியங்களாகவும், புகைப்படங்களாகவும் வந்துகொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களும் இன்றுவரை கொண்டாடுகின்றன. தாஜ்மஹாலை நேரில் பார்க்காவிட்டாலும் எல்லோருக்குள்ளும் சில தாக்கங்களும், நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்பு, ஒருமுறை தூத்துக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் அதில் பேச வந்திருந்தார். மேடையில் கவிஞர் சு.வெங்கடேசன் (காவல்கோட்டம் நாவலாசிரியர்) கவிதையின்பம் குறித்து உணர்ச்சி ததும்ப சொல்லிக்கொண்டு இருந்தார். தாஜ்மஹால் குறித்த ஏராளமான கவிதைகளைக் குறிப்பிட்டு விட்டு, போகிற போக்கில் காதல் கவிதை எழுதிய எந்தவொரு பெரிய கவிஞரும் தாஜ்மஹாலைப் பற்றி எழுதாமல் இருந்ததில்லை எனச் சொன்னார். அது அப்படியே உண்மையில்லையென்றாலும், தாஜ்மஹால் நம் கவிஞர்களை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதைச் சொல்ல வந்த வார்த்தைகள் என புரிந்துகொள்ள முடிந்தது. மேடையைவிட்டு இறங்கியதும் எழுத்தாளர் ஜெயகாந்தன் சு.வெங்கடேசனை அருகில் அழைத்தார். “தாஜ்மஹாலைப் பற்றி பாரதியார் எழுதவில்லை. தெரியுமோ..” என்று கடகடவென சிரித்தார். சு.வெங்கடேசன் கொஞ்சம் அசடு வழிந்தார்.
ஆமாம், இவ்வளவு தூரம் எல்லோரையும் பாதித்த தாஜ்மஹாலைப் பற்றி பாரதி ஏன் எழுதவில்லை.?
*
கம்மங்குழியாள்
கற்பனையல்ல, நிஜம் இது. திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தில், பதினான்கு தலைமுறைகளுக்கு முன்னால் நடந்த கதை. கோகிலாவின் வம்சாவழியினர் இன்றும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளியில் பூஜை நமஸ்காரங்களோடு அவளை கம்மங்குழியாள் என்று வழிபடுகின்றனர். அறிவொளி இயக்கம் மூலமாக வாய்மொழியாக அறியப்பட்ட வரும் இந்தக் கதையை நண்பர் மணிமாறன் அவர்கள், நாங்கள் நடத்திய ‘விழுது’ என்னும் சிறுபத்திரிகையில் எழுத்து வடிவமாக்கினார்.
நமது பெரும்பாலான நாட்டுப்புறத் தெய்வங்களுக்குப் பின்னால் இப்படி உயிர்வதை செய்யப்பட்ட சம்பவங்கள் அடர்ந்திருக்கின்றன. மனசாட்சியின் வலி தாங்க முடியாத மனிதர்கள் அவர்களை காலம் காலமாக சுமந்து வந்து கொண்டு இருக்கின்றனர். கம்மங்குழியாள் இன்று ஒரு பெண்தெய்வம். விளக்குகள் அவளுக்காக எரிகின்றன. ஆனால் வாழுகிற காலத்தில்....
கம்மங்குழியாள்
அம்மாவின் விசும்பல் அறிந்து கொன்றை மர இலைகள் சன்னமாய் படபடத்துக் கொண்டிருந்தன. அதன் நிழலில் உட்கார்ந்திருந்தான் ராமுத்தச்சன். அதற்குப்பிறகு அவனால் விளக்குகள் செய்ய முடியவில்லை. கோகிலா காலையில் போட்டிருந்த கோலத்தின் மேல் அழுந்தியிருந்த இளவரசனின் தேர்த்தடம் மிரட்சி தந்தது.
திருணையும் கொன்றை மரங்களும் கடந்த ஐந்தாறு நாட்களாய் உளிச்சத்தங்களை கேட்டபடி இருந்தன. வரும் பவுர்ணமியில் “இளவரசருக்குத் திருமணம், ஆயிரம் விளக்குகள் அரண்மனைக்கு வேண்டும்” என்று தம்மன் வந்து சொன்னதும் வீடு முழுவதும் விளக்குகள் முளைத்த மாதிரி சந்தோஷம். சும்மாவா! நிறைய காசுகள் கிடைக்கும். திருணை பூராவும் மா, வேம்பு,கோதகத்தி என்று நிரப்பினான். கோகிலாவை உளியை எடுத்துத்தர கேட்டு, அவள் கையால் வேலை ஆரம்பித்தான். தங்கையின் கைபட்டால்தான் எதுவும் துலங்கும் அவனுக்கு.
அஞ்சு முகம், ஏழு முகம் கொண்ட விளக்குகளாய் மரங்கள் உருப்பெற்றன. தேய்த்து, தேய்த்து மெருகேற்ற அவை பிரகாசித்தன. இரவெல்லாம் உளிச்சத்தம் கேட்டது. காலையில் எழுந்ததும் அண்ணன் செய்திருக்கும் விளக்குகளை கோகிலா வந்து பார்ப்பாள். மரங்களுக்குப் பக்கத்திலேயே தரையில் ராமுத்தச்சன் தூங்கிக்கொண்டு இருப்பான். பாவம் போல இருக்கும். சாமி அறையிலிருந்து சாம்பிராணி புகை வாசத்தோடு வந்து அவனை அம்மா எழுப்பி நீராகாரம் கொடுப்பாள்.
இன்று காலையும் அப்படித்தான் விடிந்தது. ராமுத்தச்சன் திரும்பவும் எழுந்து சுறுசுறுப்பானான். கோகிலா வாசல் தெளித்தாள். கோலம் போட்டாள். வீட்டில் அவள் அங்குமிங்கும் நடமாடுவதே மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும் அண்ணனுக்கு. நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கு அவள் ஒருநாள் இரண்டுநாள் போய்விட்டால் கூட உளி வித்தியாசமாய் ஒலிக்கும். அவன் மன ஓட்டங்களை அறுத்துக்கொண்டு குதிரைக் குளம்புகளின் சத்தம் கேட்டது. எழுந்து எட்டிப் பார்த்தான். இளவரசன் தேரில் வந்து கொண்டிருந்தான்.
ராமுத்தச்சன் பரபரப்பாகி எழுந்து நிற்பதற்குள் தேர் வாசலில் வந்து நின்றது. இளவரசன் இறங்கி வந்தான். அவன் கும்பிடுவதைப் பார்க்காமல் விளக்குகளைப் பார்த்தான். பார்வை மெல்ல சுழன்று வந்த்போது எதோ உறுத்த மேலே பார்த்தான். கோகிலா அம்பாரியில் தலை துவட்டிக்கொண்டு நின்றாள். ராமுத்தச்சன் ஏழுமுகம் கொண்ட விளக்கொன்றை கொண்டு வந்து காட்ட இளவரசன் மேலே அம்பாரியைப் பார்த்துக்கொண்டு இருந்தான். ராமுத்தச்சனுக்கு நடுக்கமாகவும், பயமாகவும் இருந்தது. எதோ சொல்ல வாயெடுத்தான். ஒன்றும் வரவில்லை. பார்த்துக்கொண்டிருந்த அவன் அம்மாவுக்கு செத்துப் போகலாம் போலிருந்தது. இளவரசன் “யார் அது..” என்றான். செத்துப்போன குரலில் “என் தங்கை” என்றான். “விளக்குகளை இவளிடம் கொடுத்து அரண்மனைக்கு அனுப்பு” சொல்ல்விட்டு இளவரசன் போய்விட்டான்.
எதுவும் தோன்றாமல் அப்படியே நின்றான் ரமுத்தச்சன். செய்து வைத்திருந்த விளக்குகளை கண்ட மேனிக்கு தூக்கி எறிந்தான். அம்மா வெடித்து அழ, “என்னம்மா...” என கோகிலா பதறி வந்து கட்டிக்கொண்டாள். “என் தங்கமே, என் தங்கமே...” என அவளைப் பார்த்து தலையில் அடித்து அழுதாள். கோகிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
பவுர்ணமிக்கு நாள் நெருங்க நெருங்க ராமுத்தச்சனுக்கு உலகம் இருட்டிக்கொண்டு வந்தது. கோகிலா போட்ட கோலங்கள் அவனை வதைத்துக்கொண்டு இருந்தன. நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்து வானத்தைப் பார்த்திருந்தான். பகலில் திருணையில் முடங்கி கிடந்தான். கோகிலாவுக்கு எல்லாம் புதிராகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அன்று அவன் பக்கத்தில் வந்து “அண்ணா” என்று அழைத்தாள். எழுந்து உட்கார்ந்து அவளையேப் பார்த்தது விசித்திரமாயிருந்தது. “உளியை அந்த பலகை மேல் வச்சிருக்கேன். எடுத்துத்தா” என்றான். கொன்றை மரத்தின் அடுத்த பக்கத்தில் அந்தப் பலகைகள் தரையில் வரிசையாய் வைக்கப்பட்டு இருந்தன. கோகிலா எடுக்கப் போனாள். பலகையை மிதித்ததும் அவன் சட்டென ஒடி பலகையை இழுத்தான். கீழே இருந்த குழியில் விழுந்தாள். குழி பூராவும் கம்பரிசி. “அம்மா...!” அலறலோடு வழவழப்பான அரிசிக்குள் போக ஆரம்பித்தாள். ஓடிவந்த அம்மாவின் வாயைப் பொத்தி அவளைக் கட்டிப்பிடித்து முகத்தை வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். மெல்ல மெல்ல கோகிலா உள்ளே போய்க்கொண்டு இருந்தாள். அம்மாவின் திமிறலை அடக்கி ராமுத்தச்சன் வெறிபித்தவள் மாதிரி நின்றான். “நா ஒங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன்..” குரல் அடங்கியது. கம்மங்குழி முழுசாக மூடிய பின்னும் மேல் பரப்பில் கொஞ்ச நேரம் துடிப்புகள் இருந்தன.
*
நாலு தட்டு
நான்கு புரோட்டா சாப்பிட்டுவிட்டு, காசு இல்லாமல் நின்றான் அந்தச் சிறுவன். அந்த மவனே, இந்த மவனே என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் தன் ஆத்திரத்தை தீர்த்துப் பார்த்த ஓட்டல்காரருக்கு அடங்கவில்லை. எதிரே இருந்த காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று, ‘இவனை நாலு தட்டு தட்டுங்க சார்...’ என்று இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்தார்.
அடுத்த நாள் காலை, கான்ஸ்டபிள் ஒருவன் ஒட்டல் வந்து, “ஐயா, நீங்க கொண்டு வந்த பையன் ஸ்டேஷன்லதான் இருக்கான். அவனுக்கு ஒரு நாலு தோச கொடுத்து அனுப்புங்க.” என்றார். இதென்னடா வம்பு என நினைத்த ஓட்டல்காரர், தோசையை கொடுத்து அனுப்பினார். மதியம் இன்னொரு கான்ஸ்டபிள் வந்து “அந்த தம்பிக்கு மதியச் சாப்பாடு கொடுத்தனுப்புங்க...” என்றார். வேறு வழியில்லாமல் முனகிக்கொண்டே கொடுத்தனுப்பினார் ஓட்டல்காரர்.
இரவும் அதுபோலவே கட்டளை காவல் நிலையத்திலிருந்து வரவும், நான்கு புரோட்டாக்களை பார்சல் செய்துகொண்டு ஓட்டல்காரரே காவல் நிலையம் எடுத்துச்சென்று “என்ன சார் இது...! நாலு தட்டு தட்டி அவன விட்டுருவீங்கன்னு பாத்திங்கன்னா... இப்படியே இங்கேயே வச்சிக்கிட்டு... இதென்ன சார் நியாயம்...?’ என்று மெல்ல இன்ஸ்பெக்டரிடம் தன் வருத்தத்தை தெரிவித்தார்.
“இப்பத்தானே அவன விட்டுருங்கன்னு சொல்லியிருக்கீங்க.... சாப்பிட்டு முடிச்சவுடன அனுப்பி வச்சிர்றேன்..” என்றார் இன்ஸ்பெக்டர். இந்த அளவோடு பிரச்சினை முடிந்ததே என்று நிம்மதியடைந்த ஓட்டல்காரருக்கு “அவனோட ஊரு மதுரப்பக்கமாம். பஸ்செலவுக்கு பணம் கொடுத்துருங்க..” என்று நாலாவது தட்டு விழுந்தது.
*
சண்முகவள்ளியக்கா…
ஊரில், அருகே இருந்த வீடுகளிலெல்லாம் பெண்கள்தான். கொலுசுகள், வளையல்களின் சத்தங்கள, ஜன்னலருகே இருந்த கிணற்றில் தண்ணீர் இறைக்கும்போது பேச்சுக்கள் என எங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள். சாரதா, பத்மா, ஜெயந்தி ஆகியோர்தான் என் வயதொத்தவர்கள். அப்புறம் புனிதாக்கா, ஜெயாக்கா, வேல்கனிக்கா, சண்முகவள்ளியக்கா, கனியக்கா, கல்யாணிக்கா என எத்தனை அக்காக்கள். மார்கழிக் காலைகளில் கால்ச்சட்டைப் போட்டுக்கொண்டு நானும், தம்பியும் குளித்து பஜனைக் கோயிலுக்குச் செல்லும்போது இவர்கள் அனைவரும் தாவணிகளோடு வீடுகளின் வாசல்களில் கோலங்கள் போட்டுக்கொண்டு இருப்பார்கள். வீடுகளின் உள்ளிருந்து நாற்பது வாட்ஸ் பல்புகளின் மங்கிய வெளிச்சம் வெளியே லேசாய் தவழ்ந்திருக்க, குளிர்ந்த இருட்டில் நிழல் உருவங்களாய் குனிந்து அவர்கள் நின்றிருந்த காட்சி ஒரு ஓவியம் போல் இப்போதும் என்னிடம் இருக்கிறது.
சென்னையிலிருந்து நாங்கள் வந்திருந்ததால், பட்டணத்துக்காரங்க என்று பேரும், மதிப்பும் எங்கள் குடும்பத்துக்கு கொடுத்து இருந்தார்கள். நாங்கள் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இருந்த ஒரே தங்கை அம்பிகாவுக்கு அவர்களிடம் பெரும் செல்லம். எங்களுக்கும்தான். பாசமும், பிரியமும் தெருவில் வற்றாமல் ஓடிக்கொண்டு இருந்தது. அனேக சமயங்களில் அவர்களோடுதான் எனக்கும் தம்பிக்கும் நேரங்கள் கழிந்தன. மாதுப்பூ, குட்டிப்பூ என அவர்கள் குரல்களில் பூக்கள் மலர்ந்து கொண்டேயிருந்தன. பெண்களின் உலகம் எவ்வளவு அற்புதமானது, அழகானது, புதிரானது என்பதையெல்லாம் அவர்கள்தான் காட்டியிருந்தார்கள். ஒரு நாவலுக்கான பெருவெளி கொண்ட காலம்தான் அது.
பண்டிகை, விசேஷம் என்றால் வீடு சுற்றி சிரிப்புச் சத்தங்களும், பூக்களின் வாசனையும் இறைந்திருக்கும். பொங்கலுக்கு பெரிய வடம் கட்டி, எந்நேரமும் அந்த பனைமரத்தண்டுகள் அசைந்து கொண்டேயிருக்கும். அந்த வடத்தில் என்னை உட்கார வைத்து கைவலிக்க அந்த அக்காக்கள் எவ்வளவோ ஊஞ்சலாட்டியிருக்கிறார்கள். சிவராத்திரி வந்துவிட்டாலும் அப்படித்தான். அவர்களோடு உட்கார்ந்து ‘குலை குலையா முந்திரிக்கா, நரியே நரியே சுத்தி வா’ விளையாடுவேன். இருட்டியபிறகு, பெண்கள் எல்லாம் ஒன்றுபோல ஒரு வீட்டுக்குள் செல்வார்கள். நானும் அவர்களோடு வருவேன் என்று சொல்ல, “ஜோதியக்கா” என்று அம்மாவை அழைப்பார்கள். அம்மா எதாவது காரணம் சொல்லி, ”ச்சீ போடா” என்று சிரித்துக்கொண்டே தட்டிக் கழித்துவிட்டு, அவர்களோடு சென்று விடுவார்கள். எவ்வளவு நெருக்கமாக எல்லோரோடும் இருந்தாலும், பெண்களுக்கென்று தனி இடமும், நேரமும் இருப்பது விசித்திரமாகப் பட்டது.
அருகிலிருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, டிபன் பாக்ஸோடு சைக்கிளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கச் சென்ற பிறகு அண்ணன்களின் லுங்கியை நானும் ஒருநாள் எடுத்துக் கட்டிக்கொண்டேன். அன்றைக்கு அந்த அக்காக்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் என்னைக் காட்டிச் சிரித்தார்கள். “மாது பெரிய மனுஷனாய்ட்டான்” என்று சொல்லி கூச்சப்பட வைத்தார்கள். நண்பர்கள், வட்டங்கள் எல்லாம் மாற, அக்காக்களோடு இருந்த நெருக்கம் எல்லாம் மெல்ல இழந்தேன். சண்முகவள்ளியக்கா மட்டும் எப்போதும் போல இருந்தார்கள். அவர்களில் குரலில் “மாதுப்பூ” அப்படியே வாடாமல் இருந்தது. நாளாக நாளாக அக்காக்களும் திருமணம் ஆகி வேறு வேறு ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
சண்முகவள்ளியக்காவோடு கோலம் போட்டுக்கொண்டு இருந்தவர்கள் ஒவ்வொருவராய் குறைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அப்பா கிடையாது. எப்போதும் நீலச்சேலை உடுத்திருக்கும் அம்மா நாலைந்து கிலோ மீட்டர் தள்ளி நாகன்னியாபுரம் சென்று தினமும் நெல்மூடை சுமந்து வருவார்கள். நெல் அவித்து, தெருவில் காயப்போட்டு அக்கா அதன் அருகில் உட்கார்ந்து, ஆடு, காகம், கோழிகளை விரட்டிக்கொண்டு இருப்பார்கள். நேரம் கிடைக்கும்போது நானும் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பேன். கருப்பாகவும், கொஞ்சம் அம்மைத்தழும்புகளோடும் அக்காவின் முகம் அழகாக இருக்கும். ரொம்ப நாள் கழித்து அவர்களுக்கும் திருமணம் ஆகி சென்னைக்குச் சென்றார்கள். அவர்களது கணவர் அங்கு ஒரு மளிகைக்கடையில் இருப்பதாகச் சொன்னார்கள். ஊரைவிட்டு நானும் வெளியேறிவிட்ட பிறகு அக்கா பற்றிய செய்திகள் எதுவும் தெரியவில்லை. ஊரிலேயே இருக்கும் என் தங்கை அம்பிகா எதாவது செய்திகளை எப்போதாவது சொல்வாள். காலங்கள் கனவு போல வந்து மறையும்.
சண்முகவள்ளியக்காவை திரும்ப நான் பார்த்தது என் தம்பியின் திருமணத்தின் போதுதான். குழந்தைகளோடு வந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் கண்கள், முகமெல்லாம் சிரிக்க “மாது” என அருகில் வந்து நின்றார்கள். அதில் பூ ஒளிந்திருந்தது. அம்முவைப் பார்த்து “இது ஒம் பெஞ்சாதியா” என்று ஆசையாய்ப் பார்த்தார்கள். “அக்கா ரொம்ப கஷ்டப்படுறாங்க... அவங்க வீட்டுக்காரருக்கு சென்னையில் முடியலயாம். ஊருக்கு வந்துட்டாங்க..” என்று பிறகு அம்பிகா சொன்னாள். சங்கடமாயிருந்தது.
அதற்குப் பிறகு சண்முகவள்ளியக்காவைப் பார்த்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான். அம்மாவை மாதமொருமுறை திருநெல்வேலியில் உள்ள கிட்னி செண்டருக்கு அழைத்துச் செல்வேன். அப்படியொரு நாளில், அக்காவும் தனது பையனோடு டாக்டருக்காக காத்து உட்கார்ந்திருந்தார்கள். அவனுக்கு பதினைந்து, பதினாறு வயதிருக்கும். அக்கா இளைத்துப் போய், வயதாகி வாடியிருந்தார்கள். “என்னக்கா...” என்று அருகில் செறேன். “தம்பிக்கு சிறுநீரகக் கோளாறு” என்றார்கள். எனக்கு எதுவும் பேச முடியவில்லை. அம்மாவின் கைகளைப் பிடித்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். வாழ்க்கை இந்த அக்காவை எவ்வளவு அலைக்கழிக்கிறது என்று கனத்துப் போனேன். அம்முவை, குழந்தைகளை எல்லாம் முகம் மலர்ந்து விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். “அக்கா, ஒங்களுக்கு இப்படி இருக்க எப்படி முடிகிறது?” என்று வெறித்தபடி நின்றிருந்தேன். மதியம் பிடிவாதமாய் அவர்கள் மறுக்க, மறுக்க அருகிலொரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு இன்னும் இரண்டு மகள்கள் இருப்பதும், அதில் ஒருத்திக்கு பெயர் பாரதி என்றதும் ஆச்சரியமாக இருந்தது.
ஆஸ்பத்திரியிலிருந்து விடைபெறும்போது, “ஊருக்கு வந்தா வீட்டுக்கு வா... மாது” என்றார்கள். சரியக்கா என்று கிளம்பும்போது என்ன தோன்றியது எனத் தெரியவில்லை. சட்டெனக் குழந்தையைக் கையால் தொட்டு முத்தம் கொடுப்பது போல அக்காவின் கன்னத்தை செல்லமாய் தொட்டு ”வர்றேன்” என்றேன். எதிர்பார்க்கவில்லையென்றாலும், கண்கள் கலங்க அக்கா நின்றார்கள். முகம் தெரியாத இவ்வளவு பெரிய ஆள் தன் அம்மாவை கொஞ்சுகிறானே என்பது போல அக்காவின் மகன் என்னைப் பார்த்தது தெரிந்தது. உறுத்தியது.
அவனுக்கு என்ன தெரியும். அவன் அம்மாவின் அழகான, கனவுகள் பூத்த, கொலுசுச்சத்தங்களோடு நிறைந்த உலகத்தை அவன் பார்த்திருக்கிறானா? நான் பார்த்திருக்கிறேன். குலை குலையாய் முந்திரிக்கா காய்த்திருந்தது அவனுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும். நான் சொல்ல நினைத்தை சண்முகவள்ளியக்காவிடம் சொல்லிவிட்டது போல இருந்தது எனக்கு.
*
“அவர்கள் கொள்ளைக்காரர்கள்”: பாரதியார்
படிக்கும்போது ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. நமது மகாகவி பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் இப்படி எழுதியிருக்கிறார்.
"முதலாளிகள் தொழிலாளிகளின் லாபத்தையும், சுகத்தையும் சிறிதேனும் பொருட்டாக்காமல், கழுகுகள் போலத் தமது லாபத்தையே கருதி வேலையாட்களை வற்றடிக்கும் முறைமை இந்தியாவிலே அதிகரித்துவிட்டது. நவீன நாகரீகத்திலேயே பண ஆசை ஒரு முக்கிய அமிசமாதலால் நமது நாட்டும் முதலாளிகளின் முறைமைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே, தொழிலாளிகளும் மேல் நாட்டுத் தொழிலாளிகளின் மாதிரியைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்.
முதலாளிகளிடமிருந்து நமது குறைகளைத் தீர்ப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் உண்டாகுமானால், மேல்நாட்டுத் தொழிலாளிகள் கூட்டங்கூடி மொத்தமாக தொழில் நிறுத்தி விடுவது வழக்கம். அதுபோலவே நமது தொழிலாளிகளும் செய்யத் தலைப்பட்டு விட்டனர். என் செய்வார்கள் பாவம்.
விவசாயத் தொழிலைப் பரப்புவதற்கு கவர்ன்மெண்டார் போதுமான சகாயங்கள் செய்து கொடுப்பதில்லை. அரிசி, கோதுமை முதலிய உணவு தானியங்களை பெருமடங்காக ஏற்றுமதி செய்யப்பட்டு, உள்நாட்டுக்கே கஷ்டம் வந்துவிடாமல் தடுக்க, கவர்ன்மெண்டார் யாதொரு முயற்சியும் செய்வதில்லை. தொழிலற்றுக் கிடக்கும் ஜனத்தொகை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. இவர்களுக்கெல்லாம் தொழிலேற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்கிற சிரத்தையே ஆட்சி செய்வோருக்கில்லை.
எனவே, ஒவ்வொரு தொழிலிலும் ஆட்கள் ஈ மொய்ப்பதுபோல் மொய்க்க ஹேது உண்டாகிறது. இடையிடையே மழையும் பெய்யாமல் நின்று விடுகிறது. இவற்றையெல்லாம் சவுகரியங்களாக வைத்துக்கொண்டு முதலாளிகள் வேலையாட்களைக் கூடிய வரை இறுக்கி, லாபத்தை தாங்கள் சாப்பிடப் பார்க்கிறார்கள்.
முதலாளி என்றால் யந்திரசாலைத் தலைவனாயிருப்பினும் அல்லது ரெயில்வே அதிகாரியாக இருப்பினும் அல்லதுன் அச்சு யந்திர சாலைத் தலைவனாக இருப்பினும், கவர்ன்மெண்ட் பிரதிநிதியான போஸ்டாபீஸ் தலைவனாயிருப்பினும், வேறெவ்விதமாக இருந்த போதிலும் எல்லாம் ஒன்றுதான். தொழிலாளியைக் கஞ்சிக்குப் பறக்க விட்டுவிட்டுத் தனது பணப்பெட்டிகளை நிரப்பிக்கொள்ளும் ஒவ்வொரு முதலாளியும் கொள்ளைக்காரரே யொழிய வேறில்லை”
18-8-1906ம் தேதி, அதாவது நூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இவை. பம்பாயில் நடந்த தபால்கார ஊழியர் வேலைநிறுத்தம் ஒட்டி, மகாகவியின் பார்வையும் சிந்தனையும் இவை.
அந்த கவர்ன்மெண்ட்டுக்கும், இந்த கவர்ன்மெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என யோசிக்க வைக்கிறது.
இன்று பாரதி என்னும் மகாகவி இறந்து 88 ஆண்டுகள் ஆகின்றன. பாரதியின் நினைவு நாள்!
அவரை மட்டுமில்லாமல், அவரது எழுத்துக்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
*
வலைப் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு அன்பான அழைப்பு!
வாசித்து வாசித்து தீராது போலிருக்கிறது. வலையுலகில் அப்படி எழுத்துக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கின்றன. வித விதமான எழுத்து மொழிகள், புதிய கருத்துக்கள், மாறுபட்ட சிந்தனைகள், பயண விவரிப்புகள், ஆரோக்கியமான விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. தினம் ஒரு புதிய வலைப்பக்கமாவது யார் மூலமாவது, எப்படியாவது அறிமுகமாகி மணம் வீசுகிறது. உலகம் விரிந்துகொண்டே இருக்கிறது.
நன்கு அறிமுகமான எழுத்தாளர்களிலிருந்து, ‘எழுதித்தான் பார்ப்போமே’ என்று எழுத்துப் பயணம் துவங்கியிருக்கிறவர்கள் வரை அனுபவமும், புதுமையும் சேர்ந்து அழகு சேர்க்கின்ற வெளி இந்த வலையுலகம். சுதந்திரமாக பறக்கின்ற அனுபவம் வாய்க்கிறது. எல்லோரிடமும் ஒரு மொழியும், ஒரு உலகமும், ஒரு காலமும் இருக்கிறது. தமிழ் இலக்கியத்திற்கு புதியச் சிறகுகள் விரிகின்றன.சிறுகதை, கவிதை என இந்த வடிவம்தான் என்றில்லாமல் அனுபவங்களாக, நிகழ்வுகளாக, விமர்சனங்களாக ஆயிரம் பூக்கள் மலர்ந்துகொண்டு இருக்கின்றன.
இவைகளில் முக்கியமானவற்றை தொகுத்தால் நன்றாக இருக்குமே என அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டு இருப்பேன். எழுத்தாளர் பவா.செல்லத்துரை அவர்கள் இப்போது முன் வந்திருக்கிறார். நல்ல பதிவுகளாக தேர்ந்தெடுத்துத் தொகுத்து தாருங்கள், ‘வம்சி புக்ஸ்’ மூலம் ஐந்து புத்தகத் தொகுதிகள் கொண்டு வருவோம் எனச் சொல்லியிருக்கிறார். ஆக, பூக்களிலிருந்து சில புத்தகங்கள் வர இருக்கின்றன.
இந்த தொகுத்து அளிக்கும் பணியை நான் எப்படிச் செய்யப் போகிறேன் என மலைப்பு வந்தாலும், நீங்கள் அனைவரும் கூடவே இருக்கிறீர்கள் என்னும் தைரியமும் இருக்கிறது.
நண்பர்களே! இது குறித்த அறிவிப்புகள்:
- பதிவர்கள், தாங்கள் எழுதிய முக்கியப் பதிவுகளை தெரிவிக்கலாம்.
- வாசகர்களும் தாங்கள் ரசித்த பதிவுகளை தெரிவிக்கலாம்.
- பின்னூட்டங்களில் தெரிவிக்காமல், எனது jothi.mraj@gmail.com என்னும் முகவரிக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.
- சிறுகதை, கவிதை, அனுபவப் பகிர்வுகள், புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், முக்கிய விவாதங்கள், நகைச்சுவை, பயண விவரிப்புகள் என பல தளங்களில் இருக்கும் பதிவுகளை தெரிவிக்கலாம்.
- பதிவர்களின் அனுமதியும், பதிவர்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளையும் பெற்றுத்தான் பதிவுகள் அச்சிடப்படும்.
- அக்டோபர் 31ம் தேதி வரையிலும் தெரியப்படுத்தலாம்.
- ஜனவரி 2010, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு புத்தகங்கள் வெளிவந்துவிடும்.
வாருங்கள்.... நண்பர்களே!
‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’ வரட்டும்...!
உங்கள் மேலான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்!
*
பொய்யாய்... பழங்கதையாய்..
திரும்பத் திரும்ப லெட்டர் போட்ட பிறகு இந்த வருஷம் ராஜவேலு அம்மன் கொடைக்கு வந்திருக்கிறான். பலகாரம், பழங்கள் என்று வீட்டில் அங்கங்கு. சந்திரா நாளைக்கு ஐந்து தடவையாவது முகம் கழுவி அண்ணன் அவளுக்கு வாங்கி வந்த கோகுல் சாண்டல் பவுடரைப் போட்டு கண்ணாடியில் சிரித்துக் கொள்கிறாள். வாய்க்காங்கரைமுத்து அவ்வப்போது அடுப்பங்கரைப் பக்கம் போய் “ராஜவேலு சாப்பிட்டானா”, “ராஜவேலு எத்தன நாள் இருப்பான்” என விசாரித்துக் கொள்கிறார். இருமிக்கொண்டே அச்சு முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்கு தொண்ட அடைக்க, கண்ணில் நீராய்ப் பெருக்கெடுக்கிறது. இரண்டு நாளில் திரும்பவும் மகன்காரன் மெட்ராஸ் போகப் போகிறான்.
ராஜவேலு இந்த நாலைஞ்சு நாட்களில் வாய்க்காலின் குளிர்ந்த நீரில் மல்லாக்க கண்கள் கூச வானம் பார்த்து மிதந்தான். பெரியப்பா வீட்டுக்குப் போய் ஆச்சியிடம் ஊர்க்கதைகள் கேட்டான். காற்றில் மிதந்துவரும் பனங்கருப்பட்டி வாசனையில் ஊரையே உள்வாங்கினான். ராத்திரி டியூப்லைட் வரிசையாய்க் கட்டி வெளிச்சம் பரவிய தெருக்களில் நடந்து அழகக்காள் வீட்டுத் திண்ணையில் ஜெகஜோதியாய் உட்கார்ந்திருந்த சின்னத்தங்கத்தை நெஞ்சு படபடக்கப் பார்த்தான். தங்கப்பாண்டியோடும், குமாரோடும் பட்டாணிக்காரர் வயலுக்குப் போய் பம்ப்செட் பக்கத்தில் அரைநெல்லி, பப்பாளி, நார்த்தங்காய், மரங்களுக்கு அடியில் குளிர்ந்த நிழலில் உட்கார்ந்து வில்ஸ் குடித்தான். அவர்கள்தான் நிறையப் பேசினார்கள். இவன் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தான். இவனுக்குள் என்னதான் இருக்கிறது என்பதை அறிய முடியாமல் தாங்கள் இவனைவிட சிறியவர்களாகி விட்டதைப் போல உணர்ந்தார்கள்.
இரண்டு வருஷத்துக்கு முன்னால் ஊரில் சுற்றித் திரிந்த ராஜவேலு இவன் இல்லை. குழந்தைத்தனமான முகம். குறுகுறுவென்றிருப்பான். சேட்டைகள் தாங்க முடியாது. டீச்சர் சத்தம் போடும்போது லேசாய் பயப்பட்டு... மெதுவாய் முகம் மலர்ந்து... அப்பாவியாய் விழிப்பான். கண்கள் சிரிக்கும். டீச்சருக்கும் சிரிப்பு வந்துவிடும். சின்னத்தங்கத்தின் முடியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்னாலிருந்து இழுப்பான். ஒருநாள் வலி தாங்காமல் அழ, ஹெட்மாஸ்டர் இவன் காலுக்கு கீழே பிரம்பால் வீசித்தள்ளிவிட்டார். ஒரு பொட்டு கண்ணீர்க்கூட வரவில்லை. அடுத்தநாள் சின்னத்தங்கத்தை பார்க்கும் போது “அழுவணி” என்றான். எல்லாமே விளையாட்டுத்தான் இவனுக்கு. சொர்ணம் ‘வாழ்க்க முழுசும் எம்புள்ள இப்படியே கவல இல்லாம இருக்கணும்’ என்று மனசுக்குள் நினைப்பாள். வாய்க்காங்கரைமுத்து பெருமூச்சு விடுவார்.
மம்பட்டி சுமந்து பட்டாணிக்காரர் தோட்டத்து வாழைக்கு தண்ணீர் பாய்ச்சும் ராத்திரிகளில் பீடிப்புகை ஊதி ராஜவேலுவைப் பற்றி கனவுகள் நிறைய கண்டிருந்தார் அவர். லோடு ஏற்றிய மாட்டு வண்டியில் உட்கார்ந்து கரடுமுரடான பாதைகளில் இவனை நினைத்து கண்கள் மின்ன வாழ்க்கையைச் சுமந்திருக்கிறார். ராஜவேலு சிரிக்கும் போதெல்லாம் அவருக்குள் மாடுகளின் மணிச்சத்தங்கள்தான் நிறையும். ஊரின் எல்லார் வீட்டுக்குள்ளும் அவன் பாட்டுக்கு போய் வருவான். போன வருசம் இறந்துபோன வேலாச்சிக்கு இவன் கையைப் பிடித்துக்கொண்டு “ராசா..” என குரல் தழைய கூப்பிடுவதில் சந்தோஷமுண்டு. எல்லாம் பொய்யாய்ப் போனது. ப்ளஸ் டூ பரிட்சையில் இங்கிலீஷில் பெயிலானான்.
மணிச்சத்தங்கள் தீராத சோகத்தோடு ஒலித்தன அன்று இரவு. ராஜவேலு பக்டோன் அடித்து, வாயில் நுரையோடு... ஒன்றுக்குப் போய்.... வெளியேயும் போய்... சந்தியம்மன் கோயில் திண்ணையில் கிடந்தான். அந்தப்பக்கம் வந்த தாயம்மக்காள் பார்த்து “ஏ... பாவி! இப்படி பண்ணிட்டியே..” என ஈரக்குலை நடுங்க, தொண்டை கிழிய குரல் எழுப்பின போது ஊர் அதிர்ந்தது. அந்த இரவை இப்போது நினைத்தாலும் சொர்ணம் நடுங்கிப் போவாள்.
மூன்று நாளாய் மூக்கு, வாய், மூத்திரம் போக என்று உடம்பு பூரா டியூபைச் சொருகி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். சாப்பிடாமல் கொள்ளாமல் பக்கத்தில் சொர்ணம் பைத்தியம் போல உட்கார்ந்திருந்தாள். இவன் கண்விழித்துப் பார்க்கிற சமயத்தில் “கண்ணா! தைரியமா இரும்மா... தைரியமா இரும்மா...” என்று தன்னை தைரியப்படுத்திக் கொண்டாள். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியின் குமட்டும் மருந்து நெடி, அழுக்கு மக்கிய படுக்கைகள், அசுத்தங்கள், அங்குமிங்கும் ஓடுகிற பெருச்சாளிகள் எல்லாவற்றையும் அந்த பெரும் சோகத்தால்தான் தாங்க முடிந்தது. மாடுகளையும், வண்டியையும் விற்றுத்தான் இவன் உயிர் மீட்கப்பட்டது. மாடுகளைத் தொடர்ந்து கட்டியதால் வளவுப்பக்கம் பூவரச மரத்தில் சாசுவதமாகிப்போன கயிற்றுத்தடங்கள் மட்டுமே மிச்சம்.
ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தவனுக்கு, வாசலைத் தாண்டி கால் வைக்கவே ஒருமாதிரியிருந்தது. சகலமும் கூசியது. ஏன் சாகாமல் பிழைத்தோம் என்றிருந்தது. சாமி கும்பிட்டு ஏதோ முணுமுணுத்தபடி அம்மா இவன் நெற்றியில் இட்ட விபூதியில் உயிர் கரைந்த பாசமிருந்தது. திரும்பவும் இவன் பிள்ளையாய் நடமாடுவதில் சொர்ணத்திற்கு பெரும் நிம்மதி. வற்றிப்போன வாய்க்காலின் கோடை வெறுமை இவனிடமிருந்தது. கரையோரத்து மாமரங்கள் உயிரற்றச் சலனங்களாக இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.
தங்கப்பாண்டியும், குமாருமே கொஞ்சம் ஆறுதல். தினமும் சாயங்காலம் வீட்டுக்கு வருவார்கள். காலேஜ் சம்பந்தமாய் அவர்கள் பேசும்போது சுருக்கென்றிருக்கும். ஒருநாள் ‘நைட்ஷோ’ போவமா என்றார்கள். வாய்க்காங்கரைமுத்துவும் ஒன்றும் சொல்லவில்லை. கனவுகள் நீர்த்த மௌனம் அவருக்கும் மகனுக்கும் இடையில் உருவாகியிருந்தது. தியேட்டரில் தங்கப்பாண்டி, “இங்கிலீஷ் எழுதி பாஸ் பண்ணு” என்றான். தலையாட்டினான். நிலா வெளிச்சத்தில், பனைமரங்களின் சலசலப்புக்கு நடுவே தார் ரோட்டில் சைக்கிளில் வரும்போது அமைதியாய் இருந்தான். ஊர் நெருங்கும் சமயத்தில் “சின்னத்தங்கம் எப்படியிருக்கா” என்றான். “காலேஜ்க்குப் போறா..” என்றார்கள்.
அடுத்தநாள் அவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் மெட்ராஸ் புறப்பட்டு விட்டான். சாயங்காலம் நண்பர்கள் அவன் வீட்டுக்குப் போனபோது வாய்க்காங்கரைமுத்து “தாம்பரத்துல ஒரு கடைக்குப் போயிட்டான்... பொறுப்பு வரட்டும்” என்றார்.
முழுசாய் இரண்டு வருஷம் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான். மீசை அடர்த்தியாகி, கொஞ்சம் தடித்து, கடினமானவனாய் தெரிந்தான். கூடவே இருந்தாலும் எதிலும் ஒட்டாமல் அப்படி ராஜவேலு இருந்தது குமாருக்கு பிடிக்கவில்லை. எத்தனை அம்மங்கொடைகள் இவனோடு ஜாலியாய் கழிந்திருக்கிறது என குமார் நினைத்துக்கொண்டான். சாமி மஞ்சள் குளித்ததிலிருந்து ஆத்துக்குப் போய், திரும்பி வந்து ஊருக்குள் வீடுவீடாய் சாமியாடிகளோடு போனது.... பேப்பர்க்காரர் வீட்டுக்கு முன்னால் பச்சா விளையாடியது... குசுகுசுவென பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் கொலுசுச்சத்தங்களோடு குமரிகள் தாண்டிப்போன பிறகும் கம்மென்ற நிறையும் பூவாசம்.... ஒதுங்கிப் போய் எங்கே இருட்டுக்குள்ளிருந்து சிகரெட் பிடித்தாலும் கேட்டுக்கொண்டேயிருக்கிற வில்லடிச்சத்தம்.... துக்கமில்லாமல் விடிய விடிய கிடப்பதற்கு எவ்வளவோ அப்போது இருந்தது.
கடைசிக்கு முந்தின நாள் கும்ப விளையாட்டின் போது ராஜவேலுவுக்கு சின்னத்தங்கத்தை கூட்டத்தில் நிறையப் பார்க்க முடிந்தது. பட்டுச்சேலை கட்டி பெரியவளாய்த் தெரிந்தாள். பார்த்துக்கொண்டே இருந்தான். அவளும் இவனைச் சிலநேரம் பார்த்தாள். விடியாத மார்கழிக் காலைகளில் பஜனைக்கோயிலில் ஈரம் சொட்டும் கூந்தலோடு வந்து நின்று “ஹரஹர நமப் பார்வதிப் பதயே...” இழுத்து குளிருக்கு அழகு சேர்த்த சிறுமி ஞாபகத்துக்கு வந்தாள்.
சட்டென்று வீட்டுக்குப் புறப்பட்டான். “என்னடா” என்ற குமாருக்கு “இதோ வர்றேன்” என்று சொல்லி நகர்ந்தான். வீட்டுக்குள் நுழைந்த போது தெருவில் சந்திரா மற்றச் சிறுமிகளோடு நொண்டி விளையாடிக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் “என்ன அண்ணா வந்துட்ட. கும்பம் நல்லாயில்லயா?” என்றாள்.
“இல்ல... தூக்கம் வந்துட்டு” வீட்டுக்குள் போய் படுத்துக் கொண்டான். சொர்ணம் எழுந்து வந்து “எய்யா.. பழம் எதாவது சப்டுறியாம்மா” என்றாள். “வேணாம்மா.” சுவர்ப்பக்கம் திரும்பிக் கொண்டான். நாளைக்கு இன்னேரம் பஸ் திருச்சியை நெருங்கியிருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை.
அடுத்த நாள் பஸ் ஏறும்போது சொர்ணம் அழுதாள். சந்திரா பாவமாய் நின்றிருந்தாள். வாய்க்காங்கரைமுத்து அவனருகில் போய் “சொகத்துக்கு கடிதம் போடுப்பா..” என்றார். ராஜவேலு அமைதியாய் தலையாட்டினான். ஒரு தடவையாவது இவன் சிரிக்க, அதைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
ராஜவேலு அவரைப் பார்த்ததும் சிரித்தான்.
“வா... வா... ராஜவேலு, ஒரு வாரமா நீயில்லாம ஒரே கஷ்டமாப் போச்சு...”
சிரித்தான்.
“ஊர்ல அப்பா... அம்மா எல்லோரும் நல்ல சொகந்தான?”
“ஆமா”
“மழ கிழ உண்டா..”
“ம்..”
“சாப்ட்டியா. இல்லேல்ல. வீட்ல போய்க் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு வா... நாலு மூட சிமெண்ட்ட நம்ம டிரை சைக்கிள்ள வச்சு ஒரு பார்ட்டிக்கு கொண்டு போக வேண்டியிருக்கு..”
சரியாய் ஒருமணி நேரத்தில், கார் பஸ் இரைச்சல்களுக்கு நடுவே, அங்குமிங்கும் ஆளுக்கொரு குறிக்கோளோடு ஒடிக்கொண்டிருந்த மனுஷங்களுக்கு மத்தியில் ராஜவேலு வேகமாய் டிரை சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான். பார்வை எதிரே கவனமாயிருக்க, சட்டையெல்லாம் வேர்வையில் தொப்பென்று நனைந்து போயிருந்தது.
இனி, படுக்கும்போதுதான் இவனுக்கு ஊர், அம்மா, அப்பா, வாய்க்கால், குமார், சின்னத்தங்கம் எல்லோரும் ஞாபகத்துக்கு வரமுடியும். அதற்குள் உடல் அசதியால் தூக்கமும் வந்துவிடும்.
(1991ல் எழுதிய கதை இது. குமுதத்தில் வந்தது.)


