கமலஹாசன்கள் இதை யோசிப்பார்களா?
தனது திரைவாழ்வின் ஐம்பதாவது ஆண்டையொட்டி, நேற்று என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமலஹாசன் அவர்கள் பல விஷயங்களை தனக்கே உரிய பாணியில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அவரது வாழ்வில் செய்துகொண்ட சமரசங்களாக, வாணி கணபதி மற்றும் சரிகா ஆகியோரை திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார். அவை அவரது தனிப்பட்ட விஷயங்கள். அதற்குள் போய் எட்டிப்பார்ப்பது, கருத்துக்கள் சொல்வது நாகரீகமானவை அன்று. ஆனால் பேட்டியின் போக்கில், மிக கனமான ஒரு விஷயத்தை இப்படி சொல்லி இருக்கிறார்.
திருமணங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன. அது தொன்மையானதுமல்ல, சக்தி வாய்ந்ததும் அல்ல. குடும்பம்தான் சக்தி வாய்ந்த அமைப்பு. அதை நீங்கள் என்னிடமும் சுருதியிடமும் பார்க்க முடியும்.
அதாவது, குடும்ப உறவுகளே முக்கியமானவை. அதற்கு திருமணங்கள் தேவையில்லை என்று மிகத் தெளிவாகச் சொல்கிறார். கணவன் மனைவி உறவு நிரந்தரமானது அல்ல என்பதும் தகப்பன்-குழந்தை உறவோ, தாய்-குழந்தை உறவோதான் நிலையானது என்பதும் அவர் சொல்லிய வார்த்தைகளின் மையத் தொனியாக இருக்கின்றன.
நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு அமைப்பு குறித்து பொதுவெளியில் வைக்கப்பட்டு இருக்கிற கருத்தாக இருப்பதால் கவனிக்க வேண்டியதாகவும், பொருட்படுத்த வேண்டியதாகவும் இருக்கிறது. சொல்லி இருப்பவரும் சாதாரணமானவர் அல்ல.
கடந்த பத்து வருடங்களாகவே ஒரு கருத்தை அறிவுஜீவிகளாகவும், பிரபலமாகவும் கருதப்படுகிற சிலர் அவ்வப்போது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணங்களுக்குப் பதிலாக ‘living together' சொற்பிரயோகங்களை உபயோகிக்கிறார்கள். அதாவது மனதுக்குப் பிடித்தவர்களோடு, மனதுக்குப் பிடிக்கிற வரையில் வாழ்வது என்கிற ஒரு முறையை முன்மொழிகிறார்கள். பிடிக்காவிட்டால், வேறொரு மனதுக்குப் பிடித்தவர்களோடு வாழ்வது என்கிற சம உரிமையோடு பிரிந்துகொள்வது என்கிற தாத்பரியமிக்க தாம்பத்திய முறை அது. திருமணம் என்னும் கைவிலங்கை ஆணும் பெண்ணும் ஒரு சேர மாட்டிக்கொண்டு ஒருவரை ஒருவரை கட்டுப்படுத்தாமல், சுதந்திரமான ஒரு வாழ்வியலை இருவருக்கும் பொதுவாக்கிக் கொள்வது என்னும் மிகப்பெரும் அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. கமலஹாசனும் அவரது பேட்டியில் சொல்லாமல் சொல்வதும் இதைத்தான்.
இன்றைக்கும் சில கிராமங்களில், சில குறிப்பிட்ட சமூகங்களில் ‘அறுத்து விடுவது’ என்கிற வழக்கம் இருக்கிறது. தனக்கு அவன் பிடிக்கவில்லையென அவளோ, அவள் பிடிக்கவில்லையென அவனோ பஞ்சாயத்தில் முறையிட்டு, தாலியை அறுத்துப் பிரிந்து கொள்ளலாம். நவீன வாழ்க்கைச் சிக்கல்கள் இதே முறையீட்டோடு இப்போதெல்லாம் அதிக அளவில் ஆண்களையும், பெண்களையும் கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்திக்கொண்டு இருக்கின்றன. இப்படி பலர் முன்னிலையில் சேருவதும், பலர் ஒப்புதலோடு பிரிவதும் தேவையில்லை என்பதே இந்த living together வாழ்க்கை முறை கோருகிறது. தேர்தெடுப்பதும், சேருவதும், பிரிவதும் சம்பந்தப்பட்ட, தனிப்பட்ட அந்த ஆணின், அந்த பெண்ணின் விருப்பம் என்று சொல்கிறது.
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யோசிப்பதற்கும் நிறைய இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரம் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்று, அனுபவித்து, இன்று பெரும் சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. குடும்பம் என்ற கோட்பாடு சிதைந்து, குழந்தைகளின் எதிர்காலம் கவனிப்பாரற்றுப் போவதாகவும் பல அறிஞர்கள் கவலையோடு கருத்துத் தெரிவிக்கின்றனர். எதிர்காலச் சந்ததியினர் தங்களையே அறியமுடியாமல் பெரும் மனக்குழப்பங்களுக்கு ஆளாவதும், மனநலம் பாதிக்கப்படுவதும் அவர்கள் சந்திக்கிற பிரச்சினைகள். திருமணம், குடும்பம் குறித்த மறுசிந்தனையும், மறுபார்வையும் தேவை என வலியுறுத்துகிறார்கள். சமீப காலங்களில் ஐரோப்பாவில் அதிகமாக விறகப்படும் புத்தகங்கள், இந்தப் பிரச்சினை சம்பந்தமானவையாக இருக்கின்றன. திருமணம் என்ற பந்தம் இல்லாமல், குடும்பம் என்ற அமைப்பை எப்படி பாதுகாப்பது என்பதுதான் முன்வந்திருக்கும் முக்கிய கேள்வி.
நடிகர் கமலஹாசன் இந்த இடத்தில்தான், திருமணம் இல்லாமல் குடும்பங்கள் நிலைக்கும் என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி இருக்கிறார். அவரது மகள் சுருதி அவரோடு இல்லாமல், தன் தாயோடு இருந்தால், அவரது கருத்தும் பார்வையும் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை.
இந்தத் திருமணம், குடும்பம் எல்லாம், புனிதமானவை, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. குடும்ப அமைப்புகளே, இந்தியாவில் ஜாதியையும் மதத்தையும் பாதுகாத்துக் கொண்டு இருக்கும் அரண்களாக இருக்கின்றன என கருத்துக்களும் முன்வந்து கொண்டு இருக்கும் காலம் இது. கவலையெல்லாம் குழந்தைகள் எதிர்காலம் குறித்தும், அவர்களது அடையாளம் பற்றியும் தான். இங்கே அடையாளம் என்று சொல்வது initial அல்ல; identityயை! அவர்கள் மீது கவலையும் அக்கறையும் யாருக்கு இருக்கும் என்பதற்கு பதில் இல்லையே. தங்கள் சுதந்திரத்துக்காக தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை பலிகொடுப்பது சரியாய் இருக்குமா?
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் சோவியத்துக்குச் சென்றுவிட்டு வந்த அனுபவத்தை அவரது சபையில் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அருகில் இருந்து கேட்டு இருக்கிறேன். சோஷலிச சமூகத்தை ஏற்றுக்கொண்டு இருந்த அந்த காலக்கட்டத்தில், யார் வீட்டிலாவது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டு இருக்குமானால், போலீஸ் அவர்கள் வீட்டுக்கதவைத் தட்டி காரணம் கேட்குமாம். குழந்தைகள் அரசுக்குச் சொந்தமானவை, அவர்களை அழவிட அவர்களது பெற்றோர்களுக்கும் கூட உரிமை கிடையாது என்கிற மிக உயர்ந்த கோட்பாடு அப்போது இருந்ததாம். கேட்கும்போதே சிலிர்த்தது.
அப்படியொரு சமூகத்தில், கமலஹாசன்களின் இதுபோன்ற கருத்துக்கள் பரிசீலிக்கப்படலாம். ஏற்றுக்கொள்ளவும் படலாம். தங்கள் மீது காட்டப்படுகிற அக்கறைக்காகவும், தங்களோடு நிற்கும் சுற்றத்துக்காகவும் ஏங்குகிறவன் மனிதன். தவறோ, சரியோ இப்போது அதை இங்கு குடும்பங்கள்தான் நிரப்பிக்கொண்டு இருக்கின்றன. அந்த இடம் வெற்றிடமாவது பெரும் சிக்கல்களையும், சமூகக் கேடுகளையும் உருவாக்கும்.
கமலஹாசன்கள் இதை யோசிப்பார்களா?
*
எழுத அவரிடம் நிறைய இருந்தன…
சென்ற ஞாயிற்றுக்கிழமை சாத்தூரில் டாக்டர் அறம் புதிதாக கட்டியிருந்த ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. முகப்பில் வைக்கப்பட்டு இருந்த அந்த படத்தை பார்த்ததும் கண்கள் கலங்கின. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த அதே சிரிப்புடன் இருந்தார். தமிழ் இலக்கிய உலகம் அறிந்து வைத்திருக்கிற முக்கியமான கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர் அவர். ஆனந்த விகடனில் வெளிவந்திருந்த அவரது முதல் சிறுகதை ’நாரணம்மா’ மருத்துவமனையின் கொடுமைகளால் அவதியுற்ற ஒரு கிராமத்து ஏழைத்தாயின் கதறலாய் வெளிப்பட்டு இருந்தது. இதோ இன்றைக்கு அவரது பெயரிலே ஆஸ்பத்திரி திறக்கப்பட்டு இருக்கிறது.
பதிவுலகம் வந்த புதிதில் நான் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி குறித்து எழுதியதை இங்கு மீள்பதிவாய் தந்திருக்கிறேன்.
பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்திற்கு வெளி பூராவும் ஈசல்கள் அங்குமிங்கும் அலைக்கழிந்து பறந்து கிடந்த 2005 டிசம்பர் மாதத்தின் ஒரு அந்தி நேரம். மௌனமாக சாத்தூர் வீதியில் வந்து தெருக்களில் நுழைந்து ஆற்றங்கரையோரமாய் நடந்து மயானக்கரையில் திரளாய் நின்றிருந்த மக்கள் தங்கள் மீது மோதி விழுந்து கொண்டிருந்த அந்த பூச்சிகளை பொருட்படுத்தாமல் கடந்தகால நினைவுப்பரப்பிற்குள் உறைந்தும், உருகியும் போயிருந்தார்கள். எழுத்தாளர்கள் பொன்னீலன், தமிழ்ச்செல்வன், சிவசுப்பிரமணியன், கோணங்கி, சோ.தருமன், ஷாஜஹான், லட்சுமணப்பெருமாள், உதயசங்கர், காமராஜ் ஆகியோர், கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்கள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த தோழர்கள், பழகிய ஆசிரியர்கள், அவரிடம் படித்த மாணவர்கள், மருத்துவர்கள் என பலரும் நிறைந்திருந்தனர். கசிந்து கொண்டிருந்த மெல்லிய முணுமுணுப்புகளில் உச்சரிக்கப்பட்ட தனுஷ்கோடி ராமசாமி என்னும் மனிதர் அங்கே சிதையில் இருந்தார். இறுதிச் சடங்குகள் முடிந்து, டாக்டர் அறம் தனது அருமைத் தந்தைக்கு கொள்ளி வைக்க, தீப்பற்றிய கணத்தில் கண்கள் கலங்கின. 'வாருங்கள், வாருங்கள் எங்கள் இளைஞரே' வரவேற்கும் தனுஷ்கோடி ராமசாமியின் பெருங்குரல் கேட்கிறது. தோற்றத்துக்கு சம்பந்தமில்லாமல் அவரின் கைவிரல்கள் சின்னச்சின்னதாகவும், மென்மையாகவும் இருக்கும். கண்களை அகல விரித்து பாவனையோடு பார்க்கின்ற, "ஏ..மனுஷா.." என்று நகைச்சுவைக்கு குலுங்கி குலுங்கி சிரிக்கிற அந்த முகம் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது.
ஒரு ஓரமாய் நின்று கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் பொன்னீலன் இரங்கல் கூட்டத்தில் தழுதழுத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசும் போதும் வார்த்தைகள் உடைந்து உடைந்து வந்தன. தோழர் நாவலில் இறுதியில் விடைபெறும்போது 'காம்ரேட்" என்று துடித்துக்கூவிய ஷபின்னாவின் குரலே எல்லோருக்குள்ளும் படிந்து விட்டிருந்தது. "மாதவராஜ்...பேச வாங்க" யாரோ அழைத்தார்கள். போகவில்லை. கதறி அழுவதைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியாது. அப்படி ஒரு உணர்வு பூர்வமான உறவோடு கைகளை அகல விரித்து எல்லோரையும் வாசலில் நின்று அழைத்த மனிதராயிருந்தார் தனுஷ்கோடி ராமசாமி. இருபது வருடங்களாக மிக நெருக்கமாக பழகிக் கலந்த சொந்தம் ஒன்று, புகைந்த நெருப்பில் கரைந்து கொண்டிருந்தது.
அந்த நாள் இன்னும் கலையாமல் இருக்கிறது. 1985ம் ஆண்டில் ஒரு மத்தியான வெயில் நேரம். பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை எதிர்த்து சங்கம் தர்ணா நடத்திக்கொண்டிருந்தது. அமர்ந்திருந்த வங்கித்தோழர் ஒருவர் கையில் சிறுகதைப் புத்தகம் இருந்தது. வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இந்தியக் கிராமங்களில் சோகத்தை உரக்கச் சொல்லிய தொகுப்பின் முதல் கதை 'நாரணம்மா'வின் அலறல் உலுக்கியது. கதை எழுதியவரின் இதயம் எழுத்துக்களில் துடித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் "நாரணம்மா கதை எழுதியவரும், உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமான தோழர்.தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் நம்மிடையே இப்போது பேசுவார்கள் என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார் அறிவித்த போது பிரமிப்பாய் இருந்தது. புத்தகங்களிலிருக்கும் வாசனை போல எழுத்தாளர்களிடம் ஒரு வசீகரம் இருப்பதாகவே எப்போதும் படுகிறது. கம்பீரமான பார்வையும், கிருதாவும், மீசையுமாக, பேண்ட் சட்டை போட்ட கிராமத்து மனிதராய் அவர் இருந்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நாரணம்மாவின் அழுகையை பத்திரமாக வைத்திருக்கும் அந்த மனிதர் மீது அன்பு பெருகியபடி இருந்தது. கிருஷ்ணகுமாரிடம் கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டுச் சென்றார்
இன்னொருமுறை அதேபோல் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம். சங்கத்தின் முடிவின்படி நானும் இன்னும் நான்கு தோழர்களும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தோம். இரண்டாம் நாள் சாயங்காலம். தனுஷ்கோடி ராமசாமி வாழ்த்திப் பேசினார். சிறிது நேரம் கழித்து என்னருகில் வந்து "நீங்க எழுத்தாளர் ஜெயகாந்தன் மகளை காதலிக்கிறீர்களாமே?" என்று வியப்போடு கேட்டார். கிருஷ்ணகுமார் சொல்லியிருக்க வேண்டும். சங்கடத்தில் நெளிந்தபடி புன்னகைத்தேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு மௌனமாய் இருந்தார்.
ஒருநாள் வக்கீல் மாரிமுத்து என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். ஆற்றங்கரையொட்டிச் செல்லும் கிணற்றுக்கடவுத் தெருவில் ஒரு காம்பவுண்டு வீடு. வக்கீல் மாரிமுத்துவை உரக்க வரவேற்றவர் கூடவே என்னைப் பார்த்து அடையாளம் கண்டு, "வரணும்..வரணும்" என்று நாற்காலியை காட்டி அமரச் செய்தார். உள்பக்கம் தலை திருப்பி "சரஸ்வதி...! டீ கிடைக்குமா.." என்று கேட்டுக் கொண்டார். ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போதான் அவரது மகன் அறம் படித்துக் கொண்டிருந்தான். 'தோழர்' நாவலை எழுதிக் கொண்டிருந்த நேரம். பேச்சு அதிலிருந்து ஆரம்பித்து, கிறிஸ்டியன் மிஷனரிகளை மையமிட்டு, அப்படியே ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆரையெல்லாம் சுற்றி வந்து, பாரதியைத் தாண்டி, டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பில் லயித்து, சிங்கிஸ் ஐத்மாத்தாவோடு உலவியபடி இரண்டு மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்டது. அப்போதுதான் சோவியத் இலக்கியங்களை படிக்க ஆரம்பித்திருந்ததால் அந்த உரையாடல்கள் பெரும் சுவராஸ்யத்தோடு இருந்தன. 'தீபம்', 'கணையாழி' பத்திரிக்கைகளில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதியிருந்த எனக்கு இலக்கியத்தின் மீது மேலும் பைத்தியம் பிடித்துக் கொண்டிருந்தது.
அதுதான் விடாமல் அவரைத் தேடிச் செல்ல வைத்திருக்க வேண்டும். அப்போது கிணற்றுக்கடவுத் தெருவில் இருந்த அந்த காம்பவுண்டு வீட்டுக்கு சாயங்கால வேளைகளில் நானும் காமராஜும் அடிக்கடி செல்ல ஆரம்பித்தோம். சேவு, பொரிகடலை, சிகரெட்டுகள் வாங்கிக்கொண்டு பைபாஸ் கடந்து வைப்பாற்றுக்குள் இறங்கி எதாவது ஒரு மணல் திட்டில் உட்கார்ந்து அவரோடு பேசிய நாட்கள் வாழ்வின் இனிமையான தருணங்களாக இப்போதும் வற்றாமல் இருக்கின்றன. மணலை நோக்கமற்றுக் கீறியபடி எத்தனை எத்தனையோ கணங்கள் அவரை உள்வாங்கியிருக்கிறேன். பேச்சின் நடுவே குறுக்கிட மாட்டார். முழுவதுமாய் கவனித்த பிறகு பொறுப்போடும், ஆழத்தோடும் பேச ஆரம்பிப்பார். எல்லாம் தனக்குத் தெரிந்ததாய் ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை. எல்லோரிடமும் தெரிந்து கொள்வதற்கு விஷயங்கள் இருக்கிறது என்பதே அவரது மனநிலையாக இருந்தது. சிறுபிள்ளைத்தனமாகப் பேசினால்கூட புறக்கணிக்காமல் நோகாத விமர்சனத்தோடு அதை புரிய வைப்பார். நகைச்சுவையை அவர் ரசிப்பதே அழகாகவும் உயிர்ப்போடும் இருக்கும். பேச்சின் இடையிடையே சிலசமயங்கள் தூரத்துப் பாலத்தின் மீது எதிரும் புதிருமாய் வெளிச்சத்தை இறைத்தபடி ஒடிக்கொண்டிருக்கும் வாகனங்களை பார்த்தபடி மெனங்களாய்க் கழியும். அசைபோட்டுக்கொண்டும், சிந்தனை வயப்பட்டும் இருந்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பிப்போம். குரல்களே உடலாகவும், உள்ளமாகவும் வெளிப்படுகிற இருள் சூழ்ந்து பத்துப் பதினோரு மணியைத் தாண்டிவிடும். ஒவ்வொரு முறையும் இன்னும் நிறைய பேச வேண்டியிருப்பதாகவே பிரிய நேரிடும்.
ஆனந்த விகடனில் "அன்புள்ள.." சிறுகதையப் படித்தபோது மிக முக்கியமான விஷயம் ஒன்றை அவரது எழுத்து தொட்டுவிட்டதாய் பட்டது. கிராமத்தின் எளிய பெண் ஒருத்தி தனது மனதுக்குப் பிடித்தவனுக்கு கடிதம் எழுத ஆரம்பித்து கடைசி வரை வெளிப்படுத்த முடியாமல் போவதாய் அந்தக்கதை முடியும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஆண்டாளுக்கு 'திருப்பாவையாக' வந்திருந்த தைரியம் இன்னமும் நமது பெண்களுக்கு இல்லையே என்றும், ஒரு பெண் தன்னை முதலில் வெளிப்படுத்துவதை அருவருப்பாகவும், நாகரீகமற்றும் இந்தச் சமூகம் கருதுகிறது என்றும் தெரிவித்தேன். தான் எழுதிய கதையைக் காட்டிலும் இந்த விமர்சனம் அடர்த்தியாக இருப்பதாக என்னை உற்றுப் பார்த்துக்கொண்டு சொன்னார். பாராட்டுவதில் தயக்கம் கொஞ்சமும் இருக்காது. இதைச் சொல்லி அவரை விமர்சிப்பவர்களை நிறைய பார்த்திருக்கிறேன். எதையும் அதீதமாய் பண்ணுகிறார் என்று சிரிக்கும் கேலிப்பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். எனக்கென்னவோ அது ஒரு அபூர்வ குணமாகவே தோன்றுகிறது. எது குறித்தும் ஆச்சரியப்படாத, உற்சாகமடையாத, சக மனிதனிடம் இருக்கும் திறமைகளை பாராட்டத் தெரியாத மொண்ணையாகப் போன சமூகத்தில் தனுஷ்கோடி ராமசாமி வித்தியாசமான மனிதர்தான். தோழர் நாவல் படித்துவிட்டு காமராஜ் அவருக்கு எழுதிய போது "ஏ...நம்ம காமராஜ்தானா! கடிதமே இவ்வளவு இலக்கிய நயத்தோடு இருக்கிறதே...நீ கதை எழுதலாமே மனுஷா.." என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். காமராஜ் அவரிடம் ஆரிய வைசியப் பள்ளியில் தமிழ் படித்தவன். எனது 'மண்குடம்' கதையையும், ஷாஜஹானின் 'ஈன்ற பொழுது.." கதையையும் படித்துவிட்டு பல நாட்கள் ஒயாமல் பேசியிருக்கிறார். அவரது பல நண்பர்களிடம் சிலாகித்திருக்கிறார். இளைஞர்களிடம் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார். அதனாலேயே இளமையாக இருந்தார்.
தனக்கு முந்தையவர்கள் மீதும் அளப்பரிய மரியாதையும், விமர்சனம் தாண்டிய அன்பும் கொண்டிருந்தார். மகாத்மா காந்தியை, மகாகவி பாரதியை, எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதற்கு அவரிடம் நிறைய இருந்தன. சமூகத்தின் மீதிருக்கும் அக்கறையே, அதற்கு எதாவது ஒரு வகையில் பங்களிப்புச் செய்தவர்களையும் நினைவுகூறச் செய்கிறது. மாறுபட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதைவிட இணக்கமான விஷயங்களோடு மனிதர்களை அடையாளம் காண்பது அவரது தன்மையாகவே இருந்தது. அது பலவீனமா, பலமா என்ற ஆராய்ச்சியை மற்றவர்களே செய்து கொண்டிருந்தார்கள். ஜெயகாந்தனைப்போலவே தன்னை ஆக்கிக் கொள்கிறார் என்றும் கூட பேசியிருக்கிறார்கள். அவரே அதைச்சொல்லிவிட்டு, சொன்னால் சொல்லிக்கொள்ளட்டும் என்பது போல அமைதி காப்பார். புதுமைப்பித்தன், ஜீவா, தொ.மு.சி, கு.அழகிரிசாமி, கி.ரா, கு.ப.ரா, சுந்தரராமசாமி, பொன்னீலன், கந்தர்வன் எழுத்துக்களைப் பற்றி அடிக்கடி பேசுவார். 'ஜே.ஜே சில குறிப்புகள்' மீது அவருக்கு லயிப்பும் கடுமையான விமர்சனங்களும் இருந்தன. வண்ணதாசனின் கதை சொல்லும் அழகில் தன்னை பறிகொடுப்பார். ஆரம்ப காலங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஈடுபாடு கொண்டு, அவரோடு தர்க்கங்கள் செய்து பின்னாளில் மார்க்சீயத்தின் பால் ஈர்க்கப்பட்டு 'அசோகவனம்' கதையோடு தமிழ்ச்செல்வன் அவரது வீட்டுக் கதவைத் தட்டிய இரவை எத்தனையோ தடவைச் சொல்லியிருக்கிறார். வேதனையோடு பகிர்ந்து கொண்டது என்றால் ஜி.நாகராஜனோடு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான். மதுரை வீதிகளில் தாடியோடும், கந்தல் உடையோடும், மிகுந்த உரிமையோடும் வழிமறித்து பணம் கேட்ட நாட்களை நினைவு கூர்ந்து "எப்பேர்ப்பட்ட எழுத்தாளன்' என்று அதற்கு மேல் பேச முடியாமல் கொஞ்ச நேரம் மெனமாயிருப்பார். எல்லோரையும் நேசிக்கிற ஒரு பரந்த தளத்தில் அவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
தான் நம்பிக்கை வைத்திருந்த எழுத்தாளர்கள் பலர் எழுதாமல் நிறுத்திக் கொண்டதை பெருங்குறையாக கருதினார். "சங்க வேலைகளை குறைத்துக் கொண்டு நீங்கள் நிறைய எழுதலாம்" என்று என்னிடம் அடிக்கடிச் சொல்வார். தமிழ்ச்செல்வனிடமும் இதேபோல் சொல்லியிருக்கிறார். இலக்கியத்தின் மீது அவருக்கு இருந்த அக்கறையே "தொழிற்சங்க வேலைகள் பார்ப்பதற்கு உங்களைப் போன்றவர்கள் தேவையில்லை" என்று சொல்ல வைத்தது. குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் இருந்து செயல்படுவதைத் தாண்டி பரந்த மக்களிடம் செல்ல வேண்டியவர்கள் இலக்கியவாதிகள் என உறுதியாக நம்பினார். வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் இருந்த போதும், சாத்தூரில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் பலர் எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தோம். அதில் பலர் அவரது மாணவர்களாக இருந்தனர். இன்று எங்கெங்கோ இருக்கும் சாத்தூரின் இளைஞர்கள் பலரிடம் ஒரு இடதுசாரி சிந்தனையும், தொடர்பும் இருப்பதை கவனித்திருக்கிறேன். விசாரித்துப் பார்த்தால் அவர்கள் தனுஷ்கோடி ராமசாமியிடம் படித்தவர்களாக இருப்பார்கள். ஆசிரியரைப் பிடிக்காமல், அவரிடம் ஈர்ப்பு இல்லாமல், அவரது தன்மைகள் மாணவனிடம் படிந்து விடாது. அவரது மாணவர்கள் எல்லோரும் 'அண்ணா' என்றுதான் அவரை அழைத்தார்கள். ஆசிரியப் பணியில் அவ்வப்போது ஏற்படும் சோர்வுகளையெல்லாம் இந்த உறவுகளால்தான் அவர் துடைத்தெறிந்திருக்க வேண்டும்.
பாவமாய் இருக்கும். பரீட்சை முடிந்து லீவில்தான் இருப்பார் என்று பார்க்கச் சென்றால் கட்டுக் கட்டாய் விடைத்தாள்கள் மேஜையில் அடுக்கி வைத்து திருத்திக் கொண்டு இருப்பார். 'தொடர்ந்து ஒரே வேலையைச் செய்கிறீர்களே....போரடிக்காதா?' என்றால் சிரிப்பார். "ஒரே கேள்விதான். பதில் விதவிதமாய் இருக்கும்" என்று மாணவர்கள் படிக்கிற அழகைக் காட்டுவார். "ஒரே பாடம்தான் தொடர்ந்து எடுக்கிறேன். ஆனால் ஒவ்வொரு வருடமும் வேறு வேறு மாணவர்கள்" என்று தத்துவம் போலச் சொல்வார். கல்வியமைப்பின் மீதும், ஆசிரியர்கள் மீது கடுமையான விமர்சனம் அவருக்கு இருந்தது. 'தொழில்தர்மத்தைச் சொல்லிக் கொடுக்காமல் உரிமைகளை மட்டும் சங்கங்கள் சொல்லிக் கொடுக்கின்றன" என்று வருத்தப்படுவார். பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் ஒரு கனவுகொண்டிருந்தார். அதனால் தலைமையாசிரியர் பொறுப்பினை ஏற்று கொஞ்சகாலம் செயல்பட்டும் பார்த்தார். கனவுக்கும் யதார்த்தங்களுக்குமான இடைவெளியில் முட்டிப் பார்த்து, முடியாமல் ஒருநாள் திடுமென தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து மீண்டும் தமிழாசிரியராக நிம்மதியடைந்தார். அந்தக் காலக் கட்டங்களில் குழப்பங்களோடும் வேதனையோடும் சங்கடப்பட்டார்.
சோவியத் நொறுங்கிய போது மிகவும் கலங்கிப் போனார். ஆயுத ஒழிப்பு குறித்து ரீகனுக்கும், கோர்பச்சேவுக்கும் நடந்த உரையாடலை மிகுந்த ஆரவாரத்தோடு ஒரு காலத்தில் வாசித்துக் காட்டி, கோர்பச்சேவின் வார்த்தைகளை பெருமிதத்தோடு கூட்டங்களில் முழங்கவும் செய்தார். பெரிஸ்த்ரோய்கா, கிளாஸ்நாத்தையெல்லாம் உயர்த்திப் பிடித்து "யாருக்கு இந்த தைரியம் வரும். யார் தனது பலவீனங்களை இப்படி போட்டு உலகத்தின் முன் உடைப்பார்கள். யாரால் இந்தப் புதுமைகளை சிந்திக்க முடியும்" என வேகமாகப் பேசியிருந்தார். சட்டென எல்லாம் கலைந்து போன போது தடுமாறி நின்றார். பெருமூச்சோடு மௌனங்கள் சூழ்ந்த அந்த நாட்களில் அடிக்கடி அவரைப் போய் பார்ப்பேன். மீள்வதற்குச் சிரமப்பட்டார். அதுபோல ஜோதிபாசு பிரதமர் பதவிக்கு வாய்ப்பு வந்து, சி.பி.எம் அதை மறுத்தபோதும் ரொம்ப வருத்தப்பட்டார். 'நம்மீது இருக்கும் நம்பிக்கைகளை நாமே தகர்த்து விடுகிறோம்" என்று அடிக்கடிச் சொல்வார். தான் நம்புவதையும் உணர்வதையும் வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் இருக்காது. தென்தமிழ் மாவட்டங்களில் ஜாதிக்கலவரங்கள் பற்றி, சாத்தூரிலும் பரவியபோது ஒருநாள் "இந்தக் கலவரமெல்லாம் தேவைதான்" என்று அவர் சொல்லியபோது ஆச்சரியமாக இருந்தது. "திருப்பி அடிக்க மாட்டான் என்று தானே இவ்வளவு காலமா நெனச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போ பதிலுக்கு பதில்னு ஆனதால கொஞ்சம் யோசிப்பாங்க." என்றார். எப்போதும் தலித் மாணவர்களையே தனது வகுப்பில் லீடர்களாக முன்னிறுத்துவாராம்.
இசங்கள் குறித்தெல்லாம் அவர் அலட்டிக்கொண்டதேயில்லை. அதற்குள் உட்கார்ந்து விவாதம் செய்ய ஆர்வமும் பெரிதாக இருந்ததில்லை. மேஜிக்கல் ரியலிசம் குறித்து சுற்றிலும் பேசப்பட்டபோது அவர் சிங்கிஸ் ஐத்மாத்தவின் 'அன்னை வயல்' பித்தனாக மாறிப் போயிருந்தார். இராணுவம் செல்லும் புகை வண்டியில் பெற்ற மகனைக் காண மணிக்கணக்காக காத்திருந்தும் கடைசியில் நிற்காமல் செல்லும் வண்டியிலிருந்து வீசியெறியப்பட்ட தன் மகனின் தொப்பியை மார்பில் பொத்தி அந்த அன்னை அழும்போது புத்தகத்தை அதற்குமேல் படிக்க முடியாமல் தரையில் புரண்டு புரண்டு அழுததைச் சொல்லியிருக்கிறார். பல கூட்டங்களில் அந்தக் காட்சியை உணர்ச்சிகரமாக பேசியுமிருக்கிறார். 'எழுத்து என்பது மிக எளிமையாக, இயல்பாக, உண்மையாக இருக்க வேண்டும்' என்பதுதான் அவர் அறிந்து கொண்ட இலக்கணம். 'மதினிமார்களின் கதை', 'கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்' தவிர கோணங்கியின் எழுத்துக்களின் மீது பிரமிப்பு அவருக்கு இருந்ததில்லை. "யப்பா...ஒங்கதை ஒண்ணும் எனக்குப் புரியல. அதுக்கு நா வெக்கப்பட வேண்டியதுமில்ல" என்று கோணங்கியிடம் சொல்லவும் செய்வார். வாக்குவாதம் நடக்கும். "நீங்க எழுதுறதெல்லாம் எழுத்தா" என்றெல்லாம் கோணங்கி கோபப்படுவார். தனுஷ்கோடி ராமசாமியின் துணைவியார் சரஸ்வதி, இதெல்லாம் சகஜம் என்பது போல அமைதியாக எல்லோருக்கும் டீ பரிமாறிக்கொண்டு இருப்பார்கள். ஒருதடவை கோணங்கி எழுதிய கடிதமொன்றை சிரித்துக்கொண்டே காண்பித்தார். அதில் "எல்லோரும் மைதானத்தில் பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் காலரியைச் சுற்றி ஓடி கோல், கோல் என கத்திக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றிருந்தது. பிறகு ஒரு வாரத்துக்குள் கோணங்கி அவர் வீட்டுக்கு வந்து உணவருந்தி, விடிய விடிய பேசிச் சென்றதையும் சிரித்துக்கொண்டே சொன்னார். பிடிபடாத அன்பின் விளையாட்டாய் காட்சியளித்தாலும், கதை எழுதுகிறவர் என்று ஒருவர் பற்றி ஒருவர் வைத்திருந்த பரஸ்பர புரிதலே இத்தனைக்கும் அடியில் நீரோட்டமாய் இருந்திருக்க வேண்டும். முகமெல்லாம் கனத்து, தொண்டை அடைக்க ஒரு மாலையைத் தூக்கிக் கொண்டு வந்து தனுஷ்கோடி ராமசாமியின் உடல் மீது வைத்து, கண்கள் பொங்க நின்ற கோணங்கியை பார்த்தபோது, திரும்பப்பெற முடியாத ஒன்றை இழந்த சோகம் தெரிந்தது.
சங்க இலக்கியங்களை வெறும் பாடமாக பார்க்காமல், வாழ்க்கையாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடிந்திருந்தது அவரால். மார்கஸ், லெனின் எழுதிய கட்டுரைத் தொகுதிகளோடு பெரிது பெரிதாக கம்பராமாயணத் தொகுதிகளையும் வரிசையாக அவரது அலமாரிகளில் பார்க்கலாம். கம்பனின் வரிகளை ஒரு சுதியோடு சொல்லி, விளக்கமளிக்கும் போது கேட்பதற்கு ஆசை ஆசையாய் இருக்கும். அப்படியொரு செறிவுமிக்க இலக்கியப் பார்வையும், ரசனையும் இருந்தது. அகத்திணையில் வீசிக்கொண்டிருக்கும் தமிழரின் காதல் வேட்கையை அவரிடம்தான் சுவாசித்தேன். புறங்காலால் அடித்து கடலையே வற்றச் செய்து விடுவேன் என்று தன் பிரிவுத் துயரை சித்தரிக்கும் தொன்மை காலத்துப் பெண்ணை பார்த்தேன். அழகுத் தமிழின் அற்புதங்களையெல்லாம் தனக்குள் சுமந்து கொண்டிருந்த மனிதர் அவர். "இதையெல்லாம் நீங்கள் பேசுகிற மாதிரியே எழுதினால் போதும். இந்தத் தலைமுறைக்கு நமது பாரம்பரியம் மிக்க இலக்கியத்தை அறிமுகப்படுத்திய மாதிரியும் இருக்கும், தமிழை அவர்களுக்கு நெருக்கமானதாக உணர வைக்கவும் முடியும்" என்றேன். "அப்படியா..." என்று ஆச்சரியத்தோடு, தீவீரமாகவே யோசித்தார். இலக்கியத்தின் நயங்களோடு ஒரு சிறுகதை மட்டும் எழுதினார். வேறு என்னவெல்லாம் செய்ய நினைத்திருந்தாரோ. வெந்தணலில் தமிழ் வெந்து கொண்டிருந்தது.
தேடிப் போகிற சில சமயங்களில் வீட்டில் இருக்க மாட்டார். அவரது துணைவியார் "மானாமதுரை போயிருக்காங்க" என்பார்கள். "திருவண்ணாமலை போயிருக்காங்க" என்பார்கள். வெளியூர் சென்று வந்த பிறகு, தான் சந்தித்த இளைஞர்களை, புதிய இலக்கியவாதிகளைப் பற்றி விடாமல் பேசுவார். அவர் யார், பெயர் என்ன என்பது கூட என் நினைவில் இருந்ததில்லை. சுவராஸ்யமற்றும் இருக்கும். மனிதர்கள் மீது எப்போதும் ஈர்ப்பு இருந்தது. புதுமைகளை ஆராதிக்கிற அபூர்வ குணத்தின் வெளிப்பாடு என எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் "நேற்று ஜே.கேவைப் பார்த்தேன்" என்று சொல்லி பொருள் நிறைந்த பார்வையோடு நிறுத்துவார். புன்னனகையோடு காத்திருப்பேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது அப்படியொரு காதல் இருந்தது. பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் எப்படியும் எதாவது ஒரு விஷயம் ஜே.கேவைச் சுற்றி வந்துவிடும். அவர் எழுதியது, பேசியது, அவரைப் பற்றி தெரிந்து கொண்டது, அவரைச் சந்தித்தது என ஏராளமான சம்பவங்களை வைத்திருந்தார். 'ஜே.கே வாழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம்' என்பதை பெருமை பொங்கச் சொல்வார். மெல்ல "மெட்ராஸுக்குப் போயிருந்தீங்களா...அம்முவை பார்த்தீங்களா" என்று கேட்டுக் கொள்வார். பின்னாளில் எங்கள் திருமணம் குறித்து சென்னை சென்று ஜே.கேவிடம் அவர்தான் முதலில் பேசினார். எங்கள் வாழ்வெல்லாம் வந்துகொண்டிருக்கும் மிக முக்கிய மனிதர்.
பொங்கி வந்த அழுகையோடுதான் அம்மு அன்று இருந்தாள். சென்னையிலிருந்து அவரது உடல் கொண்டு வரப்பட்டு தென்வடல் புதுத்தெருவில் அவரது வீட்டின் முன்பு வைக்கப்பட்ட போது, "ஏ...அம்மு! உன் அங்க்கிளப் பாத்தியா" என்று சரஸ்வதி அம்மாள் கதறியபோது அம்மு வெடித்து அழுதாள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தொண்டை அடைத்தது. தொழிற்சங்க வேலைகள் காரணமாக வெறி பிடித்து அலைந்து கொண்டிருந்த 1990களில் நான் அவரைப் பார்க்கச் செல்வது ரொம்ப குறைந்து போனது. அவர் எங்கள் வீட்டுக்கு சாயங்கால வேளைகளில் வருவார். பெரும்பாலும் நான் இருக்க மாட்டேன். அம்முவோடு பேசியிருந்து செல்வார். அவள் முதல் குழந்தை உண்டாகியிருந்த சமயத்தில் கல்கத்தா, டெல்லி, கைதராபாத், சென்னை என ஒடிக்கொண்டு இருந்தேன். அப்போதெல்லாம் தனுஷ்கோடி ராமசாமியும், அவரது துணைவியாரும் வந்து அம்முவைப் பார்த்துக்கொள்ளவும், அவளுக்குப் பிடித்தமானதை செய்து கொண்டு வரவும் செய்தார்கள். "சங்க வேலைகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே.." என லேசாய் கடிந்து கொள்ளவும் செய்தார். "எங்க அப்பாவப் பாக்குறதப் போல இருக்கு" என அம்மு அடிக்கடிச் சொல்வாள். ஆச்சரியமாக இருக்கும். எங்கள் குழந்தைகளின் பிறந்த நாட்களைக் கூட கவனமாக ஞாபகம் வைத்து, அவரும் அவர் துணைவியாரும் வீட்டுக்கு வந்து வாழ்த்துச் சொல்வார்கள். அன்பைத் தவிர அந்தக் குடும்பத்திற்கு வேறு எதுவும் தெரியாதோ என்றுதான் தோன்றும்.
யோசிப்பதற்கும், சொல்வதற்கும் எவ்வளவோ இருந்து கொண்டே இருக்கின்றன. பழகிப் பேசிய காலங்கள் அடுக்கப்படாத காட்சிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. கம்மங்கூழும், கேப்பைக்களியும் கிடைத்த சிறுபிராயத்தில் அரிசிச் சோற்றுக்கு ஆசைப்பட்ட காலத்திலிருந்து, தன் மகனை டாக்டராகப் பார்த்து பூரித்த காலம் வரை எவ்வளவோ எவ்வளவோ சொல்லியிருக்கிறார். எதையும் யாரிடமும் எதிர்பார்க்காத மனிதராகவே கடைசிவரை மிடுக்காக வாழ்ந்திருக்கிறார். சாத்தூர் வீதிகளில் கம்பீரமாக நடந்து திரிந்த அந்த மனிதர் தனது கடைசி நாட்களில் புற்றுநோயால் அவதிப்பட்டு வீட்டிலேயே அடைந்து போனது மிகப்பெரிய சோகம். கொடுக்கப்பட்ட வைத்தியம் முழுவதுமாய் எதிர்ப்பு சக்தியை உறிஞ்சிவிட, யாரும் போய்ப் பார்ப்பதே அவருக்கு ஆபத்தானதாய் மாறிவிடும் என்றாகிப் போனச் சூழலில், இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே போய்ப் பார்க்க முடிந்தது. கடைசியாய் தமிழ்ச்செல்வன், லஷ்மிகாந்தன், காமராஜ் ஆகிய தோழர்களோடு சென்றிருந்தபோது மெலிந்த தேகத்தோடு இருந்தவரிடம் நம்பிக்கை பூத்துக் குலுங்கியதை தரிசிக்க முடிந்தது. அந்த நேரத்திலும் எழுத்தாளர் லட்சுமணப்பெருமாளின் கதையைப் படித்து ரசித்ததைச் சொன்னார். எல்லோரும் மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு சந்தோஷமடைந்தார். ஜீவாவின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டார். அடுத்த சில நாட்களில் எல்லாம் இரக்கமற்று வெறுமையில் புதைந்து போனது.
ஆசிரியர் பணி, அதில் ஓய்வு பெற்ற பிறகு அருமை மகன் திருமணம் முடிந்து முழுமையாக எழுதுவதற்கு உட்கார்ந்த நேரம் தனுஷ்கோடி ராமசாமி என்னும் எழுத்தாளர் மறைந்து விட்டார். எழுத அவரிடம் இன்னும் நிறைய இருந்தன. வாழ்க்கையே ஒரு புதையலாக அவரிடம் இருந்தது. எல்லாம் சட்டென தொலைந்து போனது போல சோகம் அழுத்துகிறது. உண்மையை நம்ப மறுத்து, திடுமென 'என்ன மனுஷா..." என்று குரல் எழுப்பியவாறு வீட்டின் முன் வந்து நிற்க மாட்டாரா எனத் தோன்றுகிறது. சந்தோஷப்படும்படி எதாவது நடந்தால், 'இதப் பார்ப்பதற்கு அவர் இல்லையே' என்று ஏங்க வைக்கிறது. அழுத்தமாக பற்றும் முடிகள் அடர்ந்த தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் கைகளின் ஸ்பரிசத்தை சொரசொரப்பாய் உணர முடிகிறது. அவர் எழுதாத கதைகள் குறித்து சிந்திக்க வைக்கிறது.
*
சினிமா பீரங்கிகளும், பிளாக்கர் குண்டூசிகளும்!
”அவன் பீரங்கிகளோடு வர்றான். நம்ம கையில குண்டூசி வைத்திருக்கிறோம். இதை வைத்து அவனை எப்படி எதிர்க்க முடியும்” என்று நண்பர் ஒருவர் சினிமா குறித்து பேசிக்கொண்டு இருக்கும்போது ஒருதடவை ரொம்பவே வருத்தப்பட்டுச் சொன்னார். நம்மால் பேசத்தான் முடியும், அவர்கள் கையில் அந்த ஆகப்பெரும் மீடியா இருக்கிறது என்ற விரக்தியில் வந்த வார்த்தைகள் அவை. இன்று அந்த குண்டூசி பீரங்கியை மிரட்டிய கதை ஒன்று நடந்திருக்கிறது! முதலில் இந்தச் செய்தியைப் படியுங்கள். அப்புறமாக நாம் பேசலாம்.
பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும்?
அநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...
சமீபத்தில் வந்த சில படங்கள் குறித்து பிளாக்குகளில் எழுதப்பட்ட விமர்சனங்கள் தமிழ்த்திரையுலகத்தை கதிகலக்கியிருப்பதாக tamilcinema.com என்னும் இணையதளம் ரொம்பவும் வருத்தப்பட்டு தலையங்கத்தில் எழுதியிருப்பதுதான் இது. நமது பதிவர் அத்திரி அவர்கள் அதனை அப்படியே தனது பதிவில் எடுத்துப் போட்டு, ‘கொஞ்சம் பாத்து எழுதுங்க மக்களே” என்று பொத்தாம் பொதுவாய் ஒரு வரியில் சொல்லியிருக்கிறார்.
இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து சந்தோஷமாகவும், நமது பிளாக்கர்களைப் பார்க்க பெருமையாகவும் இருக்கிறது.அழுகிப்போன, குப்பையான படங்களைத் தந்துவிட்டு, ’டாப் டென்’னில் தொடர்ந்து முதலிடங்களை வைத்துக்கொள்கிற இவர்களது ஜம்பமும் அழுகுணித்தனங்களும் பிளாக்கர்களிடம் பலிக்கவில்லை என்பது கொண்டாட்டமாக இருக்கிறது.
இந்த இணையதளச் செய்தி விவரித்திருக்கிற படத்திற்கு நம் பதிவர்கள்(பரிசல், கேபிள்சங்கர் உட்பட இன்னும் பலர்) எழுதிய விமர்சனங்கள் பலவற்றை நானும் படித்திருந்தேன். சீரியஸாக எழுதியிருக்காவிட்டாலும் (அப்படி எழுத கந்தல்சாமியில் என்னதான் இருக்கிறது?) அதிகபட்சம் அந்தப் படத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தே இருந்தார்கள்.
கதையும் இல்லாமல் புதுமையும் இல்லாமல் யார் உதிரம் சிந்தச் சொன்னார்கள். அவர்களையெல்லாம் படைப்பாளி என்று எவன் சொன்னவன்? கோடி கோடியாய் கொட்டி அவர்கள் என்ன, தியேட்டர்களில் சமூக சேவையா நிகழ்த்துகிறார்கள். வாழ்க்கைக்கும், ரசனைக்கும் சம்பந்தமில்லாத இந்த பிரம்மாண்ட புண்ணாக்குகளை எவனய்யா வந்து கேட்டான்? ஆமாம் ஐயா! நாங்கள் மனிதாபிமானத்தோடு இருப்பதால்தான் இந்தத் தயாரிப்பாளர்களை பீதிக்குள்ளாக்குகிறோம். இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?
பல படங்களுக்கு நமது பிளாக்கர்கள் தரமான விமர்சனங்களைத்தான் எழுதியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவை பரவாயில்லாமல்தான் இருக்கும். அவையெல்லாம் அவர்கள் கண்களில் படாது போல. எதுவும் பிரம்மாண்டமாய் இருந்தால்தான் படும் போல.
அவர்கள் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள் பிளாக்கர்களே! இந்த பிரம்மாண்டங்கள்தான் அவ்வப்போது வந்து தமிழ்ச்சினிமாவை மூழ்கடித்து விடும் அல்லது கடத்திக்கொண்டு போய் விடும்.
எண்பதுகளில் ஒரு காலம் வந்தது. ஒரு வகையான மேற்கத்திய கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருந்த, வெறும் சாகசங்கள் நிறைந்த நாயகத்தன்மைக்கு உதாரணமான எம்.ஜி.ஆரின் பிடியிலிருந்த தமிழ்ச்சினிமா, தன்னை விடுவித்துக்கொண்ட காலம் அது. டைரக்டர் மகேந்திரன் இருந்தார். பாலுமகேந்திரா நுழைந்தார். ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று கரம் கூப்பாமல் மண்வாசனையோடு பாரதிராஜா காலடி எடுத்து வைத்தார்.. ருத்திரைய்யா எட்டிப் பார்த்தார். துரை, பாரதி வாசு போன்றவர்களிடம் தாகம் இருந்தது. இவர்களோடு இளையராஜா பயணம் செய்தார். 'செந்தூரப் பூவே' அமைதி கொண்ட ஒரு சோகமாய் நம்மீது படர்ந்து கொண்டிருக்கிறது. 'இந்து டீச்சர்' சிரித்தபடி கடந்தகால தெருக்களில் நடந்து போனாள். ஷேவிங்கிரீம் அப்பிய முகத்தோடு காளியின் ரோஷம் முன்வந்து நின்றது. வாழ்க்கையும் அதன் வனப்பும் தமிழ்ச்சினிமாவை சிலிர்க்க வைத்த காலம் அது. புழுக்கத்தில் கிடந்த காமிராக்கள் புதிய காற்றை சுவாசித்தன. வெளியை தரிசனம் செய்தன. அதன் அழுத்தமான பதிவுகளாக அன்றைய சினிமாக்கள் இருந்தன. புதிய கருத்துக்களும், புதிய பார்வைகளும் முளைவிட ஆரம்பித்தன. பெண்களும், கிராமமும் திரைகளை கிழித்துவிட்டு அருகில் வந்தார்கள். தமிழ்ச்சினிமாவின் மறுமலர்ச்சிக்காலம் அது.
ஏ.வி.எம் பேனரில், பிரம்மாண்டமான படமாக ‘சகல கலா வல்லவன்’ சுனாமியாக வந்து எல்லாவற்றையும் நொறுக்கித்தள்ளியது. மேகங்கள் கலைந்து போயின. மீண்டும் தமிழ்ச்சினிமா அந்த மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டது. கொஞ்சம் மக்கள் தன்னை கவனிக்கிறார்கள் என்றதும் நமது கதாநாயகர்கள் தங்களை எம்.ஜி.ஆராக வரித்துக் கொண்ட பிம்பங்கள் பிலிம் ரோல்களில் அடைக்கப்பட்டன. மாற்றங்களுக்கும், புதுமைகளுக்கும் கொஞ்சங்கூட இடமில்லாமல் இருந்தது. ஒன்றிரண்டு நல்ல படங்கள் எப்போதாவது வந்து புழுக்கத்திலிருந்து மீட்டன. அவ்வளவுதான்.
‘சினிமா என்பது தொழில். சினிமா என்பது கோடிக்கணக்கில் படம்போட்டு எடுக்கக் கூடியது. சினிமா என்பது பொழுது போக்குச் சாதனம். மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுத்தால்தான் ஓடும்’. இப்படியான அபிப்பிராயங்களை வளையமாக அமைத்துக் கொண்டு சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. நமது மக்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'எண்டயர்லி ஒரு டிஃபரண்ட் மூவியாக இருக்கும்' என்று இவர்கள் சலிக்காமல் பிலிம் காட்டுவதற்கு மட்டும் ஒன்றும் குறைவில்லை.
சினிமா என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. மக்களின் ரசனைகளை உயர்த்துவது. இப்படி சிந்திப்பவர்கள் மிகச் சிலரே. கலைவடிவம் மட்டுமே அர்த்தங்களிலும், வடிவங்களிலும் புதுமையை நோக்கி நகர்த்தும். தொழில் என்பது போட்டியை உருவாக்கி தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் புதுமையை கொண்டு வரும்.
இங்கு 'புதுமுகங்கள்' நிறைய பேர் வரத்தான் செய்தார்கள். பலருக்கு
பிரம்மாண்டக் கனவுகளே இருந்தன. பிறக்கும் போதே பழையதாக இருப்பது எவ்வளவு இழிவானது. புதுமைகளைச் செய்பவர்களே புதியவர்கள்.
அப்படிப்பட்ட புதியவர்கள் சிலர் சமீப காலமாக தமிழ்த் திரையுலகத்தில் அடியெடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றே படுகிறது. அற்புதமான படங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஆரோக்கியமான படங்களும், கதைக்களங்கோடு புதிய முயற்சிகளும் தென்படுகின்றன. தரமான விமர்சனங்களும், புதுமைகளுக்கு ஆராதனையும் நாம் செய்வோம். அதுவே நல்ல சினிமாவை நோக்கி காலத்தை மெல்ல மெல்ல நகர்த்தும். பிளாக்கர்களால் அப்படியொரு மகத்தான காரியம் ஆற்ற முடியும் என்பதே அந்த இணையதளம் சொல்லியிருக்கிற செய்தி.
இனியொரு ‘சகல கலா வல்லவன்’ வந்து இந்த புதியவர்களிடமிருந்து சினிமாவை அபகரித்துச் செல்வதை அனுமதிக்காமல் உங்கள் குண்டூசிகளை கூர்மைப்படுத்துங்கள்.
*
சென்னை - சில குறிப்புகள்
அப்போதுதான் விடிந்திருக்கும் காலையில் ஆம்னி பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடி வழியே ஒவ்வொரு முறை சென்னைக்குள் நுழையும்போதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மெல்ல எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறிக்கிற ஊர் இல்லை இது. எண்ணெய் தேய்க்காமல், பவுடர் பூசி அந்த நேரத்திலும் ஓட்டமும் நடையுமாக பல பெண்களைப் பார்க்க முடியும். மணிக்கட்டை பார்த்தபடி பஸ் ஸ்டாண்டில் தவிப்பவர்களை, ஷூ, ஷாக்ஸ் போட்ட குழந்தைகளைப் பார்க்க முடியும். அருகாமையில் செல்லும் காருக்குள் உற்றுப் பார்த்தால் கோர்ட் சூட் போட்டு பேப்பர் படித்துக்கொண்டு இருக்கும் மனிதர் தெரிவார். பிரமை பிடித்தபடியும், வெறிபிடித்தபடியும் மனிதர்கள் உட்கார்ந்திருக்கிற ஒரு இராட்சச சக்கரம் எப்போதுமே சுற்றிக்கொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது. துருப்பிடித்து நிற்கும் மரங்கள் மனதில் ஒட்டுவதேயில்லை. பறவைகளின் சத்தங்களை விழுங்கிவிட்டு வாகன இரைச்சல்களாய் சதாநேரமும் ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது. சினிமா போஸ்டர்களுக்குள்ளும், விளம்பர பேனர்களுக்குள்ளும் தன்னைச் சுருட்டி வைத்துக் கொண்டு நிற்கிற ஒரு பைத்தியக்கார உலகம் என்றே தெரியும். இதெல்லாமுமே ஒரு இந்திய நகரத்தின் பொதுவான, அதுவும் வெளித்தோற்றமாகவே இருக்கின்றன. சென்னையைப் பற்றிய சித்திரம் அவரவர் அனுபவங்களிலிருந்தே தீட்டப்படுகிறது.
பிறந்தது இங்கேதான் என்பது எதோ காகிதத்தில் எழுதிவைத்த குறிப்பாகத்தான் இருக்கிறது. அது குறித்து சிலிர்ப்பூட்டும் எந்த உணர்வும் இல்லை. திருவல்லிக்கேணியில் மணி ப்ரொப்ரைட்டரி ஸ்கூலில் சேர்ந்த முதல் நாள் வகுப்பறை இருட்டுக்குள் இருந்ததாய் தெரிகிறது. கிருஷ்ணாம்பேட்டையில் கண்ணகிச்சிலைக்கு நேர் உள்ளே வரும் தெருவில் இருந்த பெரிய இரண்டடுக்குக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் கடல் ஞாபகத்தில் இருக்கிறது. கபாலீசுவரர் கோவிலில், அம்மாவையும், அண்ணன்களையும் விட்டு, தொலைந்து போனவனாய் கூட்டத்தில் தேடி அழுதுகொண்டே அலைந்ததை இப்போது நினைத்தாலும் திக்கென்று இருக்கிறது. இரும்புக்கடையும், பொட்டுக்கடையும் கோடம்பாகத்துக்கு நகர்ந்திட, சூளைமேட்டில் பஜனைகோவில் தெருவில் இருந்த வீட்டின் நடு அறையில் அப்பா மஞ்சள் காமாலையில் படுத்துக் கிடந்தது லேசாய் மனதில் இருக்கிறது. அரசுப்பள்ளியில், பக்கத்திலிருந்தவன் என் வலது கையை பிளேடால் வெட்டிவிட முதன்முதலாய்ப் பார்த்த என் ரத்தம் உறைந்து போயிருக்கிறது. இன்றைக்கும் எனக்கான அடையாளங்களில் ஒன்றாய் அந்த வெட்டுக்காயம் ரெக்கார்டுகளில் பதியப்பட்டு கூடவே வருகிறது. ‘நான் தன்னந்தனி காட்டு ராஜா, என் தோட்டத்தில் எத்தனை ரோஜா’என்னும் அந்தப் பாடல் வழியே சென்று குழந்தைகளோடு காரில் வரும் சிவாஜி கணேசனை முதன் முதலாய் ராம் தியேட்டரில் பார்க்க முடிகிறது. ஒருநாள் ஊர்நோக்கி எல்லோரும் ரயிலில் போய்க்கொண்டு இருந்தோம். வளர்ந்து வாழ்ந்த இடங்களை விட்டு ஒரேயடியாக அப்பா திரும்பிக்கொண்டு இருந்தார்கள்.“உனக்கு இந்த ஊர் லாயக்குப்படாது. ஓடிப் போய்விடு” என்று அப்பாவை சென்னை விரட்டி விட்டதை நான்காம் வகுப்பு படித்து முடித்திருந்த நான் புரிந்திருக்கவில்லை.
ஊர்தான் என்னையும் என் உலகத்தையும் எனக்கு அடையாளம் காட்டியது. “நீ ஜோதியின் மகனா”, “தங்கவேல் தாத்தாவின் பேரனா” என்ற விசாரிப்புகளும், “மாது” என வாஞ்சையோடு தூக்கிவைத்துக் கொண்டவர்களுமாய் நிறைந்திருந்தது. வயலுக்கும், குத்தகை எடுத்திருந்த ரைஸ்மில்லுக்குமாய் அப்பா ஓடிக்கொண்டு இருந்தார்கள். ஆச்சியின் மகாபாரதக் கதைகளின் ஊடே சென்னையின் கடந்த கால வாழ்வும் புரிய ஆரம்பித்தது. அரக்குமாளிகையில் இருந்து தப்பிவந்த ஐந்து பேரும் நாங்கள்தான் என்றே பட்டது. வாய்க்கால்களும், குளங்களும், மனிதர்களும், கதைகளுமாய் நிரம்பிய உலகத்தில் நான் முழுவதுமாய் சுவாசித்தேன். கூடப் படித்தவர்கள் திடுமென காணமல் போய், அந்த வருட அம்மன்கோவில் கொடைக்கு சென்னையிலிருந்து திரும்பி வருவார்கள். அப்படி வந்த சேகர்தான் முதன்முதலாய் ஊருக்குள் பெல்ஸை அறிமுகப்படுத்தியவன். எதாவது கடையில் வேலைபார்க்கும் அவர்கள் சென்னையைப்பற்றி அளந்துவிடுபவை ஒரு மாய உலகத்திற்கு ஊரையே இட்டுச்செல்லும். “ஆமாம், பெரிய ஊர்..” என அம்மா முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறேன். அப்பாவைக் கல்யாணம் செய்துகொண்டு முதன்முதலாய் சென்னைக்குச் செல்லும்போது அம்மாவுக்கும் நிறைய கனவுகள் இருந்திருக்க வேண்டும்.
கல்லூரியின் இரண்டாமாண்டு படிக்கும்போதுதான் திரும்ப சென்னைக்கு வந்தேன். தினத்தந்தியில் அப்ரைண்டிசாக இரண்டு மாத காலம் பணிபுரிய கோடை விடுமுறையில் கல்லூரியிலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள். என் அண்ணனோடு படித்து, சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருந்தவர் நுங்கம்பாக்கத்தில் தண்டவாளங்களின் அருகே ஒரு வீட்டில் அவரது நண்பர்களோடு தங்கியிருந்தார். அங்கேதான் நானும் அடைக்கலம் புகுந்தேன். சாவகாசமாய் நகரும் புகைவண்டியில் தினந்தோறும் திருச்செந்தூருக்கு நண்பர்களோடு படிக்கச் சென்று வந்துகொண்டு இருந்த எனக்கு எலக்டிரிக் டிரெய்னின் வேகமும், தடதடக்கும் சத்தமும் மிரட்சியைத் தந்தது. அந்தக் கூட்ட நெரிசலில் நுங்கம்பாக்கத்திலிருந்து எக்மோருக்கு செல்வதற்குள் கசங்கித்தான் போனமாதிரி இருக்கும். கண்ணிழந்த ஒருவன் எப்போதும் அங்கே பாடிக்கொண்டிருந்தான். எல்லா இடங்களிலும் நிரோத் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருந்தன். பிளாட்பாரம் தாண்டி வெளிச்செல்ல படியேறி மேல்நின்று பார்க்கும்போது கூட்டம் பெரும் பைத்தியம் பிடித்ததாய் கீழே அலைபாய்ந்து கொண்டு இருந்தது. சென்னையின் அழிக்கமுடியாத சித்திரங்களில் அதுவும் ஒன்று. லிபர்ட்டி தியேட்டரில் நான்கு தடவை பார்த்த ஒருதலை ராகம் படம் ஊரின் நினைவுகளையே மீட்டிக்கொண்டு இருந்தது. இரண்டுமாதம் கழித்து ஒரு காலையில் புதுக்குளத்தில் முங்கி குளித்து எழுந்த போது அப்பாடா என்று இருந்தது.
அண்ணன்கள், தம்பி எல்லோரும் வேலைக்குச் சென்றுவிட படித்து முடித்து ஊரில் சும்மா இருந்த என்னை சென்னையில் மாமா வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். அண்ணாநகரில் அவர் இருந்தார். யுனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் டெவலப்மெண்ட் ஆபிசராகிவிடலாம் என்று ஏஜண்ட்டாக சேர்த்துவிட்டார். தனியாகவே சென்னையில் அலைந்தேன். கார்கள் இருக்கும் வீடுகளின் அழைப்புமணியடித்துக் காத்திருக்கும் அந்த நிமிடங்கள் பதற்றமானவை. திறந்ததும் அவர்களிடமிருந்து பாயும் பார்வைகளில் தலைதெறிக்க ஒடிவிடத் தோன்றும். எனக்கான மனிதர்கள் யாரும் இல்லையெனத் தோன்றியது. நானும் தோற்றுக்கொண்டு இருந்தேன். என்னை விட்டு விடுங்கள் என ஊருக்கு திரும்பிவிடத்தான் எப்போதும் தோன்றும். அண்ணாநகர் டவரிலிருந்து சென்னயைப் பார்க்க பயமாய் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஹிந்து நாளிதழில் வரும் classified பக்கங்களாய்த்தான் கட்டிடங்கள் அடைந்து கிடந்தன. வீடுகளின் வாசல்களில் ஒரு வயதான அம்மாவோ அப்பாவோ தெருவைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். அப்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்திருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் பெரம்பூர் மாதவராம் ஹைரோடு சென்று, அங்கு ஸ்டேஷனரி கடை வைத்திருந்த பால்ய சினேகிதன் அழகுவேலைப் பார்ப்பேன். ரெயில்வே ஸ்டேஷன் சென்று பேசிக்கொண்டு இருப்போம். சென்னையைப் பற்றி நிறைய எனக்குச் சொன்னவன் அவன்தான்.
ஏழெட்டு மாதங்களில் அண்ணனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து, திருமணமும் ஆனது. கே.கே.நகரில் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தான். நானும் அவனோடு போய் ஒன்றரை வருடம் போல இருந்தேன். சென்னை என்னும் நகரத்தின் அகவாழ்வு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். அம்முவையும் அங்குதான் பார்த்தேன். வாழ்க்கை மீண்டும் சுவராசியமானது. வீட்டுக்காரர் தெலுங்கு. பக்கத்து வீடு மலையாளம். அந்தத் தெருவின் ஒருமுனையில் டைரக்டர் மணிவண்ணன் வீடு. இன்னொரு முனையில் குடிசை மாற்றுவாரியக் கட்டிடங்கள். தினமும் கன்னிமரா லைப்ரரிக்குச் செல்ல ஆரம்பித்தேன். எல்.ஐ.சி கட்டிடத்தை காண்பித்து, இதுதான் சென்னை என்று சினிமா அடையாளம் காட்டிக்கொண்டு இருக்க, புதுமைப்பித்தன் வீடுகளுக்கு வெளியே டிராம் வண்டிகள் ஓடிய சாலைகளுக்குள் சிக்கிக்கொண்டு இருந்த சென்னையின் கதைகளைச் சொன்னார். வீடுகளுக்குள்ளும், சேரிகளுக்குள்ளும் இருந்த சென்னையை ஜெயகாந்தன் காண்பித்தார். சென்னையின் மனிதர்கள் மெல்ல மெல்ல புலப்படவும் பரிச்சயமாகவும் ஆரம்பித்தார்கள். பயம் மட்டும் விலகாமலேயே இருந்தது. ஊரில் எப்போதாவது யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து சிகரெட் குடித்தவன் ‘யார் என்னை இங்கே கேட்க முடியும்’ என்பதாய் காமராஜ் சாலையில் சிகரெட்டைக் குடித்து நான் பாட்டுக்கு புகையை ஊதிக்கொண்டு தைரியமானவனாய் காட்டிக்கொண்டேன். சென்னையின் எல்லாத் தியேட்டர்களிலும் படம் பார்த்துக் கொண்டு அலைந்தேன்.
வேலை கிடைத்து சாத்தூருக்கு வந்தேன். அண்ணன் பாண்டிச்சேரிக்குச் சென்று விட்டான். சாத்தூரில் பார்த்துப் பழக ஆரம்பித்த நண்பர்கள் எடுத்த எடுப்பிலேயே “நீங்கள் சென்னையா” என்று கேட்டது ஆச்சரியமாயிருந்தது. உடைகளையும், பேசுவதையும், பழக்க வழக்கங்களையும் பார்த்தால் தெரிகிறது என்பார்கள். இது ஒரு வினோதம்தான். இரண்டு, இரண்டரை வருடங்களுக்குள் சென்னையால் ஒரு மனிதனுக்குள் ஊடுருவிக்கொள்ள முடிகிறது. மனிதர்கள் அந்த அடையாளங்களுக்கு தனிப்பார்வையும், மரியாதையும் கொடுப்பதும் புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.
சென்னை என்ற சொல்லே அப்போது பிடித்துப் போனதாயிருந்தது. என் தனிமையையும், தூக்கத்தையும் அது கொன்று கொண்டு இருந்தது. அம்முவைப் பார்க்க வேண்டுமென்றால், திருவொற்றியூரில் இருந்த நண்பனின் வீட்டில் போய்த் தங்க வேண்டியிருந்தது. தொழிற்சங்க வேலைகளாக தோழர்களோடு செல்லும்போதெல்லாம் காவேரி லாட்ஜிலும், பாரிஸ் கார்னரில் இருந்த தொழிற்சங்க அலுவலகங்களிலும் தங்கிக்கொள்வோம். வருசத்துக்கு பத்துப் பனிரெண்டு தடவையாவது லேபர் கமிஷனரையும், வக்கீலையும், அப்படியே அம்முவையும் பார்த்து வந்தேன். சென்னையில் காதலர்களுக்கான இடம் ஏராளமாய் இருந்தாலும் காதலுக்கான் இடம் சொற்பமாகவே இருக்கிறது. மெரீனா கடற்கரையெல்லாம் ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு திருமணம் நடத்திவைக்கிற சங்கதிதான். உயிருக்குள் இறங்கும் கடல் அலைகளின் இரைச்சலையும் அங்கு விழுங்கிவிடுகிறார்கள். குழந்தைகளோடு சென்று விளையாடலாம். வள்ளுவர் கோட்டம், அடையாறு பார்க், எம்ரால்டு தியேட்டர் அல்லது ஒரு ஓட்டலின் மேஜை என்று காதலர்கள் நிரம்பி வழிந்தாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவே தனிமையையும், காதலர்களுக்கான ஏகாந்தத்தையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை சென்னைக்கு போய் வந்து கொண்டே இருக்கிறேன். திருமணம், குடும்பம், தொழிற்சங்கப்பணிகளோடு இருபது வருடங்களாக அவ்வப்போது சென்னையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் இப்போதும் அம்மு உற்சாகமாகி விடுகிறாள். திருச்செந்தூர் அருகில் உள்ள தேரிக்காடு சார்ந்த என் சொந்த ஊர் செங்குழிக்குச் செல்ல குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. சென்னை என்றால் குதூகலம் கொள்கிறார்கள். “ஐ.பி.எல் மேட்ச்சில் சென்னை இருக்கிறது, செங்குழி இருக்கிறதா” என்று என் எட்டு வயதுப் பையன் கேட்கிறான்.
அலுவல் வேலையாக காலையில் சென்னை சென்று மாலையில் மதுரைக்கு வீடு திரும்பும் கனவான் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.. எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாமல், மூட்டை முடிச்சுக்களோடு மூச்சு விட மட்டுமே முடிந்த நெரிசலில் டிரெய்னில் முன்பதிவு செய்யப்படாத கம்பார்ட்மெண்ட்டில் மக்கள் சென்னை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். சென்னை எல்லாருக்குமான இடமாக இருக்கிறது. ஹோலிப் பண்டிகையும் கொண்டாடுகிறார்கள். பொங்கலையும் கொண்டாடுகிறார்கள். தீவுகளால் ஆன தனித்தனி பிரதேசமாகவும் இருக்கிறது. ஒரே உலகமாகவும் இருக்கிறது. புரசைவாக்கம் வேறு. திருவல்லிக்கேணி வேறு. அம்பத்தூர் வேறு. திருவொற்றியூர் வேறு. அண்ணாநகர் வேறு. குரோம்பேட்டை வேறு. பர்மா பஜாரும், பாண்டி பஜாரும், ரெங்கநாதன் வீதியும், டாஸ்மார்க் கடைகளும், தேவி தியேட்டர்களும் பொதுவானவை.
காலமும், விதிகளும் இங்கு வேகமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. ஒருகாலத்தில் பேச்சலர்ஸுக்கு வீடு கிடையாது என்று சொல்லப்பட்ட இடத்தில் இப்போது பேச்சலர்ஸுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எவ்வளவு வேகமாக மாற்றிக் கொள்ளும் போதும், இந்திய நகரங்கள் தங்கள் தொன்மங்களையும், பழைய காலங்களையும் எங்காவது தேக்கி அடைகாத்துக் கொள்கின்றன. சட்டென்று ஒரு தருணத்தில் அவை பிடிபட்டு, வேர்களின் வாசனையோடு வெளிப்படும். சென்னைக்கு அந்த பிடிவாதம் இல்லையென்று தோன்றுகிறது. மிக எளிதாக உதறிவிட்டு, தன்னை உருமாற்றிக் கொள்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் மூர்மார்க்கட்டே இருக்கும் இடம் தெரியாமல் போனதே!
தோற்பதற்கும், ஜெயிப்பதற்குமான ஒரு பெரும் திடல் சென்னை. சதா நேரமும் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது. ஏராளமான மனிதர்கள் மூச்சிறைத்தபடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அருமை எழுத்தாளர் புதுமைப்பித்தன் தோற்றுப்போய் நின்றது இங்குதான். ஒரு ஆர்மேனியப் பெட்டியுடன் வந்த இளையராஜாவும், வீட்டை விட்டு ஓடி வந்த ஜெயகாந்தனும் ஜெயித்துக் காட்டியதும் இங்குதான். எங்கள் அப்பா தோற்றுப்போனது இங்குதான். இந்தக் கதைகள் மகாபாரதம் போன்றவை. எங்கோ இருக்கும் தமிழகத்தின் சின்னஞ்சிறு கிராமத்திலும், ஒரு குடிசையிலும் கூட சென்னை பற்றிய எதாவது குறிப்புகள் இருக்கின்றன. விளையாடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அவை தெரியாது.
அதோ, போத்திஸ் ஜவுளிக்கடையின் முன்புறம் குளிர்பதனக் காற்றும் வாசமும் வீச, பட்டுப்புடவை உடுத்துக்கொண்டு ஒரு பெண் வருகிறவர்களையெல்லாம் பார்த்து சிரித்து வரவேற்றுக் கொண்டு இருக்கிறாள். அவளும் இந்த மாபெரும் போட்டியில் ஒடிக்கொண்டு இருப்பவள்தான். சென்னையில் இப்போது ஷோ கேஸ் பொம்மைகள் உயிர் பெற்றிருக்கின்றன. அவர்களின் கதையை எந்த எழுத்தாளன் எழுதப்போகிறான்?
*
வீடு தேடி வரும் பட இயக்கம்: ஞாநி அவர்களின் அழைப்பு!
எழுத்தாளர் ஞாநி அவர்களின் இந்த முயற்சி புதுமையானது மட்டுமல்ல, தேவையானதாகவும் இருக்கிறது. மக்களின் ரசனையை மேம்படுத்தும் நோக்கில் துவங்கப்படும் இது போன்ற காரியங்களுக்கு நல்ல உள்ளங்கள் துணையாகவும், தூண்டுதலாகவும் இருக்க வேண்டும்.
தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒரு அவலம்தான். அந்தக் கவலையோடு புறப்பட்டு இருக்கும் இந்த இயக்கம் வலுப்பெறுவது காலத்தின் அவசியம்.
இந்த வலைப்பக்கத்தில் பதிவு ஒன்றுக்கு அவர் பின்னூட்டமாக தெரிவித்து இருந்ததை இங்கே அனைவருக்குமான அவரது அழைப்பாக பதிவிடுகிறேன்.
ஊர் கூடித் தேர் இழுப்போம்!
நன்றி.
ஞாநி அவர்களின் அழைப்பு
| நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
|
*
சென்னை-2000
தலைக்கு மேலே சத்தமில்லாமல்
இருட்டில் மிதந்து கொண்டிருக்கிற
ஊமை மேகங்கள்
விலகி வழி கொடுக்கிறது.
உறக்கம் அறியாத தன்னுடைய
கோடானு கோடி அலைகளால்
பேரிசை எழுப்பி
வரவேற்புச் சொல்லுகிறது வங்கக் கடல்.
பெண்கள் மஞ்சள் பூசி நீராடுகிற
வெள்ளிக்கிழமையின்
இனிய காலைப் பொழுதில்
குளிர்ந்த காற்றை சுவாசித்துக் கொண்டு
நெஞ்சை நிமிர்த்தி
வீரநடை போட்டு வருகிறது உதயசூரியன்.
| ‘நா ட் டு ப் பூ க் க ள்’ சு ய ம் பு லி ங் க ம் |
வலமும் இடமும் வணிக வளாகங்கள்
செல்வச் செழிப்போடு நிமிர்ந்து நிற்க
கொழுத்த உடம்பும் கறுத்த மேனியுமாக
நெடுஞ்சாண் கிடையாகப்
படுத்துக் கிடக்கிறது அண்ணா சாலை.
நல்ல தண்ணீரை மழை வெள்ளமாக
ஆனந்தமாய் அள்ளிக் கொண்டு வந்த
அடையாறும் கூவமும்
தன்னை சாக்கடையால் நிரப்பிக் கொண்டு
புழுக்களையும் நாத்தத்தையும்
பிரசவித்துக் கொண்டிருக்கிறது.
சவரம் பண்ணாத முகம்
டீக்குடித்த உதடுகள்
பொருத்தமில்லாத
காக்கிச் சட்டை கைலி
டிரைவர் இருக்கையில் இருந்து கொண்டு
பேருந்தின் இரும்புக் கைகளைப் பற்றிக் கொண்டு
நெஞ்சில் ஏறி ஒரு மிதி
பஸ் துள்ளிக் கொண்டு கிளம்புகிறது.
தண்டவாளங்களுக்கு நேர் மேலே
தொங்குகிற மின் கம்பியை
உரசிக் கொண்டு
மக்களை துரத்திப் பிடித்து
அள்ளி அடைத்துக் கொண்டு
பயணம் செய்கிறது ரயில்.
மேம்பாலத்தின் படிக்கட்டுகளை
மிதித்துத் தள்ளிப்
பாய்ச்சலில் வருகிறது மக்கள் கூட்டம்
அவர்களை முன்னேற விடாமல்
எதிர்த்து மறிக்கிறது வாகனங்களின் உறுமல்
கண்கள் பக்கவாட்டில் திரும்புகிறது
என்ன அதிசயம்
பாதுகாப்பான மச்சு வீடு மாதிரி
ரோட்டுக்கு அடியில்
எழில் கொஞ்சும் சுரங்கப்பாதை.
நகரத்தின்
உயிர்த் துடிப்பான ஒரு வீதி
ரங்கநாதன் தெரு
ஆயிரம் ஆயிரம் பட்டணத்துக் கண்கள்
ஆர்வம் பொங்க நடந்து வருகின்றன
வியாபாரம் அங்கே விளைகிறது.
நெருக்கடிகளின் வலியை
அந்தத் தகப்பனால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை
தன் நோஞ்சான் குழந்தைகளை
முரட்டுத்தனமாக
அடித்து விரட்டுகிறது அது
புறநகர் வயல்களும் ஏரிகளும்
புறம்போக்கு நிலங்களும்
தன் மடியை விரித்து
ஏந்திக் கொள்கின்றன அவர்களை.
பட்டணம் அசுரத்தனமாக உப்புகிறது.
நகரம்
நாகரிகமான
தன் செல்லக் குழந்தைகளுக்காகத்
தன் வயிற்றில் சாக்கடைகளையும்
செப்டிக் டேங்குகளையும்
நிரப்பிக் கொள்கிறது
தன் கர்ப்பப் பையில்
கரண்ட் வயர்களையும்
டெலிபோன் வயர்களையும்
தண்ணீர்க் குழாய்களையும்
சுமந்து
தாய்மைப் பரிவோடு
காப்பாற்றுகிறது.
(நாட்டுப் பூக்கள் சுயம்புலிங்கம் அவர்களின் கவிதை இது. சென்னையைப் பற்றிய எனது அனுபவங்கள் அடுத்த பதிவில். )
*
ஈரம் கசியும் கடிதங்கள்
இராணுவத்தின் மீது மதிப்பும், மரியாதையும் ஒரு போதும் வந்ததில்லை. தங்கள் உயிரைத் துச்சமென மதிக்கும் அந்த வீரர்கள், எந்த உயிரையும் மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. மிருகத்தனமும், மூர்க்கத்தனமும் இராணுவத்தின் இயல்பாக இருக்கின்றன. பொதுவான இந்த மதிப்பீடுகளும், பார்வைகளும் தனிப்பட்ட இராணுவ வீரர்களின் துயரங்களை அறியும்போது தணியத்தான் செய்கின்றன.
எங்கேயோ ஒரு நிலத்திலிருந்து, யுத்த களத்திலிருந்து, இந்த வீரர்கள், தங்கள் குடும்பம், வீடு, ஊரை நினைத்து ஏங்கிடும் தவிப்புகள், தனிமையின் வதையாய் இருக்கின்றன. இன்னொரு முறை பிரியமானவர்களின் முகங்களைப் பார்க்கத் துடிக்கும் அந்த மனிதர்களின் நினைவுகளில் நாட்கள் எல்லாம் புதைந்து கிடக்கின்றன. பண்டைக்கால இலக்கியங்களிலிருந்து இன்று வரை இந்த வீரர்கள் தங்கள் காதலிக்கும், மனைவிக்கும், குழந்தைகளுக்கும், தாய்க்கும் கடிதங்களில் அனுப்பிய முத்தங்களின் ஈரம் அந்த எழுத்துக்களிலிருந்து கசிந்து கொண்டே இருக்கின்றது.
சமீபத்தில் இணையத்தில் இதுபோன்ற பல கடிதங்களை வாசித்துக்கொண்டு இருந்தேன். ஒரு கடிதம் என்னை நிலைகுலைய வைத்தது. சென்ற வளைகுடாப் போரில் 1991 மார்ச் 8ம் தேதி சௌதி அரேபியாவில் இருந்து அமெரிக்க சார்ஜெண்ட் டேன்வில்ச் தனது அம்மாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகள் இவை.
"..அந்த காரில் சடலமாய் ஒரு ஈராக்கியன் இருந்தான்.அகலத் திறந்திருந்த கண்கள் மௌனமான அலறலில் உறைந்திருந்தன.
நான் சுட்டு வீழ்த்திய அந்த மனிதனை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அதைச் செய்திருக்காவிட்டால் அவன் போர்க்கைதியாக பிடிபட்டிருப்பான். விடுதலை பெற்று தன் வீட்டிற்குச் செல்லும் நாளை எண்ணிக் கொண்டிருப்பான். என்னைப் போலவே..."
போர்க்களத்தில் இறந்துபோன ஒருவனும், அவனைக் கொன்ற ஒருவனும் ஒரு புள்ளியில் ஒன்றாகவே இருக்கின்ற அனாதி வெளி நிழலாடுகிறது. வெப்பம் மிகுந்த அந்த மணற்பிரதேசத்தின் ஒரு இரவின் தனிமையில் டேன்வில்ச்சிற்கு தன் வீட்டின் ஞாபகம் தாகமாய் தகிக்க வெளிப்பட்ட உணர்வில் ஒரு அடர்த்தியான சோகம் இருக்கிறது. அந்த ஈராக்கியனுக்கு தன்னைப் பொறுத்த வரையில் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டதாகவே தோன்றியிருக்கிறது.
படித்து முடித்த பிறகு ரொம்ப நேரத்துக்கு எதுவும் ஒடவில்லை. புஷ்ஷுக்கும், போர் வெறியர்களுக்கும் இந்தக் கடிதங்கள் நிச்சயமாய் பிடிக்காதுதான். நமக்கு யுத்தமும், இராணுவமும் மனித சமூகத்துக்கு எவ்வளவு பெரிய சாபம் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப எழுந்து கொண்டு இருக்கிறது.
*
ஒளிப்பூக்கள்
முந்தா நாள் மழை பெய்தது. நேற்றிரவில் தெரு விளக்கு பூத்துக் குலுங்கியது. இன்று காலை கோழிகள் சில, விளக்குக் கம்பத்தினடியில் தரை கீறி கீறிக் கொத்திக்கொண்டு இருந்தன. பூனையொன்று அவைகளை விரட்டி மண்ணை முகர்ந்து பார்த்து நாக்கை நீட்டியது.
அருகிலொரு மரத்தினடியில் சிந்திக்கிடந்த பன்னீர்ப் பூக்களோ, யாரும் சீந்துவாரில்லாமல் அப்படியே வட்டமாய்க் கிடந்தன.
*
பிள்ளை பெற்ற பெரியசாமி!
| இந்தக் கதை படிக்கும் போதெல்லாம் தாங்க முடியாமல் சிரிப்பு வரும். கூடவே வேதனையும் வரும். தெலுங்கு நாட்டுப்புறக் கதை இது. தமிழுக்கு அதை எளிமையாக மொழியாக்கம் செய்திருப்பவர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன். பாரதி புத்தகாலயம் இதனை குழந்தைகளுக்கான புத்தகமாக வெளியிட்டு இருக்கிறது. என்னைக் கேட்டால் இது முதலில் பெரியவர்களுக்கான இலக்கியம்தான். கதை உங்களிடம் நிறைய பேசும். |
பெரியசாமி என்பவர் ஊரில் ஒரு பெரிய மனிதர். வயது 45தான் ஆகிறது. உடல்வாகும், அவர் வேட்டி கட்டும் பாங்கும் மிரட்டலாக இருக்கும். காடுகரையும் நிறைய இருப்பதால் ஊரில் அவருக்கு தனி மரியாதை. அவருடைய பார்வை பட்டதும் ஊர்மக்கள் கையெடுத்துக் கும்பிட்டு விடுவார்கள். வீட்டிலும் அவர் பெரிய மனுஷத் தோரணையுடன்தான் இருப்பார்.
அவருக்கு வழ்க்கையில் ஒரு மிகப்பெரிய குறை, தனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லையே என்பதுதான். மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்தபோது அவர் ரெண்டு மாத காலம் மனைவியின் மூஞ்சியில் கூட விழிக்கவில்லை. பொம்பளைப் பிள்ளையைப் பெத்துத் தாராளே என்று அவள் மீது ஆத்திரம்.
என்றைக்காவது ஆண்டவன் கண்திறக்க மாட்டானா என்ற நம்பிக்கை நாலாவதாகவும் பெண்குழந்தையே பிறந்தபோது உடைந்துபோனது. கொஞ்சநாள் கோவில், குளம் என தாடி வைத்துக்கொண்டு திரிந்தார்.
சக்கம்பட்டி ஜோசியர் பேச்சை நம்பி இறங்கிய கடைசி முயற்சியும் ஐந்தாவது பெண்குழந்தை பிறந்ததும் வீணானது. ஆகவே நிரந்தரமாக மனைவியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். என்ன பொம்பள இவ, இப்படி ஒரு வரம் வாங்கிட்டு வந்துருக்கா என்று வெறுப்படைந்து போனார்.
கதை இப்படி இருக்கையில் ஒருநாள் அதிகாலையில் வயக்காட்டுக்குப் போனார். தூரத்தில் வரப்பின் மீது வித்தியாசமான ஒரு ஒளி தென்பட்டது. கிட்டப்போய்ப் பார்த்தார். அதிசயமான கல் ஒன்று ஊதா நிற ஒளியில் பளபளத்துக் கிடந்தது. ஒரு நிமிடம் பயந்தார். பிறகு குனிந்து அதைக் கையிலெடுத்துப் பார்த்தார். கண்கள் கூசின. அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக்கல் பேசத் துவங்கியது.
“மகனே! நான்தான் சூரியக்கடவுள். உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள். ஒரே ஒரு வரம் தருகிறேன். நீ கேட்டது அப்படியே உனக்குக் கிடைக்கும்”. பெரியசாமி ஆடிப்போனார். பயமும் பதட்டமுமாக கையில் கல்லுடன் நின்றுகொண்டிருந்தார். அடுத்த நிமிடம் சட்டென்று “எனக்கு ஆண் வாரிசே இல்லை. எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்” என்று கேட்டார்.
”தந்தேன். சீக்கிரம் உனக்கு ஆண்குழந்தை பிறக்கும்” என்று சொல்லிவிட்டு அந்தக்கல் மறைந்துவிட்டது.
நடந்ததெல்லாம் கனவா நிஜமா என்ற குழப்பம் ஒரு மாதம் வரை நீடித்தது. ஒரு மாதம் ஆகவும் அவருக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. மாத்திரைகளில் தலைசுற்று நிற்கவில்லை. எந்நேரமும் வாயில் எச்சில் ஊறியது. புளிச் புளிச் என்று கண்ட இடத்திலும் துப்பிக் கொண்டிருந்தார்.
ரெண்டு மாசமாகவும் அவருடைய வயிறு பெரிதாகத் துவங்கியது. நாடி பிடித்துப் பார்த்து உள்ளூர் வைத்தியர் அவர் ‘முழுகாமல்’ இருப்பதாக அறிவித்தார்.
“ஆண்டவா... இது என்ன சோதனை... எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றுதானே கேட்டேன். நீ எனக்கே கொடுத்து விட்டாயே” என்று புலம்பினார். பாதங்களில் வீக்கம் வந்து கஷ்டப்பட்டார். சாப்பிட்டதெல்லாம் ரெண்டு மாசத்துக்கு வாந்தியாகிக் கொண்டே இருந்தது.
நாளாக நாளாக வயிறு உப்பிக்கொண்டே வந்தது. ஊரெல்லாம் இதே பேச்சுத்தான். கூட்டம் கூட்டமாக பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.
சரி, இனி யோசிக்க ஒன்றுமில்லை. தடுப்பூசி, சத்தான சாப்பாடு என்று அவருடைய மனைவி அவரைப் பக்குவமாகப் பார்த்துக் கொண்டார்.
பாவம் பெரியசாமி பிள்ளைத்தாய்ச்சிக்காரர் என்று ஊரில் யார் வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் அவருக்கு ஒரு தட்டு நிறைய வந்துவிடும். அவரும் தன்னுடைய மகன் நல்லா வளரட்டும் என்று தீவனத்தில் குறை வைக்காமல் வெளுத்து வாங்கினார்.
பிரசவகாலம் நெருங்கியது. பெரியசாமிக்கு இடுப்பு வலி கண்டது. கொஞ்ச நேரத்தில் “குவா, குவா” சத்தம் கேட்டது. பெரியசாமிக்கு பாரம் குறைந்தது. பத்துமாதம் பட்ட அவஸ்தைகள் முடிவுக்கு வந்தது. எப்படியோ நல்லபடியாக தகப்பன் வேறு பிள்ளை வேறாகி விட்டோமே அது போதும் என்றிருந்தது.
ஆனால் என்ன கொடுமை. பிறந்தது பெண் குழந்தை. பெரியசாமி தலையணையில் முகம் புதைத்து அழுதார். அவருடைய மனைவி “அதுக்கென்னங்க... என்ன பிள்ளையானா என்ன... எல்லாம் ஒண்ணுதான” என்று அவருடைய தலையை வாஞ்சையுடன் வருடி தைரியம் சொன்னார்.
அன்று இரவு பெரியசாமியின் கனவில் கடவுளின் குரல் கேட்டது. “ஒரு சின்னத் தப்பு நடந்து போச்சு பெரியசாமி. கவலைப்படாதே. அடுத்த குழந்தை உனக்கு ஆண் குழந்தைதான். இந்தா வரம் “ என்றது. “ஐயையோ.... வேண்டாம்... இருக்கிற பிள்ளைங்க போதும்... இன்னொரு பிரசவம் என்னால தாங்க முடியாது. என் மனைவிக்கு நான் செஞ்ச கொடுமை இப்பத்தான் புரியுது.... வேண்டாம்... வேண்டாம்...” என்று கத்தி, கட்டிலிலிருந்து அவர் கிழே விழவும் கனவு கலைந்து போனது.
| இது போன்ற கதைகளை யாராவது கார்ட்டூன் படமாக்க முயற்சி செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்! |
*
வண்ணங்களாய் நிறைந்தவன்!
இந்திய விமானப்படையில் இருபது வருடங்களாக பணிபுரிந்து முடித்தபோது, தனது முப்பத்தொன்பதாவது வயதில் எதிர்காலம் இனி சாத்தூர்தான் என்று நிச்சயம் செய்து கொண்டான் அவன். தொடர்ந்து இராணுவத்தின் ஒரு அங்கமாக இருந்து சொந்தங்களை, நெருக்கமானவர்களை, முக்கியமாக மனித சமுத்திரத்தை விட்டு விலகி இருக்க அவனால் முடியவில்லை. தனக்கென்று, தனக்கு விருப்பமான ஒரு தொழிலை ஏற்றுக்கொண்டு சாத்தூரில் தன் மனைவி, அற்புதமான இரண்டு குழந்தைகளோடு குடிபுகுந்தான்.
ஒரே வீட்டில் இருபது வருடங்களாக வாழ்ந்து, திடுமென திசைக்கொன்றாய் பறந்துவிட்ட பிறகு, எப்போதாவது காலத்தின் மடியில் தலைவைத்துப் படுத்து அந்த இழந்த நினைவுகளை அசைபோட்டுக் கிடந்த எனக்கு அது பெரும் சந்தோஷம் தந்தது. ”ஏல... மாது...” என என்னை உரிமையோடு அழைத்த என் தம்பியின் குரல், திரும்பவும் நான் வாழ்ந்து கொண்டிருந்த ஊரிலேயே, மிக அருகில் கேட்கத் தொடங்கியது. எங்கள் வீட்டில் அவன் தான் கடைசி. ’குட்டியப்பூ’ என்றுதான் சொல்வோம்.
அவனைப்பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. எழுதும் திராணி இல்லை இன்னும் எனக்கு. அருமைத் தோழன் காமராஜ் (அடர் கருப்பு) அவனைப்பற்றி , செப்டம்பர் 2005ல் ஒரு கட்டுரை எழுதினான். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
குட்டியப்பூவும் நானும் |
இன்று, ஆகஸ்ட் 23ம் தேதியோடு, அவன் இறந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. விபத்துக்குப் பிறகு, அவன் உடலிலிருந்து எடுத்த பொருட்களில் அவன் கட்டி இருந்த , சிதைந்து போன வாட்சை நான் வைத்திருக்கிறேன். இன்று காலை எடுத்துப் பார்த்தேன். காலை 7.27ல் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது.
*
என்ன பாவம் செய்தார் இந்த விநாயகர்?
கூடப் பிறந்த நாங்கள் ஐந்து பேருமே, சின்ன வயசில் படம் என்ற பேரில் வீட்டில் எதாவது கிறுக்கித் தள்ளிக்கொண்டு இருப்போம். மூத்த அண்ணணும், கடைசித் தம்பியும் நன்றாகவே வரைவார்கள். நான் ஓரளவுக்குத்தான். எனது இரண்டாவது அண்ணனுக்கு அவ்வளவாக படமெல்லாம் வரையத் தெரியாது. எப்போதும் ஒரே படத்தை விதம் விதமாய், வரைந்து வரைந்து நிபுணனாகி இருந்தான். அப்படி அவனிடம் மாட்டிக்கொண்டவர்தான் பிள்ளையார். அவருக்கு கோட், சூட் போடுவான். பெல்ஸ் (பெல்பாட்ட்ம்) போடுவான். தொப்பியும், கூலிங்கிளாஸும் கட்டாயம் உண்டு. இவ்வளவுமான பிறகு அவர் கையில் சிகரெட்டும் கொடுப்பான். ஒருதடவை துப்பாக்கியை நீட்டியபடி கூட நின்றிருந்தார். இதுபோன்ற சித்தரிப்புகள் எப்படி அவனுக்கு வந்தது என்றும் ஏன் வந்தது என்றும் தெரியவில்லை. நாங்கள் எல்லோரும் சிரித்துக்கொண்டு இருப்போம். எங்க அம்மாவுக்கு மட்டும் பிடிக்காது. “சாமிய இப்படியெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது “ என அண்ணனைச் சத்தம் போடுவார்கள். “என்ன பாவம் செஞ்சாரோ இந்தப் பிள்ளையார்” என்று முணுமுணுப்பார்கள்.
அண்ணன் ஒரு தீர்க்கதரிசிதான். இன்றைக்கு துப்பாக்கிகள், வாள் என பலவிதமான ஆயுதங்களைக் கொடுத்து பிள்ளையாரை பெருசு பெருசாய் நிறுத்தியிருக்கிறார்கள். சிலவருடங்களுக்கு முன்பு இது போன்ற நாட்கள் ஒன்றில் சென்னைக்குள் நுழையும்போது தாம்பரத்திலிருந்து வரிசையாக சாலையோரத்தில் விநாயகர் சிலைகள் உட்கார்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. சமீபகாலங்களில் விநாயகர் சதுர்த்தி ரொம்ப விமரிசையாக கொண்டாடப்படுகிறதுதான். விநாயகர் ஊர்வலத்தில் இந்த தடவை மதுவருந்திவிட்டு வந்தவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று இராமகோபலன் பத்திரிக்கையொன்றில் அப்போது திருப்திப்பட்டிருந்தார். அது ஒருபுறமிருக்கட்டும். அந்த விநாயகர் சிலைகளின் மீது ஒவ்வொன்றிற்கும் ஒரு பட்டங்கள் அளித்திருந்தார்கள். ஒரு விநாயகர் மீது 'வீர சவார்க்கர் வழிபட்ட வீர விநாயகர்' என்று எழுதப்பட்டிருந்தது. இங்கே சவார்க்கர் ஏன் வந்தார்? அலுவலகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அரக்க பரக்க ஓடுகிற சென்னை அந்தக் காலை நேரத்தில் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தது.
சவார்க்கர் குறித்த கருத்துக்களும், விவாதங்களும் ஏராளமாய் வந்துகொண்டிருந்த நேரம் அது. மத்திய அமைச்சர் மணிசங்கர ஐயர் சவார்க்கரை விடுதலை போராட்ட வீரர் என்று சொல்ல முடியாது என்று கருத்து தெரிவிக்கவும் கொதித்து எழுந்தது பாரதீய ஜனதாக் கட்சி. பாராளுமன்றத்தில் கத்துவதைபோல தெருவில் நின்று கத்தினார்கள். மணிசங்கர ஐயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். அவரது உருவ பொம்மையை சிவசேனைத்தலைவர் பால்தாக்கரேவும், முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மனோகர் ஜோஷியும் பம்பாய்த் தெருக்களில் செருப்பால் அடித்தனர். மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சவார்க்கர்தான் குரு என்று ஆதாரங்கள் பத்திரிக்கைகளில் வந்தன. அந்தமான் சிறையில் மாட்டிக்கொண்ட சவார்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்த கதைகள் எல்லாம் எடுத்து வாசிக்கப்பட்டன. சவார்க்கரோ அமைதியாக வந்து பிள்ளையாரின் தலைக்கு மேலே உட்கார்ந்திருந்தார்.
சிரிக்கவும் தோன்றுகிறது. சவார்க்கரின் உண்மையான பெயர் விநாயக் தாமோதர சவார்க்கர். அதிலிருந்த 'விநாயகரை' எடுத்து விட்டுத்தான் அந்த மேன்மக்கள் 'வீர' என்ற அடைமொழியை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வீரத்தை பிரிட்டிஷாருக்கு அவர் எழுதிய கடிதத்தின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் பார்க்கலாம்.
"பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்.' என்று ஆரம்பிக்கிறார். "பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்' என்பதோடு மேலும் சொல்கிறார். "மேன்மைக்குரிய பிரிட்டிஷ் அரசு விரும்புகிற எந்த வழியிலும் நான் பணிபுரிவேன்." தன்னுடைய விடுதலைக்காக தேசத்தின் விடுதலையை துச்சமாக மதித்த இவரின் படத்தைத்தான் 2003ம் வருடம் பிப்ரவரி 23ம் தேதி பாராளுமன்றத்தில் மைய மண்டபத்தில் மகாத்மா காந்தியின் படத்துக்கு நேர் எதிராக வாஜ்பாய் அன் கோ திறந்து வைத்து சந்தோஷப்பட்டார்கள்.
இந்த வீர புருஷரின் பராக்கிரமங்கள் அத்தோடு முடியவில்லை. மகாத்மாவைக் கொன்ற கோட்சே என்னும் அம்புக்கு வில்லாக இருந்திருக்கிறார். கோட்சே இவரை குருவே என்று அழைத்து எழுதிய கடிதங்களை பத்திரிக்கைகளில் அப்போது முதல் பக்கத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தி இருந்தார்கள். அந்த வழக்கிலும் தனக்கு சம்பந்தமில்லை என்று சொல்லி வெளியே வந்தார். நீதிமன்றத்தில் கோட்சேவும் சவார்க்கருக்கு இதில் சம்பந்தமில்லை என்றே சொல்கிறான். ஆனால் காந்தியை ஏன் கொன்றேன் என்று மணிக்கணக்கில் நீதிமன்றத்தில் பேசிய வாக்குமூலத்தின் ஒவ்வொரு வரியிலும் சவார்க்கர் இந்த மண்ணுக்கு சாபமாய் வழங்கி இருக்கிற இந்துத்துவாவின் வெறியை பார்க்க முடியும். அதுதான் நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டவுடன் சவார்க்கரின் காலில் கோட்சே விழுந்து தனது உயிரை பாதகாணிக்கையாய் செலுத்தி இருக்கிறான். "நானே நீ, நீயே நான்...இந்த காரியத்தை நீயா செய்தாய்...நான் செய்தேன்" என்று அர்ஜூனனிடம் கிருஷ்ண பரமாத்மா சொல்லிய காட்சிதான் உடனடியாக நினைவுக்கு வரும்.
இந்த பரமாத்மாக்கள் எப்போதும் தங்கள் நோக்கத்தை இன்னொருவர் மூலம் செயல்படுத்தி தாங்கள் உயரத்தில் நின்று அதை பார்த்துக் கொண்டிருப்பார்கள். நேரடியாக அதைச் செய்யாமல் ஒதுங்கி நிற்பார்கள். அதேநேரம் அதற்கான மூலவேராக தாங்களே இருப்பதையும் உணர்த்துவார்கள். இது ஒருவகையான புனிதமான யுத்த தந்திரமாக வழிவழியாய் செய்து கொண்டிருக்கிறார்கள். அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கு கரசேவை அழைப்பாக அத்வானி என்கிற இன்னொரு பரமாத்மா தேசம் முழுவதும் யாத்திரை செய்தார். இந்திய விடுதலைக்கு ஒருபிடி மண் கூட அள்ளிப் போடாதவர்கள் ராமர் பிறந்த இடத்தை விடுதலை செய்யப் போவதாக செங்கற்களை சுமந்தார்கள். டிசம்பர் 2ம் தேதி அஜாம்கரில் நடந்த கூட்டத்தில் அத்வானி "கரசேவை செங்கற்களாலும், கடப்பாறைகளாலும் நடத்தப்படும்" என பேசினார். டிசம்பர் 6ம் தேதி ஒரு உயரமான இடத்திலிருந்து மசூதியின் கோபுரங்கள் இடிக்கப்படுவதை பார்த்தார். ஆனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டபோது தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார். 'உணர்ச்சி வசப்பட்ட கரசேவகர்களின் காரியம் இது' என்று சொன்னார். அந்த உணர்ச்சியை யார் ஏற்படுத்தியது என்பதுதான் கேள்வி. அத்வானியின் வீரம் இதுதான்.
நேர்மையானவர்கள் என்றும் தங்களை யாரும் சந்தேகிக்க முடியாது என்றும் சொல்லாமல் சொல்வார்கள். பகத்சிங்கைப் போல நிமிர்ந்து நின்று அதனை எதிர்கொள்கிற வீரமற்றவர்கள் இவர்கள். தாங்கள் கொண்ட கொள்கைக்கு தாங்கள் உண்மையாய் இருப்பதை வெளிப்படையாய் சொல்ல முடியாத இந்த கோழைகள் இந்த தேசத்திற்கும் இந்த மக்களுக்கும் என்ன நன்மையைச் செய்துவிட முடியும். பாவம். இவர்களை பின்பற்றும் சாமானியத் தொண்டர்கள் இந்த சாணக்கியங்கள் எல்லாம் தெரியாமல் இவர்களுக்கும், இவர்கள் காட்டும் உலகத்துக்கும் உண்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர்கள் போல வீரமெல்லாம் தெரியாது. பரமாத்மாக்களுக்கும், இந்த வீர புருஷர்களுக்கும் இப்படிப்பட்ட தொண்டர்கள்தான் வேண்டும்.
இந்து என்ற ஒற்றை அடையாளத்தை உருவாகுவதற்கு ‘வீர’புருஷர்கள் இப்போது விநாயகருக்கும் ‘வீர’என்னும் அடைமொழி கொடுத்து தெருத்தெருவாய் அழைத்து வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த விநாயகர் என்ன பாவம் செய்தார்?
*
உண்மையாகவே சில டூயட்கள்!
நண்பர் முனிஷின் ‘ஐடியாஸ்’ அறைக்கு ஒருமுறை சென்றிருந்த போதுதான் கவனித்தேன். திருமண நிகழ்ச்சியொன்றை பிரிமியரில் எடிட் செய்து கொண்டிருந்தார். ‘காக்க... காக்க’ படத்தின் ‘உயிரின் உயிரே’ ஒலித்துக்கொண்டிருக்க, மரத்தின் பின்னே ஒளிந்திருந்த மணமகன், அருகே வந்த மணமகளின் கண்களை பின்புறமிருந்து மூடினான். வெட்கமும், சிரிப்புமாக அவனது கைகளை விலக்கி, மணமகள் ஸ்லோ மோஷனில் ஓடினாள். ஆற்றங்கரையில் பறவைகள் பறந்தன. மணமகனின் தோளில் சாய்ந்து மணமகள் நடந்தாள். சேலை, சட்டையின் நிறங்கள் வேறு வேறு நிறங்களில் மாறிக்கொண்டிருப்பதாய் மேட்ரக்ஸில் வித்தைகளைச் செய்திருந்தார் முனிஷ். மணமகளை அலாக்காகத் தூக்கி மணமகன் நடந்தான். கால்களை அவள் உதைத்து திமிறியது கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. சட்டென பனிபடர்ந்த மலைகள் வந்தன. காமிரா அப்படியே நகர்ந்து புல்வெளியில் உட்கார்ந்திருந்த இளம் தம்பதியினரை நெருங்கியது. அவளது மடியில் அவன் படுத்துக்கொள்ள, அவள் காமிராவைப் பார்க்க முடியாமல் வேறெங்கோ பார்த்தாள்.
ஆச்சரியமாய் இருந்தது. ”என்னது முனிஷ் இதெல்லாம்...” என்றேன். இப்படியும் மக்கள் ஆசைப்படுவதாய் முனிஷ் சொன்னது நம்ப முடியவில்லை. “பொண்ணு கொஞ்சம் வெட்கப்பட்டுச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். இது நாலாவது டேக்” என்று முனிஷ் சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டு இருந்தார். நான் கம்யூட்டர் திரையினையேப் பார்த்துக்கொண்டு இருந்தேன். “கல்யாணமாகி ஒருவாரம் கழிச்சு இதெல்லாம். பிற்சேர்க்கை. கொடைக்கானலுக்கு நானும் போயிருந்தேன்” என்று அந்த அனுபவம் குறித்து முனிஷ் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான்.
“விவஸ்தையில்லாம இருக்கே...” என்றேன். “மாதவராஜ் சார், நீங்க எந்த காலத்துல இருக்கீங்க.. சினிமாவுல வர்ற ஹீரோ ஹீரோயின் மாரி அவங்களுக்கும் ஒரு சின்ன ஆசை... இதுல என்ன இருக்கு” என்றார்.
எல்லோருக்குள்ளும் இப்படியான சின்னச் சின்ன சஞ்சலங்கள் இருக்கும் என அடித்துச் சொன்னார். எதையும் புரொபஷனலாகவே பார்க்கிற அவரிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லையென்றாலும் நினைப்பெல்லாம் அந்தக் காட்சிகள் சுற்றியே ஓடிக்கொண்டு இருந்தது.
சினிமாவில்தான் இதுபோன்ற டூயட்கள் சாத்தியம் என்பதும்
நிஜவாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதும் உண்மைகள்தான். ஆனால் சினிமாவின் பிம்பங்கள் மனிதர்களுக்குள் ஏற்படுத்திவிடுகிற அபிலாஷைகளும், அந்தரங்கத்தில் ஏற்படுத்துகிற தாக்கங்களும் யதார்த்த வாழ்வை மீறிய சஞ்சரிப்புகளில் மூழ்க வைக்கின்றனவா? ரகசியம், விவஸ்தை, வெட்கம் எல்லாம் உடைத்து மனிதர்களை உள் இழுக்கின்றனவா? இந்தக் காலம் அதை நோக்கித்தான் நகர்கிறதா?
இப்படியான ரசனைகளை ஒளித்து வைத்துக்கொண்டுதான் மனிதர்கள் நடமாடிக்கொண்டு இருக்கிறார்களா? குழப்பங்களோடு இருந்தபோதுதான் எனக்கு கௌதலைமுத்துவின் ஞாபகம் வந்தது.
முப்பது வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊர் மைனர்தான் கௌதலைமுத்து. ஐந்தோ, ஆறோ படித்துவிட்டு விவசாயம் செய்துகொண்டு இருந்தாலும் சாயங்காலம் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு கடைப்பக்கம் வந்து நிற்பான். கூலிங்கிளாஸ் வேற. “லூஸூ”, “பைத்தியம்”, “மெண்டல்” என ஒரே அர்த்தத்தோடு கூடிய வார்த்தைகளை அவரவர்கள் வைத்திருந்தார்கள் அவனைப்பற்றி. ஊரேக் கிடந்து சிரித்தாலும் கவலைப்படாமல், சொடக்கு விட்டு எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருப்பான். தாவணிகளைப் பார்த்தவுடன் கண்களில் செயற்கையாய் ஒரு காந்தம் வரும்.
பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வந்துவிட்டால் கௌதலைமுத்துவுக்கு களைகட்டிவிடும். ஊருக்குள் வசூல் செய்து, மீதப் பணத்தை அவனேப் போட்டு நாடகம் போடுவான். ‘நவரசத் திலகம்’ கௌதம்’ நடிக்கும் ‘காலங்களில் அவள் வசந்தம்’என்ற நாடகம் திரையிடப்படும் என போஸ்டர்கள் பக்கத்து ஊர்களில் கூட ஓட்டப்படும். திருச்செந்தூர், திருநெல்வேலியிலிருந்து நாடக நடிகைகளைக் கொண்டு வருவான். என்ன கதை, என்ன வசனம் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. அந்த நடிகைகளோடு கனவு, நனவு என பல சந்தர்ப்பங்களாக ”அழகிய தமிழ் மகன் இவன்”, “இன்பமே உந்தன் பேர் வள்ளலோ” என ஏழெட்டுப் பாடல்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா என நிற வெளிச்சங்கள் வெட்ட ஆடி மகிழ்வான். அந்தப் பெண்கள் இந்தக் கோமாளித்தனங்களை எல்லாம் பார்த்துச் சிரித்துக்கொண்டே ஆடுவார்கள். சட்டை மேல் சட்டை போட்டுக்கொண்டு, இடையிடையே திரைக்குப் பின்னால் சென்று ஒவ்வொன்றாய் கழற்றி வந்து ஆட, விசில் சத்தம் பறக்கும். எம்.ஜி.ஆர் போல பிரத்யேகமானப் பிடிகள் பெரும் ஆரவாரத்தை எழுப்பும். ஒருதடவை ஏடாகூடமாய் எங்கோ கைவைக்க, அந்த நடிகை அவனைப் பிடித்து தள்ளிவிட்டு ஆடமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். அதுவேறு கதை.
அந்த சமயங்களில் ஊரில் பல இளவட்டங்களுக்கு தாங்களும் அதுபோல ஆடமுடியவில்லையே என வருத்தங்கள் உண்டு என்பது தெரியும். வெளியே கௌதலைமுத்துவைக் கிண்டல் செய்து கொண்டாலும் அந்த நடிகைகளோடு அவன் ஆடும்போது அவர்கள் கண்களில் ஏக்கங்களும் இருக்கத்தான் செய்தன.
ஒருவருடத்திற்கு முன்பு கௌதலைமுத்துவைப் பார்த்தேன். நரைவிழுந்து, தொப்பையோடு ஒரு பனியன் போட்டுக்கொண்டு வீட்டின் முன்னே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டார். இரண்டு பையன்கள் சென்னையில் எதோ கடைகள் வைத்திருக்கிறார்களாம். பேசிக்கொண்டு இருக்கும்போது பழைய கதைகளை, நாடகங்களை ஞாபகப்படுத்தினேன். “அட... நீ ஒண்ணு... சும்மாயிருப்பா..” என்று வெட்கப்பட்டார். ஆச்சரியமாய் இருந்தது.
கௌதலைமுத்துவின் அந்த வெட்கமும், கூச்சமும் நினைவுக்கு வந்தன. குழப்பமில்லாமல் மெல்ல புன்னகைக்க ஆரம்பித்தேன். முனிஷுக்கு இது புரியாது.
*
மாதவராஜ் பக்கங்கள் 10
மீண்டும் ஜின்னா வரலாற்றின் பக்கங்களிலிருந்து எழுந்து வந்திருக்கிறார். பிடிவாதமும், சர்ச்சைகளும் மிக்க அந்த மனிதர் லேசில் விடமாட்டார் போலிருக்கிறது. அவரைப் புரிந்துகொள்வதில் மற்ற எல்லோரையும் விட பா.ஜ.கவுக்கு பெரும் குழப்பம் காலகாலமாய் நீடிக்கிறது. தங்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரியாக முன்வைத்த அந்த மனிதரை வேறு ஒரு நிறத்தில் சித்தரிக்க தலைப்பட்ட அத்வானி கடுமையாக முன்னர் விமர்சிக்கப்பட்டார். இப்போது ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா காரணமல்ல என்றும் நேருதான் காரணமென்றும் சொல்லும் அவரது புதுப்பார்வையை கட்சியும், ஆர்.எஸ்.எஸும் ரசிக்கவில்லை.
ஏன் ரசிக்கவில்லை என்பதை பிறகு பார்ப்போம். முதலில் மனித இரத்தத்தால் கோடுகள் கிழிக்கப்பட்ட தேசப்பிரிவினை குறித்து அந்த இயக்கங்கள் திரும்ப திரும்ப பேசுவதற்கும், யார் இதற்கு காரணம் எனக் கண்டுபிடித்துச் சொல்வதற்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. மற்றவர்களை கைகாட்டிவிட்டு, தாங்கள் இதற்கு காரணமும், பொறுப்புமல்ல என்று காட்டிக்கொள்ளவும், புனிதர் கீரீடத்தை யாருக்கும் தெரியாமல் தங்கள் தலையில் சூட்டிக்கொள்ளவுமே இந்த சர்ச்சைகள் அவ்வப்போது ஆவிகளாய் எழுப்பப்படுகின்றன.
1929ல் இந்து மகாசபையை சார்ந்த பாய்பரமானந்தா "இந்துக்களும்,முஸ்லீம்களும் சேர்ந்து ஓட்டளித்தால் அவர்களது அரசியல் வேறுபாடுகள் மதம் சார்ந்ததாக இருக்கும். இது இரண்டு சமுகத்திற்கும் நல்லதல்ல; இன்னும் சொல்லப்போனால் இந்துக்களுக்கே அதிக பாதிப்பு உண்டாகும்" என்று சொன்னார்(Hindu national movement, lahore, 1929). 1938ல் கோல்வார்கர் எழுதி வெளியிட்ட- we our nationhood, defined- என்னும் புத்தகத்தில் இரண்டு தேசங்கள் வேண்டும் என்கிற விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 1940ல் லாகூரில் நடந்த மாநாட்டில் "இரண்டு தேசங்கள் வேண்டும்" என்று முஸ்லீம் லீகும் தீர்மானம் நிறைவேற்றியது.
அடிப்படையில் ஒன்றையொன்று பரம எதிரிகளாக கருதினாலும் தேசப் பிரிவினையில் இந்த இரண்டு மதவாத அமைப்புகளும் ஒன்றுபட்டு நின்றன என்பது ஒரு விசித்திரமான இயல்பு. ஆகஸ்ட் 15, 1943ல் சவார்க்கர் "கடந்த 30 ஆண்டுகளாக பூகோள ரீதியிலான ஒற்றுமைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் இதையே பலமாக ஆதரிக்கிறது. ஒவ்வொரு சலுகையாக தங்களுக்கு கேட்டு அனுபவித்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினர் திடீரென தனி நாடு வேண்டுமென்று கேட்கின்றனர். ஜின்னாவுடன் எனக்கு இதில் எந்த பேதமும் இல்லை. இந்துக்களாகிய நாங்கள் ஒரு தேசமாகவே இருக்கிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு தேசங்கள் என்பது வரலாற்று உண்மை' என்று சொன்னார்.
ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளுக்கு பலியாகி, இலட்சக்கணக்கில் மனித உயிர்களை இழந்த, நினைவுகளை விட்டு அகலாத தேசப்பிரிவினையில்
பெரும்பங்கு இந்து மகாசபைக்கும், ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்த தலைவர்களுக்கும் உண்டு. திரும்பத் திரும்ப பேசுவதால் எந்த உண்மையையும் மறைத்துவிட முடியாது.
சரி. ஏன் இப்போது ஜின்னா இவர்களில் சிலருக்குப் புனிதராகிறார்? கடந்த இரண்டு நாட்களாக சிம்லாவில் நடந்து வரும் அவர்களது ‘சிந்தன் பைதக்’ கூட்டத்தில் தீவீரமான இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிப்பதா, இந்துத்துவாவை கொஞ்சம் தளர்த்துவதா என்று அவர்கள் நடத்தி வரும் விவாதத்தில் இதற்கான விடையும் இருக்கிறது. இந்திய முஸ்லீம்களை முழுவதுமாக விரோதிப்பதா, அல்லது அவர்களையும் நெருங்கிப் பர்ப்பதா என்னும் அரசியல் லாபக் கணக்கும் இதற்குள் இருக்கிறது. இன்னும் நிறைய இருக்கிற்து.....
மன்னர் செண்பகப்பாண்டியனுக்கு வந்தது போல ஒரு சந்தேகம் நம் நாட்டின் தலைவருக்கு வரவில்லை. நேற்றைய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் “பணவீக்கமே இல்லை. அப்புறம் விலைவாசி ஏன் கடுமையாக கூடுகிறது?’ என்று திருமதி சோனியா காந்தி, ‘புதியப் பொருளாதார’ மேதை மன்மோகன்சிங்கிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். விலைவாசி உயர்வுக்கு வறட்சியைக் காரணம் காட்டியிருக்கிறார் மன்மோகன்சிங். சிறப்பு அழைப்பாளராக(?) கலந்துகொண்ட ப.சிதம்பரம் “அத்தியாவசிய பொருட்களின் செயற்கை பற்றாக்குறைக்கு காரணமான பதுக்கல், கள்ளச்சந்தையை ஒழிப்பதில் மத்திய அரசு தலையிட வேண்டும்” என்று வற்புறுத்தியிருக்கிறார் (இவர் மத்திய அரசில் இல்லையா?). அடுத்தக் கூட்டத்தில் பணவீக்கம்- விலைவாசி முரண்பாடு குறித்து விவாதிக்கப்படும் என்றாராம் மன்மோகன்சிங். இதற்கு யாராவது காரணம் தெரிந்தால் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன் மூலம் எதாவது விமோசனம் ஏற்படலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.
இந்தக் கூட்டத்தில்தான் மத்திய அரசின் வறட்சி நிவாரண நிதிக்கு சம்பளத்தில் 20 சதவீதம் தர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பளத்தில் இருபது சதவீதம் எல்லாம் சும்மா! சம்பளம் ஒரு பொருட்டாகவே இல்லாதவர்களிடம் இந்த சதவீதச் சமாச்சாரங்கள் என்ன பெரிய இழப்பாயிருந்து விடும். தியாகம் தியாகந்தான்!
வளர்ச்சி, வளர்ச்சி என்று மார்தட்டிக்கொண்டிருந்த அரசே கவலைப்பட்டு புலம்புகிற அளவுக்கு நாடு மிகப்பெரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைந்து வருகிறது. இதோடு வறட்சியும் இந்த வருடம் சேர்ந்து கொண்டு இருக்கிறது. தேசம் குறித்த மிகுந்த கவலையோடும், அக்கறையோடும் யோசிக்க வேண்டிய தருணம் இது.
கடந்த இருபது நாட்களில் மட்டும் ஆந்திராவில் 40 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என ஆந்திர முதல்வரே ஒப்புக்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் இதுபோல் 5 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். வாழ்வதற்கு வகையற்று, வழியற்று உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்த சோகத்தை என்னவென்பது? தேச நிலைமை இன்னும் மோசமாகும்போது......? யோசிக்கவே முடியவில்லை. சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் என்று சொன்ன வள்ளுவருக்குச் சிலை வைத்தால் மட்டும் போதுமா எங்கள் ஆட்சியாளர்களே?
இப்படி யோசிப்பதற்கும், உரையாடுவதற்கும், தெளிவதற்கும் இங்கு செய்திகளும் சம்பவங்களுமாய் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளை விட்டு விட்டு நமது ஊடகங்கள் நடிகர் ஷாருக்கானை அமெரிக்க விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததற்கும், காத்திருக்க வைத்ததற்கும் ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. திரும்பி வந்த ஷாருக்கானிடம் சி.என்.என் முதன்மை எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய் இந்த விவகாரம் குறித்து பேட்டி கண்டிருக்கிறார்.
“உங்களை அவர்கள் விசாரித்த போது, நீங்கள், ‘நான் யார் தெரியுமா?’” என்று அவர்களிடம் கேள்வி கேட்கவில்லையா என சர்தேசாய் ஷாருக்கானிடம் கேட்கிறார். “என்னை யார் என்று நீங்கள் தெரியாமல் இருக்கும்போது அப்படி ஒரு கேள்வி கேட்பதற்கு முன் நான் செத்துப்போவேன்” என்று பதில் சொல்கிறார் ஷாருக்கான். மரியாதை ஏற்படுகிறது அவர் மீது.
ஷாருக்கானின் பிரச்சினை கூட இங்கு பேசப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அப்துல் கலாமுக்கும், அமைச்சராயிருந்தபோது ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கும் இதுபோல அவமானங்கள் நிகழ்ந்த போது இப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையென்பதுதான் நான் சொல்ல வருவது.
இவை யாவையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முக்கியச் செய்தியாயிருப்பது சினேகாவுக்கு நிகழ்ந்திருக்கிற எஸ்.எம்.எஸ் கொடுமைதான். ஒருவாரமாய் தொடர் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்போதும் படத்தில் சிரித்துக்கொண்டுதானிருக்கிறார் சினேகா!
*
இன்னும் கிளிகள்
|
ஒருநாள் டாவாலியோடு சொஸைட்டிக்காரர்கள் திடுதிப்பென இறங்கியது கண்டு குருத்துவும், பஞ்சவர்ணமும் அதிர்ந்து போனார்கள். செய்தி கேள்விப்பட்டு ரைஸ்மில்லில் இருந்து வாலகுரு பதறி வந்தான். சொஸைட்டி செக்ரட்டரி ஏற்கனவே பார்க்கும்போது அவனிடம், “தம்பி! அப்பா வாங்குன கடன் கொஞ்சங்கூட கட்டாம ஏகப்பட்ட பாக்கியாய்ட்டு. எப்படியாவது கட்டிரு” |
என்று சொல்லியிருந்தார். “சரி... சரி” என்று தலையாட்டி மறந்திருந்தான். மறக்கவில்லையென்றாலும் அடைத்திருக்க முடியாது. ஆனால் கொடூரமாய் இப்படி வந்து நிற்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
பானைச் சட்டிகளைத் தூக்கப் போனார்கள். “அய்யா... அய்யா...” என்று கெஞ்சினான். யார் யாரெல்லாமோ வீட்டு முன்னால் கூட ஆரம்பித்தார்கள். “நாங்க என்ன செய்ய முடியும்.... மேல இருந்து அதிகாரிங்க வந்திருக்காங்க “ செக்ரட்டரி சொன்னார். அவர் கைகாட்டிய அதிகாரி காலில் போய் வாலகுரு விழுந்தான். நெஞ்சில் ஓங்கி அடித்து அழுத குருத்து “இத வச்சிட்டு எங்கள விட்டுருங்களய்யா...” என வாலகுருவைத் தூக்கினாள். டாவாலி காணச் சகிக்காமல் கண்ணெல்லாம் நீர் முட்ட முகத்தைத் திருப்பிக் கொண்டார். குழந்தைகள் அலறிய வீடு தெருவையே அரற்றியது. அந்த அதிகாரி குருத்துவின் கைகளைத் தடுத்து “மொதல்ல அத கழுத்துலப் போடுங்கம்மா... கழுத்துலப் போடுங்கம்மா..” என தொண்டை அடைக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். குருத்து வெறி பிடித்தவள் போல நின்று “போங்க... இத எடுத்துட்டுப் போங்க...” என கத்தினாள். அவர்கள் வாலகுருவைத் தூக்கி நிறுத்தி பத்துநாள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் வந்து கடனை அடைக்குமாறும் சொல்லிச் சென்றார்கள். தெருக்குழந்தைகள் திக்பிரமையில் நிற்க, ஜீப் வெறுமனே உறுமிப்போனது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தேற்றிவிட்டுப் போனார்கள். சுவரில் பல்லிகளைப் போல ஓட்டியிருந்த குழந்தைகளை இழுத்து மடியில் போட்டு குருத்து அழுதுகொண்டிருந்தாள். வாலகுரு எங்கேயோ வெறித்துப் பார்த்திருந்தான். அரிசி பாதி வெந்தும். வேகாமலும் அடங்கியிருக்க, அடுப்பு வெறும் புகையை கசிந்து கொண்டிருந்தது. பஞ்சவர்ணம் எழுந்து திரடு நோக்கிப் போனாள்.
கூலிவிளை தாண்டி திரடு கொஞ்சம் பனைகளும், ஒரு மாமரமும், அங்கங்கு உடைமரங்களுமாய் இருந்தது. மாமரத்தடியில் உட்கார்ந்து கொண்டாள். வெளிறிய முகத்தோடு எல்லாவற்றையும் உற்றுப்பார்த்தாள். அதன் வடக்கு மூலையில் அடையாளங்கள் உதிர்ந்து போய் தனியாயிருந்தது அந்த மொட்டைப்பனை. உறைந்துபோன அதன் மௌனத்தில் இரவுகளும், பகல்களும் உருக்கத்தோடு வந்து போயின. மௌர்ணமியின் இளம் ஓளியில் ஊர், காடு யாவும் அழகின் மயக்கத்தில் மிதக்க, அந்தப் பனை மட்டும் ஒற்றைக் கோடாய் தரையிலிருந்து விறைத்து நிற்கும். பிறகு அதன் வாழ்க்கையிலும் ஒரு அர்த்தம் வந்தது. “ஆச்சி... ஆச்சி... அந்த மொட்டைப்பனைல முனி இருக்காமே... அப்படியா” என்று பேரன்மார்கள் ஒருநாள் அவளிடம் கேட்டார்கள். “யார் சொன்னா... ஒங்கள மாரி ரெண்டு கிளிப்பிள்ளைங்கதான் இருக்கு..” என்று அவர்களைக் கட்டிப்பிடித்து பஞ்சவர்ணம் உச்சி முகர்ந்தாள். மொட்டைப்பனையின் உச்சியில் ஒரு பொந்தில் இரண்டு கிளிகள் தளிர்விட்டது போல முளைத்திருந்தன. அந்தச் சின்னப்பறவைகளின் “க்கீ...க்கீ..”சத்தங்கள் கீற்றுக்களாய் அந்தப் பிரதேசத்தையே கிழித்து ஓடின. மொட்டைப்பனையின் மௌனங்கள் உடைந்து சிதறின. இப்போது கிளிகள் எங்கோ போயிருக்க வேண்டும். மொட்டைப்பனை அவைகளின் வருகைக்காக காத்திருந்தது.
தினமும் மதியத்திற்கு மேல் கருப்பட்டிக்காப்பி குடித்து பஞ்சவர்ணம் இந்தக் கால்வலியிலும் திரடுபக்கம் ஒருநடை வந்து போய்விடுவாள். விழுந்துகிடக்கும் சுள்ளிகளையும், கொஞ்சம் பனை ஓலைகளையும் ஒரு சுமை சேர்த்து போவாள். கவட்டுக்கம்பு கட்டி உடம்பழங்களை உலுக்கி ஆடுகளுக்கு கொண்டு போய் போடுவாள். எப்போதாவது பேரன்மார்களும் கூட வருவார்கள். அங்கேயும் இங்கேயுமாய் ஆடவும் சாடவுமாய் இருப்பார்கள். போட்டி போட்டுக்கொண்டு மாங்காய் எறிவார்கள். ஒருதடவை அவர்கள் கவனமும், கல்லும் கிளிகள் பக்கம் திரும்ப அவை கலவரமடைந்து திரடு முழுக்க மேலே பறந்து... பறந்து... அவஸ்தையில் வீறீட்டன. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வீடே அலங்கோலமாகிப் போனதைப் போன்ற அவலம் நிறைந்ததாய்த்தான் அதுவும் இருந்தது. “பாவம்ப்பா...கிளிகள் விட்டுருங்க...” என்று பேரன்மார்களை அடக்கினாள்.
பஞ்சவர்ணத்தின் வாழ்க்கையில் இந்த பனைத்திரடு சாயங்கால உலகமாயிருந்தது. முப்பத்திரண்டு வருசங்களுக்கு முந்தி சொர்ணவேலுவின் பின்னால் குனிஞ்ச தலையோடு இந்த ஊருக்கு வந்த புதிதில் ஒரு சாயங்கால நேரத்தில்தான் முதல் தடவையாய் திரட்டிற்கு அழைத்து வந்தான். அவள் கையை அழுத்திப் பிடித்து “இது நம்ம இடம்” என்றான். அந்தக் கையை விடாமலேயே திரடு முழுக்கச் சுற்றி வந்தாள். அப்போது அந்த மொட்டைப்பனை தன் பச்சை ஓலைகளை விரித்து காற்றை வருடி விளையாடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து அந்தப்பனை அவளுக்குப் பழக்கம். சகல காலங்களிலும் அந்தப் பனை தன்னோடு கூடவே வந்த தோழியாய் அவளுக்குப் பிரமை உண்டு.
சொர்ணவேலு இறந்தபோது, வாழ்ந்த காலம் பூராவும் அவளோடு சண்டை போட்டு.... போட்டே அவர் விட்டுப்போன சோகம் அவர் காலடி கேட்காத வீடு முழுவதும் அடர்ந்திருந்தது. முடிந்தவரையில் வாலகுருவும், குருத்துவும் பஞ்சவர்ணத்தின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வது என்றிருந்தார்கள். சாப்பாடு, காப்பி எதுவானாலும் அவளுக்குத்தான் முதலில் கொடுக்கப்படும். அதையும் அவளிடம் ஒருவார்த்தை கேட்டே செய்தார்கள். அதெல்லாம் அவளை தூரத்தில் கொண்டுபோய் நிறுத்தின மாதிரியே தெரிந்தது. திரட்டில் போய் உட்கார்ந்து மொட்டைப்பனையிடமிருந்தும், கிளிகளிடமிருந்தும் உறவின் புதிர்களை கற்றுக் கொண்டாள். பிறகு குழந்தைகளின் காலடி ஓசைகளில் பழைய தடங்கள் அமிழ்ந்து போக ஆரம்பித்தன. வெள்ளைப் புடவைகள் மெல்ல மெல்ல பழுப்பு நிறமடைந்து போயின. காலத்தையே கலைத்தையேப் போட்ட மாதிரி இருக்கிறது இப்போது. மாமரம் என்ன செய்வதென்றறியாமல் நின்றது போலிருந்தது. அதன் கண்ணீராய் நிழல் சிந்திக்கிடந்தது.
வாலகுரு அவளைத் தேடி வந்தான். பேரன்மார்களும் கூடவே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் “யப்பா... இந்தத் திரட்டை வித்துருவோம்ப்பா....” சொல்லிக்கொண்டே பெருங்குரலெடுத்து அழுதாள். குழந்தைகளும் அழுதபடி ஆச்சியை வீட்டுக்கு அழைத்தன. கிளிகள் இன்னும் வரக்காணோம். மொட்டைப்பனை உயிரற்று இருந்தது. திரடுவிட்டு வரும்போது பஞ்சவர்ணத்தின் கால்கள் இருந்த கொஞ்சநஞ்ச வலுவுமிழந்து போயிருந்தன.
வாலகுருவுக்கு நினைவிலிருக்கிறது. “அம்மா! அந்த பனைத்திரட்டை வித்துருவமா..” செலவுக்கு அறவே பணம் இல்லாத போது கேட்டிருக்கிறான். “வேண்டாம்பா..இருந்துட்டுப் போவட்டுமே. இதுலயா நாம வாழ்ந்துரப் போறோம்?” என்று பஞ்சவர்ணம் சொல்லியிருக்கிறாள். மாவு அரைக்கவும், நெல்லு குத்தவுமாக அல்லர் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கும் ரைஸ்மில் டிரைவர் வாலகுரு தன் கனவுகளை யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொண்டான். அதே ரைஸ்மில்லில் வாட்டு போட்டு அரிசி வியாபாரம் செய்ய நினைத்த சந்தோஷம் கூட இனி இருக்காது. இதே வேலையில் கிடைக்கும் குருணை அரிசியிலும், எதோ கொஞ்சம் பணத்திலும்தான் வாழ்க்கையை தள்ளியாக வேண்டும். திரடு இல்லாமல் அம்மா எப்படி வீட்டிலேயே இருப்பாள் என்பதை யோசிக்க முடியவில்லை. இதே பாதைகளில் அம்மா எத்தனை தடவை வந்து போயிருப்பாள்.
பனைமரங்கள் எல்லாக் காலங்களிலும் பஞ்சவர்ணத்திற்கு வேலைகள் வைத்திருந்தன. பைனி காலத்தில் காத்தவராயன் ‘அம்மோய்’ எனக் குரல் கொடுத்து விடியும் முன்னரே தலைக்கயிற்றோடும், சுண்ணாம்புக் குடுவையோடும் பைனி இறக்கிவர தெருவில் நட்ந்து போவான். இவள் பின்பக்கம் போய் அந்த டாங்கி அடுப்பைத் தயார் செய்வாள். உள்ளே இருக்கும் சாம்பலை அள்ளி முந்தின நாள் பொறுக்கி வந்த சுள்ளிகளைப் பக்கத்தில் வைத்துக் கொள்வாள். பொறுமையாய்த் தீ போட்டு காய்ச்சுவாள். கொதித்து, வற்றி, செம்பாகாகி, குமிழ் குமிழ்களாக வெடித்து கருப்பட்டி வாசம் ஊர் பூராவும் பரவும். பஞ்சவர்ணம் அனுபவித்தபடியே சிரட்டைகளில் ஊற்றுவாள். வாரத்துக்கு நாலு கொட்டான் கருப்பட்டி சேர்த்து விடுவாள். கடையில் போட்டு வரும் பணத்தில் காத்தவராயனுக்குக் கொடுத்தது போக கொஞ்சம் மிஞ்சும். நுங்கு சீசனில் காத்தவராயன் குலை குலையாய் வெட்டி மந்தைக்கடையில் போய் விற்பான். இளம் நுங்குகளாய்ப் பார்த்து குழந்தைகளுக்கு கொடுப்பான். தொடர்ந்து வரும் பனம்பழங்கள் காலம். சுட்டு, தோலுரித்து, கொட்டைகள் பிரித்து குழந்தைகளுக்குக் கொடுப்பாள். சப்பிக்கொண்டே இருப்பார்கள். வாய், கை எல்லாம் பிசுபிசுவென ஆனாலும் அந்த மனமும், இனிப்பும் அன்றெல்லாம் கூடவே இருக்கும்.
அத்தோடு முடியாது. பள்ளந்தோண்டி, கொட்டைகளைக் கொட்டி, மிதித்து, பாத்தி கட்டி, தினமும் தண்ணீர் ஊற்றுவாள். கிழங்கு பிடுங்கும் காலத்தை கணக்குப் பார்ப்பாள். இதெல்லாம் தந்ததுதானே இதுவும் என்று மொட்டைபனையைப் பார்க்கும்போது நினைத்துக் கொள்வாள். நல்ல நாளில் சாமி கும்பிட்டு, காத்தவராயனைக் கூப்பிட்டு தோண்டி தரச் சொல்வாள். கொட்டைகளை வெட்டி தவணு கொடுப்பாள். கிழங்கு உரித்து, மஞ்சள் பூசி அவிப்பாள். குழந்தைகள் அடுப்பு பக்கத்தில் வந்து காத்திருக்கும். வீடு நெருங்கும்போது இனி பைனிக்கும், பழத்திற்கும், கிழங்குக்கும் இந்தக் குழந்தைகள் யார் வீட்டு வாசத்தையாவது பிடித்துக்கொண்டுதானே தெருவில் அலைவார்கள் என பெருமூச்சு விட்டாள். வீட்டு முன்னால் ஜீப் வந்துபோன தடம் இன்னும் அப்படியே இருந்து மிரட்டிக்கொண்டு இருந்தது.
அந்த வெள்ளிக்கிழமை ஏரலுக்குப் போய் பத்திரம் முடித்தார்கள். கொழும்புக்காரர் வாங்கியிருந்தார். ரொம்ப குறைந்த விலைக்குத்தான் போனது. சொஸைட்டி லோன் போக மூவாயிரம் போல்தான் மிஞ்சியது. சில்லறைக் கடன்களை அடைக்கத்தான் உதவும். பத்திரத்தில் கையெழுத்திடும்போது பஞ்சவர்ணத்தின் கைகள் நடுங்குவதை வாலகுரு கவனித்தான். நல்லபடியாக முடித்த சந்தோஷத்தில் கொழும்புக்காரர் ஒரு கிலோ நம்மூர் மிட்டாய் வாங்கித் தந்தார். வீட்டில் குழந்தைகள் ஆசையுடன் சாப்பிட்டன. எல்லோருக்குள்ளும் ஒரு மௌனம் வந்து அடைந்திருந்தது.
அதற்கு அப்புறம் பஞ்சவர்ணம் திரடுபக்கம் போகவேயில்லை. யார் யாரெல்லாமோ அங்கு வந்தார்கள். பகலில் மாமரத்தடியில் சீட்டு விளையாடினார்கள். பைனி காலத்தில் காத்தவராயன் சுண்ணாம்புக்குடுவையைக் கொண்டு செல்வதில்லை. பனை ஓலையில் பட்டை போட்டுக் குடிக்காமல் பிளாஸ்டிக் சொக்குகளில் காசு கொடுத்து குடித்தார்கள். திரடு முழுக்க புளிப்பு ஏப்பங்கள் சூழ்ந்திருந்தன. மொட்டைப்பனை கேள்விகளை சுமந்தபடி கூனிப் போனது. கிளிகள் அதை புல்லாங்குழலாக்கி அந்தியில் சோகம் பாடின. வாலகுருவின் கண்களுக்குக் கீழே கனவுகள் கருவளையங்களாகிக் கிடந்தன.
அந்தக் கார்த்திகையும் ஊர் முழுவதும் இரவில் விளக்குப் புள்ளிகளை இட்டிருந்தது. சைக்கிள்கடை ராசய்யா வந்து சொன்னான். மொட்டைப்பனையை அன்று வெட்டி விட்டார்களாம். சிவன் கோவில் முன்னால் அதனை சொக்கப்பனையாக கொளுத்தப் போகிறார்களாம். பேரன்மார்கள் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அதைப் பார்க்க ஓடினார்கள். பஞ்சவர்ணம் கேட்டுக்கொண்டு படுத்தேக் கிடந்தாள். அன்றைக்கு இரவில் சொர்ணவேலுவின் ஞாபகங்களாய் வந்தன. நெடுநேரம் க்ழித்து வந்த பேரன்மார்கள் சொக்கப்பனை உயரமாய் எரிந்ததையும், கூட்டத்திற்குள் போட்டிப் போட்டுக்கொண்டு சாம்பலை எடுத்து வந்ததையும் வீரக்கதைகளாய் குருத்துவிடம் சொன்னார்கள்.
காலையில் எழுந்ததும் பஞ்சவர்ணம் அந்தச் சாம்பலை போய்ப் பார்த்தாள். உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். எதோ முணுமுணுத்தாள். வெளியே கிளிகளின் சத்தம் கேட்டது. வாசல் வந்து அண்ணாந்து பார்த்தாள். கிளிகள் தெரியவில்லை. சத்தங்கள் மட்டும் வந்துகொண்டே இருந்தன. பக்கத்தில் எதோ ஒரு மரத்திற்கு வந்திருக்க வேண்டும்.
(1994ல் எழுதிய கதை)
*
ஏசுவும் நாமே, யூதாஸும் நாமே!
|
“சாமியாரின் |
தொட்டுத் தொட்டு பயணிக்கும் நினைவுகளின் திசையற்ற சுற்றலில், படித்த இந்த வரிகள் சிலநேரங்களில் வந்து அசை போட வைக்கின்றன. ‘சாமியாரும், குழந்தையும், சீடனும்’ என்கிற சிறுகதையில் வருகிற இந்த இடத்தை போகிற போக்கில் வாசிக்கிறவர்களும் கடந்துவிட முடியாது. கதையைச் சொல்லிச் செல்கிற புதுமைப்பித்தனும் இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்தி “இதோ இதைப் பாருங்கள்’ என்று அதிசயித்து நிற்கிறார். குழந்தைகளே அற்புதங்களாகவும், அதிசயங்களாகவும் நம்முன் நடமாடுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மை! இதனோடு தொடர்ந்து எப்போதோ படித்த இன்னொரு கதையும் நினைவுக்கு வருகிறது.
ஒரு ஓவியன் இயேசு நாதரின் வாழ்க்கையை ஓவியமாய் தீட்ட மிகுந்த அர்ப்பணிப்போடு முயற்சியில் இருப்பான். முதலில் குழந்தை இயேசுவை வரைவதற்கு பொருத்தமான குழந்தையைத் தேடுவான். எல்லாக் குழந்தைகளுமே இயேசுவாய்த் தானிருக்கும். ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்து வரைவான். இப்படி இயேசுவின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதற்கேற்ற முகங்களைத் தேடி அந்த சாயல்களில் வரைந்து கொண்டே இருப்பான். காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். வருடங்கள் கடந்து கொண்டே இருக்கும். ஒரு கலை வேள்வியாய் அந்த ஓவியன் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருப்பான். இறுதியாக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் முகத்திற்கு கொடூரமான, ஈவிரக்கமற்ற ஒரு முகம் வேண்டியதிருக்கும். தேடி அலைவான்.
ஒரு மோசமான இடத்தில் அப்படி ஒரு மனிதனை சந்திப்பான். உறைந்து போன கண்களோடு அந்த மனிதனின் முகம் கொடூரமாயிருக்கும். ஓவியன் அவனை அழைத்து வருவான். ஓவியக் கூடத்தில் நுழைந்து அங்கு வரைந்திருக்கும் படங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு வந்த அந்த மனிதன் திடீரென கேவிக் கேவி அழ ஆரம்பிப்பான். ஓவியன் ஒன்றும் புரியாமல் அவனை என்ன, ஏது என்று விசாரித்து சமாதானப்படுத்த முயற்சிப்பான். அந்த மனிதன் தனது முகத்தை பொத்தியபடி "இருபது வருஷங்களுக்கு முன்னால் நீங்கள் வரைந்த குழந்தை இயேசுவின் முகம் என்னுடையதுதான் " எனச் சொல்லி கதறுவான். ஒவியன் அதிர்ச்சியுற்று நிற்பான்.
புதுமைப்பித்தன் காட்டும் குழந்தையின் பாதமே மறைந்து போன ஏசுவின் முகமும்! வாழ்வின் ஒரு புள்ளியில் இயேசுவும், யூதாஸும் ஒரே மனிதனாயிருக்கிற காட்சி இது. இந்த சமூகத்தின் சோகச் சித்திரம் இது. எல்லோருக்குள்ளும் காணாமல் போன ஒரு குழந்தையின் அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. தங்கள் சொந்த உருவங்களை இழந்துவிட்டு வாடிப் போய்விடுகின்றனர். இப்படி உருக்குலைத்துப் போடுவதே மனிதருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் குடியேறிவிடுகிற கள்ளமும் கபடமும்தான்.
இவை உண்மையில் நமது இயல்புகளில்லை. இந்த அமைப்பும், சமூகமும்தான் நம்மை இக்கதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இங்கு மனிதர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக நிறுத்தி வைத்து ஆடு புலி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. யாரையும் நம்ப முடியாத, நெருங்கி ஒட்டி விடாதபடிக்கு அன்றாட வாழ்க்கை மனிதர்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது. முன் பின் தெரியாத ஒரு மனிதனைப் பற்றி மனதிற்குள் முதலில் ஒலிப்பது அபாயச் சங்காகவே இருக்கிறது. சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது ஒருவன் சாதாரணமாக முந்திச் சென்றாலும் அவனை ஒரு மிகப் பெரிய எதிரியாக உருவகிக்கிற அறிவுதான் நமக்குள் ஊறிக்கிடக்கிறது. ஒரு புன்னகையை உதிர்ப்பதற்கான விசாலம் இல்லாமல் போயிருக்கிறோம்.
தனது அடையாளத்தை மனிதன் குழந்தைகளிடம்தான் இப்போது பார்க்க முடிகிறது. அதுதான் குழந்தைகளை எல்லோரும் நேசித்துக் கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே எவ்வளவு வயதானவரையும் குழந்தையாக மாற்றி விடுகிற வல்லமை கொண்டு இருக்கின்றன. இந்தக் குழந்தைகளுக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது. பணம் குறித்த பிரக்ஞையே கிடையாது.. இன்னும் சொல்லப் போனால் அதனாலேயே அவர்கள் குழந்தைகளாக இருக்கிறார்கள். அவர்களது பாதங்கள் அப்படி ஒரு மென்மையாய் இருக்கின்றன.
*
இது வேறு இதிகாசம்
"படத்தில் சில காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. காட்சியாக பதியும்போது ஒன்றிப் போகிறோம். ஆனால் இந்தக் காட்சியை காமிராவை வைத்து சிலர் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ஒரு பதற்றம் வருகிறது". ஸ்ரீவில்லிப்புத்தூரில் இந்தப் படம் திரையிட்டு முடித்தபிறகு பார்வையாளர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார். படப்படிப்புக் குழுவினருக்கு நேர்கிற ஒரு அனுபவத்தை பார்வையாளர்கள் பெரும்பாலும் உணரத் தலைப்படுவதில்லை. அந்தக் காட்சியோடு ஒன்றியோ அல்லது ஒன்றாமலோ பார்த்துக் கடந்து போகிறவர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக படம் என்ன சொல்கிறது என்று மட்டும் பார்த்து விமர்சனம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். காமிரா கோணம், இடம், வெளிச்சம், வசனம், தூரம், பொழுது, பாத்திரங்கள், அவர்களுக்கான நடை உடை பாவனைகள் என எல்லாம் முன்னரே திட்டமிடப்பட்டு, மாறி மாறி ஒத்திகை பார்க்கப்பட்டு எடுக்கப்படுகிற கதைப்படங்களின் காட்சிகள் குறித்து விரிவாக பேசமுடிகிற, பேசப்படுகிற காலம் இது. ஆவணப்படங்கள் வேறுபடுகிறது. |
ஒருக் குறிப்பிட்ட காட்சியை அந்த நேரத்தில் தவறவிட்டால் வேறு எப்போதும் எடுக்கவே முடியாது. ஒருக் குறிப்பிட்ட வார்த்தையில் கிடைக்கும் உயிர்த் துடிப்பான அர்த்தங்களையும் தொனியையும் அந்த நேரத்தில் தவறவிட்டால் மீண்டும் பெறவே முடியாது. (திரும்ப எத்தனை முறை அதே வசனங்களை சொல்ல வைத்து எடுத்தாலும் முதல் தடவை வெளிப்பட்ட அந்த புத்தம்புதுத் தன்மை கிடைக்காது). ஆவணப்படத்தின் சிறப்பே இதுதான். ஒவ்வொரு ஆவணப்படத்திலும் அதில் சொல்லப்பட்டவைகளை, எடுக்கப்பட்ட காட்சிகளைத் தாண்டி சொல்லப்படாதவைகள் நிறையவே இருக்கின்றன. எடுக்கப்படாத காட்சிகள் எவ்வளவோ தோன்றி மறைந்திருக்கின்றன. அவைகளை படம் பிடிக்கிற போது, படம் பிடிக்க முடியாத போது ஏற்படுகிற வலியும், வேதனையும் ஒரு ஆவணப்படக்காரனுக்கு மட்டுமே சொந்தமாகிறது.
கொலை செய்யப்பட்ட நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் சக்கனின் மகள் ஜமுனாவிடம் பேசிக் கொண்டு இருந்தோம். பரிதவிப்போடு காற்று, சத்தம் போட்டுக் கொண்டிருந்த வெட்ட வெளி அது. தந்தை மீது கொள்ளை கொள்ளையாய் பாசம் வைத்திருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பெண் முதலில் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தாள். தந்தையின் நினைவுகள் வர ஆரம்பித்ததும் கண்கள் பொங்கிப் பொகின்றன. அடக்க மாட்டாமல் அழ ஆரம்பிக்கிறாள். கண்ணீர்த் துளிகள் நிற்கவேயில்லை. என் மகளின் வயதொத்த அந்தக் குழந்தையின் சோகம் பற்றிக்கொள்ள, 'ஐயோ' என நானும் கதறி திரும்பிக் கொள்கிறேன். தொடர்ந்து உதவி இயக்குனரான காமராஜ் அவளிடம் ஆறுதலாய் பேசுகிறான். எல்லாவற்றையும் ஓளிப்பதிவாளர் பிரியா கார்த்தி பானசோனிக் 62 த்ரீ சி.சி.டியின் அந்த சின்ன மானிட்டரில் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அன்று இரவு எடுத்த காட்சிகளை டிவியில் பார்க்கிறோம். 'ஐயோ' என்று என் சத்தமும் கேட்கிறது. கார்த்தி என்னைப் பார்த்து லேசாய் சிரிக்கிறான். பேட்டி எடுக்கும் போது இடையிடையே 'உம்' கொட்டுவதை, தேவையில்லாமல் குறுக்கிடுவதை தவிர்க்க வேண்டும் என எத்தனையோ முறை எங்களுக்குள் பேசியிருக்கிறோம். ஆனாலும் இந்த "ஐயோ". ஒருவர் திட்டமிட்டு அழும்போது, அதை ஒருவர் திட்டமிட்டுக் காட்சிப்படுத்தும் போது இந்த 'ஐயோ' வராது. இரத்தமும் சதையுமான நேரடிக் காட்சிக் களத்தில் இயக்குனர்களோ, ஓளிப்பதிவாளர்களோ இல்லை. மனிதர்களே இருக்கிறார்கள். பியூச்சர் பிலிம் படப்பிடிப்புகளில் ஒருவர் தத்ரூபமாக அழும்போது, சுற்றி நிற்பவர்கள் கைதட்டி அதைப் பாராட்டி விட முடியும். இங்கு கனத்த இதயத்தோடுதான் அதைத் தாங்க வேண்டும். அழுவதாக ஒருவர் நடித்து முடிந்ததும், அவரது இயல்பான நடவடிக்கைகளுக்கு சட்டென தன்னை மாற்றிக் கொள்ள முடியும். இங்கோ, படப்பிடிப்புக் குழுவினர் அங்கிருந்து அகன்ற பிறகும், அழுதவர்கள் கிளறி விடப்பட்ட நினவுகளிலிருந்து மீளாமல் விசும்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக ஆவணப்படங்களைக் காட்டிலும் மற்ற படங்கள் தரம் குறைந்தது என்று அர்த்தமில்லை. தன்மையும், சூழலும் வித்தியாசமானது என்பதுதான் சொல்ல வந்த விஷயம்.
இப்படி ஏராளமான அனுபவங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த வெளியாக 'இது வேறு இதிகாசம்' எடுத்த ஒன்றரை வருட காலம் அலைகளென ததும்பிக் கிடக்கிறது. ஐம்பத்தெட்டு மணி நேரம் ஷூட்டிங் நடத்தி அதை 65 நிமிடங்களுக்குள் சொல்ல முயன்ற காரியம் இது. அசாம், காஷ்மீர் போன்ற பெரும் பதற்றம் நிறைந்த பிரதேசங்களில் கூட தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை மார் தட்டிச் சொல்கிற தேசத்தில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாடார்மங்கலம் போன்ற பஞ்சாயத்துக்களில் பத்துவருடமாக தேர்தல் நடத்த முடியாமல் போன அவலத்தைச் சொல்கிற கதை இது. வேர்களைத் தேடிப் பிரவேசித்து, பலப்பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் படிந்திருக்கும் அழுக்குகளின் தடம் பார்த்த வரலாறு இது. சமூகச் சிக்கல்களும், நுட்பமான அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கின்ற ஒரு களத்தை காட்சிப்படுத்துவது எத்தனை சோதனைகளும், சவால்களும் நிறைந்தது என்பதை உணர்ந்தபடியே ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டியதிருந்தது.
2005 அக்டோபரில் திருவண்ணாமலையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில் "பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்கச்சினேந்தல் பஞ்சாயத்துக்களில் பத்துவருடமாக தேர்தல் நடத்த முடியாமல் இருப்பதை கண்டித்தும், அதை சமூகத்தின் மனசாட்சியான எழுத்தாளர்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது, களமிறங்கி பிரச்சாரம் செய்தாக வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றிய தருணத்திலிருந்து எங்கள் கரிசல் குழுவினரின் காமிரா இயங்க ஆரம்பித்தது. 2005 டிசம்பர் 25ம் தேதி மதுரையில் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரதம் இருந்த போது அதை முழுக்க படம் பிடித்து வைத்துக் கொண்டோம். பிரச்சினையின் தீவீரத்தையும் ஆழத்தையும் நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தோம். பத்து வருடமாகத் தேர்தல் நடத்தவில்லை, இனி சுழற்சி முறையில் இந்த நான்கு தொகுதிகளும் பொதுத் தொகுதியாகிவிடும் என அங்கிருந்த ஆதிக்க சக்திகள் மௌனப்புன்னகையோடு எதிர்பார்த்திருந்த வேளை அது. சுழற்சி முறையில் மாற்றம் வரக்கூடாது, பத்தாண்டுகள் முழுமையாக தலித் மக்கள் பஞ்சாயத்துத் தலைமையில் இருந்த பிறகே பொதுத் தொகுதியாக்க வேண்டும் என எழுத்தாளர்களும், முற்போக்கு சக்திகளும் அரசை வலியுறுத்திய காலம் அது. இந்த முக்கியப் புள்ளியிலிருந்து எங்கள் பயணம் ஆரம்பமானது.
உசிலம்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். "அதோ தெரிகிறதே, அந்த மலைகளுக்கு அடிவாரத்தில் பாப்பாப்பட்டி இருக்கிறது" என்று எங்களை அழைத்துச் சென்ற எழுத்தாளர் வெங்கடேசன் சொல்லிக் கொண்டிருந்தார். "அதுதான் பிறன்மலை. அதனால்தான் அவர்களுக்கு பிறன்மலைக்கள்ளர்' என்று பெயர் வந்திருக்க வேண்டும் என்றார். அந்தக் கடினமான குன்று ஏராளமான கதைகளைச் சுமந்தபடி எங்களோடு வெயிலில் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. "குற்றப்பரம்பரைச் சட்டம் பற்றியும், அதில் பிறன்மலைக் கள்ளர்கள் வேட்டையாடப்பட்டதையும், பசும்பொன் முத்துராமலிங்கம், ஜீவா போன்றவர்கள் பிரிட்டிஷாரின் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியதையும் வெங்கடேசன் சொல்லிக்கொண்டு இருந்தார். "ஒருகாலத்தில் இப்படி அடக்கி ஒடுக்கப்பட்ட இவர்கள், இன்னொரு சமூக மக்களை எப்படி அடக்கி வைக்கிறார்கள் என கேட்டேன். "இந்திய சமூகத்தின் முக்கியக் கூறாகவும், சாதீயக் கட்டுமானத்தின் நுட்பமாகவும் இதுவே இருக்கிறது" என்றார். இதற்கான காரணங்களை மிக அழுத்தமாகவும், எளிமையாகவும் பேராசிரியர்கள் சிவசுப்பிரமணியனும், தொ.பரமசிவமும் பிறகு சொன்னார்கள். "தங்களுக்கு மேலே ஒரு ஜாதி இருக்கக் கூடாது என்று நினைக்கிற அதே வேளையில் தங்களுக்குக் கீழே ஒரு ஜாதி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்". பத்து வருடமாகத் தேர்தல் நடத்த முடியாமல் போனதைச் சொல்ல வரும்போது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஆதிக்க சாதிகள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு நகரத் தொடங்குகிற போது, அந்த இடத்திற்கு பிற்படுத்தப்பட்ட சாதியினர் வந்ததையும், தலித் மக்கள் தொடர்ந்து அடக்கப்பட்டு வருவதையும் புரிய வைக்க வேண்டியிருந்தது.
பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் கிராமங்களுக்கு ஐந்து முறைகளுக்கும் மேலாகச் சென்று வந்திருக்கிறோம். முதன்முறையாகச் சென்ற போது பதற்றமே எங்களுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது. ஊரின் நடுவே வைக்கப்பட்டிருந்த மூக்கையாத் தேவரின் சிலையும், அதன் கீழே சுவரில் "நான்கு தொகுதிகளையும் பொதுத் தொகுதியாக்க வேண்டும்" என்ற வாசகத்துடன் ஓட்டி வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகளும் எங்களை வரவேற்றன. தயங்கியபடியே ஒரு டீக்கடையில் நுழைந்தோம். அதை நடத்திக் கொண்டிருந்த பெண்மணி மிகுந்த வாஞ்சையோடும், பரிவோடும் எங்களை உபசரித்தார். மெல்லப் பேச்சுக் கொடுத்தோம். டீக்கடைக்குள் இருந்தவர்களில் ஒருவர் "எந்தப் பத்திரிக்கையிலிருந்து வருகிறீர்கள்?" என்று மிகச் சாதாரணமாகக் கேட்டார். வரும் அந்நியர்கள் பெரும்பாலும் பத்திரிக்கையாளர்கள் என்பதை அந்த மக்களால் அடையாளம் கண்டுவிட முடிகிறது. மிக வாடிக்கையான ஒன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். பத்துவருடங்களாக இந்த விஷயம் குறித்து முக்கியப் பத்திரிக்கைகள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதை நாங்கள் சேகரிக்க ஆரம்பித்திருந்தோம். வாய்க்கு வந்த ஒரு பத்திரிக்கை பெயரைச் சொன்னோம். பிறகு 'எதுக்கு இந்த ஊர்ல பத்து வருசமா தேர்தல் நடக்கல" என்றோம். டீக்கடைப் பெண்மணி "சாமிக்கு ஆகாதிங்க... மொதல்ல ஒருத்தன் பஞ்சாயத்துத் தலைவரா நின்னான். அவன் வீட்டுல இடி விழுந்தது. அதுக்கப்புறம் ஒருத்தன் செத்துப் போனான். இன்னொருத்தன் வீட்டுல நாலு ஆட்டுக்குட்டிய நாய் தூக்கிட்டுப் போய்ட்டு. அதுதான் சாமிக்கு பயந்து நாங்க பொதுத் தொகுதியாக்க வேண்டும் என கேட்கிறோம்" என்றார். அங்கிருந்து பஞ்சாயத்து அலுவலகம் சென்றோம். பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. சில வாலிபர்கள் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். மிக இயல்பாக பேசினார்கள். "அவங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித்தியாசமுமில்ல. வித்தியாசம் பாக்குறதுமில்ல" என்றான் ஒருவன். "லாரி டிரைவரா இருக்கேன். வெளியூர்ல போனா கேக்காங்க. இவ்வளவு கொடுமைக்காரங்களா நீங்கன்னு சொல்றாங்க. காலாகாலமா இப்படி இருக்கு. அதுக்கு நாங்க என்ன செய்ய?" என்றான் இன்னொருவன். நாட்டாமங்கலத்தில் கோயில் பூசாரி "அவங்களா நிக்க மாட்டேன்னு சொல்றாங்க. பிள்ளங்க பிள்ளைங்களாத்தான் இருக்கோணும். பெரியவங்களாகக் கூடாதுன்னு அவங்களே விலகிக்கிறாங்க. ஒங்களுக்கு வெளியே இருந்து பாக்கும் போது வித்தியாசமாத் தெரியலாம்" என்று சொன்னவர் காமிரா பதிவு செய்வதைப் பார்த்து கோபமா "ஏ..எடுக்காதப்பா" என அதட்டினார். தலித் மக்கள் வசிக்கும் பகுதி எங்கும் செல்லவில்லை. ஒரு விஷயம் தெளிவாக எங்களுக்கு அன்றைக்கு புரிந்தது. சின்னப் பையன்களிலிருந்து வயதானவர்கள் வரை இந்தப் பிரச்சினை குறித்து ஒரே தொனியில் பேசுகிறார்கள். தொடர்ந்து அந்த ஊர்களுக்குள் உரையாடல்கள் நடந்து கொண்டே இருந்திருக்கின்றன.
பஞ்சாயத்துத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட 1996லிருந்து நீளும் இந்தப் பிரச்சைனையில் யார் யாரெல்லம் இதுவரை சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், எந்த இயக்கமெல்லாம் அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சித்தது என்பதை ஆராய ஆரம்பித்தோம். மிக முக்கிய பங்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு இருந்தது. முதல் நான்கைந்து வருடங்கள் தேர்தல் நடத்தவே முடியாமல், யாரும் போட்டியிட முன்வராமல் இருந்த இறுக்கத்தை உடைத்த இயக்கம் அதுவாகத்தான் இருந்தது. அதன் பொதுச்செயலாளர் திருமாவளவனை பேட்டி கண்டோம். அந்த இயக்கம் நடத்திய போராட்டங்கள் குறித்த பதிவுகள் பத்திக்கைச் செய்திகளாகவோ, வீடியோக்களாகவோ இருந்தால் தாருங்கள் என்றோம். தருவதாகச் சொன்னார். ஆனால் தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டும் எங்களுக்கு கிடைக்கவேயில்லை. நாங்களாக பெருமுயற்சி எடுத்து மக்கள் கண்காணிப்பகத்திலிருந்து 'பொது விசாரணை' குறித்த வீடியோக் காட்சிகளை பெற்றோம். காலச்சுவடு பத்திரிக்கை ஆசிரியர் கண்ணன் தலைமையில் எழுத்தாளர்கள் ரவிக்குமார், மேலாண்மை பொன்னுச்சாமி, சிவசுப்பிரமணியன் போன்றவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து வந்ததைக் கேள்விப்பட்டோம். கண்ணனை தொடர்பு கொண்டோம். அது குறித்து காலச்சுவட்டில் வந்த கட்டுரை, புகைப்படங்களை தந்து உதவினார். அந்தக் குழுவில் சென்று வந்த மேலாண்மை பொன்னுச்சாமி எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய மாநிலத் தலைவர்களில் ஒருவர். நாங்களும் அதே அமைப்பைச் சார்ந்தவர்களாயிருப்பதால் வேண்டுமென்றே அவரிடம் பேட்டி எடுப்பதைத் தவிர்த்து, பேராசிரியர் சிவசுப்பிரமணியனிடம் சென்று பதிவு செய்து கொண்டோம். பஞ்சாயத்துத் தேர்தல் குறித்தும், அதன் ஜனநாயகம் குறித்தும் விரிவான ஆராய்ச்சிகள் நடத்தி வருபவரும், அது குறித்து ஏறத்தாழ முப்பது புத்தகங்களுக்கு மேல் எழுதியிருப்பவரும், ராவ் காந்தி பவுண்டேசனில் முக்கிய உறுப்பினராக இருப்பவரும், பொது விசாரணையில் ஒரு நீதிபதியாக இருந்தவருமான காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் பழனித்துரையை பேட்டி கண்டோம். பாப்பாப்பட்டி ஊருக்குப் பக்கத்து ஊரைச் சேர்ந்தவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனிடம் சென்று பிரச்சினையின் பின்புலங்களைத் தெரிந்து கொண்டோம். இந்த நான்கு பஞ்சாயத்துக்களிலும் இருக்கிற தலித் மக்களிடம் அச்சத்தை உறைய வைத்த, 1996ல் நடந்த மேலவளவுப் படுகொலை குறித்த விஷயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். நேரில் சென்று கொலை நடந்த இடத்தைப் பார்த்தோம். அதைப் பார்த்தவர்களிடம் பேசினோம். ஒன்றிலிருந்து ஒன்றாக தேடி அலைந்து கொண்டே இருந்தோம். ஆவணப்படத்திற்கு இதுதான் முக்கியமானது. எதையும் விடாமல் தொடரும்போதுதான் ஒன்றின் முழுப் பரிமாணத்தை உணர முடியும். எல்லாம் அறிந்து கொண்டு எடுக்கப்படுவதில்லை ஆவணப்படம். களத்தில் நின்று அறிந்து கொள்வதுதான் ஆவணப்படம் என நான் நினைக்கிறேன். அதை மற்றவர்களும் சரியாக அறியச் செய்யும் போது அந்த முயற்சி முழுமை பெறுகிறது.
இவைகளுக்கு ஊடாக காட்சிகள் வேகமாக மாறிக் கொண்டு வந்தன. மதுரைக்கு புதிய கலெக்டராக உதயச்சந்திரன் பொறுப்பேற்கிறார். உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்படுகின்றன. முதலில் இந்த நான்கு பஞ்சாயத்துக்களிலும் சுழற்சி முறையில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவு செய்கிறது. இடது சாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி எல்லோரும் சுழற்சி முறையில் மாற்றம் கூடாது, தனித்தொகுதிகளாக நீடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. அரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு அறிவிக்கப்படுகிறது. அரசின் உறுதி ஆதிக்க சக்திகளின் உறுதியை உடைக்கிறது. கலெக்டரின் முயற்சியால் நான்கு பஞ்சாயத்துக்களிலும் தலித் மக்கள் பொறுப்புக்கு வர வேகமாக காய்கள் நடத்தப்படுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக களத்தில் நின்று வேலை செய்கிறது. முக்கியமான இரண்டு கட்சித்தோழர்களை சந்தித்து பேசினோம். மனுத்தாக்கல் நடை பெறுகிறது. கீரிப்பட்டி பஞ்சாயத்தில் ஊர் சார்பாக நிறுத்தப்படுகிறவர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடியாகி சி.பி.எம் சார்பில் நிறுத்தப்பட்ட பால்ச்சாமியின் வேட்பு மனு மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட நான்கு பஞ்சாயத்துக்களில் ஜனநாயகத்தின் முதல் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. பால்சாமியிடம் பேட்டி எடுத்துக் கொண்டோம். பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும் போட்டி நிலவுகிறது. "யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள், ஆனால் தேர்தெடுக்கப்படுகிறவர்கள் முழு ஐந்து வருடங்களும் பதவியில் நீடிக்க வேண்டும்" என எழுத்தாளர் சங்கம் சார்பில் அந்த ஊர்களுக்குள் சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள். எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வனின் கருத்துக்களை கேட்டு அறிந்தோம். தேர்தல் நடக்கிறது. பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும் ஊர் சார்பாக நிறுத்தப்படுகிறவர்களே வெற்றி பெறுகிறார்கள். பதவிப் பிரமாணம் அந்த ஊர்களில் கோலாகலமாக நடைபெற, கீரிப்பட்டியில் பதற்றத்தோடு நடந்து முடிகிறது. கலெக்டர் உதயச்சந்திரனிடம் பேட்டி எடுத்துக் கொண்டோம். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைச் சந்திக்க பலமுறை முயன்றோம். மலேசியா சென்றிருக்கிறார், வெளியூர் சென்றிருக்கிறார் என்ற பதிலே கிடைத்தது. வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து அரசு சார்பில் கௌரவிக்கப்பட்டு சமத்துவப் பெருவிழா நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் வெற்றி என்று கொண்டாடப்படுகிறது. பிரண்ட்லைன் பத்திரிக்கையில் "மக்கள் மனதில் மாற்றம்" என கட்டுரை வெளியாகிறது. எல்லாவற்றையும் நேரடியாக பதிவு செய்து கொண்டோம். உள்ளுக்குள் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. "இது வெற்றியா" என்று ஒரு கேள்வி எங்களுக்குள் அடங்காமல் எழுந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் இதுவரை எடுத்து வந்த காட்சிகளின் ஒட்டுமொத்த உருவம் மெல்ல மெல்ல புலப்பட ஆரம்பித்தது.
இந்த நேரத்தில்தான் ஒரு பெரும் அதிர்வை தந்தது நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் படுகொலை. கனத்த இதயத்தோடு மீண்டும் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். மேலவளவுப் படுகொலைக்கும், நக்கலமுத்தன்பட்டி படுகொலைக்கும் இடையில் கடந்திருக்கும் பதினோரு வருடங்களில் நடந்த சிறு மாற்றம் இதுதான். அன்று மேலவளவில் ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவராவதையே அனுமதிக்க முடியாது என்ற நிலைமை இருந்தது. இன்று அவர்கள் பெயருக்கு இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் பஞ்சாயத்தை நடத்துகிற பொறுப்பு எங்களிடமே இருக்க வேண்டும், அதை மீறி அதிகாரத்தை எடுத்துக் கொள்ள தலித்கள் முனைந்தால் விட மாட்டோம் என்கிற எச்சரிக்கையை ஆதிக்க சக்திகள் சொல்லியிருக்கின்றன. இதற்கு ஒரு நீண்ட போராட்டம் நடத்தியாக வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. மீண்டும் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஊர்களுக்கு ஐந்தாவது முறையாகச் சென்றோம். பெரும்பாலும் தலித் மக்கள் வாழும் பகுதியில் படபிடிப்பு நடத்தினோம். தெருக்களில் இளைஞர்களையேப் பார்க்க முடியவில்லை என்பது சிந்தனையில் பட்டது. விசாரிக்கும் போதுதான் தெரிந்தது. எந்த அவமானங்களையும் சகித்துக் கொண்டு வாழ்ந்துவிட்ட மனிதர்கள் சென்ற தலைமுறையினராக இருக்கிறார்கள். இன்று எதிர்த்து நிற்கும் மனோபாவங்கள் தலையெடுக்கின்றன. ஊருக்குள் இருந்தால்தானே வம்பு என்று வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் திருப்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று விட்டிருந்தனர். "ஊரைப் பகைச்சுட்டு, கவர்மெண்டை நம்பி போயிட்டான். எங்களைக் கேட்டிருந்தா நிக்க விட்டிருக்க மாட்டோம்' என கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பால்ச்சாமியின் சகோதரி கண்ணிர் மல்கச் சொன்னார். பஞ்சாயத்துத் தலைவர்களோடு ஏ.கே 47 ஏந்திய காவலாளிகள் நடந்து சென்றார்கள். பார்வையாளர்களுக்கு சொல்லப் போகும் சித்திரம் இப்போது தெளிவானது.
இந்தப் படத்தை பின்னணிக் குரல்களின்றி சொல்ல வேண்டும் என்பதில் எங்கள் குழு உறுதியாய் இருந்தது. எத்தனை கவனமாக இருந்தாலும், படம் எடுப்பவர்களே காட்சிகளைப் பற்றிப் பேச ஆரம்பிப்பதால், எதாவது ஒரு இடத்தில் ஒருவித சார்புத் தன்மை ஒட்டிக்கொண்டு இருப்பதாக பார்வையாளன் உணர்ந்துவிடக் கூடும். இந்தப் படம் பேசுகிற விஷயம் மிக நுட்பமானது என்பதால், நாங்கள் அதனை தவிர்க்க விரும்பினோம். பேட்டிகள், காட்சிகள் மூலமே தொகுக்க முயற்சி செய்தோம். இதில்தான் பெரும் வேலையும், சிரமங்களும் இருந்தன. காட்சிகள் கண்ணிகளாக ஒன்றுக்கொன்று தொடர்போடு அடுக்கப்படும் போதுதான் சொல்ல வருகிற விஷயத்தோடு யாரும் பயணிக்க முடியும். இதில் முக்கிய பிரச்சினையாயிருந்தது ஒலிப்பதிவில் இருந்த இரைச்சல். பேட்டிகள் தெளிவாக இருந்தன. ஊர் மக்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை. பல சமயங்களில் காமிராவை எதிரே இருப்பவர்களுக்குத் தெரியாமல் கையாள வேண்டியிருந்தது. கூட்டமாய் மக்கள் பேசும் போது ஒரே சமயத்தில் பலர் பேசுகிறார்கள். யார் பேசுவதும் புரியாமல் போய் விடுகிறது. எங்களிடம் இருந்த குறைந்த தொழில் நுட்ப உபகரணங்களும், சாதனங்களும் இந்த இழப்புகளுக்கு காரணங்கள்தான். இவைகளோடுதான் படத்தொகுப்பு வேலைகளை ஆரம்பித்தோம். திரும்பத் திரும்ப எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்து, உரையாடல்களை எழுதி, தேவையானவைகளை அடுக்கி, ஸ்கிரிப்ட் எழுதி, அதன் அடிப்படையில் படத் தொகுப்பு நடந்தது. சிபிசரவணன் ஏழெட்டு நாட்களும், முனிஷ் மூன்று நாட்களும் எங்களோடு இரவு பகல் அறியாமல் தொடர்ந்து உட்கார்ந்து பணி புரிந்தார்கள். மிக மோசமாக ஒலியமைப்பு இருந்த படியால் சில முக்கிய காட்சிகளை வைக்க முடியாமல் போனது. நாட்டாமங்கலத்தில் ஊர் பொது இடத்தில் ஒரு கல் இருக்கை இருந்தது. அது குறித்து அறிந்திராத நான் அருகிலிருந்த ஒரு தலித் இளைஞனை அதில் உட்கார்ந்து பேசுவதற்கு அழைத்தேன். "அதில் அவங்கதான் உக்கார முடியும், நாங்க உக்காரக் கூடாது" என்று ஒதுங்கினான். மிக முக்கியமான இந்தப் பதிவில் அந்த இளைஞன் பேசுகிற சத்தம் கேட்கவேயில்லை. இழந்தது இழந்ததுதான்.
இன்னொரு முக்கியமான திட்டமிடல், படத்தில் யாரைப்பற்றியும் நேரடியான விமர்சனங்களையோ, பாதகமான பார்வைகளையோ சொல்லாமல் விஷயத்தை மட்டும் அதன் தீவீரத் தன்மையோடு புரிய வைக்க வேண்டும் என நினைத்தது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும் காட்சிகளை மட்டுமே கோர்த்தோம். எந்த சமூக மக்களும் புண்படக் கூடாது, அதே நேரம் நியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ஒரு சமூகக் கடமையாகவே இதில் கவனம் செலுத்தினோம். ஒரு அரசியல் தலைவரின் பேட்டியில் ஒருக் குறிப்பிட்ட சமூகம் குறித்த பெருமிதம் அப்பட்டமாகத் தெரிந்தது. அது அவருக்கும் நல்லதல்ல, படத்திற்கும் தேவையில்லை என முடிவு செய்தோம். விடுதலை