“ஆண்கள் எல்லாம் கொடுத்து வச்சவங்க”
இப்போது ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறேன். தொடர் விளையாட்டு. இலக்கியமாகத்தான். கொஞ்சம் நிர்வாணமாய் நின்று பாருங்கள் எழுதி முடித்த பிறகு தோன்றியது இது. கடிதம் எழுதும் வழக்கம் தேய்ந்து தேய்ந்து காணாமல் போன சமூகத்தில் இப்படி பற்ற வைப்போம் என பட்டது. முத்தையாவாக நான் கடிதம் ஒன்றை சாலமனுக்கு எழுதியிருக்கிறேன். இனி ஒரு பதிவாளர் சாலமனாக பதில் கடிதம் முத்தையாவுக்கு எழுத வேண்டும். யார் என்பதை கடிதம் வாசித்து முடித்த பிறகு சொல்வேன்.
--------------------------
முத்தையா
சென்னை
சாலமன்!
நான்தான் முத்தையா! ஆச்சரியமாக இருக்கிறதா?
நேற்று சண்முகம் வந்தான். ஒரு மாசமாக வராதவன் திடுமென முன்வந்து நின்று “ஏ..லம்பாடி” என்றான். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. “என்னடா.. ஆளையேக் காணோம்” என்று கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன். பக்கத்து இருக்கைக்காரர்கள் திரும்பி பார்த்தார்கள். அலுவலகங்களில் நம் இயலபை தொலைத்துவிட்டுத்தான் உட்கார வேண்டியிருக்கிறது. எதுவுமே இங்கு அமைதியாகத்தான். உனக்கு சிரிப்பு வருமே. கல்லூரி ஹாஸ்டலில் நான் சிரிக்கும்போதும், பேசும் போதும் நீ புத்திமதி சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆட்டோகிராபில்கூட எழுதியிருந்தாய்.... முத்தையாவுக்கு பதிலாக சத்தையா என்று.
சண்முகமும் நானும் வெளியே போய் விளங்காத ரெண்டு டீக்களை பேசிக் குடித்தோம். பிரமோஷனில் நாமக்கல்லுக்கு அடுத்த வாரம் போகிறானாம். பைக்கில் போய்க்கொண்டிருந்தவன் கம்ர்ஷியல் டாக்ஸ் ஆபிஸிற்கு இன்னும் கொஞ்சம் தொந்தியோடு காரில் போகலாம். “நம்ம செட்ல நீதாண்டா பிரமோஷன் எதுவும் ஆகாம கிளர்க்காகவே இருக்கே” என்று வருத்தப்பட்டான். மேலே போகப் போக எவனுக்காவது அடிமையாய் இருந்தாக வேண்டியிருக்கிறது. கூழைக் கும்பிடு, பல்லிளித்தல் எல்லாம் செய்தாக வேண்டும். இயல்புக்கு மீறி எதுவும் நம்மால் முடியாது. அதெல்லாம் அவனுக்குப் புரியாது. திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு ஏறும் வழியில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அந்தி சாயும் வேளையில் உன்னோடு பேசிய கணங்கள் இன்னும் சிலிர்ப்போடு நினைவுகளில் ததும்பிக் கொண்டிருக்கின்றன. நான்கு ஆண்டு காலம் உன்னைப் பார்க்காவிட்டாலும், உன்னோடு பேசாவிட்டாலும், நீ புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன். நான் அப்படித்தான்!
கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு சண்முகம் சென்று விட்டான். அவனுடைய ‘பிராக்டிக்கல்தனங்கள்’ எரிச்சலாயிருந்த போதிலும், இனி அவனை எப்போது பார்க்கப் போகிறோம் என்பது வேதனை தருகிறது. அவன் மட்டும்தான் நம்மோடு படித்ததில் சென்னையில் என் கூட இருந்தவன். சனிக்கிழமைகளில் பாரில் வைத்து ஒரு பெக் அடித்ததும் இரண்டு சிகரெட்டுகள் பற்ற வைத்து எனக்கு ஒன்றைத் தந்தவன். எப்படித்தான், என்னதான் பேசினாலும் கல்லூரி வாழ்க்கையும் கடந்தகாலமும் பேச்சில் வரும். சில நாட்களில் அவனோடு பீச்சுக்குச் சென்று காற்றின் பரவசத்தோடு மணலை அளைந்து கொண்டிருப்பேன். உன்னோடு வந்தாலே போர்தாண்டா என்று சிகப்பாய் போகும் எவளையாவது பார்த்துக் கொண்டிருப்பான். கடைசி வருசம் பம்பாய்க்கு நாம் டூர் போயிருந்த போது நீ கூடச் சொன்னாய், விவஸ்தையில்லாமல் பார்க்கிறான் என்று. பயந்து போகிற மாதிரி அப்படிப் பார்ப்பான். இன்னமும் பார்க்கிறான்.
வேறெங்கோ சென்று விட்டேன். சண்முகம் போனதும் என பக்கத்து சீட்டில் பணிபுரியும் சரண்யா, “யார் சார் இவர்.. அவ்வளவு சந்தோஷப்பட்டீங்க” என்று கேட்டார்கள். சொன்னேன். சொன்னேன் என்றால் நம் கல்லூரி, அரட்டை, சந்தோஷம் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சொன்னேன். ”அப்படியா”, என்றுவிட்டு மௌனமானார்கள். பிறகு “ஆண்கள் எல்லாம் கொடுத்து வச்சவங்க” என்றார்கள். எதற்கு என்றேன். “கூட படிச்சவங்க பழகினவங்களோடு தொடர்ந்து எப்படியோ ரிலேஷன்ஷிப் வச்சுக்கிறீங்க.. ஆனா, பொம்பளைங்க அப்படியில்ல. கல்யாணமானதும் எல்லோரும் எங்கெங்கேயோ போயிருவாங்க. புருஷன், புள்ளைங்க மட்டும்தான்.” என்று சொல்லிவிட்டு பைலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டார்கள். தலை நிமிரவில்லை. மேடம் என்றேன். பதில் இல்லை. நிமிர்ந்தார்கள். கண்கள் தளும்பியிருந்தன. ஸாரி என்று நானும் அமைதியானேன். சரண்யா தனது அருமையான காலங்களையும், நண்பர்களையும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் சட்டென்று உன் ஞாபகம் வந்தது. நானும் உன்னைத் தொலைத்து இருக்கிறேனே. இதில் ஆண்கள் என்ன, பெண்கள் என்ன...
வீட்டுக்கு வந்ததும் என் பழைய சூட்கேஸ் ஒன்றில் அள்ளிப் போட்டு வைத்திருந்தவைகளில் உன் கடிதங்களை தேடினேன். இருபத்தோரு கடிதங்களாய் இருந்தாய். படிக்க ஆரம்பித்தேன். “ஏங்க வச்ச காபி ஆறிப்போகுது... குடிச்சுட்டு படிங்க..”என்றாள் சித்ரா. சரியென்று கத்தினேன். “என்ன சொன்னேன்... ஏன் இப்படி சத்தம் போடுறீங்க..” என்று சொல்லிப் போய்விட்டாள். காபியை மடக் மடக்கென்று குடித்தேன், இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருப்பது போல.
டிகிரி முடித்து விட்டு, கோயம்புத்தூரில் நீ எம்.பி.ஏ படித்தது, சாந்தி தியேட்டர் அருகே செல்லாராம்ஸில் உதவி மேலாளராக இருந்தது, தங்கியிருந்த வீட்டிற்கு எதிரே உள்ள பெண்ணை நீ ரசித்தது, அவள் யாரையோ காதலித்து நுங்கம்பாக்கம் தாண்டி தண்டவாளத்தின் குறுக்கே பாய்ந்தது என்று உன் காலங்கள் மெல்ல மெல்ல எனக்குள் நிரம்பிக்கொண்டு இருந்தன. அடர்த்தியான கவிதைகள் போல ஒவ்வொரு கடிதமும் இருந்தது. ஆமாம், இப்போது கவிதைகள் எழுதுகிறாயா...? எங்கே, கம்பெனியில் மிக உயர்ந்த பொறுப்பிலிருக்கும் நீ ஐம்பது பேருக்கு நல்ல மேய்ப்பனாக வேண்டுமானால் இருக்கலாம். அப்படித்தானே ஆகி விடுகிறது. மார்ஷிலின் நாகர் கோவிலில் ஒரு மரக்கடையில் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறான். கல்லூரி மலர்களில் அவன் வரைந்திருந்த ஓவியங்களை நானும், நீயும் எவ்வளவு ரசித்திருப்போம்.
‘என்னங்க படிக்கிறீங்க...பழைய காகிதங்களை எடுத்து வச்சிருக்கீங்க..” என்றாள் சித்ரா மீண்டும் அருகில் வந்து. “சாலமனின் கடிதம்..” என்றேன். “யாரு” என்று யோசித்தாள். அவமானமாய் இருந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் என்னைப்பற்றி அவளுக்கென்ன தெரியும். அவளைப் பற்றி எனக்கென்ன தெரியும். கல்யாணத்துக்கு நீ வந்திருந்ததைச் சொன்னேன். அது முடிந்துதான் பனிரெண்டு வருஷங்கள் ஆகிவிட்டதே. “எனக்கும் கீதான்னு ஒரு ஃபிரண்டு இருந்தா... கடிதம்லாம் எழுதினா... இப்போ எங்க இருக்காளோ” சொல்லிக்கொண்டு வந்தவள் பதற்றத்துடன் எழுந்து “ஐய்யய்யோ அடுப்புல சப்பாத்தி தீயுது....” என ஓடினாள்.
நான் இந்த கடிதத்தை எழுத உட்கார்ந்தேன். தோன்றியதையெல்லாம் எழுதினேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் லதாவுக்கும், எழாவது படிக்கும் கிஷோருக்கும் சப்பாத்தி கொடுத்து விட்டு அவள் என்னையும் அழைக்கிறாள். சாப்பிடும்போது சித்ரா “அழகிய கண்ணே...” என உதிரிப்பூக்கள் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். பன்னீர் புஷ்பங்கள் படம் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் தியேட்டரிலிருந்து ஹாஸ்டல் வரை நீயும் நானும் நடந்து வந்தது நினைவிலிருக்கிறது.
இந்தக் கணத்தில் விடை பெற நினைக்கிறேன்.
எந்த முகவரிக்கு கடிதம் அனுப்புவது என்று விழித்த போது இரண்டு வருஷத்துக்கு முன்பு திருச்சி ஜங்ஷனில் பெங்களூருக்கு குடும்பத்தோடு நீ சென்று கொண்டிருந்தபோது, சென்னயிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த நான் உன்னைப் பார்த்த கணங்களும், அவசரம் அவசரமாய் நீ தந்த விசிட்டிங் கார்டும் நினவுக்கு வந்தன. கொஞ்சநாள் முன்னால், வீட்டை ஒழுங்கு படுத்திய போது விசிட்டிங் கார்டுகளையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரோவில் வைத்தது ஞாபகத்திலிருந்தது. ஒருவேளை அதில் நீ இருக்க மாட்டாயா என்று பார்த்தபோது சந்தோசம் கொண்டேன். அதிலிருந்த செல்போனுக்கு காலையில் தொடர்பு கொள்ளலாமா என்று நினைத்து வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன். நீ என் இதயத்தில் இருப்பவன். விரல்களில் அல்ல.
அன்று திருச்சியில் என்னைப் பார்க்க உன் பையனோடு வண்டியை விட்டு இறங்கிய போது, அவனது செருப்பு கூட தண்டவாளத்திற்குள் விழுந்து விட்டது அல்லவா. அப்போது அவனுக்கு எட்டு வயதிருக்குமா. என்ன படிக்கிறான். ஒரு பையன் மட்டும்தானே. என்னை உன் மனைவிக்குத் தெரியுமா.
தயவு செய்து ஃபேஸ்புக், ஆர்க்குட் எனத் தேடாதே. செல்போனில் பேசாதே. கடிதம் எழுது. நானும் எழுதுகிறேன்.
அன்புடன்
முத்தையா.
--------------------------
முத்தையா, சாலமனின் உலகத்திற்குள் கொஞ்சம்தான் நாம் எட்டிப் பார்த்திருக்கிறோம். சம காலவாழ்வின் சித்திரங்கள்தானே தானே அல்லது நாம்தானே அவர்கள்.
அடுத்து சாலமனாக யாரை அழைக்கலாம் என யோசிக்கிறபோது அய்யனார், ஜ்யோவ்ராம், கென், செல்வேந்திரன், யாத்ரா, வடகரைவேலன், பைத்தியக்காரன், நந்தா, எஸ்.பாலபாரதி என இன்னும் பலரும் நினைவுக்கு வருகிறார்கள். சீட்டு எடுத்துப் பார்த்து ஜ்யோவ்ராம் சுந்தரை அழைக்கிறேன். அடுத்து சாலமனாக யாரை வேண்டுமானாலும் சுந்தர் அழைக்கலாம். ஒரு ரவுண்டு வந்த பிறகு எதாவது சந்தர்ப்பத்தில் சாலமனாக எழுதவும் அடியேனுக்கு விருப்பம். பார்ப்போம் இந்தத் தொடர் என்ன கதையாகிறது என்று.....
பி.கு: தங்கள் நண்பர்களுக்கு கடிதத் தொடர் ஒன்றை இதுபோல பெண் பதிவர்களும் ஆரம்பிக்கலாமே. தமிழ்நதி, தீபா, மதுமிதா, ராமச்சந்திரன் உஷா, வித்யா யாராவது ஒருத்தர் யோசிக்கலாமே.
*
யாரும் பார்க்கவில்லை!
எத்தனையோ காலமாய் தினமும் இந்த வனப்பகுதியை, அண்ட சராசரம் அதிரும்படியாய்க் கடந்து விடும் டிரெயின் அன்று எதோ கோளாறால் நின்று போனது.
காடு பெரும் கண் கொண்டு இயந்திர மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நீண்ட புழுவை பார்த்தது.
சுதந்திரமாய்ப் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகளும், விலங்குகளும் அங்கங்கு அடைந்து கொள்ளவும், ஒளிந்து கொள்ளவுமாயின.
வேற்றுக் கிரகம் போன்ற புத்தம் புது மண்ணில் மனிதக் கால்கள் பட்டன. பரவின.
மனிதச் சத்தங்களும் சேர்ந்து கொண்டன. யுகங்களின் அமைதி கிழிக்கப்பட்டது.
திடுமென பெரும் ஊளையிட்டு, துடிப்பு உடல் முழுவதும் வெட்ட, டிரெயின் அங்கிருந்து புறப்பட்டது.
தண்டவாளம் முழுவதும் மூத்திரங்களும், மலங்களும், சிகரெட் பாக்கெட்டுகளும், மது பாட்டில்களும், பிளாஸ்டிக் பைகளும் சிந்தி சிதறிக் கிடந்தன.
பறவைகளும், விலங்குகளும் மெல்ல வந்து முகர்ந்து பார்த்தன.
பிளாஸ்டிக் பைகள் காட்டிற்குள் உருண்டு உருண்டு பயணப்பட்டன.
இயற்கையை அள்ளி அள்ளிப் பருகியதின் மிச்சத்துளிகளும் அங்கு கிடக்கத்தான் செய்தன. யாரும் பார்க்கவில்லை.
*
இது பதிவு அல்ல!
வணக்கம்.
வங்கி, தொழிற்சங்க வேலைகள், அவ்வப்போது கூட்டங்கள், பயணங்கள், புத்தகங்கள், நண்பர்களோடு அரட்டை, என கழிந்த நாட்களிலிருந்து திடுமென சென்ற செப்டம்பர் இறுதி வாரத்தில் வலைப்பக்கம் வந்து நின்றேன். இழுத்து வந்து விட்டதில் பெரும் பங்கு தீபாவுக்கு உண்டு. எதாவது பதிவு போட்டுவிட்டு பேசாமல் இருந்தேன். தெரிந்த இரண்டு மூன்று பேருக்கு மட்டும் தகவல் தெரிவித்தேன். ஒரு நண்பர் “நல்லா எழுதுறீங்க... நிறைய பேருக்கு போய்ச் சேரணும்” என்று நிறைய இ-மெயில்களைச் சேகரித்து அனுப்பி வைத்தார். ஓ, இப்படி அனுப்ப வேண்டும் போல என்று நானும் அதன்படியே செய்தேன். “ஏன் இப்படி தொந்தரவு செய்கிறீர்கள்... “ என்று ஒருவர் கோபப்பட்டு மெயில் அனுப்பினார். பிறகு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் பேசும்போது, “ஒங்க பிளாக்கை நா படிச்சுட்டு வர்றேன்... நீங்க தமிழ்மணம், தமிழிஸ்ல சேருங்க என்று முகவரி சொன்னார். அங்கு போன பிறகுதான் எத்தனை பேர் இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், இது எவ்வளவு பெரிய உலகம் என்பதை புரிந்து கொண்டேன். என்னை பலரிடமும் கொண்டு போய்ச் சேர்த்ததில் தமிழ்மணத்திற்கும், தமிழிஸுக்கும் பெரும் பங்கு உண்டு. நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
இதர பிளாக்கர்களைப் பார்த்த பிறகு, அவர்களின் டெம்ப்ளேட்டுகளை விதவிதமாய்ப் பார்த்து நானும் அடிக்கடி டெம்ளேட்டுகளை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டேன். சின்னக்குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைக்கு புதுசுபுதுசாய் ஆடைகள் செய்து அழகு பார்ப்பது போல் ஒரு சுவராஸ்யம். இனி மாற்றுவதாய் எண்ணம் இல்லை.
மண்டையைப் பிசைந்து, ரொம்பத் தீவீரமாக அலசி எல்லாம் எழுதுவதில்லை. எல்லோருக்கும் காட்ட முடிகிற எனது டைரியின் பக்கங்களாகவே பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். காலையில் எழுந்து எனக்குப் பிடித்ததை, பாதித்ததை, மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றுவதை பதிவு செய்துவிட்டு, வங்கிக்குச் சென்று விடுவேன். இரவில் வந்து பின்னூட்டங்களுக்கு பதில்கள் போடுவதும், எனக்குப் பிடித்த வலைப்பக்கங்கள் சென்று படிப்பதும் நடக்கிறது. நான் சிரிக்க, பிரமிக்க, லயிக்க மயங்க இங்கு நிறைய நிறைய இருக்கிறார்கள். வலைப்பக்கங்களில் படிப்பது திருப்தி அளிக்கிறது என்றாலும் புத்தகங்கள் படிப்பது குறைந்து போய்க் கொண்டிருக்கிறது. வருத்தம்தான். சரி செய்ய வேண்டும். இதுவரையில் நான் எழுதியதில் கொஞ்சம் இலக்கியமாகத் தேறும் என நினைக்கிறேன். அவைகளை மேலும் செழுமையாக்கி புத்தகமாக கொண்டு வரலாம் என ஒரு ஆசை இருக்கிறது.
சந்தோஷமோ, கோபமோ அப்படியேத் தெரிவித்துவிட வேகம் வருகிறது. இப்படித்தான் ‘அறிவற்றவர்கள்’ என்னும் வார்த்தையும் ஒரு பதிவில் வெளிப்பட்டது. பலர் அந்தப் பதிவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் நெருக்கமானவர்கள் ‘கொஞ்சம் நிதானமாக எழுதலாமே’ என இ-மெயிலிலும், போனிலும் உரிமையுடன் சொன்னதை கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறேன். சொல்ல வந்ததை அவர்கள் குறை கூறவில்லை. சொல்லிய விதம் சரியில்லை என்றார்கள்.
டிசம்பர் மாதத்திலிருந்து, வலையுலகம் பற்றி தொடர் ஒன்றை செம்மலர் மாதப் பத்திரிக்கையில் எழுதி வருகிறேன். வலைப்பக்கங்கள் குறித்த என் அனுபவங்களை வெளிப்படுத்தியும். பிடித்த வலைப்பக்கங்களை அறிமுகம் செய்தும், முக்கிய பதிவுகளை எடுத்துக் காட்டியும் வருகிறேன். இதுவரை ஜ்யோவ்ராம் சுந்தர், தீபா, ராமச்சந்திரன் உஷா, தங்கராசா ஜீவராஜ், அனுஜன்யா, செல்வேந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரை குறிப்பிட்டு இருக்கிறேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். எழுத வேண்டும்.
வலைப்பதிவாளர்களில் வடகரை வேலன் அவர்கள் சிவகாசி வந்திருக்கும்போது என்னைத்தேடி வங்கிக்கிளைக்கு வந்திருந்தார். நான் அன்று லீவு. கிளையில் போன் நம்பர் பெற்று, பேசி, என் அழைப்பின் பேரில் சாத்தூர் வந்தார். அவர்தான் நான் நேரில் சந்தித்த முதல் வலைப்பதிவாளர். அருமையானவர். வலைப்பதிவாளர்களோடு என் வாசலைத் திறந்து வைத்தவர் அவர்தான். அனுஜன்யாவோடு இருமுறை பேசி இருக்கிறேன். ஜ்யோவ்ராம்சுந்தரோடு பேசியிருக்கிறேன். செல்வந்திரேனோடு பேசிக்கொண்டு இருக்கிறேன். தாமிராவோடும், முரளிக்கண்ணனோடும் பேசியிருக்கிறேன். அவர்களது முயற்சியால் சென்னைக்கு வந்திருந்தபோது நம் நண்பர்கள் சிலரை சந்தித்து ஒரு டீக் குடிக்க முடிந்தது. மகிழ்ச்சியான தருணங்கள் அவை. வலைப்பக்கத்தில் அறிந்து கொண்டிருந்தாலும் எப்போதாவது முடிந்தால் நாம் ஒருவரையொருவர் பார்ப்பதும் அற்புதமானதுதான். எல்லோரும் மனிதர்கள்தானே.
இந்த நட்சத்திர வாரம் படு உற்சாகமாக கழிந்தது. தினமும் இரண்டு பதிவுகள் இட்டிருக்கிறேன். ரொம்ப மெனக்கெடவெல்லாம். இல்லை. ஒரே மாதிரியான பதிவுகள் இருக்கக் கூடாது என்று மட்டுமே கவனமாயிருந்தேன்.எப்படியிருந்தது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னைச் செப்பனிடவும், செழுமை படுத்தவும் உங்களுக்கும் உரிமை உண்டு.
நட்சத்திர வாரத்திலிருந்து விடைபெறுகிறேன். வழக்கம் போல நாளை சந்திப்போம்.
நன்றி.
அன்புடன்
மாதவராஜ்
இந்திய வரலாற்றில் இன்று முக்கிய தினம்!
இதே மார்ச் 29ம் நாள்தான்! இன்று போல அதுவும் ஞாயிற்றுக்கிழமைதான்! 152 வருடங்களுக்கு முன்பு பராக்பூரில் வங்காளப்பிரிவு சேனையில் இருந்த மங்கல் பாண்டே புதுவகை என்பீல்டு துப்பாக்கியை உபயோகிக்க மறுத்தார். ஆங்கிலேய சார்ஜெண்ட்டுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. 1857 ஏப்ரல் 8ம் தேதி மங்கல்பாண்டே தூக்கிலிடப்பட்டார். இந்திய வரலாற்றின் மகத்தான அத்தியாயமான 1857 முதல் சுதந்திரப் போருக்கான பொறி இப்படித்தான் வெடித்தது.
புதிதாக வந்த என்பீல்டு துப்பாக்கியின் தோட்டாவில் பசுக்கொழுப்பும், பன்றிக் கொழுப்பும் தடவப்பட்டிருக்கிறது என்னும் செய்திதான் இந்த உக்கிரம் நிறைந்த போராட்டத்திற்கு காரணம் என்று அறியப்பட்டாலும், ஏற்கனவே புகைந்து கொண்டிருந்தது நெருப்பாக பற்றிய இடம் மட்டுமே அது என்பதுதான் உண்மை. இந்தியச் சிப்பாய்களும், வெள்ளைச் சிப்பாய்களும் ஒரே படையில் இருந்த போதும், வெள்ளைச் சிப்பாய்களுக்கு நல்ல ஊதியம், வீடு, உணவு என்று கவனிக்கப்பட்டார்கள். நமது சிப்பாய்கள் அவர்கள் குடும்பங்களோடு ஒரே கொட்டடியில் ஆடு மாடுகளைப் போல தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்தியச் சிப்பாய்களுக்கு வரி உண்டு. பென்சன் கிடையாது. இப்படி பல காரணங்கள் இருந்தன.
1857 மே மாதம் 10ம் தேதி மீரட்டில் இருந்து யுத்தம் துவக்கப்பட்டது. எதிர்பாராத ஆங்கிலேய ஆபிசர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு இடமாய் மீட்டுக்கொண்டு “டெல்லி சலோ” என முழக்கமிட்டு குதிரைகளில் விரைந்தார்கள். போகிற வழிகளில் அங்கங்கு படைப்பிரிவுகளில் இருந்த இந்தியச் சிப்பாய்கள் தங்களை அந்த பயணத்தில் இணைத்துக் கொண்டனர். இட்டவா மாகாணத்தின் கலெக்டர் ஆலன் விக்டோ ஹியும் சிப்பாய்கள் வரும் பாதையில் பெரும் குழிகளைத் தோண்டி வைத்தான். சூழ்ச்சி பலிக்கவில்லை. எதிர்கொள்ள முடியாமல், உயிர் பிழைக்க இறுதியில் பெண்வேடம் தரித்துத் தப்பினான்.( இந்த தந்திரக்காரன்தான் பின்னாளில் இந்திய தேசீய காங்கிரஸ் கட்சியை உருவாக்கினான்!)
டெல்லி நமது சிப்பாய்களின் வசமானது. இரண்டாம் பகதூர்ஷாவை மன்னராக்கி, கிராம பஞ்சாயத்து முறையில் ஜல்சா கமிட்டி அமைத்தனர்.ஒவ்வொரு படைப்பிரிவிலிருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்றைய சுதந்திர இந்தியாவில் செய்யத் துணியாத முற்போக்கான பனிரெண்டு கட்டளைகள் அன்று அறிவிக்கப்பட்டன. அதில் முதல் கட்டளை என்ன தெரியுமா?
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்!”
இன்னும் இருக்கிறது......
“கந்து வட்டிக்காரர்களை விசாரணையின்றி நடு வீதியில் தண்டிப்பது”
“இந்தியர்களுக்கு மட்டுமே வாணிபம் செய்யும் உரிமை”
130 நாட்களுக்குள், ஆங்கிலேயர்கள் தங்களுக்கிருந்த தகவல் தொடர்பு காரணமாக சுதாரித்து, இந்த புரட்சியை ஒடுக்கினர். 1857 செப்டம்பர் 20ம் தேதி மீண்டும் டெல்லியை மீண்டும் கபளீகரம் செய்தனர். மன்னர் பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். அத்தோடு விடவில்லை. வெறி பிடித்துக் கோரத்தாண்டவம் ஆடினர். கண்ணில்பட்டவர்களைக் கொன்று தள்ளினர். ஜான்சிராணி வீரத்துடன் போர் புரிந்து மரணம் அடைந்தார். அவெத் மாகாணத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் மக்களும், காசியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டனர்.
இதனை நேரில் பார்த்த கிரி பித்ஸ் என்பவர் தனது siege of delhi நூலில் எழுதுகிறார்:
“தெருக்கள் கடுமையான அதிர்ச்சியில் தாக்குண்டு மயான அமைதியோடு கிடந்தன. சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்த பிரதேசத்திலேயா நாம் இப்போது இருக்கிறோம் என்பதையே நம்ப முடியவில்லை.சிப்பாய்களும், ஜனங்களும் உயிரற்றுத் தரையெங்கும் எல்லாத் திசைகளிலும் கிடந்தார்கள். குடலைப் புரட்டுகிற தாங்க முடியாத நாற்றம் காற்றில்...”
அடிவயிறு பதைபதைக்க பெருந்துக்கத்தின் சாட்சியாய் கிடந்தது இந்த மண். ஒரு வெள்ளி பூத்ததைப் பார்த்த சிறு சந்தோஷத்தில் திளைப்பதற்குள் நட்சத்திரங்களையெல்லாம் வானம் இழந்து நின்றது. ஆங்கிலேய அரசு மக்கள் மீது கொடும் அடக்குமுறைகளையும், தீவீர கண்காணிப்புகளையும் செலுத்தியது.
1857 டிசம்பரில் கவிஞர் மிர்ஜா காலிப் தனது நண்பருக்கு எழுதுகிறார்...
முன்ஷி ஹர்கோபால் தஃப்தா அவர்களுக்கு!
நாமெல்லாம் கூடிக் கவிதைகள் பாடி இன்பமாகப் பொழுது போக்கிய அந்தக் காலம் இப்போது கனவு போல் இருக்கிறது. இன்று அந்தச் சூழ்நிலை, அந்த நிலவரம், அந்த வசதி எல்லாம் போய் விட்டன. நட்பு, பரிவு, மதிப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.
நான் வேறு பிறவி எடுத்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது இருந்த டில்லியா இது. மக்கள் எல்லோரும் டில்லியை விட்டுப் போய் விட்டார்கள். போகாதவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ள நிலைமையை எழுதவே அச்சமாய் இருக்கிறது. ஆங்கிலேயே ஜெனரல் துரை ஆட்சியில் கெடுபிடி அதிகம். கோட்டை வாசலில் தினமும் விசாரணை. வழக்கு, பரிசோதனை. இன்று வரை அதே நிலைமைதான். மேலே என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.
மத அடையாளங்களைத் தாண்டி கடிதம் எழுதியவரும், எழுதப்பட்டவரும் டில்லி வீதிகளில் எப்படியெல்லாம் உலாவித் திரிந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கும் போது ஆச்சரியங்களின், சந்தோஷங்களின் பூமியாக தெரிகிறது. வரலாறு என்பது வெறும் செய்திகளின் தொகுப்பா. நம் மூதாதையர்களின் எலும்புகளிலிருந்து உருவி எடுக்கப்பட்ட வாழ்க்கை அல்லவா?
பி.கு: எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கரின் பெரும் பங்களிப்போடு என் எழுத்தில் வந்த ”வீரசுதந்திரம் வேண்டி...” புத்தகத்தில் சில பக்கங்களை வாசித்திருக்கிறேன். இன்னும் கிராமங்களில், ஜனங்களைக் கூட்டி விடிய விடிய புத்தகம் வாசிப்பது நமது மரபாயிருக்கிறது. தேசமே அப்படி உட்கார்ந்து படிக்க வேண்டிய பக்கங்கள் இவை. எனது 150வது பதிவு இது.
பெண்ணின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க அனுமதி
(முன்குறிப்பு: சில வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை இது. என் பழைய டைரியின் பக்கம் என்றும் கொள்ளலாம்.)
நடந்து வர வர காமிரா தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு மூன்று பெண் காவலர்கள் அருகிலேயே வந்து கொண்டிருக்கின்றனர். சுற்றிலும் காவல்துறையினர். வக்கீல்கள். காமிராவோடு சில நிருபர்கள். பின்னணியில் செய்தி வாசிக்கப்பட, வாசிக்கப்பட அவர்கள் அனைவரும் நடந்து கொண்டே இருக்கிறார்கள். காட்சி மாறவில்லை. நடுவில் வருகிற அந்த பெண் மட்டுமே மாறிக் கொண்டு இருக்கிறார். ஜெயலட்சுமி நடந்து வருகிற இ டத்தில் ஷெரினா. அதற்கு முன்பு ஜீவஜோதி. நீதிமன்ற படிக்கட்டுகள் இவர்களின் காலடியோசையை கேட்டுக் கொண்டே இருக்கின்றன. 'மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது', 'இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்கும் என தெரிகிறது', இப்படியே ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகள் விடாமல் தொடர்கின்றன.
'இதெல்லாம் ஒரு முக்கியமான விஷயமா, அவனும் போடறான்னு இவங்களும் விழுந்து விழுந்து பாக்கிறானுங்க' என்று அலட்சியப்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள். என்றாலும் ஜெயலட்சுமியின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. டீக்கடைகளில், அலுவலகங்களில் மட்டுமல்ல, குடும்பங்களுக்குள்ளும் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. செய்திகளுக்குள் அலுக்காமல் மனிதர்கள் எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.. 'உல்லாசம்', 'சல்லாபம்' 'சாகசம்' 'வலை விரித்து' போன்ற வார்த்தைகள் தரும் அர்த்தங்கள் தமிழில் விநோதமானவையாக இருக்கின்றன. சுவராஸ்யம், ஆச்சரியம் எல்லாம் தாண்டி ஒரு உந்துதல் இருப்பதை அறிய முடிகிறது. ஒருவரின், அதிலும் ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க அனுமதி கொடுக்க ப்பட்டிருக்கிறது. அதன் ருசி உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு தொழில் அதிபர். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் அரசியல் பிரமுகர். இந்த பெண்ணின் வாழ்வில் முக்கியமாக காவல் துறையினர். அந்தப் பெண்களின் உடல்களின் வழியாகவே கதைகள் சொல்லப்படுகின்றன. உண்மைகள் வாடி கிழே விழுந்து கிடக்கின்றன. அவர்களுக்கு அடிப்படையில் தேவையாய் இருந்தது ஒரு வசதியான வாழ்க்கை. அதற்கான பாதைகளைத் தேடுகிற போது அழைத்துச் செல்ல நீளும் கைவிரல்களில் நகங்களும் நீண்டிருக்கின்றன. இதில் யார் யாரை குற்றம் சுமத்துவது?
காரும் பங்களாக்களும் கிடைக்கின்றன. அதிகாரம் கிடைக்கிறது. மாய உலகத்தில் மிதக்கின்றனர். சூழ்ச்சிகள் நிரம்பிய சதுரங்கத்தில் மனதும், உடலும் காயமேறி பகடைக்காய்களாகின்றனர். திடுமென எல்லாம் கலைகிறது. கணவர் கொலை செய்யப்படுகிறார். வீடு முழுவதும் கஞ்சா வந்து கிடக்கிறது. குழந்தைகளுக்கு ஆபத்து வருகிறது. அலறி எழும்புகின்றனர். சிறகுகள் எல்லாம் உதிர்ந்து கிடக்கின்றன. அகலிகைகளாய் சபிக்கப்படுகின்றனர்.
இந்தப் பெண்கள் தொடர் செய்தியாக வருகிற காலத்தில்தான் வேறு செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. 'கடன் தொல்லையால் தற்கொலை', ' குடும்பத்தோடு விஷமருந்திச் சாவு' அடிக்கடி நடக்கிறது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதேயில்லை. அடிப்படையில் இந்த இரண்டிற்குமான காரணம் ஒன்றாகவே இருக்கிறது. துயரங்களும், நிலையற்றதுமான வாழ்வோடு எதிர்த்து நின்று போராட முடியாதவர்களின் இரண்டு முகங்கள்தான் இவை. ஒரு முகம் நேர்மை தவற மறுத்து தன்னை அழித்துக் கொள்கிறது. இன்னொன்று நேர்மை தவறி முகத்தை மாற்றிக் கொள்கிறது. இந்த இரண்டாவது முகமே நமது மூளைக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சமூகம் கற்பித்திருக்கும் ஒழுக்கம், சட்டங்கள் வகுத்திருக்கும் நெறிகள் இவர்களை எல்லோர் முன்பும் இப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது எனச் சொல்லிவிட முடியாது. எல்லோர் முன்னாலும் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்தாலும், தேவதைகளாக காட்சியளிக்க முடிகிறது இந்தப் பெண்களால். அதுதான் நடுக்கமேற்படுத்துகிறது. அக்கினிப் பிரவேசம் கதை எழுதிய பிறகு எதிரே வருகிற முன்பின் தெரியாத கார்களிடம் விரல் நீட்டி லிப்ட் கேட்ட பெண்களை பார்க்க முடிந்தது என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒருமுறை வருத்தத்தோடு சொன்னார். இந்த எதிர்மறையான உளவியல் பிரச்சினையோடு விஷயங்களைப் பார்த்தால்தான், இந்தக் கதைகள் எங்கே போய் முடியும் என்று தெரியும். இந்தப் பெண்களை விழுங்குகிற காமிராக்கள் ஒழுக்கம் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் வேறுவகையான பிம்பங்களையே வெளியே தள்ளுகின்றன.
தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் மோனிகா லிவின்ஸ்கி சமாச்சாரத்திற்கு முன் இவ்வளவு தூரம் தொடர் பிரபலமானதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. உலகம் முழுவதும் பத்திரிக்கைகளின் விற்பனையில் மோனிகா லிவின்ஸ்கி ஏற்படுத்திய சாதனை முக்கியமானது. வெள்ளை மாளிகையில் கிளிண்டனின் இருட்டாக மோனிகா லிவின்ஸ்கி காட்சியளித்தார். அவரது உள்ளாடைகள் கூட சாட்சியமானது. நாட்டின் மிக உயர்ந்த பதவியிலிருக்கும் ஒருவரை நோக்கி விரல் நீட்ட இங்குதான் முடியும் என்று அமெரிக்கா தனது ஜனநாயக மாண்புகளை சுதந்திரதேவியைப் போல தூக்கிப் பிடித்து மார்தட்டிக் கொண்டது. பில்கிளிண்டன் தனது கோர்ட் கசங்காமல் பாவமன்னிப்புப் பெற்று கௌரவம் பாதிக்கப்படாமலிருந்தார். பிறகு ஒருமுறை இந்தியாவுக்கும் அந்த கனவான் வந்து ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் நமது பெண்மக்களோடு நடனமெல்லாம் ஆடினார். இப்போது எல்லாவற்றையும் தனது சுயசரிதையில் எழுதி பத்திரப்படுத்தியிருக்கிறார். மோனிகா லிவின்ஸ்கியும் தனது சுயசரிதையை எழுதி அமோகமாய் சம்பாதித்துக் கொண்டார்.
இங்கே ஜெயலட்சுமியின் கதையை சினிமாவாக எடுக்கப் போவதாகச் செய்திகள் இருக்கின்றன. யார் குற்றங்கள் செய்தது, அவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்கிற மர்மங்களின் திரையில் அவர் ஒரு தேவதையாய் சித்தரிக்கப்பட இருக்கிறார். இளவரசி டயானாவின் காதலை இவர்கள்தான் எழுதினார்கள். அவர் கல்யாணத்தை இவர்கள்தான் பிரமாதப்படுத்தினார்கள். மணவாழ்வின் முரண்பாடுகளை மாறி மாறி எழுதி விவாகரத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். பிறகு டயானாவின் அந்தரங்க வாழ்க்கையை கதை கதையாய் சொன்னார்கள். அவரது காரை துரத்தி மரணத்தை பார்த்தார்கள். அப்புறம் அன்னை தெரசாவிற்கு பக்கத்தில் பெரிதாய் அஞ்சலி செலுத்தி தேவதையாக்கினார்கள்.
'புத்திசாலித்தனமும், நிராசையும் மிக்கவர்களாக தேவதைகள் இருக்கிறார்கள்" என்று கலீல் கிப்ரான் எழுதுகிறார். இங்கு நிராசையின் உருவங்களாக மட்டுமே தேவதைகள் இருக்கிறார்கள். நிராசை கொண்டவர்களே அவர்களை தேவதைகளாக பார்ப்பார்கள். வாழ்க்கையில் சவால்களை எதிர்த்து நின்று போராடுகிறவ ர்களுக்கு இவர்கள் வெறும் பரிதாபத்துக்கு உரியவர்கள் மட்டுமே.
நீதிமன்ற படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருக்கும் அவர்களது கண்களைப் பாருங்கள். புரியும்.
*
“ஒண்டிக்கு ஒண்டி வர்றியா” - அத்வானி
“நேருக்கு நேர் என்னோடு வாதம் நடத்தத் தயாரா, அதை மக்கள் லைவ் ஷோவில் பார்க்கட்டும்” என்று அகோர யாத்ரீகர் அத்வானி மன்மோகன் சிங்கிற்கு தொடை தட்டி அழைப்பு விடுத்திருக்கிறார். தேர்தலையொட்டி அமெரிக்காவில் நடப்பது போல் இந்த ஷோ இருப்பது ஆரோக்கியமானதுதான் என அதிமேதாவிகள் கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
“நான் பார்த்ததிலேயே இந்தியாவின் ‘வீக்’கான பிரதமர் மன்மோகன் சிங்தான்’ என்று அத்வானி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்ததன் அர்த்தம் இப்போது விளங்குகிறது. கதவிடுக்கில் மாட்டிய எலி போல கீச் கீச்சென்று பேசுகிறவரைப் போட்டு புரட்டி புரட்டி எடுத்து விடலாம் என்று நினைத்திருக்கிறார். எல்லாவற்றையும் சோனியா காந்தியிடம் கேட்டுப் பேசுகிறவர் அங்கு வந்து அத்வானியிடம் எப்படி நேருக்கு நேர் பேசுவார் என்று கிண்டல்கள் பறக்கின்றன.
இந்த விவாதம் நடந்தால், இரு ‘மக்கள் தலைவர்களும்’ என்ன பேசுவார்கள்?
“இந்தியாவில் பாதுகாப்பின்மை அதிகரித்து விட்டது. காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனம்” என்பார் அத்வானி.
“உங்க ஆட்சியில மட்டும் என்ன வாழ்ந்துச்சாம். அப்போ வெடியே வெடிக்கலையா. இதுக்குல்லாம் காரணம் நீங்கதான்” என்பார் மன்மோகன்.
“பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணித்து வருகிறது” -அத்வானி.
“மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. தேச ஒருமைப்பாட்டிற்கு பா.ஜ.க ஊறு விளைவிக்கிறது. தேசப்பிதாவைக் கொன்றதிலேயே அவர்கள் ஆக்கம் தெரிந்து விட்டது.” -மன்மோகன் சிங்.
“எம்.பிக்களுக்கு பணம் கொடுத்து காங்கிரஸ் அரசு குதிரை பேரம் செய்தது. பாராளுமன்றத்திலேயே அது லைவ் ஷோவாக காண்பிக்கப்பட்டது”- அத்வானி
“நீங்க மட்டும் யோக்கியமாக்கும். டெஹல்காவின் டேப்புகளை எடுத்துக் கொண்டு வரட்டுமா.’-மன்மோகன்சிங்
இப்படியே இந்த உரையாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். “நீ யோக்கியமா”, “நீ மட்டும் யோக்கியமா” என நடக்கும் அனல், புனல், மணல் விவாதங்களைப் பார்த்து அகில உலகமும் மூக்கு மேல் விரல் வைத்து, இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசிக்கும். கடைகோடி கிராமத்தில் இன்னமும் தண்ணீருக்கு எட்டு கி.மீ நடக்கும் பெண்கள் இதைப் பார்க்கப் போவதில்லை. விளைஞ்ச கரும்புக்கும், கோதுமைக்கும், நெல்லுக்கும் உரிய விலை இல்லாமல் நெருப்பின் தகிப்போடு வாழ்க்கை நடத்துகிறவர்கள் இதைப் பார்க்கப் போவதில்லை. ‘ஒருநாளைக்கு நூறு ருபாவுக்கு எதாவது வேல கெடைக்குமா’ என்னும் வேட்கையோடு தவிப்பவர்கள் யாரும் இதைப் பார்க்கப் போவதில்லை. இந்தப் புண்ணியர்களின் ஆட்சிகளால் சுதந்திர இந்தியாவில் வேட்டையாடப்பட்டவர்களே இவர்கள்.
நான் அத்வானி அவர்களுக்கும், மன்மோகன் அவர்களுக்கும் ஒரு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் யுத்தத்தில் களப்பலிகளாக நாளும் கழுவேற்றப்படுகிற கோடிக்கணக்கான அடித்தட்டு மக்கள் இங்கு இருக்கிறார்கள். அந்தச் சாமானியர்களில் ஒரே ஒருவரோடு நீங்கள் இருவரும் வாதம் நடத்தத் தயாரா?. இரத்தத்திலும், வேர்வையிலும், கனவிலும், வேதனையிலும், வெயிலிலும், மழையிலும் எழுதப்பட்ட வாழ்வின் வார்த்தைகளோடு, உங்கள் குளிர்பதன அறையின் வார்த்தைகள் மோதிப் பார்க்கட்டும். தயாரா?
ஒரு விறகுவெட்டியிடம் சோமநாதப் புலவரும், மன்னன் செண்பகப்பாண்டியனும் ஒருசேரப் புறமுதுகிட்டு ஓடுவதை நாங்கள் நேரில் பார்ப்போம் அப்போது.
குழந்தைகள் ஆட்டம்
அவனும் அவளும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
முடிந்து போன பற்பசையிலிருந்து, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என நிறைய சேகரித்து, வீட்டிற்கு வெளியே, முன்பக்க ஜன்னல் ஓரம் சமையலறை ஒன்றை அமைத்திருந்தார்கள். இரண்டு நாளைக்கு முன்னால், கடிகாரத்திலிருந்து தூக்கிப் போட்ட பேட்டரிகள் அங்கு சிலிண்டர்களாகவும், டார்டாயிஸ் வைக்கிற தட்டு அதன் மேல் கேஸ் ஸ்டவ்வாகவும் உருமாறியிருந்தன.
அரிசி முடிந்துவிட்டதென்று சொல்லி சமையல் சாமான்கள் வாங்க அவள் லிஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவன் சீட்டுக்கட்டு ஒன்றை பையிலிருந்து எடுத்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான். லிஸ்ட் வாங்கியதும், சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு குழாயிலிருந்து செடிக்குத் தண்ணீர் ஊற்றும் டியுபிலிருந்து வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டான்.
கொஞ்சதூரம் போனவன் திரும்பி வந்து அவளிடம், “ஒனக்கு ரோஸ் கலர்ல ஒரு சுடிதாரும் வாங்கி வர்றேன்” என்றான்.
*
கொஞ்சம் நிர்வாணமாய் நின்று பாருங்கள்!
வலைப்பக்கங்களில் பல நண்பர்கள் பத்துப் பத்தாய் பலவிதமான கேள்விகள், பலரிடம் கேட்டு பதிவுகள் எழுதியிருந்தனர். நானும் என் பங்குக்கு பத்து கேள்விகள் எழுப்பியிருக்கிறேன். இவை நம் மனசாட்சியிடம் நாமே கேட்டுக்கொள்ள வேண்டியவை.
‘கொஞ்சம்’ நிர்வாணமாய் நின்று பாருங்கள். ஏன் ‘கொஞ்சம்’ என்றால், இப்படி நூறு கேள்விகள் கேட்க முடியும். நாம் எதையெல்லாம் இழந்திருக்கிறோம், தவற விடுகிறோம் என்பதை ரகசியமாகவேனும், நாம் மட்டுமாவது உணரத் தலைப்படுவோம்.
1.இப்போது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கமுண்டா?
2.குழந்தைகளை தெருவில் விளையாட அனுமதிப்பது உண்டா?
3.அவசரமாக ஒரு இடத்துக்கு போய்க் கொண்டு இருக்கிறீர்கள். வழியில் எதிர்பாராதவிதமாக நெருக்கமாய் பழகிய நண்பன் ஒருவனை சந்திக்கிறீர்கள். உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்.?
4.மனைவியோடும்/கணவனோடும், குழந்தைகளோடும் ஒருநாள் பேசும் வார்த்தைகள் எத்தனை? (கூடவே சின்ன இணைப்புக் கேள்வி: நேற்று உங்கள் கணவன்/மனைவி அணிந்திருந்த உடை ஞாபகத்தில் இருக்கிறதா?)
5.தொலைதூரத்துக் கிராமத்தில் தூக்கி வளர்த்த பாட்டியோ, அதுபோல பிணைப்பு மிக்க உறவினரோ இறந்துவிட்டால், துஷ்டிக்குச் செல்வது குறித்த உங்கள் யோசனைகள் என்னவாக இருக்கும்?
6.உங்கள் தெருவிலிருக்கும் எத்தனை வீடுகளோடு பழக்கம் உண்டு?
7.டைரிகளை எதற்கு பயன்படுத்துகிறீர்கள்?
8.கோவிலில், பஸ் நிறுத்தத்தில் உங்கள் முன்னே கைநீட்டி நிற்கும் குழந்தைகளைப் பார்த்ததும் என்ன செய்வீர்கள்?
9.உங்களைப் பெற்றவர்கள் உங்களோடு இருக்கின்றனரா?
10.காலையில் பறவையின் சத்தங்கள் கேட்கிறதா?
உங்கள் கோலத்தை உங்களால் ரசிக்க முடிகிறதா? முடிந்தால், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
*
"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்"
"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்”
இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு எரிகிறவர்களைப் பார்த்து நம் கிராமத்து மனிதர்கள் எவ்வளவு நுட்பமாக வார்த்தைச் சித்திரம் தீட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சொலவடைகள் நம் மண் முழுக்க நிரம்பி இருக்கின்றன. இவை யாராலும் எழுதி வைக்கப்பட்டவையல்ல. கிராமத்துப் புழுதியோடு காற்றில் மிதந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்களின் சிந்தனைகள்.
வாழ்க்கை குறித்த விமர்சனங்களாக இப்படி ஓராயிரம் தெறிப்புகள் நம் முன் கொட்டிக்கிடக்கின்றன. எழுதப் படிக்கத் தெரியாத இலக்கிய மேதைகள் நம் சாதரண மனிதர்கள் என்பதை இந்தச் சொலவடைகள் சொல்லாமல் சொல்கின்றன. அறிவொளி இயக்க காலத்தில் இவை நம் தமிழ்க் கிராமங்களிலிருந்து தொகுக்கப்பட்டன. அவற்றில் சில்வற்றை புதுவிசை பத்திரிக்கையின் முதல் இதழில் வெளியிட்டு இருந்தோம். வலைப்பக்கத்திலும் அவை இடம் பெற வேண்டும் என இங்கு சிலவற்றை பதிவு செய்வது இருக்கிறேன்.
நட்சத்திர வாரத்தில், மண்ணின் வாசம் பூசிக்கொண்டிருக்கும் இந்த நட்சத்திரங்களைப் பாருங்கள். அவை கண்சிமிட்டுவதை ரசியுங்கள்.
0
கருப்பட்டிப் பானைக்குள்ள
கையைவிட்டவன்
நாக்குட்டு நக்காம
டவுசர்லயா தொடப்பான்?
0
அக்கப்போரு பிடிச்ச நாயி
வைக்கப் போர்ல படுத்துக்கிட்டு
தானும் திங்காதாம்
திங்கிற கழுதையவும் திங்க விடாதாம்
0
மேஞ்ச மாட்டக் கெடுத்துச்சாம்
மெனக்கெட்ட மாடு
0
நொங்கு தின்னவன் போயிட்டான்
நோண்டி தின்னவன் அம்புட்டுக்கிட்டான்
0
காய்ச்சுவார் காய்ச்சினால்
கழுத மூத்திரம் கூட நல்லாயிருக்கும்
0
கோவணத்தில ஒரு காசு இருந்தா
கோழி கூப்பிட பாட்டு வரும்
0
குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டேன்
மலடுன்னு இல்லாம பிள்ளப் பெத்துக்கிட்டேன்
அதுக்கு மேல ஒண்ணுமில்ல
0
எட்டி எட்டிப் பாத்தவளுக்கு
எட்டுப் பணியாரம்
முட்டுத் தேயச் சுட்டவளுக்கு
மூணு பணியாரம்
0
வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம்
அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்
0
கழுத கோபம்
கத்துனா தீரும்
0
மாடு தொட்டிலிலே
மனுசன் வட்டிலிலே
0
அரிசி உழக்குன்னாலும்
அடுப்பங்கரை மூணு வேணும்
0
தன்னாளைக் கண்டா தணிஞ்சு வரும் அகப்பை
வேத்தாளைக் கண்டா மிதந்து வரும் அகப்பை
0
படப்போட மேயிற மாட்டுக்கு
பிடுங்கிப் போட்டா காணுமா
0
நக்குற நாய்க்கு
செக்குன்னு தெரியுமா
சிவலிங்கம்னு தெரியுமா
0
பேச்சுப் பிடிச்ச நாயி
வேட்டைக்கு உதவாது
0
குத்துக் கல்லுக்கு
குளிரா காய்ச்சலா
0
பஞ்சாங்கம் பல சாஸ்திரம்
ஒசக்க இருந்து விழுந்தா
ஓடம்பு நட்சத்திரம்
0
வண்ணாத்தி மூத்திரம்
தண்ணியில
0
கெட்டிக் கொடுத்த சோறும்
சொல்லிக் கொடுத்த சொல்லும்
எத்தன நாளைக்கு
0
கழுதப் புண்ணுக்கு
தெருப் புழுதிதான் மருந்து
0
அயிரைக்கு எதுக்கு
விலாங்கு சேட்டை
0
கட்டியாத் திங்குறத
கரைச்சுக் குடிச்சா போதும்
0
எள் எண்ணெய்க்கு காயுது
எலிப் புழுக்கை எதுக்குக் காயுது
0
கழுத்துப் பிடி கொடுத்தாலும்
எழுத்துப் பிடி கொடுக்காத
0
வெந்த முகத்தைக் காட்டி
விருந்தாளிய அனுப்பாத
0
பிச்சை எடுக்குற சோத்துல
கொழஞ்ச சோறு கேட்டானாம்
0
நாலு வீட்டுக் கல்யாணம்
நாய்க்கு அங்கிட்டு ஒட்ட்ம்
இங்கிட்டு ஓட்டம்
0
என்னமோ சொன்ன கதையில
எலி ரவிக்கை கேட்டுச்சாம் சபையில
0
வந்தன்னைக்கு வாழையில
மறுநா தைய இல
மூணாம் நா கையில
0
வீடு கெடக்குற கெடையில
எட்டுக்கோட்டைச் சிரிப்பாணியாம்
0
உடுத்தச் சேல இல்லன்னு
சின்னாத்தா வீட்டுக்குப் போனா
அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு
எதுக்க வந்தாளாம்
0
சீமான் வீட்டு நாய்
சிம்மாசனம் ஏறுதுன்னு
வண்ணான் வீட்டு நாய்
வெள்ளாவியில ஏறிச்சாம்
0
தட்டிபோட்ட ரொட்டி
பெரட்டிப் போட நாதியில்ல
0
மூச்சுல ஒரு படி அரிசிய
முழுசாப் போட்டு வடிக்கலாம்
0
வெளஞ்சா வள்ளி திருமணம்
வெளையாட்டா அரிச்சந்திரன் நாடகம்
0
பட்டணம் எல்லாம் நம்ம பட்டணந்தான்
பொட்டணம் வைக்கத்தான் எடமில்ல.
*
எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன்!
“உட்காருங்க. அப்பாவிடம் நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்றேன்” உள்ளே சென்றாள் காதம்பரி என்னும் அம்மு. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மூத்த மகள். அந்த வரவேற்பறையில், தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் வந்து உட்கார்ந்து காத்திருந்த இடத்தில் நான் தனியே உட்கார்ந்திருந்தேன். எந்த தைரியத்தில் இங்கு வந்து இருக்கிறோம் என நினைத்துக் கொண்டேன். அம்முவின் தங்கை தீபாவும், தம்பி ஜெயசிம்ஹனும் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனார்கள். அப்புறம் நிசப்தம். எட்டு வருடக் காதலின் முடிவு என்னவாகுமோ என்று பதைபதைப்பு இருந்தது.
1981ல் கல்லூரி படிப்பு முடிந்து ஊரில் சும்மா இருந்தேன். என் மூத்த அண்ண சி.ஏ முடித்து விட்டு சென்னையில் ஒரு கம்பெனியில் உயர் பொறுப்பில் இருந்தான். ஊரில் இருந்து எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளப் போகிறான் என்று சென்னைக்கு அழைத்தான். எழுத்தாளர் ஜெயகாந்தனின் அண்டை வீட்டில் குடியிருந்தான். அவரது எழுத்துக்களை படித்திருந்த நான் அவரது மகளின் கண்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போது அவள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள். ஒன்றரை வருடத்தில் எனக்கு சாத்தூரில் பாண்டியன் கிராம வங்கியில் வேலை கிடைக்க, அவ்வப்போது சென்னைக்குப் போய்ப் பார்த்தும், கடிதங்கள் மூலமாகவும் பேசிக்கொள்வோம். அவள் கல்லூரி முடித்து, பி.எட்டும் முடித்த பிறகுதான் வீட்டில் சொல்வேன் என்றாள். அப்பா, அம்மா சம்மதத்தோடுதான் திருமணம் என்றாள். அதேபோல் சொல்லியிருக்கிறாள். அவர் ஒன்றும் சொல்லாமல் பார்ப்போம் என்றிருக்கிறார்.
சாத்தூரில் எனக்கு நன்கு பழக்கமாகியிருந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் சென்னைக்கு வந்து அம்முவுக்கும், எனக்கும் உள்ள காதல் குறித்தும், என்னைப்பற்றியும் ஜெயகாந்தனிடம் சொல்லியிருந்தார். முதலில் கோபப்பட்டவர், பிறகு பையனை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தார். அங்கு போய் உட்கார்ந்திருந்தேன். வருடம் 1989.
மாடியிலிருந்து அவர் இறங்கி வரும் செருப்புச் சத்தம் கம்பீரமாக கேட்டது. நான் மிகுந்த கவனமாகி உட்கார்ந்திருந்தேன். அருகில் சத்தம் கேட்டதும் எழுந்து நின்று வணக்கம் என்றேன். “உட்காருங்கோ” என்று சொல்லிவிட்டு எதிரே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தார். முடியும் ,கிருதாவும், அந்த பார்வையும் சிங்கம் போல இருந்தார். எப்பேர்ப்பட்ட எழுத்தாளர். மீசையை தடவிக்கொண்டே “என்ன விஷயம” என்றார். அம்மு என்னருகில் சேரைப் பிடித்தபடி நின்றிருந்தாள். “அம்முவும் நானும் காதலிக்கிறோம்” என்றேன் மெல்ல.
“காதல்னா என்ன” என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரையே பார்த்தபடி இருந்தேன். “ஒங்களுக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்” என்றார். என்ன சொல்ல என்று தெரியவில்லை. “பாக்குறது, பேசுறது இதுதான் காதலா?” என்றார் தொடர்ந்து. அம்முவைப் பார்த்து “டீ கொண்டு வாம்மா” என்றார். அவள் உள்ளே போனாள்.
“ஜாதி இருக்கா” என்றார் கூர்மையாக என்னைப் பார்த்து. சட்டென்று “எனக்கு இல்ல” என்றேன். “உங்களுக்கு இல்லன்னா... ஜாதி இல்லாமப் போயிருமா. உங்க அப்பாவுக்கு, உங்க அம்மாவுக்கு, உங்க மாமாவுக்கு, உங்க அண்ணன் தம்பிக்கு, உங்க சித்தப்பாவுக்கு இப்படி எல்லாருக்கும் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி இல்லாமப் போகும்?” என்று உடனே திருப்பி அடித்தார். அதற்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை.ஒரு பதினைந்து நிமிடங்கள் இளைய சமூகம் குறித்தும் காதல் குறித்தும் பொரிந்து தள்ளினார். இடையில் அம்மு கொண்டு வந்து கொடுத்த டீயை அதன் சுவையறியாமல் விழுங்கிக் கொண்டிருந்தேன்
“இப்ப எல்லாவற்றையும் மறு பரிசீலனை செய்யும் காலம். அதுதான் நல்லது. நாமும் நம் சொந்த வாழ்வில் செய்யலாம். நீங்களும் செய்யலாம். திருமனம் என்பது உங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்டதுமல்ல. எல்லோருக்கும் ஏன் பிரச்சனை கொடுக்கணும்?” என்று நிறுத்தி என்னை அந்த அகன்ற விழிகளால் உற்றுப் பார்த்தார். அப்புறம் மெல்ல எழுந்து கொண்டார். நானும் எழுந்து நின்றேன்.
“ வறட்டுப் பிடிவாதங்கள் வேண்டாமே, இதை ஒரு நண்பனா உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று கையைப் பிடித்து குலுக்கினார். நான் அவரிடம் வர்றேன் என்று சொல்லி, அம்முவிடம் லேசாகத் தடுமாறி “வர்றேன்” எனச் சொல்லி நகர்ந்தேன். அம்முவின் கண்கள் எந்தக் கலக்கமுமில்லாமல் எப்போதும் போலிருந்தன. எனக்கொன்றும் பிடிபடவில்லை. வலி என் முகத்திலேயே முழு இரத்த ஒட்டத்தோடு இருந்தது.
ஊருக்கு பஸ்ஸில் திரும்பும்போது எல்லாம் முடிந்து போனது போல் இருந்தது. அவ்வளவு பெரிய எழுத்தாளரிடம் எதைப் பேச, எப்படி பேச? எல்லாம் என்னை விட்டுப் போய்விட்டது போலிருந்தது. தூங்காமல் கொள்ளாமல் சாத்துர் வந்து இறங்கியதும், என் அறைக்கு வந்து ‘மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு..... “ என்று ஆரம்பித்து கடிதம் எழுதினேன். அவர் பேசியது அனைத்தும் எனக்கும், அம்முவுக்கும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இளைய தலைமுறையினருக்கே என்று புரிந்து கொண்டதையும், அவரைப் போன்ற எழுத்தாளர்களுக்கு அவநம்பிக்கை வேண்டியதில்லை என்பதையும் தெரியப்படுத்தினேன். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை பின்னாளில் மொழியாக்கம் செய்த பெர்னார்ட்ஷா புத்தகத்தில் முகப்பில் “better than shakespear" என்று எழுதியிருந்ததையும், அதை ஒரு நிருபர் கேட்கும்போது “நான் ஷேக்ஸ்பியரின் தோளின் மீது நின்று கொண்டிருக்கிறேன். அதனால் அப்படி எழுதினேன் என்று சொன்னதையும் மேற்கோள் காட்டி, “நாங்கள் உங்கள் தோள்களின் மீது நின்று கொண்டிருக்கிறோம்” என்று எழுதினேன். இறுதியாக, ”வறட்டுப் பிடிவாதங்கள் தேவையில்லை, வளமையான பிடிவாதங்கள் நிறைய நிறைய தேவை” எனவும் கூறி முடித்திருந்தேன். கடிதத்தை அனுப்பி விட்டு எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களோடு வைப்பாற்றில் உட்கார்ந்து எல்லாவற்றையும் சொன்னேன்.
அம்முவிடமிருந்து கடிதம் வந்தது. நான் வந்த பிறகு அம்முவிடமும் பேசினாராம். என் கடிதம் பார்த்து “அவர் ஒண்ணும் அசடு இல்லை..” என்றாராம்.“அப்பா, நிறைய பேசுவார். நிறைய யோசிப்பார். சரியான முடிவெடுப்பார். கவலைப்பட வேண்டாம். உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என நம்பிக்கையோடு முடித்திருந்தாள். அவளால் மட்டும் எப்படி பதற்றம் கொள்ளாமல் இருக்க முடிகிறது என தெரியவில்லை. அவளுக்குத் தானே அவள் அப்பாவைத் தெரியும்.
சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் அவரது அழைப்பின் பேரில் சென்னை சென்றோம். என் அப்பாவிடம் ஜெயகாந்தன் சொன்னார்... “அவர்கள் என்ன சொல்வது. நாமே கல்யாணத்தை நடத்தி வைத்து விடுவோமே”. சென்னையில் மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார். மந்திரம் எல்லாம் இல்லை. மேடையில் பதிவுத் திருமணம். இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபது வருடங்கள் ஆகப் போகின்றன. இந்தக் காலத்தில் நான் அவரை புரிந்து கொண்டது... மிகச்சிறந்த பண்பாடும், அன்பும் கொண்ட மனிதர். அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான். அதை மௌனமாகவே அங்கீகரிக்கும் புரிதல் கொண்டவர். கோபம், கம்பீரம், ஞானச்செருக்கு எல்லாவற்றுக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தையை நான் அருகிலிருந்து தரிசித்திருக்கிறேன். நெருக்கமான நண்பர்களிடம் “இவர் மருமகன் அல்ல, என்னோட மூத்த பையன்..” என்று பிரியத்தோடு அறிமுகப்படுத்தும் போது சிலிர்த்துப் போயிருக்கிறேன். இதற்கு மேல் எழுத முடியவில்லை......
*
சினிமா, அறிவு, ரசனை குறித்து உரையாடல்
2006 செப்டம்பரில் திருவனந்தபுரத்தில் ஜான் ஆபிரஹாம் நினைவு ஆவணப்பட, குறும்பட தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் நான் இயக்கியிருந்த இரவுகள் உடையும் திரைப்படமும் (படம் பார்க்க விரும்புவர்கள் இங்கு செல்லவும்) பங்கு பெற்றது. முழுமையாக ஐந்து நாட்கள் உட்கார்ந்து நுற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து வலைப்பக்கம் ஆரம்பித்த புதிதில் எத்தனை கோணம் எத்தனை பார்வை என்று பதிவிட்டிருந்தேன். திரைப்பட விழா குறித்தும், திரையிட்ட படங்கள் குறித்தும் அதில் விரிவாக எழுதியிருந்தேன்.
விரிவாக எழுதாத ஒரு விஷயத்தை சுருக்கமாகவேனும் இப்போது சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. திரைப்பட விழாவின் ஒவ்வொரு நாள் மாலையிலும் திரைப்படங்களை இயக்கியவர்களோடு பார்வையாளர்களின் சந்திப்பு என்னும் நிகழ்ச்சி நடந்தது. சினிமா குறித்த அறிவும், ரசனையும் எவ்வளவு முக்கியமானவை என்பதை அங்கு நடந்த உரையாடல்கள் உணர்த்தின. பொழுது போக்காக எடுத்த ஒரு குறும்படத்தின் இயக்குனரை வறுத்து எடுத்து விட்டனர். இத்தனைக்கும் படம் ஒன்றும் மோசமில்லை. ”இந்தப் படம் எதற்கு எடுத்தீர்கள்’ என்று ஆரம்பித்து அவரிடம் தொடர்ந்த விவாதங்களில் கடும் கோபம் இருந்தது. இயக்குனரும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். ம்ஹூம்... கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. சினிமா குறித்த அறிவும், ரசனையும் படம் எடுத்தவர்களைக் காட்டிலும், பார்வையாளர்களிடமே அதிகம் இருந்ததை பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள்! டூயட் பாட்டெல்லாம் எடுத்திருந்த இன்னொரு இயக்குனர் இதையெல்லாம் பார்த்துவிட்டு அடுத்தநாள் அவருடைய அமர்வுக்கு வராமலேயே மாயமாகிவிட்டார்.
அவர்கள் திரும்ப திரும்பச் சொல்லியதில் இவைகள்தாம் முக்கியமானவை. சினிமா என்பது மற்ற எந்தத் துறையை விடவும், தொழிலை விடவும் முக்கியமானது, நுட்பமானது. வித்தியாசமானது. ஒரு சமூகத்தில் மிகப் பெரும் விளைவுகளை சலனமற்று உள்ளுக்குள் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. மனித மனங்களில் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இறுதி நாளில் படங்களைத் தேர்வு செய்து அறிவித்த சிறப்பு மிக்க இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனும் இதையேச் சொன்னார். சினிமாக் கலைஞர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.
வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி, மிகுந்த கவனத்தோடு சினிமாவை உருவாக்க வேண்டியுள்ளது. பொழுது போக்கிற்காக வருகிறவர்கள், பொழுது போக்காக மட்டும் பார்த்துச் செல்வதில்லை. அவர்களை அறியாமல் சினிமா அவர்களைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது. படம் பார்க்க வருகிறவர்களை மதிக்கிற பண்பு வேண்டும். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பூசு’ என்று சொல்வதற்கும், அதைக் கேட்பதற்கும் என்ன அறிவும், ரசனையும் தேவைப்படுகிறதோ? அப்படி என்ன பொழுது போக்கு இருக்கிறதோ?
சினிமா, மற்றும் அதில் அறிவுக்கும், ரசனைக்கும் என்ன பதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் ஜான் ஆபிரஹாமைத் தெரிந்து கொள்ள வேண்டும். ரேவோடு பயணம் செய்ய வேண்டும். ஷியாம் பெனகலின் கண்களுக்குள் ஊடுருவ வேண்டும். எது அறிவு என்று தெளிந்தால், யார் அறிவற்றவர்கள் எனச் சொல்ல வேண்டியதில்லைதான்.
அந்த உரையாடலை இனி நாம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.....
*
வயதாகி வந்த காமம்
அந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அதைத் தாண்டி தொழுவத்தில் மாடுகள் சதாநேரமும் அசை போட்டுக்கொண்டு இருக்கும். தாத்தாவோ வீட்டின் முன்னறையில் ஈஸிச்சேர் போட்டு உட்கார்ந்து வாசலைப் பார்த்தபடி இடித்த வெத்தலையை அசை போட்டுக்கொண்டு இருப்பார். வயது எழுபதுக் கிட்ட இருக்கும். ரைஸ்மில், வயல்கள் என கோலோச்சியவர்.
தினத்தந்தி பேப்பர் அந்த வீட்டில் வந்து விழுவதிலிருந்து அவரது பொழுது ஆரம்பிக்கும். கேப்பைக்கூழைக் குடித்து, வாசல் பக்கம் வந்து, கண்களை இடுக்கியபடி மெல்ல படிப்பார். வெத்தலை ஒழுக, தாமரைச்சிங்கம் சுருட்டு புகைந்து கொண்டு இருக்கும். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகும். அப்புறம் பக்கத்தில் உள்ள பெஞ்ச்சில் பேப்பரை வைத்துக் கொண்டு காத்திருப்பார்.
தெருவில் உள்ள வாலிபப் பெண்களுக்கு அந்த வீட்டில் பல காரியங்கள் இருக்கும். மோர் வாங்க, தோட்டத்தில் பூ பறிக்க, சாணம் எடுக்க என தினமும் நான்கைந்து பேர் காலையில் வருவது வாடிக்கை. வந்ததும், “யம்மா, பாட்டியப் பாக்கப் போறியா, வரும் போது அந்த பேப்பர்ல இன்னிக்கு தொடர் கத வந்திருக்கு, கொஞ்சம் படிச்சுக் காமிச்சுட்டு போம்மா..” என கனிவோடு சொல்வார். அந்தப் பெண்களுக்கு விபரம் தெரியும். சிரிப்பும், எரிச்சலும் முகத்தில் சேர்ந்து வரும். “சரி தாத்தா”சொல்லி உள்ளே போவார்கள். வேலை ஆனதும், பின்பக்கக் கதவு வழியே அடுத்தத் தெரு சுற்றி வீட்டுக்குப் போய் விடுவார்கள். ஞாபக மறதியில் முன்பக்கம் வந்தால் மாட்டிக் கொள்வார்கள். பேப்பரை படித்துக் காட்டித்தான் ஆக வேண்டும்.
தினத்தந்தி பேப்பரில் அமுதா கணேசன், குரும்பூர் குப்புசாமி போன்றவர்களின் தொடர்கதை ஒருநாள் விட்டு ஒருநாள் வரும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெண்ணின் அங்கங்களை வர்ணித்தோ, ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவு குறித்தோ சித்தரிப்புகள் கண்டிப்பாய் இருக்கும். இல்லையென்றால் இருக்கவே இருக்கும் குருவியார் பதில்கள். அவைகளை வாசிக்கச் சொல்லிவிட்டு, சுருட்டை பற்றவைத்து ஈஸிச்சேரில் சாய்ந்து கொள்வார். “ஊம்.. ஊம்” கொட்டிக் கொண்டே இருப்பார். பானை வயிறு அதற்கேற்ப எழுந்து அடங்கி அசைந்து கொண்டிருக்கும். கதையின் அந்தப் பகுதியை அந்தப் பெண்ணின் குரல் நெருங்க, நெருங்க இந்த ”ஊம்”கள் வேகம் கொள்ளும். படிக்கும் பெண்கள் அந்த இடத்தில் தர்மசங்கடத்தோடு மிக வேகமாய் முணுமுணுப்பாய்க் கடக்க முனைவார்கள். சட்டென்று “சத்தமாப் படி” என்பார். பாவம் அவர்கள், திரும்பப் படிக்க வேண்டியதிருக்கும்.
பெண்களும் பலவித உபாயங்களைக் கையாண்டுதான் பார்த்தார்கள். முன்கூட்டியே தினத்தந்தி படித்து வைத்துக்கொண்டு அந்த இடம் வந்ததும் தாண்டிப் போவார்கள். “ஏளா, என்ன விட்டுட்டுப் படிக்க” என்று விவஸ்தையில்லாமல் கத்துவார். எந்த உணர்வும் இல்லாமல் ஜடம் போல் வேகமாய் வாசிப்பார்கள். “மெல்லப் படி, மெல்லப் படி” என்று பின்னாலேயே சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் அதிருப்தியுற்று, மொத்தமாய் திரும்பப் படிக்க வைத்து விடுவார். இந்தக் கைவரிசையை ஒரு பெண்ணிடம் மட்டும் காட்டுவதில்லை. வருகிற போகிற எல்லாப் பெண்களின் குரலிலும் தெரிந்து கொள்ள விரும்புவார். “தாத்தா... சக்திக்கனி காலைல படிச்சுட்டாளாமே” என்று சொல்லி பத்ரகாளி தப்பிக்க பார்ப்பாள். விட மாட்டார். “அவ சரியாப் படிக்கலம்மா...நீதான் நல்லா படிப்பே” என்று குளிப்பாட்டி உட்காரவைத்து விடுவார்.
தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் “தந்தித் தாத்தா”வின் தகிடுதத்தம் குறித்துப் பேசி சிரித்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகுதான் வீட்டின் பின்பக்க வழியாக ஓடுவது நடந்தது. இன்னொன்றும் செய்தார்கள் அப்படியே ஒருத்தி வாசிக்க வேண்டி வந்து விட்டால், அவள் அந்தக் கதை வந்திருக்கும் பக்கப் பேப்பரை மட்டும் அசைவில்லாமல் எடுதுக் கொண்டு வந்து விடுவாள். மற்ற பெண்கள் தப்பிப்பார்கள். ”தந்தி”, ”தந்தி” என்று தாத்தா தட்டோலம் விட்டுக் கிடப்பார் அன்று முழுவதும்.
ஒருநாள் இந்தச் சதியையும் கண்டுபிடித்து அமுதாவை ”இப்படி திருடிட்டுப் போறியே... என்னப் பொம்பளப் பிள்ள நீ” என்று சத்தம் போட்டார். விஷயம் புரியாமல் பாட்டியும் முன்பக்கம் வந்து அமுதாவைச் சத்தம் போட்டார்கள். அவ்வளவுதான். அடக்கி வந்ததெல்லாம் வெடித்ததைப் போல “ஆமா.. நீங்க அசிங்கத்தையெல்லாம் படிக்கச் சொல்லி கேட்டுட்டு இருப்பீங்க... நாங்க படிச்சிட்டு இருக்கணுமோ. வயசானாப் போதுமா..” என்று கத்தித் தீர்க்கவும் தாத்தா பேச்சே வராமல் அடங்கிப் போனார். பாட்டியோ “ச்சே...” என்று தாத்தாவைப் பார்த்துச் சொல்லி உள்ளே போய் விட்டார்கள்.
சில நாட்கள் தினத்தந்திகள் பிரிக்கப்படாமலே அந்த வீட்டில் கிடந்தன. பெண்களும் அதைப் பார்த்து கடந்து போய் வந்து கொண்டிருந்தார்கள். தாத்தா அவர்களைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொள்வார். ஒரு வாரம் கழித்து அமுதா அவர் அருகில் வந்து, “தாத்தா.. பேப்பர் படிக்கட்டுமா” என்று மெல்ல கேட்டாள். எட்டிப் பார்த்தார். அவள் முகம் வாடி இருந்தது. கண்கள் கருணையோடு பார்த்தன. வேண்டாம் என்பதாய் தலையை இடப்பக்கமும், வலப்பக்கமும் அசைத்தார். “இல்ல.. தாத்தா. படிக்கிறேன்.” அவள் குரல் தழுதழுத்த மாதிரி இருந்த்து. ஈஸிச் சேரில் இருந்து தலையை நிமிர்த்தி அவள் தலையைக் கோதி, எழுந்து நின்று அவள் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து “நீ நல்லாயிருக்கணும்மா” என்றார். அவர் குரல் தழுதழுத்து இருந்தது.
பி.கு: தாத்தா அந்த ஊரில் இறந்து போய் முப்பத்தைந்து வருடங்களாகி விட்டன. பேப்பர் படித்த பெண்கள் எங்கெங்கோ கல்யாணம் ஆகிப் போய் பாட்டிகளாகி விட்டனர். எப்போதாவது வரும் அவர்களின் அபூர்வமான ஊர் ஞாபகங்களில் தாத்தாவும் இருக்கத்தான் செய்வார். தினத்தந்தி எல்லா ஊர்களுக்கும் தானே செல்கிறது.
*
எல்லாம் சட்டப்படிதான்!
முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு நினைத்தது. எனவே ஒரு சட்டம் இயற்றி முயலிடம் அறிவித்தது.
“முயலே நான் சொல்வதைக் கேள். நான் இனி மேல் முன்கூட்டியே சொல்லாமல் உன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன். கதவைத் தட்டி முன் அனுமதி பெற்றுத்தான் வருவேன். சொல்லாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால், நீ பயப்படாமல் என்னிடம் புகார் செய்யலாம். அந்த உரிமையை உனக்கு கொடுக்கிறேன்”
இப்படி ஒரு சட்டத்தையும், உரிமையையும் அறிவித்த பிறகு ’இந்தச் சட்டத்தை முயல் சரியாக பயன்படுத்துமா, பயன்படுத்தாதா?’ என யோசித்த பாம்பு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் முயலின் வீட்டுக்குள் புகுந்து முயலின் குட்டி ஒன்றை விழுங்கி விட்டது. பின்னர் வெளியே வந்து நின்று கொண்டது. முயல் புகார் செய்ய வருகிறதா இல்லையா என காத்திருந்தது.
நீண்ட நேரம் ஆகியும் முயல் வெளியே வரவில்லை. பாம்புக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. பொறுமையிழந்து முயலின் வீட்டுக்குள் பாய்ந்து சென்று முயலைப் பிடித்து கேட்டது.
“நான் கொண்டு வந்த சட்டத்தை நீ ஏன் பின்பற்றவில்லை?”
முயல் அமைதியாகப் பதில் சொன்னது.”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.”
பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் இப்படி அறிவித்தது:
“இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்”.
பி.கு: இது ஒரு சீனப் பழங்கதை. எப்போது படித்தாலும் புதிதாகவே இருக்கிறது. சமகால வாழ்வையும் பல சமயங்களில் ஒப்பிட முடிகிறது. சமூகத்தின் நியாய அநியாங்களை புரிய வைக்கிறது. அமைப்பின் கோளாறுகளை சொல்லிக்கொண்டே இருக்கிறது.
*
தமிழ்ச்சினிமாவின் கதாநாயகர்கள் 2
இரண்டு நாட்களுக்கு முந்தைய என் பதிவில் தமிழ்ச்சினிமா கதாநாயகர்கள் அறிவற்றவர்கள் என்னும் தலைப்பிட்டு சில் கருத்துக்களை தெரிவித்து இருந்தேன். பதிவை முழுவதுமாய் படித்து விட்டு, பலர் அந்தக் கருத்துக்களோடு உடன்பட்டு பாராட்டியிருந்தனர். சிலருக்கு கோபமும், சிலருக்கு அதிர்ச்சியும், இன்னும் சிலருக்கு வருத்தமும் ஏற்பட்டு இருக்கிறது. அதுகுறித்து சில விளக்கங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நினைக்கிறேன். (அவர் இப்படி, இவர் இப்படி, தொழில், வியாபாரம் என்றெல்லாம் வந்த கருத்துக்களை விட்டு விட்டு, நான் எழுதியது குறித்து மட்டும்.)
பின்னூட்டங்களில், ஒருவர் என்னை stupid என்று சொன்னார். அதற்கும் அறிவற்றவன் என்றுதான் அர்த்தம் வருகிறது. இன்னொருவர் இந்தத் தலைப்பு ridiculous என்று சொல்லியிருக்கிறார். மிக மோசமான கிண்டல் என்று புரிந்து கொள்ளலாம். அன்றாட வாழ்வில் மிகச் சாதாரணமாக, இயல்பாக நாம் நமக்கு நெருக்கமானவர்களைக் கூட எரிச்சலில் சொல்லும் வார்த்தைதான் இது. ஆனாலும் சினிமா நடிகர்களை சொன்னவுடன் எதோ தொந்தரவு செய்கிறது. (அவர்கள் நமக்கு மிக நெருக்கமாக இருப்பவர்கள்தானே!). “அறிவற்றவன்’ என்னும் பதம் மோசமான விளிச்சொல்லாக உணரப்படுகிறது.
தெருவைச் சுத்தம் செய்யும் உழைப்பாளிகளோ, அன்றாடங்காய்ச்சிகளோ இது போன்ற சொற்களால் அடையாளம் காட்டப்பட்டிருந்தால் இங்கு ஒன்றும் கோபங்கள் பொத்துக் கொண்டு வந்துவிடாது. மிகச் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால் அவர்கள் குறித்து சமூகத்துக்கு மதிப்பும் கிடையாது, மதிப்பீடும் கிடையாது. இந்தக் கதாநாயகர்கள் குறித்து தாறுமாறாய் பிம்பங்களும், பிரமைகளும் ஏற்றி வைக்கப்பட்டு இருக்கின்றன. உயரத்தில் கொண்டு போய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் எப்பேர்ப்பட்ட ‘அவர்களையே’ அறிவற்றவர்களாகச் சொல்வதா என்னும் பதைபதைப்பும், அவஸ்தையும் ஏற்படுகின்றன. நம் மனச்சித்திரங்களை அழித்துவிட்டுப் பார்த்தால், ’அறிவற்றவர்கள்’ கெட்ட வார்த்தைகளாகத் தோன்றாது.
நமது இலக்கியங்களில் இந்த ‘அறிவற்றவன்’ என்னும் வார்த்தை எவ்வளவு சாதாரணமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு பதிவல்ல, ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு கொட்டிக் கிடக்கிறது. அவையெல்லாம் ஒன்றும் தவறாக நம் பிரக்ஞையில் தட்டுப்படவில்லையே? உலர்ந்த தமிழன் ஒருவனைக் கூட பார்க்காத ஆத்திரத்தில் ஒட்டுமொத்த தமிழர்களையும் ‘எருமைகள்’ என மகாகவி தன் வசனகவிதையில் அழைக்கவில்லையா? ஒருவரை, ஒரே ஒருவரை இத்தனை வருட கதாநாயகர்களில் அடையாளம் காட்டுங்கள். இவருக்கென்று சமூகப் பார்வை உண்டு என்று சொல்லுங்கள். அதைத் தன் படத்தில் வெளிப்படுத்தினார் என்று குறிப்பிடுங்கள். இவர் மக்களின் ரசனையை உயர்த்த முயற்சித்தார் என்று அடையாளம் காட்டுங்கள். ஒரு படம் பரவாயில்லை என நினைக்கும் முன்னர், அந்தக் கதாநாயகர் பத்துப்படம் தரம் தாழ்ந்து நடிப்பார். ஒரு படம் கூட சொல்லிக்கொள்கிற நடிக்காமல் வாழ்நாள் சாதனை செய்த தமிழ்க் கதாநாயகர்கள் நிறையவே இருக்கிறார்கள்.
இரண்டு படங்கள் வெற்றியடைந்து விட்டால், ரசிகர்கள் சேர்ந்து விட்டால் அரசியல் நாற்காலிகளே நம் கதாநாயகர்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் கனவாகவும், இலட்சியங்களாகவும் கருக்கொள்கின்றன. அதற்குப் பிறகு அவர்கள் நடை, உடை, பாவனைகள் எல்லாமே ஒரு மாதிரியாகி விடுகின்றன. அவருக்கு ஏற்கனவே இருந்த அறிவு அந்த இடத்தில் காலியாகி விடுகிறது. போதையில் இருப்பவர்களுக்கு அறிவு இருப்பதில்லையே!. காமிராக்கள் அவர்கள் காலடியில் விழுந்து கிடந்து படம் பிடிக்கின்றன. வானத்தின் அடியில் பிரம்மாண்டமாய் அவர் தெரிய ஆரம்பிப்பார். தியேட்டர்களில் விசில் சத்தங்கள் பறக்கும்.
நாம் என்ன செய்தாலும் ரசிப்பார்கள், நம்மைக் கொண்டாடுவார்கள் என்ற தைரியம் வருகிறது. இந்த ரசிகர்களுக்கு என்ன தெரியும் என்று மதம் பிடிக்கிறது. அவர்களின் ரசனை என்பது, தன்னை ரசிப்பது மட்டும்தான் என்னும் தெனாவெட்டு வருகிறது. வில்லன்களுக்கும், நகைச்சுவை நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் இந்த நாற்காலிக் கனவுகள் எல்லாம் வருவதில்லை. அதனால்தான் நகைச்சுவை நடிகர்களில் ஒரு என்.எஸ்.கிருஷ்ணனை பார்க்க முடிகிறது. வில்லன் நடிகர்களில் ஒரு எம்.ஆர்.ராதாவை பார்க்க முடிகிறது. ( பிரகாஷ் ராஜாவையும், விவேக்கையும் கூட விட்டுவிடுவோம்). கதாநாயகர்களில் ஒருவரையும் பார்க்க முடியவில்லை.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
என்று வள்ளுவர் நல்ல காரியங்களில் ஈடுபடச் செய்வதே அறிவாகச் சித்தரிக்கிறார். மக்களின் ரசனையை ஒரு அங்குலம் கூட உயர்த்தாமல், போட்டதைத் தின்னும் இழிபிறவிகள் போல இந்தக் கதாநாயகர்கள் தமிழ் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமுறை, தலைமுறையாக இந்தக் கதாநாய்கர்கள் நம்மை அறிவற்றவர்களாகவே பாவிக்கிறார்கள். நான் அறிவற்றவர்கள் எனச் சொல்ல மட்டும்தானே செய்தேன் ஐயா. தவறா?
*
இருட்டு வெளிச்சம்
எட்டு வயசு இருக்கும் போது இவளுக்கு கடுமையான காய்ச்சல் வந்திருக்கிறது. திரும்பி இருக்கச் சொல்லி ஊசி போடுவதற்குள் டாக்டர் பெரும்பாடு பட்டிருக்கிறார். கூச்சத்தில் நெளிந்து புரண்டு அடம் பிடித்திருக்கிறாள். அழுது ஊரைக் கூட்டியிருக்கிறாள். கையில் போடுவதற்கு என்றால் பேசாமல் இருந்திருக்கிறாள். அத்தூண்டு பெண்ணாய் இருக்கும் போது இவள் அப்படி வெட்கப்பட்டாள் என்று சித்தி ரொம்ப முன்னாலேயே சொல்லி இருக்கிறாள். இந்த நேரத்தில் இவளுக்கு அது ஞாபகம் வந்தது. காய்ந்து போன உதட்டில் புன்னகை போல ஒன்று தோன்றியது. அருவருப்பும் வெறியும் அதில் கலந்திருந்தது.
ஐஸ் பெட்டிக்குள் கைவிடுகிற போதெல்லாம் உணர்கிற சிலிர்ப்பாய் இவனுக்கு முதலில் இருந்தது. அப்படியே விறைத்து கட்டையாகிப் போனான். முறுக்கிக் கொண்டு வந்தது. சேமியா ஐஸ் கொடுத்து விட்டு குரல் வந்த திக்கில் காசு எதிர்பார்த்து கைநீட்டி காற்றில் துழாவும் போது நாலணா அளவில் ஓட்டாஞ்சில்லைக் கொடுத்துவிட்டு இவனை சின்னப்பையன்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். பஞ்சாயத்து ஆபிஸ் திண்ணையில் அசந்து படுத்தவன் கால்ச்சட்டைக்குள் தவளையைப் பிடித்துவிட்டு இவன் அலறிக் குதிப்பதைப் பார்த்து சிரித்திருக்கிறார்கள். விளையாட்டுப் பொருளாகவே இருந்திருக்கிறான். விளையாட முடியும் எனத் தோன்றியதே இல்லை. அதுதான் தனக்கு நேர்வது குறித்து இன்னமும் நம்பிக்கையில்லாமல் இருந்தது. நெஞ்சுக் கூட்டுக்குள் கனமாய் அடைத்துக் கொள்ள விம்மி விம்மி போனான்.
வைத்துக் கொடுத்த கருவாட்டுக் குழம்போடு சாப்பிட்டுவிட்டு ஏப்பத்துடன் இருந்த அவன் தனியறையில் தொட்டபோது நாலு வருசத்துக்கு முன்னால் இவளும் இவனைப் போலத்தான் தவித்துப் போயிருந்தாள். தன்னை அடக்குவதற்கு சிரமப்பட்டு மூச்சுத் திணறினாள். வெடவெடத்து மயக்கமாய் வந்தது. முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகள், தூக்கலாய் நின்ற பற்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயின. மறுநாள் காலையில் உதட்டில் ஒட்டியிருந்த மீசைமுடியொன்றைக் கண்டு சந்தோஷமாய் பாடவெல்லாம் செய்தாள். எல்லாம் ஒரு வாரத்துக்குத்தான். யாரோ ஒருத்தியோடு அந்த அவன் பம்பாய்க்குப் போயே விட்டான். கல்யாணத்துக்கு வராதவர்கள் கூட வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். கொஞ்சநாள் சித்தியிடம் போய் செம்மறிக்குளத்தில் இருந்தாள். பிறகு தங்கச்சியையும் அழைத்துக் கொண்டு இந்த ஊருக்கே வந்துவிட்டாள். கண்ணாடியில் முகம் பார்ப்பதேயில்லை. இவளது பற்களே இவளைப் பார்த்து சிரிக்கும்.
வலித்திருக்க வேண்டும். முனகிக்கொண்டான். காதில் பற்களை பதியவைத்த மூர்க்கம் பயம் தந்தது. விலகவும் மனம் கூடவில்லை. அபூர்வமான லயிப்பில் கரைந்து கொண்டிருந்தான். தைரியம் கூடி எதையும் இழந்துவிட சித்தமாக்கும் போதை தலைக்கேறி நின்றது. அம்மா சொன்ன கதையில் தங்கக் கோடாலி தரப் போகும் தேவதையாய் இவள் தெரிய ஆரம்பித்தாள். ஊருக்குள் அம்மா தேடிக்கொண்டு இருப்பாளே என்ற நினைப்பு வந்து நிலைக்காமல் போனது. மைனாக்களின் சத்தம் கத்தரிக்காய் பறித்து எடைபோட போட்டிருந்த இந்த சின்னத் தட்டியடைப்புக்குள் இவர்களை அண்ட முடியாமல் சுற்றிச் சுற்றி வந்த மாதிரி இருந்தது.
எங்கேயோ நிலைகுத்தியிருந்த இவனது கண்களை இவளால் பார்க்கவே முடியவில்லை. ஊரின் மற்ற கண்களை இவள் பாடம் பண்ணியிருந்தாள். இயல்பாய் இருக்கும்போதே மாயத் தனிமைக்குள் இழுத்துச் செல்கிற அலைவரிசை ஒன்றை அனுப்புவார்கள். அப்படித்தான் என்று இவள் திரும்பி ஊடுருவிப் பார்ப்பதை எதிர்கொள்ளும் திராணி அந்தப் பார்வையாளர்களுக்கு இல்லாமல் இருந்தது. "குலைகுலையாய் முந்திரிக்கா.... நரியே நரியே சுத்தி வா' சிரிப்பும் கும்மாளமுமாய் வெளியே குமரிப்பெண்கள் விளையாடிய சிவராத்திரியில் பெரியவீட்டுக்காரரின் மூத்தப்பையன் அவர்கள் வீட்டு அடுப்பங்கரையில் கண்ணும் மூச்சும் நெருப்பாகியிருக்க இவள் அருகில் வந்து நின்றான். திமிர் பொங்க, வா என்பதாய் இவள் பார்க்கவும் அவன் கண்களை கைகளால் மூடிக்கொண்டான். நெருப்பாய்ச் சுட்ட அவன் கைகளைப் பிடித்து உலுக்கியபடி “கண்ணைத்திற... கண்ணைத்திற” என்றாள். அவனால் முடியவேயில்லை. இவளை விலக்கி அங்கிருந்து பயந்து அகன்றான். பிறகு அவனால் இவளைப் பகலில் கூட பார்க்க முடியவில்லை. இரண்டு மாதத்தில் அவனுக்கும் கல்யாணமாகிவிட, பால்வடியும் முகத்தோடும், பளீரென்ற பல்வரிசையோடும் இருந்த புதுப்பெண்ணை அவன் அவ்வப்போது நமுட்டுச் சிரிப்போடு பார்க்க, அவள் வெட்கப்பட இவளால் தாங்க முடியவில்லை. யாரும் அருகில் இல்லாத போது புதுப்பெண்ணின் கன்னத்தை ரத்தம் கட்டிப்போக கிள்ளி வைத்துவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டாள். அதற்குப் பிறகு அங்கு வேலைக்குப் போகவில்லை. பெரிய வீட்டுக்காரம்மாள் வந்து “பைத்தியமே... பிசாசே” என்றாள். “அதான் தாலி கட்டுன ஒரு வாரத்துல புருஷன் ஒடிப் போய் விட்டான்” ஆத்திரம் பொங்க கத்தினாள்.
சினிமாப் பாட்டுக்கள் ஏற்படுத்தியிருந்த சந்தேகங்களும், அரசல் புரசலாக பலர் பேசக் கேட்டு விளங்காமல் இருந்த உலகமும் இப்போது இவனுக்கு பிடிபட ஆரம்பித்தது. தாயின் கர்ப்பக்கிரக இருட்டு விலகிக்கொண்டு வந்தது. பனிபோல மூடி உறைந்துபோன கண்களைப் பார்த்து பிறந்த போதே செத்துத் தொலைஞ்சிருக்கக் கூடாதா என்று இவன் அம்மா அழுதிருக்கிறாள். ஏராளமான சலனங்களோடு இவன் கண்கள் அசைவற்று நிற்கும். “மழைன்னா என்னம்மா”, “வானத்துல பெரிய பம்புசெட்டு இருக்குப்பா..”, “வானம்னா என்னம்மா’, ‘நம்ம வீட்டுக் கூரை மாரி பெருசா மேல இருக்கு. நமக்கு எட்டாது”. ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்ல வேண்டியதிருக்கும். இவன் பெரியவன் ஆக, ஆக அம்மாவின் குரலில் கவலை படிந்து கொண்டே வந்தது. குரல்களே பாதைகளாகிப் போன உலகில் அப்புறம் ஒரு கைவளையோசை மட்டும் பூவாய்ப் பூத்தது. சிறகுகள் முளைக்காத குஞ்சுகளின் துடிப்பும், கதறலும் இவனது கண்களுக்குள் பொறி விட்டுக்கொண்டிருந்தது. இடிமுழக்கமென கேட்ட மேளத்தில் அந்தப் பூவும் உதிர்ந்து போக முகமெல்லாம் இருள் சூழ்ந்து போனான். “எனக்கு கல்யாணமே ஆகாதா..” என்று அம்மாவிடம் விக்கி விக்கி அழுதான்.
வண்ணத்துப் பூச்சிகளும், புட்டான்களும் வயல் முழுவதும் பயிர்களுக்கு மேலே வெட்டி வெட்டி பறந்தபடி இருந்தன. கொக்குகள் கிழக்கு நோக்கி சவுக்கை மரங்களைக் கடந்து போய்க் கொண்டு இருந்தன. வாய்க்காலுக்கு அப்பால் ஒரு கழுதையின் குரல் திடுமென முளைத்து மெல்ல மெல்ல தேய்ந்தது. எல்லாவற்றிலும் அடங்கி நிறைந்திருந்த பேரமைதியை தகர்க்கும் முயற்சியில் இவர்கள் உக்கிரமாயிருந்தனர்.
இவள் ஆந்தையைப் போல உருமாறியிருந்தாள். அந்த தையல்காரனோடு வீட்டில் பிடிபட்டுக் கொண்ட இரவில்தான் இவள் முகம் இப்படி விகாரமாகிப் போனது. அதற்கென ஊரில் காத்திருந்தவர்கள் போல கூடினார்கள். விடுபடாத இணைநாய்களை ரசிக்கிற அந்தரங்க வெறியின் மீது உட்கார்ந்து விசாரணை நடத்தினார்கள். எல்லோரும் கட்டிக் காப்பாற்றிய ஊரின் பேருக்கு களங்கம் வந்து விட்டதாய் அங்கலாய்த்துக் கொண்டார்கள். ஆள் ஆளுக்கு குளவியாய் கொட்டித் தீர்த்ததில் இவளுக்குள் விஷம் ஏறி சுரணையைத் தின்றது. செம்மறிக்குளத்திலிருந்து வந்த சித்தி காறித் துப்பினாள். விளக்குமாத்தை எடுத்து மூஞ்சி முகரை என்று கூட பார்க்காமல் அடித்தாள். சின்ன அசைவுகூட இல்லாமல் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு சித்தியை வெறித்துப் பார்த்தாள். “இதுக்கு நாண்டுக்கிட்டு நின்னுச் சாகலாம். இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்கக் கூடாதுன்னுதான் அக்காவும், அத்தானும் சீக்கிரமே போய்ச் சேந்துட்டாவ போலுக்கு” இவளது தங்கச்சியை இழுத்துக் கொண்டு சித்தி அன்று போனவள்தான். பிறகு சாயங்காலம் இவள் பூ வாங்கினால் கூட ஊர் நமுட்டுச் சிரிப்போடு பார்த்தது. இப்போது அவர்கள் எல்லோருமே காணாமல் போயிருந்தார்கள்.
வேகத்தோடு இவன் அறிந்து கொண்டிருந்தான். உடல் முழுவதும் வெளிச்சம் பார்த்தது. வெளிகளைத் தாண்டி பிரபஞ்சத்தைத் தழுவியபடி, சந்திரனுக்கு அப்பால் சூரியனை நோக்கிய பயணத்தில் ஆயிரத்தெட்டு ஒளிக்குதிரைகளில் சவாரி செய்து போனான். காற்றைத் தேடி தேடி சுவாசித்தான்.
தண்டவாளத்தில் அதிரும் ரெயில் வண்டியின் துடிப்பு இவளுக்கு உறைத்தது. அப்படி புரிவதில் ஒரு சுகமும் இருந்தது. தூக்குச்சட்டி கஞ்சியோடும், ஒத்த வயசுப் பெண்களோடும் முள் அடித்து விறகு கொண்டு வர காட்டுக்குப் போகும் போதெல்லாம் அந்த தண்டவாளம் வந்து இடைமறிக்கும். தண்டவாளங்களுக்கு இடையில் நின்று அதன் முடிவற்ற முடிவை வெறித்துப் பார்க்கும் போது அம்மா, அப்பா ஞாபகத்தில் வருவார்கள். நீண்டு கிடக்கும் அதன் திசையில் இழந்துபோன காலம் பெருமூச்சு விடும். “அம்மா, அப்பா இருந்தென்ன... பொம்பளைக்கு சாசுவதமா” சித்தியின் குரல் கேட்கும். பிசாசு மாதிரி விறகு அடிப்பாள். தெறித்து வந்த முட்கள் உடம்பில் குத்தும். பிடுங்கி எறிவாள். எட்டிப் பார்க்கும் ரத்தத்தை உறிஞ்சுவாள். வெயிலையும் பாராமல் இன்னும் வேகமாய்... வேகமாய் விறகு அடிப்பாள்.
அனற்காற்று வீசியது. எங்கும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. தறிகெட்டுப் பறந்தார்கள். தீப்பிழம்புகளை நெருங்கிக்கொண்டு இருந்தனர். சட்டென இவனுக்கு எல்லாம் இருண்டது. இவள் இவனைத் தள்ளி விலகினாள். அதல பாதாளத்திற்கும் கீழே.. கீழே போய்க்கொண்டு இருந்தான். “ஏலேக் குருடா.. யாரோ வர்ற மாரி இருக்கு... எந்திச்சு ஓடு...” இவள் அங்கங்கு கிடந்த துணிகளை அள்ளி மேலேப் போட்டுக் கொண்டாள். தட்டிக்குள்ளிருந்து மூச்சு வாங்க எட்டிப் பார்த்தாள். சத்தம் எதுவும் கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் தைரியமாகி வெளியே வந்து நின்றாள். போவதற்குமுன் உள்ளே இவனை திரும்பிப் பார்த்தவள் நிலைகுலைந்து போனாள்.
கால்ச்சட்டை ஒரு மூலையில் கிடக்க இவன் தவழ்ந்து தவ்ழ்ந்து கைகளை வேறெங்கோ அளைந்து தேடி கொண்டிருந்தான். உடல் இழைக்கிற திணறலோடு பயத்தில் இவன் அரற்றியது மரணத்தின் சாயல் கொண்டதாயிருந்தது. வெடித்து அழுதவனை ஓடிப்போய் இறுக்கி அணைத்துக் கொண்டாள். “கண்ணா... கண்ணா” என்று புலம்பி இவன் தலையைக் கோதி விட்டாள். சூடான மார்பில் இவன் கண்ணீர் வழிய குளிர்ந்து போனாள். வெளியே வண்ணத்துப்பூச்சிகள் அவை பாட்டுக்கு பறந்து கொண்டிருந்தன. எங்கும் அமைதி.
பி.கு: 1999ல் விசையில் வெளியானது. நான் எழுதிய கடைசி சிறுகதை.
*
பகத்சிங்: மண் அடைகாத்துக் கொண்டிருக்கிறது
என்னை நட்சத்திரப் பதிவாளராய் அறிவித்த தமிழ்மணத்திற்கு நன்றி. இன்று இந்த தேசத்தின் வீரப்புதல்வன் பகத்சிங்கின் நினைவு தினம் என்பது நிழலாடிக்கொண்டு இருக்கிறது. இந்த முதல் நட்சத்திரப் பதிவை அந்தப் போராளியின் நினைவுகளோடு துவங்குகிறேன்.
*
சட்லெஜ் நதியின் கரையோர ஊரான பெரோஸ்பூரில் சிறுவர்கள் ஆச்சரியமாக அந்த ஹெலிகாப்டரை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ம் தேதி, இந்த உற்சாகத்தை அவர்களுக்கு தந்து செல்கிறது. பஞ்சாப் மாநில முதல்வர் விண்ணிலிருந்து தரையிறங்கி அந்த மூன்று பேருக்கும் வணக்கம் செலுத்தி பறக்கிறார். சிறுவர்கள் மீண்டும் விண்ணைப் பார்த்து சத்தம் எழுப்புகிறார்கள். ஓடுகிறார்கள். பகத்சிங் அங்குதான் ராஜகுருவோடும், சுகதேவோடும் அந்த மண்ணில்தான் கலந்து, அடுத்த தலைமுறையின் காலடி ஓசைகளை கேட்டபடி இருக்கிறார்.
அங்கு மட்டும் அவர்கள் இல்லை. டான் நிறுவனம் நடத்தும் பத்திரிக்கையொன்றில் ஜாவேத் நக்வி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒரு தகவலை சொல்கிறது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தெற்குச்சுவரின் உட்புறத்தில் கரியால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்கள் வரையப்பட்டிருந்திருக்கின்றன. 1991ம் வருடம் அங்கு சென்றிருந்தபோது நக்வி அதை பார்த்திருக்கிறார். ஆளுயரத்திற்கு மிக நேர்த்தியாக இருந்திருக்கின்றன. யார் வரைந்தார்கள், எப்போது வரைந்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. எதோ போகிற போக்கில் பகத்சிங் வரையப்பட்டிருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது. "நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடு சம்பந்தப்பட்டவையே" என்று சிறைக்குள் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட நோக்கத்தோடுதான் அங்கு காட்சியளித்திருக்க வேண்டும்.
தனது இருபத்தொன்றாம் வயதில் 'மதமும் விடுதலைப் போராட்டமும்' என்று வகுப்புவாதத்தின் அபாயங்களைச் சுட்டிக் காட்டிய சிந்தனையாளர் அவர்.
லாகூர் கலவரங்களுக்குப் பிறகு அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். "முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல...அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும் ஆகும்." என்ற வாக்கியம் அவரது பார்வையின் வீரியத்தையும், தெளிவையும் நமக்கு உணர்த்துகிறது.
இளமையின் துணிவும், தேசப்பற்றும், அளப்பரிய தியாகமும் கொண்ட உருவமாகவே பொதுவாக பகத்சிங் முன்வைக்கப்பட்டிருக்கிறார். அதையும் தாண்டி ஆழமான புரிதல் கொண்டவராய், பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை யோசிக்கிறவராய் இருந்திருக்கிறார். இருபத்து மூன்று வயதில் இந்த மக்களைப் பற்றி, விடுதலையைப் பற்றி, அனைவருக்குமான தேசம் பற்றி தனது இலட்சியங்களை அறிவுபூர்வமாக முன் வைத்திருக்கிறார். அதுதான் பாபர் மசூதியின் சுவரில் அவரது உருவம் வெளிப்பட காரணமாயிருந்திருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் குண்டுகள் வீசியதற்காகவும், சாண்டிரஸை கொலை செய்ததற்காகவும் நடந்த வழக்கு முடிந்திருக்கிறது. தீர்ப்பு எந்த நாளிலும் வரலாம். சுகதேவ் தனக்கு இருபது வருடம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அப்படி ஆயுள் தண்டனை கிடைத்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், வாழ்வு அல்லது மரணம் என்றும் குறிப்பிடுகிறார். பகத்சிங் அவருக்கு எழுதுகிற பதில் அந்த இளைஞனின் தோளில் உட்கார்ந்து நம்மை உலகத்தை பார்க்கச் சொல்கிறது. "எனக்கு மரண தண்டனை. உங்களை நாடு கடத்தப் போகிறார்கள். நீங்கள் வாழ வேண்டும். புரட்சியாளர்கள் மரணத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு சூழலையும் எதிர்நோக்குவார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் வாழ வேண்டும். உலகத்தின் துயரங்களிலிருந்து விடுபட மரணம் ஒரு வழியாய் இருந்திட முடியாது." என்னும் அவரது வார்த்தைகளை செவிடர்களுக்கும் கேட்கும்படியாய் உரக்க வாசிக்க வேண்டும்.
1931, மார்ச் 23ம் தேதி அந்த திங்கள் கிழமை இரவு 7.33 மணிக்கு நடந்தது. "இன்குலாப் ஜிந்தாபாத்' வீர முழுக்கமிட்ட பகத்சிங்கின் குரல்வளையை இறுக்கிய தூக்குக்கயிறு அவரது கடைசி நேரத் துடிப்புகளோடு அதிர்ந்து மெல்ல அசையாமல் போனது. தேசம் தனது வீரப்புதல்வர்களை பறி கொடுத்து நின்றது. தன்னெழுச்சியாய் கடைகள் அடைக்கபட்டன. ஊர்வலங்களும், பிரார்த்தனைகளும் நடைபெற்றன. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் லாகூர் மிண்டோ பூங்காவில் கூடி நின்று பிரார்த்தனை செய்தார்கள். சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் வங்காளத்தில் மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற்றது. பகத்சிங் என்னும் பேரே ஒரு சக்தி பிறக்கும் மந்திரச் சொல்லாகிப் போனது. பஞ்சாபில் பெரும்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் அன்று அடுப்பு பற்ற வைக்கவில்லை.
“பகைவர்களே இல்லை என்கிறாயா?
அந்தோ என் நண்பனே!
இப்பெருமிதம் மிகவும் அற்பமானது
உனக்கு எதிரிகள் இல்லாது போனால்
நீ செய்திருப்பது அற்ப சொற்பமானதே
துரோகி யாரையும் வீழ்த்தியிருக்க மாட்டாய்
தவறினை ஒருபோதும் சரி செய்திருக்க மாட்டாய்
போராட்டத்தில் கோழையாய் இருந்திருப்பாய்”
சார்லஸ் மகாய் எழுதிய இந்தக் கவிதையை சிறைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார் பகத்சிங். ஆத்திரமும், வேகமும் கொண்ட அவரின் பரிணாமம் மிக நிதானமானதாய் இருக்கிறது. அதே நேரத்தில் மிக உறுதியானதாய் இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பலர் பின்னாளில் ஆன்மீக வாழ்விற்குள் தங்களை புதைத்துக் கொண்டு ஒதுங்கிப் போயிருக்கிறார்கள். பகத்சிங்கின் குரல் இந்த இடத்தில் தனித்து ஒலிக்கிறது. "நான் ஏன் நாத்திகனாய் இருக்கிறேன்' என்னும் கட்டுரையில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின் தொடர வைக்கின்றன. எழுப்பும் கேள்விகள் ஏற்கனவே இங்கு தயாராய் இருக்கும் பதில்களை வீழ்த்துகின்றன. "கடவுளை நம்பும் ஒரு இந்து தனது மறுபிறப்பில் ராஜாவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஒரு முகம்மதியனோ, கிறிஸ்துவோ துயரங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் செல்வங்களை அனுபவிக்கலாம் என கனவு காண்கிறான். எனக்கு, என் காலுக்கடியில் இருக்கும் இந்த கணமே இறுதியானதாய் தெரிகிறது" என்று சென்றுகொண்டே இருக்கிறார்.
கனவுகளை, இலட்சியங்களை இந்த மண்ணில் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் பகத்சிங். அவைகளை இன்னும் இந்த மண் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. பாபர் மசூதியில் வரையப்பட்டிருந்த பகத்சிங்கின் சித்திரம் உயிர்பெற்று, விதைகளையும் மண்ணையும் கீறிக்கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வெளிவரட்டும். நம் அறிவும் கண்களும் ஏங்குகிற காட்சியாக அது இருக்கட்டும்.
*
தமிழ்ச்சினிமாவின் கதாநாயகர்கள்!
யோசித்துப் பார்க்கும் போதும், தமிழ்ச்சினிமாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் போதும் இதுதான் உண்மையாகத் தெரிகிறது.
இதை எனக்கு உறுதிப்படுத்தியதும், நிச்சயமாக்கியதும் நடிகர் பிரகாஷ்ராஜ் தான்! அவரது தொலைக் காட்சிப் பேட்டிகளாட்டும், ஆனந்த விகடனில் எழுதிய தொடராகட்டும், அந்த மனிதர் மீதான மதிப்பும், மரியாதையும் கூடிக்கொண்டே இருக்கிறது. அவர் பேசுவதில் இருக்கிற வாழ்வின் உண்மைகள் ‘அட’ என வியக்க வைக்கிறது. சினிமா குறித்த பார்வைகளும், விமர்சனங்களும் அவரை நமக்கு மிக நெருக்கமாய் உணரவைக்கிற்து. அதே நேரம் நடிகர் விஜய்யோ, சிம்புவோ பேசுவதை ஒரு கணம் கூட கேட்க சகிக்கவில்லை. வாந்தியெடுக்கதான் வருகிறது.
“இது வரைக்கும் தமிழில் வந்திராத டிஃப்ரண்டான மூவி இது, இதுவரை நான் நடித்திராத டிஃபரண்டான கேரக்டர் இது, தமிழ்ச் சினிமாவுல ரொம்ப வித்தியாசமா என்னைப் பாக்கப் போறீங்க” என இந்த அரைகுறைகள் கொடுக்கிற பில்டப்கள் இருக்கிறதே தாங்க முடியவில்லை சாமி! (இயக்குனர் பாலாவைத் தவிர இதைச் சொல்வதற்கு இங்கு பலருக்குத் தகுதியில்லை). அதே மாதிரி டுயட்கள், அதே மாதிரி பைட்கள், அதே மாதிரி பழிவாங்கல்கள், அதே மாதிரி ஹிப் மூவ்மெண்ட்கள்தான் படங்கள் முழுக்க நிரம்பியிருக்கும். பார்த்துவிட்டு கேமிரா முன் நின்று “சூப்பர்”., “விஜய்க்காக பாக்கலாம்”, “அசத்தல்”. “நல்ல மெஸெஜ்’ என்று செல்லும் ரசிகர்களைப் பார்த்து “ஐயோ, ஐயோ என் தமிழ்ச் சமூகமே” என பரிதவிக்கத்தான் முடிகிறது.
பிரபலமான இந்த கதாநாயகர்களுக்கென்று சமூகப்பார்வையும், தெளிவான கருத்துக்களும் இருப்பதில்லை. உலகமே இடிந்து விழுந்தாலும் வாயைத் திறக்காமல், எவனோ ஒரு டூப் தனக்காக சண்டை போடுவதைப் பார்த்து காலரை தூக்கிவிட்டுக் கொண்டிருப்பார்கள். தப்பித் தவறி எதாவது சொல்கிறேன் என வாய்ஸ் கொடுத்தால், தலையில் ஒங்கி ஒங்கி அடித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது. குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமல் இவர்கள் எல்லாம் கதாநாயகர்களாக வலம் வர முடிவது அவமானம்தான். அவர்களின் பிறந்த நாளுக்கு காவடி எடுப்பதும், அபிஷேகம் செய்வதும், அலகு குத்துவதும் அசிங்கம்தான்.
அதே நேரம் தமிழ்ச்சினிமாவில் அற்புதமான மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள். சமகால உலகம் குறித்த கவலையோடும், பிரக்ஞையோடும் வாழ்ந்த கலைஞர்களாக அவர்கள் வலம் வந்திருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, சந்திரபாபுவிலிருந்து பெரும் பட்டியலே சொல்ல முடியும். இப்போதும் நாசர், விவேக், பிரகாஷ்ராஜ் என அவர்கள் தொடர்கிறார்கள். கதாநாயகிகளாக நடித்தவர்கள், இயக்குனர்கள். நகைச்சுவை நடிகர்கள், வில்லன்களில் இப்படிப்பட்டவர்களை அதிகம் காண முடிகிறது. கதாநாயகர்களில் கமலஹாசனைத் தாண்டி யாரையும் யோசிக்க முடியவில்லை.
இங்கு கதாநாயகனாவதற்கு அறிவொன்றும் தேவையில்லையோ?
*
சொலவு நிறைய சுண்டைக்கா!
“சொலவு நிறைய சுண்டைக்கா
விடிஞ்சு பாத்தா ஒண்ணுமில்ல?”
புதிர் போடுகிறாள் அந்த பனிரெண்டு வயதுச் சிறுமி. ஆள் ஆளுக்கு ஒவ்வொன்று சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் இல்லை, இல்லை, என்று சொல்லிக்கொண்டே அடுத்த புதிருக்கான யோசனை செய்கிறாள்.
யாரோ “நட்சத்திரம்” என்று சொல்ல.... அடுத்த விடுகதை வருகிறது.
“கோட்டுக்குள்ளக் கெடந்து
குத்துப்படுற ஜாதி... அது என்ன?
திரும்பவும் யோசிக்கிறார்கள். புதிர் போடும் பள்ளிக்கூடம் சென்றதில்லை. இப்போதுதான் அறிவொளியில் படிக்க ஆரம்பித்திருக்கிறாள். அவள் சொல்லும் விடுகதைகளில் உள்ள அருமைகளை அறிந்திருக்கவில்லை. உவமைகளும், படிமங்களும் அற்புதமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. அவளைப் பொறுத்த வரையில் அது ஒரு விளையாட்டு. அவ்வளவே.
“சின்னப் பையன் வந்தான்
திருடன் ஒடிப் போனான்... அவன் யார்?”
“ராஜா மக
பூ வைக்காம
சட போட மாட்டா... அவள் யார்?”
“முங்கி முங்கி
மண் எடுக்கும்
மூளிப் புறாக்குஞ்சு... அது என்ன?”
சுரங்கம் போல் விடுகதைகள். ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் நுட்பம் அதிசயம் தருகிறது. புதிர் அவிழ்க்கப்பட்டதும் ‘அட’ சொல்ல வைக்கிறது. விடுகதைகளின் விடைகளை நீங்களும் யோசியுங்கள். விளையாட்டுத்தான்... கூடவே இலக்கியமும்!
பி.கு: டிசம்பர் 1993ல் நாங்கள் நடத்திய விழுது பத்திரிக்கையில் எழுதியது இது.
*
கல்யாண்ஜியின் முன்னுரையோடு “மழை வரும் பாதையில்..”
மண்ணைக் கொத்தி
பாத்தி கட்டி
கம்பி வேலி இழுத்துக் கட்டி
ஆசைக் கனவோடு
நட்டுவைத்தேன்
விதவிதமாய்ப் பூஞ்செடிகள்நட்டு வைத்த பூஞ்செடிகளெல்லாம்
வாடி நிற்கபார்த்தறியாச் செடியெல்லாம்
பளிச்சென ஒருநாள்
பூத்துக் குலுங்கின
வேலிக்கு வெளியே
இந்தக் கவிதையையும் கொண்டு, ’மழை வரும் பாதையில்..’ என்னும் கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது. எழுதியவர் கிருஷி என அழைக்கப்படும் திரு.ராமகிருஷ்ணன். எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர், கோணங்கி போன்றவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இலக்கியப் பரிச்சயமும், எழுத்துக்கள் அறிமுகமும் செய்தவருமான, அறுபதைத் தாண்டிய இளமைத் துடிப்போடு கூடிய கிருஷி. மிக இயல்பான நட்பும், நுட்பமான உறவும் கொண்டாடுகிற மனிதர்.
மார்ச் 10ம் தேதி அவரது ‘மழை வரும் பாதையில்..’, திருநெல்வேலி ஜானகிராம் ஓட்டலில் வைத்து நெல்லை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. இலக்கிய விமர்சகர் திரு. தி.க.சி அவர்கள் வெளியிட, எழுத்தாளர். தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்கள் உதயசங்கர், தோப்பில் முகமது மீரான், பேராசிரியர்.தொ.பரமசிவம், டி.தருமராஜன் மற்றும் நான் வாழ்த்திப் பேசினோம். கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் வண்ணதாசன் வந்து பார்வையாளர்களோடு உட்கார்ந்து ரசித்தார்.
கடல் அலையாய், கடலுக்குள் யுகம் யுகமாய் தவமிருக்கும் ஒற்றை பாறையாய், பயணி போல வந்து செல்லும் ஒளியாய் கிருஷி இந்தக் கவிதைகளுக்குள் காட்சியளிக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலானது அன்பும் எளிமையும் என்பதை திரும்பத் திரும்ப அவர் முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறார். இயற்கையோடு இயைந்த வெளியில் சஞ்சரிப்பதில் அவருக்கு அலாதியான சுகம் இருக்கிறது. கவிதை தொகுப்பு இன்றைய உலகில் அமைதியை தேடும் ஒரு மனிதனின் குரலில் இறங்குகிறது நமக்குள்.
நிறைசூலியாய் நிற்கும்
வேம்பின் வாசத்தில்
வயல்வெளிக்கு மேல்
கைவீசி வரும்
நிலவைப் பார்த்தபடி
குத்த வைத்திருக்க வேண்டும்
கொஞ்ச நேரம்
முதுகைச் சாய்த்தபடி
மண் சுவற்றில்
000
எவ்வளவு காலப் பழக்கம்
நமக்குள்
ஏதேனும் ஒரு புள்ளியில் கூட
சந்திக்க முடிவதில்லையே
இப்போதெல்லாம்
நண்பனே
000
குழந்தைக்கும் தெரிகிறது
தாய்க்கும் தெரிகிறது
நிலவின் மொழி
000
வேற்றுச் சூரியக் குடும்பத்தின்
பார்த்தறியாச் சகாக்களோடு
இணைய தளத்தில்
சதுரங்கம் ஆடலாம்
நாளைய நூறாண்டில்
இருக்கட்டும்
இன்று என்ன செய்யப் போகிறோம்
000
மேலெல்லாம் வழிய வழிய
அள்ளி அள்ளிப்
பருகினேன் ஆவலோடு
தண்ணீரை“நான்” கரையக் கரைய
நதியானேன்.
000
அற்புதமானக் கவிதைகள் கொண்ட தொகுப்பில் ஒரு காதல் கவிதை கூட இல்லாதது முக்கியமான விஷயமாக இருக்கிறது. கிருஷியிடம் கேட்டேன். ஆமாம் என்று சிரித்துக் கொண்டார். அவரைப் பற்றி முன்னுரையில் வண்ணதாசன் மிக உண்மையாகச் சொல்கிறார்.
"அவருக்கு எல்லோரும் சார்வாள் அல்லது சாரே!. அது எப்படி ஒரு ஆளின் கையையோ, தோளையோ தொடாமல், வெறும் குரலாலும், அழைப்பாலும் எல்லோரிடமும் ஒரு நெருக்கத்தை உர்வாக்கிவிட முடிகிறது இவருக்கு. இந்த முப்பது, முப்பத்தைந்து வருடப் பழக்கத்தில் அவருடைய தாடி எவ்வளவு அழகாக நரைத்திருக்கிறது. கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி சிந்து பூந்துறைக்கு, த.மு.எ.ச விலிருந்து தம்மபதம் வரை, ஹோட்டல் ஜானகிராம் காஃபி மாஸ்டர் பண்டாரத்திலிருந்து இயறகை வேளாண்மை நம்மாழ்வார், ஒவியர் சந்ரு, எடிட்டர் லெனின், திலகவதி ஐ.பி.எஸ், பேராசிரியர் ஞானசம்பந்தன், இயக்குனர் ராஜேஸ்வர், டாக்டர் ஏக்னஸ் என்று எல்லைகளை விரித்துக்க்கொண்டே போகிற மனது அவருடையது. தச்சை ராஜா கையும், இசக்கி அண்ணாச்சி கையும், கிராஜுவேட் காபி பாரில் வேலை பார்க்கிற வ.உ.சி கையும் அவருக்கு ஒன்றுதான்.”
அவரது கவிதை வரிகள் குறித்து கல்யாண்ஜி சொல்கிறார்....
தன்னைத்தானே ஏந்திக்கொண்டு ராமகிருஷ்ணன் அவருடைய கவிதைகளில் வருகிறார்.எந்த ஒரு வரியின் மேலும் அவருடைய சாயல் இருக்கிறது. ஒரு எளிய ஆரஞ்சுப் பட்டுப்பூச்சி போல, நம் வீட்டு அந்தி மந்தாரைச் செடிகளின் மீது பறந்து விட்டுப் போகிறார். புதுத் தீப்பெட்டியின் முதல் குச்சி உரசலுக்குப் பிறகு, மருந்துப் பெட்டியில் தீக்குச்சியின் ஒற்றை உரசல் பதிந்திருப்பது போல ஒரு வரி. அரசு பொது மருத்துவமனை பக்கத்து வேப்ப மர நிழலின் கீழ் கவலையோடு உட்காந்திருக்கிற ஒரு பெரிய மனுஷியின் பக்கத்தில் அவள் கொண்டு வந்திருக்கிற தண்ணீர் பாட்டிலுக்குள் புகுந்து வெளியேறுகிற வெயில் மாதிரி சில வரிகள்.
கவிதைத் தொகுப்பின் மீதான கல்யாண்ஜியின் பார்வை...
இன்றைய பூமி, இன்றைய இயற்கை, இன்றைய மனிதர், இன்றின் வாழ்வு குறித்து மட்டுமே கவனம். அந்த கவனமே கவிதை. இன்றைய நவீன கவிதை அல்லது கவிதை எந்த இடத்தில் நிறகிறது, தான் எந்த இடத்துகுச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் யோசனையற்ற இயல்பான சிறகடிப்பு. நமக்குத்தான் இது மைனா, இது சிட்டுக்குருவி, இது பருந்து. வானத்துக்கு எல்லாம் பறவைகள்தாம்.
முடிந்தால் வாங்கிப் படியுங்கள்.
வெளியீடு:
வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை
விலை.ரூ.60/-
*
“நீட்டிய கைகள் வெட்டப்படும்”
இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தைகள் இவை இன்று. “இந்துக்களுக்கு எதிராக யாராவது கைநீட்டினால், இந்துக்கள் பலவீனமானவர்கள் என்றோ அவர்கள் பின்னால் யாருமில்லை என்றோ யாராவது நினைத்தால், பகவத் கீதை மீது ஆணையாகச் சொல்கிறேன்... நான் அவர்களது கைகளை வெட்டுவேன்” என முழங்கி இருக்கிறார் அவர்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக பேசிய கூட்டத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் நேரு குடும்பத்தின் வழித்தோன்றல்களில் ஒருவரும், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் பேரனும், உயிரோடு இருந்திருந்தால் பிரதமராகி இருக்கக்கூடிய சஞ்சய் காந்தியின் மகனும் ஆகிய வருண்காந்திதான் இந்த வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். எப்பேர்ப்பட்ட அரசியல் தெளிவையும், பக்குவத்தையும் அந்தக் குடும்பம் போதித்து வளர்த்திருக்கிறது!
இந்துக்களுக்கு எதிராக யார் இங்கு கை நீட்டினார்கள் என்று தெரியவில்லை. இந்துக்கள் பலவீனமானவர்கள் என்று யார் கருதினார்கள் என்றும் தெரியவில்லை. கீதை மீதான சத்திய ஆவேசம் ஏன் என்று புரியவில்லை. ‘நான் இந்துக்கள் பக்கம் நிற்கிறேன்’ என்று உணர்ச்சிகரமாக உறுதி செய்து கொண்டிருக்கிறார் அவர் என்பது மட்டும் தெளிவாகிறது.
தேசத்தின் அரசியல் புரியாமல், இரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு துளி கூடத் தெரியாமல் பித்துக்குளித்தனமாக பேசிய பேச்சு இது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையே தெரியாமல் அள்ளித் தெளித்த வார்த்தைகள் இவை. அவர் மீது நடவடிக்கை இருக்கும் என்பதாய் பத்திரிக்கைச் செய்திகள் சொல்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் அகப்பட்டவர்களின் வழக்கமான “அவை திரித்துக் கூறப்படுகின்றன” சொல்லி, தான் ஒன்றும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும் வருண் அறிவித்திருக்கிறார். பெரிய போராளிதான். பா.ஜ.கவில் இருக்கும் முஸ்லீம் தலைவர்களான நக்வி போன்றவர்கள் ‘வருண் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கட்சியிடம் முறையிட்டிருப்பதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பா.ஜ.கவோ ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றும் ‘அவர் பேசிய வீடியோ காட்சிகளை முதலில் பார்க்க வேண்டும்’ என்றும் எதுவும் தெரியாத புண்ணியமூர்த்தியாய் கருத்துக்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. “அப்படி பேசியிருந்தால் தப்பு” என்று கூட சொல்ல வாய் வரவில்லை. வருண்காந்தியின் பேச்சு, இந்துக்களிடையே ‘எழுச்சி’ ஏற்படுத்தினால், அதில் ஆதாயம் தேடுவது என்பதும், வருண்காந்தி சிறையிலடைக்கபட்டால், அவரையே பலிகிடாவாக்கி தேர்தல் களத்தில் சூடான பிரச்சாரம் செய்து ஆதாயம் தேடுவது என்பதும் அவர்களது மௌனத்தின் அர்த்தமாக இருக்கும். எப்படியாவது ஓட்டுக்கள் வேண்டும், அவ்வளவுதான்.
சாதாரண மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இங்கு சொல்ல முடியாத துயரங்களோடு கவனிப்பாரற்றுத் தெருவில் காட்சியளிக்கின்றன. சுதந்திரம் அடைந்த தேசத்தில், இதோ நம் பிரஜைகள் வானமே கூரையாய் பிளாட்பாரத்தில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தையே குடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள் இலட்சக்கணக்கில் விவாயிகள். நாளை என்பது எப்படி விடியும் என்று கற்பனை கூட செய்ய முடியாமல் வாழ்வின் விளிம்பில் நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். ஆரோக்கியமற்ற சூழலில் பல கோடி குழந்தைகள். இவர்களில் யார் இந்துக்கள்... யார் இந்துக்கள் அல்லாதவர்கள்? யாருக்கு எதிராக யார் கைகளை நீட்டுவது? யார் கைகளை யார் வெட்டுவது?
காந்தியின் பேர்களோடு அறியப்பட்ட நேருவின் குடும்பத்தில் இருந்து கோட்சேவின் குரல் ஒலிக்கிறது. கோட்சேவும் கைகளில் பகவத்கீதையின் மீது சத்தியம் செய்துதான் காந்தியைக் கொன்றது சரி என்றான்.
என்ன செய்ய..! கவலையெல்லாம் இப்போது மக்களைப் பற்றியும், காந்தியைப் பற்றியும்தான். காந்தி என்றால் மகாத்மா காந்தி.
*
ஏழு ஆண்களும் ஒரு இளம்பெண்ணும்
சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்படுவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் கூட இருக்கவில்லை. அந்த கம்பார்ட்மெண்ட்டில் கல்யாணமான ஆண்கள் ஏழு பேர் இருந்த பகுதிக்குள் வெள்ளை பனியனோடும், நீல ஜீன்ஸோடும் அவள் பிரவேசித்தாள். “அப்படி போடு, போடு” என்று வந்த திரிஷா பற்றிய எஸ்.எம்.எஸ் ஜோக்கைச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தவர்கள் சட்டென அடங்கினார்கள். ஒரு ஓரமாய் அவள் அமர்ந்து கொண்டாள். வண்டி புறப்பட்டு மெல்ல பிளாட்பாரத்தை கடக்கும் வரை, அங்கு யாரும் பேசிக்கொள்ளவில்லை.
விமானப் பணிப்பெண் ஒருத்தி ரெயிலில் வருகிறாள் என்று அவர்கள் புரிந்து கொண்டனர். வாட்சைப் பார்த்தவள், மிக இயல்பாக அவர்கள் பக்கம் திரும்பி, “நீங்கள் எல்லோரும் டில்லியா செல்கிறீர்கள்” என்றாள் ஆங்கிலத்தில். “ஆமாம், ஆமாம்” என அவசரமாக இரண்டு மூன்று பேர் பதில் சொல்லினர். மற்ற நால்வருக்கும் உடனடியாக வாய் வராமலிருந்தது. இல்லையென்றால் அவர்களும் ஆமாம் போட்டிருப்பார்கள். “எனக்கு மிடில் பெர்த். அப்பர் பெர்த் எடுத்துக்கொள்ளவா” கேட்டாள். சரி, சரியென்றனர். அவள் மேலேறிக் கொண்டாள்.
கீழே மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தார்கள். அவ்வப்போது அவளது உடலைப் பார்த்துக் கொண்டார்கள். நயன்தாரா ஏன் சிம்புவோடு பேசுவதில்லை என்பது குறித்து ஒருவன் பெரும் ஆராய்ச்சி செய்து வைத்திருந்தான். சத்தமாகவே சொல்ல ஆரம்பித்தான். நாற்றமெடுக்கும் பகுதிக்குள் ரெயில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். மேலே அவள் இருக்கிறாள் என்பது போல ஓருவன் கண்ஜாடை செய்தான். இருக்கட்டுமே என்பது போல அவன் முகம் அசைத்து தன் பேச்சில் முக்கிய பகுதியை அடைந்தான். பெரும் சிரிப்புச் சத்தம் எழுந்தது. அவள் ஒரு புத்த்கத்தை எடுத்து படுத்துக் கொண்டாள்.
ஆண்களும் கொஞ்ச நேரம் இப்படியே பேசி, சிரித்து அடங்கினார்கள். தூங்கினார்கள். எழுந்தார்கள். வெளியே வேடிக்கை பார்த்தார்கள். திரும்ப பேச ஆரம்பித்தார்கள். கோரஸாய் பாடினார்கள். மேலும் பல ஆராய்ச்சி அறிக்கைகளை வாசித்தார்கள். சிரித்தார்கள். அவளது உடலையும் பார்த்துக் கொண்டார்கள். அவள் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. இடையில் இரண்டு முறை செல்போனில் பேசினாள். மொத்தமே நான்கு முறைதான் கீழே இறங்கினாள். சில வாழைப் பழங்களோடும், ரொட்டிப் பொட்டலங்களோடும் மேலே ஏறிக்கொண்டாள். மற்றபடி அந்த புத்தகம். தூக்கம்.
இரண்டாம் நாள் அதிகாலையில் பஹர்கஞ்ச்சிற்குள் ரெயில் நுழைந்தது. எல்லோரும் தங்கள் சுமைகளோடு இறங்குவதற்கு தயாரானார்கள். அதில் ஒருவன் “ஸீ யூ மேடம்” சொன்னான் பவ்யமாக. அவள் புன்னகைத்தாள். எல்லோரும் சொல்லினர். புன்னகைத்தாள். புன்னகைத்தனர். இப்படியொருத்தியை இனி எப்போது பார்க்கப் போகிறோம் என ரகசிய வருத்தம் அவர்களை வாட்டியது. கூடவே, அவளுக்குள் எங்கோ தாங்கள் இருப்பது போல ஒரு உணர்வும், சிறு திருப்தியும் இருக்கத்தான் செய்தது. எவ்வளவு பேசியிருக்கிறார்கள்.
பிளாட்பாரத்தில் இறங்கி நடக்கும் போதுதான் கவனித்தார்கள். ரெயில் ஏறும்போது அவள் கொண்டு வந்த கருப்பு பையோடு, சின்னதாய் ஒரு பிளாஸ்டிக் பையும் இப்போது வைத்திருந்தாள். சாப்பிட்ட வாழைப்பழத்தின் தோல்கள், பொட்டலக் காகிதங்கள் அதற்குள் இருந்தன. பிளாட்பாரத்தில் அங்கங்கு இருந்த குப்பைத் தொட்டிகள் ஒன்றில் அதை கவனமாகப் போட்டாள். கூடவே, தாங்கள் அவளுக்குள் செலுத்திய வார்த்தைகளும் விழுந்ததைப் பார்த்து ஏழு ஆண்கள் ஏமாற்றமடைந்தனர். பதினான்கு கண்களும் விழுந்ததை பார்த்து அவள் சிரித்துக்கொண்டாள்.
*
ரெயிலோடு போய்..
முந்தா நாள், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு இதோ இன்று விடிகாலை ஹௌரா வந்து சேர்ந்து விட்டேன். அன்று சாயங்காலம் சென்னையில் பதிவர்கள் முரளிக்கிருஷணன், ஜ்யோவ்ராம் சுந்தர்,புருனோ, ஆதிமூலக்கிருஷ்ணன், அதிஷா, லக்கிலுக், கேபிள் சங்கர், ஸ்ரீ, வெண்பூ, நரசிம் ஆகியோரை சந்தித்துப் பேசியது எல்லாம் என்றைக்கோ நடந்தது போல இருக்கிறது. ரெயில் பயணம் எப்போதுமே அடர்த்தியான கனவின் நிழல் கொண்டிருக்கின்றன.
தொழிற்சங்கப் பணிகள் நிமித்தமான பயணம் இது. இந்த இருபது வருடங்களில் பலமுறை டெல்லிக்கும், சிலமுறை கல்கத்தா,ஹைதராபாத், ஹௌகாத்தி, புத்தகயா, கட்டாக் என தேசத்தின் முக்கிய பிரதேசங்களில் பயணம் செய்ய இப்படி வாய்த்திருக்கிறது. ஒவ்வொன்றும் வாழ்வை புதுப்பிக்கிற நிகழ்வுகள்தாம். புதிய மனிதர்களோடும், ஜன்னலோரம் கடந்து கொண்டே இருக்கும் புதிய புதிய நிலப்பரப்புகளோடும் நமது லௌகீக வாழ்வின் இறுக்கங்கள் உடைந்து போகின்றன. லேசாகி போகிறோம். எல்லைகள் விரிவடையும் போது மனதும் விசாலமாகிறது.
000
வாழ்வின் மிக முக்கியமான தருணங்களோடு ஒடிக்கொண்டிருக்கிறது ரெயில். "ஏளா.. பதினோரு மணி வண்டி அப்பமே வந்துட்டு, கொழம்புக்கு தேங்காய அரை” என்று ஆச்சி சொல்வதைப் போல ஊரில் பலர் நேரம் கணிப்பதே ரெயில் சத்தத்தை வைத்துத்தான். கல்லூரி படிக்கும் போது ஆறுமுகனேரியிலிருந்து திருச்செந்தூர் வரை தினந்தோறும் ரெயில்தான். படித்து முடித்த பிறகு சென்னைக்கு தனியே முதன்முதலாய் போனது ரெயிலில்தான். ஒன்றரை வருடமாக வேலையில்லாமல் சென்னையில் அவதிப்பட்டு, சாத்தூரில் பாண்டியன் கிராம வங்கியில் வேலை கிடைத்ததும், அப்பாடா என்று பெரும் சந்தோஷத்துடன் ஊருக்குப் புறப்பட்டதும் ரெயிலில். கல்யாணமான அன்றே அம்முவை அழைத்துக் கொண்டு ஊருக்குச் சென்றதும் ரெயிலில்.
வேலைக்குச் சேர்ந்து, சாத்தூரில் நாங்கள் தங்கியிருந்த இடம் வைப்பாற்றை ஒட்டிய பகுதியில் இருந்தது. பாலத்தின் மேல் தடதடக்கும் முத்துநகர், நெல்லை, அனந்தபுரி, கன்னியாகுமரி எகஸ்பிரஸ்களை மாடியிலிருந்து பார்க்க முடியும். இப்போது சாத்தூரில் நாங்கள் குடியிருக்கும் குயில்தோப்பை ஒட்டித்தான் ரெயில்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன. நண்பர்கள் ரெயில் தோப்பு என்றும் கிண்டல் செய்வார்கள்.
ரெயிலோடு நானும், என்னோடு ரெயிலும் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
000
எங்களோடு பெட்டியில் central industrial security force காவலாளிகள் பயணம் செய்தனர். முடியை ஒட்ட வெட்டிய ஹரியானா இளைஞர்கள். செல்போனில் பேசியது, கால்ச்சட்டையோடு காலை மடக்கிக்கொண்டு தூங்கியது தவர அவர்களைப் பற்றிய சித்திரங்கள் பதியவில்லை. கட்டாக்கில் இறங்கிக் கொண்டார்கள். என்னோடு வந்திருக்கும் தோழர்.சோலைமாணிக்கம் தவிர இந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் வேறு மொழி பேசுபவர்கள்தாம். எனக்கு இந்தி தெரியாது. ‘ஏக்’கிலிருந்து உன்னீஸ், பீஸ் வரை எண்கள் தெரியும். சாய், கேளா, அச்சா என சிற்சில வார்த்தைகளைக் கொண்டு சமாளிக்க வேண்டும். அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையை பரிமாறிக் கொள்வோம். பெட்டியுடன் ஹௌராவில் இறங்கும் போது பிரியமுடன் கைகொடுத்துக் கொண்டோம். நாங்கள் உட்கார்ந்திருந்த இடங்கள் காலியாக இருந்ததில், பிரிவின் வெறுமை உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மொழி என்ன ஊர் என்ன, எல்லோரும் மனிதர்கள்தானே!
000
நேற்று சாயங்காலம் முடிந்த போது ஒரு ரெயில் நிறுத்தத்தில், வேகமாக வந்த ஒரு பையனும், பெண்ணும் ஏறினார்கள். கதவருகே நின்றிருந்த என்னிடம், "புவனேஸ்வரம் போகுமா” என்றனர். அது தெரியாமலா ஏறியிருக்கிறார்கள் என்ற வியப்புடன் நான் “யெஸ்” என்றேன். அங்கேயே நின்று கொண்டார்கள். central industrial security force காவ்லாளி ஒருவன் அருகில் வந்து அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டு இருந்தான். அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து, அங்கேயே உட்கார்ந்து கொண்டார்கள். இருட்டிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் மிக அலட்சியமாக அவன் தோள் மீது கைபோட்டுக்கொண்டாள். அந்தக் காவலாளி என்னைப் பார்த்து சிரித்தான். நான் என் இருக்கையில் வந்து அமர்ந்து “காவல் கோட்ட்ம” படிக்க ஆரம்பித்தேன். புவனேஸ்வரம் வந்ததும் அவர்கள் இருவரின் ஞாபகம் வந்தது. வாசலருகே வந்தேன். அவர்களைக் காணவில்லை. இறுக்கமான முகத்துடன் அந்தக் காவலாளி மட்டும் அங்கேயே இருந்தான்.
000
இடையில் லேப்டாப்பிற்கு சார்ஜ் செய்து பார்த்த போது, எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன் தனது புதிய பதிவில் ‘வேண்டாம் இந்த வெறுப்பின் அரசியல்’ என எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிர்வினை ஆற்றியிருந்தார். காவ்ல கோட்டம் குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சனம் நிதானமிழந்து இருந்ததாக எனக்கும் பட்டிருந்தது. மிக நுட்பமான, ஆழமான கருத்துக்கள் கொண்ட ஆற்றல் மிக்க எழுத்தாளரிடமிருந்து இப்படி வார்த்தைகள் தடித்து, நெளிந்து வருவது எனக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. என்னுடைய வருத்தத்தை எஸ்.ராவிடம் போனிலேயே தெரியப்படுத்தி இருந்தேன். நல்ல நண்பர் அவர். தமிழ்ச்செல்வனின் கருத்துக்கள் மிக நேர்மையாகவும் பொறுப்பாகவும் இருக்கின்றன.
000
காலையில் 4.15 மணிக்கு ஹௌரா வந்து சேர்ந்தோம். மனிதச் சந்தடிகளோடும், சாயாக்களோடும் வெளிச்சமாக ரெயில்வே ஸ்டேஷன். வெளியே மஞ்சள் நிற வாடகைக்கார்கள் வரிசையாக நின்றிருக்க, எங்களை வந்து டிரைவர்கள் அப்பிக்கொள்ள ஆரம்பித்தனர். வாடகை பேசி, காரில் ஏறி உல்ட்டடங்காவுக்கு பயணம் செய்தோம். ஹுக்ளிநதியின் தொங்குப் பாலத்தின் மீது செல்லும்போது வங்கத்தின் கடந்தகாலம், சரித்திர நினைவுகளாக மேலெழும்பின. சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் பழமையான கட்டிடங்கள் புராதனச் சித்திரங்கள் போல நின்றிருந்தன. கார் நின்றதும், எல்லாம் கலைந்தது. இறங்கும் போது பார்த்தேன். தரையெல்லாம் கிழிக்கப்பட்ட பான் பீடா பாக்கெட்டுகள். டீ குடிக்கச் சென்றோம். சிறு மண்குப்பியில் தந்தார்கள். குடித்துவிட்டு மண்குப்பியை கீழே போட மனம் வரவில்லை. ஒரு டீ ஒன்றரை ருபாய். நான் கொல்கத்தாவில் நின்று கொண்டிருக்கிறேன்.
*
விளையாட்டுச் சாமான்
நிலமெல்லாம்
வேகமெடுத்து கடக்கிறது
செடி,கொடி,மரங்களெல்லாம்
சுழன்று சுழன்று மறைகின்றன
தூரத்து மலையும்
பின்னோக்கி நகர்கிறது
மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்
தலைதெறிக்க ஓடுகின்றன
குழந்தை ஒன்று
தாயின் இடுப்பில் இருந்தபடி
கையசைத்து சிரிக்கிறது.
*
சார்லி சாப்ளினும், ‘நெஞ்சம் மறப்பதில்லை‘ நம்பியார்களும்!
கர்நாடாகாவில் இந்துத்துவா சக்திகளின் அடுத்த ஆட்டம் ஆரம்பமாகியிருகிறது.
திரைப்பட இயக்குனர் ஹேமந்த் ஹெக்டே தனது ‘ஹவுஸ்‘ புல் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு சார்லி சாப்ளின் சிலை இருப்பது நன்றக இருக்கும் என நினைத்திருகிறார். முதலில் சிலை வைக்க திட்டமிட்ட இடம் உடுப்பியின் வனப்பகுதி. அங்கு சிலை நிறுவ அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. கடற்கரைப்பகுதியில் சோமசுந்தரேஸ்வரர் கோவிலிலிருந்து முன்னூறு அடிகள் தள்ளி ஒரு இடத்தில் சிலையை நிறுவ படக்குழுவினர் ஆயத்தமாகி இருக்கின்றனர். அப்போது சில இளைஞர்கள் வந்து சார்லி சாப்ளின் சிலையை அங்கு நிறுவக் கூடாது என தடுத்திருகின்றனர். உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்றிருப்பதாக இயக்குனர் ஹெக்டே தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும், சாப்ளின் சிலையை அழித்துவிட வேண்டும் என அந்த இளைஞர்கள் நிபந்தனை விதித்திருக்கின்றனர். ‘சார்லி சாப்ளின் உலகப் புகழ்பெற்ற கலைஞர்‘ எனச் சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. ‘நாளைக்கு ஏசுவின் சிலையைக் கூட நிறுவ வருவார்கள், கோவிலுக்கு வருகிறவர்கள் இந்த முகத்தைப் பார்ப்பதை நாங்கள் விரும்பவில்லை‘ என வெறுப்புடன் கத்தியிருக்கின்றனர்.
சார்லி சாப்ளின் என்னும் மகத்தானக் கலைஞனுக்கு மதச்சாயம் பூசி குருரத் திருப்தி அடைந்திருக்கிறார்கள். உலகமே போற்றுகின்ற அற்புதமானக் கலைஞனை அவமானப்படுத்த நினைத்திருக்கிறார்கள். அவர்களின் இந்த செயல் எனக்கொன்றும் ஆச்சரியமாகவோ, அதிர்ச்சியாகவோ இல்லை. வரலாற்றையும், சார்லி சாப்ளின் வாழ்வையும் புரிந்து கொண்டால், இதெல்லாம் நிகழத்தான் செய்யும் என்றுதான் தோன்றுகிறது.
மனித சமுகம் மீது சாப்ளின் என்னும் கலைஞருக்குள் இருந்த அளப்பரிய காதலை அவருடைய படங்களில பார்க்க முடியும். அறிவுஜிவியாக இருந்து கொண்டு குழந்தைகள் முதல் அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பது என்பது சாதாரண காரியமல்ல. பேசாமலேயே, சினிமா என்னும் மொழியின் முலம் பேசிட முடிந்தது அவரால். காலங்களைத் தாண்டி, இன்றைய தலைமுறைக்கும் செய்திகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார் அந்த கலைஞர்.
காலச்சக்கரத்தை முன்னுக்கு நகர்த்துகிற யாரையும் மனிதகுல விரோதிகளுக்கு பிடிப்பதில்லை. அதுதான் ஹிட்லரின் ‘கொலை செய்யப்பட வேண்டியவர்களின்‘ பட்டியலில் சாப்ளின் பெயர் இருந்தது. அவர்கள் சாப்ளினை ‘யூதன்‘ என்று அறிவித்தார்கள் அப்போது. இங்கே இந்துத்துவா சக்திகள் சாப்ளினை கிறிஸ்துவர் என்கின்றனர் இப்போது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் நம்பியார் பாத்திரம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. காலங்களைத் தாண்டி, தலைமுறைகளைத் தாண்டி வெறுப்புடன் காத்திருக்கும் அந்த உருவத்துக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை.
ஹிட்லரின் ஆவிகள் விழித்துக் கொண்டிருக்கின்றன.....
என்னடா பைத்தியக்கார உலகம் இது....
உங்கள் குழந்தைகள், உங்களுடைய குழந்தைகள் அல்ல.
நீண்டு செல்லும் இந்த வாழ்வின் மகன்களும், மகள்களும் ஆவர்.
அவர்கள் உங்கள் வழியே வந்திருக்கலாம்,
ஆனால் உங்கள் மூலமாக அல்ல.
உங்கள் அன்பை அவர்களுக்குச் செலுத்தலாம்,
உங்கள் எண்ணங்களையல்ல.
அவர்களது உடல்களுக்கு நீங்கள் வீடு வைத்திருக்கலாம்,
ஆனால் ஆன்மாவுக்கல்ல.
நாளைய உலகின் வீடுகளில் அவர்கள் குடியிருப்பார்கள்,
அங்கு நீங்கள் கனவிலும் கூட பிரவேசிக்க முடியாது.
அவர்களைப் போல இருக்க நீங்கள் முயற்சிக்கலாம்,
ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வலியுறுத்தாதீர்கள்.
வாழ்க்கை பின்னோக்கிப் போவதுமில்லை; நேற்றோடு நிற்பதுமில்லை.
நீங்கள் அம்பறாத்துணிகள்.
குழந்தைகள் அம்புகள்.
கலீல் கிப்ரானின் இந்தக் கவிதையில் உள்ள ஒரு வரியையோ, வார்த்தையையோ அந்த நிரஞ்சனால் புரிந்திருக்க முடியாது.
மனைவி வேலைக்குச் செல்லத் தடையாய் இருக்கும் எனக் கருதி, பிறந்த நான்கு நாட்களாவதற்குள் பெற்ற குழந்தையைக் கொன்றிருக்கிறான் அவன். சென்னை சூளைமேட்டில் நேற்று நடந்திருக்கிறது. “அவனைத் தூக்கில் போடுங்கள்” என அவன் மனைவி கதறியிருக்கிறாள். தன் ஊனையும், உயிரையும் உருக்கி, அன்பையெல்லம் தேக்கி வைத்த அந்த சின்னஞ்சிறு மலரின் வாசம் தாய்க்குத் தெரியும்.
எதுவும் சொல்ல முடியாத இறுக்கமும், மௌனமும் சூழ்கிறது. கண்மூடித்தனமான கோபம் வருகிறது.
என்னடா பைத்தியக்கார உலகம் இது....
*


