அவர்களை எடுத்துக் கொண்ட இருட்டு!

 

அந்த பேருந்து நிலையத்தில் பகலின் அடையாளங்கள் எல்லாம் தளர்ந்து விட்டிருந்தது. திக்குமுக்காட வைத்த மனிதத்திரளும் வாகனங்களின் இரைச்சல்களும் அடங்கிப் போயிருந்தன. நியான் வெளிச்சம் பனியைப் போல கவிந்திருந்தது. டிரைவரால் பஸ் இயக்கப்பட்டவுடன் அவன் முன்புறமாக ஏறி மூன்றாவது வரிசையில் அமர்ந்தான். அவள் பின்புறமாக ஏறி அந்த பஸ்ஸில் ஒரே பெண்ணாக ஏழாவது வரிசையில் அமர்ந்தாள். மொத்தமே பதினோரு பேர்தான். ஆளுக்கொரு வரிசையில் வசதியாய் அமர்ந்திருந்தனர்.

"திருச்செந்தூர் யாரும் இருக்கீங்களா" கேட்டுவந்த கண்டக்டரிடம் "முன்னால அவர் எடுப்பாரு" என்று மெல்ல அவள் சொன்னாள்.

"யாரும்மா" என்று அவர் சத்தமாய் கேட்க மூன்றாம் வரிசையிலிருந்த அவனை கைகாட்டினாள் அவள். திரும்பிய அவனைப் பார்த்து கண்டக்டர் லேசாய் சிரித்தார்.

அவன் சட்டென முகம் திருப்பிக் கொண்டான். இடைப்பட்டவர்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு கண்டக்டர் இப்போது அவன் அருகே வந்தார். "ஒரு திருச்செந்தூர்" என்றான்.

அவனை ஒருமாதிரியாய் பார்த்து விட்டு திரும்பி அவளையும் பார்த்து விட்டு "அந்தப் பொண்ணு நீங்க டிக்கெட் எடுப்பீங்கன்னு சொல்லிச்சே" என்றார். "எனக்குத் தெரியாது" என்றான் அவன்.

கண்டக்டர் வேகமாய் அவளிடம் போய் "என்னம்மா, அந்த ஆள் ஒனக்கு டிக்கெட் எடுக்க மாட்டேங்குறாரு" கத்தினார்.

அவள் வேகமாய் எழுந்து அவன் அருகேப் போய் "எதுக்குய்யா என்னை கூப்பிட்டே..?" கத்தினாள்.

அவன் திரும்பியேப் பார்க்கவில்லை. பஸ்ஸிற்கு வெளியில் பார்வையை புதைத்துக் கொண்டான்.

"நீயெல்லாம் ஒரு ஆம்பிள...த்தூ"

அவன் திரும்பவேயில்லை.

"சரிம்மா..நீயாவது காசு கொடு...டிக்கெட் எடுக்கணும்ல.."

"நா என்ன திருச்செந்தூருக்கு சாமி கும்பிடயா போறேன்?"

கண்டக்டர் விசில் ஊத பஸ் நின்றது. இறங்கிய அவளை இருட்டு எடுத்துக் கொண்டது.

ஓடிய பஸ்ஸிற்குள் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டன. இருட்டு அவனையும் எடுத்துக் கொண்டது.

(திருத்தம் செய்யப்பட்ட மீள் பதிவு இது)

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சொல்லில் வடிக்க முடியா துயரம்...தோய்ந்த பிழைப்பு.

    அந்தப்பிழைப்பிலும் ஆணிய மனோபாவம்....பீடா பயன்படுத்துவது போல..

    விரும்பினால் சவைத்துக்கொண்டிருக்கலாம்....
    தோன்றும்போது துப்பிவிடலாம்.

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு குறைவான வரிகளில் எவ்வளவு ஆழமான கதை.? பிரமிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. காமராஜ், அடர்கருப்பு பதிவில் வைரஸ் என்று வருகிறது, படிக்க முடிவதில்லை.

    கொஞ்சம் சொல்லுங்கள் அவரிடம் தயவு செய்து

    பதிலளிநீக்கு
  4. அன்பு மாதவராஜ்,

    செரிவான கதை... ஒரு கவிதை மாதிரி எவ்வளவு விஷயங்களை தனக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு இருக்கிறது இந்த கதை. இதில் இருந்த நான்கு அல்லது இன்னும் அதிகமாக கிளைக்கதைகள் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

    ரொம்ப நாட்களாகி விட்டது உங்கள் பிரியம் வழியும் குரலைக் கேட்டு. காமராஜுடன் பேசிக்கொண்டிருக்கும் போது பந்தலுக்கு தப்பிய வெயிலாய், கிரணங்களாய் உங்கள் குரலும் கேட்டது ஒரு மாதிரி தினுசா இருந்துச்சு...

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  5. Blog Template is very nice.
    Its look very beautiful as your writings.
    :)
    -Vibin

    பதிலளிநீக்கு
  6. அவர்கள் வாழ்வைத்தான் இருட்டு ஏற்கெனவே எடுத்துக் கொண்டுவிட்டதே....மனம் வலித்தது...

    பதிலளிநீக்கு
  7. கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!