“ஒட்டத் தெரியாதபோது உடைப்பதையாவது நிறுத்துங்களேன்!”

 

நம் எல்லோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுக்களை அந்தச் சிறுமி சுமத்தி இருக்கிறாள். புவிப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களும், வினைகளும் எழும்பியிருக்கும் இந்த நேரத்தில், இந்தக் குரலை நாம் மறந்துவிட முடியாது.  1992ல் நடந்த முதல் புவிப் பாதுகாப்பு மாநாட்டில் கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி செரன் சுசுகி அனுமதி வாங்கி பேசிய வார்த்தைகள் இவை. இங்கு ஒலிப்பது ஒரு குழந்தையின் குரல் . எதிர்காலத்தின் நடுங்கும் குரல். முழுமையாகவும், பொறுமையாகவும் உற்றுக் கேளுங்கள். 

------------------------------------------------------

“ஹலோ.... நான் செரன் ...சுசுகி... இ.சி.ஓ.. அதாவது சிறுவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான என்வைரோன்மெண்டல் சில்ரன்ஸ் ஆர்கனைசேஷனிலிருந்து பேச வந்திருக்கேன். நாங்கள் 12க்கும் 14க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறுவர் சிறுமியர் கனடாவில் இந்த அமைப்பை நடத்தி வருகிறோம். வெனஸாசுடியி, மார்கன்கெய்ஸ்லர், மைக்கேல் க்விக் மற்றும் பலரோடு நான்.

நாங்கள் நாங்களாகவே பலரிடம் நிதி திரட்டி...... சுமார் ஆறாயிரம் மைல்கள் கடந்து பெரியவர்களான உங்களது வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்ள இங்கே ரியோடி ஜெனரோவுக்கு வந்தோம். இங்கே இந்த மேடையில் பேசும் என்னிடம் செயல்திட்டம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. நான் ஒரு சிறுமி. உங்கள் பார்வையில் சிறுகுழந்தை. நான் என் எதிர்காலத்திற்காக போராடுகிறேன். என் எதிர்காலத்தை தோற்பது என்பது ஒரு தேர்தலில் தோற்பது மாதிரியோ அல்லது நிதிச்சந்தையில் சில புள்ளிகளை தவறவிடுவது மாதிரியோ அல்ல. நான் இங்கே வருங்காலத்தின் அனைத்து சந்ததியினருக்காகவும் பேச வந்திருக்கேன்.

ஒருபோதும் செவிமடுக்கப்படாத பசியில் துடிக்கும் குழந்தைகளுக்காக பேச வந்திருக்கிறேன். போய் ஒளிந்து கொள்வதற்கு ஒரு இடம் இல்லாததால் தினந்தோறும் கொன்று குவிக்கப்படும்  அழிவின் விளிம்பில் உள்ள இப்புவியின் எண்ணிலடங்கா விலங்குகளுக்காக நான் பேச வந்திருக்கிறேன். என் பேச்சைக் கேட்காமல் நீங்கள் இருந்து விடுவதை நான் தாங்கிக்கொள்ள மாட்டேன். செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போதெல்லாம் சூரிய ஒளியில் சாலையில் இறங்கி நடப்பதற்கே நான் அஞ்சுகிறேன். ஓசோன் படலத்தின் ஒட்டைகளே காரணம். காற்றை முழுமையாக இழுத்து சுவாசிக்க நான் அஞ்சுகிறேன். அதில் என்னென்ன வேதிப்பொருட்கள் எல்லாம் உள்ளனவோ.

வேன்கோவர் நதியில் என் தந்தையோடு இனிய விடுமுறை நாட்களில் நான் மீன்பிடிக்க போனது உண்டு. ஒருமுறை புற்றுநோய் தாக்கிய அனைத்து மீன்களையும் தூக்கி எறிய நேர்ந்ததால் இப்போதெல்லாம் போவது இல்லை. ஒவ்வொரு நாளும் ஒன்று பாக்கியில்லாமல் ஒரேயடியாய் அழிந்துவரும் தாவரத்தைப் பற்றியும், விலங்கைப் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம்.

என் வாழ்வில் சுதந்திரமாய் கூட்டம் கூட்டமாய் சுற்றித் திரியும் வனவிலங்குகளைப் பற்றியும், முற்றிலும் பறவைகளால் மொய்க்கப்பட்ட காடுகளைப் பற்றியும் கனவு காண முடிகிறது. எனக்கு பிறகு வரும் சந்ததிகளுக்கு அது கிட்டுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. என் வயதில் நீங்கள் இருந்த போது இந்த மாதிரி சின்ன விஷயங்களுக்காக கவலைப்பட வேண்டிய சூழல் இருந்ததா?

இதெல்லாம் நமது கண்முன் வேகமாக நடக்கும்போது.... நாமோ நமக்கு எதோ அத்தனைக்கும் தீர்வு காண ஏராளமான நேரம் இருப்பதுபோல் மிக நிதானமாக இயல்பாக நடந்து கொள்கிறோம்.

நான் ஒரு சிறுமிதான். உங்கள் அர்த்தத்தில் ஒரு சிறு குழந்தை. என்னிடம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை. உங்களிடமும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

ஓசோன் படலத்தில் விழுந்திருக்கும் ஓட்டைகளை எப்படி அடைப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஓடுவதை நிறுத்தி முற்றிலும் விஷமாகிப் போன ஒரு ஆற்றை திரும்ப ஓடவைப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஒன்று பாக்கி இல்லாமல் முழுவதும் அழிந்துவிட்ட ஒரு விலங்கை திரும்ப உயிர்ப்பிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்து இன்று பாலைவனம் போலாகிவிட்ட இடத்தை மீண்டும் காடாக்குவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. திரும்ப பழையபடி ஒன்று சேர்த்து ஒட்டத் தெரியாதபோது உடைப்பதை நிறுத்துங்களேன்!

இங்கே நீங்கள் உங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகவோ, தொழில் அதிபர்களாகவோ, அமைப்பாளர்களாகவோ, பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல அந்தஸ்தில் கூடி இருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் யாருக்கோ அப்பாவாகவும், அம்மாவாகவும், அண்ணன் தங்கையாகவும் இன்னும் யாரோ குழந்தையின் மாமாவாக அத்தையாக இருப்பவர்கள்தான் என்பதையும் அல்லது நீங்களும் யாரோ பெரியவர்களின் குழந்தைகள்தாம் என்பதையும் நான் நினைவுபடுத்த வேண்டியதில்லை.

உங்கள் பார்வையில் நான் சிறு குழந்தைதான். ஆனால் எனக்குத் தெரியும், நாம் அனைவரும் முப்பது மில்லியன் வகை உயிரினமுமாக ஒரே குடும்பம் என்பதும், நாம் ஒரே காற்றை, குடிநீரை, மண்ணை பகிர்ந்து வாழ்ப்வர்கள் என்பதும் எத்தனை எல்லைகளிலிருந்து எத்தனை அரசுகள் அதிகாரம் செலுத்தினாலும் இந்த ஒரு அடிப்படை விஷயம் மாற்ற முடியாது என்பதும் குழந்தைகளான எங்களுக்குத் தெரியும்.

நாம் அனைவருமே ஒன்று சேர்ந்து ஒரே குழுவாக ஒரே ஒரு இலக்கை முன்வைத்து இயங்க வேண்டி இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம். நான் என்ன கருதுகிறேன் என்பதை வெளியே உங்களிடம் சொல்ல முடியாத அளவிற்கு ஆத்திரத்தில் கண்ணிழந்தோ, அச்சத்தில் வார்த்தைகள் குழைந்தோ நான் நிற்கப் போவதில்லை.

எங்கள் நாட்டில் வசதியாய் வாழும் நாங்கள் பலவற்றை வாங்கி பயன்படுத்தி பாதியில் தூக்கி எறிகிறோம். பலவற்றை அதற்கு முடிவே இல்லாதபடி தூக்கி எறிந்துகொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் நமது வசதிகளை இல்லாதவர்களோடு பகிர்ந்துகொள்ள தயங்குகிறோம். நம்மிடம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் நாம் கொஞ்சத்தை விட்டுத் தரவும், இருப்பதில் மிகக் குறைவான ஒன்றையும் பகிர்ந்து கொள்ளவும் அருவருக்கிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன் இங்கே பிரேசிலில் வீதிகளில் வசிக்கும் எங்கள் வயதையொத்த சில குழந்தைகளோடு சில மணிநேரங்கள் செலவிட்டபோது, எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர்களில் ஒரு சிறுவன், என் வயதொத்தவன், கூறிய வாசகத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. ‘இந்த வீதியில் வசிக்கும் சிறுவர் சிறுமியர் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடைய, இருக்க இடம், மருந்து, மற்றும் அன்பு, அரவணைப்பு இவை தர முடிகிற அளவுக்கு நான் செல்வந்தனாக இருக்கக் கூடாதா என்பதே என் ஆசை’

தன்னிடம் எதுவுமே இல்லாத வீதியில் வசிக்கும் ஒரு சிறுவன் எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ விரும்புகிற போது, எல்லாமே அளவுக்கு அதிகமாக வைத்திருக்கும் நாம் இவ்வளவு பேராசை பிடித்து துளியும் பகிர்ந்து தர மறுப்பது ஏன்?

இந்த சிறுவர்கள் எல்லோருமே என் வயதொத்தவர்கள் என்பதால் என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இங்கே நீங்கள் எங்கே பிறக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. நான் கூட அவர்களில் ஒருத்தியாக இருக்க முடியும். ரீயோவின் வீதிச் சிறுமியாய் அல்லது பட்டினியால் பரிதவிக்கும் சோமாலியாவின் குழந்தையாய், மத்திய கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியாய், ஏன் இந்தியாவில் பிச்சை எடுக்கும் ஒரு சிறுமியாகக்கூட நான் இருக்கலாம்.

நான் ஒரு சிறு குழந்தைதான். ஆனால் எனக்குத் தெரியும்..... யுத்தங்கள் செய்ய ஆயுதங்களுக்காக, ராணுவத்திற்காக செலவழிக்கும் பணத்தை வறுமையை முற்றிலும் ஒழிக்கவும், சுற்றுச்சூழல் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் நாம் திசை திருப்பினால் இந்தப் புவி எப்பேர்ப்பட்ட  அற்புதமான வாழிடமாக மாறிவிடும் என்பது.

பள்ளிக்கூடத்தில் நாங்கள் எல்.கே.ஜி,  யு.கே.ஜி படிக்கும்போதே இந்த உலகத்தில் எப்படி ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என போதிக்கிறீர்கள். யாரோடும் சண்டை போடக் கூடாது.... அனைவருக்கும் மரியாதை தர வேண்டும்.... நமது குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.... எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யவே கூடாது....அடுத்தவர் பொருளை அபகரிக்கக் கூடாது.... இப்படி எங்களைப் பார்த்து எதையெல்லாம் செய்யக் கூடாது என்றீர்களோ அதையெல்லாம் பெரியவர்களாகிய நீங்கள் செய்வது ஏன்?

நீங்கள் எதற்காக இந்த மாநாடுகளில் கலந்துகொள்கிறீர்கள் என்பதையோ... யாருக்காக அவற்றை செய்கிறீர்கள் என்பதையோ  தயவு செய்து மறந்து விடாதீர்கள் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் உங்கள் குழந்தைகள்.

நாங்கள் எந்த மாதிரி உலகத்தில் வளர்ந்து ஆளாகப் போகிறோம் என்று தீர்மானிக்கும் வேலையில் நீங்கள் இறங்கி இருக்கிறீர்கள். பெற்றோர்கள் எப்போதுமே குழந்தைகளான எங்களிடம், ‘கவலை வேண்டாம்... அனைத்தும் நன்றாக இருக்கும்.... உலகம் முடிவுக்கு வந்துவிடாது..’ என்று நம்பிக்கை ஊட்டுபவர்களாக இருக்க வேண்டும் அல்லவா. ஆனால் அதை முன்வைத்து நீங்கள் செயல்படவில்லை என்றே தோன்றுகிறது.

பெரியவர்கள் நீங்கள் செய்யும் பல வேலைகள் என்னை இரவில் கண்விழித்து பயத்தில் அழவைப்பதாகவே உள்ளன. எங்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பதாகச் சொல்கிறீர்கள். தயவுசெய்து அந்தச் சொற்களை பிரதிபலிக்குமாறு நடந்து கொள்ளுங்கள்! நன்றி.”

------------------------------------------------------

அந்தக் குழந்தை பேசி 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் எதைக் கேட்டிருக்கிறோம்?  அவமானமாய் இருக்கிறது. 

 

நன்றி: ’புத்தகம் பேசுது’ மாத இதழ்
தமிழாக்கம்: இரா.நடராசன்

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இதோ இங்கேயும் நதிகளைக் கொலை செய்துவிட்டு சிறிதும் குற்ற உணர்வில்லாமல் நடமாடுகிறோமே

    இப்போதேனும் அந்த சிறுமியின் குரல் நம் காதில் ஒலிக்குமா..

    பதிலளிநீக்கு
  2. அருமை, பயனுள்ள பதிவு

    திரைப்படம் சார்ந்தே பெரும்பாலனா பதிவர்கள் இயங்கும் தமிழ்ப் பதிவுலகத்தில் இந்த மாதிரி அரிய பதிவுகள் எழுதியமைக்கு சிறப்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. இந்தக் குரலை கேட்டிருக்கிறேன்.

    படித்தவுடன் ஒரு குற்ற உணர்ச்சி வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. பள்ளிக்கூடத்தில் நாங்கள் எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்கும்போதே இந்த உலகத்தில் எப்படி ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என போதிக்கிறீர்கள். யாரோடும் சண்டை போடக் கூடாது.... அனைவருக்கும் மரியாதை தர வேண்டும்.... நமது குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.... எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யவே கூடாது....அடுத்தவர் பொருளை அபகரிக்கக் கூடாது.... இப்படி எங்களைப் பார்த்து எதையெல்லாம் செய்யக் கூடாது என்றீர்களோ அதையெல்லாம் பெரியவர்களாகிய நீங்கள் செய்வது ஏன்?

    :(((((((((

    குற்ற உணர்ச்சியே மேலிடுகிறது.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு. பகிர்தலுக்கு நன்றி.

    - பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  6. அந்த வீடியோவை நானும் பார்த்திருக்கிறேன்... கேட்டு முடித்ததும் கண்டிப்பாய் மனதுள் ஒரு குற்ற உணர்வு எழும்.... " If u don know how to fix it.. then don break it" இந்த வார்த்தைகள் இன்னும் என்ன் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன........

    பதிலளிநீக்கு
  7. அந்த குழந்தையின் பேச்சை கேட்ட அனைவருக்கும் நிச்சயம் குற்ற உணர்வு ஆட்கொள்ளத்தான் செய்யும்.

    வீடியோவில் கேட்க விரும்புகிறவர்கள்
    http://www.youtube.com/watch?v=TQmz6Rbpnu0
    இந்த சுட்டிக்குச் செல்லுங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பகிர்வுக்கு மிக்க நன்றி அங்கிள். ஆமாம், நீங்கள் சொல்வது போல் அவமானமாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. பாப்பா செரன் சுசுகி நீ சின்ன பொண்ணு உனக்கு வெவரம் பத்தாது பெரியவங்க எங்களுக்கு தெரியும் என்ன செய்யனும்னு
    செருப்பால அடிச்சாலும் நாங்க எங்க புத்திய மாத்திக்க மாட்டோம் -- பெரியவர்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!