-->

முன்பக்கம் � அந்நியன் விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு!

அந்நியன் விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு!

 

நமது பதிவர் குசும்பன் இந்த தீபாவளிக்கு, தான் பிறந்த மண்ணுக்கு வருகிறாராம். சந்தோஷத்தோடும் பிரியத்தோடும் அவரது பதிவில் எழுத, பிரியமுள்ள நமது வலை சமூகத்து மக்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டாடுகிறார்கள். நேசமித்ரன், மண்குதிரை, பா.ராஜாராம் போன்றவர்களின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் இந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையும், அதைப் பிரிந்திருக்கிற துயரங்களும் மெல்லிதாய் படிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். இதே மனநிலையை அயல்தேசத்தில் இருக்கும் பல நண்பர்களின் குரல்களில் கேட்டிருக்கிறேன். ஏன், பம்பாயில் இருக்கிற நமது அனுஜன்யாவுக்குக் கூட, எப்போது தமிழகம் வருவோம் என்றிருக்கிறது. இப்படி மனிதர்கள் எங்கிருந்தாலும்,  வேர் பிடித்த தத்தம் மண்ணின் சிந்தனைகள் வற்றாமல் ஓடிக்கொண்டு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணனை அப்படி புரிந்துகொள்ள முடியவில்லை. நேற்று தினத்தந்தியில் அப்படி ஒரு செய்தி வந்திருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. பத்திரிகை வாங்கி படித்தேன். எரிச்சல் வந்தது. உறுதிசெய்து கொள்ள இணையத்திலும் பார்த்தேன். வருத்தத்தையும், வேதனையையும் விஞ்சி கோபம் வந்தது.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றதும் இங்குள்ள ஊடகங்களும், மக்களும் அடைந்த சந்தோஷம் மிகப் பெரியது. வலையுலகத்தில் கூட பல பதிவர்கள் கொண்டாடி இருந்தனர். வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இதைப்பற்றித்தான் அந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன் வருத்தப்பட்டு, பெரும் இம்சையாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். PTI நிறுவனத்துக்கு அள்ளித் தெளித்திருக்கும் முத்துக்கள் இதோ:

"இந்தியாவில் இருந்து எல்லா தரப்பு மக்களும் எனக்கு இ-மெயில் அனுப்பி வருகிறார்கள். எனது இ-மெயில் பகுதியையே நிரப்பி முடக்கி விடுகிறார்கள். அவர்களது கடிதங்களை அழிப்பதற்கே எனக்கு ஒன்றிரண்டு மணி நேரம் ஆகி விடுகிறது. இவர்களது இ-மெயில் வெள்ளத்தால், எனது சகாக்களிடம் இருந்து வரும் முக்கியமான தகவல்கள் கூட கிடைக்காமல் போய் விடுகின்றன"

"இவர்களுக்கு இரக்கமே கிடையாதா? நான் நோபல் பரிசு பெற்றதற்காக இவர்கள் பெருமைப்படுவது எல்லாம் சரிதான். அதற்காக என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள்?"

"இவர்களில் பலர் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்பு கொள்வதில் அக்கறையே இல்லாமல் இருந்தவர்கள். இப்போது திடீரென என்னைத் தொடர்பு கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது? எனக்கு இது விநோதமாக தெரிகிறது"

"எனக்கு இந்தியாவில் பணியாற்ற வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் யாரும் என்னை அணுகவில்லை. அப்படியே அணுகினாலும், அந்த வாய்ப்பை நான் உடனடியாக மறுத்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்."

"நான் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள எனது நுண்ணணு உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுவதைத்தான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. அதை விட மகிழ்ச்சியாக பணியாற்றக் கூடிய இடத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது"

அவரால் கற்பனை செய்ய முடியாமல் போகட்டும். உங்களால் ஜீரணிக்க முடிகிறதா? என்னால் எல்லாம் முடியவில்லை, சாமி! தன் தேசத்து மனிதன், தன் மொழி பேசும் மனிதன் ஒருவனுக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் என்று தெரிந்து சந்தோஷமாய் கொண்டாடும் மனிதர்களை இப்படியா அலட்சியப்படுத்துவது? தனது அன்றாடப் பணிகளுக்கு தொந்தரவாகவே இருந்தாலும் அதனை இப்படியா காலில் போட்டு மிதிப்பது?
அப்படி எத்தனை நாள் இவர்கள் தொந்தரவு செய்துவிடப் போகிறார்கள்? பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன?

மனிதகுலத்துக்கு நல்லது செய்கிற கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிற சாதனைக்குத்தான் இந்த பரிசு, வெங்காயமெல்லாம். சக மனிதனையே நேசிக்கத் தெரியாத இந்த அந்நியனுக்கு நோபல் பரிசு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன.

வாருங்கள் குசும்பன். நிச்சயம் உங்களைப் போன்றவர்களுக்கு போன் செய்ய நேரத்தை ஒதுக்கலாம், சந்தோஷமாக!

*

Related Posts with Thumbnails

61 comments:

 1. அவரு என்ன சாதினு பார்த்து... அந்த சாதிக்காரங்கள சந்தோஷப்படுத்தி ஓட்டு வாங்க அரசாங்கம் அவருக்கு பத்து லட்சம் அல்லது இருபது லடசம்னும் பரிசு தராம இருந்ததுக்கு சந்தோஷப்படுவோம்

  ReplyDelete
 2. ஆமாம் வேதனையான செய்தி

  ReplyDelete
 3. அய்யா காலை வணக்கம்.

  அவரை நம்மவராக நினைத்தது நம் குற்றம். இரண்டாவது, நம்மவர்கள் தேவையெனில் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். இல்லையெனில் தரையில் போட்டும் மிதிப்பார்கள்.

  இரண்டாவது, அவர் அந்த சூழலில் தன்னை முழுமையாய் இணைத்துக்கொண்டார் என எண்ணிக் கொள்ளவேண்டியதுதான்.

  எங்கிருந்தாலும் வாழ்க என அவரிடம் இல்லாத பெருந்தன்மையோடு வாழ்த்த வேண்டியதுதான்.

  பிரபாகர்.

  ReplyDelete
 4. //"இவர்களில் பலர் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்பு கொள்வதில் அக்கறையே இல்லாமல் இருந்தவர்கள். இப்போது திடீரென என்னைத் தொடர்பு கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது? எனக்கு இது விநோதமாக தெரிகிறது" // - எனக்கு இந்த பேச்சுதான் விநோதமாக தெரிகிறது!

  ReplyDelete
 5. உங்களுக்கு வந்த கோபம் எனக்கும் வந்தது.

  அவருக்கு நோபல் பரிசளித்தன்று சிஎன்என் நிருபர் அவரிடம் கேட்கிறார், "நீங்கள் இந்தியர் என்பதற்கு பெருமை கொள்கிறீர்களா?" அவரது பதில்.."இந்தியன் என்பதை விட மனிதன் என்பது தான் முக்கியம். இதில் தேசியவாதத்திற்கு இடமில்லை".

  அவர் எப்படியோ?

  "தம்பி.. நம்மூர்ல மழை தூருதுபா"னு எங்கப்பா நேத்து சொன்னதுல இருந்து, எனக்கு எங்கூர் நினைவே தான். என்ன தான் சொல்லுங்க .. "சொர்க்கமே என்றாலும்...."

  ReplyDelete
 6. விடுங்க மாதவ். உங்கள் வருத்தம் புரிகிறது. நம் ஊரில் பிறந்தார். பரோடாவில் படித்தார் என்றறிகிறோம். இங்கிருந்து செல்கையில் மனிதனாகச் சென்றவர், அயல்நாட்டில் விஞ்ஞானி ஆகியிருக்கிறார். விஞ்ஞானத் தத்துவப்படி ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று பெற முடியும். மனிதநேயம் துறந்து, விஞ்ஞானி ஆகியிருக்கிறார். நமக்கு மனிதநேயம் இருப்பதால், பிரபாகர் சொல்வது போல் விட்டுத் தள்ளுவோம்.

  அனுஜன்யா

  ReplyDelete
 7. அன்னை தெரசாவை இந்தியராக பார்க்கிறோம். அல்பேனிய அரசுக்கு இந்தியா தெரிவித்த மறுப்பு
  http://www.irishtimes.com/newspaper/world/2009/1015/1224256689880.html

  ராமகிருஷ்ணன் இந்தியக்குடிமகன் கூட இல்லை என்று நினைக்கிறேன். மிகச்சிறிய வயதில் அங்கே சென்றிருப்பார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 8. எனக்கு அவர் கூறியது சரியென்றே படுகிறது. அவர் தமிழர் என்ற அடையாளத்தை தொலைத்து யுகமாகிறது. அவரை நம் மக்கள் கொண்டாடுவதை பார்த்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. தமிழ் நாட்டில் பிறந்த அல்லது பெற்றோர் தமிழர் என்பதால், ஒருவர் தமிழர் என கொண்டாடுவது மடத்தனமானது. ஒரு சிலர் இங்கு பணம் செலவழித்து பெரிய விளம்பரதட்டிகளை வைத்திருக்கிறார்கள். கல்பனா சாவ்லாவுக்கும் இதே தான். தான் வாழும் நாட்டின் அடையாளத்தோடு குடிமகனான ஒருவரை நாம் கொண்டாடுவது நிறுத்தப்படவேண்டும். எல்லாம் மீடியா பண்ணும் வேலை. செய்தியை படித்தவர்களில் 10 ல் ஒருவருக்கு கூட அவர் எதற்காக பரிசு பெற்றார் எனத் தெரியாது. உயர்நிலையை அடைபவனின் பிறப்பை ஆராய்ந்து மகிழும் பழக்கம் நமக்கு போனால் ஒழிய, நாம் திருந்த முடியாது.

  ReplyDelete
 9. கதிர்!
  பயமாத்தான் இருக்கு!


  வெண்ணிற இரவுகள்!
  நன்றி.


  பிரபாகர்!
  அந்த பெருந்தன்மை எனக்கும் வருமா என்று தெரியவில்லை.


  ராபின்!
  அவரே விநோதமாக இருக்கும்போது...


  ச.செந்தில்வேல்!
  அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 10. அனுஜன்யா!
  ஆஹா...! எனக்கு இப்படிச் சொல்லத் தெரியவில்லையே...


  சின்ன அம்மிணி!
  இருக்கலாம் நீங்கள் சொல்வது போல. ஆனால் வேரின் வாசம் அறியாமலா போகும் மனது?

  ReplyDelete
 11. குரோமோசோம் ஆராய்சியில் ஈடுபடும்போது அடிப்படை உணர்வில் மாற்றம் நிகழுமா என்பதும் ஆராயப்படவேண்டிய விஷயம் போல.

  பின்னோக்கி சொல்வதும் சரி.அமெரிக்க இந்தியர் என்றா செய்திகளில் பிரதானப்படுத்தப்பட்டார்?!

  ReplyDelete
 12. பின்னோக்கி!
  நீங்கள் சொல்வதில் ஓரளவுக்கு உடன்பாடு உண்டுதான். தன் தேசம், தன் மொழி, தன் இனம், என்றெல்லாம் அடையாளப்படுத்திவிடக் கூடாது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் சர்வதேச மனிதனாக நாம் மாற வேண்டும்.எல்லாம் சரிதான். எவ்வளவுதான் பறவை சுதந்திரமாகப் பறந்தாலும் அதற்கென்று அடைவதற்கு ஒரு மரம் உண்டு. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ என பாரதி பாடியதில் நம்மையறியாமல் ஒரு சிலிர்ப்பு உண்டு. இது ஒருவகையான தொப்புள்கொடி உணர்வுகள். இதைத் தாண்ட வேண்டும் என்றால் முதலில் அவன் பிறந்த மண்ணை மதிப்பவனாகவே இருக்க வேண்டும். பிறந்த மண்ணையே மதிக்காதவன் எந்த மண்னை மதிக்கப் போகிறான்? தமிழனோ, இந்தியனோ, முதலில் சக மனிதனை மதிக்கத் தெரிய வேண்டுமே. அதை நான் இந்த அந்நியரிடம் காண முடியவில்லை.

  ReplyDelete
 13. அவர் சொல்வதில் தவறில்லை. நாம் தான் எதற்கெடுத்தாலும் யாரையும் தலையில் தூக்கி வைத்து ஆட தயங்கியதில்லை. அவர் தம்மை தமிழராக உணர்கிறாரா என்பதை பற்றி அறியாமல் தமிழன் சாதித்துவிட்டதாக வீண்பெருமை கொள்கிறோம். அவர் சாதித்ததில் தமிழகத்தின், தமிழின் பங்கு என்ன? நாம் எதற்கு பெருமை கொள்ள வேண்டும்? அவர் பெயர் மட்டுமே தமிழர்களின் பெயர் போல இருக்கிறது..

  நமது வேலை நமது நாட்டில் இருப்பவர்களுக்கு ஏன் நோபல் கிடைப்பதில்லை? அந்த வாய்ப்பையும் வசதிகளயும் கொண்டு வருவது எப்படி? என்று ஆக்கப்போர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் விவாதிப்பதை விட்டு விட்டு யாரோ எங்கேயோ எதனாலோ சாதித்ததை நமது பெருமையாக சொல்வதும், இங்கே வாழ்ந்து தமிழராய் உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஜினி,ஜெயா போன்றவர்களை தமிழரில்லை வந்தேறிகளெனச் சொல்லி விவாதிப்பதும் தமிழர்களுக்கு விமோசனமில்லையெனத் தெரிகிறது..

  ReplyDelete
 14. மாதவராஜ்: உங்கள் கட்டுரைக்கு முற்றிலும் சம்மந்தமானதில்லை என் பின்னூட்டம். அதனால் சிறு குழப்பம்.

  ReplyDelete
 15. பின்னோக்கி!

  முற்றிலும் சம்பந்தமில்லாதாக ஒன்றும் தாங்கள் சொல்லவில்லை நண்பரே. முக்கியமான விஷயத்தைத்தான் சொல்லியிருப்பதாக நான் நினைக்கிறேன்.இது போன்ற விவாதங்களும் அவசியம் என்றே கருதுகிறேன்.


  தீப்பெட்டி!
  மக்களிடம் நீங்கள் சொல்வது போல பல குறைகள் இருக்கின்றன. அதை நாம்தான் திரும்ப திரும்ப பேசிக்கொண்டு இருக்கிறோமே.
  ஒரு உயர்வு அடைந்த மனிதர்,சகிப்புத்தன்மையற்றவராகவும்,தான் பிறந்த மண் குறித்து எந்த உணர்வும் அற்றவராகவும் இருப்பதைத்தான் இங்கு நான் சொல்லியிருக்கிறேன்.

  ReplyDelete
 16. அன்பு மாதவராஜ்,

  மனதில் உள்ளதை பேசியதற்கு அவரை மதிக்கத் தான் தோன்றுகிறது. இதை நாம் ஒரு அவமதிப்பாக ஏன் கருத வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. தனக்கு தோன்றியதை உண்மையாய் பேசுபவர்கள் பாக்கியவான்கள் என்றே நினைக்கிறேன். இங்கு எத்தனை பேர் போலியாய் இருக்கிறார்கள், நம்மை ஆள்பவர்கள் உட்பட, இதன் பாதிப்பு தான் நமக்கு அதிகம், இவர்கள் தான் துரோகிகள்.

  நம் வாழ்த்துக்களை புறக்கனிப்பது யாருக்கு இழப்பு, நமக்கா, அவருக்குத் தானே இழப்பு. நாம் அனுப்பிய பூங்கொத்துக்கள் புறக்கனிக்கப்பட்டாலும் அதன் தண்மையை இழக்காமல் மணக்கும் தானே. வேர்களை மறந்தது, விழுதுகளை இழந்தது மரத்திற்கு தான் பலவீனமே ஒழிய மண்ணுக்கு அல்ல. நன்றாக உற்றுப்பாருங்கள் அவருக்கு தொப்புள் அடையாளங்கள் இருக்காது (navel correction செய்தவர்கள் நமக்கு தேவையே இல்லை).

  அன்புடன்,
  ராகவன்

  ReplyDelete
 17. பலர் தங்களை அவரது ஆசிரியர்களாக இருந்தவர் என்றெல்லாம் சொந்தம் கொண்டாடியிருக்கிறார்கள். பல மெயில்கள் இந்த தோரணையில், எரிச்சல் ஏன் வராது?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 18. //எனக்கு அவர் கூறியது சரியென்றே படுகிறது. அவர் தமிழர் என்ற அடையாளத்தை தொலைத்து யுகமாகிறது. அவரை நம் மக்கள் கொண்டாடுவதை பார்த்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. தமிழ் நாட்டில் பிறந்த அல்லது பெற்றோர் தமிழர் என்பதால், ஒருவர் தமிழர் என கொண்டாடுவது மடத்தனமானது.//

  இவருக்கும், மற்ற அமெரிக்கர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? இவருக்கும், மற்ற ஆசியர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? இவருக்கும், மற்ற வட இந்தியர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? இவைகளெல்லாம் எங்கிருந்து வந்தன? பிறந்த மண், தாய்மொழி, இனம் ஆகிய அடையாளங்களை, குடியுரிமையோ, மதமோ மாற்றமுடியாது. ‘நாற்றின்' வீரியத்தில் ‘மண்ணுக்கும்' பங்கு உண்டு.

  ReplyDelete
 19. உறவினர் ஒருவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் வேலை கிடைத்து சென்றார். அங்கேயே குடியுரிமை வாங்கி மனைவி குழந்தைகளுடன் செட்டிலாகி விட்டார்.பெற்றவர்களின் மறைவுக்குக் கூட வரவில்லை. பெற்ற தாய், பிறந்த பொன்னாடு..... என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் ஆகிவிடுமா?

  ReplyDelete
 20. இவ்ளோ நாள் இல்லாமல் இப்போ என்னா? அப்படின்னு நினைக்கிறதுல்ல நிறைய விசயம் இருக்கம், இங்கே எந்த அளவுக்கு அவருக்கு முன்னால் உதவிகள் இருந்திருக்குமோ? இந்தியாவில கொண்டாடுறதுக்கு ஒன்னும் இல்ல என்பதை, இலங்கை பிரச்சினையில் நம்ம தமிழனுடைய நிலை எனக்கு உணர்த்தி விட்டது, சுய நலத்தின் உச்சியில் உள்ளான் தமிழன்! பாலகுமாரன் எங்கோ எழுதி இருப்பார், நமக்கு ஒரு போர் தேவை, நாம் இழந்த மணிதத்தை மீட்டெடுக்க! தீவாளி கொண்டாடுங்க நல்லா! ஓசி யில கலைஞர் டப்பாஸூ கொடுக்கல ...?!

  ReplyDelete
 21. மண்ணின் மணம் என்பது பிறப்பில் இருந்து சிறிது காலம் வாழ்ந்து பிரிந்து இருக்கவேண்டும். அவர் பிறந்த நினைவுகள் தோன்றும் முன்பே இங்கிருந்து சென்றுவிட்டார். மும்பையில் நியுக்கிளியர் முறை வாழ்க்கை நடத்தியவருக்கு நமது கலாச்சாரம் தெரியாது. அதுவும் இல்லாமல் அவர் ஒரு நூறு சத்விகித ஆராய்ச்சியாளர். ஒரு மைல்கல் தாண்டியவுடன் அடுத்த வேலையை பார்க்க நினைக்கின்றார். இங்கிருப்பவர்கள் போல் அதையே வைத்துக் கொண்டு கூடி கும்மியடிக்கும் கலை அவருக்கு தெரியாது என்று நினைக்கின்றேன். இங்க இருந்திருந்தால் கண்டிப்பாக ஜாதியில் ஒருக்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டு அதை எல்லாம் மீறி சாதனை செய்தவுடன் தமிழன் ஆகி இருப்பார். அது இல்லாமல் முழுக்க முழுக்க ஆராய்ச்சி சூழலில் இருந்ததால் அவரால் தடங்கல்களை ஏத்துக்க முடியவில்லை.

  ReplyDelete
 22. மனதில் உள்ளதை அழகாகக் கொட்டி இருக்கிறீர்கள். அவர் கொடுத்த பேட்டி வேதனைக் குரியது. பலர் இப்படி பிறந்த மண்ணை மறந்து விடுகிறார்கள். அவர் கேம்ப்ரிட்ஜில் வேலை செய்வது தப்பில்லை. வாழ்த்துக்கள் தொந்தரவு என்று அலுத்துக் கொண்டது தப்புத் தான்.
  குசும்பன் வாழ்க.

  ReplyDelete
 23. இது மீடியா திரிபாய் கூட இருக்கலாம் அல்லவா ?

  " உங்களுக்கு நிறைய பாராட்டுதலும், தந்தியும், எ ஈமெயில்களும் ...வருமே, அதை எப்படி சமாளிக்கிறீர்கள் " என்று கேட்டுஇருக்கலாம் நிருபர்.

  அதன் பதில் , அவர் உண்மையை சொன்னதால், "நிறய வருகிறது,,,ஒரே தலை வலி "என்று மற்ற கேள்விகளின் ஊடே இதையும் சொல்லிருப்பார்.

  ஒரு தமிழனை தாழ்த்தி சொல்ல இப்படியும் திருத்தி செய்தி வெளி இட்டிருக்கலாம் அல்லவா ?

  ReplyDelete
 24. >> பெற்ற தாய், பிறந்த >>> பொன்னாடு..... என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் ஆகிவிடுமா?
  ---
  Appdi illeenga. It is not correct to give someone's email id with out his permission. Will anyone of you accept if you receive 1000s of mails in a single day and u spending too much time in sorting out that? Instead we could have got a guestbook(web) signed by everyone.

  Blog writer,
  Ithellam too much. As it states, you cannot expect how one should react. That is his personal. Everyone needs a privacy and own community. We have lakhs of people in India who are longing for such bulk emails, popularity & fame. Paavam, pidikkalanna vitrungalen...atha vittutu, "naanga appreciate pannom, neenga accept pannalanna" enna artham? Aen, neenga una phone number, personal email id ellam public a kuduthu paarunga..appo theriyum!

  ReplyDelete
 25. அன்பு மாதவ்

  உங்கள் கோபம் அதீதம் என்பது என் தாழ்மையான கருத்து. அந்நியன் என்ற தலைப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஓர் உண்மையான அறிவுஜ“வி, ஞானி அல்லது ஒரு குழந்தையைப் போல் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் எல்லாம் கடந்த நிலையில் இருப்பதால் அப்படி சொல்கிறார் என்று கூட பார்க்க வேண்டாம். ஒரு செயலை முடித்துக் கொண்டு அடுத்த பயணத்தில் கருத்தூன்றிவிடும் எவருக்கும் சில நேரம் பாராட்டுரைகளும், புகழ் மாலைகளும் (பல நேரம் சம்பந்தா சம்பந்தமில்லாத அபத்த மொழியில் இருப்பவை) கூட ஓர் உறுத்தலை (a sort of discomfort) ஏற்படுத்தக் கூடும். எல்லாவற்றையும் விடக் கொடுமை, அவர் பயிலாத பள்ளியின் புகைப்படங்களும், அவருக்குப் பாடம் நடத்தாத ஆசிரியர்கள் பெயர்களும் பத்திரிகையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதும் அவருக்கு உளவியல் ரீதியாக எத்தனைச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.

  'நீர்வழிப் படூஉம் புணைபோல்'.....என்று கணியன் பூங்குன்றனார் எதற்கு எழுதி வைத்தார்.. இழுத்துச் செல்வது விதியாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லையே, அறிவின் தேடலாகக் கூட இருக்கலாம் அல்லவா ? மேற்படி அறிஞர் சிதம்பரத்தில் உதித்து, பரோடாவில் பயின்று அமெரிக்கா சென்றார். அவருக்கு உரித்தான இடம் எப்படி சென்னையாகவோ, தில்லியாகவோ, ஏன், பரோடாவாகவோ மட்டும் இருக்க முடியும்? இது என்ன புதுவகை மிரட்டல்? அப்படியானால், பிறந்த மண்ணுக்கே அத்தனை பெருமக்களும் திரும்ப வேண்டுமென்றால், அது அவர்கள் 'அவதரித்த' சிற்றூர் மண்ணைக் குறிக்கிறதா, அந்த ஊரடங்கியிருக்கும் தேசத்தின் வரைபட எல்லைக்குள் எல்லாம் 'அவரது மண்ணா ?'

  நோபல் பரிசுக்காக அவர் எதையும் செய்திருக்கவில்லை. அது அவரை எட்டியது. சொல்லப் போனால், அவர் இயல்பியல் விஞ்ஞானி. தேடல் என்னவோ வேதியலில். பரிசும் அதில்தான். அறிவியலை அக்கக்காகப் பிரிக்க முடியாது, உயிரியல் விஷயமொன்றில் அடிப்படையில் ஏதாவது கேள்விக்கு விடை தேடினால், நீங்கள் வேதியலில் வந்து நிற்க வேண்டியிருக்கும் என்பது அவரது நேர்காணலில் கிடைத்த சிறப்பான பதில்.

  எனக்கென்னவோ, எது உனது மண் என்ற கேள்விக்குப் பதில், மனிதகுலத்திற்கான சேவைக்கு உழைப்பவராயிருப்பவர் அவரது பணிக்கு உகந்த மண்ணாக எதைக் கருதுகிறாரோ அதுவாகத் தான் இருக்கும் என்றே படுகிறது.

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 26. Dear Madhavaraj,

  Your anger and disapproval is quite normal. However i suggest that this is looked at from his perspective. May be he has been ignored all his life by all these people who are claiming him as his student (which infact is a lie)
  anyway his reaction is little on the higher side.

  ReplyDelete
 27. அவர் கூறியிருப்பதில் முக்கியமான ஒன்றை தாங்கள் குறிப்பிடவில்லை. நான் ஒருவன் பரிசு வாங்கியதால் பல இளைஞர்கள் ஊக்கம் அடைந்தால் சிறப்பானது தான். அதற்காக தனி மனிதனாகிய எனக்கு முக்கியத்துவம் அளிப்பது தேவையில்லாதது என்றும் கூறி இருக்கிறார். இந்த பின்னணியில் பார்த்தால் அவர் கூறியிருப்பது தவறு என்று எண்ண முடியவில்லை. அவர் அளவில் எப்போதோ கடந்து சென்ற ஒன்றாக இருக்கும் இந்தக கண்டுபிடிப்பு. எனவே தனது தற்கால ஆராய்ச்சி பாதிப்படைவதால் எரிச்சல் அடைகிறார்.அவ்வளவு தான்.

  ReplyDelete
 28. நல்லா இருக்கு இடுகையும்...பின்னூட்டங்களும்-குறிப்பாக வேணுகோபாலன்,ராகவனது பின்னூட்டங்கள்!! அவர் பேசியது அரகன்ட் என்று தோன்றினாலும் இவர்களது பின்னூட்டங்கள் அவரது நிலையை தெளிவாக்குகின்றன!!

  ReplyDelete
 29. அவர் கூறியது சரிதான்.ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களின் மத்தியில் முக்கியமானவற்றை அவர் எப்படி அறிவார்.மேலும் அவர் இந்தியாவை விட்டு சென்று அங்கே குடியேறிவிட்டார்.பெங்களூர் ஐஐஎஸ்சியில் வகுப்பெடுக்கிறார்.
  ஒரு அறிவியலாளாரக என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக
  இருக்கிறார்.அவர் எதற்கு இந்தியாவிற்கு திரும்ப வர வேண்டும்.
  கேம்பிரிட்ஜில் அறிவியல ஆய்வு மேற்கொண்டால் உங்களுக்கு என்ன
  நட்டம்.மண்,மரபு,பாரம்பரியம் என்ற
  பெயரில் மனிதர்கள் நாம் நினைக்கும்படி இருக்க வேண்டும்
  என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்.
  இந்தியாவிற்கு வருகிறார்,இங்குள்ளவர்களிடம்
  தொடர்பில் இருக்கிறார்- அவருக்கு
  அது போதும்.நீங்கள் அவர் சிதம்பரம்
  மண்ணில் படுத்து உருண்டு தாய்நாடே
  தமிழினமே உனக்கு நான் புகழ் சேர்த்து
  விட்டேன் என்று உரத்த குரலில் கண்ணீர் மல்க சிவாஜி கணே சன் போல் மிகை நடிப்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களோ :)

  ReplyDelete
 30. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் துவங்கி வெங்கி வரைக்கும் யாராவது மூணு தலைமுறைக்கு முன்ன இந்தியாவுல பொறந்திருந்தாக் கூட அவர் ஒரு இந்தியர்... அவரது சாதனையில் நமக்குப் பெருமைன்னு கிளம்பிடற ஆட்டுமந்தைக் கூட்டம் நம்மளுடையது.

  அவர்கள் இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்று, அவ்வரசாங்கம் தருகிற சலுகைகளையும், சம்பளங்களையும் வைத்துக்கொண்டு சாதனை படைக்கிறார்கள். இந்த தேசத்திற்கும் அவர்களுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை.

  வெங்கி என்பவர் இன்ன இடத்தில், உயர் பதவி வகிக்கிறார் என்று இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானதே இல்லை. அவர் ஒன்றை சாதித்ததும் ஓடிப்போய் ஒட்டிக்கொள்வது. பெருமை கொண்டாடுவது, குடம் உடைப்பதெல்லாம் ஊடகங்களின் தவறு.

  மக்களைக் குறை சொல்லி என்ன... அவர்களை தேசத்தின் பெயரால்தான் ஏமாற்ற முடிகிறது....

  ReplyDelete
 31. அவரின் ஆராய்ச்சியே க்ரோமொசொம்களைப் பற்றித்தானே! அவரை குற்றம் சொல்ல வேண்டாம். வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்? படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமில்லை. நம்ப ஆளுங்களுக்கு இது தேவைத்தான்.

  ReplyDelete
 32. ராகவன்!
  மனதில் உள்ளதை பேசியதற்கு மதிக்கத் தோன்றுவது உங்கள் பெருந்தன்மையாகவே பார்க்கிறேன். உலகம் போற்றக் கூடிய இத்தருணத்தில், தனக்காக சந்தோஷப்படுகிறவர்களை ஒருவர் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் அன்பினை ஏற்றுக்கொள்வதில் இத்தனை மனப்புழுக்கம் தேவையில்லையே. இதுதான் என் கோபம்.

  // வேர்களை மறந்தது, விழுதுகளை இழந்தது மரத்திற்கு தான் பலவீனமே ஒழிய மண்ணுக்கு அல்ல.//

  இதை ஒப்புக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 33. டோண்டு சார்!
  அந்தக் காரணங்களுக்காக அவர் எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படலாம். அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.


  ஹரன்!
  நாற்றின் வீரியத்தில் மண்ணுக்கும் பங்கு உண்டு என்பதைக்கூட அந்த நுண்ணணு விஞ்ஞானி மறக்கடும். மறுக்கட்டும். ஆனால் மண் முகமலர்ச்சியுடன் சிரிப்பதையாவது அவர் எரிச்சலில்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் இல்லையா?


  அம்பிகா!
  ஆமாம். ஏற்கனவே ஏட்டுச்சுரக்காயாகி விட்டது.


  மணிப்பாக்கம்!
  இந்தியாவை அவர் கொண்டாடவும் வேண்டாம், இந்தியாவில் கொண்டாடவும் வேண்டாம். யாரையும் அவமதிக்க வேண்டாம் என்பதே நான் சொல்ல வந்தது.


  பித்தனின் வாக்கு!
  நீங்களுமே நான் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. அவர் இந்தியாவையோ, தமிழ்மொழியையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. இங்கு வர வேண்டும் என்றும் சொல்லவில்லை. ஆனால், அதுகுறித்து நியாயமாகவே சந்தோஷப்படும் மனிதர்களின் உணர்வுகளையும் புண்படுத்துகிற மாதிரி, சொல்லிய முறையில் இருக்கும் வன்மம்தான் எனக்கு கோபமூட்டுகிறது.

  ReplyDelete
 34. ஜெஸ்வந்தி!
  புரிதலுக்கு நன்றி.


  அது ஒரு கனாக்காலம்!
  உங்கள் ஆதங்கம் புரிகிறது. நல்லெண்னமும் புரிகிறது. ஆனால் அவர் அப்படித்தான் பேசியிருக்கிறார் என்பதை அவர் PTIக்கு அளித்த பேட்டியினை உறுதிசெய்த பின்னரே பதிவு எழுதினேன்.


  அனானி!
  மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள். உங்கள் வியாக்கியானமே சரியில்லை. நோபல் பரிசு வாங்கியது அவரது பர்சனல் சாதனையாக இருக்கலாம். ஆனால் அவரது ஆராய்ச்சி மனிதகுலத்துக்கானது. அதற்கான நன்றியை, பாராட்டுதல்களை உலகமே சொல்லத்தான் செய்யும். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  ReplyDelete
 35. அன்புள்ள எஸ்.வி.வி!
  நீங்கள் தாழ்மையாக தெரிவித்திருக்கும் இந்த பின்னூட்டம் எனக்கு வருத்தமே அளிக்கிறது.

  //அந்நியன் என்ற தலைப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது.//
  // இது என்ன புதுவகை மிரட்டல்? //
  இந்த இரு வாக்கியங்களும், அதற்குள் இருக்கிற அர்த்தங்களும் வேதனையளிக்கின்றன.

  மனிதர்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொள்ள நினைப்பவரை, அந்நியன் என்றுதானே சொல்ல முடியும்.

  அடுத்து, நான் என்ன மிரட்டுகிறேன்? மண் குறித்த பதத்தோடு இணைத்து இதனைத் தாங்கள் இங்கு சொல்லியிருப்பதை கண்டிக்கிறேன்.

  என் பதிவை தயவு செய்து திரும்ப ஒருமுறைப் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். அவரை நான் இந்தியாவுக்கோ, சிதம்பரத்துக்கோ வந்து ஒற்றைக்காலில் நிற்கச் சொல்லவில்லை.
  //பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன?//

  தொனிக்காத என்ற வார்த்தையைத்தான் பயன் படுத்தியிருக்கிறேன்.

  அவரது வார்த்தைகளைப் பாருங்கள். ஏன் இந்த துவேஷமும், வன்மமும் அதில் பொறி விடுகிறது. எவ்வளவு நாகரீகமாகச் சொல்லியிருக்க வேண்டும் இதே கருத்தை.

  அவர் எவ்வளவு பெரிய அறிவு ஜீவியாக இருக்கட்டும். நோபல் பரிசுக்காக இந்த ஆராய்ச்சி பண்ணாதவராக இருக்கட்டும்.ஆனால், இன்று அவர் சாதனை நாளைய உலகத்துக்குத் தானே. உலகம் அவரை நன்றியோடு பார்க்கும்தானே. தெரிந்தவர்கள் பெருமையாய் பார்ப்பார்கள்தானே. உண்மையாகவே இங்குள்ள எத்தனை பேர் பூரிப்படைந்திருப்பார்கள்தானே. அதற்கு இதுவா மரியாதை?

  ReplyDelete
 36. கலீல்!
  நன்றி.

  அனானி!
  உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கு மனிதர்கள் மீது பிரியம்தான் வரவேண்டும்.


  சந்தனமுல்லை!
  நன்றி.


  அனானி!
  // சிதம்பரம்
  மண்ணில் படுத்து உருண்டு தாய்நாடே
  தமிழினமே உனக்கு நான் புகழ் சேர்த்து
  விட்டேன் என்று உரத்த குரலில் கண்ணீர் மல்க சிவாஜி கணே சன் போல் மிகை நடிப்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களோ //
  அப்படி நான் எங்கய்யா சொன்னேன்?


  செல்வேந்திரன்!
  நம்ம மக்கள் ஆட்டு மந்தையாகவே இருக்கட்டும்.
  அவர் இந்த தேசத்துக்கு சம்பந்தமே இல்லாதவராக இருக்கட்டும்.
  சாதாரண, சாமானிய மக்களுக்கு, ’எதோ இங்கப் பிறந்த ஒரு மனுஷன் பெரிய சாதனை படைச்சிருக்காராம்பா’ என்னும் பாமரத்தனமான, வெகுளித்தனமான சந்தோஷப்படுகிறவர்களுக்கு அவர் இந்தப் பேட்டி மூலம் சொல்கிற செய்தி என்ன? இதுதானா?

  ReplyDelete
 37. M.S.E.R.K!
  // படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமில்லை. நம்ப ஆளுங்களுக்கு இது தேவைதான்//
  உண்மைதாங்க.

  ReplyDelete
 38. அவரு இவ்வளவு அலட்சியப்படுத்தி இருக்க கூடாது தான். இருந்தாலும் அவரும் அவர் ஆராய்ச்சியும் இந்திய மட்டுமின்றி மனித குலத்திற்கே பயன்படக்கூடியது. ஒட்டுமொத்த மனித சமுதாயம் பயன் பெரும் எனும்போது, நாடுகளோ, மொழிகளோ குறுக்கே நிற்காது. மேலும் அவர் இந்தியாவை தாழ்த்தி, அமெரிக்காவை உயர்த்த வில்லை. அவர் வேலையை அவர் செய்கிறார். அவ்வளவே.

  என்னை இந்த கருத்து மிகவும் கவர்ந்தது:

  "But I, personally, am not important. The fact that I am of Indian origin is even less important. We are all human beings, and our nationality is simply an accident of birth," he said.

  ReplyDelete
 39. Oops... என் பின்னூட்டத்தில் நிறைய எழுத்து பிழைகள். மன்னிக்கணும் சகோதரரே.

  ReplyDelete
 40. மாதவராஜ், இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு இது தேவைதான். சினிமா நடிகர்களுக்கு,அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதமேனும் அறிவியல்துறையில் இருப்பவர்களுக்கு நாம் கொடுப்பதில்லை. கலைத்துறையில் இருப்பவர்களைச் சாதனையாளர்களாயும், அறிவியல் துறையில் இருப்பவர்களைப் பணம் பண்ணும் மிஷின்களாகவுமே பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு அறிவியல் பத்திரிகை இல்லை தமிழில். சினிமாவுக்காக பக்கம் பக்கமாக ஒதுக்கும் எந்த வெகுஜனப் பத்திரிகையும் அறிவியலுக்காக ஒரு பக்கத்தைக்கூட ஒதுக்கியதில்லை. எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அறிவியல் சம்பந்தமாய் வாரத்தில் ஒரு மணிநேரம்கூட ஒதுக்கப்படுவதில்லை. இப்படி இருக்கையில் அறிவியல் சம்பந்தமான வசதி வாய்ப்புகள் எப்போது வரும்? அந்தது துறையில் படிப்பவன் தாய்நாட்டில் வேலை பார்க்கும் காலம் எப்போது வரும்? புதிய கண்டுபிடிப்புகள் எங்கிருந்து வரும்?... இந்த சமூகம் மாறும்வரை இன்னும் பல ராமகிருஷ்ணன்களைச் சந்தித்தாக வேண்டியிருக்கும். ஏன் இந்த முறைகூட ராமகிருஷ்ணனைப் பற்றி முழுமையான செய்திகள் வராமல் யார் கைதைப் பற்றிச் செய்திகள் வந்தன என்று பார்த்துக்கொள்ளுங்களேன்... அறிவியலுக்கு வெகுஜன ஊடகங்களில் இடம் கேட்டுப் போராடியது சுஜாதா மட்டுமே.. இப்போது அவரும் இல்லை. இனிமேல் எந்த விஞ்ஞானியும் தன்னைத் தமிழன் என்று சொல்லிப் பெருமைப்படப்போவதில்லை. அப்படிப் பெருமைப்படுவதற்குத் தமிழும் தமிழர்களும் அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது உண்மை. (விரும்பினால் இந்தியன் என்று தேசியத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். தமிழன் என்றெல்லாம் சொல்லும்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம்).

  ReplyDelete
 41. பல சாதனைகளை படைத்தவர், தனது மனதில் இருந்த விசயத்தை கொஞ்சம் கவனத்துடன் சொல்லியிருந்தால் இப்படியெல்லாம் அவர் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்க மாட்டார்.

  'யாகாவாராயினும் நா காக்க'

  ReplyDelete
 42. நாஸியா!
  தாங்கள் குறிப்பிட்ட, அவரது வாசகங்கள் சரியானதாகவே இருக்கட்டும். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் அலட்சியப்படுத்திய தொனிதான் எனக்கு கடுமையானதாய் இருந்தது. தன் சுயநலம் சார்ந்த விஷயமாக கருதுவதால்தான் இது தொந்தரவாகத் தோன்றுகிறது.  கிருத்திகன் குமாரசாமி!
  எல்லாம் சரிதான் நண்பரே!
  //தமிழன் என்றெல்லாம் சொல்லும்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம்//
  நான் தமிழன் என்று சொல்லும்படி அவரிடம் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.


  Rads!
  அதுதான்... சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 43. இந்தச் செய்தியை நேற்று வாசித்த போதே ஒரு இந்தியனாய், தமிழனாய், (அவருக்காக) நான் கொண்டிருந்த பெருமை, கர்வம் சுக்குநூறாகிவிட்டது. :(

  (ஆஸ்காரும், தேசிய விருதும் வாங்கியவர்களும் கூட இவ்வகைதானோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது)

  ReplyDelete
 44. \\தன் சுயநலம் சார்ந்த விஷயமாக கருதுவதால்தான் இது தொந்தரவாகத் தோன்றுகிறது\\

  ஒத்துக்கொள்கிறேன்

  ReplyDelete
 45. veelji
  தங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் கவனித்தேன்.
  கிண்டலை ரசித்தேன்.


  பீர்!
  நன்றி,


  நாஸியா!
  மிக்க நன்றி.

  ReplyDelete
 46. சரியாதான் சொல்லியிருக்கார்!

  சொந்தம் கொண்டாடாமல் பாராட்டி மட்டும் வைப்பது சாலச் சிறந்தது!

  ReplyDelete
 47. //எனக்கென்னவோ, எது உனது மண் என்ற கேள்விக்குப் பதில், மனிதகுலத்திற்கான சேவைக்கு உழைப்பவராயிருப்பவர் அவரது பணிக்கு உகந்த மண்ணாக எதைக் கருதுகிறாரோ அதுவாகத் தான் இருக்கும் என்றே படுகிறது.

  எஸ் வி வேணுகோபாலன்//

  நச்!

  ReplyDelete
 48. பிரதீப்!
  //எனக்கென்னவோ, எது உனது மண் என்ற கேள்விக்குப் பதில், மனிதகுலத்திற்கான சேவைக்கு உழைப்பவராயிருப்பவர் அவரது பணிக்கு உகந்த மண்ணாக எதைக் கருதுகிறாரோ அதுவாகத் தான் இருக்கும் என்றே படுகிறது.//

  உண்மைதான். ஆனால் சுயநலமும், திமிரும் கொண்ட வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு எல்லாம் இந்த வரிகள் பொருந்தாது. உலகத்து மண்ணையெல்லாம் நேசித்த சேகுவேரா, மார்க்ஸ் போன்ற மகத்தானவர்களுக்கே பொருந்தும்.

  ReplyDelete
 49. தோழர் மாதவராஜ்...

  தினமணியில் இந்தச் செய்தியைப் பார்த்தபோது என் மனதுக்குள் தோன்றியதும் இதுதான்...

  **பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன?

  சக மனிதனையே நேசிக்கத் தெரியாத இந்த அந்நியனுக்கு நோபல் பரிசு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன...**

  உங்கள் எழுத்திலும் அதையே பார்த்தபோது சக மனிதனை உணர்ந்தேன்.

  இந்த உணர்வில்லாத அந்த மனிதருக்கு அந்நியன் என்பதை விட சரியான அடைமொழி வேறொன்றுமில்லை!

  சிவா

  ReplyDelete
 50. பாமரத்தனமான, வெகுளித்தனமான சந்தோஷப்படுகிறவர்களுக்கு அவர் இந்தப் பேட்டி மூலம் சொல்கிற செய்தி என்ன? இதுதானா? //

  அண்ணே... இண்டர்நெட் கனெக்சனோடு கூடிய கம்ப்யூட்டரின் உதவி கொண்டு வெங்கியின் மின்னஞ்சல் முகவரியை சேஸ் செய்து ஆங்கிலத்தில் பாராட்டுக் கடிதம் எழுதுபவர்கள் பாமரத்தனமான வெகுளிகளென எனக்குத் தோன்றவில்லை.

  படித்த, வசதி படைத்த நடுத்தர அல்லது அதற்கு மேல் உள்ள இந்தியர்களின் வேலை இது. நீங்கள் சொல்கிற பாமரர்களுக்கு இதைக்காட்டிலும் முக்கியமான வேறு கவலைகள் இருக்கின்றன :)

  டிஸ்கி: கடவுளே... அண்ணனுடனான உரையாடலில் கூட ஸ்மைலீ போட வேண்டி இருக்கிறதே...

  ReplyDelete
 51. தவிர, சாதாரண கோயிந்துவான எனக்கே தேவையற்ற மின்னஞ்சல்களைக் கண்டால் கன எரிச்சல் வருகிறது. முக்கியமான பணியிலும், பொறுப்பான பதவியிலும் இருப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில்களை அனுப்புவதும் ஒருவகை 'ப்ரைவேசி' பிரச்சினைதான்!

  ReplyDelete
 52. எந்த நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிக்கு, நாம் பரிசு பெறும்போது பெருவாரியான பாராட்டு மினஞ்சல்கள் வரும் எனவும் அதர்காக தனியாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என தெரிய வில்லையா?

  பின்னோக்கி! கருத்துக்களுடன் உடன்படுகிறேன்

  அழகுமுகிலன்

  ReplyDelete
 53. சிவா!
  அழகுமுகிலன்!
  நன்றி.

  ReplyDelete
 54. செல்வேந்திரன்!

  தம்பி பாமரத்தனமானவர்கள், வெகுளித்தனமானவர்கள் என்று நான் குறிப்பிட்டது, இ-மெயில் அனுப்பாமல், பத்திரிகையில் படித்து, சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்த குப்ப்னையும், சுப்பனையும். இ-மெயில் அனுப்பியவர்களுக்கு சொன்னது,இந்த வெட்டித்தனங்களுக்குப் பதில் குசும்பனுக்கு போன் செய்யுங்கள் என்பதே.

  ReplyDelete
 55. இந்தியன் என்பதை விட மனிதன் என்பது தான் முக்கியம். ///
  இந்தியன் என்பதைவிட மனிதன் என்று தன் கருத்தைக் கூறியிருக்கிறார். அவரின் பேட்டியில் அவர் என்ன அர்த்தத்தில் அதை சொல்லியிருக்கிறார் என்பதை விடுத்து அதில் உள்ள பிழையான அர்த்தம் தரும் விடயங்களை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். சில இந்திய ஊடகங்கள் செய்வது போல. (உதாரணம். இந்தியன் என்று பெருமைபடவில்லை என்று மட்டும் சொல்வதுக்கும் இந்தியனை விட மனிதன் என்று சொல்வதை பெருமைபடுவதாக சொல்வதற்கும் நிறைய வித்தியாசம். ஏனையா இந்த பாரபட்சம்?
  இமெயில் விடயம்: எம்மவர்கள் இதில் சளைத்வர்கள் அல்ல. இலகுவாக ஸ்பாம் மூலம் வடிகட்டலாம். ஆனால் மக்களை திருந்தத் தான் சொல்கிறார். இவ்வளவு காலமும் இவர் எங்கு இருக்கிறார் என்று கூட அறியாத நீங்கள் இப்போது தலையில் வைத்து கொண்டாடினால் ஒருவருக்கு வரும் ஆதங்கமே இது.

  ///"எனக்கு இந்தியாவில் பணியாற்ற வாய்ப்பு ....... மறுத்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்." ///
  இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலைசெய்வது பிழை என்றால் இதுவும் பிழைதானே. கோடி கோடியாக இவரின் படிப்பிற்கு செலவளித்த நாட்டில் பணீபுரிய அவர் விரும்புவது அவரின் நல்ல மனதே. இந்தியன் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அவர் இருக்க விரும்பவில்லை. (தமிழன் என்று கூட) அவர் படிப்பின் பயன்கள் இந்தியாற்கு மட்டும் என்று இருக்க நினைப்பது சுயநலன் இல்லையா?
  வெளிநாடுகளில் படித்து புகழ் பெற்றால் மட்டுமே நாம் கண்டுகொள்வொம். மற்றும் படி?

  ஒருவர் தொடர்ந்து பணியாற்றிய இடத்தைவிட்டு மாறமாட்டேன் என்பது பிழையா?
  மனதை தொட்டு சொல்லுங்கள். இவர் இந்தியாவில் இருந்தால் இதை சாதித்திருப்பாரா?
  என்னைப் பொறுத்தவரை அவர் தான் இந்தியன் தமிழன் என்பதை விட மனிதன் என்பதையே முதன்மை படுத்தியிருக்கிறார். இப்போது அவர் தமிழன் என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

  ReplyDelete
 56. http://timesofindia.indiatimes.com/india/A-little-less-nationalistic-hero-worship-please/articleshow/5129529.cms

  ReplyDelete
 57. உங்களிடமிருந்து இப்படியொரு எதிர்ப்பை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

  / ஆனால் சுயநலமும், திமிரும் கொண்ட வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு /

  இந்த அளவுக்கு அவரைப்பற்றித் தவறான ஒர் பிம்பத்தை உருவாக்குவது தவறு. உங்களைப் பற்றி முழுதும் தெரியாமலேயே, நீங்கள் அனானிகளுக்கு கடுமையோடு பதில் சொல்வதை மட்டும் பார்த்து, நீங்கள் ஒரு திமிர் பிடித்தவர் என்று நான் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நீங்கள் அவரைப் பற்றி சொல்வதும்.

  சுனிதா வில்லியம், கல்பனா சாவ்லா போன்றோர்களை நாம் தான் இந்திய வம்சாவளி என்று சொல்லிக்கொண்டோமே தவிர, அவர்களுக்கு அந்த எண்ணம் கொஞம் கூட இருந்திருக்காது.
  ”சரி...தமிழனா, இந்தியனா இருக்க வேண்டாம்...ஒரு சக மனுஷனோட பாராட்டா எடுத்துக்கொண்டு மதிக்கலாம் இல்லையா” என்று நீங்கள் வாதிடலாம். அந்த மாதிரி இந்தியாவில் சாதிச்ச சக மனிதர்கள் எல்லோரையும் நீங்கள் பாரட்டியாயிற்றா? இளையராஜா போன்ற எண்ணற்ற சாதனையாளர்களை கண்டு கொள்ளாமலும் அங்கீகரிக்காமலும் விட்டுவிட்டு, அவரை பாராட்டப்போனது...வசதியான பங்காளியை மட்டும் நம் வீட்டுக் கல்யாணத்துக்கு அழைப்பது போன்றது.

  ”மாதவராஜுக்கு குறும்படம் எடுக்க சொல்லிக் கொடுத்ததே நான் தான்”னு நாளைக்கு நான் ஒரு பத்திரிகை செய்தி கொடுத்தா உங்களுக்கு எரிச்சல் வருமா வராதா?

  நான் பசியோடு இருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்காத என் பங்காளி வீட்டினர், நான் சாதனையாளனா மேடையில் நிற்கும்போது வந்து ஒட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாடினால்? அதுவும் என்னை அரவணைத்தவர்கள்கூட மேடையின் கீழே இருக்கும் போது? அதுபோன்ற ஒரு சூழ்நிலை தான் இதுவும்.

  கொஞ்ச நாள் முன்னாடி, தமிழ் மணத்தில் உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் எதிர் வாக்குகள் சில போட்டிருக்கிறார்கள் என்று சொல்லி வருத்தப்பட்டீர்கள். சாதாரண விசயத்துக்கே இப்படியென்றால், வேளைப்பளு அதிகம் இருக்கும் ஒருவருடைய மின்னஞ்சலுக்கு யார் வேண்டுமானாலும் மடல் அனுப்பி அவருடைய privacy ல தலையிடுவதை மட்டும் அவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

  ReplyDelete
 58. /
  ஆனால் சுயநலமும், திமிரும் கொண்ட வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு
  /

  இருக்கட்டுமே!
  நாம் நல்ல மனிதனாக வாழ்த்துவோம்.

  ReplyDelete
 59. Mathavji, u r calm,cool,cultured,handsomeman.As an artist u must be spontaneous not hasty.As a writer u must have compassion,not anger.Do u know that 60% of the population of
  Newyork is Italian origin.Italy is not celebrating Newyork celebrities.We always try to change the wheel of history.Ramki"s mother came to T.N to delever the baby.The noblelaurate is not to beblamed.A learned professor said his daughter studied with ramki at Annamalai Uty.These are all nonsensical.Ramki published his papers seven yrs back. he is doing further research.Ramki became a scientist not because that he is a Bramin or because he is a man from Tamilnadu.Anyway I am a regular reader of Theeratha Pakkangal.All the best...kashyapan.

  ReplyDelete
 60. எனெக்கென்னவோ,இப்படி தோனுது மாதவன்...

  அவரின் இந்த வெற்றியை,பகிரும் பொருட்டு,வந்து வாஞ்சையாக கை பற்றிய அவர் வீட்டு மனிதர்களை கூட புறக்கனித்திருப்பாரோ என்னவோ!அதற்க்கு கூட அவருக்கு உரிமை இருக்குதான்....அவர்கள்,அவர் வீட்டு மனிதர்கள்.கையை உதறவும் இப்படி திடீரென கொம்பு முளைத்த முகத்தை காட்டவும் நியாயம் இருக்கிறது.

  "மண்ணுல பிறந்த மனுஷன்" என்கிற ஒரே அடையாளத்துக்காக,சந்தோசத்தை பகிர்ந்து கொள்வது பாவமா அந்நியன் ராமகிருஷ்ணன்?மனிதர்கள் ராமகிருஷ்ணன்..பீ துடைக்கும் குச்சி அல்ல...
  . .
  இது தலைப்பு மாதவன்!இதுதான்,தலைப்பு மாதவன்!!

  ReplyDelete
 61. RAMAKRISHNAN'S INTERVIEW was a pervertional/intellectual arrogance one which is to be ignored along with him..Those people have no heart but having only objective interests only.One who loves not his country/people cannot love anything..he is a man to be ignored..isolated..He is a dry outlook ,ordinary man..Such nonsence attitudes must be condomned openly--no other way---vimalavidya@gmail.com

  ReplyDelete