-->

முன்பக்கம் � தகவல்களின் தளத்தில் தடம் அமைத்து உயர்ந்தவர்

தகவல்களின் தளத்தில் தடம் அமைத்து உயர்ந்தவர்

 

"இன்று ஒரு தகவல்" என்ற அடைமொழியால் அன்போடு பல லட்சம் வானொலி நேயர்களின் உள்ளார்ந்த அன்புக்குச் சொந்தக்காரராக இருந்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் மறைவுச் செய்தி பரவலாக எல்லோரையும் வருத்தமுறச் செய்ததில் வியப்பில்லை.  இன்னும் கூட அவரது மறைந்துவிட்டார் என்று அறியாத பலர் இருக்கக் கூடும் என்பது அன்றாடம் சந்திப்பவர்களோடு பேசுகிற போதே தெரிகிறது.   சிறந்த தன்மைகளுள்ள மனிதர்களின் மரணம் எந்த வயதில் நிகழ்ந்தாலுமே துக்கத்தைத்  தூண்டக்கூடியது.  தென்கச்சியோ 67வது வயதிலேயே இயற்கை எய்தியது இந்தத் துயரத்தின் ஆழத்தைக் கூட்டிவிட்டது.

விடியற்காலையில் அவரது குரலைக் கேட்டுக் கண்விழிப்பது என்றே ஒரு கூட்டம் வாழ்ந்த காலங்கள் உண்டு.  வேளாண்மை பொறியியல் கற்றிருந்த அவர், மிகவும் தற்செயலாக   வானொலியில் பணியாற்ற நேர்ந்ததையும், டிராக்டர் விவசாயியாகத் தான் திரும்ப வயலுக்குள் நுழையவேண்டும் என்று தனது தந்தை எப்போதும் எதிர்பார்த்திருந்ததையும் தமது நேர்காணல்களில் அவர் பதிவு செய்திருந்தார்.

சொற்களின் உச்சரிப்பில் அவர் கடைப்பிடித்த முறை கவித்துவமானது.  ஒரு தேர்ந்த சங்கீதக்காரர் போல எங்கே அழுத்த வேண்டும், எங்கே வேகமாகக் கடந்து    போகவேண்டுமென்ற கவனம் அவரிடம் இயல்பாக அமைந்திருந்தது.  பாகவத சம்பிரதாயம் மாதிரியான நேர்த்தியில் கதையை அவர் வளர்ப்பது வழக்கம்.  பட்டி மன்றப் பேச்சாளர் போலவோ, திருப்பாவை - திருவெம்பாவை உபன்யாசகர் போலவோ இலக்கண சுத்தத்திற்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிராது, நீண்ட நாள் பழகிய தோரணையில் தோளில் கை போட்டுப் பேசும் லாவகம் பயின்றிருந்தார் அவர்.  குரல் மட்டுமா கேட்டுக்  கொண்டிருந்தார்கள் நேயர்கள் - அவரது கண்ணசைவு, உடல் மொழி எல்லாம் துல்லியமாகக் கற்பனையில் விரியுமளவிற்குப் பேச்சில் ஒரு ரசாயன ஏற்பாடு ஒலிக்கும் அவரிடம்.

ஐந்து நிமிடத்திற்குள் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு, ரசனைக்காக முத்தாய்ப்பாக ஒரு துணுக்கையும் சிரிக்கச் சிரிக்க எடுத்து வைத்துப் போவதை அன்றாடம், வருடம் 365 நாளும் செய்வது இலேசான காரியமா என்ன...  ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டாலும், சொல்ல வந்தது இன்னவென்று தானும் புரிந்து கொள்ளாமல், எதிரே இருப்பவருக்கும் புரிய வைக்க இயலாமல் திண்டாடுகிற பேச்சாளர்களை மனக்கண் முன் நிறுத்தி இவரது பேச்சையும் கேளுங்கள், அப்போதுதான் அவரது தனித்துவம் விளங்கும்.

ஜப்பானிய ஹைக்கூ பற்றி ஒருமுறை சுஜாதா சொன்னார், முதல் வரி ஒரு செய்தியைச் சொல்கிறது; இரண்டாவது அதை விரிவுபடுத்துகிறது; அடுத்த அடி தொடர்பற்ற வேறு ஒன்றைப் பேசுகிறது; நான்காவதோ இவற்றை இலகுவாக இணைத்துவிட்டுப் போய்விடுகிறது.....என்று.   நமது தென்கச்சியின் பேச்சிலும் இப்படியான ஒரு 'ஸ்டைல்' இருந்ததாகக் கொள்ள முடியும். ஆனால் அலுக்காத பாணி அது.  ஒரு முறை வரலாற்றுச்   செய்தியோடு துவங்கும் அவர், பிறிதொரு சமயம் கற்பனைக் கதை ஒன்றிலிருந்து ஆரம்பிப்பார்.  சமூகம், அறிவியல், வரலாறு, பொது அறிவு என்று அவரது பேச்சு ஒரு நூலகம் போல் பன்முகப் பொருள்களின் களஞ்சியமாக இருந்தது. செய்தியின் போக்கிலேயே அருவருக்கத்தக்க பண்புகளைப் பற்றிய மென்மையான சாடல் இருக்கும்.  அது ஓங்கி அடிக்கிற மாதிரி வலிக்காது தான், ஆனால் வெட்கம் பிடுங்கித் தின்ன வைத்துவிடும்.  ஆன்மிகக் கதைகள், புராண பாத்திரங்கள் இவற்றைக் குறித்த ஆழ்ந்த வாசிப்பின் திறம் அவரது எளிமையான கட்டுக்குள் வந்துவிடுவது இன்னொரு வியப்பான அம்சம்.  பழமை கொண்டாடியாக மரபார்ந்த நுட்பங்களின் அருமை தவழும் அவரது உரைகளில் சமகால நவீனத்துவத்தின் கூறுகளை மதிக்கிற பாங்கும் கலந்திருந்தது அவரது வெற்றிக்கு மிகப் பெரிய காரணம்.

அவரது கருத்துக்களின் கனத்தை இலேசாக்கி முடிக்கவோ என்னவோ இறுதிப்பகுதியில் பளீரென்று ஒரு சின்னஞ்சிறிய சுவாரசியமான 'பொடிச் செய்தி' ஒன்றை அவர் சொல்வது வழக்கம்.  அந்தப் பகுதிக்கென்று மட்டுமே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைப்  பெற்றிருந்தார் தென்கச்சி.  சமயத்தில், அது முற்பகுதியில் அவர் வலியுறுத்திச் சொன்ன தத்துவத்தையோ, மருத்துவ உண்மையையோ முற்றிலும் நையாண்டி செய்வதாகக் கூட இருக்கும்.  ஆனால், அந்த முரண்பாட்டு யதார்த்தம்தான் நமது அன்றாட வாழ்வியலின் சுவாரசியமான தன்மையாக இருக்கிறது என்பதன் பிரதிபலிப்பாக அதை அவர் காட்டியிருப்பார்.

நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியிலிருந்த காலத்தில், ஒருமுறை அவசர அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தேவைப்படுகிறது என்பதை பரிசோதனை முயற்சியாக வானொலியில் அறிவிக்கச் செய்தார்.  அந்தக் காலை நேரத்தில் அப்போதுதான் பணி முடித்துவிட்டு ஓய்வறையில் உடைமாற்றிக் கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சிலர் தங்களது இரத்தமும் அதே பிரிவைச் சார்ந்தது என்பதால் உடனடியாக அந்த உயிர்காக்கும் பணிக்கு விரைந்து போய் நின்றிருக்கின்றனர்.  இவ்வளவு விரைவாகத் தமது அறிவிப்புக்குக் கிடைத்த பலனை எண்ணிச் சிலிர்த்துப்போய் இதனைத் தொடர்ந்து சேவை செய்தியாக மாற்றியவர் இவரே.

அரசுப்பணி நிறைவை அடுத்து தொலைக்காட்சி ஊடகத்தின் வாயிலாகவும் தகவல்களைச் சொல்லத் துவங்கினார் தென்கச்சி.  அவரது பேச்சுக்கள் பல தொகுப்புகளாகவும்  வெளிவந்து பரவலான வாசிப்பைப் பெறத் தொடங்கின.  பணி ஓய்வினை அடுத்து அவரது நேர்காணல் தினமணிக்கதிரில் வந்தபோது அதில் மிகவும் சுவாரசியமான தகவல்கள் பலவற்றைச் சொல்லியிருந்தார்.  அவரது உரையைத் தொடர்ந்து கேட்டு ரசித்த இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் அவரை நேரில் வரச் சொல்லி இருந்தாராம்.  இவர்     சென்றதும், நீங்கள் ஏன் இராமகிருஷ்ண விஜயத்தில் உங்கள் கருத்துக்களைத் தொடராக எழுதிவரக் கூடாது என்று கேட்டுக் கொண்டாராம்.  இவருக்கோ அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.  அந்தக் குறிப்பிட்ட காலத்தில் இராமகிருஷ்ண விஜயத்தில் படித்த பல விஷயங்களைத் தான் அவர் தமது அன்றாடப் பதிவுகளில் பேசி வந்திருக்கிறார்.  தங்களது புத்தகத்தில் வருவதை சுவாமிகளே வாசித்திருக்க மாட்டார் என்று சொல்வது சரியாக இருக்காது.  திருடன் கையிலேயே சாவி கொடுப்பது என்று சொல்வதில்லையா, அப்படித்தான் என்னையே அவர்கள் பத்திரிகையில் எழுதச் சொன்னது என்று நளினமாக அந்த விஷயத்தை முடித்திருந்தார் தென்கச்சி.

கருத்துமுதல்வாதத்தின் சாயல்தான் அவரது உரைகளை அலங்கரிக்கும் என்றாலும், வாழ்வின் புதிர்களைப் பற்றிய விவாதத்தில் அவரது தேடலில் நவீன சிந்தனைகளும் தட்டுப்படவே செய்தன.  தெனாலிராமன் கதைகள், பீர்பால் அறிவுத்திறன், முல்லாவின் சேஷ்டைகள் என நிறைய வந்துபோகும் அவர் பேச்சில் அரிய மனிதர்கள் பலரது வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்தும் செய்திகள் நிறைய இடம்பெறுவது அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தேடினாலும் கிடைத்தற்கரிய கருத்து பொக்கிஷமாக இருந்தது.

அவரது பொடிக்கதைகளில் மென்மையான இடியும் இருக்கும்.  ஒருமுறை,  எல்லாக் கஷ்டமான பொறுப்புகளையும் தான் கவனித்துக் கொள்வதாகவும், அற்பமான அன்றாட வேலைகள் சிலவற்றையே தனது மனைவி செய்துகொண்டிருப்பதாகவும் ஒரு கணவன்    சொல்வதான துணுக்கு ஒன்றைச் சொன்னார் தென்கச்சி.  மனைவியின் வேலைகள் என்ன என்றால், பால் வாங்குவது முதற்கொண்டு வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு, வீட்டு நிர்வாகம் எல்லாம் அவள் பொறுப்பில் சொல்லிமுடிக்கிற கணவன், அவன் அப்படி சாதிக்கிற கஷ்டமான வேலைகள் தான் என்ன என்று கேட்டால், "இராக் போர் எப்போது நிற்கும், இந்திய நதிகளை இணைக்க முடியுமா, காஷ்மீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு..." இப்படி போகிறது அவனது பட்டியல்.  வெட்டிப்பேச்சு என்று சொல்லாமல் சொல்கிற வேலைதானே அது என்று முடிப்பார் தென்கச்சி.

வெறும் விவரங்களாக மட்டும் நிற்காது, விவாதங்களை உருவாக்கவும் அவரது பேச்சுக்களில் நிறைய விஷயங்களிருந்தன. ஒரு மிகச் சாதாரண தோற்றமுடைய மனிதர், நாடக உலகிலிருந்தோ, திரைப்படங்களிலிருந்தோ, சமூக-அரசியல் மேடைகளின் மூலமாகவோ கூட அறிமுகமாகாமல், இன்னும் சொல்லப் போனால் தமது முகம் பார்க்கப்படாமலேயே வானொலி ஊடகத்தின் குறைவான சாத்தியங்களிலிருந்தே பல லட்சம் மக்களை ஈர்க்கத் தக்கவராக உருப்பெற்றது உண்மையிலேயே தன்னிகரற்ற சாதனை என்றே படுகிறது.  மீ.ப.சோமு, மனசை ப கீரன், சுகி சுப்பிரமணியன், கூத்தபிரான், வானொலி அண்ணா ரா.அய்யாசாமி......என்று எழுபதுகளில் எத்தனையோ மனிதர்கள் தமது குரல்களால் சாதாரண மக்கள் மனத்தில் இடம் பெற்றிருந்தவர்கள்.  வானொலி நாடகங்களில் உணர்ச்சி பொறி பறக்கப் பேசியவர்கள் எத்தனையோ பேர் உண்டு.  இருந்த போதிலும்,  தென்கச்சிக்கு இவர்களைக் கடந்து போகும் வாய்ப்பு கிடைத்தது தனித்தன்மை என்றே  சொல்லத் தோன்றுகிறது.

அவரது எள்ளல் உணர்ச்சியும், அநாயாசமான நகைச்சுவை உணர்ச்சியும், தான் சற்றும் சிரிக்காமல் பிறரை வெடிச்சிரிப்புக்கு உட்படுத்தும் சாதுரியமும் புகழ்வாய்ந்தவை.  ஒருமுறை நண்பர்களோடு குற்றாலம் சென்றிருந்தார் தென்கச்சி.  அருவியின் இன்பத்தில் திளைத்திருந்த தருணத்தில் நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார்: "இந்த அருவி விழும் மலையுச்சியில் நின்றால், இன்று ஒரு தகவலாக எந்தச் செய்தியைச் சொல்வீர்கள்..."    தென்கச்சி பட்டென்று பதிலிறுத்தாராம் இப்படி: " அந்த உச்சியில் நான் நின்றால், தகவலை மற்றவர்கள் தான் சொல்ல வேண்டியிருக்கும்"

அவரது இன்று ஒரு தகவலுக்காக ஏங்கி இருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு, இந்த செப்டம்பர் 16 அன்று அவர் மறைந்த தகவல் அதிர்ச்சித் தகவலாகத் தான் வந்து சேர்ந்தது.

கதிரில் வந்த அவரது நேர்காணலைச் செய்தவர் முடிக்குமுன் வழக்கமான துணுக்கோடு இதையும் நிறைவு செய்யுமாறு தென்கச்சியைக் கேட்டுக் கொள்ள தென்கச்சி சொன்ன துணுக்கு இதுதான்:

தீராத தலைவலியால் துடித்த ஒருவர் சிறப்பு மருத்துவரிடம் போயிருக்கிறார். அவரோ இவரது மூளையையே தனியே எடுத்து அதில் என்ன ஏது என்று நீண்ட நாள் ஆய்வில் இறங்கி விட்டார். இதனிடையே தையல் போட்டுச் சிகிச்சை முடிந்தது என்று இவரை அனுப்பி விட்டனர். முப்பது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர் அதே மருத்துவரிடம் போய் நின்று தன்னை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டிருக்கிறார்.  கேட்டுத் தெரிந்து கொண்ட மருத்துவர் அதிர்ந்துபோய், ஏனப்பா, மூளையே இல்லாமல் இந்த முப்பது வருடங்களாக என்னதான் செய்து கொண்டிருந்தாய் என்று வியந்து வினவியிருக்கிறார்.  அந்த மனிதர் அசராமல் சொன்னாராம், வானொலியில் இன்று ஒரு தகவல் சொல்லிக்                 கொண்டிருந்தேன் என்று.

இந்த எளிமையும், அசத்தலும் ஒருசேரக் கலந்த சாதனையாளர்தான் தென்கச்சி.

(கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன்)

*

Related Posts with Thumbnails

20 comments:

 1. மிக இயல்பாக ஆரம்பித்து
  கனமான செய்திகளை கொஞ்சம் பகிர்ந்து
  முடிவில் 'நச்'னு ஒரு சிரிக்கும் விசயத்தைச் சொல்லி...

  தென்கச்சியின் பேச்சைக்கேட்டது போலவே, கட்டுரை அமைப்பும் அப்படியே இருந்தது

  நன்றி

  ReplyDelete
 2. தென்கச்சியின் நினைவைப்போற்றும் சிறந்த கட்டுரை. கட்டுரையாளர் திரு.எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  நன்றி மாதவராஜ் அண்ணா.

  ReplyDelete
 3. போற்றுதலுக்குரிய நபர். தினமும் அவரின் இன்று ஒரு தகவலை நீண்ட நாட்கள் கேட்டு வந்தேன். இன்னும் அவரின் mp3 வடிவ பேச்சுக்களை எனது iPod-l வைத்து கேட்டு வருகிறேன்.

  நன்றி நண்பரே உங்களின் அன்பான பகிர்தலுக்கு...

  பிரபாகர்.

  ReplyDelete
 4. தென்கச்சி கோ.சுவாமிநாதன் பற்றிய நிறைவான கட்டுரை. நன்றி திரு.மாதவராஜ்

  ReplyDelete
 5. //நீண்ட நாள் பழகிய தோரணையில் தோளில் கை போட்டுப் பேசும் லாவகம் பயின்றிருந்தார் அவர்//

  தென்கச்சியைப் பற்றி பல நுணுக்கங்களை நிறைவாக எழுதியுள்ளீர்கள்.

  நன்றி!

  ReplyDelete
 6. ஆம்

  சகலருக்கும் பிடித்த ஆளுமை.

  அவர் சொல்கிற தொனி அதை முடிக்கிற விதம் எல்லாம் இப்பவும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

  கைசியில் சொன்ன கதை, :-)

  நல்ல பகிர்வு நன்றி

  ReplyDelete
 7. Daily Morning we hear the news & then Indru ORU Thagaval & thn we leave to school, Nice Voice & Nice Points he tell, frm which website i can hear his Voice, any one tell me ?

  ReplyDelete
 8. "ஐந்து நிமிடத்திற்குள் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு, ரசனைக்காக முத்தாய்ப்பாக ஒரு துணுக்கையும் சிரிக்கச் சிரிக்க எடுத்து வைத்துப் போவதை அன்றாடம், வருடம் 365 நாளும் செய்வது இலேசான காரியமா என்ன... "

  தினமும் புது புது விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்வது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம் ! அருமையான,எளிமையான மனிதர் ! அவருடைய குரலும், அதைச் சொல்லுகிற பாணியும் அனைவரையும் கவர்ந்திழுத்து ரசிக்க வைத்தது என்பது அனைவரும் அறிந்ததே !
  அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!

  ReplyDelete
 9. மிகவும் சுவாரஸ்யமான செய்திகளை உள்ளடக்கிய கட்டுரை.

  தென்கச்சியாரின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான். தனித்துவமான குரல்!
  :(

  ReplyDelete
 10. ஒரு காலத்தில் தென்கச்சியின் குரலை கேட்பதற்காகவே நாள்தோறும் தூக்கத்தை களைத்தவன் நான்.

  நல்ல கருத்துக்களை மக்களுக்கு புரிய வைத்ததில் அவரின் பங்களிப்பு மகத்தானது.

  தென்கச்சியின் நேர்காணலை இரண்டு நாட்களுக்கு ஒளிபரப்பி அவரின் நினைவைப்போற்றிய “மக்கள் தொலைக்காட்சியை” பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 11. எல்லோரது மனதிலிருந்ததை தெளிவாக சொல்லிச் செல்கிறது இந்த இடுகை!! சுவாரசியமான சில குறிப்புகளை அறிய தந்திருக்கிறீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 12. பகிர்வுக்கு நன்றி மாதவராஜ்.. வானொலி நிகழ்ச்சிகள் தந்த சுகத்தை பிரமாண்டமாகச் செய்யப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தந்ததில்லை. (நீங்கள் என்ன எழுதினாலும் thumbs down போட ஒரு கூட்டம் அலைகிறது மாதவராஜ்)

  ReplyDelete
 13. வருகை தந்த அனைவருக்கும் நெகிழ்ச்சி கலந்த நன்றி.

  இந்தப் பதிவினை மிகவும் சிலாகித்து எழுதி இருப்பவர்களது பாராட்டுதல்கள் உள்ளபடியே அந்த உயர்ந்த மனிதருக்கான அவர்களது இதயபூர்வ அஞ்சலி என்றே கொள்ள வேன்டும்.

  மாதவராஜ் அவர்களுக்கு எப்போதும் போல் அன்பு நன்றி.

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 14. பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 15. தென்கச்சி திரு.கோ.சாமிநாதன்
  அவர்களைப் பற்றிய நிறைய
  விஷயங்களைத் தொகுப்பில்
  மனநிறைவாய் தந்தீர்கள்.

  ஆனாலும் இடுகையுடன் அவரது
  ஒரு புகைப்படத்தையும் இணைத்து
  போட்டிருந்தால் சிறப்பாய் இருக்கும்.

  ReplyDelete
 16. அன்பு மாதவராஜ்,

  தென்கச்சி சுவாமினாதன் அவர்களை தெரியாதவர்களுக்கும் (அப்படி யாராவது தமிழ் நாட்டில் இருக்கிறார்களா என்ன?) புரியும் படியான ஒரு சொற்சித்திரம் இது. எனக்கு அவர் வானொலியில் இருந்த போது அவர் தோற்றம் பற்றிய ஒரு கற்பனை அவர் தொலைக்காட்சியில் வந்தபோது இல்லாமல் போய்விட்டது என்று தோன்றும். எந்தவித உணர்வுகளையும் காட்டாது, “எல்லோரும் இன்புற்றிருப்பதே அன்றி....” என்பது போல ஒரு யோக நிலையில் வாழ்வியல் விதிகளை சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.

  கோர்வையாய் அழகாய் இருந்தது பதிவு, வாழ்த்துக்கள், இது போல சிறிய பையோகிராஃபிகல் முயற்சிகளை இன்னும் விரிவுபடுத்தலாம் நீங்கள்.

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 17. தென்கச்சியைப் பற்றி பல தகவல்கள். போற்றுதலுக்குரிய நபர்.

  நன்றி!

  ReplyDelete
 18. எஸ்.வி.வேணுகோபாலன் சொல்லிவிட்டாலும், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  நல்ல புகைப்படம் போட்டிருக்க வேண்டும்தான்.
  ராகவன்!
  தாங்கள் சொன்னது குறித்து யோசிக்கிறேன்.

  ReplyDelete
 19. எங்களது ‘சர்வதேச வானொலி' இதழில் இந்த கட்டுரையை மறு பிரசுரம் செய்ய அனுமதி வேண்டும். இந்த மாதம் தென்கச்சியாரை மையப்படுத்தி அவரின் நினைவாக வெளியிடுகிறோம்.

  ReplyDelete
 20. தென்கச்சியாரை நினைவூட்டியமைக்கு நன்றி! 'எல்லோரும் சிரித்து மகிழும் வகையில் கதைகள் சொல்கிறீர்களே! அழ வைக்கும் வகையில் கதை சொல்ல முடியுமா?' எனச் சில மாதங்களுக்கு முன் தென்கச்சியாரிடம் ஒரு வார இதழ் நேர்காணலில் கேட்டிருந்தார்கள். அதற்குத் தென்கச்சியார் சொன்ன விடை "உணர்வுள்ள தமிழர்களை அழ வைக்கக் கதைகள் தேவையில்லை! ஒற்றைச்சொல் போதும்!  ஈழத்தமிழர்கள்"

  நெஞ்சை நெகிழ வைத்த விடை!

  ReplyDelete