அர்த்தமுள்ள கழுதை

 

செல்லமாகத் திட்டும்போதும், கோபமாகத் திட்டும்போதும் நம் கிராமங்களில் ‘சீ, கழுதை’ என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம். முட்டாள்தனத்தின் குறியீடாகவே இன்று வரை நம் சமூகத்தில் கழுதை சுட்டிக்காட்டப்படுகிறது. ‘மாடு மாடுன்னு உழைப்பது’ என்கிற பதம் போல ‘பொதி கழுதை’ என்ற பிரயோகமும் இருக்கிறது. தவறு செய்கிறவர்களுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேலே உட்கார வைப்பது ஒரு இழிவான தண்டனையாக இருந்திருக்கிறது. ‘கழுதைக் காது’ என்று சொல்வதில் கிண்டல் இருக்கிறது.

இவை யாவையும் குறிப்பிட்டு பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் ‘தமிழ்ச் சமூகத்தில் கழுதை’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். சங்க இலக்கியங்களில் இருந்து இன்றுவரை நம் பேச்சு வழக்கத்தில் கழுதை எப்படியெல்லாம் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதையும், அதற்கான காரண காரியங்களையும் விளக்கி இருக்கிறார். கழுதை ‘மூதேவியின் வாகனமாக’ இருப்பது,  கழுதை கத்தினால் நல்ல சகுனம் என்பது போன்ற பல நாட்டார் வழக்காற்றியலோடு தொடர்பு கொண்ட கருத்துக்களை விளக்கி இருக்கிறார்.

கழுதையை வைத்து நம் சமூகத்தில் புழங்கும் பழமொழிகளையும், அதற்கான விளக்கங்களையும் பேராசிரியர் அவர்கள் தொகுத்திருப்பது சுவையானது!

‘அழுதப் பிள்ளை சிரிச்சதாம், கழுதப் பாலைக் குடிச்சதாம்’

‘வண்ணானுக்கு உழைத்த கழுதையும்
வாணியனுக்கு உழைத்த காளையும் சரி’

‘பனைவெட்டின இடத்துல
கழுதை வட்டம் போட்டது போல’

‘ஊருக்குப் போனானாம் வண்ணான்
ஒசந்துச்சாம் கழுதை”

“கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா”

‘அத்துதாம் கழுத எடுத்ததாம் ஓட்டம்’

‘கழுத கெட்டா குட்டிச் சுவரு’

இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

சலவைத் தொழிலில் பயன்பட்டு வந்த கழுதையின் பங்களிப்பு குறைந்து விட்டது எனவும், இப்போது ஆற்றில் மணல் கடத்தவும், காய்ச்சப்படுகிற கள்ளச்சாராயத்தை கொண்டு செல்லவும்  வாகனமாக க்ழுதை மாறிவிட்டதெனவும் பேராசிரியர் கட்டுரையை முடிக்கும்போது பெருமூச்சு வருகிறது.

*

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. குரல்வளை பெரிதாக இருந்தாலும் “குழந்தையிலே உனக்கு கழுதை பாலை குடுத்துட்டாங்களா” என்றும் கேலி செய்வதுண்டு!!

    /‘அழுதப் பிள்ளை சிரிச்சதாம், கழுதப் பாலைக் குடிச்சதாம்’/

    இது என் சிறுவயது நினைவுகளை கொண்டு வந்தது!! இப்படி சொல்வார்களென்று பயந்தே சிரிக்காமலிருக்க பிரயத்தனப்பட்டிருக்கிறேன்!! :-)

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள தோழரே,

    சுவாரஸ்யமான விவாதங்களை தூண்டும் பதிவு. நாட்டார் வழக்கில் உழைப்பாளி மக்களின் வாழ்வியல் விஷயங்களுடன் கூடிய சொல வடைகள் அதிகம் உண்டு. கழுதை வயசாச்சு என்று சொல்லும் போது எத்தனை வயசை குறிக்கிறது என்பதை யாராவது சொன்னால் தேவலை. அவுத்து விட்ட கழுதை போல என்று சொல்வதும் எதற்காக என்று நானாக ஒரு கதை ரெடி செய்து இருக்கேன்.. வேறு யாராவது சொல்லுங்களேன்..

    பவித்ரா பாலு

    பதிலளிநீக்கு
  3. //‘மாடு மாடுன்னு உழைப்பது’//

    கன்னட மொழியில், செய் என்று சொல்வதற்கு மாடு என்று சொல்கிறார்கள். என்ன ஆச்சரியம் பாருங்கள்.

    அசாத்திய பொறுமை உள்ளவர்களைப் பார்த்து “கழுதை பொறுமையப்பா உனக்கு” என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அக்கிரகாரத்தில் கழுதை28 செப்டம்பர், 2009 அன்று PM 11:47

    முதலில் இது போல சாதி ரீதியான பழமொழிகளையும் அதை கையாள்பவர்களையும், அதைப்பற்றி மெனக்கெட்டு எழுதுபவர்களையும் ஒழிப்பதும் ஓதுக்குவதும் நம் சமூகம் உருப்புட பலவழிகளில் ஒரு வழி. நீங்க என்ன நெனைக்கிறீங்க விஜயகோபால்சாமி

    பதிலளிநீக்கு
  5. //சந்தனமுல்லை said
    /‘அழுதப் பிள்ளை சிரிச்சதாம், கழுதப் பாலைக் குடிச்சதாம்’/
    இது என் சிறுவயது நினைவுகளை கொண்டு வந்தது!!//
    எனக்கும் தான். இதைக் கேட்டு நீண்ட காலமாகிவிட்டது.
    சிறுவயதில் (10 வயதுக்குள்) அழுதுவிட்டு சிரிக்கும் நண்பர்களை
    "அழுத பிள்ளை சிரிக்குது, கழுத ..த்திரம் குடிக்குது" எண்டு கேலி செய்வது வழ்க்கம்.

    பதிலளிநீக்கு
  6. பரவலாக இன்றும் வழக்கில் இருக்கும் ஒரு பழமொழியை விட்டு விட்டீர்களே!

    “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?”

    ஒரு விஷயத்தின் அருமை புரியாதவர் என்பதறகு, பாவம் இப்படிக் கழுதையைக் கதைக்கு இழுத்துச் சொல்லுவார்கள்.

    பதிலளிநீக்கு
  7. கழுதைகள் மிகவும் புண்ணியவாங்கள் அதுதான் ஒரு நாளைக்கு இரண்டு தரம் சபரிமலை ஏறிபொதி சுமக்குதுகள், ஆனா சீசன் முடியும்போது அது காலு எல்லாம் வளைஞ்சு ஒன்னுக்கும் ஆகாமப் போய்டும்,அப்ப அதுகளை மிருகங்கள் திங்க காட்டுக்குள் விட்டுவிடுவார்கள் மனிதர்கள்(என்ன ஜென்மமோ இந்த மனிதன்). அதுபோல் பல மலைதலங்களுக்கும் இந்த கழுதைதான் வாகனம்.எனக்கு தெரிந்து மனிதன் சாப்பிடாத ஒரே கறி கழுதையாகதான் இருக்கும்(அதைக்கூட விடமாட்டான்). வெள்ளியங் கிரியில் கூட கழுதையின் பயன்பாடு உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. கழுதைப்பால் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம் அருமருந்தாக. எந்த உடல்நலக்குறைவுக்காக என நினைவில்லை. அவற்றில் தாய்ப்பாலிலோ, பசுப்பாலிலோ இல்லா மருத்துவகுணங்கள் உள எனச்சொல்லி.

    குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுப்பது வழக்கம் அருமருந்தாக.

    எனவே, சிறுவர்கள் விளையாடும்போது, ஒருவன் மற்றவனை காலால் உதைத்தால், அவனை, ‘நீ என்ன கழுதைப்பாலைக்குடுத்து வளர்ந்தாயா?’ எனக்கேட்பதுண்டு.

    கழுதைப்பால் விலை ஆட்டுப்பால், பசுப்பால், எருமைப்பாலை விட அதிகம்.

    ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள்: ஆடு, மாடு, எருமை இவற்றையெல்லாம் விட சிறுவர்களிடம் மிகவும் அடிபட்டு வாழும் விலங்கு கழுதைமட்டுமே. அதற்குக் காரணம், அஃது உதைக்கத்தான் செய்யும். அதுவும் நிறைய நேரம் கழித்தே. அதிலிருந்து சுலபமாக தப்பித்துக்கொள்ளலாம்.

    வீட்டு விலங்குகளில் மிகவும் பரிதாபத்துக்குள்ளானது கழுதை மட்டுமே. தான் செய்யாத குற்றத்திற்கு அடிபடும் பாவம்.

    தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

    கழு - அழகிய
    தை - பெண்

    கழுதை என்றால், அழகிய பெண் என்று பொருள் வரும்.

    பதிலளிநீக்கு
  9. அன்பு மாதவராஜ்,

    வரவர மாமியா கழுத போல ஆனாளாம்!

    காய்ச்சுறவ காய்ச்சுனா கழுத மூத்திரம் கூட ரசம் தான்

    கழுத தேய்ஞ்சு கட்டெறும்பா ஆன கதையா போச்சு

    என்னோட தமிழ் வாத்தியார் திட்டும்போது ஒன்னேமுக்கா தையன்னான்னு சொல்வாரு..தமிழில் எண்களாய் எழுதினா, ஒன்று, க என்றும், முக்கால் ழு என்றும் எழுதுவதுண்டு, அதில் தையன்னாவ சேர்த்துக் கொண்டு நாசூக்காய் திட்டுவார்...
    சுவாரசியமான நினைவூட்டல் உங்கள் பதிவு.
    அன்புடன்,
    ராகவன்

    பதிலளிநீக்கு
  10. சந்தனமுல்லை!
    சிரிப்பும் மருந்துதான். கழுதைப்பாலும் மருந்துதானாம்!

    பவித்ராபாலு!
    கழுதயின் முன்னங்கால்களை பெரும்பாலும் கட்டி வைத்திருப்பார்கள். அதை அவிழ்த்து விட்டதும் தலைகால் தெரியாமல் ஓடுமாம். அதற்குத்தான் அந்தப் பழமொழி. கழுதை வயதாச்சு என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. கழுதைக்கு ஆயுள் இருபது ஆண்டுகளே!


    விஜயகோபால்சாமி!
    ஆச்சரியம்தான். தகவலுக்கு நன்றி. மனிதர்களின் புறக்கணிப்புகளையும், சுமைகளையும் தாங்கிக்கொண்டு இருக்கிறதே...அதுதான் பொறுமையாய் இருக்கும்.


    அக்ரஹாரத்தில் கழுதை!
    நாட்டார் வழக்காற்றியல் குறித்து பேராசிரயர் சிவசுப்பிரமணியம் செய்த ஆய்வுகளில் இது ஒரு கட்டுரை. அவ்வளவுதான். ஜாதீய ரீதியான பார்வையல்ல என்றே நினைக்கிறேன். நம் சமூகத்தை அறிந்துகொள்ளாமல் அதன் பிணிகளை ஒழிக்க முடியாது நண்பரே. அனானியாக வந்தாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளப் பழகுங்கள் முதலில்.


    வேந்தன்!
    அப்படிச் சொல்பவர்களையும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.


    ராமலஷ்மி!
    ஆமாங்க... எவ்வளவு முக்கிய பழமொழி இது. பேராசிரியர் இதுகுறித்து ஒன்றும் குறிப்பிடவில்லையே. அவரிடம் கேட்க வேண்டும். நன்றி.



    பித்தன்!
    புதிய தகவல்கள். மிக்க நன்றி.


    கள்ளபிரான்!
    அருமையான் சுவாரசியமான பகிர்வு. நன்றி. கழுதையின் இன்னொரு அர்த்தத்திற்கும் நன்றி. பயன்படுத்திக் கொள்ளத்தான்.:))))


    ராகவன்!
    அடேயப்பா... இது குறித்தும் பேராசிரியரிடம் கேட்க வேண்டும். உண்மையிலேயே அர்த்தமுள்ள பதிவாக மாற்றிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. /

    தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

    கழு - அழகிய
    தை - பெண்
    /

    அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
    :)))))))))

    பதிலளிநீக்கு
  12. ஊரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.
    "கழுதைக்கு மட்டும் தான் தெரியும் அழுக்கு காகிதத்தின் ருசி".
    இதற்கு உதாரணமாக பிரியாணி குஞ்சுகளின் கண்களுக்கு மட்டும் மஞ்ச துண்டு மாகாத்மா போல் காட்சியளிக்கும் அபத்தத்தை சொல்லி சிரிப்பார்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!