கதை சொல்லும் தேவதைகள்

உலகம் போற்றும் மனிதர்களாய் இருந்தவர்கள் புத்தகங்களை எவ்வளவு நேசித்திருக்கிறார்கள் என்பதுதான், எனது முந்தையப் பதிவின் கேள்விகள் மூலம் நான் சொல்ல வந்தது. எழுத்துக்களுக்கு இருக்கும் ஆற்றலையும் வசீகரத்தையும் வாசிப்பவனே அறிய முடிகிறது.

 

யாரையும் விட ஹெலன் கில்லர் அதை அற்புதமாக அறிந்தவர் என்று சொல்லத் தோன்றுகிறது. பார்க்க முடியாத, கேட்க முடியாத... பேசமுடியாத அந்த அம்மையார் எப்படி தன்னம்பிக்கையுடன் எழுதப் படித்தார்கள் என்பதை சின்ன வயசில் நாம் எல்லோரும் ஆச்சரியம் ஆச்சரியமாக படித்திருப்போம். சமீபத்தில் அவரைப் பற்றிய ஒரு பழைய புத்தகம் படிக்க முடிந்தது. அந்தப் பெண்மனியின் வாசகங்கள் பலவற்றைத் தொகுத்திருந்தார்கள். எல்லாம் அதிசயம் போல் இருந்தது. அவற்றில் ஒன்றைக் கேளுங்களேன்....

 

“இளவேனிற்காலம்,  கோடைக்காலம், குளிர்காலம் எல்லாம் மழையாகவும், வெயிலாகவும், குளிராகவும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எல்லாப் பொருட்களின் அநித்யத்தன்மையைப் பார்த்தபின்னரும் இறுதியாக சாவைப்பற்றி ஏன் பேச வேண்டும். வாழ்வையும், சாவையும் உறுதியோடு ஒரேவிதமாக நாம் ஏன் நோக்கக் கூடாது?” என்கிறார்.

 

விடைகள்

சென்ற பதிவில் கேள்விகளுக்கான விடைகள்

1.ஜவஹர்லால் நேரு
2.பெட்ரண்ட் ரஸ்ஸல்
3.ஐன்ஸ்ட்டீன்
4.பெரியார்
5.ஹெலன் கில்லர்
6.நெல்சன் மண்டேலா
7.லெனின்
8.சார்லி சாப்ளின்
9.மார்ட்டின் லூதர் கிங்
10.மகாத்மா காந்தி
11.அறிஞர் அண்ணா
12.அம்பேத்கார்
13.பகத்சிங்

புலன்களின் வழி உணர்ந்த பருவங்களை எப்படி அறிவின் வெளிச்சத்தோடு பார்க்கிறார்! பார்க்கத் தெரிந்தவர்களுக்கு பாதை தெரிகிறது! ஹெலன்கில்லரின் பார்வையோ எழுத்துக்களின் ஸ்பரிசம் மூலம் கிடைத்திருக்கிறது. புத்தகங்களின் மகத்துவம் ஹெலன் கில்லரோடு சேர்ந்தே வாழ்ந்து கொண்டு இருப்பதாகப் படுகிறது.

 

இந்த நேரத்தில் அந்தன் செகாவ் மிக இயல்பாக நினைவுக்கு வருகிறார். உலகப் புகழ்பெற்ற அந்த ரஷ்ய எழுத்தாளரை சிறுகதைகள் எழுதும் எவரும் வாசித்தே ஆக வேண்டும். அவரது  ‘ஆறாவது வார்டு’ படித்துவிட்டு கிறுக்குப் பிடித்துப் போயிருக்கிறேன். மனித மனதின் விசித்திர இயல்புகளை, ஆழத்தில் படுத்திருக்கும் உணர்வுகளையெல்லாம் எழுத்தில் கொண்டு வர முடிந்த மேதமை அவருடையது. Bet என்னும் அவரது சிறுகதை, தனிமையைக் கொன்று புத்தகங்கள் எப்பேர்ப்பட்ட உலகில் சஞ்சரிக்க வைக்கின்றன என்பதையும், உலகில் வெல்ல முடியாதவைகளாக புத்தகங்கள் இருப்பதையும் மிக நுட்ப்மாகச் சொல்லும்.

 

ஒரு கோடைக்காலத்தின் மாலையில் கூடுகிற பிரபுக்களின் அரட்டை மற்றும் ஆட்டக் கச்சேரிகளில் அன்று தூக்குத்தண்டனை கொடியதா, ஆயுள்தண்டனை கொடியதா என்று ஒரு விவாதம் நடக்கிறது. இளம் வக்கீல் ஒருவன் ஆயுள்தண்டனை கூட அனுபவித்துவிடக்கூடியதே என்று சொல்ல, ஒரு பிரபு அவனிடம் பந்தயம் கட்டுகிறார். அதன்படி ஒரு அறைக்குள் பதினைந்து வருடம் இருந்துவிட்டால், வக்கீலுக்கு இரண்டு மில்லியன் பணம் கொடுப்பதாக சொல்கிறார்.

 

பந்தயம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒரு அறைக்குள் வக்கீல் அடைக்கப்படுகிறான். தினமும் அவனுக்கு உணவு மட்டும் கொடுக்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் அந்த அறைக்குள் அவன் நடமாடிக்கொண்டு இருக்கிற சத்தம் கேட்கிறது. பிறகு, அவன் சில புத்தகங்கள் வேண்டும் என்கிறான். தருவிக்கப்படுகின்றன. மேலும் சில புத்தகங்களைக் கேட்கிறான். கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து புத்தகங்கள் அந்த அறைக்குள் சென்று கொண்டே இருக்கின்றன.

 

வருடங்கள் ஒடிவிடுகின்றன. விடிந்தால் பந்தயம் முடியும் நாள் வருகிறது. பிரபுவுக்கு அச்சமாயிருக்கிறது. இந்த காலத்திற்குள் அவர் பெரும் வியாபாரத்தில் நட்டமடைந்திருந்தார். பந்தயத்தில் தோற்று, பந்தயத்தொகையை கொடுத்துவிட்டால் அவர் அதோகதிதான். வக்கீலை கொன்றுவிட எண்ணுகிறான். வக்கீலோ ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் போய்விடுகிறான்.

 

அந்தக் கடிதம் நினைவில் வரும்பொதெல்லாம் நான் கரைந்துதான் போகிறேன். இந்த பூமிப்பந்தின் மேல் இந்த வாசகங்களை ஒட்டி வைக்க வேண்டும் போலத் தோன்றும்.

 

“இந்தப் பதினைந்து ஆண்டுகளாக நான் உலகத்தைப் பார்க்க முடியவில்லை என்றாலும், படித்துக் கொண்டு இருந்தேன். இனிமையான மதுவருந்தினேன். காடுகளில் வேட்டையாடினேன். பெண்களை காதலித்தேன். நமது கவிஞர்களாலும், மேதைகளாலும் சிருஷ்டிக்கப்பட்ட தேவதைகள் மேகங்கள் போல இரவில் வந்து என்னிடம் கதைகளைச் சொன்னார்கள். புத்தகங்களால் நான் சிகரங்களில் ஏறி நின்று சூரிய உதயத்தையும், வெள்ளமென நிறைந்த அந்தி வானம், கடல், மலைமுகடுகள், தலைக்கு மேல் பறந்த மேகங்கள், அடர்ந்த பச்சைக் காடுகள், வயல்கள், நதிகள் எல்லாவற்றையும் பார்த்தேன். நகரங்களின் சைரன் ஒலிகளையும், இடையனின் புல்லாங்குழல் இசையையும் கேட்டேன். என்னிடம் இருக்கும் கடவுளிடம் பேச வந்த சாத்தானின் சிறகுகளை தொட்டுப் பார்த்தேன். ஆழ ஆழத்திற்கும் சென்றேன். அழிந்த நகரங்களைப் பார்த்தேன். புதிய மதங்களை வழிபட்டேன். சாம்ராஜ்ஜியங்களை வென்று நின்றேன்...”

 

கவிதையாய் நீளும் கடிதம் இறுதியாய் இப்படி முடிகிறது....

 

“நீங்கள் பகுத்தறியும் சிந்தனையை இழந்து தவறான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். உண்மைகளுக்குப் பதிலாக பொய்களையும், அழகுகளுக்குப் பதிலாக அருவருப்புகளையும் ஏற்றுக்கொண்டீர்கள். ஆப்பிள், ஆரஞ்சுத் தோட்டங்களில் கனிகளுக்குப் பதிலாக திடுமென தவளைகளும் பல்லிகளும் முளைப்பதையும், அவைகளிலிருந்து வரும் வேர்த்துப்போன குதிரையின் நாற்றத்தையும் நீங்கள் வழிபடுகிறீர்கள். உங்களது செய்கைகளை, வாழ்க்கையை உங்களுக்கு புரிய வைப்பதற்காக நான் இந்தக் காரியத்தைச் செய்யப் போகிறேன். ஒரு காலத்தில் நான் கனவு கண்ட இரண்டு மில்லியன் பணத்தையும் இதோ, துறந்து போகிறேன். பேசிய காலத்திற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பு இங்கிருந்து போய் விடுவேன் பந்தயத்தை முறித்துக்கொண்டு...”

 

இந்தக் கதையை எத்தனை தடவை படித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. செகாவ் என்னோடு பேசிக்கொண்டே இருக்கிறார். ஆமாம், புத்தகங்கள் கதை சொல்லும் தேவதைகள்தான்!!

 

*

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. எழுத்தையும் எழுத்து சார்ந்தும் பேசுவது
    மிகுந்த சிலாக்கியமான விஷயம். இந்தப்பதிவு அப்படியானது.
    பேசப்படுகிற எழுத்து அல்லது நபர் குறித்த ஈடுபாட்டை அதிகப்படுத்துகிறது.
    இது வலைப்பக்கங்களுக்கான கொடை.

    பதிலளிநீக்கு
  2. வாசித்தல் என்பதும் ஒரு வித ருசி,சுக அனுபவம், சொல்லி தெரியாது, உணர மட்டுய்மே முடியும், போதை எனக் கூட கொள்ளலாம்.

    ஆனால் சமீப காலங்களில் வாசித்தல் குறைவாக இருப்பதற்கு நான் வாசகனை மட்டும் குறை சொல்ல மாட்டேன். இன்று வரும் புத்தகங்கள், கட்டுரைகளின் தரமும் சுவையும் கூட அந்த அளவில் தான் உள்ளது. நீங்கள் ஹிக்கின் பாதம் கடைக்கு சென்று பார்த்தல் நூறு புத்தகங்களில் ஒரு புத்தகம் தான் வாசிக்க தூண்டுகிறது.

    இன்றைய எழுத்தாளர்களும் பணம் என்ன கிடைக்கும், எத்தனை பிரதி விற்கும் என்ற வணிக நோக்கம் கொண்டு செயல் படுவதால் தரமான படைப்பு வருவது இல்லை. தமிழ் சினிமா போலவே தமிழ் எழுத்தும் இன்று ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு
  3. அழகான தொரு இடுகை! ஹெலன் கெல்லர் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கிறார்!! அந்தோன் செகாவை அறிமுகப்படுத்திய பெரிம்மாவுக்குத்தான் நன்றிகள் சொல்ல வேண்டும்!!

    விடைகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அருமை. அருமை. ஹெலன்கெல்லர் அதிசயிக்கத் தக்க மனிதர். அவர் குறித்து அழகான மேற்க்கோள்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
    //ஆமாம், புத்தகங்கள் கதை சொல்லும் தேவதைகள்தான்!! *//

    நிச்சயமாக!
    விடைகளுக்கு நன்றி. அப்பாடா, நான் சொன்ன இரண்டே விடைகள் சரியாகத் தான் உள்ளன. :-)

    பதிலளிநீக்கு
  5. பார்வையற்றோருக்காக தன் கடைசி மூச்சு வரை செயல்பட்ட ஹெலன் கெல்லரை நினைவு கூர்ந்தது அருமை.

    செகாவ் வரிகள், எழுத்தாளர்கள் மறைவதில்லை என்பதை உறுதி செய்கின்றன,

    அவசியமான பதிவு. தொடருங்கள்....
    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான பகிர்வு ஆனாலும் 15 வருடம் இப்படி புத்தகங்களை மட்டுமே படித்து கழிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  7. வாசிப்பும் போதை தரும் என்பதை நம்புகிறேன்...!

    பதிலளிநீக்கு
  8. வாசிக்கும் சுகம் கொஞ்சம் கொஞ்சம் சிதைந்து வரும் நேரத்தில் வாசிப்பின் மகத்துவத்தை உணர்த்தும் இடுகை

    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  9. எவ்வ‌ள‌வு அழ‌காக‌ நேர்த்தியாக‌ கோர்த்து எழுதியிருக்கிறீர்க‌ள்.உங்க‌ள் ப‌திவு ம‌ட்டும் ஏனோ ச‌லிப்பை ஏற்ப‌டுத்துவ‌தே இல்லை.இந்த‌ ப‌திவை ம‌ட்டும் ஏன் சுருக்காக‌ முடித்தீர்க‌ள் ???

    ஏற்று கொள்கிறேன்.புத்தகங்கள் கதை சொல்லும் தேவதைகள் தான்.த‌னிமையை
    விர‌ட்டுவ‌த‌ற்கு நான் தேர்ந்தெடுத்த‌ வ‌ழி புத்த‌க‌ங்க‌ள் தான்.

    பதிலளிநீக்கு
  10. அற்புதமானதொரு படைப்பு, உங்களது எழுத்து நடை மிகவும் அழகாக உள்ளது. உண்மையில் புத்தகங்களை விட சிறந்ததொரு நண்பன் ஒரு மனிதனுக்கு வெறொன்றுமாக இருக்க முடியாது!

    பதிலளிநீக்கு
  11. காமராஜ்!
    உண்மைதான்.


    ராம்ஜி!
    நல்ல எழுத்துக்களும் இந்த காலத்தில் நிறைய வந்து கொண்டு இருக்கின்றன.ஹிக்கின் பாதம்ஸுக்கு வெளியேவும் புத்தகங்கள் இருக்கின்றன.


    சந்தனமுல்லை!
    செகாவ் கதைகளை படித்திருக்கிறீர்களா!


    தீபா!
    நன்றி.


    ஆருரன்!
    நன்றி.


    மண்குதிரை!
    நன்றி.


    மங்களூர் சிவா!
    இருக்க முடிந்திருக்கிறது என்பதுதான் கதையின் மூலம் சொல்லப்படுவது....! (முயற்சிகள் எதுவும் பண்ணுவதாக உத்தேசம் உண்டா..!)


    அன்புடன் அருணா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.


    கதிர்!
    நன்றி.


    அ.மு.செய்யது!
    உற்சாகமளிக்கின்றன உங்கள் வார்த்தைகள்.
    //த‌னிமையை விர‌ட்டுவ‌த‌ற்கு நான் தேர்ந்தெடுத்த‌ வ‌ழி புத்த‌க‌ங்க‌ள் தான்.//
    உங்களின் பதிவுகளில் இருக்கும் மொழிநடை அதை சொல்லாமல் சொல்கிறதே...!

    யாழினி!
    வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப நல்ல பகிர்வு மாதவன்!சொல்லவேண்டிய விஷயத்தை சொல்லவேண்டிய ஆள் சொல்வது பொருத்தமாய் இருக்கு.பாத்திரத்திற்குள் பொருந்தி கிடக்கும் திரவம் போல.

    பதிலளிநீக்கு
  13. நாஞ்சில் நாதம்!
    நல்ல போதை அது.

    ராஜாராம்!
    ஆஹா...! ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!