இன்னும் கிளிகள்

 

 

 

 

 

 

ருநாள்
தெருக்குழந்தைகளின்
கூச்சலோடும்,
ஆரவாரத்தோடும்
வந்த
கவர்ன்மெண்ட் ஜீப்
வாலகுருவின் கனவு,
பஞ்சவர்ணத்தின் உலகம்,
குழந்தைகளின் விளையாட்டு
என எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்டது.

டாவாலியோடு சொஸைட்டிக்காரர்கள் திடுதிப்பென இறங்கியது கண்டு குருத்துவும், பஞ்சவர்ணமும் அதிர்ந்து போனார்கள். செய்தி கேள்விப்பட்டு ரைஸ்மில்லில் இருந்து வாலகுரு பதறி வந்தான். சொஸைட்டி செக்ரட்டரி ஏற்கனவே பார்க்கும்போது அவனிடம், “தம்பி! அப்பா வாங்குன கடன் கொஞ்சங்கூட கட்டாம ஏகப்பட்ட பாக்கியாய்ட்டு. எப்படியாவது கட்டிரு”

என்று சொல்லியிருந்தார். “சரி... சரி” என்று தலையாட்டி மறந்திருந்தான். மறக்கவில்லையென்றாலும் அடைத்திருக்க முடியாது. ஆனால் கொடூரமாய் இப்படி வந்து நிற்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

 

 

பானைச் சட்டிகளைத் தூக்கப் போனார்கள். “அய்யா... அய்யா...” என்று கெஞ்சினான். யார் யாரெல்லாமோ வீட்டு முன்னால் கூட ஆரம்பித்தார்கள். “நாங்க என்ன செய்ய முடியும்.... மேல இருந்து அதிகாரிங்க வந்திருக்காங்க “ செக்ரட்டரி சொன்னார். அவர் கைகாட்டிய அதிகாரி காலில் போய் வாலகுரு விழுந்தான். நெஞ்சில் ஓங்கி அடித்து அழுத குருத்து “இத வச்சிட்டு எங்கள விட்டுருங்களய்யா...” என வாலகுருவைத் தூக்கினாள். டாவாலி காணச் சகிக்காமல் கண்ணெல்லாம் நீர் முட்ட முகத்தைத் திருப்பிக் கொண்டார். குழந்தைகள் அலறிய வீடு தெருவையே அரற்றியது. அந்த அதிகாரி குருத்துவின் கைகளைத் தடுத்து “மொதல்ல அத கழுத்துலப் போடுங்கம்மா... கழுத்துலப் போடுங்கம்மா..” என தொண்டை அடைக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். குருத்து வெறி பிடித்தவள் போல நின்று “போங்க... இத எடுத்துட்டுப் போங்க...” என கத்தினாள். அவர்கள் வாலகுருவைத் தூக்கி நிறுத்தி பத்துநாள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் வந்து கடனை அடைக்குமாறும் சொல்லிச் சென்றார்கள். தெருக்குழந்தைகள் திக்பிரமையில் நிற்க, ஜீப் வெறுமனே உறுமிப்போனது.

 

 

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தேற்றிவிட்டுப் போனார்கள். சுவரில் பல்லிகளைப் போல ஓட்டியிருந்த குழந்தைகளை இழுத்து மடியில் போட்டு குருத்து அழுதுகொண்டிருந்தாள். வாலகுரு எங்கேயோ வெறித்துப் பார்த்திருந்தான். அரிசி பாதி வெந்தும். வேகாமலும் அடங்கியிருக்க, அடுப்பு வெறும் புகையை கசிந்து கொண்டிருந்தது. பஞ்சவர்ணம் எழுந்து திரடு நோக்கிப் போனாள்.

 

 

கூலிவிளை தாண்டி திரடு கொஞ்சம் பனைகளும், ஒரு மாமரமும், அங்கங்கு உடைமரங்களுமாய் இருந்தது. மாமரத்தடியில் உட்கார்ந்து கொண்டாள். வெளிறிய முகத்தோடு எல்லாவற்றையும் உற்றுப்பார்த்தாள். அதன் வடக்கு மூலையில் அடையாளங்கள் உதிர்ந்து போய் தனியாயிருந்தது அந்த மொட்டைப்பனை. உறைந்துபோன அதன் மௌனத்தில் இரவுகளும், பகல்களும் உருக்கத்தோடு வந்து போயின. மௌர்ணமியின் இளம் ஓளியில் ஊர், காடு யாவும் அழகின் மயக்கத்தில் மிதக்க, அந்தப் பனை மட்டும் ஒற்றைக் கோடாய் தரையிலிருந்து விறைத்து நிற்கும். பிறகு அதன் வாழ்க்கையிலும் ஒரு அர்த்தம் வந்தது. “ஆச்சி... ஆச்சி... அந்த மொட்டைப்பனைல முனி இருக்காமே... அப்படியா” என்று பேரன்மார்கள் ஒருநாள் அவளிடம் கேட்டார்கள். “யார் சொன்னா... ஒங்கள மாரி ரெண்டு கிளிப்பிள்ளைங்கதான் இருக்கு..” என்று அவர்களைக் கட்டிப்பிடித்து பஞ்சவர்ணம் உச்சி முகர்ந்தாள். மொட்டைப்பனையின் உச்சியில் ஒரு பொந்தில் இரண்டு கிளிகள் தளிர்விட்டது போல முளைத்திருந்தன. அந்தச் சின்னப்பறவைகளின் “க்கீ...க்கீ..”சத்தங்கள் கீற்றுக்களாய் அந்தப் பிரதேசத்தையே கிழித்து ஓடின. மொட்டைப்பனையின் மௌனங்கள் உடைந்து சிதறின. இப்போது கிளிகள் எங்கோ போயிருக்க வேண்டும். மொட்டைப்பனை அவைகளின் வருகைக்காக காத்திருந்தது.

 

 

தினமும் மதியத்திற்கு மேல் கருப்பட்டிக்காப்பி குடித்து பஞ்சவர்ணம் இந்தக் கால்வலியிலும் திரடுபக்கம் ஒருநடை வந்து போய்விடுவாள். விழுந்துகிடக்கும் சுள்ளிகளையும், கொஞ்சம் பனை ஓலைகளையும் ஒரு சுமை சேர்த்து போவாள். கவட்டுக்கம்பு கட்டி உடம்பழங்களை உலுக்கி ஆடுகளுக்கு கொண்டு போய் போடுவாள். எப்போதாவது பேரன்மார்களும் கூட வருவார்கள். அங்கேயும் இங்கேயுமாய் ஆடவும் சாடவுமாய் இருப்பார்கள். போட்டி போட்டுக்கொண்டு மாங்காய் எறிவார்கள். ஒருதடவை அவர்கள் கவனமும், கல்லும் கிளிகள் பக்கம் திரும்ப அவை கலவரமடைந்து திரடு முழுக்க மேலே பறந்து... பறந்து... அவஸ்தையில் வீறீட்டன. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வீடே அலங்கோலமாகிப் போனதைப் போன்ற அவலம் நிறைந்ததாய்த்தான் அதுவும் இருந்தது. “பாவம்ப்பா...கிளிகள் விட்டுருங்க...” என்று பேரன்மார்களை அடக்கினாள்.

 

 

பஞ்சவர்ணத்தின் வாழ்க்கையில் இந்த பனைத்திரடு சாயங்கால உலகமாயிருந்தது. முப்பத்திரண்டு வருசங்களுக்கு முந்தி  சொர்ணவேலுவின் பின்னால் குனிஞ்ச தலையோடு இந்த ஊருக்கு வந்த புதிதில்  ஒரு சாயங்கால நேரத்தில்தான் முதல் தடவையாய் திரட்டிற்கு அழைத்து வந்தான். அவள் கையை அழுத்திப் பிடித்து “இது நம்ம இடம்” என்றான். அந்தக் கையை விடாமலேயே திரடு முழுக்கச் சுற்றி வந்தாள். அப்போது அந்த மொட்டைப்பனை தன் பச்சை ஓலைகளை விரித்து காற்றை வருடி விளையாடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து அந்தப்பனை அவளுக்குப் பழக்கம். சகல காலங்களிலும் அந்தப் பனை தன்னோடு கூடவே வந்த தோழியாய் அவளுக்குப் பிரமை உண்டு.

 

 

சொர்ணவேலு இறந்தபோது, வாழ்ந்த காலம் பூராவும் அவளோடு சண்டை போட்டு.... போட்டே அவர் விட்டுப்போன சோகம் அவர் காலடி கேட்காத வீடு முழுவதும் அடர்ந்திருந்தது. முடிந்தவரையில் வாலகுருவும், குருத்துவும் பஞ்சவர்ணத்தின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வது என்றிருந்தார்கள். சாப்பாடு, காப்பி எதுவானாலும் அவளுக்குத்தான் முதலில் கொடுக்கப்படும். அதையும் அவளிடம் ஒருவார்த்தை கேட்டே செய்தார்கள். அதெல்லாம் அவளை தூரத்தில் கொண்டுபோய் நிறுத்தின மாதிரியே தெரிந்தது. திரட்டில் போய் உட்கார்ந்து மொட்டைப்பனையிடமிருந்தும், கிளிகளிடமிருந்தும் உறவின் புதிர்களை கற்றுக் கொண்டாள். பிறகு குழந்தைகளின் காலடி ஓசைகளில் பழைய தடங்கள் அமிழ்ந்து போக ஆரம்பித்தன. வெள்ளைப் புடவைகள் மெல்ல மெல்ல பழுப்பு நிறமடைந்து போயின. காலத்தையே கலைத்தையேப் போட்ட மாதிரி இருக்கிறது இப்போது. மாமரம் என்ன செய்வதென்றறியாமல் நின்றது போலிருந்தது. அதன் கண்ணீராய் நிழல் சிந்திக்கிடந்தது.

 

 

வாலகுரு அவளைத் தேடி வந்தான். பேரன்மார்களும் கூடவே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் “யப்பா... இந்தத் திரட்டை வித்துருவோம்ப்பா....” சொல்லிக்கொண்டே பெருங்குரலெடுத்து அழுதாள். குழந்தைகளும் அழுதபடி ஆச்சியை வீட்டுக்கு அழைத்தன. கிளிகள் இன்னும் வரக்காணோம். மொட்டைப்பனை உயிரற்று இருந்தது. திரடுவிட்டு வரும்போது பஞ்சவர்ணத்தின் கால்கள் இருந்த கொஞ்சநஞ்ச வலுவுமிழந்து போயிருந்தன.

 

 

வாலகுருவுக்கு நினைவிலிருக்கிறது. “அம்மா! அந்த பனைத்திரட்டை வித்துருவமா..” செலவுக்கு அறவே பணம் இல்லாத போது கேட்டிருக்கிறான். “வேண்டாம்பா..இருந்துட்டுப் போவட்டுமே. இதுலயா நாம வாழ்ந்துரப் போறோம்?” என்று பஞ்சவர்ணம் சொல்லியிருக்கிறாள். மாவு அரைக்கவும், நெல்லு குத்தவுமாக அல்லர் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கும் ரைஸ்மில் டிரைவர் வாலகுரு தன் கனவுகளை யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொண்டான். அதே ரைஸ்மில்லில் வாட்டு போட்டு அரிசி வியாபாரம் செய்ய நினைத்த சந்தோஷம் கூட இனி இருக்காது. இதே வேலையில் கிடைக்கும் குருணை அரிசியிலும், எதோ கொஞ்சம் பணத்திலும்தான் வாழ்க்கையை தள்ளியாக வேண்டும். திரடு இல்லாமல் அம்மா எப்படி வீட்டிலேயே இருப்பாள் என்பதை யோசிக்க முடியவில்லை. இதே பாதைகளில் அம்மா எத்தனை தடவை வந்து போயிருப்பாள்.

 

 

பனைமரங்கள் எல்லாக் காலங்களிலும் பஞ்சவர்ணத்திற்கு வேலைகள் வைத்திருந்தன. பைனி காலத்தில் காத்தவராயன் ‘அம்மோய்’ எனக் குரல் கொடுத்து விடியும் முன்னரே தலைக்கயிற்றோடும், சுண்ணாம்புக் குடுவையோடும் பைனி இறக்கிவர தெருவில் நட்ந்து போவான். இவள் பின்பக்கம் போய் அந்த டாங்கி அடுப்பைத் தயார் செய்வாள். உள்ளே இருக்கும் சாம்பலை அள்ளி முந்தின நாள் பொறுக்கி வந்த சுள்ளிகளைப் பக்கத்தில் வைத்துக் கொள்வாள். பொறுமையாய்த் தீ போட்டு காய்ச்சுவாள். கொதித்து, வற்றி, செம்பாகாகி, குமிழ் குமிழ்களாக வெடித்து கருப்பட்டி வாசம் ஊர் பூராவும் பரவும். பஞ்சவர்ணம் அனுபவித்தபடியே சிரட்டைகளில் ஊற்றுவாள். வாரத்துக்கு நாலு கொட்டான் கருப்பட்டி சேர்த்து விடுவாள். கடையில் போட்டு வரும் பணத்தில் காத்தவராயனுக்குக் கொடுத்தது போக கொஞ்சம் மிஞ்சும். நுங்கு சீசனில் காத்தவராயன் குலை குலையாய் வெட்டி மந்தைக்கடையில் போய் விற்பான். இளம் நுங்குகளாய்ப் பார்த்து குழந்தைகளுக்கு கொடுப்பான். தொடர்ந்து வரும் பனம்பழங்கள் காலம். சுட்டு,  தோலுரித்து, கொட்டைகள் பிரித்து குழந்தைகளுக்குக் கொடுப்பாள். சப்பிக்கொண்டே இருப்பார்கள். வாய், கை எல்லாம் பிசுபிசுவென ஆனாலும் அந்த மனமும், இனிப்பும் அன்றெல்லாம் கூடவே இருக்கும்.
அத்தோடு முடியாது. பள்ளந்தோண்டி, கொட்டைகளைக் கொட்டி, மிதித்து, பாத்தி கட்டி, தினமும் தண்ணீர் ஊற்றுவாள். கிழங்கு பிடுங்கும் காலத்தை கணக்குப் பார்ப்பாள். இதெல்லாம் தந்ததுதானே இதுவும் என்று மொட்டைபனையைப் பார்க்கும்போது நினைத்துக் கொள்வாள். நல்ல நாளில் சாமி கும்பிட்டு, காத்தவராயனைக் கூப்பிட்டு தோண்டி தரச் சொல்வாள். கொட்டைகளை வெட்டி தவணு கொடுப்பாள். கிழங்கு உரித்து, மஞ்சள் பூசி அவிப்பாள். குழந்தைகள் அடுப்பு பக்கத்தில் வந்து காத்திருக்கும். வீடு நெருங்கும்போது இனி பைனிக்கும், பழத்திற்கும், கிழங்குக்கும் இந்தக் குழந்தைகள் யார் வீட்டு வாசத்தையாவது பிடித்துக்கொண்டுதானே தெருவில் அலைவார்கள் என பெருமூச்சு விட்டாள். வீட்டு முன்னால் ஜீப் வந்துபோன தடம் இன்னும் அப்படியே இருந்து மிரட்டிக்கொண்டு இருந்தது.

 

 

அந்த வெள்ளிக்கிழமை ஏரலுக்குப் போய் பத்திரம் முடித்தார்கள். கொழும்புக்காரர் வாங்கியிருந்தார். ரொம்ப குறைந்த விலைக்குத்தான் போனது. சொஸைட்டி லோன் போக மூவாயிரம் போல்தான் மிஞ்சியது. சில்லறைக் கடன்களை அடைக்கத்தான் உதவும். பத்திரத்தில் கையெழுத்திடும்போது பஞ்சவர்ணத்தின் கைகள் நடுங்குவதை வாலகுரு கவனித்தான். நல்லபடியாக முடித்த சந்தோஷத்தில் கொழும்புக்காரர் ஒரு கிலோ நம்மூர் மிட்டாய் வாங்கித் தந்தார். வீட்டில் குழந்தைகள் ஆசையுடன் சாப்பிட்டன. எல்லோருக்குள்ளும் ஒரு மௌனம் வந்து அடைந்திருந்தது.

 

 

அதற்கு அப்புறம் பஞ்சவர்ணம் திரடுபக்கம் போகவேயில்லை. யார் யாரெல்லாமோ அங்கு வந்தார்கள். பகலில் மாமரத்தடியில் சீட்டு விளையாடினார்கள். பைனி காலத்தில் காத்தவராயன் சுண்ணாம்புக்குடுவையைக் கொண்டு செல்வதில்லை. பனை ஓலையில் பட்டை போட்டுக் குடிக்காமல் பிளாஸ்டிக் சொக்குகளில் காசு கொடுத்து குடித்தார்கள். திரடு முழுக்க புளிப்பு ஏப்பங்கள் சூழ்ந்திருந்தன. மொட்டைப்பனை கேள்விகளை சுமந்தபடி கூனிப் போனது. கிளிகள் அதை புல்லாங்குழலாக்கி அந்தியில் சோகம் பாடின. வாலகுருவின் கண்களுக்குக் கீழே கனவுகள் கருவளையங்களாகிக் கிடந்தன.

 

 

அந்தக் கார்த்திகையும் ஊர் முழுவதும் இரவில் விளக்குப் புள்ளிகளை இட்டிருந்தது. சைக்கிள்கடை ராசய்யா வந்து சொன்னான். மொட்டைப்பனையை அன்று வெட்டி விட்டார்களாம். சிவன் கோவில் முன்னால் அதனை சொக்கப்பனையாக கொளுத்தப் போகிறார்களாம். பேரன்மார்கள் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அதைப் பார்க்க ஓடினார்கள். பஞ்சவர்ணம் கேட்டுக்கொண்டு படுத்தேக் கிடந்தாள். அன்றைக்கு இரவில் சொர்ணவேலுவின் ஞாபகங்களாய் வந்தன. நெடுநேரம் க்ழித்து வந்த பேரன்மார்கள் சொக்கப்பனை உயரமாய் எரிந்ததையும், கூட்டத்திற்குள் போட்டிப் போட்டுக்கொண்டு சாம்பலை எடுத்து வந்ததையும் வீரக்கதைகளாய் குருத்துவிடம் சொன்னார்கள்.

 

 

காலையில் எழுந்ததும் பஞ்சவர்ணம் அந்தச் சாம்பலை போய்ப் பார்த்தாள். உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். எதோ முணுமுணுத்தாள். வெளியே கிளிகளின் சத்தம் கேட்டது. வாசல் வந்து அண்ணாந்து பார்த்தாள். கிளிகள் தெரியவில்லை. சத்தங்கள் மட்டும் வந்துகொண்டே இருந்தன. பக்கத்தில் எதோ ஒரு மரத்திற்கு வந்திருக்க வேண்டும்.

 

(1994ல் எழுதிய கதை)

 

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒரு கிராமத்து குடியானவனின் வாழ்க்கையை முன்நிறுத்தியது!

    பதிலளிநீக்கு
  2. இந்த கதையை வெகு காலத்திற்கு முன்பே படித்திருக்கிறேன். அப்பொழுதும் சரி இப்பவும் சரி இது உண்மை நிகழ்ச்சியாகவே தெரிகிறது. மனதுக்குள் என்னை அறியாமலேயே ஒரு துக்கம். ஏன் என்று புரிய வில்லை!

    பதிலளிநீக்கு
  3. பல வெருடங்களுக்கு முன்பே படித்திருக்கிறேன். அப்பவும் சரி இப்பவும் சரி ஒரு உண்மை நிகழ்ச்சியாகவே எனக்கு படுகிறது. ஏதோ மந்துக்குள் என்னை அறியாமல் ஒரு வருத்தம். ஏன் என்று புரியவில்லை

    பதிலளிநீக்கு
  4. \பக்கத்தில் எதோ ஒரு மரத்திற்கு வந்திருக்க வேண்டும்\
    izhappukal thaandiyum thodarum vaazhkai,izhappukalil innum nerukkamaakum uravukal ena ethaiethaiyo yosikka seykirathu.

    பதிலளிநீக்கு
  5. பனங்கிழங்கோ நுங்கோ சாப்பிடும் போதெல்லாம் இந்தக் கதை கண்டிப்பாய் நினைவுக்கு வரும்.

    உங்கள் கதைகளில் ரொம்பப் பிடித்தவற்றுள் இது முக்கியமானது.

    //வீடு நெருங்கும்போது இனி பைனிக்கும், பழத்திற்கும், கிழங்குக்கும் இந்தக் குழந்தைகள் யார் வீட்டு வாசத்தையாவது பிடித்துக்கொண்டுதானே தெருவில் அலைவார்கள் என பெருமூச்சு விட்டாள்.//

    இதை எப்போது படித்தாலும் கண்கள் கலங்குகின்றன.

    பதிலளிநீக்கு
  6. /
    மனதுக்குள் என்னை அறியாமலேயே ஒரு துக்கம். ஏன் என்று புரிய வில்லை!
    /

    எனக்கும்
    :(

    பதிலளிநீக்கு
  7. ப்ரியங்கள் நிறைந்த என் அண்ணாச்சி,இந்த அண்ணாச்சி ஏன் எப்படி வந்ததுன்னு தெரியாது.பிரியங்கள் மிகும் போது "என்னை பெத்த அப்பு"ண்ணு மகனை ஏந்தி கொஞ்சுவது கூட உண்டுதானே மாதவன்..தாங்க முடியலை...இவ்வளவு கஷ்ட்டபட்டதில்லை சமீபமாக.தனி தனியாக வரிகளை சிலாகிக்க முடியாது."பத்திரத்தில் கையெழுத்திடும்போது பஞ்சவர்ணத்தின் கைகள் நடுங்குவதை வாலகுரு கவனித்தான்"என்பது போல் இதை தட்டச்சு செய்ய முடியாது கைகளும் நடுங்கி வருகிறது...இதை,உங்களை எப்படி இவ்வளவுகாலம் பார்க்காமல் தள்ளிபோனது மாதவன்?தள்ளி தள்ளி போய் கொண்டிருக்குதான்...தேடுவது எதுவும்.பிறகு கை சேரும்போதும் தாங்க வலுவில்லாது போய் விடுகிறது.இப்பவாவது கிடைத்தீர்களே...வெகு காலம் வரையில் உள்ளிலியே ஊற போட்டு வைத்திருக்கும் மனசு--இந்த"இன்னும் கிளிகளை"வாழ்த்துக்கள் தோழரே...

    பதிலளிநீக்கு
  8. வால்பையன்!
    மனிதன்!
    உண்மையான உண்மை!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பொ.வெண்மணிச்செல்வன்!
    சந்தோஷமாயிருக்கிறது. பதிவுகளைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறீர்களா? அப்பாவைப் போல் எப்போது கதை எழுதப் போகிறீர்கள்?


    தீபா!
    உனக்கு இந்தக் கதை பிடிக்கும் என்பது தெரியும். இருந்தாலும் எழுத்துக்களில் பார்க்கும்போது கூடுதல் சந்தோஷம்.

    மங்களூர் சிவா!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பா.ராஜாராம்!
    நெகிழ்ச்சியாக இருக்கிறது. அருகில் வந்து கையைப் பிடித்துப் பேசி விட்டீர்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மீண்டும் தேவையாக இருந்தது மாதவன்.வந்து வாசித்து போனேன்.மீண்டும் பத்தாமல்தான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  11. எப்படி பின்னூட்டம் போடுவதென்று தெரியாமல் குழம்பி போயிருக்கிறேன்.காரணம் என்னுடைய வார்த்தைகள் பலவீனமானவை.இப்படியும் எழுதலாம் என்று பார்த்து பிரமித்து போய் நின்று விட்டேன்.

    வாழ்விலிருந்து கிள்ளியெடுத்த கதை !!இறக்கும் வரை இது போன்ற கதைகளின் பாதிப்பு மனதை விட்டு அகலாது.

    நீங்க‌ள் ஒரு கால‌த்தை வென்ற‌ க‌தை சொல்லி !!!

    பதிலளிநீக்கு
  12. ராஜாராம்!
    மீள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    செய்யது!
    உங்கள் எழுத்துக்கள் பலவீனமானவை என்று சொல்ல வேண்டாம். அதை அனுபவித்து படித்திருக்கிறேன் நான்!

    பதிலளிநீக்கு
  13. வாசித்த பிறகுதான் (மனம்வலித்ததால்) தோன்றியது வாசிக்காமலே இருந்திருக்கலாம் என்று.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!