ஆகஸ்ட் பதினைந்தும் நமது கொண்டாட்டங்களும்!










சுதந்திரதினம் வருவது குறித்து இரண்டு மூன்று நாட்களாய் இந்த மீடியாக்கள் கொடுக்கிற செய்திகள் திகிலூட்டக்கூடியவையாகவே இருக்கின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் பதற்றத்தையே தருவிக்கின்றன. ஏறக்குறைய பன்றிக்காய்ச்சலுக்கு நிகரானவையாக இருந்தன. இப்படிச் சொல்லிக்கொள்ள ஒன்றும் வெட்கம் தேவையில்லை போலிருக்கிறது.

 

நிலைமை இப்படி இருக்கையில், யாரும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க என்ற ரீதியில் “சுதந்திரதினக் கொண்டாட்டங்கள்” என இந்த தொலைக்காட்சிகள் பிரளயம் வந்ததாய் அலறிக்கொண்டே இருக்கின்றன. “கப்பல் ஏறிப் போயாச்சு..” என்று இந்தியன் பாடலையே ஆளாளுக்குத் திரும்ப திரும்ப ஒளிபரப்புவதற்கு, கப்பலோட்டிய தமிழனிலிருந்து ஒரு பாடலை ஒரே ஒரு முறையாவது ஒளிபரப்பலாமே என்று ‘ரசனையும் விவஸ்தையுமில்லாமல்’ யோசிக்க வேண்டியிருக்கிறது.



பத்திரிகைகளில் அரசியல் தலைவர்களின் சுதந்திர தினச்செய்திகள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் நம் நடிக நடிகையரின் சுதந்திர தினச் செய்திகள் வர இருக்கின்றன. “கொக்குப் பறக்குதடி பாப்பா நீயும் கோபமின்றி கூப்பிடடி பாப்பா” என்று ஆரம்பித்து பாடல் முழுவதும் வெள்ளையனை கொக்காக பாவித்து நாடக மேடைகளில் பாடி, விடுதலை வேட்கையை வளர்த்து, 28 முறை சிறை சென்று, மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே உயிர்நீத்த மகத்தான கலைஞர் விஸ்வநாததாஸின் வழித்தோன்றல்கள் அல்லவா இவர்கள்! அதற்கான மரியாதை இப்படி கொடுக்கப்பட வேண்டியதுதான்.

 

சரி விடுங்கள். சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் குறித்து தமிழ் இலக்கியத்தில் நம் அருமைக்குரியவர்கள் சிலர் பதிவு செய்திருக்கிறார்கள். அதனை இந்த நாளில் நினைவு கூறவும், உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் தோன்றியது.....

 

ந.பிச்சமூர்த்தியின் கவிதை : வெள்ளிவிழா

 

 

சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு
மெரினாவில்
காந்தி சிலைமுதல்
விவேகானதர் சிலைவரை
சவுக்கு முளை அடித்து
குறுக்குக் கழிகட்டி
வேடிக்கை பார்க்கவரும் வெள்ளம்
அணிவகுப்பை அழிக்காமல்
வெற்றிக்கு வித்திட்ட காண்டிராக்டர்
மறுநாள் கணக்குப் பார்த்தார்
நல்ல ஆதாயம்
மக்கள் கணக்குப் பார்த்தார்
விழாதான் ஆதாயம்
காலைக் கருக்கிருட்டில்
சுள்ளி பொறுக்க வந்த கிழவிக்கு
சவுக்குப் பட்டைகளை
உரித்தெடுத்துக்க்கொண்ட போது
ஆளரவம் கேட்டதனால்
ஆதாயம் குறைப்பிரசவம்

 

 

கி.ராவின் சிறுகதை : வேட்டியிலிருந்து......

 

......அவர்கள் பாரத நாட்டின் சுதந்திரதின வெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாட ஊருக்குள் பணவசூல் செய்கிறார்கள். இப்போது இவரை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். ஏதோ இவர் நிறைய அள்ளிக்கொடுத்து விடுவார் என்று நினைத்து வரவில்லை. சுதந்திரத்திற்காக இவர் ஜெயிலுக்குப் போகாவிட்டாலும் உதைபட்டவர் அல்லவா? தூங்கா நாயக்கருக்கு இன்னது செய்வது என்று தெரியவில்லை. பரபரப்பாக எழுந்து நின்று வேட்டியின் பிய்ந்த கிழிசலை மறைத்துக்கொண்டு வரவேற்கத் தயாரானார்.....

 

 

கிருஷ்ணநம்பியின் சிறுகதை :  சுதந்திரதினத்திலிருந்து......

 

 

சின்னக் காம்பவுண்டின் மத்தியில் ஓங்கி வளர்ந்த ஒரு கம்பம். உச்சியில் மிகப்பெரிய தேசக்கொடியை ஏற்றி வைக்க கலெக்டர் வருகிறார்.....

 

...பள்ளிக்கூடத்து சுவரெல்லாம் புதிதாக வெள்ளையடித்திருக்கிறார்கள். அசிங்கம் பிடித்த ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனுக்கு புத்தாடை உடுத்திவிட்டது போல் காட்சியளிக்கிறது.....

 

...வாசலில் ஹாரன் சத்தம் கேட்கிறது. ஓ! கலெக்டர் வந்திட்டார்....

 

அந்த பதினைந்து பேரில் தானும் ஒருவனாகயில்லையே என்று கருப்பையா வருந்துகிறான்.... தான் கருப்பாக இருப்பதால் டிரில் வாத்தியார் தன்னை தேர்தெடுக்கவில்லையென்று கருப்பையாவின் மனம் நம்ப மறுக்கிறது..... கொடிக் கம்பத்தின் அருகில் அவர்களோடு நின்று சல்யூட் பண்ணினால் எவ்வளவு நன்றாக இருக்கும்......

 

திடுதிப்பென மழை தூறத் தொடங்கி விடுகிறது. கலெக்டர் அவசர அவசரமாக தன் காரை நோக்கி விரைகிறார். மற்றவர்களும் ஒடுகிறார்கள்......

 

அன்று அதுவரையில் கிட்டாத எதோ ஒன்று அந்த மழையில் நனைந்துகொண்டு ஓடுகையில் கிட்டிவிட்டது போல உணர்கிறான் கருப்பையா.

 

பி.கு:

இதுபோல தமிழ் இலக்கியத்தில் மேலும் பதிவுகள் இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் சிறப்பாயிருக்கும்.

 

*

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சுதந்திரதினக் கொண்டாட்டங்களை விட அதன் பாதுகாப்புக்கு அதிகம் மெனக்கெடுவது எவ்வளவு முரண்பாடானது என்பதை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    எடுத்துக் காட்டியுள்ள இலக்கியப் பதிவுகள் மூன்றும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  2. ungkaludaiya ezhuththum

    tha(?) pi, kira, kirushnan nabbi

    aakiyoorin padaippum arumai sir.

    பதிலளிநீக்கு
  3. மங்களூர் சிவா!
    தீபா!
    நன்றி. சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    மண்குதிரை!

    த.பிச்சமூர்த்தி என்று தவறுதலாக எழுதிவிட்டேன்.இப்போது சரி செய்துவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. After Independece we have acheived lot many things in all the fields. So we should be proud that we have used the independence very well.

    Tamil has been growing, Cinema has grown, Literature has gone, medical, spiritual, science, sports, economy, education in all fronts we have grown.

    பதிலளிநீக்கு
  5. அய்யா சாமீ நான் கூடத்தான் வெள்ளையனை விரட்டிய இலக்கியம் எழுதி இருக்கேன். கொஞ்சம் கண்டுகுங்க!
    http://abiappa.blogspot.com/2009/08/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  6. அருமையான பகிர்தல் மாதவராஜ்...

    சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. சுதந்திர தின வாழ்த்துகள்!!
    //பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் பதற்றத்தையே தருவிக்கின்றன. ஏறக்குறைய பன்றிக்காய்ச்சலுக்கு நிகரானவையாக இருந்தன.//

    :-)
    பகிர்வுகள் அருமை!! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //கப்பலோட்டிய தமிழனிலிருந்து ஒரு பாடலை ஒரே ஒரு முறையாவது ஒளிபரப்பலாமே என்று ‘ரசனையும் விவஸ்தையுமில்லாமல்’ யோசிக்க வேண்டியிருக்கிறது//

    அருமை தோழா

    பதிலளிநீக்கு
  9. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  10. பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே ~ புலமைப்பித்தன்
    http://www.youtube.com/watch?v=BefkDBj5gSw

    90 வயதில் டி. கே. பட்டம்மாள்: ஜனகணமன தேசிய கீதம்
    http://www.youtube.com/watch?v=wQGaVdZsMy4

    அன்புடன்,
    நா. கணேசன்

    பதிலளிநீக்கு
  11. வெள்ளையனை விரட்டிய இலக்கியம்
    http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  12. அருமையான பகிர்தல் மாதவராஜ் சார்

    பதிலளிநீக்கு
  13. ஏதோ நீங்க இந்த மாதிரி பதிவு போட்டது கொஞ்சம் ஆதங்கம் தணிஞ்ச மாதிரி இருக்கு.

    சுதந்திரதின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. சரியாக மனதில் சட்டென்று பட்ட விடயம் தான். நீங்கள் எழுதி உள்ள கதைகள் மனதை தொட்டன.

    இந்த அவலம் உடனே நினைவுக்கு வந்தது.
    http://abhilashsuryan.blogspot.com/

    Independence Day Reading

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!