Type Here to Get Search Results !

ராகுல் காந்திக்கு இன்னொரு கடிதம்

நேற்று ராகுல் காந்தி அவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் எழுதிய கடிதம் தொடர்பாக ‘ராகுல் காந்திக்கு ஒரு கடிதம்’ என்றொரு பதிவிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய், இந்த தேசத்தின் பிரஜையாய், நான் எழுதிய கடிதம் இன்று.... இங்கே...

----------------------------------------

 

மிஸ்டர் ராகுல் காந்தி!

வணக்கம்.

இந்தக் கடிதத்தை நான் எழுதும் இந்த நேரத்தில் தாங்கள் எந்த கனவான்களோடு உரையாடிக்கொண்டு இருக்கிறீர்களோ, யாரெல்லாம் உங்கள் வரவேற்பறையில் காத்துக்கொண்டு இருக்கிறார்களோ அல்லது மேல்ச்சட்டை அணியாத எந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிக்கொண்டு இருக்கிறீர்களோ தெரியாது. காமிராக்கள் உங்கள் அசைவுகளை பதிவு செய்தபடி நிச்சயம் கூடவே இருக்கும். எந்தக் காமிராவின் கண்களிலும் படாமல் இந்த தேசத்தில் எத்தனையோ அவலங்கள் எல்லா நேரங்களிலும் அவை பாட்டுக்கு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

எல்லாப் பேருந்து நிறுத்தங்களிலும், கோவில்களிலும் கனவுகளற்ற விழிகளோடு பிஞ்சுக்கைகளால் கையேந்தியபடி நின்று கொண்டு இருக்கிறார்கள். ஒரு கணம் கூட நிற்க முடியாத நகரத்தின் சாக்கடையோரங்களில் பெருங் கூட்டமாய் குடும்பங்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். உணவு கொடுக்காத நிலத்தில் படுத்தபடி சுட்டெரிக்கும் சூரியனை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். வாழும் வழியற்று சொந்த ஊரைவிட்டு அழுக்கு மூட்டை முடிச்சுக்களோடு எதோ ஒரு இந்திய நகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தண்ணீருக்கும், விறகுக்கும் பல காத தூரம் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். நாளை என்னும் சிந்தனை விலக்கப்பட்டு கொலை செய்யவும், கொள்ளையடிக்கவும் அடியாட்களாய் இருட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கிறார்கள். பள்ளிக்கூட மணிச்சத்தம் அறியாமல் கல்குவாரிகளில், டீக்கடைகளில், தீப்பெட்டி ஆபிஸில், சாயப் பட்டறைகளில் நாள் முழுக்க வேலைசெய்து கொண்டு இருக்கிறார்கள். சுத்தம் செய்ய சாராயம் குடித்துவிட்டு மலக்கிடங்குகளுக்குள் இறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இவையெல்லாம் மிகச் சர்வ சாதாரணமான தினப்படி காட்சிகள். இதுபோல் ஓராயிரம் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதுதான் இந்தியா என்னும் உண்மையை உங்களால் ஏற்றுக் கொள்ளக் கஷ்டமாய்த்தான் இருக்கும்.

இதையெல்லாம் ஒரு காரணம் முன்னிட்டுத்தான் சொல்கிறேன். தேர்தல் சமயத்தில் தாங்கள் எத்தனையோ இலட்சக்கணக்கான கீ.மீ பயணம் செய்ததாக எல்லாப் பத்திரிக்கைகளிலும் கை உயர்த்திய உங்கள் விளம்பரங்களை பெரிய பெரிய அளவுகளில் பார்த்தேன். அப்போது, இதையெல்லாம் தாங்கள் உணர்ந்தீர்களா என்பதை கேட்டு அறிந்து கொள்ளத்தான். இன்னும் இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் தாங்கள் பயணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அப்போதாவது தாங்கள் உணர்வீர்களா என்று அறிந்துகொள்ளத்தான்.

தஙகளுக்கான வசதியான வாழ்வைத் துறந்து, நாட்டு மக்களின் கஷ்ட நஷ்டங்களைக் கண்கொண்டு பார்த்தவர்கள், இந்த மண்ணில் மகத்தானப் பணிகள் செய்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். சித்தார்த்தன் என்னும் புத்தருக்கு ஞானோதயம் பிறந்தது இப்படித்தான். சமூத்தின் சாதாரண மக்களுக்காக அவர் இயக்கம் நடத்தி கொள்கைகள் வகுத்தார். அகிம்சையை போதித்தார். சென்ற நூற்றாண்டில் மகாத்மா காந்தி இந்தியக் கிராமங்களில் பயணம் செய்து, தேச ஆன்மாவை அறிந்து கொள்ள முயற்சி செய்தார். தன் மேல்ச்சட்டையைத் துறந்து நாட்டுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்தார். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று கண்டறிந்து சத்தியசோதனையாக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். மக்கள் அவர்கள் பின்னால் நின்றார்கள். இப்போது நிலைமை அதை விடவும் மோசமாய் இருக்கிறது. ஆனால் தாங்கள் எதுவும் புதிதாக கொள்கைகளை அறிவிக்கவில்லை. எதிர்காலம் குறித்து பெரும் கவலையோடு எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் நீங்கள் எதிர்காலத்தின் நல்வரவாக போற்றப்படுகிறீர்கள். இது உங்களுக்கே வியப்பாக இல்லையா? நன்றாக யோசித்துப் பாருங்கள்... நீங்கள் சொன்னது ஒன்றே ஒன்றுதான். அது, “மன்மோகன் சிங்தான் நம் நாட்டுக்குத் தகுதியான பிரதமர்’ என்பதுதான்.

உங்கள் எளிமை பெரிதாக போற்றப்படுகிறது. பதவியை விரும்பாதவர் என்று ஆரவாரமாய் புகழப்படுகிறது. எனக்கு அதில் ஒரு சந்தோஷமும் உண்டு. ஆர்ப்பாட்டமும், பகட்டுமே இங்கு இனி செல்லுபடியாகும் போலிருக்கிறது என்று வருத்தம் கொண்ட நேரத்தில் மிகச் சாதாரணமாக மக்களிடம் பேசிக்கொண்டு இருப்பவருக்கு செல்வாக்கு கூடுவது எதோ ஒருவகையில் சிறுநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் நீங்கள் இப்படி எளிமையாக தங்களைக் காட்டிக் கொள்ள எவ்வளவு செலவழிக்கப்படுகிறது? எல்லாம் இருந்தும் சாதாரணமாக இருப்பதோ அல்லது அப்படி தோற்றமளிப்பதோதான் இங்கு எளிமை என்று பறைசாற்றப்படுகிறது. என்ன செய்ய? அந்த வகையில் தாங்கள் கொடுத்துவைத்தவர்தான்!

அதே நேரம், இந்தியாவின் முழுத் தோற்றத்தை மறைத்துக் கொண்டு தங்கள் ஹைடெக் இந்தியாவின் அடையாளமாக முன் நிறுத்தப்படுகிறீர்கள். சிலிக்கான் மற்றும் செல்லுலாயிட் பிம்பமாக வரையறுக்கப்படுகிறீர்கள். இதில் உங்களுக்குச் சம்மதமா என்பதைத் தாங்கள் தெரிவிக்க வேண்டும். தங்கள் கணணி இந்தியாவின் கண்ணீர்க் கதைகளைச் சொல்கிறதா. தங்கள் பாட்டி இந்திரா காந்தி அம்மையாருக்கு, அவரது தந்தை எழுதிய கடிதங்களும், இந்த நிலப்பரப்பின் வழிவழியான வரலாறுகளும் அதில் கேட்கிறதா?வர்ண ஜாலங்களுக்குள் மிதந்து கொண்டு இருக்கும் தாங்கள் கொஞ்சம் கருப்பு வெள்ளைக்குள் சென்று வர யோசனை எதுவும் இருக்கிறதா? இதற்கு தாங்கள் மௌனம் சாதிப்பீர்களா அல்லது சிரிப்பீர்களா? 

இவைகளை நான் ஏன் கேட்கிறேன் என்றால், மிக முக்கிய நிகழ்வுகளும், சோகங்களும் நம்மைச் சூழ்ந்த வேளையில் நீங்கள் ஆலாய்ப் பறந்து ஓட்டு வேட்டை நடத்தினீர்கள். நம் பக்கத்தில் இலங்கைத் தமிழர் மிகப்பெரிய இனவெறிக்கு ஆளாகிக் கொண்டு இருந்தபோது தாங்கள் சிவகங்கையில் ஒரு தமிழ்க் குழந்தை ஒன்றை சிரித்தபடி தூக்கி வைத்துக் கொஞ்சி ஓட்டுக்களை சேகரித்தீர்கள். என்னால் சகிக்க முடியாத காட்சியாக இன்றைக்கும் நிழலாடிக்கொண்டு இருக்கிறது. ஒரு மாபெரும் பிரச்சினையை, சோகத்தை ஒரு தலைவர் இப்படியா சரிசெய்வார்? இதையேத்தான் உங்கள் பாட்டி செய்தார்கள். உங்கள் தந்தையும் செய்தார். நீங்களும் செய்வீர்களா?

இன்று உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் பெருநிறுவன முதலாளிகளிடம் ஒரு கேள்வியை நீங்கள் கேட்டுப்பாருங்கள். நீங்கள் தான் தேசத்தின் விடிவெள்ளி என்று பிரகடனமும், பிரச்சாரமும் செய்யும் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். “இதுவரையிலான இந்தியப் பிரதமர்களில் யார் உங்களுக்கு அறவே பிடிக்காது?” என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் தூக்கத்திலும் சொல்வார்கள் தயக்கமின்றி உங்கள் கொள்ளுத்தாத்தா, பண்டித ஜவர்ஹர்லால் நேரு அவர்களின் பெயரை. இத்தனைக்கும் அவர், இந்த தேசத்தின் சாதாரண மக்களுக்குப் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லைதான். அவர்களுடைய கோபம், முதலாளிகளின் பக்கம் முழுசாய் அவர் நிற்கவில்லையென்றுதான். அதே கனவான்களிடம் கேளுங்கள், தங்களுக்குப் பிடித்தமான இந்தியப் பிரதமர் யாரென்று?. முகம் மலர்ந்து சொல்வார்கள் டாக்டர் மன்மோகன் சிங் என்று. இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில்களுக்கும் இடையேதான் சுதந்திர இந்தியாவின் வரலாறு பிதுங்கிக் கொண்டு இருக்கிறது. முடிந்தால் அதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

எங்களுக்குத் தெரியும். தெரிந்தாலும் உங்களால் எதுவும் செய்ய முடியாது. அப்படி செய்யத் துணிந்தால் அடுத்த நாளே நீங்கள் அவதூறுகளாலும், வதந்திகளாலும் மிகக் கேவலமாக சித்தரிக்கப்படுவீர்கள். அத்தனை வல்லமை பெற்றிருந்த மகாத்மா காந்தி தன் கடைசிக் காலத்தில், இரண்டு வருடச் சுதந்திர இந்தியாவின் அனுபவத்திலேயே தெளிந்தவராய், “காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு, மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக மாற்ற வேண்டும்” எனச் சொன்னதற்கு என்ன எதிர்வினையாற்றினார்கள் இவர்கள்? இன்னும் கொஞ்ச காலம் காந்தி இருந்திருந்தால் இவர்களே பைத்தியக்காரப் பட்டம் கட்டி கைதட்டி சிரித்திருப்பார்கள். அதுவரை மகாராஜா என்றும், மதிநுட்பம் கொண்டவர் என்றும் இவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை தூசிதட்டி எடுத்ததும், ஒரே நாளில் மெண்டல் என்று கேலிசெய்யப்படவில்லையா? ஆம். மிஸ்டர் ராகுல் காந்தி, நீங்கள் இந்த முதலாளிகளுக்கு கைப்பாவையாக இருக்கும் வரை உங்களுக்கு ராஜயோகம்தான். அவர்களது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள உதவும் கருவியாக நீங்கள் இருக்கும் வரை இந்திய வானில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரம்தான். அவர்களை ஒரு வார்த்தை விமர்சித்தாலும், அடுத்த நிமிடமே எங்களோடு தூக்கி எறியப்பட்டு விடுவீர்கள். என்ன செய்வதாக உத்தேசம்?

இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. தாங்கள் என்ன செய்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இன்னும் உங்களிடம் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. இன்னொருமுறை பார்ப்போம்.

அன்புடன்
மாதவராஜ்

கருத்துரையிடுக

12 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. சமூகத்தின் பால் உங்களுக்கும் இருக்கும் அக்கறையும் சமுதாயத்தை பற்றிய அறிவுஜீவித் தனமும் இதில் வெளிபடுகிறது. இதை நாங்கள் உணர்ந்துக் கொள்ளவேண்டும் என்பது தான் உங்கள் நோக்கம் என்று புரிந்துக் கொள்கிறோம்.

  // காங்கிரஸையும், இந்த நாட்டையும் காக்க வந்த அவதார புருஷனாக ஒளிவட்டம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதை அனுபவிக்கவும், ரசிக்கவும் தயாராகிவிட்டார் ராகுல்காந்தி. //

  நீங்கள் சொன்ன கருத்துகள் தான். இந்தப் பதிவில் நீங்கள் ராகுல்காந்தியாகவும் பின்னூட்டமிடும் நாங்கள் எல்லாம் ஊடக உரிமையாளர்களாகவும் பெரு வியாபாரிகளாகவும் தெரிகிறோம். நாங்கள் கட்டும் ஒளிவட்டத்தை ரசிக்கவும் அனுபவிக்கவும் நீங்களும் தயாராகிவிட்டீர்கள். :))

  பதிலளிநீக்கு
 2. // ஒரு கணம் கூட நிற்க முடியாத நகரத்தின் சாக்கடையோரங்களில் பெருங் கூட்டமாய் குடும்பங்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.//

  Rightly Pointed out.... If any politician resolve this issue, I can call them as "MAHATHMA"

  I have an iota of doubt that you are trying to criticize Rahul from left wing perspective(please do not decide that I am Congress or X, Y,Z). My humble opinion is that we have a right, to criticize Rahul Gandhi only for his effectiveness / in-effectiveness but not for Rajiv, Indira or Nehru's actions.

  Rahul needs to overcome lots & lots of pitfalls or traps in Indian Politics.. If he successfully overcome all these and do something for the society hmmm will see…

  Hope time brings CHANGES..

  பதிலளிநீக்கு
 3. //
  ராகுல் காந்தி, நீங்கள் இந்த முதலாளிகளுக்கு கைப்பாவையாக இருக்கும் வரை உங்களுக்கு ராஜயோகம்தான். அவர்களது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள உதவும் கருவியாக நீங்கள் இருக்கும் வரை இந்திய வானில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரம்தான்.
  //
  நல்லதொரு கடிதம், இதை ராகுல் படிக்கப் போவதில்லை, படித்தாலும் எதுவும் மாறப் போவதில்லை என்ற போதிலும்.

  பதிலளிநீக்கு
 4. நடுவு நிலைமையோடு நீங்கள் எழுதவே மாட்டீர்களா மிஸ்டர் அறிவு ஜீவி?

  பதிலளிநீக்கு
 5. பேருந்தை விட்ட பிறகு புலம்பும் பயணி தான் எனக்கு ஞாபகம் வருகிறார், உங்கள் பதிவை படித்து.

  போன மாதம் அற்புதமான சந்தர்ப்பம் இருந்தது, உங்கள் தொகுதியில் மிக சிறந்த பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் தேர்தலில் நின்றார் (வைகோ) அவருக்கு வாக்கு அளித்து ஜெயிக்க வைக்காமல் இன்று உக்காந்து கடிதம், தந்தி அடிக்கிறேன் என்று.

  அடுத்து இப்படியே ஸ்டாலினுக்கு கடிதம், அழகிரிக்கு கடிதம், ரஜினிக்கு கடிதம் என்று கிளம்பி விடாதீர்கள் பதிவர்களே.

  குப்பன்_யாஹூ

  பதிலளிநீக்கு
 6. ஒரு சாமானியனின் அடிவயிற்றுக் குரல்!! அல்லது ஒரு குடிகாரனின் தன்னிலை மறந்த புலம்பல் எது வேனுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் ஆனாம் இது தானே உண்மை நிலை.

  பதிலளிநீக்கு
 7. மிஸ்டர் அசகுபிசகு,
  நடுநிலைமை என்று நீங்கள் எதை சொல்கிரீர்கள்
  // நவீன இந்தியாவின் நட்சத்திரம் ராகுல்//
  இப்படிச்சொன்னால் அது நடுநிலை அல்லவா?
  உண்மை என்ன என்பதை உணர திராணி இல்லாத உங்களைப்போன்ற அடிவரிடிகள் தான் இந்த நாட்டின் சாபக்கேடு.

  பதிலளிநீக்கு
 8. சஞ்சய் காந்தி!
  நிச்சயமாய் அறிவு ஜீவித்தனத்தை காட்டிக்கொள்ளவோ, ஓளிவட்டம் கட்டிக்கொள்ளவோ இதை எழுதவில்லை. உண்மையச் சொல்ல வேண்டும் போலிருந்தது. அவ்வளவுதான்.


  ரெங்கா!
  வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.


  ஜோ!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  அஸ்குபிஸ்கு!
  நானொன்ன்றும் அறிவு ஜீவி இல்லைங்க. மனசுக்குப் பட்டதைச் சொன்னேன்.

  பதிலளிநீக்கு
 9. குப்பன் யாஹூ!
  கிருஷ்ணய்யர் அப்படி எழுதியதால், இதை நான் இப்படி எழுத உந்துதல் வந்தது. பதிவர்களுக்கான எச்சரிக்கையை ரசித்தேன்.


  முத்துராமலிங்கம்!
  ஆமாங்க....  காக்கு மாணிக்கம்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. //நிச்சயமாய் அறிவு ஜீவித்தனத்தை காட்டிக்கொள்ளவோ, ஓளிவட்டம் கட்டிக்கொள்ளவோ இதை எழுதவில்லை. உண்மையச் சொல்ல வேண்டும் போலிருந்தது. அவ்வளவுதான்.//

  இதைத் தானே மீடியாக்களும் செய்கின்றன. ஏன் ராகுல்காந்தி இதை எல்லாம் அனுபவிக்கவும் ரசிக்கவும் தயாராகிவிட்டார் என குற்றம்சாட்டுகிறீர்கள்? நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.. மீடியாக்கள் ராகுலைப் பற்றி சொல்வதெல்லாம் மாயை.. என்ன கொடுமை சார் இது?. என்னைப் பொறுத்தவரை இன்னும் மீடியாக்கள் ராகுலுக்கு தகுந்த முக்கியத்துவம் தரவில்லை. அவரைப் புறக்கணிப்பதாகவே நினைக்கிறேன். அவரின் செயல்பாடுகளுக்கு மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மிக மோசம். அவர் என்றுமே கார்பொரெட்வாதியாகவே மாட்டார்.

  அரசியல்வாதிகள் ஒருநாளாவடு சாமானிய மனிதனைப் போல் வாழ்ந்தால் தான் நம்ம கஷ்டம் அவர்களுக்குப் புரியும் என்று சொல்வதும் நாம தான். அபப்டி ஒருவர் குடிசை வீட்டில் தங்கி, ரோட்டோரட் டீ கடையில் டீ குடித்து ஏழை வீட்டில் சாப்பிட்டால் அதை நாடகம் என குற்றம் சாட்டுவதும் நாம தான். அவர் என்னதான் சார் செய்வார்? எந்த விஷயமாக இருந்தாலும் அதை குறை சொல்வது நமக்கும் பழகிவிட்டது.. :)
  நடக்கட்டும்..

  பதிலளிநீக்கு
 11. சஞ்சய்!
  நான் கடந்தகால வரலாற்றிலிருந்துதான் விஷயங்களைப் பார்க்கிறேன்.
  மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் என்று பெரிதாக யாரும் இல்லை. அதை நிரப்ப ராகுல் காந்தி பயன்படுத்தப்படுகிறார் என்பது என் கருத்து. நம் மக்கள், தங்கள் கஷ்டங்களைத் தீர்க்க தமது கைகளை நம்புவதைவிடவும், யாராவது ஒரு தேவன் வர மாட்டாரா, அவரது கை அருள் பாலித்துவிடாதா என்றே காலம் தோறும் காத்துக் கிடக்கிறார்கள். அப்படியொரு தேவனாக, ராகுல் காந்தியை காட்டும் திட்டமிட்ட முயற்சிகள் நடக்கின்றன என்பது என் பார்வை. இது தவறாக, இருப்பின் நானும் ராகுல் காந்தியை நிச்சயம் வரவேற்பேன். காலம் எல்லாவற்றுக்கும் விடை சொல்லும் தானே...?

  பதிலளிநீக்கு
 12. //ராகுல் காந்தியை காட்டும் திட்டமிட்ட முயற்சிகள் நடக்கின்றன என்பது என் பார்வை.//

  ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அது இயல்பானதே. ஆனால் அதை பொதுப்பார்வையாக்க முயற்சிக்கும் போது தான் விவாதமும் விமர்சனமும். :) உங்கள் பார்வையை நீங்கள் எல்லோருக்குமான பொதுப் பார்வையாக்க முயற்சிப்பது போல் தோன்றியது. தவறாயின் மன்னிக்க. உங்களைப் போன்ற விஷய ஞானம் உள்ளவர்களிடம் தவறை ஒப்புக்கொள்ளவும் மன்னிப்புக் கேட்கவும் நான் தயங்குவதில்லை. எல்லாம் கற்றுக் கொள்ளும் வயதும் ஆர்வமும் தான். வேறொன்றுமில்லை.

  என்னைப் பொறுத்தவரையில், மோடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ராகுலுக்கு இல்லை.ஆகவே திட்டமிட்டு அவரை முன்னிலைப் படுத்துவதாக சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை சார். தேர்தலுக்கு முன்பு வரை அவரை எளனம் செய்தன எல்லா ஊடகங்களுமே. உபி, குஜராத், கர்நாடகா சட்டசபைத் தேர்தல் தோல்விகளுக்கு ராகுலையே பொறுப்பாளி ஆக்கின அத்தனை மீடியாக்களும். அவர் தீவிர அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளில் நடந்த தோல்விக்கு அவரைப் பொறுப்பாக்கின. அவரின் 5 ஆண்டுகள் தீவிர அரசியல் அனுபவத்திற்கு பிறகு உபியின் பெரும் வெற்றிக்கும் பிகாரில் காங்கிரசை ஏளனம் செய்தவர்களின் கூட்டணியை முறித்து அவர்களை மண்ணை கவ்வ செய்ததற்கும் எந்த கட்சியின் எந்த தலைவரையும் விட அதிக தூரம் மற்றும் அதிக கூட்டங்களில் கலந்துக் கொண்டு பிரச்சாரம் செய்து 206 இடங்கள் பெற முக்கியக் காரணமாக இருந்ததற்கும் ராகுலை உச்சத்தில் வைத்து முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை.

  முன்பு சட்டசபைத் தோல்விகளுக்கு கவர் ஸ்டோரி எழுதியும் ப்ரைம்டைமில் அவரைப் பற்றிய செய்திப் படங்களும் வெளியிட்டவர்கள் இப்போது அவரின் வெற்றிக்காக அதைவிட குறைத்தே செய்தி வெளியிடுகிறார்கள்.

  மிக முக்கியமான விஷயம்: அவர் ஜால்றா போடும் பெரும் தலைகளை அருகில் சேர்ப்பதே இல்லை. உட்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று சொல்லி மூத்த தலைவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுகிறார். பஞ்சாபில் மிக வெற்றிகரமாக இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்திக் காட்டி இருக்கிறார். இப்போது குஜராத்தின் தேர்தல் நடக்கிறது.

  ஆகவே அவர் எந்த திட்டமிட்ட முக்கியத்துவத்துக்கும் ஜால்றாவுக்கும் திட்டமிடவில்லை. அவருக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் இன்னும் மீடியாவில் கிடைக்கவில்லை என்பதே எங்கள் ஆதங்கம்.

  பதிலளிநீக்கு