இந்தத் தலைவலியை நிறுத்துங்களேன் யாராவது....

உடல்நலக் குறிப்புகளை இவ்வளவு இலக்கிய நயத்தோடும், சுவாராஸ்யத்தோடும், நல்ல மொழிநடையிலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நண்பர் எஸ்.வி.வி. வேணுகோபாலன் அதை மிக லாவகமாகச் செய்திருக்கிறார். வங்கி ஊழியர் பத்திரிகைக்காக, மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், எம்.டி.,(ஓமியோபதி) அவர்களது ஆலோசனைக் குறிப்புகளிலிருந்து எஸ்.வி.வேணுகோபாலன் எழுதியது இங்கே உங்களுக்காக.....

--------------------------------

 

உயர்திரு ஈ.ஆர்.வி அவர்கள் தமது கைத்துண்டை எடுத்து ராஜாவிற்குப் பரிவட்டம் கட்டுவது மாதிரி தமது தலையைச் சுற்றி ஒரு இரண்டு சுற்று சுற்றி அப்படியே ஒரு இறுக்கு இறுக்கி முடிச்சு போட்டது மாதிரி செய்து கொண்டு சுவரோரமாக உஸ்ஸ்....அப்பாடான்னு உட்கார்ந்திருக்கிறார்னு வையுங்கள்.  அண்ணனுக்கு செம தலைவலின்னு அர்த்தம். 'ஏய், யார்ரா அங்கே பளீர்னு டியூப் லைட்டை எரிய வச்சிட்டுப் போயிட்டீங்க, வந்து அணைச்சிட்டுப் போங்க,'  ன்னு குரல் கொடுக்கிறாரா, அப்ப உறுதியா அதுதான் விஷயம்.  அவரை விட்டுருங்க, பாவம்! ஏன், எதுக்குன்னு கேட்டுக் கழுத்தறுத்து பிரச்சனையை இன்னும் மோசமாக ஆக்க வேண்டாம்.  கொஞ்ச நேரம் போல விட்டீங்கன்னா அவராகவே எழுந்து அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவாரு. தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தாத் தானே தெரியும்.......

தலைவலி யாருக்குத் தான் வருவதில்லை?  நாட்டின் பிரதமரே ஆனாலும் வரும், முதலமைச்சர் என்றால் விடாது துரத்தும் என்பது சொல்லி விளக்க வேண்டியதில்லை.  தலைவலி தனி பிரச்சனையில்லை.  அது வேறு ஒரு பிரச்சனையின் அறிவிப்பு அவ்வளவுதான்.  பிரச்சனையைத் தீர்க்காமல் தலைவலிக்குத் தீர்வு கிடைக்காது. இது அடிப்படை அம்சம்.  இருக்கட்டும்.  ஒரு மூலையில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்படியே ஒரு நடை போய்விட்டுத் திரும்பி வரும்போது அதை மீண்டும் பேசிக் கொள்ளலாம்.

நல்ல மண்டையைப் பிளக்கும் கத்தரி வெயிலில் நகர்வலம் முடித்து வீட்டிற்குள் நுழைகிறீர்கள் என்றால், தலை 'விண் விண்' எனத் தெறிப்பதில் எந்த வியப்புமில்லை. ஏதோ வேலையின் துரத்தலில் ஒருவர் பசி நோக்காமல் கருமமே கண்ணாயிருந்தார் என்றால், திடீரென்று தலை பாரமாக அழுத்துவது போல் தோன்றுவது விநோதமில்லை. முதல் நாள் இரவு வழக்கம்போல் மின்வெட்டு, உறக்கமில்லாத இன்னோர் இரவு என்றால் மறுநாள் முழுக்க ஆளை உண்டு இல்லை என்று செய்துவிடுகிற தலைவலி ஏற்படுவது சட்டப்படி நியாயமில்லாமல் வேறென்ன? 

தலைவலி வர இதுதான் என்றில்லை, எத்தனையோ காரணங்கள் உண்டு. வேறு மாதிரியான 'நீராகாரம்', அதுதான் ஆல்கஹால் அயிட்டங்கள் தலைவலிக்கு நெருங்கிய உறவுமுறை. ஆள் அனுப்பிக் கூப்பிட்டுக் கொண்டுவந்து விடும். அதே மாதிரிதான் தூக்க மாத்திரைகள்.  பஞ்சணையில் காற்றுவரும் தூக்கம் வராது...ஒ என்றால், தூங்க விடாத பிரச்சனை என்ன என்று கண்டுபிடித்து அதற்கு வழி தேட வேண்டுமே தவிர, எப்படியாவது அன்றைக்குப் பொழுதுக்குத் தூங்கினால் போதும் என்று மாத்திரைகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு மறுநாள் எழும்போது அவர்களுக்கு முன்னால் தலைவலி எழுந்து உட்கார்ந்திருக்கும். 

பசியாறாத வயிற்றினால் தலைவலி வருவது போல, உண்ட உணவின் கழிவுகளை வெளியேற்ற இயலாமல் சிக்கல் ஏற்பட்டாலும் தலைவலி வரக்கூடும்.  மலச்சிக்கல், தலைவலிக்கு ஒரு காரணமாக அமையும்.  தேவையான அளவு தண்ணீவீர் குடிக்காமல் இருப்பது, நார்ச்சத்து உணவைக் குறைத்து அநியாயத்திற்கு மாவுப்பொருள் அல்லது எளிதில் செரிக்காத உணவுவகைகளைப் போட்டு நிரப்பி இருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்பட்டுள்ள மலச்சிக்கலுக்குத் தான் விடை தேட வேண்டுமே தவிர அதன் பிரதிபலிப்பாகத் தோன்றும் தலைவலிக்கு சிகிச்சை தேடிப் பயனில்லை. மலச்சிக்கல் மட்டுமல்ல, எந்தவிதமான வயிற்றுக் கோளாறு கூட தலைவலி மூலம் முன்னறிவிப்பு செய்யும்.  சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் தலைவலி ஏற்படும். உடலின் எந்த இடத்தில் பிரச்சனையிருந்தாலும் தலைவலி அதன் அறிகுறியாகத் தோன்றக்கூடும்.  சொல்லப்போனால், மலேரியா காய்ச்சலுக்கு முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும் தலைவலி.

பரபரப்பும் பதட்டமுமான சூழ்நிலை, வேலை பளு, ஓய்வற்ற வேலை என்பன உடல்சோர்வை ஒருபக்கம் கூட்டிக் கொண்டே போகுமென்றால், பார்க்கிற வேலைக்கு மரியாதை இல்லை அல்லது எதிலும் குற்றம் சொல்கிற மேலதிகாரம் துரத்திக் கொண்டே இருப்பது போன்றவை உளச்சோர்வை அதிகரிக்கின்றன.  பிறகென்ன, உள்ளேன் அய்யா என்று குரல் கொடுக்கிறது தலைவலி. பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் உடல் அயர்ச்சி காரணமாகவும், மன உளைச்சல் காரணமாகவும் தலைவலி ஏற்படுவதுண்டு. 

தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்திருக்கும் குழந்தையை ஓர் அதட்டல் போட்டு வீட்டுப்பாடம் முடி என்று பள்ளிக்கூடப் பையைத் தூக்கிப் பக்கத்தில் வைத்தால் அநேகமாக அடுத்த பத்தாவது நிமிடத்தில், 'அம்மா, தலையைத் தலையை வலிக்குதும்மா, காலையில் எழுந்து முடிச்சிடுறேனே' என்று குரல் எழும்புவது உறுதி.  நண்பர் ஒருவரது மகளுக்கு (இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர்!) திங்கட்கிழமை என்றால் 'டாண்' என்று தலைவலி ஆரம்பித்துவிடும்.  சரி, பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று விட்டு விட்டால், மதியம் போல் தலைவலி மின்னலாக மறைந்துவிடும். என்ன மருந்து கொடுத்துப் பார்த்தாலும் நிற்பதாக இல்லை. அப்புறம் துருவித் துருவி ஒரு புலன் விசாரணை நடத்தியபிறகு தான் தெரிந்தது, திங்கட்கிழமைகளில் நடக்கும் ஏதோ ஒரு சிறப்பு வகுப்பு என்றால் மேடத்திற்கு அலர்ஜி! அதற்கு டிமிக்கி கொடுப்பதற்குக் கை கொடுக்கிற தலைவலிக்கு என்ன என்று மருந்து கண்டுபிடிப்பது?

தலைவலியில் வெவ்வேறு வகைகள் உண்டு.  ஓய்வற்ற வேலையால் வருகிற தலைவலியைக் குறிப்பிட்டிருக்கிறோம்.  இதற்கு நேர் மாறாக, ஒரு சிலருக்கு வாரம் முழுக்க ஓயாத வேலை இருக்கும்போது எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஏழாவது நாள் அப்பாடா என்று ஓய்வெடுக்க உட்கார்ந்தால், தலைவலி வந்து விடும்.  தலைவலிக்கிறது, கொஞ்சம் சூடா காபி கொடு என்று கேட்டு வாங்கிக் குடித்து நிவாரணம் பெறுகிறவர்கள் நிறைய பேர்.  ஆனால், வேறு சிலருக்கு காபி குடித்த பிறகுதான் தலைவலி ஆரம்பிக்கும்.  பதட்டம் இருந்தால் தலைவலி என்று பார்த்தோம், இந்த வகை மனிதர்களுக்கு பதட்டம் விலகிய பிறகு தலைவலி துவங்கும்.  சிலருக்குத் தூங்காமல் இருந்தால் வருகிற தலைவலி இந்த அன்பர்களுக்கு நன்றாகத் தூங்கி எழுந்த பிறகு தோன்றும். 

இந்த வித்தியாசமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ஏற்படுவது 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி.  தலையின் ஒருபக்கமாக - அது எந்தப் பக்கமாகவும் மாறி மாறி -  ஏற்படுகிற இந்த ஒற்றைத் தலைவலி வந்தால்,  ஓய்வெடுக்கவும் விடாது பிறகு வேலை  செய்யவும் விடாது வாட்டி எடுக்கும். ஆள் அரவமற்ற ஓர் இருட்டறையில் போய் அக்கடா என்று உட்காரத் துடிக்கும். ஏதாவது சாப்பிடலாம் போலவும் தோன்றும். கொட்டாவி வரும். தலையை ஊசியால் குத்துவது போல் ஒரு மரத்துப் போன உணர்ச்சி தோன்றும். வெளிச்சம், ஓசை இதிலிருந்தெல்லாம் தப்பிக்க வேண்டும் என்று தோன்றும். அமைதியும், இருட்டுமான சூழல் எங்கே என்று மனம் தேடும்.

ஒற்றைத் தலைவலிக்கான காரணம் இதுதான் என்று சொல்ல இயலவில்லை என்றாலும், பொதுவாக வம்சாவழியாக வருவதாக இருக்கலாம். அஜினமாட்டோ  போன்ற செயற்கை சுவையூட்டி சேர்க்கப்பட்ட உணவுவகைகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள் நிறைய உட்கொள்வது கூட தலைவலிக்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் இளம் வயதிலேயே தோன்றினாலும் அது கவனிக்கப்படுவதில்லை.  பள்ளி நாட்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி, அடிக்கடி வாந்தி, கண்களில் பூச்சி பறக்கிற மாதிரியான உணர்வு போன்றவை அதன் பிரதிபலிப்பு என்றாலும், அது வேறு ஏதாவது பிரச்சனையாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதால், பிறகு தாமதமாகவே கண்டறியப்படுகிறது.  ஆனால், உரிய முறையில் கண்டுபிடித்து தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஒற்றைத் தலைவலியோடு பிரச்சனையில்லாமல் வாழ முடியும்.

தலைப்பகுதிக்குள் இருக்கும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றம், மூளைப் பகுதியில் சவ்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தலைக்குள் சதைப்பகுதி, தசைகளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தலைவலி ஏற்படுகிறது. சாதாரணத் தலைவலிகள், பெரும்பாலும் வலி நிவாரணி எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். 

ஆனால், தலைவலி வந்தால் உடனே நிவாரணி என்று மாத்திரைகளை அடுக்கிக் கொண்டு போவது நாள்பட நாள்பட வேறு தீவிர பிரச்சனைகளை உருவாக்கும்.  1970களில், விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு விளம்பரங்களைக் கேட்டவர்களுக்கு நினைவிருக்கும், தலை வலிக்கிற அளவிற்குத் தலைவலி மாத்திரை விளம்பரம் (ஒர்ர்ரே ஸாரிடான், தலைவலி நீக்கிவிடும்...) கேட்டுக் கொண்டே இருக்கும். திரையரங்கிற்குள் நுழைந்தால் போதும், விளம்பரப் படத்தில், திரை முழுக்க ஓர் ஆசாமி முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்  கொண்டு "ஆமாம்ப்பா, ஆமாம்" என்று எல்லாக் கேள்விகளுக்கும் தலையாட்டி விட்டு ஒரு மாத்திரையை விழுங்கித் தண்ணீணிர் குடிப்பார். உடனே முகத்தை திவ்விய பிரகாசமாக மாற்றிக் கொண்டு பெட்டியைத் தூக்கியபடி ஸ்டைலாக 'டை' பறக்க நடக்க ஆரம்பித்து விடுவார்.  ஆனால், அளவுக்கதிகமான வலி நிவாரணிகள் தேவையற்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.  காலப் போக்கில் சிறுநீரகத்தைக் கூட பாதிக்கும்.  மருத்துவரது ஆலோசனை பெறாமல், பாரம்பரிய மருத்துவ முறைகளும் அறியாமல் சொந்த உள்ளுணர்வில் வெளுத்து வாங்கும் வைத்திய சிகாமணிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கண் பார்வையில் ஏற்படும் கோளாறுகள் காரணமாகக் கூட தலைவலி ஏற்படுவதுண்டு. கண் மருத்துவரது ஆலோசனைப்படி தேவையெனில் கண்ணாடி அணிவது தான் தீர்வு. வாசிப்பின் போதும் எழுத்துக்களின்மீது வெளிச்சம் படுகிற மாதிரி வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்.  வாசிப்பவர் மீது கூசும் வெளிச்சமும், புத்தகத்தின் பக்கங்களில் நிழலும் விழுந்தால் தலைவலி ஏற்படும்.  மின்விசிறியின் சுழற்சி விளக்கின் ஒளியைக் கத்தரித்துப் போட்டுக் கொண்டே இருக்கிற மாதிரி அமைந்து விடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.  அது வாசிப்பை பாதிப்பதோடு, அந்த எரிச்சல் தலைவலியில் வந்து முடியும். 

மிக அரிதானவர்களுக்கு, நாட்பட்ட அல்லது திடீர் தலைவலி மூளைக்குள் கட்டி இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அதற்கு வேறு சில அறிகுறிகளும் உண்டு.  தலைவலி என்றாலே பயப்பட வேண்டியதில்லை. ஒருமுறை குமுதம் அரசு கேள்வி-பதிலில், எழுத்தாளன் என்றால் யார் என்று கேட்கப்பட்டதற்கு, எஸ்.ஏ.பி. அண்ணாமலை இப்படி பதில் சொல்லியிருந்தார்: "தலைவலி என்றாலே மூளை புற்றுநோய் என்று கற்பனை செய்யத் தெரிந்திருக்கணும்". நாம் எழுத்தாளர்களாகிவிட வேண்டாம். சாதாரணமாகவே வாழ்வோம்.

தலைவலிக்கு என்ன காரணமோ அதற்குத் தீர்வு தேடினால் தலைவலி பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிராது.  மிதமான வெளிச்சம், அளவான சாப்பாடு, இதமான சூழல், மெல்லிய இசை என்று இருந்தால் தலைவலி வேறு முகவரியைத் தேடிச் சென்றுவிடும்.

தலைவலிக்கு இன்ன காரணம் என்றில்லை என்று பார்த்தோம் இல்லையா. செவிவழியாகச் சொல்லப்படும் இந்த சுவாரசியமான தலைவலி துணுக்கு ஒன்றைக் கேட்டிருக்கிறீர்களா? 

தீராத தலைவலி என்று ஒரு பெண்மணி பார்க்காத மருத்துவர் இல்லை. எடுக்காத மருந்து இல்லை.  மிகவும் வசதி படைத்தவரான அவர் ஒரு கட்டத்தில் சென்னையில் அந்நாளில் பிரபல மருத்துவராயிருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் அவர்களை வந்து பார்த்திருக்கிறார்.  எல்லாம் கேட்ட பிறகு மருத்துவர், "அம்மா, கொஞ்சம் உங்க மூக்குத்தியைக் கழற்றி வைக்கிறீங்களா ?" என்று கேட்டாராம். அதற்கு என்ன வந்தது இப்போது என்று வியந்து கேட்டிருக்கிறார் அந்தப் பெண்மணி.  டாலடிக்கிற வைர மூக்குத்தியின் கூசும் வெளிச்சம்தான் உங்க தலைவலிக்குக் காரணம் என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னாராம் டாக்டர். 

செல்வச் செழுமையாயிருந்த அந்தப் பெண்மணியின் தலைவலிக்கு வைர மூக்குத்தி தான் காரணம் என்றால், வசதியற்றவர்களுக்கு அதை வாங்க முடியாத வருத்தம் தலைவலிக்குக் காரணமாகலாம் போலிருக்கிறது.

*

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தலைவலி வந்தா இந்த பதிவ படிச்சிரனும் தலைவலி வந்த பாதையிலே போய்விடும்!!!! அப்படி ஒரு நகைப்பூட்டும் எழுத்து.

    |நல்ல மொழிநடையிலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை|

    'சான்ஸ் கொஞ்சம் கம்மிதான்.

    |தலைவலி வந்தால் உடனே நிவாரணி என்று மாத்திரைகளை அடுக்கிக் கொண்டு போவது நாள்பட நாள்பட வேறு தீவிர பிரச்சனைகளை உருவாக்கும்|

    வயிற்றுப் புண்ணை நிச்சயம் உண்டாக்கும் (அனுபவம் பேசுது)

    மிக நல்ல தகவல் பரிமாற்றம்.
    ஒரு உயர்ந்த எழுத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அப்பா... இப்பவே லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கே? ;-)

    பதிலளிநீக்கு
  3. தோழர் மாதவராஜ்,
    அருமையான பதிவு. வேணுகோபாலன் எழுதிய நலம் நலமறிய ஆவல் என்ற புத்தகம் நான் வாசித்திருக்கிறேன். உடலின் ஒவ்வொரு உறுப்பின் பிரச்சனைகள் குறித்தும் எளிதாகவும், மெல்லிய நகைச்சுவையுடனும் சுவாரசியமாக எழுதக்கூடியவர்.
    பகிர்விற்கு நன்றி.


    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
    It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

    This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

    Top Tamil Blogs

    "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

    சிறந்த வலைப்பூக்கள்

    நன்றி.
    தமிழர்ஸ் டாட் காம்.

    பதிலளிநீக்கு
  5. ஆ.முத்துராமலிங்கம்!
    நன்றி.


    ஜோ!
    படித்தா தலை வலிக்கிறது?

    அகநாழிகை!
    ஏற்கனவே எஸ்.வி.வியைத் தெரிந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.


    மணிநேரன்!
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!