மாதவராஜ் பக்கங்கள் 4

12.5.2009 தினமணி நாளேட்டில் வந்த செய்திக்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார் கட்டுரையாளர் எஸ்.வி.வேணுகோபாலன். வங்கி ஊழியர் தொழிற்சங்க அரங்கில் தொடர்ந்து பணியாற்றி வரும் எஸ்.வி.வி தெளிந்த அரசியல் பார்வையும், இலக்கிய பரிச்சயமும் கொண்டவர். புத்தகம் பேசுது, Bank Workers Unity, வண்ணக்கதிர் பத்திரிக்கைகளில் இவரது எழுத்துக்களை தொடர்ந்து காணமுடியும். இங்கு தீராத பக்கங்களில் ‘உருதுமொழியும், நானும்’என்று மகேஷ்பட்டின் கட்டுரை இவரது மொழி பெயர்ப்பில் வெளியிடப்பட்டு இருந்தது. உடல்நலம் குறித்து சுவராஸ்யமான மொழியில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவைகளையும் தீராத பக்கங்களில் வெளியிட எண்ணமிருக்கிறது. இப்போது-
----------------------------

காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையிலான அரசு அமைய வேண்டுமாம். அதுதான் நிலையான ஆட்சிக்கு உத்தரவாதமாக இருக்குமாம்.  அப்படிப்பட்ட அரசுகளால்தான் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியுமாம்.  யாரது விருப்பம் இது என்கிறீர்களா, வேறு யாராக இருக்க முடியும், நமது தேசத்தின் பெருந்தொழில் அதிபர்களது அபிலாஷைதான் இது என்று தினமணி நாளேட்டில் மே 12 அன்று வெளியாகியுள்ள செய்தி தெரிவிக்கிறது. செய்தியின் ஒரு பாதி இது.  சுவாரசியமான அடுத்த பகுதியையும் கவனியுங்கள், இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்: இடதுசாரிகள்அல்லது மாநிலக் கட்சிகள் தலைமையிலான மூன்றாவது அணி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஆட்சியில் அமர்வதையோ, காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை வெளியிலிருந்து ஆதரிப்பதையோ அவர்கள் விரும்பவில்லை என்று அவர்களிடம் பேசியதிலிருந்து தெரிகிறதாம். நாடாளுமன்றத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குகள் பதிவாக உள்ள நேரத்தில் இவர்கள் இப்படி புலம்புவதன் பொருள் என்ன?

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 545 இடங்களில் ஆங்கிலோ-இந்தியர்களுக்கான இரண்டு இடங்கள் போக மீதமுள்ள 543 இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட 5 கட்ட தேர்தல்களில் 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது கட்டத்தில் தமிழ்நாடு (39), மேற்கு வங்கம் (11), உத்தரபிரதேசம் (14), பஞ்சாப் (9), உத்தரகாண்ட் (5), இமாசல பிரதேசம் (4), ஜம்மு-காஷ்மீர் (2), சண்டிகர், புதுச்சேரி ஆகிய இடங்களில் மீதமுள்ள 86 இடங்களுக்கான தேர்தல் சூடாக நடக்க இருக்கிற மே 13ம் தேதியன்று இந்தத் தொழிலதிபர்களும் சுறுசுறுப்பாக ஒரு வேலையில் மும்முரமாக இருப்பார்களாம். என்ன வேலை என்கிறீர்களா, நிதித் துறை அதிகாரிகள் பட்ஜெட் தயாரிப்புப் பணிகளில் ஈடுப்பட்டு இருப்பதால் தொழிலதிபர்களின் ஆலோசனை, விருப்பம், எதிர்பார்ப்பு இவற்றைக் குறித்து அவர்களுடன் ஒரு கட்ட உரையாடலை அன்று நடத்த இருக்கிறார்களாம்.  இந்திய தொழில், வர்த்தக சபைகளின் சம்மேளனம் - ஃபிக்கி (எஃப் ஐ சி சி ஐ) பிரதிநிதிகள் தங்களுக்குத் தேவைப்படும் வரிச்சலுகை, மானிய உதவி, ஏற்றுமதிக் கடன் உள்ளிட்டவை மீது அரசு அதிகாரிகளோடு மே 13 அன்று பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடாகி இருக்கிறது.

நீங்கள் என்னவும் ஓட்டு போடுங்கள், நாட்டின் கொள்கை திசைவழியின் சூத்திரக் கயிறு எங்கள் கைகளில்தான் இருக்கும் என்பது பெருந்தொழில் கூட்டத்தின் இறுமாப்பாக இருக்கிறது. எனவேதான், இந்த மூன்றாவது அணி என்ற பேச்சே அவர்களுக்கு வயிற்றில் உபரியாக அமிலத்தைச் சுரக்க வைக்கிறது. அதனால்தான், காங்கிரஸ் தோற்றாலும் பரவாயில்லை, பாஜக வந்து தொலையட்டும் என்பதாக அவர்களது எதிர்பார்ப்பு இருக்கிறது. பாஜக தேறாது போனால் போகட்டும், காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளட்டும் என்பதைத் தவிர மாற்று சிந்தனை அற்றிருக்கிறது அவர்களது சிந்தனை உலகம்.  எனவே தான் கட்சி பாகுபாடு இல்லாமல் பெருந்தொழில் அதிபர்கள் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தேர்தல் நிதியை அள்ளி அள்ளி வழங்குகின்றனர் என்பதையும் சேர்த்துக் கவனிக்க வேண்டும். அது நன்கொடை அல்ல, பெரிய அறுவடைக்கான விதைப்பாடு என்றும் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களாக முக்கிய தொலைக்காட்சி ஊடகங்களாகக் கருதப்படும் ஆங்கில சானல்கள் சில தனிநபர் மோதல், ஆத்திரப் பேச்சுக்கள், மாற்சர்யங்கள் போன்றவற்றை வைத்தே பரபரப்பு செய்திகள், அனல் பறக்கும் நேர்காணல்கள், தடுமாற வைக்கும் அதிரடி கேள்விகள் என்று ஓட்டிக் கொண்டிருந்தன. ஆனால், திரைகள் விழும் இந்தக் கடைசி நேரத்தில் அவர்களுக்கு உதைப்பு கண்டிருக்கிறது.  காங்கிரஸ் தேறாது போலிருக்கிறதே, பாஜக நிலைமை இன்னும் மோசமாக வந்து நிற்கும் போல் தெரிகிறதே, உண்மையாகவே இடதுசாரிகள் கை நமது கணிப்புகளைத் தவிடு பொடியாக்கி ஓங்கி விடுமோ என்று அவர்கள் நெளிவது காட்சிக்குக் காட்சி தெரிகிறது.  எந்த காரணியும் காட்டாமல், அறிவியல்பூர்வமான ஆதாரங்களைச் சொல்லாமல் அவர்களாக இன்னின்னாருக்கு இத்தனை இத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ஆருடம் சொல்லிவிட்டு, அப்படியானால் இவர்கள் எந்தப் பக்கம் போவார்கள் அவர்கள் எந்தப் பக்கம் நிற்பார்கள் என்ற குறிசொல்லி விளையாட்டை இப்போது துவக்கி விட்டார்கள். மூன்றாவது என்ற ஒன்றைக் கண்டு ஏன் இப்படி அஞ்சி நடுங்குகிறார்கள். அப்படி ஒன்று நேர்ந்துவிடக் கூடாது என்று ஏன் இந்த உச்ச கட்ட உடுக்கை அடித்து பேய் விரட்டி வேலையில் இறங்குகிறார்கள்.

ஏப்ரல் 28 அன்று டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் 'மூன்றாவது அணியென்றால் ஏன் அஞ்ச வேண்டும் ?' என்ற கட்டுரையில் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் சில முக்கிய செய்திகளை அபாரமாகத் தொகுத்திருந்தார்.  சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்ற லேபிளை வைத்தே ஓட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி 1984ல் இந்திரா காந்தி படுகொலையை அடுத்து நடந்த தேர்தலில்தான் அதிகபட்சமான  46.1 சதவீத ஓட்டுக்களைப் பெற்றிருந்தது. ஆனால் இப்போது படுவீழ்ச்சியைச் சந்தித்து 2004ல் 26.5 சதவீதமாக இருந்தது.  இந்தத் தேர்தலில் இன்னும் கடுமையாகக் குறையுமே தவிர கூடாது.  பாஜக அதிகபட்சமாக 25.6 சதவீத வாக்குகள் பெற்றது 1998ல். இப்போது சொல்லும் நிலையில் இல்லை, அவ்வளவு குறையும்.  இந்த இரண்டு முக்கிய கட்சிகளும் சேர்த்தே கூட 50 சதவீத வாக்குகள் பெற இயலாமல் போக வாய்ப்புகள் இந்தத் தேர்தலில் நிகழும் என்றே தெரிகிறது என்று குறிப்பிடும் ஜெயதி கோஷ், அப்படியானால் மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி, இடதுசாரிகளின் உருவாக்கத்தில் அவர்களது பங்கேற்போடோ அல்லது ஆதரவோடோ மூன்றாவது அணி ஆட்சியில் அமர இடமிருக்கிறது என்கிறார்.  அதன் தேவையை விவாதிக்கும்போது, அடித்தட்டு மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என புதிய தாராளமயக் கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கும் பல்வேறு பகுதியினரும் தெரிவிக்கும் விருப்பங்களை, வலியுறுத்தும் கோரிக்கைகளை மாநிலக் கட்சிகள் பிரதிபலிக்கின்றன, பாதிப்புறும் மக்களுக்கு நிவாரணமும், மறுவாழ்வும், நம்பிக்கையும் வழங்கவே இந்த மாற்று அரசின் உதயம் தேவையாகிறது என்று ஜெயதி கோஷ் அடிக்கோடிட்டு சொல்கிறார்.

அமெரிக்காவைப் பார், இங்கிலாந்தைப் பார், இரண்டே கட்சிகள் போதும், மாறி மாறி நாட்டை ஆளட்டும் என்று யாரும் பேச முடியாது என்று சொல்லும் கோஷ், என்ன சிரமங்கள், சிக்கல்கள், வலிகள், முரண்பாடுகள், பூசல்கள் ஏற்பட்டாலும், மூன்றாவதாக ஒரு மாற்று அரசு என்கிற பரிசோதனையை அரங்கேற்றிப் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் எழுதுகிறார். அந்த அரசு உடனே கவிழலாம், உள் முரண்கள் வரலாம் அதற்காக அஞ்சி அதனைச் செய்து பார்க்கவே துணியாமலிருக்கக் கூடாது, அதனால் தான் இடதுசாரிகள் இதனை நோக்கி நேரமும், உழைப்பும் செலவுசெய்து வருகின்றனர் என்கிறார் அவர்.

இப்படியான மாற்று ஏற்பாடு வந்துவிட்டால் தங்கள் தலைக்கு உலை வைத்துவிடுவார்கள் என்று பயந்தே இப்போதே அதற்கு எதிராகப் புறப்படுகிறது ஆளும் வர்க்கம்.  நீங்கள் ஆளுகை செலுத்தும் ஆட்சி அமையும் பட்சத்தில் தொழில் நிறுவனங்கள் மீது அநியாய வரி போடுவீர்களா என்று பிரகாஷ் காரத் அவர்களைக் கேட்கின்றன ஊடகங்கள். என்ன மாற்றுக் கொள்கை என்பதை சாதாரண மக்களின் நிலையிலிருந்து கேட்க அவர்கள் தயாரில்லை. பல லட்சம் பேர் வேலையிழந்து நிற்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லும்போது, அதன் பின்புலத்தின்மீது விவாதத்தைத் தொடரவும் ஊடகங்களுக்கு நேரமில்லை.

1991ல் துவங்கிய உலகமயக் கொள்கை அமலாக்கத்தின்பின் பட்டினிச்சாவுகள், தற்கொலைகள், வேலை இழப்புகள் என்று அடி மேல் அடி வாங்கியிருப்பது உழைப்பாளி மக்கள்தான். 1997 - 2007 பத்தாண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 936 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக தேசிய குற்றப் பதிவுத் துறை கணக்கு தெரிவிக்கிறது.  ஆனால், நாட்டின் பில்லியனேர்கள் (நூறு கோடிக்கு மேல் சொத்துள்ளோர்) எண்ணிக்கை அதிகமானது. பெருந்தொழில் நிறுவனக் கூட்டம் உலகமயக்     கொள்கையின் பலன்களை ருசித்துக் கொழுத்து இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி வந்தாலும் தங்களை காபந்து செய்பவர்களை மட்டுமே அது ஆட்சிக் கட்டிலில் எதிர்பார்க்கிறது. அதனால்தான், தேர்தல் நேரத்திலும் நிதி அமைச்சகத்தோடு உட்கார்ந்து தனது தேவைகளுக்கான விரல் சொடுக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது.

 

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பெயரில்லா12 மே, 2009 அன்று PM 10:00

    If third front comes to power it will be a disaster for India. The left will try to set the clock back. It will favor muslims by giving away jobs and loans to them. It will try to bring in
    reservation in private sector.
    It will be pro-China and will
    go any extent to favor them.
    The left today is a party of the
    muslims and pro-china elements.

    பதிலளிநீக்கு
  2. //முசல்மான்களுக்கு வேலைவாய்ப்புக்
    கொடுப்பதும் ஒடுக்கப்பட்டவர்களூக்கு
    இட ஒதுக்கீடு வழங்குவதும் பேரழிவு//

    அன்பான அனானி..

    மூவாயிரம் ஆண்டுகாலப்பொறுமையின்
    மேல் தூக்கிவைத்த பாறாங்கல் சிந்தனை.

    பொறுத்தவர்கள் பூமியாள்வார்கள் என்பது
    எவ்வளவு பெரிய மோசடி,.

    அப்படியென்றால் உங்கள் ஓட்டுவங்கியை
    விஸ்தரிக்கிற போதெல்லாம் கூட்டுக்கற்பழிப்பு
    செய்வதற்காக முச்லீம்களும், இன்னும் ஆயிரமாயிரம்
    ஆண்டுகாலம் உங்கள் கழிப்பறையைச்சுத்தம் செய்ய
    ஒடுக்கப்பட்டவர்களும் தேவை அப்படித்தானே ?.

    படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை.

    பதிலளிநீக்கு
  3. காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையிலான அரசு அமைய வேண்டும். அதுதான் நிலையான ஆட்சிக்கு உத்தரவாதமாக இருக்கும். அப்படிப்பட்ட அரசுகளால்தான் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும்

    பதிலளிநீக்கு
  4. காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையிலான அரசு அமைய வேண்டும். அதுதான் நிலையான ஆட்சிக்கு உத்தரவாதமாக இருக்கும். அப்படிப்பட்ட அரசுகளால்தான் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா13 மே, 2009 அன்று PM 4:10

    இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் தஸ்லீமா இந்தியாவில் இருக்க முடியாது என்று துரத்துவீர்கள்.ருஷ்டி வருவதையும் முஸ்லீம்களை குஷிப்படுத்த தடுப்பீர்கள். பட்ஜெட்டில் 15% முஸ்லீம்களுக்கு என்று ஒதுக்க கோரும் கட்சி என்ன மதச்சார்பற்ற
    கட்சியா. முஸ்லீம்களுக்கு அதிக உரிமைகள், அதிக சலுகைகள் தரும்
    கட்சி இந்தியாவிற்கு தேவையில்லை.
    அனைத்து மதத்தினரையும் சமமாக
    நடத்தும் கட்சியே தேவை. சிறுபான்மையினர் ஒட்டிற்காக நாட்டையே விற்கவும் நீங்கள்
    துணீவீர்கள்.சீனா அருணாச்சல
    பிரதேசம் தனது என்கிறது. அதை
    உங்கள் கட்சி கண்டிக்கவில்லையே,
    ஏன்?.

    இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது மட்டுமின்றி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கையில்
    நடப்பதை விவாதிக்ககூடாது என்கிற
    சீனாவை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேசாத இடதுசாரிகள் தமிழின
    துரோகிகள் என்பதில் ஐயமில்லை.
    இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை சீனாவிற்கு பிரித்து கொடுத்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா13 மே, 2009 அன்று PM 4:13

    'காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையிலான அரசு அமைய வேண்டும். அதுதான் நிலையான ஆட்சிக்கு உத்தரவாதமாக இருக்கும். அப்படிப்பட்ட அரசுகளால்தான் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும்'

    இந்தியா வளரக்கூடாது என்பதுதானே
    இடதுகளின் குறிக்கோள். பொருளாதார
    வளர்ச்சி மட்டுமே போதாது, ஆனால்
    அது கட்டாயம் தேவை. இடதுகளுக்கு
    அது தெரிந்திருந்தாலும் வளர்ச்சிக்கு
    இடையூறு செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பதிவைப் பார்தால், வேடிக்கையான கனவு போல் இருக்கிற்து!!!!

    மே 16 வரை பொருத்து இருந்து பார்போம்.....

    பதிலளிநீக்கு
  8. வந்து கருத்து தெரிவித்த அனைவர்களுக்கும் நன்றி.

    காங்கிரஸ் அல்லது பா.ஜ.க தான் வரவேண்டும், அப்போதுதான் நிலையான ஆட்சி தர முடியும் என்னும் கருத்து, அந்த இரு கட்சிகளுமே நிலையாய் கொள்ளையடிப்பதற்கும், இந்தியப் பெருமுதலாளிகளின் நிலையான நலன் சார்ந்ததும் ஆகும். கோடிக்கணக்கான மக்களின் பசித்த விலா எலும்புகளின் வரிகளை இதயசுத்தியோடு பாருங்கள்.கோடீஸ்வரர்களைப் பார்க்காதீர்கள்.

    இட ஒதுக்கீடு சம்பந்தமாக வந்த கருத்துக்கு காமராஜ் மிக அடர்த்தியாக பதில் தந்திருக்கிறார்.

    பொன்ராஜ்! வேடிக்கையான கனவு அல்ல. ஒருநாள் நிச்சயம் நனவாகும் என்னும் நம்பிக்கை ஒளிரும் கனவு.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா15 மே, 2009 அன்று AM 10:02

    //எனவே தான் கட்சி பாகுபாடு இல்லாமல் பெருந்தொழில் அதிபர்கள் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தேர்தல் நிதியை அள்ளி அள்ளி வழங்குகின்றனர் என்பதையும் சேர்த்துக் கவனிக்க வேண்டும். அது நன்கொடை அல்ல, பெரிய அறுவடைக்கான விதைப்பாடு என்றும் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும்.//

    மூன்றாவது அணியில் யாருமே இப்படி நன்கொடை வாங்கவில்லை என்பதை நம்பிவிட்டேன். மூன்றாவது அணி என்பதே முதலாளி விரோத அணி என்பதையும் நான் நம்பிவிட்டேன்.

    ஜெயலலிதா மூன்றாவது அணியின் மதச்சார்பற்ற, மக்கள் நேய தூண் என்பதையும் சேர்த்தே நம்பிவிட்டேன்.

    நம்பி

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ளம் கொண்டோரே,

    வலைத்தளப் பதிவிற்கு எதிர்வினையாற்றுவோரில் சிலர் தங்களது முகத்தை மறைத்துக் கொள்வதேன் என்பது புரியாத புதிராக இருக்கிறது. குரல்களை மட்டும் ஒலிக்கத் துடிப்பவர்களுக்குத் தங்களது குரல்கள் கேட்க வேண்டுமென்பதைவிடவும் இடதுசாரிகளின் குரல்கள் ஓங்கி ஒலித்துவிடக் கூடாதென்பதில் அதிக ஆர்வமிருப்பது பச்சையாகத் தெரிகிறது. போகட்டும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சாத்தியங்களைக் குறித்த இடதுசாரிகளின் பரிசோதனைகளை பகடி செய்யும் பலர் பின்னாளில் புரட்சியின் நிறம் மங்கி சராசரி மனிதர்களுக்கும் கீழான லௌகீக வாழ்வில் புகலிடம் தேடிக் கொள்கின்றனர். அதற்கும் நியாயங்கள் அவர்கள்வசம் இருக்கவே செய்யும். அவர்கள் விட்ட இடத்தில் அதே எதிர்கால நிறமங்குதலுக்கு உள்ளாகவிருக்கும் புதிய புரட்சி துப்பாக்கிகள் தமது சப்தத்தை எழுப்பி ஓய்வதையும் கண்ணுறுகிறோம். பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தமட்டில் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவிற்கும் வேறுபாடு கிடையாதென்பது அறிந்தவர்கள், நடப்பு தேர்தல் சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகள் புதிய அரசின் உருவாக்கத்தில் தமது விருப்ப திசைவழி அதைச் செலுத்த இறங்கியிருப்பதைப் பார்க்கிறவர்கள், சங் பரிவாரத்தின் முழு ஆளுகைக்குள் இந்தியா சிக்க நேர்ந்தால் மதவெறி என்னென்ன அபாயகர வேலைகளைச் செய்து முடிக்கும் என்ற ஞானம் உள்ளவர்கள் கூட, இடதுசாரிகளை ஏசிக் கொண்டிருப்பதும் அவதூறு பொழிந்து கொண்டிருப்பதும் மட்டுமே புரட்சியின் உள்ளடக்கம் என்று கற்பித்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?

    சிறுபான்மை மக்கள் குறித்தும், தேச நலன் குறித்தும் கொச்சை செய்து வந்துள்ள பதிவுகள் வியக்க வைக்கவில்லை. இந்த பிரச்சனைகளை முன்வைப்பவர்களுக்கு ஐயங்களில்லை, நோக்கம் மட்டுமே உள்ளது. இஸ்லாமிய மக்களின் சமூக நிலை பற்றிய ராஜிந்தர் சச்சார் குழு அறிக்கையைப் படிக்க முடியாததோ, எல்லை பிரச்சனைகளில் என்ன நிலை மார்க்சிஸ்டுகளுக்கு என்பதைத் தெரிந்து கொள்ள முடியாததோ அல்ல, இந்த வலைத்தள உலவர்களுக்கு உள்ள பிரச்சனை. நோக்கத்தின் திசைவழி பார்வை.

    அன்பர் பொன்ராஜ் அவர்களுக்கு மாதவராஜ் அளித்த பதில் சரியானது. யார் வருவார்கள் என்று தேர்தல் நேரத்தில் கேட்பவர்களுக்கு எப்போதும் நாம் சொல்வது, யார் வரவேண்டும் என்பதை நோக்கி விளக்குவதே, உழைப்பதே, உறுதி செய்வதே நமது கடமை என்று.........மாற்று அரசியல், மாற்று பண்பாடு, மாற்று வாழ்வியல் என்பது கனவு அல்ல, ஆரோக்கியமான சிந்தனைப் போக்கு.


    எஸ் வி வேணுகோபாலன்.

    பதிலளிநீக்கு
  11. இவ்விவாதங்களுக்கு முடிவே இல்லை - சுதந்திரம் பேறு அறுபதாண்டுகள் ஆகியும் இன்னும் இவ்விவாதங்கள் வளர்ந்து கொண்டி தான் இருக்கின்றன. தீர்வினைத்தான் காணோம்.

    நல்வாழ்த்துகள் மாதவராஜ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!