என்னாச்சு.. “எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு”?

hey market riot 1886

1886ஆம் ஆண்டு மே மாதம் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட்டில் சிந்திய தொழிலாளர்களின் இரத்தம் இன்று உலகமெங்கும் செந்நிறக் கொடிகளாக பறந்து கொண்டிருக்கின்றன. இதே நாளில் அமெரிக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும், லண்டனிலும், மாஸ்கோவிலும், பாரிஸிலும், பெர்லினிலும், இத்தாலியிலும், இராவல்பிண்டியிலும், என உலகத்தின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் அந்த செந்நிறக் கொடி ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது சிலிர்ப்பாய் இருக்கிறது. கோடிக்கணக்கான மனிதர்கள் அந்த கொடியின் கீழ் நின்று கொண்டிருகிறார்கள் என்னும் பிரக்ஞை மாபெரும் மனித சமுத்திரத்தில் நாமும் ஒரு துளியென சக்தியளிக்கிறது. அதே வேளையில் 'எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர தூக்கம்' என்னும் மேதினத்தின் உன்னத நோக்கம் இன்று என்னவாகி இருக்கிறது என்பதையும் யோசிக்க வேண்டி இருக்கிறது.

காலம் காலமாய் வஞ்சிக்கப்பட்ட உழைப்பாளிகள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாய் தங்கள் வாழ்வுக்கான போராட்டத்தை துவக்கியதன் குறியீடாக மேதினம் முன்நிற்கிறது. அப்போதெல்லாம் 16 மணியிலிருந்து 18 மணி நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 1810ல் இங்கிலாந்தில் ராபர்ட் ஓவன் என்பவர் முதன் முதலாக பத்துமணி நேரம் என்னும் கோஷத்தை வைத்தார். 1850ல் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் 10 மணி நேர வேலை என்பது சாத்தியமாயிற்று. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு 1848ல் பிரான்சில் பத்து மணி நேர வேலை என்னும் கோரிக்கையை வென்றார்கள். 1830ல் அமெரிக்காவில் பிலடெல்பியாவில் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை என்பதை முன் வைத்தார்கள். 1835ல் அவர்கள் நடத்திய போராட்டத்தில் '6 to 6' என்பதே கோஷமாயிருந்தது. அதாவது பத்து மணி நேர வேலை. 2 மணி நேர ஓய்வு. 1860க்குள் மெல்ல மெல்ல பதினோரு மணி நேர வேலையாக  குறைக்கப்பட்டிருந்தது.

1886, மே மாதம் 1ம் தேதி சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் 'எட்டு மணி நேர வேலை' கோஷத்தை முன்வைத்து போராட்டத்தை துவக்கினர். மே  3ம் தேதி ஹே மார்க்கெட்டில் திரண்டிருந்த போராளிகள் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. துப்பாக்கிகளின் முனையில் மக்களின் இரத்தம் சிந்த சிந்த போராட்டம் நசுக்கப்பட்டது. ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ், எங்கல் ஆகியோர் 1887 நவம்பர் 11ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அத்தோடு அந்த மகத்தான இலட்சியமும், இயக்கமும் முற்றுப் பெறவில்லை. 1888ல் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு  மே 1ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. 1889ல் பிரான்சில் கூடிய உலக சோஷலிசத் தலைவர்கள் மே 1ம் தேதி அன்று உலகம் முழுவதும் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டும் என அறைகூவல் விடுத்தார்கள். 1890ம் ஆண்டு முதல்,  மே 1ம் தேதி உலகம் முழுவதும் போராட்டங்களால் நிரம்பப்பெற்று சர்வதேச தினமாக அடையாளம் பெற்றது, அமெரிக்காவைத் தவிர.

1919 அக்டோபர் 19ம் தேதி வாஷிங்டன்னில் கூடிய சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், "அனைத்து தொழில் நிறுவனங்களிலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை, ஒரு வாரத்துக்கு நாற்பத்தெட்டு மணி நேர வேலை' என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் வேலை நேரம் குறித்து சட்டங்கள் இயற்றி, குறைந்த பட்ச தொழிலாளர் பாதுகாப்பு காரியங்களை செய்தன.

,இந்தியாவில் அப்படியொரு நிலைமை ஏற்படுவதற்கு 1948 வரை நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. 1881ல் கொண்டு வரப்பட்ட முதல் தொழிற்சாலைகள் சட்டத்தில் பணி நேரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில்தான், 9லிருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 7 மணி நேர வேலை எனவும், பெண்களுக்கு 11 மணி நேர வேலை எனவும் சொல்லப்பட்டிருந்தது. 1911ல் வயது வந்தவர்களுக்கு 12 மணி நேர வேலை எனவும், குழந்தைகளுக்கு 6 மணி நேர வேலை எனவும் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்தங்கள் இப்படியே நீண்டு கொஞ்சம் கொஞ்சமாய் வேலை நேரம் 10 மணி வரைக்குமாய் குறைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1948ல்தான் 'வயதுக்கு வந்த எந்த தொழிலாளியும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேலாகவும், ஒரு வாரத்துக்கு நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு மேலாகவும் வேலை பார்க்க வேண்டியதில்லை' என சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1886ல் சிகாகோவில் உயிர்நீத்த தோழர்களின் கனவு வார்த்தைகள் அவை.

அந்த கனவுகளை காகிதங்களில் மட்டுமே எழுதி வைக்க அதிகார வர்க்கமும், அமைப்பும் இப்போது முனைந்திருக்கின்றன. உலகமயமாக்கலை ஓட்டி, லாப வேட்கை மிகுந்த முதலாளித்துவம் தனது எல்லைகளை மேலும் அகண்டமாக்கி இருக்கிறது. நாடுகள் என்பது அதற்கு  சந்தையாகவும், மக்கள் பொருட்களை வாங்குபவர்களாகவும் மட்டுமே தெரிகிறது. தனது வெறிக்கு தடையாய் இருக்கிற அத்தனை ஜனநாயக உரிமைகளையும் அது மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பிக்கிறது. மனிதர்களையும், பூமியையும் முழுமையாய் சுரண்டுவதற்கு சகல காரியங்களையும் செய்கிறது. அதன் பலிபீடத்தில் மே 1ம் தேதியையும் வைத்திட துடிக்கிறது.

எட்டுமணி நேர வேலை என்பது இப்போதும் 10 சதவீதத்திற்கும் குறைந்த இந்தியர்களுக்கே கிடைத்திருக்கிறது. 35 கோடி பேருக்கு மேல் அது குறித்த எந்த பிரக்ஞையுமின்றி வேலை பார்த்து வருகின்றனர் என்பது வேதனையான செய்தி. போத்தீஸ் ஜவுளிக்கடையிலும், சரவணா ஸ்டோர்ஸின் ஐந்து தளங்களிலும் மட்டும் பணிபுரிந்து வருகிறவர்கள் பல நூறு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை நேரம் என்பதே கிடையாது. ஒய்வு நாளும் கிடையாது. இப்படி தேசமெங்கும் உயர்ந்த கட்டிடங்களில் வேலை பார்ப்பவர்கள் சூரியன் மறைவதையும், பறவைகளின் கீதங்களையும் என்றைக்கு ரசிக்கப் போகிறார்கள். கூரியர் ஆபிஸ்களில் பணிபுரிவர்களின் வேதனைகளை யார் அறிவார். இவர்களுக்கெல்லாம் இந்த மே தினம் எந்த நம்பிக்கையைத் தரப் போகிறது?

எட்டு மணி நேர வேலை உத்திரவாதம் செய்யப்பட்டதாய் காட்சியளிக்கிற அந்த 10 சதவீதத்தினருக்கும் இப்போது நிலைமைகள் மாறி வருகின்றன. புதிதாய் பணிக்கு ஆள் எடுப்பதில்லை. விருப்பப்படி என்று 'கட்டாய ஓய்வு' அளிக்கப்பட்டு லட்சக்கணக்கில் வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்குப் பதிலாகக் கூட புதிய பணி நியமனம் இல்லை. வெளியே சென்றவர்களின் வேலைகளையும் இருக்கிறவர்களே பார்க்க வேண்டியிருக்கிறது. பிறகு எப்படி எட்டு மணி நேர வேலை என்பது சாத்தியமாகும். அரவம் இல்லாமல் அவர்களும் தொழில் செய்யும் நிறுவனங்களுக்குள் நேரம் காலம் தெரியாமல் முடக்கப்படுகின்றனர்.  மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்கள் நிறுவப்பட்டு, அந்த இயந்திரத்தோடு இயந்திரமாக மனிதர்களும் ஒரு பாகமாகிப் போகிறார்கள். அப்படியே புதிதாக ஆள் எடுத்தாலும் ஒப்பந்த அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்த பணி விதிகளும் இல்லை. மே 1ம் தேதி அவர்களது நாளாக இல்லை.

எட்டு மணி நேரத்துக்கு மேலே பார்க்கிற வேலை என்பது இன்னொருவர் செய்ய வேண்டிய வேலை என்கிற புரிதல் அவசியம். கோடி கோடியாய் வேலையின்றி வீதிகளில் நிற்கும் இளைஞர்களின் வாய்ப்புகளை அதிகார அமைப்புகள் பறித்து ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்களின் தலையில் சுமத்துகிறது என்பதுதான் இதன் அடிநாதமாய் கொதித்துக்கொண்டிருக்கிற உண்மை. எதிர்காலம் குறித்த வெறுமை முகத்தில் சூழ்ந்து கொண்டிருக்கும் நமது இளைஞர்களுக்கு இந்த மே தினம் சொல்லும் செய்தி இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஆனால் வேறொரு கோணத்தில் பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. உயிர் வாழ நான்கு மணி நேரத் தூக்கமே போதுமானது என்று இளைஞர்களை பேச வைக்கிறது இந்தியா டுடே பத்திரிக்கை. தூக்கத்தையும், ஓய்வையும் எவ்வளவு விட்டுக் கொடுக்கிறோமோ, அவ்வளவு வசதியான வாழ்வை பெற முடிகிறது என அவர்கள் புதிய சித்தாந்தம் பேசுகிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பழைய உலகமென்று சிரிக்கிறார்கள். தொலைக் காட்சிகளோ மே தினக் கொண்டாட்டம் என்று சத்தம் போட்டுத் தொலைக்கின்றன.

இவை எல்லாவற்றோடும் தான் மே தினத்தை நாம் நினவு கூற வேண்டியிருக்கிறது. புதிய மாறுதல்களுக்கேற்ப மே தினத்தின் இலட்சியங்களும், நோக்கங்களும் பரிணமிக்க வேண்டி இருக்கிறது. சிகாகோவில் உயிர்நீத்த தொழிலாளிகளின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி முன்னேற வேண்டி இருக்கிறது. வாழ்வதற்காக உழைப்பது என்பதற்கும், உழைப்பதற்காக வாழ்வது என்பதற்குமான  பேதங்களை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

மே தினம் கொண்டாடப்படுவதற்கு அல்ல, போராடுவதற்கு. மே தினம் என்பது இந்த பூமி உருண்டையில் வாழும் கஷ்டப்பட்ட எல்லா மனிதர்களின் நாள். அவர்களின் போர்க்குரல் ஒலித்த நாள். முதலாளித்துவத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை எச்சரிக்கும் நாள். அதிகார பீடங்கள் இன்று ஆரவாரமாக இருக்கலாம். நமது அமைதி புயலை உருவாக்கக்கூடியது என்பது அவர்களுக்கு இப்போது தெரியாது. டாட்டா இண்டிகாவில் பணிபுரிபவர்களும், சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரிபவர்களும், ஆட்டோ ஒட்டுபவர்களும், செருப்பு தைக்கிறவர்களும் என சகல பகுதி உழைக்கும் மக்களும் ஒன்றுகூடி  நிற்க, அப்போது அந்த செந்நிறக் கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருக்கும். லால் சலாம்!

ஹே மார்க்கெட்டில் அமைக்கப்பட்டுள்ள நினவுச் சின்னத்தில் 'உங்கள் சப்தங்களை விட எங்கள் அமைதி சக்தி வாய்ந்ததாக மாறும் ஒருநாள் வரும்' என்று  செதுக்கப்பட்ட ஆகஸ்ட் ஸ்பைசின் வார்த்தைகள் கல்லில் தவமிருக்கின்றன.

 

*

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இன்குலாப் ஜிந்தாபாத் = வாழ்க புரட்சி

    எட்டுமணி நேர உழைப்பு தான் ஒரு மனிதனை முழுமை ஆக்கும்.

    அலுவலக பனி, குடும்பம், ஆன்மிகம், பொழுதுபோக்கு, சமூக சிந்தனிகள் ஆகிய எல்லாம் கலந்தால் தான் மனிதனால் முழு பங்களிப்பு அளிக்க முடியும். அதை விடுத்து ஒரு உழைப்பாளியை தினமும் பதினான்கு மணி நேரம் உழைக்க சொல்லும் நிறுவனகள் எதுவும் நிரந்தர வெற்றி பெற்றதாய் சரித்திரம் இல்லை.


    மென்பொருள் உழைப்பாளிகள் அனைவரும் பாவம், தினமும் பன்னிரண்டு மணி நேரம் உழைப்பு, தங்க முட்டை இடும் வாத்தின் வயித்தை கிழிக்கிறார்கள் முதலாளிகள்.

    குப்பன்_யாஹூ

    (The reason for failure of private schools, colleges, are also due to this only, they donot follow the concept of WORK WHILE WORK, PLAY WHILE PLAY)

    பதிலளிநீக்கு
  2. மே தின வாழ்த்துக்கள்! சிறப்பான கட்டுரை. 8 மணி நேர வேலையை உழைக்கும் வர்க்கம் எவ்வாறு பெற்றெடுத்தது என்பதை வரலாற்று காரணிகளோடு விளக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா1 மே, 2009 அன்று PM 1:33

    Ok,you have rightly said abt the situations>>எட்டு மணி நேர வேலை உத்திரவாதம் செய்யப்பட்டதாய் காட்சியளிக்கிற அந்த 10 சதவீதத்தினருக்கும் இப்போது நிலைமைகள் மாறி வருகின்றன.If it is so, what the TRADE UNION MOVEMENTS ARE DOING so far? What is wrong with the present situation?why they unable to stop the things ? they have to change the tactical way and custom methods to oppose/resist the prevailing conditions.Where is "wrong" continue ?we have to Analise the thing with open mind and self criticism.where is the TRADE UNION'S POSITION ?They are in "DEFENSE POSITION OR OFFENSIVE POSITION"/?
    This area of discussion is urgent need of the hour.Remember>>>Unable to form unions-very basic thing-examble>HUNDAI EXPERIENCE.
    R.Selvapriyan-Chalakkudy

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1 மே, 2009 அன்று PM 1:43

    Kindly, as a trade unionist,write a article about how we are loosing 8 hours works now a days ??How we are going to protect 8 hours work?
    what the so called militant trade unions in the banking sector doing about the abnormal working hours prevailing ?The bank employees and officers are returning from bank ONLY AFTER FINISHED their allotted works.
    When we going to discuss about this and going to take concrete decisions against this practice.
    First you bank employees stop this abnormal working hours in banking industry?
    first you bank employees ensure 8 hours work in your banking sectors.can you ? when ?
    My questions must be think positively and considered urgently
    R.SELVAPRIYAN-CHALAKKUDY

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1 மே, 2009 அன்று PM 1:49

    வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் Questions இவை.write articles in such a thought provoking way and create a debate for solutions.It is not indiscipline in organizations.
    This is the need of the hours.the discussions will lead us towards right way and we can then only arouse the employees.Then only they will get confidence on organizations.
    -R.SELVAPRIYAN-CHALAKUDDY

    பதிலளிநீக்கு
  6. மே தினத்தில் பல விஷயங்கள் குறித்த சிந்தனையைத் தூண்டும்படியான பதிவை அளித்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. /

    எட்டுமணி நேர உழைப்பு தான் ஒரு மனிதனை முழுமை ஆக்கும்.
    /

    வேலையே எப்ப காலியாகும்கிற நிலமைல இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்வியே :((

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான கட்டுரை
    மிக்க நன்றிகள்

    பதிலளிநீக்கு
  9. சிந்தனையைத் தூண்டும் கட்டுரை! இந்தியா டுடே முதலாளிகளுக்குத்தானே தூபம் போடுகிறது! மே தின வரலாற்றை அறியத் தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. பல நிறுவனங்களில் தொழிலாளர் சங்கங்களே இல்லை என்பது வேதனையுடன் நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று.
    இருக்கும் சங்கங்களும் பிளவுண்டு கிடக்கிறது.

    இப்போதைய நிலைமையில் வேலை என்று ஒன்று இருந்தால் போதும் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.வேலை நேரம் எல்லாம் மனதில் வரமாட்டேன்கிறது.

    மொத்தத்தில் மே 1 அரசாங்க விடுமுறை தினம் மட்டுமே, தொழிலாளர்களுக்கு எப்போதும் போல் ஒரு உழைக்கும் தினம் தான்.

    பதிலளிநீக்கு
  11. குப்பன் யாஹு!
    நன்றி. முக்கிய மேலதிக தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். உண்மைதான்.

    சந்திப்பு!
    தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    செல்வப்பிரியன்!
    சில முக்கிய கேள்விகளை முன்வைத்து இருக்கிறீர்கள். தேவையான விளக்கங்களையும் கோரியிருக்கிறீர்கள். சொல்வதற்கு முயற்சிக்கிறேன். நன்றி.

    யாத்ரா!
    மிக்க நன்றி.

    மங்களூர் சிவா!
    //வேலையே எப்ப காலியாகும்கிற நிலமைல இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்வியே //
    இப்படியொரு நிலைமையை உருவாக்கியது முதலாளித்துவமும், உலகமயமாக்கலும் தானே!

    aneslinb!
    ரொம்ப நன்றி.

    சந்தன்முல்லை!
    நன்றி.

    கல்கி!
    ஆமாம். வலிக்கிற உண்மைகளை சொல்லியிருக்கிறீர்கள். இத எதிர்க்கிற மனோபாவம் முதலில் உருவாக வேண்டியிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  12. only white collar jobs will not improve our country.
    nowadays young indians expecting government jobs to get more salary and live a secured life.
    but if they work hard and do a own job they will earn more than government salary and they can live a rich life than a government employee.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!