-->

முன்பக்கம் , , � சீச்சீ...சிறியர் செய்கை செய்தார்!

சீச்சீ...சிறியர் செய்கை செய்தார்!

india

(பழைய டைரியின் பக்கங்களிலிருந்து)

 

எப்போது நினைத்தாலும் தலைநிமிர்ந்து கொள்ள வைக்கிறது. மகாத்மாவின் மீது நேசம் ஏற்படுகிறது. இத்தனைக்கும் அவர் யாரென்று அப்போது உலகம் அறிந்திருக்கவில்லை. ஒரு பாரிஸ்டராக மட்டுமே இருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு தாதா அப்துல்லா கம்பெனியின் வழக்கு சம்பந்தமாக பயணம் மேற்கொண்டிருந்தார். டர்பனிலிருந்து பிரிட்டோரியாவுக்குச் செல்லும் வழியில் மாரிட்ஸ்பர்க் புகைவண்டி நிலையத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது. வெள்ளைக்காரர் இல்லை என்பதால் முதல் வகுப்பு டிக்கெட் இருந்தும் சரக்கு வண்டியில் பயணம் செய்யவேண்டுமென்று எச்சரிக்கப்பட்டார். மகாத்மா மறுக்கவே, கீழிறக்கி விடப்பட்டார். அவரது சாமான்கள் பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்டன. அவரோ அங்கேயே இருந்து தனது உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார். புகைவண்டி நிலைய அதிகாரி அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் அவர் பிடிவாதமாக இருந்தார். வேறுவழியின்றி அடுத்தநாள் மாலை வண்டியில் அவர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிறத்துவேஷத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களுக்கான உறுதி பூண்டது அன்றுதான்.தனக்கு நேர்ந்த அவமானமாக மட்டும் அதைப் பார்க்காமல் ஒரு இனத்துக்கு நேர்ந்த அவமானமாகவும் அதை கருதினார்.

தனிமனித வாழ்விலும், பொது வாழ்விலும் மனசாட்சியோடு ஒரு மனிதன் நடத்திய உரையாடல் போல சத்திய சோதனை விரிகிறது. 2004 ஜூலை பிறக்கிற வரை நமது முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் இதை படித்திருந்தால் ரகசியமாய் தனக்குள்ளே சிரித்திருப்பார். 'எந்த கிறுக்கனாவது இப்படி எங்கேயோ நேர்ந்த அவமானத்தை வரிவிடாமல் எழுதி வைப்பானா? பேசாமல் சரக்கு வண்டியில் ஏறி போவதை விட்டு அந்த ஸ்டேஷனில் உட்கார்ந்து சத்தியாக்கிரகம் செய்வானா? விஷயத்தை அதோடு விடாமல் மற்றவர்களுக்கு நேர்கிற அவமானத்துக்காகவும் போராடுவானா' சந்தேகமில்லாமல் அவருக்குள் இப்படியெல்லாம் எண்ணங்கள் ஓடியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஆனால் விதியாகப்பட்டது வலியதுதான் போலும். உலகமே அவரைப் பார்த்து சிரிக்கும்படியாகி விட்டது.

ஜூலை முதல் வாரத்தில் அவர் மீது அந்த அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியது. முந்தைய அமெரிக்க துணைச்செயலாளர்களில் ஒருவரான ஸ்ட்ரோப் டல்போட் வெளியிட்ட " Engaging India: Diplomacy and the Bomb " என்னும் புத்தகத்தில் இருந்து அது வீசப்பட்டு இருந்தது. ஜார்ஜ் பெர்னான்டஸ் இந்தியாவின் இராணுவ அமைச்சராக அமெரிக்காவுக்கு போயிருந்த போது இரண்டுமுறை விமான நிலையத்தில் ஆடை அவிழ்க்கப்பட்டு பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டு இருந்தது. 2002ம் ஆண்டின் ஆரம்பத்திலும், 2003ம் ஆண்டின் மத்தியிலும் இந்த அவமானம் நடந்திருக்கிறது. ஜார்ஜ் பெர்னான்டஸே இதனை ஸ்ட்ரோப் டல்போட்டிடம் ரொம்ப கோபமாக தெரிவித்திருக்கிறார். சவப்பெட்டி ஊழல், தெஹல்கா விவகாரங்களில் மாட்டிய போது கூட அயராத முன்னாள் இராணுவ அமைச்சருக்கு இந்தச் செய்தி கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இரண்டுநாள் அமைதியாக இருந்தவர் பிறகு மெல்ல 'ஆமாம்..உண்மைதான்' என்றார். இதனை அப்போதே வாஜ்பாயிடம் தெரிவித்ததாகவும்  முணுமுணுத்துக்கொண்டார். 'இனி அமெரிக்காவுக்கு தான் போவதேயில்லை'யென முடிவு எடுத்திருப்பதாகவும் சொன்னார். அடுத்தநாள், "கோர்ட்டை அவிழ்த்தார்கள். ஷுக்களை அவிழ்க்கச் சொன்னார்கள். கைகளை விரித்து மேலே தூக்கச் சொன்னார்கள், அவ்வளவுதான்" என்று தனது முழு நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள பார்த்தார். 'ஷூக்களை கழற்றச் சொல்வது மிகச் சாதாரண, வழக்கமான பாதுகாப்புச் சோதனைதான்" என உடுக்கை இழந்த கையாக அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் அத்வானி. பாரத மாதா கீ ஜெய்!

குஜராத் கலவரங்களின் போது ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்று பாரளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டித்த போது, 'கலவரங்களின் போது பெண்கள் கற்பழிக்கப்படுவது இயல்புதான்' என்று பதிலளித்த ஜார்ஜ் பெர்னான்டஸ் இந்த ஆடையவிழ்ப்பையும்  இயல்பான ஒன்றாய் கருதி இருக்க வேண்டும். இயல்பான விஷயமென்றால் ஏன் ஸ்ட்ரோப் டல்போட்டிடம் அன்றைக்கு ஜார்ஜ் பெர்னான்டஸ் கோபப்பட்டாராம். எதற்காக பாஞ்சாலியின் அள்ளிமுடியவே மாட்டேன் சபதம் போல இனி அமெரிக்காவுக்கு போகவே மாட்டேன் என முடிவு எடுக்க வேண்டுமாம். இந்த மாமனிதர்கள்தான் இந்தியா உலக அரங்கில் ஒளிர்கிறது என்றார்கள். இந்தியாவை வல்லரசாக்கியே தீருவோம் என சூளூரைத்தார்கள். ஜூலை 14ம்தேதி இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவு உதவிச் செயலாளர் ஆர்மிட்டேஜ் விஷயமறிந்து அதிர்ச்சியடைந்தாராம். மானமிகு ஜார்ஜ் பெர்னான்டஸுக்கு விமானநிலையத்திலிருந்து காரில் வந்துகொண்டு இருக்கும் போதே போன் செய்து 'ஸாரி' சொன்னாராம். அவருக்கும், அமெரிக்காவுக்கும் ஜார்ஜ் பெர்னான்டஸ் உற்ற நண்பர் என்று நன்னடத்தை சான்றிதழ் வேறு கொடுத்தார். சாயங்காலம் அந்த ராட்சச மொட்டைத்தலை உருவம் இந்தியக்குழந்தைகளோடு கொஞ்சியதை காண்பித்தவாறு தொலைக்காட்சிகள் இந்தச் செய்திகளை வாசித்தன. எவ்வளவு பெரிய விஷயம். அமெரிக்க அதிகாரி ஒருவரே மன்னிப்பு கேட்டு விட்டார். ஸாரி என்பது எவ்வளவு பெரிய வார்த்தை.

ஆளாளுக்கு உண்மைகள் சொல்ல அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் மான்சிங் விஷயத்தை மேலும் போட்டு உடைத்தார். 'இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் அவர், அவரை சோதனையிடக்கூடாது' என்று சொன்ன பிறகும் சோதனை நடந்தது என்கிறார். இது போல பல இந்திய உயரதிகாரிகளுக்கும் நடந்திருக்கிறது என்னும் அடுத்த தகவலும் அவரிடமிருந்து வருகிறது.

கேட்க கேட்க ஆத்திரமும், எரிச்சலும் பற்றிக்கொண்டு வருகிறது. தூ என்று காறித் துப்பலாம் போல இருக்கிறது. ‘வந்தே மாதரம்’ என்று அடிவயிற்றில் இருந்து இழுத்து , ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று திரும்பத் திரும்ப யாருக்காக இங்கே பாடித் தொலைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவமானத்தில் நமக்கு கூனிக் குறுகத் தோன்றுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் நடந்ததற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஊமை கனவு கண்ட மாதிரி ஒளித்து வைத்திருக்கிறார்கள். தெரிந்த பிறகு அதெல்லாம் ஒன்றுமில்லை. சாதாரண விஷயம் என்பதாய் சித்தரிக்கிறார்கள். வெட்கக்கேடு. அவிழ்க்கப்பட்டது ஆடை மட்டுமா? அவமானப்பட்டது அவர் மட்டுமா? நூறு கோடி இந்தியருக்கும் தலைகுனிவு. எப்பதம் வாய்த்திடுமேனும்’ யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்.

கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில்தான் சீனப்பிரஜை ஒருவருக்கு அமெரிக்காவில் ஒரு அவமானம் நிகழ்ந்திருக்கிறது. ஜஹு யான் என்னும் 37 வயது சீனப் பெண்மனியை நயாகரா அருவி அருகில் போதை மருந்து வைத்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகப்பட்டு துன்புறுத்தி இருக்கிறார்கள். இதனைக் கேள்விப் பட்டதும் சீன அரசு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. 'உலக அரங்கில் அமெரிக்காவின் அடாவடித்தனம்' என ஒரு சீனப்பத்திரிக்கை கடுமையாக எழுதியது. சீனாவின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்க வெளியுறவு மந்திரி காலின் பாவெல்லுடன் கோபமாக பேசினார். இப்போது துன்புறுத்திய அமெரிக்க அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்து வருடங்கள் ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். தனது நாட்டு சாதாரண பிரஜை ஒருவருக்கு நேர்ந்த அவமானத்துக்கு சீன தேசமே துடித்துப் போகிறது. இங்கே தனது நாட்டு பாதுகாப்பு அமைச்சருக்கே அவமானம் நேர்ந்தபோதும் இந்தியா வாய் மூடிக்கொண்டு இருக்கிறது.

செப்டம்பர் 11ல் இரட்டை கட்டிடங்கள் தாக்கப்பட்ட பிறகு அதிஜாக்கிரதையாக இருக்க அமெரிக்காவின் பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சி நடந்து விட்டதாக அமெரிக்கா கூறுகிறது. ஜார்ஜ் பெர்னான்டஸ் என்ன எல்லை தாண்டிய பயங்கரவாதியா? ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை இப்படி அவமானப்படுத்தும் தைரியம் எப்படி அவர்களுக்கு வந்தது? எல்லாம் இவர்கள் கொடுத்த இடம்தான். இவர்கள் எழுதிக் கொடுத்திருக்கிற அடிமை சாசனம்தான். அந்நிய முதலீடுகளுக்கும் பொருட்களுக்கும், எந்த தடையுமில்லாமல் திறந்துவிட்ட தாராளம் எல்லாம் இவர்களை புழுக்களாய் நினைக்க வைத்திருக்கிறது. எவனொருவன் சொந்த நாட்டை மதிக்கிறானோ அவனே அடுத்த நாட்டிலும் மதிக்கப்படுவான். மரியாதை என்பது நம்மை நாம் தக்க வைத்துக் கொள்வதில் இருக்கிறது.

Related Posts with Thumbnails

15 comments:

 1. சிந்திக்க வைத்த அருமையான பதிவு

  ReplyDelete
 2. இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்து விட்டார்

  ReplyDelete
 3. எழுதிக் கொடுத்திருக்கிற அடிமை சாசனம்தான். அந்நிய முதலீடுகளுக்கும் பொருட்களுக்கும், எந்த தடையுமில்லாமல் திறந்துவிட்ட தாராளம் எல்லாம் இவர்களை புழுக்களாய் நினைக்க வைத்திருக்கிறது.

  அதையே தான் இன்றைக்கு மன்மோகன்சிங்கும் பா.சி செய்துவருகிறார்கள்

  ReplyDelete
 4. இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் அமெரிக்காவின் கூட்டாளியா அல்லது அடிமையா? என தெளிவாக தெரிகிறது.
  நமது பாதுகாப்பு அமைச்சருக்கே இந்த நிலமையென்றால் இங்கிருந்து செல்லும் சாதரண பிரஜைகளை எப்பாடு படுத்துகிறதோ அதுவும் பாஸ்போர்டில் “ஹாசன்,அப்துல்லா” என்ற பெயர் இருந்தால் எல்லாம் தீவிரவாதிகள் என்று இந்துத்துவாவிற்கு சமமாகத்தான் அமெரிக்காவும் யோசிக்கிறது.

  ReplyDelete
 5. அருமையான பதிவு, ஆனால் சமுதாயம் நான், என் குடும்பம் என்று சுருங்கிக்கொண்டு வருகிறது. நாட்டின் தன் மானம் என்பதெல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சொல்லாகி விட்டது.

  ReplyDelete
 6. The last few lines are very important.People who respect their own country will be treated respectfully by people of other countries! Are you listening Mr.Vaiko?I presume not.Even when he was put in prison by Jayalalitha for years,his own partymen were holding ministry posts in the central govt of India!Respect? Self respect?

  ReplyDelete
 7. தனது நாட்டை மதிக்கத் தெரிந்தவன்.
  ஒரு போதும் கோடிகோடியாய்க்
  குவிக்கமாட்டான். உள்ளத்தில்
  ஒளி உண்டெனில் மட்டுமே வாக்கினில் வரும்.
  அதுகளுக்கு எப்படி வரும்.
  அருமை, அசத்து தோழா.

  ReplyDelete
 8. சுல்தான்!

  உங்கள் கமெண்ட்டின் அர்த்தம் புரியவில்லை.

  ReplyDelete
 9. பொன்ராஜ்!
  வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  விடுதலை!
  ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான்.

  ReplyDelete
 10. ஹரிஹரன்!
  மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதேதான்.

  ReplyDelete
 11. கும்மாச்சி!

  தங்கள் வருகைக்கும், முதல் பகிர்வுக்கும் மிக்க சந்தோஷம்.

  ReplyDelete
 12. கும்மாச்சி!

  தங்கள் வருகைக்கும், முதல் பகிர்வுக்கும் மிக்க சந்தோஷம்.

  ReplyDelete
 13. அனானி!

  நன்றி.புரிதலுக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 14. சுல்தானுடைய பின்னூட்டத்தின் பொருள் 'ஆண்மை'யுள்ள ஒரே பிரதமராக இருந்த இந்திராவும் சுடப்பட்டு இறந்துபோனார் என்பதாகும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 15. எப்படி ஸ்வாமி காந்தியோட இவங்களை ஒப்பிட்டுப் பார்க்கத்தோன்றியது? வெறும் சம்பவங்களை மட்டும் ஒப்பிட்டா? போலி தேச பக்தி, தலைவர்கள் மத்தியில் ரொம்பவே தலை விரித்தாடுது. இவர்களுக்கெல்லாம் காசுதான் பிரதானம். இந்திய பட்ஜெட்டோட துண்டு விழும் தொகை அளவிற்கு ஒவ்வொருத்தரும் ஸ்விஸ் பேங்கில் சேர்த்து வைத்திருக்காங்க. கால நக்கினாலும் காசு கிடைக்கும் என்றால் செய்வாங்க. இதுக்கெல்லாம் விடிவு நாம தெளியறதுதான். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி. நாகநாதன், திருச்சி.

  ReplyDelete