அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் கவலை!
ஒரு கிராமத்து பெண்மணியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசும் போது, அந்த அம்மா, அதைவிட தனது பிரச்சினையையே பெரிதாக பார்த்ததை தீராத பக்கங்கள்-1ல் பதிவு செய்திருந்தேன். அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் கவலை என்றும் முடித்து இருந்தேன். இதுதான் நமது மக்களின் மனோநிலையாக இருக்கிறது என்று ரெங்கா தனது பின்னூட்டத்தில் பொதுவாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் சிலர் அந்தக் கருத்தை ஆமோதித்தும் இருந்தனர். அனானியாக வந்த 27 வயது தம்பி, இப்படி எழுதுவது சரியா என்று கேட்டு இருந்தார். மக்களின் மனோநிலை குறித்தும், நமது சமூகச்சூழல் குறித்தும் ஓரிரு வரிகளில் விளக்கம் சொல்லிவிட முடியாது சுருக்கமாக சொல்வதற்கும் என்பதால் இந்த தொடர் பதிவு அவசியம் எனக் கருதுகிறேன்.
இப்படி அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் கவலை என்பது ஒரு சமூக மாற்றத்துக்கு பெரும் விரோதமானது என்பதை முதலிலேயே சொல்லி விடுவது நல்லது என நினைக்கிறேன். நெருக்கடி மிகுந்த வாழ்க்கை ஒவ்வொருவரையும் இப்படியான கோட்டுக்குள் அடைத்து அதற்குள்ளேயே முட்டி மோதிக் கொள்ள வைக்கிறது. தன் வீடு, தன் குடும்பம், தன் மக்கள் என ஒவ்வொருவரையும் சுருங்கிடச் செய்கிறது. ‘வெளியே வா’ என்று அவர்களை அழைத்து அழைத்துக் களைத்துப் போய் கிடக்கின்றன நமது பல இயக்கங்கள்.
இந்த இருபத்தைந்து வருட கால தொழிற்சங்க அனுபவத்தில் நொந்து போனது இப்படிப்பட்ட மனோபாவத்தால்தான். விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், வேலை நியமனத்தடை, குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியகளை நியமித்து உழைப்பைச் சுரண்டுவது போன்ற எந்த கோரிக்கையை விடவும் இங்கு ஒருத்தருக்கு அவருடைய பணிமாறுதல்தான் பெரும் பிரச்சினையாகிறது. அதைப் பற்றிப் பேசாமல் நீங்கள் அரசின், நிர்வாகத்தின் எந்த நடவடிக்கையை விமர்சித்தாலும் அவர்களது காதுகளையேப் போய்ச் சேராது. ஒருநாளைக்கு ‘இவ்வளவு தூரம் நான் பஸ்ஸில் போகிறேன்’, ‘இவ்வளவு காசு செலவழிக்கிறேன்’, ‘இரத்த அழுத்தம் வேறு இருக்கிறது’ என்று அவர்கள் தங்கள் கஷ்டங்களையே விவரிப்பார்கள். கேட்டாக வேண்டும். அதைத் தீர்க்க முயல வேண்டும். ‘நாளைக்கு ஒரு கண்டனப் பேரணி வாருங்கள் என அழைத்தால், “மகள் இந்த வருஷம் பிளஸ் டூ படிக்கிறாள், பக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டும், முக்கியமான வருஷம் பாருங்க...” என்று சொல்லி கருமமேக் கண்ணாக பைக்கை ஸ்டார்ட் செய்வார். “சரி, அடுத்த தடவை வந்துருங்க..” என அவர் முகம் சுளிக்காமல் அனுப்பி வைக்க வேண்டும்.
அவர்களைக் குறை சொல்லி புண்ணியமில்லை. இந்த அமைப்புதான் ஒவ்வொருவரின் மேலும் ஆமையின் ஓடு கொண்டு பொத்தி வைத்திருக்கிறது. கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளாய் தான் காட்டும் வழியிலேயே பயணம் செய்ய மட்டுமே அனுமதிக்கிறது. தங்கள் பிரச்சினைதான் உலகத்திலேயே பிரதானமானது என நினைத்து அந்த வழியிலேயே ஓட வைக்கிறது. ஒரு நிச்சயமற்ற தன்மையில் சதா நேரமும் காலம் தனிமனிதர்களை அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறது. எந்த வாய்ப்பை தவறவிட்டாலும், அதோ கதிதான் என எச்சரிக்கை செய்கிறது. சக மனிதன் ஒவ்வொருவனையும் தன்னை வஞ்சித்து முன்னேற அருகில் நிற்பவனாக சந்தேகம் கொள்ள வைக்கிறது. அவரவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதிலேயே முழுக் கவனமாகிறார்கள். முதலாளித்துவத்தின் மாபெரும் சாபம் மனிதர்களை அழுத்துகிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு என்னும் உண்மையை சிதைத்து, தொழுவத்தில் அவனைக் கட்டிப் போட்டு வைக்கிறது.
இப்படிப்பட்ட மனிதர்களிடம் அவர்களின் பிரச்சினைகளைப் பேசிப் பாருங்கள். மிகுந்த நேசத்துக்கும், நம்பிக்கைக்கும் உரிய மனிதராய் நெருங்கி வருவார்கள். எல்லாவற்றையும் உங்களிடம் சொல்வார்கள். கேட்டுக்கொண்டே வெளியே அழைத்து வரவேண்டும். மிகுந்த பொறுமையோடும், நிதானத்தோடும் உரையாடல் நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நமது அழைப்புக்கு வந்துவிட மாட்டார்கள் என்பதை இயக்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல ரொம்ப காலம் நெருங்காமல் இருந்துவிட்டு, திடுமென போய் நின்றாலும் வித்தியாசமாய் பார்ப்பார்கள்.
இலங்கைப் பிரச்சினையல்ல, எல்லாப் பிரச்சினைகளிலும் நாம் இந்த சாமானியர்களை அணுகுவதில் உள்ள கோளாறுதான், அவர்கள் பொதுவெளிக்கு வராமல் அன்னியப்பட வைக்கிறது. அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசாமல், ‘இதுதான் முக்கியப் பிரச்சினை, எரியும் பிரச்சினை’ என்று கையைப் பிடித்து இழுக்கவெல்லாம் முடியாது. உணர்வு மயமாக்கி, அவர்களை ஆட்பட வைப்பதும் சரியான முறையாய் இருக்காது. எவ்வளவு சீக்கிரமாய் வருவார்களோ, அவ்வளவு சீக்கிரமாய் வெளியேறவும் செய்வார்கள். மறக்கவும் செய்வார்கள்.
தன் பையன் படிப்புக்கு பீஸ் கட்ட, பணம் அனுப்ப பாடுபடும் அந்தத் தாயிடம், அவர்களது பிரச்சினையைப் பேசி, மகனின் எதிர்காலம் பேசி, அதில் உள்ள பிரச்சினைகள் பேசி, அதற்குப் பிறகு இலங்கையில் நம் தாய்மார்கள் வெடித்துச் சிதறிய தம் குழந்தைகளை மார்போடு அணைத்து அழுகிற சோகம் குறித்துச் சொல்லியிருக்க வேண்டும். அப்போது அந்தத் தாயிடம் மௌனம் உறைந்து பெருமூச்சு வருத்தத்தோடும் ,கோபத்தோடும் வெளிப்பட்டு இருக்கும். அதுபோலவே தமிழக மக்களிடம், அவர்களின் பிரச்சினைகள் எதையும் பேசாமல், இலங்கையை மட்டும் பேசிக் கொண்டு இருந்தால் அது எவ்வளவு தூரம் எடுபடும் என்று தெரியவில்லை.
“இந்த வாழ்க்கைதான் நமக்குப் பிரச்சினைகளைத் தருகிறது. இந்த வாழ்க்கைதான் நமக்கு வேதனைகளைத் தருகிறது. இந்த வாழ்க்கைதான் அவைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்கிறது” என்னும் இந்த வரிகள் தாய் நாவலில் வெளிச்சம் போல வந்து மனதில் இறங்கும். எதிர்கொள்ளும் வாழ்க்கையின் சகல கூறுகளையும் பேச வேண்டும். அப்போதுதான் ‘அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் கவலை’ என்பது மாறும். சமூகமும் மாறும்.
*
“கண் அவிஞ்சு போச்சே...”
சூரியன் மறைவது போல பொன்னுத்தாய் ஆச்சிக்கு பார்வை தேய்ந்து கொண்டு இருந்தது.
குருடி என்று யாராவது சொல்லிவிட்டால் மட்டும் சுருங்கிய உடலெல்லாம் நடுங்கக் கோபம் வரும். சாபம் விட்டுத் தீர்ப்பாள்.
சர்க்கரை நோயால் தங்கவேல் இறந்து பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. தனியாகவே தன் குடிசையில் சுவாசித்து வந்தாள்.
மகன்களின் வீட்டில், நினைத்த நேரம் சென்று எதையாவது கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். அவர்களின் பாசமும், ஒற்றுமையுமே அவளது ஆயுளை கெட்டிப் படுத்தின. இரவுகளில் திண்ணைகளில் உட்கார்ந்து அவர்களைப் பீற்றிக்கொள்ளா விட்டால் தூக்கம் வராது.
கால்களில் கண்கள் முளைத்திருக்க ஊரின் பாதைகளெல்லாம் அத்துப்பிடி அவளுக்கு.
வழிமறிக்கும் செடிகள் விலக்கி சரளமாய் எல்லா முடுக்குகளிலும் நடந்து போவாள்.
திடுமென ஒருநாள் காய்ச்சலில் படுக்க, ‘பெருசு இந்த தடவை போய் விடும்” என்றே ஊர் பேசிக்கொண்டது.
ஆஸ்பத்திரிக்கு வரமாட்டேன் என ஆச்சி அடம் பிடிக்க, கம்பவுண்டரை வரவழைத்து ஊசி போட வைக்க மட்டும் மூத்த மகனால் முடிந்தது. நம்பிக்கைகள் இல்லாமல், ‘சரி... என்ன செய்ய முடியும்’ என்று மனதைத் தேற்றிக் கொண்டான். மருமகள்கள் மாற்றி மாற்றி கஞ்சி கொண்டு வந்து கொடுத்தனர்.
யாரும் எதிர்பாராமல் எட்டாவது நாள் ஆச்சி அவள் பாட்டுக்கு எழுந்து குளித்து உட்கார்ந்தாள்.
“பெருசுக்கு சாவே கெடையாது” என்று ஊர் இப்போது பேசிக்கொண்டது.
வழக்கம் போல தெருக்களுக்குள் வளைய வந்தவள் சந்தியம்மன் முடுக்கு தாண்டி, இடதுபக்கம் சந்தில் நுழையவும் எதோ தடுத்தது. தொட்டுப் பார்த்தவளுக்கு எதிரே தட்டியடைப்பு ஒன்று தட்டுப்பட்டது. திகைத்து நின்றாள்.
“பாட்டி! நேத்து ஒங்க இளைய மவனும் நடுவுல உள்ள மவனும் சண்ட போட்டு பாதைய மறிச்சு அடைச்சுட்டாங்க. ஒங்க இளைய மவன் இடமாம் இது”
அப்படியே பொன்னுத்தாய் அங்கேயே உட்கார்ந்து “ஐயோ, எனக்கு கண் அவிஞ்சு போச்சே, ஒண்ணும் தெரியலய” என்று சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்.
மாதவராஜ் பக்கங்கள் 1
சென்ற ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் ‘மக்கள் திரை இயக்கம்’ என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேச அழைத்திருந்தார்கள். உள்ளூரில் காளிமுத்து என்பவர் இயக்கியிருந்த ‘தேசீய விருது’ என்னும் குறும்படம் திரையிடப்பட்டது. மிகச்சாதாரண காமிரா, நேர்த்தியற்ற இசைப் பின்புலம், தெளிவற்ற எடிட்டிங் எல்லாவற்றையும் மீறி படம் பார்வையாளர்களை ஊடுருவியது. படம் முழுக்க ஒரு கிராமத்தில், கவனிப்பாரற்ற ஒருச் சின்ன கட்டிடத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் முகங்களாய் மாறி மாறி காட்டப்படுகின்றன. உரையாடல்களே இல்லை. பள்ளியில் அவர்கள் உட்கார்ந்திருப்பது, பாடங்களை அவர்கள் கவனிப்பது என காமிரா பேசிக்கொண்டே இருக்கிறது. குளோசப் காட்சிகளில் அந்தக் கண்களில் மின்னும் கனவுகளை நாம் வாசிக்க முடிகிறது. முள் அடித்து விறகு சுமந்து பிழைக்கும் குடும்பத்தில் இருந்து கல்வி படிக்க வந்த சிறுவனின் உடலில் உள்ள காயங்களையும், சிராய்ப்புகளையும் மீறி அந்த சிறுவனும் கரும்பலகையை பார்த்துக் கொண்டு இருக்கிறான். பள்ளி விழாவில் அவன் முதல் மாணவனாய் தேறியதற்கு கிராமத்துப் பெரியவர் எதோ ஒரு பரிசை வழங்குகிறார்கள். அனைவரும் கை தட்டுகிறார்கள். படம் இவ்வளவுதான். தேசீய விருது என்று இயக்குனர் எதைச் சொல்ல வருகிறார் என்பது புரிகிறது.
எனக்கு அந்தப் பையனின் நிலையில்தான் இயக்குனரும் இருப்பதாகப் பட்டது. வசதிகளும், வாய்ப்புகளும் இருந்தால் காளிமுத்துக்களும் தேசீய விருதுகளை தமிழ்ச்சினிமாவுக்கு வாங்கித்தரத்தான் செய்வார்கள்.
0000
கடந்த இரண்டு நாட்களாக கோவில்பட்டியில் ஆரம்பித்து, தூத்துக்குடி சென்று, திசையன்விளை வரை எங்கள் கிராம வங்கிக்கிளைகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தோம்.
காலையிலேயே புறப்பட வேண்டி இருந்ததால் டி.வி செய்திகள் பார்க்கவில்லை. கோவில்பட்டி தாண்டி எட்டையபுரத்துக்குள் நுழையும்போது போனில் பேசிய நண்பர் ஒருவர் சொல்லித்தான் கலைஞரின் திடீர் உண்ணாவிரதம் தெரியும். ‘நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்னும் அளவுக்கு நண்பரின் குரலில் தெரிந்த பரபரப்பு கண்ணெதிரே எங்கும் தெரியவில்லை. எல்லாம் அது அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டு இருந்தன. இடையில் கீழ ஈரால் என்னும் சின்ன ஊரில் டீக் குடித்தோம். கடையில் ஒருவர் கேட்டார் “கருணாநிதி உண்ணா விரதம் இருக்காராமே”. நான் சுவராஸ்யமாகி அவர் பக்கம் திரும்பினேன். டீ ஆற்றிக் கொண்டு இருந்தவர் மிகச் சாதாரணமாகச் சொன்னார்: “அவரு எல்லா எடத்துக்கும் போக முடியாதுல்லா... அதான் இருந்த எடத்துல இருந்தே பிரச்சாரம் செய்றாரு” டீக்குடித்துக் கொண்டு இருந்த எனக்கு புரை ஏறியது.
0000
காரில் பயணம் செய்கிறபோது எனக்கும் அண்டோவுக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. யுத்ததின் கோரக் காட்சிகளை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டோம். விடுதலைப்புலிகள் மீதான என் விமர்சனம் மட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினான். நாற்பதைத் தாண்டிய எங்களில், அவன் இருபத்தைந்தை நெருங்கியவனாய் இருந்தான். அருகிலிருந்த சட்டையப்பன் இலங்கைப் பிரச்சினை குறித்த விஷயங்களை ஆதியிலிருந்து குறிப்பிட்டு, விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் எப்படியெல்லாம் தவறாக இருந்தன என்பதையெல்லாம் பட்டியலிட்டார். எதையும் அண்டோ வாங்கிக் கொள்கிற மனோ நிலையில் இல்லை. “அண்ணா, நீங்களுமா” என்று என்மீது வருத்தப்பட்டான். “அங்கே செத்துக் கொண்டு இருக்கிறார்கள்... நீங்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்..” என்று சாடினான். அவன் குரலும், வேகமும் எனக்குப் பிடித்தது. எனக்குத் தெரிந்ததை அல்லது புரிந்ததை நான் சொல்லிப் பார்த்தேன். ஒருக் கட்டத்தில் கூட வந்தவர்கள் “இப்ப நீங்க ரெண்டு பேரும் இத நிறுத்துறீங்களா இல்லியா” எனச் சத்தம் போட்டனர்.
ஒரு கிளையில் நுழைந்து பேசிக்கொண்டு இருந்தோம். வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாய் இருந்தது. நகைக்கடன் பகுதியில் ஒரு அம்மா கையில் இரண்டு சின்னக் கம்மல்களோடு பாவம் போல நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் எதோ அதிகாரி என நினைத்து “சார் பேங்குக்கு வந்து ரெண்டு மண்ணேரம் ஆவுது. இங்ஙனேயே நிக்கிறேன். கொஞ்சம் சொல்லுங்க சார்“ என்றார்கள். “சரிம்மா” என்றுவிட்டு, அப்ரைசரிடம் பேசினேன். அவர் ஏற்கனவே கொடுத்திருந்த டோக்கன்களை காட்டினார். அந்த அம்மாவிடம் போய் “எந்த ஊரு” “என்ன பண்றீங்க” என்று விசாரித்துக் கொண்டு இருந்தேன். பேச்சுவாக்கில் “என்னம்மா இலங்கையில நிறைய தமிழர்களை கொன்னுட்டாங்க, தெரிமா” என்றேன். “ஆமா, சார்...சொன்னாங்க.. நகைக்கு எடை போட்டு எவ்வளவு கிடைக்கும்னு சொல்லுங்க சார். ஒரு ஆயிரத்து ஐநூறு வேணும், மெட்ராஸ்ல படிக்கிற பையனுக்கு அனுப்பனும்” என்றார்கள். என்ன படிக்கிறான் என்கிற விபரத்தைக் கேட்டுவிட்டு “என்னம்மா. அவ்வளவு பேர அங்கக் கொல்றாங்க.. அதை ரொம்பச் சாதாரணமா பேசுறீங்க” என்று கேட்டேன். “அட போங்க சார்.... இங்க அவ அவ செத்துச் செத்துப் பொழைக்கிறா...நாளைக்கு என்னச் செய்ய எங்கிறது உயிர வதைக்கு... எங்களைப் பத்தி யார் சார் கவலைப்படறாங்க..” என்று சட்டென்று குரல் உயர்த்திச் சொல்லவும் அமைதியானேன். நல்லவேளை, அண்டோ பக்கத்தில் இல்லை. சுற்றிலும் பெண்களும், ஆண்களும் ஏதேதோ கவலைகளோடு நின்றிருப்பதாய்த் தெரிந்தது. அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினைகள், அவரவர் கவலைகள்.
0000
பயணங்களின் போது அருகில் இருக்கும் நகரத்தில் உள்ள லாட்ஜில் இரவுகளில் தங்குவது என்றாகிவிட்டது. சமீபத்திய அனுபவம் முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. லாட்ஜை புக் பண்ணி, ”வாங்க சார்” என்று நகர்ந்த ரூம் பாய் பின் தொடர்ந்தோம். ஒரு அறையைத் திறந்தான். சட்டென்று மூடி அடுத்த அறை நோக்கி போனான். “என்னப்பா” என்றேன். “இப்பத்தான் ரூமை காலி பண்ணியிருக்காங்க... ஒழுங்கு படுத்தணும்” என்றான். அருகில் வந்த நண்பர் மூடிய அந்தக் கதவைத் திறந்து பார்த்தார். போர்வைகளும், தலையணைகளும் தாறுமாறாய்க் கிடந்தன. தரை முழுவதும் சிகரெட் துண்டுகளும், தீக்குச்சிகளும். மேஜையில் மதுபாட்டில்கள் சரிந்திருக்க, அறையே கசக்கிப் பிழியப்பட்டதாய்த் தெரிந்தது. ரூம்பாய் இரண்டு ரூம்கள் தள்ளி இன்னொரு அறையைத் திறந்து பார்த்தான். அருகில் போய் நின்றேன். அறை கலையாமல், கலங்காமல் இருந்தது. மேஜை மீது வாடிய ஒரு முழம் பூவும், இரண்டு ஹேர்பின்கள் மட்டும் இருந்தன. அமைதியும், லேசாய் பவுடர் வாசமும் மிதந்தபடி இருந்தன. “சார்.. கொஞ்சம் இருங்க.. படுக்கை விரிப்புகளையும், தலையணை உறைகளையும் மாத்தி தந்துர்றேன்” என்று வேலைகளில் மும்முரமானான். ‘இவ்வளவு வித்தியாசமா?’ என்று எனக்குள் குரல் ஒலித்தபடி இருந்தது.
*
குருவிகள் பறந்து விட்டன; பூனை உட்கார்ந்திருக்கிறது
ஒரே நேரத்தில் பூனையும், குருவியும் கர்ப்பமுற்றிருந்தன.
சாத்தியிருந்த ஜன்னலுக்கும், கம்பிக்கும் நடுவே குருவி கூடுகட்டிக் கொண்டது.
மாடிப்படி ஏறும் இடத்தில் இருந்த பரணில் போட்டு வைத்திருந்த டி.வியின் அட்டைப்பெட்டிக்குப் பின்னால் பூனை அடைந்து கிடந்தது.
பறப்பதும், பிறகு வருவதுமாய் சடசடத்த குருவியை அடிக்கடி பார்க்க முடிந்தது.
பூனையின் அசைவுகள் ரகசியமாகவே இருந்தன.
முட்டைகள் பொரிந்து, குஞ்சுகளின் அசைவுகள் ஜன்னல் கண்ணாடியில் மங்கலாய்த் தெரிந்தன.
மாடிப்படியில் யார் ஏறினாலும், அடிவயிற்றிலிருந்து எழுந்த பூனையின் உறுமல் பயம் தந்தது.
இரை கொண்டு வந்த குருவி வாய் பிளந்து ஊட்டி விட, குஞ்சுகள் சத்தங்கள் போட்டுக் கிடந்தன.
பரணிலிருந்து ஒருநாள் தாவி ஓடிய பூனை பிறகு வரவேயில்லை.
குருவிக் குஞ்சுகள் மெல்ல மெல்ல குதித்து கூட்டின் வெளியே எட்டிப் பார்த்தன.
பரணில் செத்துக் கிடந்த பூனைக்குட்டிகளை வீட்டுக்காரன் மூக்கைப் பொத்திக்கொண்டு எடுத்து வெளியே போட்டான்.
குருவிகள் சின்னதாய்ப் பறந்து வேப்ப மரக்கிளையில் உட்கார்ந்து சந்தோஷமாய் உலகைப் பார்த்துக் கூவியது.
மதில் சுவரில் பூனையொன்று தனியே கண்ணை மூடி உட்கார்ந்திருந்தது.
*
குண்டுகளால் வீழ்த்தப்பட்ட நமது குழந்தைகள்
சூரியனை அடைகாக்கும்
புல்லின் நுனியில் இருந்து
திரட்டிய கவிதையோடு
உலகைக் குலுக்க வந்தவன்
அவர்களில் இருக்கலாம்.
சாமானியர்களின் கையில்
காலத்தை ஒப்படைக்கும்
மக்களின் விஞ்ஞானத்தை
கண்டு பிடித்தவன்
அவர்களில் இருக்கலாம்.
செருக்குடன் நிமிர்ந்திருக்கும் மலைகளை
மிதித்து அடக்கி
உலகம் சமநிலை பெற
அகத்தியப் பிரயத்தனம் ஆற்ற வந்தவன்
அவர்களில் இருக்கலாம்.
கவசமாயிருக்கும்
மக்களையே வாளாக்கி
களத்தில் நிறுத்துகிற
மனிதகுலப் போராளி
அவர்களில் இருக்கலாம்.
யுத்தம் வீசிய குண்டுகளில்
மூளை வெடித்துச் சிதறிய
நமது ஆயிரக்கணக்கான குழந்தைகளில்
அவர்கள் இருக்கலாம்.
*
மக்களுக்காக, மக்களால், மக்களே!
மதம், மொழி, இனம், நிலம் என வித்தியாசங்களற்று சுரண்டப்படுவது நாங்கள்தான்.
மதத்தின் பேரால், இனத்தின் பேரால் வெறிபிடித்து எங்களுக்குள்ளே ஒருவரையொருவர் சிதைத்துக்கொள்வதும் நாங்கள்தான்.
அதிகாரம் எங்களுக்கு என்று சொல்லி ஏமாற்றப்படுவது நாங்கள்தான்.
அதிகாரத்தின் பேரில் யார் யாருக்கோ நடக்கும் யுத்தத்தில் கொல்லப்படுவதும் நாங்கள்தான்.
ஆனாலும்-
“மக்களுக்காக, மக்களால், மக்களே!”
*
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது!
அம்மா கேட்டாள்.
“எங்கே! ஒண்ணு ரெண்டு சொல்லு பார்ப்போம்!”
“ஒண்ணு”
மௌனம். அதற்கு மேல் குழந்தையால் சொல்ல முடியவில்லை.
மீண்டும், “சொல்லு” என்றாள் அம்மா.
“ஒண்ணு”
அத்துடன் நின்று விட்டது. அம்மா தரதரவென பையனை இழுத்துக் கொண்டு ஆசிரியரிடம் போனாள்.
“இவனுக்கு ஒண்ணு, ரெண்டு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“ஓ, கேட்டுப்பாருங்கள்! நூறு வரைக்கும் சொல்வானே!” என்றார் ஆசிரியர்.
“நீங்களே கேட்டுப்பாருங்க..” அம்மா சலித்தாள்.
:சொல்லுப்பா” என்றார் ஆசிரியர்.
“ஒண்ணு”
“ம்”
“ரெண்டு”
“ம்”
“மூணு”
“ம்...ம்”
“நாலு”
“ம்”
பையன் நூறு வரைக்கும் தயக்கமின்றி, ஆசிரியரின் “ம்’மைத்தொடர்ந்து சொன்னான்.
அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
'ஒவ்வொரு மனிதனின் முயற்சிக்கும் ஒரு அங்கீகாரம் தேவைப்படுகிறது. இந்த சிறுவனுக்கு ஆசிரியரின் ”ம்”தான் அங்கீகாரம்’ என்று ஆரம்பித்தது மிக நுட்பமான, உளவியல் பார்வையோடு கல்லூரிப் பேராசிரியர் மாடசாமி அவர்கள் எழுதிய புத்தகம்தான் ‘எனக்குரிய இடம் எங்கே?’.தனது கல்விக்கூட சிந்தனைகளை, அனுபவங்களின் மூலம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். வகுப்பறையில் ஒரு மாணவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற, அல்லது அவன் உட்காருகிற இடம் அவனுடைய இடம் அல்ல, அவனுடைய இடத்தை அவனேத் தேடி அறிய அல்லது அடைய வைப்பதுதான் கல்விக்கூடங்களின் தர்மம் என இந்த புத்தகம் மிக நெருக்கமாக உட்கார்ந்து நம்மோடு உரையாடுகிறது. 2004ல் வந்த புத்தகம், இப்போதுதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வகுப்பறை என்பது ஒருவழிப் பாதையல்ல, கூட்டு முயற்சி என்று பேராசிரியர் மாடசாமி இந்த சமூகத்துக்கு வழிமொழிகிறார். விவாதங்கள் மற்றும் உரையாடல்களோடு வகுப்பறையை ஒரு இயக்கமாக அனுபவித்து எழுதியிருக்கிறார்.வெற்றி, தோல்வி, மனஸ்தாபம், நட்பு, எழுச்சி, வீழ்ச்சி எல்லாம் கலந்த ஜீவனுள்ள சந்திப்பே வகுப்பறையாய் இருக்க வேண்டும் என்ற கனவை இந்த புத்தகம் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. கற்பவரும், கற்றுத் தருபவரும் ஒரு சேர வளருமிடம்தான் வகுப்பறை என்பது படிக்கும் போது நமக்குப் புரிகிறது.
ஆசிரியப்பணியை வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல், அதனை உயிரோட்டமுள்ளதாக்கிட ஒரு ஆசிரியர் ஈடுபடும் முயற்சிகளும், அதன் அனுபவங்களும்தான் இந்த ‘எனக்குரிய இடம் எங்கே’ புத்தகம். ஒவ்வொரு நாளும் வகுப்பறை புதிது புதிதாக மாறுவதையும், சாதாரணமாய் காட்சியளிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராய் சட்டென்று ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு ஆச்சரியம் தருவதையும் சுவராசியமாக சொல்கிறது. அப்படி வெளிப்படும் இடம்தான் அவர்களின் இடமாக இருக்கிறது. அடங்காப்பிடாரியாக இருக்கும் ஆதிமூலம் சில வார்த்தைகளில் அன்பானவனாகிறான். எப்போதுமே ஒதுங்கி இருக்கும் வாசுகி ஒருநாள் முன்வந்து நிற்கிறாள். பலரின் கதைகளோடு வகுப்பறை நமக்குள் அற்புதமான வெளியாக நமக்குள் புலர்ந்து கொண்டே இருக்கிறது.தனது சோதனை முயற்சிகள் சொந்த வாழ்வில் தனது மோசமான குணங்களைக் கூட மாற்றிவிடுகிற அதிசயத்தை அந்த ஆசிரியர் காண்கிறார். மாற்றங்களும் ஒருவழிப் பாதையல்ல என்பதை மிக இயல்பாக, போகிற போக்கில் சொல்லிச் செல்கின்றன புத்தகத்தின் பக்கங்கள்.
சங்க இலக்கியப் பாடல்களை வாசிக்கும் முறையில் ஆசிரியர் கையாளும் விதம் அலாதியாய் இருக்கிறது. கடிதம் எழுதக் கொடுக்கப்படும் வழக்கமான தலைப்புகளை விட்டு விட்டு ‘எதிர்காலம் குறித்து கவலையுற்று தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் நண்பனுக்கு’ கடிதம் எழுதச் சொல்கிறார். ஒரு வீட்டில் அவரவர்க்கு விருப்பமான தொலைகாட்சிச் சேனல்களை மாற்றுவதில் உண்டாகும் சூழலை நாடகக்காட்சியாக்கச் சொல்கிறார். இப்படி வாழ்விலிருந்தே கற்றுக்கொள்ளும் வகுப்பறையாக மாறுகின்றது. ஆச்சரியமாக இருக்கின்றன மாணவர்களின் சிந்தனைகளும், வெளிப்பாடுகளும். ஐம்பது வயதானாலும் சினிமாவில் கதாநாயகனாகவே நீடிப்பது போல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் இருப்பதா என கேள்வி எழுப்பப்படுகிறது. மாணவர்கள் வகுப்பறையின் நாயகர்களாக உருவெடுப்பதை உணரமுடிகிறது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
புதுமையும், நம்பிக்கையும் புத்தகம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. பேராசிரியர் மாடசாமி அவர்கள் எழுத்தில் பல வரிகள் நம் மனதில் காலத்தின் குரலாக ஒலிக்கின்றது. நீங்களும் அதை இங்கே கேட்டுப்பாருங்கள்.
“வாய் மூடிக் கிடப்பது அல்லது ஆளாளுக்குப் பேசுவது இரண்டுமே விவாதம் என்ற நாகரீகத்தின் விரோதிகள்.இவற்றைச் சமூகத்திடம் இருந்துதான் மாணவர்கள் கற்கிறார்கள்”
“அனாவசியத் தலையீடு இல்லாவிட்டால் வாழ்க்கை, வகுப்பறை இரண்டுமே அழகாய்த்தான் இருக்கின்றன”
“ஆசிரியருக்கு நூறு முகம் வேண்டும். வகுப்பறைக்கு நூறு கண்கள் வேண்டும். எதற்கு? ஒவ்வொரு மாணவனையும் பார்ப்பதற்கு! கண்டுபிடிப்பதற்கு!”
“ஒரு ஆசிரியர் காயப்படுத்தாமல் இருந்தால் மட்டும் போதுமா? காயங்களைக் கண்டுபிடித்து மருந்து போட வேண்டாமா?”
“பூட்டிய வாய்களும், அவற்றின் உறைந்த மௌனமுமே வகுப்பறையின் இலக்கணமாயுள்ளன. அர்த்தமுள்ள உரையாடலுக்குப் பதிலாக ஆசிரியரின் ஒற்றைக்குரலே வகுப்பறையின் சங்கீதமாக உள்ளது”
“குரல்களை உடைப்பது மொழி வகுப்பின் முதல் கடமை”
“விசேசமான நபர்களின் விசேசமான சொத்தல்ல கற்பனை. உண்மையான முயற்சிகளின் போது அது ஊற்றெடுக்கிறது.”
“வீட்டுக்குள் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும். பள்ளிக்கூடத்திற்குள் ஒரு வீடு வேண்டும்”
“ஒவ்வொருவரும் வெளிப்படுவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டும். வெளிப்படும்போது காண்பதற்கு கண்கள் வேண்டும்”
“வாய்ப்பும், அங்கீகாரமும் ஒழுங்கீனத்திற்கு மருந்து”
“வாழ்க்கை வைக்கும் பரீட்சைகள் வித்தியாசமானவை. யாரும் யாரைப் பார்த்தும் காப்பியடிக்க முடியாது.”
புத்தகத்தைப் படித்த பிறகு, இப்படியொரு ஆசிரியராக நாம் இல்லாமல் போய்விட்டோமே என வாய்ப்பிழந்த வலி நமக்கு ஏற்படுகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் முன்பக்கத்தில் சொல்லியிருப்பது போல, “தமிழில் இது முதல் முயற்சி, துணிச்சலான முயற்சி.”
வெளியிடு:
எனக்குரிய இடம் எங்கே?
(கல்விக்கூட சிந்தனைகள்)
Aruvi publications
19, Santhanam Nagar
Near Kovalan Nagar
Madurai -625003
email: aruvi_ml@yahoo.co.in
பக்கங்கள் : 120
விலை: ரூ.40/-
*
ராஜாவுக்கு ‘செக்’
ஆட்டத்தின் முக்கியத் தருணம் வந்தது.
யானைகள் அங்குமிங்கும் நிற்க, குதிரையை நகர்த்திவிட்டு அவன் சொன்னான் “செக்”.
ராஜாவுக்கு இப்போது இரண்டே வழிகள்தான் இருந்தன.
ஒன்று தோல்வியை ஒப்புக் கொள்வது.
இன்னொன்று ஒரு அடி முன்னோ, பின்னோ நகர்ந்து வெட்டுப்பட்டுச் சாய்வது.
வெளியே இருந்து குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தன.
“குதிரையை முதலிலேயே கொண்டு போய் இழந்திருக்கக் கூடாது”
“அந்தக் காயை முன்னுக்கு நகர்த்தியதால்தான் இப்போது யானை இங்கு வந்து விட்டது”
“பக்கத்தில் சப்போர்ட்டுக்கு எதுவுமில்லாமல் இருந்திருக்கக் கூடாது”
“பார்.. பிஷப் தேவையில்லாமல் அங்கே போய் நிற்கிறது”
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்தான் இவன்.
வெட்டுப்பட்ட தன காய்களை பார்த்தான்.
ஆரம்பத்திலிருந்து இந்த விளையாட்டை தனக்குள் ஒடவிட்டு யோசித்தான்.
“ம்...” ஆடு என்றான் அவன்.
இவனோ இன்னொரு ராஜாவோடு
அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டு இருந்தான்.
அந்த ஆட்டம் இவ்வளவு வேகமாகவும், சீக்கிரமாகவும் முடிந்து விடாது.
*
தமிழகத்தில் திடீர் பொது வேலைநிறுத்தம்
“மத்திய அமைச்சரவையிலிருந்து மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள்”
“போரை நிறுத்த மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கின்றன”
“பிரபாகரன் தீவீரவாதியல்ல”
“இல்லை... போராளிகளாக வந்தவர்கள் பிறகு தீவீரவாதிகளாகி விட்டனர்”
எப்படியோ குட்டையை முடிந்தவரை குழப்பியாகிவிட்டது.
“போரை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம்”
மீன் பிடிக்க இப்படியொரு அறிவிப்பு.
“வாக்காளப் பெருமக்களே.... வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில்...”
*
மனிதர்களும் மிருகங்களும் அல்லது மிருகங்களும் மனிதர்களும்
சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி மகளிர் கல்லூரியிலிருந்து சினிமா குறித்துப் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். தென்காசியிலிருந்து குற்றாலத்துக்குப் போகிற பசுமை பூத்துக்குலுங்கும் வழியில், மேலகரம் தாண்டி இருந்தது கல்லூரி. வானத்துக்கும் பூமிக்குமாக திரண்டு கிடந்த மலைகள் சூழ்ந்த அழகில் யாரும் சிலிர்த்துத்தான் போவார்கள். அதென்னமோத் தெரியவில்லை. குற்றாலத்தின் அருகில் வந்ததுமே ‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்’ குற்றாலக் குறவஞ்சி, குழந்தைகளின் சேர்ந்திசை போல தானாக நமக்குள் இசைக்கத் தொடங்குகிறது.
நிழல்களற்ற அடர்பச்சை நிழல்களின் அடியில், கல்லூரியின் கட்டிடங்களிலும் இயற்கை ஊறிக்கிடந்தது. சிறிது நேரம் கல்லூரி முதல்வரோடு பேசியிருந்து விட்டு, கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஹாலுக்குச் சென்றேன். மரங்களாய் பரந்திருந்த எந்த இடத்திலும் பெண்களை பார்க்க முடியவில்லை. ஆச்சரியமாய் இருந்தது. கட்டிடங்களின் அறைகளில் எல்லாமே கதவுகளுக்கு வெளியே இன்னொரு கம்பிக் கதவு அமைக்கப்பட்டு எதோ ஜெயில் போலிருப்பதை அப்போதுதான் கவனித்தேன்.என்னை அழைத்துச் சென்ற பியூனிடம் கேட்டேன்.
“அதுவா.. சார், இங்கே குரங்குகளின் தொல்லை தாங்க முடியாது” என்றார்.
”அதுதான் கதவு இருக்கிறதே...”
“ஐயோ, சார்... கதவு சாத்தியிருந்தாலும், நாதங்கி போட்டிருந்தாலும், மனுசன் மாதிரி அழகா திறந்துரும்”
சொல்லி முடிப்பதற்குள் ஒரு மரத்திலிருந்து ஐந்தாறு குரங்குகள் சடசடவென்று இறங்கி ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு ஓடின. சுற்றிப் பார்க்க ஆரம்பித்த போதுதான் புரிந்தது. அவ்வளவு குரங்குகள். கட்டிடங்களின் ஜன்னலோரங்களில், மரங்களில் என்று பார்க்குமிடமெல்லாம் வால் நீண்ட அந்த சாம்பல் நிறப் பிராணிகள். ஆராய்ச்சியும், அறிவும் தொனிக்கும் மனிதக் கண்களின் சாயல் அவைகளின் பார்வையில் இருந்தது.
“டிபன் பாக்ஸை எடுத்துட்டுப் போய் திறந்து சாப்பிட்டு விடும்..”
“அப்படியா..”
“பொண்ணுங்களோட புஸ்தகங்களை எடுத்துட்டுப் போய் கிழிச்சுரும்”
அடக்க மாட்டாமல் சிரித்தேன்.
“என்ன சார் சிரிக்கிறீங்க.. இங்க யாரும் தனியா வெளியே வர முடியாது. வரமாட்டாங்க. நிறைய பொண்ணுங்களை பாடாப் படுத்தியிருக்கு”
திரும்பவும் சிரித்தேன்.
“இப்ப எதுக்கு சார் சிரிக்கிறிங்க..”
“இல்ல.. பசங்க இல்லாத குறையை இந்தக் குரங்குகள் போக்கியிருக்கும்”
மீட்டிங் ஹால் வந்துவிட்டது. பியூன் விடைபெற்றுக் கொண்டார். வாசலில் நின்றிருந்த இரண்டு மூன்று ஆசரியைகள் வணக்கம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டனர். நான் உள்ளே சென்றதும் கவனமாக கதவை உள்ளே பூட்டிக் கொண்டனர். இருநூற்றுக்கும் மேல் மாணவிகள் வரிசையாய் முன்னே உட்கார்ந்திருந்தனர். என்னை வரவேற்றும், சினிமா சம்பந்தமாகவும் ஒருவர் பேச ஆரம்பித்தார். மேடையில் உட்கார்ந்திருந்த நான் தற்செயலாக பக்கவாட்டில் பார்த்தேன். இரண்டு குரங்குகள் ஜன்னல் ஓரங்களில் உட்கார்ந்து உள்ளுக்குள் மிகக் கவனமாக பார்த்துக் கொண்டு இருந்தன. ‘என்னடா இது அறுவை’ என்கிற மாதிரி அதிலொன்று தலையைச் சொறிந்து கொண்டது. உள்ளே மற்றவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்று இன்னொரு குரங்கு ஆராய்ந்தது.
இந்த மைக்கின் முன்னால் நின்று மனிதர் பேசுவது இந்தக் குரங்குகளுக்கு எப்படி தெரியும் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே என்னை பேச அழைத்தார்கள். நான் zoo படத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். அந்தப் படத்தில் காமிரா கம்பிகளின் உட்பக்கம் இருந்து இயங்கி இருக்கும். மிருகங்களின் கண்களில் இருந்து படம் பிடிக்கப்பட்டு இருக்கும். மிருகங்களிடம் இருக்கும் பல அங்க சேஷ்டைகள் மனிதர்களிடம் இருப்பதை உணர வைத்திருப்பார்கள். கம்பிகளுக்கு வெளியே மனிதர்கள் நடமாடுவது மிருகங்களுக்கு zoo போலத் தானே தெரியும் என்பதுதான் அந்தப் படத்தின் குரல்.
“இப்போது நாம் உள்ளே இருக்கிறோம். இந்த குரங்குகள் வெளியே இருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன”என்று நான் சொன்ன போது, மாணவிகள் ரசித்துச் சிரித்தனர். ஜன்னலில் காச் மூச்சென்று அதுகளும் சத்தம் போட்டன. திரும்பிப் பார்த்தேன். மேலும் இரண்டு குரங்குகள் வந்து பார்த்துக்கொண்டு இருந்தன.
மகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்!
“இன்று நான் தனிமையில் விடப்பட்டிருக்கிறேன். சர்தாரும் நேருவும் எனக்கு அரசியல் தெரியாது என நினைக்கிறார்கள். பிரிவினை இல்லாமலேயே அமைதியை ஏற்படுத்த முடியும். அப்படியே பிரிவினை இருந்தாலும், அது பிரிட்டிஷ்காரனின் குறுக்கீடுகளோடு இருக்கக்கூடாது என்று நான் சொல்வதை அவர்கள் ஏற்கவில்லை. உடனடியாக்த் தெரியாவிட்டாலும், சுதந்திரத்தின் எதிர்காலம் இருள் சூழப் போகிறது என்பதை உணர்கிறேன். அதை பார்ப்பதற்கு உயிரோடு இருக்கக் கூடாது என பிரார்த்திக்கிறேன்”
1947 ஜூன் 1ம் தேதி காலை பிரார்த்தனைக்கு முன்பாக காந்தி படுக்கையில் இப்படி சோகமாக முணுமுணுத்தார் என டெண்டுல்கரின் ‘மகாத்மா’ புத்தகத்தின் ஏழாவது தொகுதியில்
0000
“இந்நாட்டின் பிரதமராக ஒரு விவசாயிதான் இருக்க வேண்டும். அவர் அரண்மனையில் வாழ்பவராக இருக்கக் கூடாது. அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத் தேவையில்லை. அவருடைய செயலாளராக நேரு இருந்துகொண்டு அயல் நாட்டுத் தூதுவர்களை சந்திப்பது போன்ற அலுவல்களைச் செய்ய வேண்டும். பிரதமராக இருக்கும் விவசாயி ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் உழ வேண்டும்”
காந்தி தான் விரும்பும் அமைச்சரவை குறித்து பிரார்த்தனைக் கூட்டத்தில் சொன்னதாக, காந்தியின் அந்தரங்கச் செயலாளர் கல்யாணம் ‘புதிய பார்வை’ பத்திரிகையில்
*
ஒரு கம்பெனி, ஒரு கிராமம், ஒரு பாட்டில் தண்ணீர்
இந்த மூன்று கவிதைகளும், வெவ்வேறு கவிஞர்களால், வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பொருளில் எழுதப்பட்டவை. ஆனால் ஒரே குரலில் ஒரே தொனியில் ஒலிக்கின்றன. படித்துப் பாருங்கள்.
~~~~~~~~~
இதோ நீளமாக வளர்ந்திருக்கிறதே கோட்டைச்சுவர்
இங்கே ஒருகாலத்தில் கார்கள் செய்யப்பட்டன
பத்தாயிரம் கைகள் வேலை செய்தன
இன்று ஒருச் சின்னப் பூட்டு
இந்தப் பெரிய கதவைக் கடித்துக் கொண்டிருக்கிறது
ஆச்சு... நாலாயிரத்துச் சொச்சம் இரவுகள்
சூரியனுக்கு இது ரொம்பச் சவுகரியம்
இருட்டானதும்
இந்தக் கம்பெனிக்கு உள்ளே வந்து
அது படுத்துக் கொள்கிறது.
- நாட்டுப்பூக்கள் சுயம்பு
~~~~~~~~~
முன்னொரு காலத்தில்
இங்கே ஒரு கிராமம் இருந்தது
அந்த நாட்களில்
நிலமும் காற்றும் வானமும்
இங்கே மக்களால் நிரம்பி இருந்தது
அவர்களின் சிரிப்பு, கவலைகள்,
பெருமூச்சுக்கள், பாடல்கள் இவற்றை
நீ கேட்டு இருக்கலாம்
காற்றில் நீந்தும் பச்சை இலைகள்
கனிகொத்திச் சிதறும் கிளிக்கூட்டம்
ஆண்பேடைகளின் காதல் கீச்சொலிகள்
நீ அறிந்திருக்கலாம்
முன்னொரு காலத்தில்
ஆனந்த அலைகளில்
தங்கமாய் தானியமணிகள் நடனமாடின
நீ பார்த்திருக்கலாம்.
-நக்னமுனி
~~~~~~~~~
என் தாத்தா
வெள்ளப் பெருக்கென பார்த்தார்
தந்தையோ
ஆற்று நீராக பார்த்தார்
நானோ
அடிகுழாயில் பார்த்தேன்
என் மகனோ
பிளாஸ்டிக் பாட்டிலில் பார்க்கிறான்.
-அமிர்தலிங்கம்
*
அதிரவைத்த ஒரு ஆவணப்படம்!
கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர்களின் பலிபீடத்தில் இந்திய அரசியலை கட்டமைத்து, அதிகார பீடத்தை குறிவைத்து நகர்ந்திட முயற்சிக்கும் இந்துத்துவ சக்திகளின் முகத்தையும், வேர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இந்த ஆவணப்படம். 2002 குஜராத் வன்முறைகளையும், அதன் பின்னணியில் உருவேற்றிய 'வெறுப்பின் அரசியலால்' விளைந்த வெற்றியையும் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்தில் ஆராய்கிறது.
Final solution என்னும் இந்த வார்த்தைகள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவே நடுங்க வைத்தவை. யூதர்களைக் கொல்வதே ஜெர்மனியின் சாபவிமோசனம் என்று நியாயம் கற்பித்து, இரத்தவெறி பிடித்த ஹிட்லரின் மூளையில் முளைத்த வார்த்தைகள். இலட்சக்கணக்கில் யூதர்களை உயிரோடு புதைத்த மரணக்குழிகளை மூடிய மண்ணில் பிணவாடையோடு அழுகிப்போன வார்த்தைகள். அங்கிருந்து இந்துத்துவா சக்திகள் எடுத்துவந்த ஒரு பிடி மண், காந்தி பிறந்த பூமியை உருக்குலைத்து போட்ட வரலாற்று பயங்கரவாதத்தை நேர்மையோடு பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம். தீராத வலியும், ஆறாத வடுக்களும் கொண்ட மனிதர்களின் உரையாடல்களிலிருந்து பார்வையாளனை ஒரு இறுதி முடிவுக்கு (final solution ) அழைத்துச் செல்வதே இந்தப்படத்தின் நோக்கமாயிருக்கிறது. யார் மீதும் வன்மங்களை விதைக்காமல், ஐயோ இனி இது போல நிகழவேக்கூடாது என்று கதறவைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.
வெளிச்சம் குறைந்த டிசம்பர் 15, 2002 இரவு வேளையில், பாரதீய ஜனதாக் கட்சியினரும், விஸ்வ ஹிந்து பரிஷத்துக்காரர்களும் குஜராத் தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற்றதை கொண்டாடுகிற காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. வாகனங்கள் அலறும் சத்தத்தின் நடுவே நின்று தலையில் காவித்துணி கட்டிய ஒருவன் "பி.ஜே.பியின் வெற்றி எனது வெற்றி" என்கிறான். "கடவுளுக்கு நன்றி...முஸ்லீம் தாய்களை புணருங்கள்" என்கிறான் பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன். இன்னொருத்தன் கல்லெறிகிறான். காரின் கண்ணாடி உடைகிறது. காட்சி மங்கி, சில மாதங்களுக்கு முன்பு இருந்த குஜராத்துக்குள் நுழைகிறது.
கிண்டர் கார்டனில் படித்துக் கொண்டிருக்கும் இஜாஸ் நம்மோடு பேசுகிறான். தாயையும், தந்தையையும் கொன்று, அன்பும், பாசமும் மிக்க தன் சகோதரியை கண்முன்னால் நிர்வாணப்படுத்தி கூட்டம் கூட்டமாய் சிதைத்த கொடுமைகளை பார்த்தவன் அவன். 1992ல் அயோத்தியில் 450 வருட பழமை வாய்ந்த மசூதி இடிக்கப்படுவதும், இந்துத்துவா அரசியல் முன்னுக்கு வருவதும், 2002 பிப்ரவரி 27ம் தேதி, அயோத்திக்குச் சென்று வந்த கரசேவகர்கள் வந்த ரெயில் பெட்டி கோத்ராவில் எரிந்து போவதும், அதிலிருந்து பற்றிய தீ குஜராத்தில் மூஸ்லீம் வீடுகளின் மீது பற்றிக்கொள்வதும் சொல்லப்படுகிறது. காகங்கள் பறக்கும் வானத்துக்கு அடியில் சொந்த தேசத்திற்குள்ளேயே அகதிகளாகிப்போன மனிதர்கள் குடியிருக்கும் முகாம்கள் காட்டப்படுகின்றன. முகங்கள் வெட்டப்பட்ட குழந்தைகள். கந்தலாகிப்போன பெண்கள். சர்வமும் வற்றிப்போன கண்கள். இழந்த வாழ்க்கையை அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். நெருப்பும், வாளும், மிருகத்தனமும் குதறிப்போட்ட கதைகள் அவை. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் தாங்க முடியாமல் இருக்கின்றன. அனுபவித்தவர்கள் அவர்கள். சூன்யத்தில் புதைந்த முகங்கள் நம்மை பரிதவிக்க வைக்கின்றன.
குல்பர்க் சொஸைட்டியில் 49 பேருக்கும் மேலே கொல்லப்பட்ட சம்பவம், தீப்பிடித்த சுவர்களின் வழியாக சொல்லப்படுகிறது. துதேஷ்வர் மயானத்தில் ஊதுபத்தி புகையோடு கைவிரித்து, நேற்றுவரை கூட இருந்த மனிதர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். டெம்போக்களில் கொண்டு வந்து கொட்டிய கருகிய மனித உடல்கள் கொஞ்சம் சதையும், மீதி எலும்புகளுமாய் இருந்தன என்று மரணக்குழி தோண்டியவன் சொல்கிறான். டெலோல் கிராமத்தை சேர்ந்த சுல்தானா சிதைக்கப்பட்ட இடம் வயல்வெளி தாண்டி காட்டப்படுகிறது. அந்த பயங்கரத்தை செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுகிறார்கள் என்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்த மரங்கள் காற்றில் கதறுகின்றன. அழகிய தன் பெண்கள் ரேஷ்மாவுக்கும், ஷபானாவுக்கும் நேர்ந்ததை தாய் சொல்கிறாள். பஞ்ச்மஹாலில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் பிணங்கள் வந்து கொட்டப்பட்ட கிணற்றை காண்பிக்கிறார்கள். வார்த்தைகளும், காட்சிகளும் இரக்கமற்ற உண்மைகளாக நீண்டுகொண்டே இருக்கின்றன.
'அதெல்லாம் உண்மையில்லை' என மிகச் சாதாரணமாகச் சொல்கிறார்கள் பாட்டியாலாவில் வசிக்கும் பொட்டு வைத்த பவானி என்னும் பெண்ணும் அவள் சகோதரியும். "கோத்ராதான் உண்மை, இதெல்லாம் இந்தப் பத்திரிக்கைக்காரர்கள் திரித்து எழுதுபவை" என்கிறார்கள் அவர்கள். "எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா, டாக்டர்கள் ரிப்போர்ட் இருக்கிறதா?" என்று கேட்கிறார்கள். அந்தப் பெண்ணின் சகோதரன் கலவரத்தில் ஈடுபட்டதற்கு பொய்யாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். உண்மைகளும் அடையாளமற்று சிதைந்து போயிருப்பது பார்வையாளனுக்கு இயல்பாக உணரவைக்கப்படுகிறது. இதெல்லாம் அப்போது ஜனாதிபதி ஆட்சி அமல்செய்யப்பட்ட குஜாரத்தின் சொரூபமாக இருக்கிறது.
இந்தப் பின்னணியில் தேர்தல் வருகிறது. மோடி கனத்த குரலில் பேசும் காட்சியில் கூட்டம் ஆரவாரிக்கிறது. "அவர்கள் 60 பேரைக் கொன்றர்களா, இல்லையா" என்று மோடி கேள்வி கேட்க, கூட்டம் "ஆம், கொன்றர்கள்" என்கிறது. "நாம் அவர்களைக் கொன்றோமா?" அடுத்த கேள்வி. "இல்லை" என்று பெரும் சத்தம்."நாம் அவர்கள் கடைகளுக்கு தீ வைத்தோமா?". "இல்லை". "நாம் யாரையாவது கற்பழித்தோமா?". "இல்லை". "ஆனால் குஜராத்தின் எதிரிகள் குஜராத்தே தீப்பிடித்து எரிவதாகச் சொல்கிறார்கள்" என்று முடிக்கவும் கூட்டம் கோபம் கொண்டு கத்துகிறது. "நாம் தீவீரவாதிகளா" என்று கேள்வி. கூட்டம் "இல்லை" என்கிறது. "நாம் தீவீரவாதிகளானால்..." என்று நிறுத்தி, "பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இருக்காது" என்று முடிக்கவும் கூட்டம் பொங்கி எழுகிறது. விரல்நுனி வரைக்கும் மதவெறியையும், விஷத்தையும் ஏற்றுகிற மோசடி வித்தையின் அரசியல் அதிர வைக்கிறது. தொகாடியா பேசுவது, ஆக்ரோஷத்தோடு "நமது பெருமைகள் மீட்கும் நேரமிது" என்று ஆச்சார்யா தர்மேந்திரா பேசுவது எல்லாம் தீயின் நாக்குகளாக சடசடக்கின்றன. இன்னொருபுறம் மசூதியில் அமைதியாக மண்டியிட்டு "குஜராத்தில் அமைதியும், நிம்மதியும் தரும் ஆட்சி வரட்டும்" என்று பிரார்த்தனை செய்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும் கூட்டத்தில் ஆர்வமற்ற பார்வையாளர்களே மிஞ்சுகிறார்கள். வெறுப்பை விதைத்து, அதிகாரத்தை அறுவடை செய்கிற காரியம் நிறைவேறி விடுகிறது. ஆயிரமாயிரம் மூஸ்லீம் தலைகள் வீழ்ந்திருக்க, மோடியின் பக்கமே 'குஜராத் ஜனநாயகம்' பூவாய் விழுகிறது.
படத்தில் இந்து, மூஸ்லீம் கருத்தாக்கங்கள் குறித்த தர்க்கங்கள் பிரச்சினைகளோடு மேலெழுந்து வருகின்றன. ஆனால் இரண்டு சிறுவர்களின் பேட்டிகள் மொத்தப் படத்தின் நோக்கத்தை அதன் போக்கில் பதிவு செய்துவிடுகின்றன. பஞ்ச்சல் என்னும் சிறுமி. டாக்டராக வேண்டும் என்னும் கனவு இருக்கிறது. அவளது தாய் கோத்ரா ரெயிலில் தீயில் கருகிப் போனவள். "கரசேவகராக அம்மா போகவில்லை. அம்மாவின் படத்தை வாங்கி விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பலியான கரசேவகராக வைத்திருக்கிறர்கள்" என்னும் உண்மையை அவள் வெளிப்படுத்துகிறாள். தனக்கு மூஸ்லீம் நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களோடு அன்பாக பழகுவதாகவும் சொல்கிறாள்.
அடுத்து இஜாஸ். படத்தின் ஆரம்பத்தில் பேசிய அந்தச் சிறுவன் மீண்டும் வருகிறான். "நீ என்னவாகப் போகிறாய்" என்று அவனிடம் கேள்வி கேட்கப்படுகிறது. 'இராணுவ வீரனாக வேண்டும்" என்று இஜாஸ் சொல்கிறான். "எதற்கு இராணுவ வீரனாக ஆசைப்படுகிறாய்?" என்று அடுத்த கேள்வி. "இந்துக்களை கொல்வேன்". "ஏன் கொல்வாய்?' "அவர்கள் எங்களை அழித்தார்கள்" "நான் இந்துதான்.என்னைக் கொல்வாயா?" "இல்லை... மாட்டேன்." "ஏன்?..நானும் இந்துதான்." "இல்லை.நீங்கள் இந்து இல்லை...அவர்கள்தான் இந்துக்கள்". படம் இந்தப் பதிலோடு முடிவடைகிறது. பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கும், சிறுபான்மை வகுப்புவாதத்திற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை நுட்பமாக உணர்த்தியதோடு, பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தை அரவணைத்துச் செல்வதில்தான் அன்பும், நேசமும் மலர முடியும் என்பதையும் இறுதி முடிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
குஜராத் கலவரம் என்பது மிகத் திட்டமிடப்பட்ட, இனப்படுகொலை என்பதை பதற்றம் தொற்றிக்கொள்ள படம் சித்தரிக்கிறது. கலவர நேரத்தில் காமிரா அலைந்து திரிகிறது. இரண்டாயிரம் பேருக்கு மேல் ஆயுதங்களோடு திரண்டு வரும் வெறியர்களின் கூட்டத்தை கண்முன் நிறுத்துகிறது. போலீஸும், கலவரக்காரர்களும் சேர்ந்து தாக்கும் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. கலவரக்காரர்கள் மொபைல் போன்களோடும், வாக்காளர் அட்டைகளோடும் வந்து தாக்கியது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மனிதர்களை அடையாளம் தெரியாமல் சிதைக்கும் நோக்கத்தோடு மொத்த தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதை புரிய வைக்கிறது. உயிரைப் பயணம் வைத்து, உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்ல துணிந்திருக்கும் படப்பிடிப்புக் குழுவினர், வகுப்புவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தேசத்தையும், இந்த மக்களையும், மக்களின் ஒற்றுமையையும் நேசிப்பவர்களால்தான் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புமிக்க காரியங்களைச் செய்ய முடியும்.
ஆனந்த் பட்வர்த்தனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராகேஷ் சர்மா இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். மதவெறி சாதாரண மனிதர்களின் மூளைகளுக்குள் இரத்த தாகத்தோடு எப்படி பதுங்கி இருக்கிறது என்பதை இயக்குனர் அடையாளம் காட்டியிருக்கிறார். நேர்த்தியான ஒலிப்பதிவு, துணிச்சல் மிக்க ஓளிப்பதிவோடு இயக்குனரின் மனிதாபிமானமிக்க பார்வையும் சேர்ந்து ஆவணப்படத்தை சமகாலத்தின் மிக முக்கியமான பதிவாக நிறுத்தியிருக்கிறது. பேட்டி எடுப்பவரின் கேள்விகள் ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே அசீரீரி போல ஒலித்து, படத்தில் பேசிக்கொண்டு இருப்பவர்களையும், பார்வையாளர்களையும் நகர்த்துகின்றன. மனவெளியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டு, அவைகளில் சிக்காமல் மிகக் கவனமாக செல்கிற உத்தி, இந்த படத்தின் மிக முக்கியமான அம்சம்.
பா.ஜ.க மத்தியில் ஆட்சி புரிந்து வந்த சமயத்தில் வெளிவந்த இந்தப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுக்கவில்லை. மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்கும் அயல்நாட்டுப் படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் தேவையாயிருப்பதில்லை. அப்படியிருக்கும்போது இந்தியப்படங்களுக்கு மட்டும் ஏன் இந்த தணிக்கைச் சான்றிதழ் என்று கேட்டும், குஜராத்தில் மதவெறியைத் தூண்டும் படம் விஸ்வ ஹிந்து பரிஷத்தினால் தயாரிக்கப்பட்டு எந்த தடையுமில்லாமல் திரையிடப்பட்டதை குறிப்பிட்டும், ஒரு போராட்டத்தை ராகேஷ் சர்மா துணிச்சலாக நடத்தியிருக்கிறார். சர்வதேசத் திரைப்பட விழா நடந்த அதே இடத்திற்கு எதிரே இன்னொரு இடத்தில் 'சுதந்திரத்திற்கான திரைப்படம்' (film for freedom) என்னும் அமைப்பினர் தடையை மீறி திரையிட்டு இருக்கின்றனர். மாற்று சினிமாவுக்கான, மக்களின் சினிமாவுக்கான கலகக்குரலை எழுப்பிய முக்கியமான படமாக final solution இருக்கிறது. மதத்தின் பேரால் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய அவர்களால் உண்மையை மட்டும் அழிக்கவே முடியவில்லை என்பதை இந்த ஆவணப்படம் உணர்த்துகிறது.
எல்லாம் முடிந்து போனதாய் வானம் பார்த்து கதறுகிற மனிதர்களின் குரல்கள் படம் முடிந்த பிறகும் நமக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அழிவுகளிலிருந்து மீள்வதற்கு வழியைத் தேடித் தேடிப் பார்க்கிற படம் இது.
படம் பார்க்க இங்கு செல்லவும்.
கத்திகளுக்குத் தெரியுமா கவிதையின் ருசி?
இரண்டு வருடங்களுக்கு முன்பு நானும் எழுத்தாளர்.காமராஜும் கடலூர் சென்று விட்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டு இருந்தோம். வழியில் எதோ ஒரு இடத்தில் டீக்குடிக்க நிறுத்தினார்கள். தூக்கம் கலந்து நாங்களும் பஸ்ஸிலிருந்து இறங்கினோம்.
அப்போது அவரைப் பார்த்தோம். டீக்கடையருகே ஒரு ஒரமாய் தனியே யாரோ போல நின்றிருந்தார். அழுக்கும் வியர்வையும் கலந்த அந்த வெள்ளைச் சட்டை அவரது அலைச்சலையும், பிரயாண அசதியையும் சொல்லின. பன் ஒன்றை வாங்கி டீயில் முக்கி முக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு எம்.எல்.ஏ என்பது இன்றைய அரசியல் கூத்துக்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம்தான். சாதாரண வட்டங்களுக்கே தலைக்குப் பின்னால் ஒளிவட்டமும், ‘அண்ணே’க்ளை உதிர்க்கின்ற கரைவேட்டிகளும், கார்களும் சுற்றிக்கொண்டிருக்கின்ற காலக்கிரகத்தில் அவர் ஒரு அதிசயம்தான். மதுரை சட்டம்ன்ற உறுப்பினர் நன்மாறன்தான் அவர்.
அருகில் போய் “தோழர்” என்றோம். “வாங்க...மாதவராஜ், வாங்க காமராஜ்” என்று குழந்தை போல சிரித்துக்கொண்டு அழைத்தவர் “டீ சாப்பிடுறீங்களா” என்றார். ”எந்த பஸ்ல வந்தீங்க” என்றார். கைகாட்டினோம். “நானும் அதுலத்தான் வந்தேன் உங்களப் பாக்கலியே” என்று சொல்லிக் கொண்டார். குழந்தைகளுக்கு அவர் எழுதிய கவிதைகள், எங்களது ‘இது வேறு இதிகாசம்’ ஆவணப்படம் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். பஸ் புறப்படும்போது, “நிறைய எழுதுங்க...” என்று கைகொடுத்துவிட்டுச் சென்றார். மிக எளிமையான அவரது தோற்றம் அந்த இரவில் எங்களுக்குள் மின்னிக் கொண்டிருந்தது.
பிறகு ஒருமுறை நான் பணிபுரிந்த சங்கரலிங்கபுரத்திற்கு, அவரது மிக நெருக்கமான உறவினர் ஒருவர் இறந்ததற்கு துஷ்டி கேட்க வந்திருந்தார். நான் அந்த ஊரில் இருக்கிறேன் என்றவுடன் வங்கிக்கிளைக்கு வந்தார். வரவேற்று, வங்கிக்குள் அழைத்து பேசிக்கொண்டிருந்தேன். கூட பணிபுரிபவர்கள் யாரோ என்று உட்கார்ந்திருந்தார்கள்.அவர்களுக்கு அறிமுகப்படுத்தியவுடன் கிளையே பரபரத்தது. மேனேஜர் மிகப் பணிவுடன் அருகில் வந்து “யார்னு தெரியல.. ஸாரி சார்.. என்ன சாப்பிடுறீங்க..” என்று எதோ உளறிக் கொட்டினார். “ஐயோ... இதிலென்ன இருக்கிறது.... ஏன் தெரிந்திருக்கணும்” என்று மிக அமைதியாக சமாதானப்படுத்திவிட்டு கிளம்பினார். வெளியே வந்த பிறகு “அவங்க பாட்டுக்கு இயல்பா இருந்திருக்கலாம்... நீங்க கெடுத்திட்டிங்க..” என்றார். வழியனுப்பி வைத்து விட்டு வந்தபோது அந்த எளிமை என்னை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.
எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பிருந்து அவரைத் தெரியும். அப்போது எப்படி இருந்தாரோ, அதே போலத்தான் இன்றும். டி.வி.எஸ் ஃபிப்டிதான். அதே இனிமையும், நெருக்கமும்தான். இரண்டுமுறை எம்.எல்.ஏ வாக இருந்தவர், தன் பையன் தொழில் செய்ய ”எதாவது உங்கள் வங்கியில் லோன் கிடைக்குமா” என்று கேட்கிற அற்புதமான அப்பாவி.
மேடைக்கலைவாணர் என்ற பேர் அவருக்குண்டு. மிக ஆழமான விஷயத்தையும் மிகுந்த எள்ளலுடன் புரிய வைப்பார். பல வருடங்களுக்கு முன்பு அவர் பேச்சைக் கேட்ட முதல் அனுபவத்தை இப்ப்போதும் மறக்க முடியாது. லிபியா அருகே போர்க்கப்பலை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. கடாபி அதனைக் கண்டித்தார். அதைப் பற்றிச் சொல்லும்போது “ஐயா..! நீங்க பாட்டுக்கு உங்க வீட்டுல இருக்கீங்க.. எவனோ ஒருவன் தினமும் காலைல உங்க வீட்டு வாசலில் வந்து தண்டாலும், பஸ்கியும் எடுத்தா உங்களுக்கு எப்படி இருக்கும்” என்று கேட்டார். இப்போது நினைத்தாலும் சிரிப்பும், தீட்டப்பட்ட அந்தச் சித்திரத்திற்குள் இருக்கும் அர்த்தமும் யாருக்கும் சட்டென உறைக்கும்.
அவரைத்தான் நேற்றிரவு சில லும்பன்கள் கத்தியால் தாக்கியிருக்கிறார்கள். மதுரையில் அழகிரியை எதிர்த்து தங்கள் கட்சி வேட்பாளர் மோகன் அவர்களுக்காக தேர்தல் பணிகள் செய்து விட்டு வீடு திரும்பும் போது இந்த கொடுமை நிகழ்ந்திருக்கிறது. நேற்று நான் எழுதியிருந்த பதிவில் குறிப்பிட்ட லும்பன்களின் ராஜ்ஜியம் இதோ எழுந்தருளியிருக்கிறது.
மனிதர்களின் சிறப்புகள் பற்றி லும்பன்களுக்கு என்ன தெரியும். காசுக்கும், விசுவாசத்திற்கும் அவர்கள் எதுவும் செய்வார்கள். அந்த மனிதரின் தத்துவ ஞானம், சர்வதேச பார்வை, எளிமை குறித்தெல்லாம் எதாவது மரியாதை அவர்களுக்கு இருக்குமா? தேர்தல் களத்தில் ஜெயிப்பதற்கு எதையும் செய்வார்கள். கத்திகளுக்கு அவரது கவிதையின் ருசி தெரியாது. அவர் எழுதிய கவிதைகளுக்குத் தெரியும், இந்தக் கத்தியின் பசி.
இருக்கட்டும். அவரது அறிவின் ஒரே ஒரு துளியைக் கூட அவர்களால் வெல்ல முடியாது. மக்களோடு கலந்திருக்கும் அவரது அன்பை அவர்களால் வீழ்த்த முடியாது. ஒளிபொருந்திய அவரது எளிமையின் சிறப்புக்கு முன்னால் அவர்களில் எவருமே நிற்க முடியாது. அவர்கள் ஏற்கனவே தோற்றுப்போனவர்கள்.
தோள்களில் ஏற்றிக்கொண்டு தொலை தூரத்தைக் காட்டுவோம்!
வெயிலும், வேலிக்கருவேல மரங்களுமான இராமநாதபுரத்தின் கிராமங்களுக்குள் இரண்டுநாளாய் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். புயல் என்ற பேரில் நான்கைந்து நாட்களுக்கு முன் பெய்த மழையில், அங்கங்கு கட்டிக்கிடந்த நீரிலிருந்து வெதுவெதுவென காற்று முகத்திலடிக்கிறது. ஆனாலும் வேக்காடு இருக்கிறது. தாண்டிச்சென்ற, அருப்புக்கோட்டையிலிருந்து சாயல்குடிக்குச் செல்லும் பஸ் ஒன்றின் மேலேயும் மக்கள் இருந்தார்கள். நொறுங்கிக் கிடந்த சாலை எங்கள் சுமோவின் டிரைவருக்கு கடுப்பாக இருந்திருக்க வேண்டும். முகம் இறுக்கமாக இருந்தது. சின்னச்சின்ன ஊர்களில் வீட்டு வாசல்களில் மானாவரியில் விளைந்த மிளகாய் வத்தல்கள் ஒன்றுபோல காயப் போட்டு சிவப்புக் கம்பளங்கள் போலிருந்தன. ஒட்டுக் கூரையின் மீது டிஷ் அண்டெனா காளான்கள் போல முளைத்திருந்தன. மரங்களின் கீழே பெருசுகள் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தியக் கிராமங்களில் பயணம் செய்த சாய்நாத்தின் 'everybody loves good drought' (stories from india's poorest districts) கட்டுரைத் தொகுப்பின் காட்சிகள் விரிகின்றன.
இருபத்தைந்து வருட கால தொழிற்சங்க வரலாற்றில் ஏராளமான அனுபவங்களும், இப்படிப்பட்ட பயணங்களும் கூடவே வந்து கொண்டிருக்கின்றன. பாண்டியன் கிராம வங்கியின் கிளைகள் தோறும் சென்று உறுப்பினர்களை சந்திப்பது இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிகழும். இந்த தடவை ஒரு சிறப்பும் உண்டு. பார்த்த முகங்களைத் தாண்டி புதிதாய் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிற இளைஞர்களை பார்க்க முடிந்தது. இருபது வருடங்களுக்குப் பிறகு இந்த வங்கியில் நூற்றுப் பத்துக்கும் மேலே புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது, நாங்கள் இந்த வங்கியில் 1980களின் ஆரம்பத்தில் பணிக்குச் சேந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் இவர்கள் இன்னொரு காலத்தின் மனிதர்களாயிருந்தனர்.
கிராம வங்கிகளில் அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே பணியிலமர்த்தப்பட வேண்டும் என்னும் விதி அப்போது இருந்தது. அப்போது ஒன்றாயிருந்த இராமநாதபுரம், திருநெல்வேலி (இப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை) மாவட்டத்திலிருந்து மட்டுமே பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தோம். பலர் தங்களுடைய குடும்பத்தில் அரசு வேலைக்குச் செல்லும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இப்போது வங்கியின் கிளைகள் மதுரை, திருச்சி, பெரம்பலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், நாகை போன்ற மாவட்டங்களிலும் திறக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் இருந்து பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டது. பெரும்பாலும் எஞ்சினீயரிங், தொழில்நுட்ப முதுகலைப்பட்டப் படிப்பு பெற்று, நகரங்களில் இருந்து வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். சேர்ந்த சில மாதங்களிலே, முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வேலையை ராஜினாமா செய்து, வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். மற்றவர்களும் அப்படியொரு வாய்ப்புக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வங்கியின் பேரிலிருக்கும் ‘கிராம’ என்னும் வார்த்தை அவர்களை நெளிய வைக்கிறது. நகரங்களற்ற சாதாரண ஊர்களில் இருக்கும் கிளைகள் அவர்களின் கனவுப் பிரதேசமாக இருக்கவில்லை. எங்களைப் போல கிராமங்களிலிருந்து வந்தவர்களுக்கும், இந்த இளைஞர்களுக்கும் உள்ள மாறுபட்ட மனநிலைகளில் இது முக்கியமானது. எங்கள் காலத்திலும் இப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கத்தான் செய்தன. “அதென்ன கிராம வங்கி” என்று சிலருக்கு பெண்கொடுக்க மறுத்த பிரபல கதைகளும் இந்த வங்கியின் வரலாற்றோடு சேர்த்துத்தான் எழுதப்பட வேண்டும். எங்காவது ஒரு முக்கு ரோட்டில் இறங்கி ஐந்தாறு கி.மீ சைக்கிளில் செல்ல வேண்டிய நிலைமைகள் அப்போது இருந்தன. கிராமங்களின் கிடைத்த வீடுகளில் வங்கியைத் திறந்ததால், கழிப்பிட வசதிகள் கூட இல்லாமல் இருந்த கிளைகள் ஏராளமாய் இருந்தன. கழிப்பட வசதிகள் இருக்கும் வீடுகளில் ஆண்கள் வெளியே சென்ற பிறகு, வங்கியில் வேலை பார்க்கும் பெண்கள் அந்த வீட்டிற்கு செல்ல வேண்டிய பரிதாபமான நிலைமை இருந்தது. அடிப்படை வசதிகள் வேண்டும் எனபதுதான் எங்கள் சங்கத்தின் முதல் குரலாகவும், பெரிய போராட்டமாகவும் ஆரம்ப நாட்களில் இருந்தன. 1984ல் இதற்காக ஒன்பது நாட்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிய இளைஞர்களிடம் இதையெல்லாம் இந்தப் பயணத்தின் போது நாங்கள் பேசினோம். இன்று கம்ப்யூட்டர்களோடு ஓரளவுக்கு வசதியான கட்டிடங்களில் கிளைகள் இருப்பதை உணர்த்தி, நல்ல எதிர்காலம் இருக்கிறது என நம்பிக்கையளித்தோம். மற்ற வங்கிகள் கூட nationalised தான். அதாவது தனியார் வசமிருந்து தேசீய மயமாக்கப்பட்டவை . கிராம வங்கிகள் பிறக்கும்போதே தேசீய வங்கி என்பதுதான் உண்மை. 1969ல் வங்கிகள் தேசீய உடமையாக்கப்பட்ட பிறகு, கிராமங்களிலும் வேகமாக வங்கிகள் அடியெடுத்து வைத்தன. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட 1977ல், அமைக்கப்பட்ட நரசிம்மம் கமிட்டிதான் இந்த ‘கிராமப் புற வங்கி’ என்னும் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது. வங்கிகளில் இருக்கும் அதே வேலைகள், ஆனால் சம்பளம் மட்டும் குறைவாக. எங்கள் வங்கி போல இந்தியா முழுவதும் இருந்த 196 கிராம வங்கிகளில், 14000 கிளைகளில் பணிபுரிந்த 80000 ஊழியர்கள் இந்த அநீதிக்கு எதிராக பதினைந்து வருடங்களாக போராடி, இன்று வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கிறோம். இந்த வரலாற்றினை அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தது.
நேற்று சாயங்காலம் பாம்பன் கிளையில் பணிக்குச் சேர்ந்திருக்கும் இரண்டு இளைஞர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றிருந்தோம். பேசிக்கொண்டு இருக்கும்போது கவனித்தேன். அவர்கள் அறையில் கம்ப்யூட்டர் இருந்தது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எங்கோ ஒரு கிராமத்து வீடுகளில் நாங்கள் தங்கியிருந்த போது சாயங்காலங்களில் எந்த பொழுதுபோக்கும் இருக்காது. தினமும் டூரிங் டாக்கிஸில் படம் பார்த்துக் கொண்டும், ‘தண்ணி’ அடித்துக் கொண்டும், சிலோன் பாட்டுக்கள் கேட்டுக் கொண்டும், காதல் செய்துகொண்டும் இருந்த எங்கள் தலைமுறை வேறு. இவர்கள் வேறு. காலையில் வேலிக்கருவேல மரங்களுக்கு ஊடே நடந்து போய், ‘வெளியே’ செல்ல உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் ஒருவர் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் அப்படியே அருகில் வந்து உட்கார்ந்து, “சார், இன்னைக்கு நகைக்கடன் உண்டா” என்று கேட்கிற தர்மசங்கடங்களும், திடுக்கிடல்களும் இந்த தலைமுறைக்கு நேராது. ஊரின் வீடுகளில் எந்த விசேஷம் என்றாலும், வந்து அழைத்து மரியாதையும், அன்பும் செலுத்துகிற அந்த எளிய மனிதர்களின் நெருக்கங்களும் இந்தத் தலைமுறைக்கு புரியாது.
எங்கள் தோள்களில் இந்தப் புதியவர்களை ஏற்றி வைத்து அந்த தொலைதூரத்துக் காட்சிகளை காட்ட வேண்டும் போலிருக்கிறது. இன்னும் ஏழெட்டு வருடங்களில் இந்த வங்கியின் பழைய தலைமுறை வெளியேறி விடும். அப்புறம் இவர்கள்தான். கிராம வங்கிகள் என்னும் மகத்தான் அத்தியாயத்தின் அடுத்த கண்ணிகள்.
அவர்கள் எல்லோரிடமும் நான் ஒரு கேள்வியை தவறாமல் கேட்டேன். “இந்த வேலை பிடித்திருக்கிறதா?”. சின்ன சிரிப்போடும், மௌனமான தலையாட்டுதல்களுமே பதில்களாயிருந்தன. “வேறு எங்கும் கிடைக்காத திருப்தி இங்கு உங்களுக்கு கிடைக்கும். இந்த கிராமத்துச் சனங்களில் பணம் கட்டுகிற ரசீது கூட எழுதத் தெரியாது. அதை அவர்களுக்கு எழுதிக் கொடுப்பதிலும், எழுதச் சொல்லித் தருவதிலும் இருக்கிற நிறைவை நீங்கள் எந்த அலுவலகத்திலும் பெற முடியாது. எப்போதும் மக்களை நேரடியாய் பார்க்கிற, பேசுகிற, பழகுகிற வாய்ப்பு வேறு எங்கும் உங்களுக்கு கிடைக்காது” என்பதை தவறாமல் சொல்லி வந்தேன்.
தொழிற்சங்க உறுப்பினர் சேர்ப்பு, கோரிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டி இந்த நேரத்தில் வேறு முக்கியப் பணிகள் இருப்பதாக இந்த பயணம் சொல்லிக் கொண்டு இருக்கிறது. எதிரே வெள்ளை, நீல உடுப்பில் சிறுவர்களும், சிறுமிகளும் எங்கோ இருக்கிற பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
*
‘பொறுக்கி என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா’
படத்தில் அவன் டெபுடி கமிஷனர். இட்லியில் பீர் ஊற்றி பிசையும் கதாநாயகனாக அறிமுகமாகிறான். காக்கிச்சட்டையில் நிதானமாக அழுத்தமான குரலில் "நா போலீஸ் இல்ல...பொறுக்கி " என்று மீசையைத் தடவுகிறான். தியேட்டரில் கைதட்டல்களும், விசில்களும் ஆரவாரம் செய்கின்றன. விபரீத காட்சிகள் நம்மை நிலைகுலைய வைக்கிறது. இந்தக் கண்றாவியில் படத்திற்கு பெயர் 'சாமி'. யார் போலீஸா? பொறுக்கியா?
போலீஸ் இங்கே பொறுக்கியைவிட கேவலமாக இருக்கிறது என்று கிண்டல் செய்யப்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றினாலும் படத்தின் செய்தி அதுவல்ல என்பது தெளிவாக இருக்கிறது. ‘பொறுக்கி என்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா’ என்று மட்டும்தான் படத்தில் பாட்டில்லை. சாமி படத்தில் இருந்து, சமீபகாலம் வரை இது போன்ற வெள்ளித்திரை பிம்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சாகசங்கள் புரிகிற காவியத்தலைவர்களான இந்த பொறுக்கிகள் வேடங்களில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் அனைவருக்கும்... இப்போதுதான் முளைத்திருக்கிற தனுஷ், சிம்பு வரை ஒரு அலாதியான பிரியம் இருக்கிறது. 'லும்பன்'களின் உலகமாய் இந்த சமூகத்தை மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்பதை பதற்றத்தோடு நாம் புரிந்தாக வேண்டும்.
தமிழ்ச் சினிமாவில் இந்த பாத்திரங்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு காலத்தில் சாமிகள் கதாநாயகர்களாகவும், அசுரர்கள் வில்லன்களாகவும் படைக்கப்பட்டார்கள். பிறகு ராஜாக்களின் காலம். கெட்ட ராஜா. நல்ல ராஜா. அப்புறம் பண்ணையார்கள், ஜமீன்தாரர்கள் வில்லன்கள் ஆனார்கள். அதுவே வளர்ந்து முதலாளிகள். இந்தக் காலம் வரை கதாநாயகர்கள், வில்லன்கள் என்பவர்கள் குழப்பமில்லாமல் இருந்து வந்தார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்பிருந்து அரசியல்வாதிகள் நேரம். போலீஸ் பலநேரம் வில்லன்களாகவும், சில நேரங்களில் கதாநாயகர்களாகவும் மாறுவார்கள். சில அதிகாரிகள் வில்லன்களாகவும், கதாநாயகர்களாகவும் இருப்பார்கள். இந்தக் குழப்பங்கள் நிகழ்ந்தாலும், கதாநாயகர்கள் மக்களுக்கு நல்லது செய்பவர்களாக இருப்பார்கள் என்பது மாறாமல் இருக்கிறது.
காலங்களோடு மாற்றம் பெற்ற இந்த வரிசையில் இப்போது லும்பன்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சாமி படத்தில் நாயகன் மக்களுக்கு நல்லது மட்டுமா செய்கிறான். லஞ்சம் கொடுக்கலாம், வாங்கலாம் என்கிறான். கூடுமானவரை அரசியல் செல்வாக்கு உள்ள பெரும்புள்ளிகளை அனுசரிக்கலாம் என்கிறான். போலீஸ் வேனில் அரிவாள், சோடாபுட்டிகள் போன்ற ஆயுதங்களை வைத்துக் கொள்வதில் தப்பில்லை என்கிறான். போலீஸாயிருந்தாலும் லைசென்சு வாங்காத துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறான்.சட்டங்களை மீறலாம் என்கிறான். நாயகனுடைய உருவத்தின் வழியாக இத்தனையும் பார்வையாளர்களை படம் முழுக்க ஊடுருவிக் கொண்டு இருக்கிறது.
அதில் ஒரு நியாயம் இருப்பதாக சுயநினைவு இல்லாத இருட்டு வெளிக்குள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
லும்பன்கள் மாபாதகர்கள்... கொடூரமானவர்கள் என்கிற ரீதியில் அர்த்தம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அற்புதமான மனிதர்கள் அவர்களிலும் இருக்கக்கூடும் . உங்களுக்கும் எனக்கும் இல்லாத மனிதாபிமானங்கள் அவர்களில் சிலரிடமிருந்து வெளிப்படக்கூடும். விலங்குகளிடம் கூட இத்தகைய குணங்களை நாம் ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறோமே. அதுபோலத்தான். ஆனால் லும்பன்கள் குறித்து பொதுவான மதிப்பீடு என்பது வேறு. லும்பன் என்பது ஒரு கலாச்சாரம். கட்டுப்பாடற்ற, சமூக நெறிகளற்ற, நாகரீகமற்ற, பண்பாடற்ற, எந்த ஒழுங்குமற்ற ஒரு சமூகம். உழைக்காமல் வாழ விரும்பும் மூர்க்கத்தனம். உலகத்தை துச்சமாக நினைத்து தன் மனம் போன போக்கில் எதிர்கொள்ளும் கண்மூடித்தனம். காட்டுமிராண்டித்தனம். சாமியின் மூலம் யார் இங்கு விதைக்கப்படுகிறார்கள், தூபம் போட்டு வளர்க்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த லும்பன்கள்தான் ஓட்டுச்சாவடிக்குள் புகுந்து மக்களை விரட்டி இஷ்டத்திற்கு கள்ள ஓட்டுப் போட முடியும். நடுரோட்டில் ஒரு நியாயமான அதிகாரியையோ, மக்கள் தொண்டரையோ வெட்டிச் சாய்க்க முடியும். வேறு இனத்துப் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழிக்க முடியும். சமூகத்தை மிரட்டுகிற, பொது ஜனத்தை அலறச் செய்கிற இந்தக் காரியங்கள் இந்த ஜனநாயகத்திற்கு, இந்த முதலாளித்துவ அரசியல் அமைப்புக்கு மிக மிக அத்தியாவசியமானது. இந்த ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்க நீதித்துறை, பத்திரிக்கைத்துறை என நான்கு தூண்கள் உண்டு என்பது பழைய காலம். இப்போது ஐந்தாவதாக இந்த லும்பன்கள் என்னும் தூண்களும் தாங்கிப் பிடிக்கிறார்கள்.அதுதான் இந்த படங்களுக்கு எந்த தடங்கலுமில்லாமல் சென்சார் போர்டு அனுமதியளித்து ஐ.எஸ்.ஐ அக்மார்க் முத்திரை குத்தியிருக்கிறது. ரசிகர்களின் உள்ளங்கவர்ந்து வசூலில் சாதனையும் படைக்கலாம்.
வேலையின்மை மிஞ்சியிருக்கிற, இருக்கிற வேலையும் பறிபோகிற ஒரு காலக் கட்டத்தில் இதுமாதிரியான படங்கள் வெவருவது எந்த நோக்கத்திற்காக என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியான இளைஞர்கள் தங்கள் அக்கிரமங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக நில்லாமல் போவதற்கான உத்தி இது. முதலாளித்துவம் சுற்றுப்புறச் சுழலைக் கெடுப்பது போல மனித மனங்களையும் சீரழிக்கும். உன்னதங்கள் எல்லாவற்றையும் காலில் போட்டு மிதிக்கும். மதிப்பீடுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றும். பொறுக்கிகள் 'புண்ணிய புருஷர்'களாகவும், ‘மாவீரர்களாகவும்’ கருதப்படுவார்கள். சட்டசபையில், பாராளுமன்றத்தில், போலீஸ் ஸ்டேஷனில், டீக்கடையில், சாராயக்கடையில் என்று அவர்கள் நிறைந்திருப்பார்கள்.
நமக்கு முன்னை விடவும் அதிகமான வேலை இருக்கிறது. மகாத்மாவை, பகத் சிங்கை, சுபாஷ் சந்திர போஸை, முன்னை விடவும் அதிகமாக பேச வேண்டியிருக்கிறது. வரலாற்றின் காவியத் தலைவர்களை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலமே இந்த போலியான 'காவியத்' தலைவர்களை அம்பலப்படுத்த முடியும். நிஜமான காவியத்தலைவர்களை உருவாக்க முடியும்.
பி.கு: சாமி படம் வந்த போது Bank workers unity பத்திரிகைக்காக எழுதியது. இந்த தேர்தல் நேரத்தில், பழைய டைரியின் பக்கங்களிலிருந்து எடுத்துப் பதிவு செய்வது பொருத்தமாகத் தோன்றியது.
*
ஒரு செடியும் மூன்று பூக்களும்
"ஏன் இலைகளைப் பிய்த்துப் போடுகிறாய். இப்படிச் செய்யக் கூடாது என்று எத்தனை தடவை உனக்கு நான் சொல்லியிருக்கிறேன்" அவனது அக்கா சத்தம் போட்டாள்.
அவன் இலைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"பார்...இந்தச் செடி அழுகிறது". பாவம் போல குரலை வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்.
"செடி அழுகிறதா?"
"ஆமாம். இதுதான் கண்ணீர்"
செடியையே பார்த்துக் கொண்டிருந்தான். அதன் காம்புகளில் பால் போன்ற திரவம் சொட்டிக்கொண்டிருந்தது. கன்னம் சுருங்க ஆரம்பித்தது. அண்ணாந்து அக்காவைப் பர்த்தான். அக்கா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடிபட்டது போல முகம் துடித்தது. கண்கள் கலங்கின.
"அக்கா, இந்தச் செடியை சிரிக்க வையேன்"
"செடியை நீதான் அழ வைத்தாய். நீயே சிரிக்க வை."
"எனக்கு சிரிக்க வைக்கத் தெரியலயே". அவன் சத்தமாய் அழ ஆரம்பித்தான். "அக்கா, ப்ளீஸ்... செடியை சிரிக்க வையேன்"
"எனக்கும் தெரியலயே"
உதடுகள் பிதுங்க, கண்ணீர் நிறைந்த கண்களுடன் செடியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"காற்று வீசினால் செடி சிரிக்கும்." அக்கா சொன்னாள்.
அவன் செடியை நோக்கி ஊதிக் கொண்டிருந்தான். "அக்கா செடி சிரிக்கிறதா".
பி.கு: இது ஒரு மீள் பதிவு
*
நினைக்க மறந்த தமிழ்ச்சினிமா; சொல்ல மறந்த தமிழ்க்கவிஞர்கள்
“பொறக்கும் போது-மனுஷன்
பொறக்கும்போது
இருந்த குணம் போகப் போக மாறுது”
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா”
“இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே”
“இந்தத்- திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம்
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்”
“ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன்
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங்கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே”
“தூங்காதே தம்பி தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே”
“வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!”
“உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா, உறவாடும் நேரமடா”
“திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே”
சொல்லிக்கொண்டே போகலாம். எத்தனைப் பாடல்கள்!! வாழ்வின் அனுபவங்கள் பற்றிப் படர்ந்திருக்கும் சொற்களில் கட்டிய வரிகள். இசையோடு தமிழ்க் குடும்பங்களுக்குள் எத்தனை காலம் வசித்து வந்திருக்கின்றன. தொலைக்காட்சிகளும், டிவிடி பிளேயர்களும் அறிமுகமாகாத நாட்களில், ஸ்பீக்கர் செட்களின் வழியாக நம் தெருக்களெல்லாம் நதிபோல ஓடிய வண்ணம் இருந்தன. ஒருதலைமுறையே இந்த பாடல்களில் நீந்திக் கிடந்ததே.
இன்றும், இந்தப் பாடல்களை எப்போதாவது கேட்கிறபோது எதோ செய்கிறது. பாடல்களில் இருக்கும் உண்மையின் சூடு இன்னமும் நம்மைத் தீண்டுகின்றன. சமூகத்தின் மீது அசலான கிண்டலும், விமர்சனமும், அன்பும் கொண்ட ஒரு இதயத்திலிருந்து பிறந்த கலையும், இலக்கியமும் ஒரு போதும் மடிந்து போவதில்லை.
ஆனால் பாடல்களைத் தந்தவனை நாமெல்லாம் மறந்தா போனோம்? வேதனையோடுதான் இதைப் பதிவு செய்கிறேன்.
தமிழ்ச்சினிமாவுக்கும், அதன் பாடல்களுக்கும் அர்த்தம் கொடுத்தவனை இன்று யாராவது பேசினார்களா என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். காலையில் கூட முகம், உடலெல்லாம் சிலாகித்து தயாநிதி மாறனை பாராட்டிப் பேசிய கவிஞர் வைரமுத்து கூட ‘இன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்’ என்று ஒரு பேச்சுக்குக்கூட சொல்லவில்லை.
பாடல்கள் மட்டும் எழுதாமல் வாழ்வில் பதினேழுக்கும் மேற்பட்ட வேலைகள் செய்து, வாழ்வோடு மல்லுக் கட்டியவரைப் பற்றிப் பேசி இவர்களுக்கு பிரயோஜானம் ஒன்றும் இல்லையோ?
இதோ, “சத்தியமா, சாமர்த்தியமா” என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டும், ரம்யா கிருஷ்ணன் ஸ்ட்ராவில் ஜூஸ் உறிஞ்சும் போட்டியை காண்பித்து தங்கள் பிறவிப்பயனை ஆற்றிக் கொண்டு இருக்கும் தொலைக் காட்சிகளில் ஒரு வரிச் செய்தியாக போடக் கூட நேரமில்லை போலிருக்கிறது. இவர்கள்தான் நம்முடைய கலைகளை மொத்த குத்தகை எடுத்து இருக்கிறார்கள்.
நிலவுக்கும் ஆடை கட்டிப் பார்த்தவனை இவர்கள் எப்படி நினைப்பார்கள்.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடலே இந்த நேரத்துக் கேள்வியாய் எழுகிறது...
உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா?
இருள் வேண்டுமா?
*
“காத்துலயே வாழுறவங்க எங்க சனங்க”
“உலகிலுள்ள அடிமைச் சமுதாயங்கள் அனைத்துக்கும் நானே தலைவன் என்று கூறவில்லை. தீர்க்கப்பட வேண்டிய வேறு பல பிரச்சினைகளும், கொடுமைகளும் நம் நாட்டில் இல்லையென்றும் நான் கூறவில்லை. ஆனால் மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்” இப்படித் தன்னை பிரகடனப்படுத்தி அர்ப்பணித்துக் கொண்டவரும், மாமேதைகளில் ஒருவருமான, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று. அவரது சிந்தனைகளில் வெளிச்சம் பெற்றவரான கன்னடக் கவிஞர் சித்தலிங்கையாவின் இரு கவிதைகள் இந்த நாளுக்கு அர்த்தம் சேர்ப்பதாயிருக்கும் என்பதால்-
சோமனின் பிள்ளைகளுடைய பாட்டு
காளன் நீலன் பெள்ளி குருவன் சினியன்
சோமனின் பிள்ளைகள் நாங்கள்
கண்ணுக்குள்ளே வலி நிறைந்தவர்கள்
மண்ணுக்குள்ளே முகம் புதைத்தவர்கள்
தாயில்லாத பிள்ளைகள் நாங்கள்
வலியில் மூழ்கியவர்கள்
விம்மும் உடல் பூப்போன்ற மனம்
துண்டு நிலமொன்றை வாங்கும் கனவு
பூமித்தாய் பெறாத
பிள்ளைகள் நாங்கள்
சோமனின் எலும்புகள்
ஆண்டையின் அழகான தோட்டத்துக்குள்ளே
மலர்ந்து விரிந்த செடிகளிலே
தந்தையின் வியர்வை என்கிற ரத்தம்
பாய்ந்து சிவந்தது பூ
ஆண்டையின் பண்டிகை விருந்துக்காக
தன்னையே அறுத்துக் கொடுத்தவர்கள்
நிலவென்னும் ஆதாரத்தை இழந்தவர்கள்
முகிலென்னும் ஆதரவு கிட்டாதவர்கள்
பூமிக்கும் மலைக்கும் நீலவானத்துக்கும்
நம்நாட்டின் மக்கள் அனைவருக்கும்
சோமனின் கதை தெரியும்
சோமனின் பிள்ளைகளே சொல்லும் கதையை
கேளுங்கள் ஐயா இப்போது
எங்க சனங்க
பசியாலே செத்தவங்க
பட்டக்கல்லு சொமந்தவங்க
ஒதைபட்டுச் சுருண்டவங்க
எங்க சனங்க
கைய கால புடிக்கிறவங்க
கைகட்டி நடக்கிறவங்க
பக்தருப்பா பக்தருங்க
எங்க சனங்க
கலப்பையோட்டி வெதைச்சவங்க
பயிரறுத்து களைச்சவங்க
வெய்யிலிலே வெந்தவங்க
எங்க சனங்க
வெறும் கையோட வந்தவங்க
உஸ்ஸூன்னு உக்காந்தவங்க
வாயும் வயிறும் காய்ஞ்சவங்க
எங்க சனங்க
மாளிகைய எழுப்பனவங்க
பங்களாங்க கட்டினவங்க
அடிமட்டத்துல மாட்டினவங்க
எங்க சனங்க
தெருவிலேயே வுழுந்தவங்க
சத்தமில்லாம கெடந்தவங்க
மனசுக்குள்ளே அழுதவங்க
எங்க சனங்க
வட்டிக்காசு கொடுக்கறவங்க
சொற்பொழிவு நெருப்புக்குள்ள
வெந்து சாம்பலானவங்க
எங்க சனங்க
ஆண்டவனின் பேரச் சொல்லி
விருந்து சோறு தின்னவங்களுக்கு
செருப்புத்தச்சி குடுத்தவங்க
எங்க சனங்க
தங்கத்த எடுக்குறவங்க
சோத்தையே பாக்காதவங்க
துணிமணிய நெஞ்சவங்க
அம்மணமா போனவங்க
சொன்னபடி கேக்கறவங்க
எங்க சனங்க
காத்துலய வாழறவங்க
எங்க சனங்க
பி.கு: கவிதைகள் பாரதி புத்தகாலயம், கவிஞர்.சித்தலிங்கையாவினை அறிமுகம் செய்து வெளியிட்ட ‘காலகளின் கையெழுத்து’ என்னும் சிறு நூலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
*
“ஒருமுறை விடை கொடு அம்மா”
வரலாற்றில் இதே ஏப்ரல் 13ம் தேதி. 1908ம் வருடம்.
முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த கிங்ஸ்போர்டு மீதி இளைஞர்கள் குதிராம் போஸும், பிரபுல்லசகியும் குண்டி வீசினர். கிங்ஸ்போர்டு தப்பி விட்டான். போலீஸிடம் பிடிபடாமல் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பிரபுல்லசகி இறந்து போனார். குதிராம் போஸ் சிறையிலடைக்கப்பட்டு 1908 ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட்டார்.
சிறையில் 16 வயதே நிரம்பிய குதிராம் போஸ் எழுதி வைத்திருந்த பாடல்:
“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான்
மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்...
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”
குதிராம் போஸ் தூக்கிலிடப்படும் போது, அவரது சித்தி கருவுற்றிருந்தார்கள். உடனடியாக மீண்டும் இந்த மண்ணில் பிறந்து, மீண்டும் போராட வேண்டும் என்ற வேட்கை தெறிக்கும் கவிதை. இவர்களின் காலடித்தடங்கள் வழியாகத்தான் ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவுக்கு வந்தது.
*
பைத்தியக்காரர்கள்
படிக்கும் வரை காகிதத்தில் எழுத்துக்களாய் காத்துக்கொண்டிருக்கும் கவிதைகள் சில, படித்து முடித்ததும் நம்மோடு கூடவே உலவ ஆரம்பித்து விடுகின்றன. கவிஞனால் கல்லாக சபிக்கப்பட்டவை ஒவ்வொரு நல்ல வாசகனாலும் உயிர் பெறுகின்றன. சமயம் பார்க்காமல் எதாவது ஒரு தருணம் நம்மோடு அவை உரையாட ஆரம்பிக்கின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் இப்படியான தேவதைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கவிஞர் சச்சிதானந்தனின் இந்த ‘பைத்தியக்காரர்கள்’ என்னும் ‘தேவதை’என்னை விட்டுப் பிரிவதுமில்லை. விலகுவதுமில்லை.
பைத்தியக்காரர்கள்
பைத்தியக்காரர்களுக்கு
ஜாதியோ, மதமோ இல்லை.
பைத்தியக்காரிகளுக்கும்.
நம்முடைய பாலுறுப்புப் பிரிவினை
அவர்களுக்கு பாதகமல்ல.
அவர்கள் முன்முடிவுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள்.
அவர்களின் பரிசுத்தம்
நம்மால் அங்கீகரிக்கப்படுவதில்லை.
பைத்தியங்களின் மொழி கனவுகளால் ஆனதல்ல.
வேறொரு யதார்த்தத்தினுடையது.
அவர்களின் சினேகம் நிலவைப் போன்றது,
பௌர்ணமியன்று அது உருகி வழிகிறது.
மேலே பார்க்கும்போது அவர்கள் காண்பது நாம்
கேட்டேயறியாத தேவதைகளின் மொழியைத்தான்.
அவர்கள் சிலிர்ப்பதாய் நாம் நினைப்பது
சூன்யமான சிறகுகள் உதிரும்போதுதான்.
ஈக்களுக்கும் ஆத்மா உண்டென்று அவர்கள் நினைக்கிறார்கள்.
வெட்டுக்கிளியின் தேவன் பச்சை நிறத்தில்
நீண்ட கால்களுடன் குதித்து
நடக்கிறான் என்றும் கருதுகிறார்கள்.
சிலசமயம் மரங்களிலிருந்து
குருதி கொட்டுவதை காண்கிறார்கள்.
சிலசமயம் தெருவில் நின்று
சிங்கங்கள் கர்ஜிப்பதை காண்கிறார்கள்.
சிலசமயம் பூனையின் கண்களில்
சொர்க்கம் ஜொலிப்பதைக் காண்கிறார்கள்.
இந்த விஷயங்களில் அவர்களில் நம்மைப் போலத்தான்.
ஆனாலும் எறும்புகள் கூட்டம் சேர்ந்து பாடுவதை
அவர்களால் மட்டுமே கேட்க இயலும்.
அவர்கள் சூன்யத்தில் விரல் அசைக்கும்போது
நடுக்கடலிலே சுழற் காற்றினை
தன் வயப்படுத்துவது போலவும்,
கால் அழுத்தி உதைக்கும் போது
ஜப்பானின் எரிமலையை வெடித்துச்
சிதறாமல் காப்பது போலவும்,
நினைக்கிறார்கள்.
பைத்தியக்காரர்களின் நேரம் வேறு.
நம்முடைய ஒரு நூற்றாண்டு
அவர்களுக்கு ஒரு நொடி மட்டுமே.
இருபது நொடி போதும்,
அவர்கள் கிறிஸ்துவை சென்றடைய
ஆறு நொடிதான்
புத்தனுக்குச் செல்ல.
ஒரு பகல் போதும்
வெடித்துச் சிதறிய
ஆதித்துகளகளை உணர.
பூமி கொதித்து உருகுவதால்தான்
அவர்கள் எங்கேயும் இருக்க முடியாமல்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.
பைத்தியக்காரர்கள்
பைத்தியங்கள் அல்ல,
நம்மைப் போல.
கவிஞர் சச்சிதானந்தன் கேரள நவீன கவிதையை உலகெங்கும் பரவச் செய்தவர். ‘என் மொழி என்பது மலையாளமோ, ஆங்கிலமோ அல்ல, என் மொழி கவிதை’ என்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை நடத்திய முற்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஒரு விஷயம் இந்தக் கவிதையோடு சம்பந்தப்பட்டது.
“குழந்தைப்பருவம் எனக்கு மிகவும் வேதனையான காலங்களாக இருந்தன. நம் எல்லோரின் குழந்தைப் பருவம் போலத்தான் என் வீட்டிலும் நிறைய கஷ்டங்கள் இருந்தன. வறுமை இருந்தது. வறுமைக்கும் மேலாக பைத்தியம் இருந்தது. பைத்தியம் என்பது என் குடும்பத்திலிருந்து எனக்குக் கிடைத்த பிரதானச் சொத்தாக நான் நினைக்கிறேன். என் பாட்டி பைத்தியமாக இருந்தாள். சித்திக்குப் பைத்தியம். சித்தியின் மகனும் பைத்தியம். என்னோட பெரியம்மா, அதாவது பெரியப்பாவின் மனைவிக்கும் பைத்தியம். இப்படியாக எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் பைத்தியமாக இருந்தார்கள். ஆறாவது ஆள்தான் உங்கள் முன் நிற்கும் சச்சிதானந்தன். ஒருவேளை நான் பைத்தியத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பேன் என்றால் அதற்கான காரணம் பைத்தியமாக மாறுவதற்குண்டான விஷயங்களையெல்லாம் வார்த்தைகளில், கவிதைகளில் பதிவு செய்ய முடிந்ததுதான்.”
படித்துவிட்டீர்களா? இனி, ஒரு தேவதையோடு, ஒரு கவிஞரும் உங்களோடு எப்போதும் வருவார்.
*
சதாமின் படுக்கையறையில், இனி தேனிலவுகள்.
"இந்த அரண்மனையை தூரத்தில் நின்று பார்த்திருக்கிறோம். இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை”.
“ஆனாலும் செத்துப் போன மனிதனின் படுக்கையறையில் ஒரு புதுமணத்தம்பதி எப்படி சந்தோஷமாக முதலிரவைக் கொண்டாட முடியும்”
“இந்த மண்ணை நேசித்த மகத்தான மனிதரை கேவலப்படுத்துகிற காரியத்தை அவர்கள் செய்கிறார்கள்”
ஈராக்கில் எதிரும் புதிருமான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பாக்தாத்தில் இருந்து அறுபது கி.மீ தொலைவில் இருக்கும் சதாமின் அரண்மனை இனி சுற்றுலாத்தலமாகவும், 180 டாலர்கள் செலுத்தி அவரது படுக்கையறையில் ஒருநாள் தேனிலவை கொண்டாடலாம் எனவும் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டிலிருக்கும் ஈராக் அரசு அறிவித்துள்ளது. குண்டுவெடிப்புகளும், மனித உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் “நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, புதிதாய் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு..” என்று தண்டோரா அறையப்பட்டுள்ளது. சதாம் உசேன் வெளியேறிய பிறகு, அமெரிக்க இராணுவத்தினரால் வருடக்கணக்கில் சிதைக்கப்பட்ட அரண்மனையை புதுப்பித்து இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
என்ன வகையான மனநிலைகளிலிருந்து இதுபோன்ற யோசனைகள் பிறந்திருக்கும்! அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று சொல்லப்படுவதை நம்புவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் கூட விசித்திரமான மனநிலை தேவைப்படுகிறது.
அந்தப் படுக்கையறை புனிதமானது என்றோ, அல்லது காமும் காதலும் புனிதமற்றதாகவோ கருதிடத் தேவையில்லைதான். வஞ்சகமும், சூழ்ச்சிகளும் நிரம்பிய அறைகளுக்குள் அன்பும், காதலும் காற்றாய் உலா வரவேண்டும் என நாம் ஆசைப்பட வேண்டும்தான். காற்றாய் என்று சொல்வதற்கு இயல்பாய், உரிமையாய் என்று நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. விலைகொடுத்து, கதவுகளைத் தாளிட்டு, வாடகையிலா?
ஒரு காரியம், அதன் நோக்கத்தினாலேயே அறியப்படும், சிறப்புறும். ஈராக் அரசின் நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஈராக்கில் சதாமை விரும்புகிற மக்களும் சரி, விரும்பாத மக்களும் சரி, அந்த அறையில் வந்து தங்கிவிட மாட்டார்கள். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் இரவுகளைக் கழிக்கும் இடமாக மட்டுமே அந்த படுக்கையறை இருக்கும். அவர்கள் தம்பதிகள், ஜோடிகள், காதலர்கள் மற்றும் வேறு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
கொடுங்கோலனாக சித்தரிக்கப்படும் தேசத்தில்தான் சதாம், அமெரிக்காவை மூச்சிருக்கும் வரை எதிர்த்த மாவீரனாகவும் நினைக்கப்படுகிறார். அவரைத் தூக்கிலிட்ட பின்பும் அமெரிக்காவுக்கு அவர் மீது இருக்கும் வெறியும், பழிவாங்கும் வேகமும்தான் இந்த அறிவிப்பில் வெளிப்படுகின்றன. முற்றிலும் ஒன்றை அழித்தொழிக்கும் பாசிச தாகமே தேனிலவுகளை இப்படியாய் அழைக்கின்றன.
சின்னஞ்சிறு நாடான நேபாளம் சொல்லும் செய்தியை ஈராக்கும், உலகமும் நின்று கவனித்தாக வேண்டும். மக்களுக்கு எதிரான மன்னனை எதிர்க்க யாரும் அமெரிக்காவின் உதவியை நாடவில்லை ஜனநாயகத்தைக் கொண்டு வர அவர்களே போராடினார்கள். மன்னனை அரண்மனையிலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றினார்கள். இப்போது அரண்மனை மக்கள் வந்து பார்வையிட திறந்துவிடப்பட்டு இருக்கிறது. அது மக்களின் சொத்து, உழைப்பின் மகிமை என்பதை புரிந்து கொண்டவர்கள் அங்கு இருக்கிறார்கள்.
0000
ஈராக்கின் அறிவிப்பையொட்டி எனக்குத் தோன்றியதை இப்படி எழுதினேன். கவிதையா என்று தெரியாது.
அரண்மனைத் தேனிலவு
எல்லா நினைவுகளையும்,
அறை உறிஞ்சிக் கொண்டது.
அவனால் அவளைத் தொடமுடியவில்லை
அவளால் அவனைத் தொட முடியவில்லை
அவர்கள் தோற்றுப் போனார்கள்
பழிவாங்கும் மூர்க்கம் நிறைந்த
காலடி ஓசைகள் கேட்டு
படுக்கையின் அடியில் போய்
காமம் ஒளிந்து கொண்டது.
குண்டுகள் வெளியேறிய
துப்பாக்கியிலிருந்து
புகை கசிந்து கொண்டிருந்ததைப் போல
கண்களில் காதல் கொஞ்சமிருந்தது
தப்பித்து வெளியேற
திரைச்சீலை விலக்கிய வானில்
இரத்தம் சிந்திய நிலவு கிடந்தது.
*
சீச்சீ...சிறியர் செய்கை செய்தார்!
(பழைய டைரியின் பக்கங்களிலிருந்து)
எப்போது நினைத்தாலும் தலைநிமிர்ந்து கொள்ள வைக்கிறது. மகாத்மாவின் மீது நேசம் ஏற்படுகிறது. இத்தனைக்கும் அவர் யாரென்று அப்போது உலகம் அறிந்திருக்கவில்லை. ஒரு பாரிஸ்டராக மட்டுமே இருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு தாதா அப்துல்லா கம்பெனியின் வழக்கு சம்பந்தமாக பயணம் மேற்கொண்டிருந்தார். டர்பனிலிருந்து பிரிட்டோரியாவுக்குச் செல்லும் வழியில் மாரிட்ஸ்பர்க் புகைவண்டி நிலையத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது. வெள்ளைக்காரர் இல்லை என்பதால் முதல் வகுப்பு டிக்கெட் இருந்தும் சரக்கு வண்டியில் பயணம் செய்யவேண்டுமென்று எச்சரிக்கப்பட்டார். மகாத்மா மறுக்கவே, கீழிறக்கி விடப்பட்டார். அவரது சாமான்கள் பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்டன. அவரோ அங்கேயே இருந்து தனது உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார். புகைவண்டி நிலைய அதிகாரி அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் அவர் பிடிவாதமாக இருந்தார். வேறுவழியின்றி அடுத்தநாள் மாலை வண்டியில் அவர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிறத்துவேஷத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களுக்கான உறுதி பூண்டது அன்றுதான்.தனக்கு நேர்ந்த அவமானமாக மட்டும் அதைப் பார்க்காமல் ஒரு இனத்துக்கு நேர்ந்த அவமானமாகவும் அதை கருதினார்.
தனிமனித வாழ்விலும், பொது வாழ்விலும் மனசாட்சியோடு ஒரு மனிதன் நடத்திய உரையாடல் போல சத்திய சோதனை விரிகிறது. 2004 ஜூலை பிறக்கிற வரை நமது முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் இதை படித்திருந்தால் ரகசியமாய் தனக்குள்ளே சிரித்திருப்பார். 'எந்த கிறுக்கனாவது இப்படி எங்கேயோ நேர்ந்த அவமானத்தை வரிவிடாமல் எழுதி வைப்பானா? பேசாமல் சரக்கு வண்டியில் ஏறி போவதை விட்டு அந்த ஸ்டேஷனில் உட்கார்ந்து சத்தியாக்கிரகம் செய்வானா? விஷயத்தை அதோடு விடாமல் மற்றவர்களுக்கு நேர்கிற அவமானத்துக்காகவும் போராடுவானா' சந்தேகமில்லாமல் அவருக்குள் இப்படியெல்லாம் எண்ணங்கள் ஓடியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஆனால் விதியாகப்பட்டது வலியதுதான் போலும். உலகமே அவரைப் பார்த்து சிரிக்கும்படியாகி விட்டது.
ஜூலை முதல் வாரத்தில் அவர் மீது அந்த அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியது. முந்தைய அமெரிக்க துணைச்செயலாளர்களில் ஒருவரான ஸ்ட்ரோப் டல்போட் வெளியிட்ட " Engaging India: Diplomacy and the Bomb " என்னும் புத்தகத்தில் இருந்து அது வீசப்பட்டு இருந்தது. ஜார்ஜ் பெர்னான்டஸ் இந்தியாவின் இராணுவ அமைச்சராக அமெரிக்காவுக்கு போயிருந்த போது இரண்டுமுறை விமான நிலையத்தில் ஆடை அவிழ்க்கப்பட்டு பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டு இருந்தது. 2002ம் ஆண்டின் ஆரம்பத்திலும், 2003ம் ஆண்டின் மத்தியிலும் இந்த அவமானம் நடந்திருக்கிறது. ஜார்ஜ் பெர்னான்டஸே இதனை ஸ்ட்ரோப் டல்போட்டிடம் ரொம்ப கோபமாக தெரிவித்திருக்கிறார். சவப்பெட்டி ஊழல், தெஹல்கா விவகாரங்களில் மாட்டிய போது கூட அயராத முன்னாள் இராணுவ அமைச்சருக்கு இந்தச் செய்தி கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இரண்டுநாள் அமைதியாக இருந்தவர் பிறகு மெல்ல 'ஆமாம்..உண்மைதான்' என்றார். இதனை அப்போதே வாஜ்பாயிடம் தெரிவித்ததாகவும் முணுமுணுத்துக்கொண்டார். 'இனி அமெரிக்காவுக்கு தான் போவதேயில்லை'யென முடிவு எடுத்திருப்பதாகவும் சொன்னார். அடுத்தநாள், "கோர்ட்டை அவிழ்த்தார்கள். ஷுக்களை அவிழ்க்கச் சொன்னார்கள். கைகளை விரித்து மேலே தூக்கச் சொன்னார்கள், அவ்வளவுதான்" என்று தனது முழு நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள பார்த்தார். 'ஷூக்களை கழற்றச் சொல்வது மிகச் சாதாரண, வழக்கமான பாதுகாப்புச் சோதனைதான்" என உடுக்கை இழந்த கையாக அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் அத்வானி. பாரத மாதா கீ ஜெய்!
குஜராத் கலவரங்களின் போது ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்று பாரளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டித்த போது, 'கலவரங்களின் போது பெண்கள் கற்பழிக்கப்படுவது இயல்புதான்' என்று பதிலளித்த ஜார்ஜ் பெர்னான்டஸ் இந்த ஆடையவிழ்ப்பையும் இயல்பான ஒன்றாய் கருதி இருக்க வேண்டும். இயல்பான விஷயமென்றால் ஏன் ஸ்ட்ரோப் டல்போட்டிடம் அன்றைக்கு ஜார்ஜ் பெர்னான்டஸ் கோபப்பட்டாராம். எதற்காக பாஞ்சாலியின் அள்ளிமுடியவே மாட்டேன் சபதம் போல இனி அமெரிக்காவுக்கு போகவே மாட்டேன் என முடிவு எடுக்க வேண்டுமாம். இந்த மாமனிதர்கள்தான் இந்தியா உலக அரங்கில் ஒளிர்கிறது என்றார்கள். இந்தியாவை வல்லரசாக்கியே தீருவோம் என சூளூரைத்தார்கள். ஜூலை 14ம்தேதி இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவு உதவிச் செயலாளர் ஆர்மிட்டேஜ் விஷயமறிந்து அதிர்ச்சியடைந்தாராம். மானமிகு ஜார்ஜ் பெர்னான்டஸுக்கு விமானநிலையத்திலிருந்து காரில் வந்துகொண்டு இருக்கும் போதே போன் செய்து 'ஸாரி' சொன்னாராம். அவருக்கும், அமெரிக்காவுக்கும் ஜார்ஜ் பெர்னான்டஸ் உற்ற நண்பர் என்று நன்னடத்தை சான்றிதழ் வேறு கொடுத்தார். சாயங்காலம் அந்த ராட்சச மொட்டைத்தலை உருவம் இந்தியக்குழந்தைகளோடு கொஞ்சியதை காண்பித்தவாறு தொலைக்காட்சிகள் இந்தச் செய்திகளை வாசித்தன. எவ்வளவு பெரிய விஷயம். அமெரிக்க அதிகாரி ஒருவரே மன்னிப்பு கேட்டு விட்டார். ஸாரி என்பது எவ்வளவு பெரிய வார்த்தை.
ஆளாளுக்கு உண்மைகள் சொல்ல அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் மான்சிங் விஷயத்தை மேலும் போட்டு உடைத்தார். 'இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் அவர், அவரை சோதனையிடக்கூடாது' என்று சொன்ன பிறகும் சோதனை நடந்தது என்கிறார். இது போல பல இந்திய உயரதிகாரிகளுக்கும் நடந்திருக்கிறது என்னும் அடுத்த தகவலும் அவரிடமிருந்து வருகிறது.
கேட்க கேட்க ஆத்திரமும், எரிச்சலும் பற்றிக்கொண்டு வருகிறது. தூ என்று காறித் துப்பலாம் போல இருக்கிறது. ‘வந்தே மாதரம்’ என்று அடிவயிற்றில் இருந்து இழுத்து , ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று திரும்பத் திரும்ப யாருக்காக இங்கே பாடித் தொலைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவமானத்தில் நமக்கு கூனிக் குறுகத் தோன்றுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் நடந்ததற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஊமை கனவு கண்ட மாதிரி ஒளித்து வைத்திருக்கிறார்கள். தெரிந்த பிறகு அதெல்லாம் ஒன்றுமில்லை. சாதாரண விஷயம் என்பதாய் சித்தரிக்கிறார்கள். வெட்கக்கேடு. அவிழ்க்கப்பட்டது ஆடை மட்டுமா? அவமானப்பட்டது அவர் மட்டுமா? நூறு கோடி இந்தியருக்கும் தலைகுனிவு. எப்பதம் வாய்த்திடுமேனும்’ யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்.
கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில்தான் சீனப்பிரஜை ஒருவருக்கு அமெரிக்காவில் ஒரு அவமானம் நிகழ்ந்திருக்கிறது. ஜஹு யான் என்னும் 37 வயது சீனப் பெண்மனியை நயாகரா அருவி அருகில் போதை மருந்து வைத்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகப்பட்டு துன்புறுத்தி இருக்கிறார்கள். இதனைக் கேள்விப் பட்டதும் சீன அரசு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. 'உலக அரங்கில் அமெரிக்காவின் அடாவடித்தனம்' என ஒரு சீனப்பத்திரிக்கை கடுமையாக எழுதியது. சீனாவின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்க வெளியுறவு மந்திரி காலின் பாவெல்லுடன் கோபமாக பேசினார். இப்போது துன்புறுத்திய அமெரிக்க அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்து வருடங்கள் ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். தனது நாட்டு சாதாரண பிரஜை ஒருவருக்கு நேர்ந்த அவமானத்துக்கு சீன தேசமே துடித்துப் போகிறது. இங்கே தனது நாட்டு பாதுகாப்பு அமைச்சருக்கே அவமானம் நேர்ந்தபோதும் இந்தியா வாய் மூடிக்கொண்டு இருக்கிறது.
செப்டம்பர் 11ல் இரட்டை கட்டிடங்கள் தாக்கப்பட்ட பிறகு அதிஜாக்கிரதையாக இருக்க அமெரிக்காவின் பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சி நடந்து விட்டதாக அமெரிக்கா கூறுகிறது. ஜார்ஜ் பெர்னான்டஸ் என்ன எல்லை தாண்டிய பயங்கரவாதியா? ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை இப்படி அவமானப்படுத்தும் தைரியம் எப்படி அவர்களுக்கு வந்தது? எல்லாம் இவர்கள் கொடுத்த இடம்தான். இவர்கள் எழுதிக் கொடுத்திருக்கிற அடிமை சாசனம்தான். அந்நிய முதலீடுகளுக்கும் பொருட்களுக்கும், எந்த தடையுமில்லாமல் திறந்துவிட்ட தாராளம் எல்லாம் இவர்களை புழுக்களாய் நினைக்க வைத்திருக்கிறது. எவனொருவன் சொந்த நாட்டை மதிக்கிறானோ அவனே அடுத்த நாட்டிலும் மதிக்கப்படுவான். மரியாதை என்பது நம்மை நாம் தக்க வைத்துக் கொள்வதில் இருக்கிறது.
எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?
எப்போதாவது ஒரு கணம் இதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? முதன்முதலாய் பள்ளியில் சேர்ந்த அன்று, பக்கத்தில் உட்கார்ந்து கூடவே அழுதவன்/ள் எத்தனை வகுப்புகள் கூடவே வந்தான்/ள் என்று தேடியிருக்கிறீர்களா? முதல் வகுப்பில் “உள்ளேன் ஐயா” என்று கையைத் தூக்கியவர்களில், எத்தனை பேர் எட்டாவது வகுப்பிலும் உள்ளே இருந்திருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்திருக்கிறீர்களா? மீதமிருக்கிறவர்களில் எத்தனை பேர் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தார்கள் என்று தேடியிருக்கிறீர்களா? அப்புறம் இருக்கிறது கல்லூரி, மேலும் கல்லூரி...இத்யாதி எல்லாம் முடிந்து பார்க்கிறபோது முதலாம் வகுப்பில் இருந்து கூடவே வந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? சிலர் வேறு ஒரு பள்ளியில், கல்லூரியில் படித்திருக்கலாம். மற்றவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்? ஏன் போனார்கள்? எதாவது ஒரு ஓட்டலில் டீக்குடிக்க உட்காரும்போது ”என்ன சார் வேணும்” என்று மேஜையைத் துடைத்துக் கொண்டே கேட்கிறானே, அவனைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள். ஆறாம் வகுப்பில் இரண்டாவது பெஞ்ச்சின் இடது பக்க ஓரம் உட்கார்ந்திருந்த சுப்பையா மாதிரி இல்லை?
இதையெல்லாம் யோசிக்க வைத்தது முப்பத்தாறு பக்கங்களே உள்ள “எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?” புத்தகம். பின்னட்டையில் சொல்லப்பட்டிருந்த குறிப்பு சட்டென்று புத்தகத்தை நெருக்கமாக உணரவைக்கிறது. டாக்டர்.ராமானுஜம் எழுதியிருக்கும் முன்னுரையில் உள்ள வரிகள் இவை.
‘பள்ளி மணியடிக்கும் ஓசையும், அதன்பின் கேட்கும் மாணவர்களின் இரைச்சலான மகிழ்ச்சியும் ஒன்றுதான். பாடங்களிலிருந்து அன்னியப்படுத்தப்பட்டு எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சோகமாக நீளும் மாணவரின் கண்ணீரும் வேதனையும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதான். ‘கல்வி மறுக்கப்படுகிறது’ என்ற நமது குற்றச்சாட்டை மழுங்கடித்து ‘இல்லை, உங்கள் எல்லோருக்கும் கல்வி இலவசமாய்த் தருகிறோம். இருந்தும் நீங்கள் கற்கவில்லையென்றால் உங்களுக்கும் இதற்குத் தகுதியில்லை’ என்று புறக்கணிப்பை நியாயப்படுத்தும் ஏற்பாடுதான் இது. மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனை பள்ளிக்கு வரவழைத்து ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று சான்றிதழ் தரும் ஒரு செயல். இந்த நூல் இத்தாலியில் உள்ள பார்பினியா பள்ளியின் மாணவர்கள் தங்களை பெயிலாக்கிய பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.’
பார்பியானா என்பது மலைப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி. அங்குள்ள தேவாலயத்திற்கு வ்ந்த பாதர் மிலானிதான் பார்பினியா பள்ளியின் நிறுவனர். அந்தக் குடியிருப்பைச் சுற்றி பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாதிருப்பதைக் கண்டார். அவர்கள் தேர்வுகளில் தவறியோ, ஆசரியர்களின் கண்டிப்புகளால் வெதும்பியோ பள்ளியை விட்டு வெளியேறியவர்கள் என அறிந்தார். பதினொன்று முதல் பதிமூன்று வயதுள்ள பத்து மாணவர்களை வைத்து பள்ளியை உருவாக்கினார். மூத்த மாணவர்கள் இளையவர்களுக்கு அல்லது அறிந்த மாணவர்கள் அறியாதவர்களுக்கு கற்பித்தனர். கற்பித்துக் கொண்டே கற்றனர். ஒவ்வொரு மாணவனும் ஏதேனும் ஒரு சூழலில் ஆசிரியனாகவும் செயல்பட்ட விசித்திரமான பள்ளியாக அது இருந்தது. அங்கு படித்த எட்டு மாணவர்கள், தங்களை ஏற்கனவே பெயிலாக்கிய பழைய பள்ளியின் டீச்சருக்கு எழுதிய கடிதம்தான் Letter to a Teacher ! உலகெங்கும் உள்ள சிந்தனையாளர்களைத் தொட்ட புத்த்கம். அதை தமிழுக்கு அறிமுகம் செய்யும் உன்னத நோக்கத்தோடு ‘எங்களை ஏன் பெயிலானிக்கினீர்கள்’ என்று எழுத்தாளர் ஷாஜஹான் எழுதியிருக்கிறார்.
அன்புள்ள மிஸ்!
உங்களுக்கு எங்களின் பெயர்கள் நினைவிருக்காது. எங்களை நீங்கள்தான் பெயிலாக்கினீர்கள். நாங்கள் உங்களையும் பிற ஆசிரியர்களையும், நீங்கள் பெயிலாக்கியவர்களையும், அந்தப் பள்ளியையும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. நீங்களோ எங்களை பெயிலாக்கி தொழிற்சாலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் அனுப்பிவிட்டு மறந்து போனீர்களே, மிஸ்.
என்று ஆரம்பிக்கும் கடித்தின் முதல் வரியில் நம் தொண்டை அடைத்துப் போகிறது. கடினமான உழைப்பும், தொடர்ந்த புறக்கணிப்பும் மிக்க குடும்பத்தில் இருந்து வந்த தங்களைப் போன்றவர்களுக்கு பள்ளியில் ஏற்படும் உணர்வுகள், மனத்தடைகள் குறித்து பேசுகிறார்கள்.
சிறுவயதிலிருந்தே எனக்குக் கூச்சம் உண்டுதான். எப்போதும் குனிந்து தரையையே பார்த்துக் கொண்டிருப்பேன். யாரையும் நேரில் பார்ப்பதை தவிர்க்கும் பொருட்டு பலநேரம் சுவரைப் பார்த்திருப்பேன்.
நகரத்தின் தொழிலாளர்களும், மலைப்பகுதியில் வசிக்கும் எங்களைப் போன்றவர்கள்தான். ஏழைகளின் கூச்சம் ஒரு பழந்துயரம். அது கோழைத்தனம் அல்ல. பிடிவாதமாக இருக்க முடியாததால் கூட அத்தகைய கூச்சம் இருக்கலாம்.
மொழி, கணிதம், ஆங்கிலம், புவியியல், வரலாறு, உடற்பயிற்சி என அனைத்துப் பாடங்கள் குறித்தும், அவை நடத்தப்படும் விதம் குறித்தும் மிக ஆழமான விமர்சனங்களை அனுபவரீதியாக இந்தக் கடிதம் எழுப்புகிறது.
“நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு, ஆரோக்கியமானவர்களை சேர்த்துக் கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக பள்ளி செயல்படுவது சரியாகுமா?”
“கற்றுக் கொள்வதன் தன்மையறிந்து தேர்வுகளில் கடினப்பகுதிகள் கேட்கப்பட வேண்டும். தொடர்ந்து கடினமானவையே கேட்கப்பட்டால், உங்களுக்கு எங்களை சிக்க வைக்கும் மனோபாவம் இருப்பதாகத்தான் அர்த்தம். அதுவும் திட்டமிட்டுச் சிக்க வைக்கும் சூழ்ச்சி மனோபாவம்”
“இலக்கணம் என்பது எழுதுவதற்குத்தான் பயன்படுகிறது. வாசிப்பதற்கோ, பேசுவதற்கோ இலக்கணமின்றி ஒருவரால் இயங்க முடியும். மெல்ல மெல்ல கேட்டும், எழுதியும் புரிந்து கொள்ளப்பட்டு ஆழமான இலக்கண அறிவு பெற முடியும்.”
“மாணவர்களுக்கு இலக்கு என்பது பெரும் துயரம்தான். ஒவ்வொரு நாளும் அவர்கள் மதிப்பெண்ணுக்காக, தேர்வுக்காக, சான்றிதழுக்காக வேகவேகமாகப் படிக்கிறார்கள். அந்த வேகத்தில் அவர்கள் கற்கும் விஷயங்களில் சிறந்த, நுட்பமான விஷயங்களைத் தவற விட்டிருக்கிறார்கள்.”
“உடற்கல்வி ஆசிரியர் கூடைப்பந்து விளையாடச் சொன்னார். எங்களுக்குத் தெரியவில்லை. மீண்டும் தேர்வு எழுதவேண்டும் என்றார். எங்களுக்கு ஓக் மரத்தில் ஏற முடியும். இருநூறு பவுண்டு எடை உள்ள கிளையை வெட்டி பனிபடர்ந்த மலைப்பகுதியில் இழுத்துச் செல்ல முடியும்”.
இப்படியே மிக நுட்பமான பார்வைகளோடு நகரும் கடிதத்தின் இறுதியில் தங்கள் மனதுக்குப் பட்ட சில தீர்மானகரமான முடிவுகளையும் முன்மொழிகிற்து கடிதம்.
“மாணவர்களை பெயிலாக்காதீர்கள். பின் தங்கிய மாணவர்களுக்கு முழு நேரப் பள்ளி நடத்துங்கள்”
“முழு நேரப் பள்ளி எனப்து ஆசிரியத் தம்பதியினரால் நடத்தப்பட முடியும். கணவன் மனைவி இருவரும் தங்கள் வீடுகளிலேயே நேரக் கட்டுப்பாடின்றி கற்பிக்கிற பள்ளி சிறப்பான முழுநேரப் பள்ளீயாக இருக்கும்”
“பாராளுமன்றம் இரு குழுக்களாக விவாதித்தது. வலதுசாரிகள் பாடத்திட்டத்தில் ஒன்றைத் திணிக்க முடிவு செய்தார்கள். இடதுசாரிகள் வேறொன்றைச் சேர்க்க குரல் எழுப்பினார்கள். உங்களைப் போன்ற ஆசிரியர்களால் பெயிலாக்கப்பட்டு பள்ளிக்கனவுகள் தகர்ந்து, கல்வியை இழந்து வெளியேற்றப்படும் எங்கள் நிலையை ஒருவரும் உணரவில்லையே, மிஸ்”
தவிப்பாக இருக்கிறது. வாழ்வின் போக்கில் நாம் தவற விட்ட நம் பள்ளித் தோழர்களை உட்கார்ந்து கண்ணீர் மல்க யோசிக்க வைக்கிறது இந்தப் புத்தகம். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் நாமெல்லாம் எங்கு வேகமாய் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
மொழி பெயர்த்த எழுத்தாளர் ஷாஜஹான், தன் முன்னுரையில் “கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஆசிரியப்பணி செய்துகொண்டிருக்கும் நான் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளானேன்.” எனக் குறிப்பிடுகிறார். வாசிக்கும் நமக்கும் ஏற்படுகிறது.
புத்தகம் வெளியீடு:
வாசல் பதிப்பகம்
40, D/4 முதல் தெரு,
வசந்த நகர்
மதுரை- 625003
விலை ரூ.20/-
*
கைடோக்கள் இன்றும் இருக்கிறார்கள்....
அந்த இரவில் தன் ஐந்து வயது மகன் ஜோஷ்யாவை சுமந்தவாறே அந்த இத்தாலிய நாட்டு சிப்பந்தியான யூதன் கைடோ நடந்து செல்கிறான். தோளில் தூங்கிக் கொண்டிருக்கும் அவனிடம் 'இதெல்லாம் வெறும் கனவுதான் மகனே, நாளைக் காலை விடிந்துவிடும். அம்மா வந்து உன்னை எழுப்புவாள்.' என்று சொல்லிக் கொண்டே கைடோ வந்து நிற்கிற இடம் உறைய வைக்கிறது. பனி மூட்டத்திற்குள்ளே மிக மங்கலாக, நாஜிக்கள் முகாமில் ஆயிரம் ஆயிரமாய் கொல்லப்பட்ட யூதர்களின் எலும்புகளின் குவியல் தெரிகிறது. மொத்த திரைப்படத்திலும் நாஜிக்களின் கொடூரத்தைப்பற்றிய நேரடியான காட்சி சித்தரிப்பு என்றால் இது ஒன்றுதான். ஆனால் பல காட்சிகள் நம்மை மௌனமாய் கதற வைக்கின்றன. முற்பகுதியில் இத்தாலியில் பள்ளி ஆசிரியை டோராவை காதலிக்கிற காட்சிகளில் நம்மை ரசித்து ரசித்து சிரிக்க வைக்கிற கைடோ, பிற்பகுதியில் ஜெர்மனியின் நாஜிக்கள் முகாமிலும் அதே கலகலப்பாய்த்தான் இருக்கிறார். ஆனால் நாம் தவித்துப் போகிறோம்.
'வாழ்க்கை அழகானது (life is beautiful)'. ரொபர்ட்டோ பினைனியின் படம் இது. பினைனியே கதைவசனம் எழுதி, இயக்கி கைடோவாக நடித்து இருக்கிறார். 1998ல் வெளிவந்த படம். எட்டு இத்தாலி ஆஸ்கார் பரிசுகளையும், கேன்ஸ் கிராண்ட் ஜூரி விருதினையும் பெற்று இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளில் ஒரு சிறு துளியை காண்பிக்கிறது. கைடோ வேலை தேடி ரோம் நகரம் வருகிறான். அவனது சித்தப்பாவின் தயவில் ஒரு ஓட்டலில் சிப்பந்தி வேலை செய்கிறான். பள்ளி ஆசிரியை டோராவின் மீது காதல் கொள்கிறான். இவனது கலகலப்பும், புத்திசாலித்தனமும் அவளை கவர்கின்றன. நிச்சயம் செய்யப்பட்ட கனவானிடமிருந்து தப்பி டோரா கைடோவோடு இணைகிறாள் .தனது கனவுகளில் ஒன்றான புத்தகக் கடை ஒன்றை கைடோ ஆரம்பிக்கிறான். துறுதுறுவெனை இருக்கும் ஜோஷ்யா பிறக்கிறான். சைக்கிளில் குழந்தையையும், டோராவையும் வைத்து நகரத் தெருக்களில் ஒரு காலை வேளையில் சிட்டாக கைடோ பறக்கிற காட்சி வரை படம் முழுவதும் நகைச்சுவைதான். தொப்பியை மாற்றுவதும், கேட்டதும் சாவி மேலிருந்து விழுவதும், டோராவின் பள்ளிக்கு ஆய்வாளராக சென்று லூட்டி அடிப்பதும், ஓட்டலில் எல்லாம் தீர்ந்து போன பிறகு வருகிற ஒரு அரசு அதிகாரிக்கு, பக்கத்து டேபிளில் சாப்பிடாமல் வைத்திருக்கிற உணவை எடுத்து பரிமாறுவதும், மெஸ்மரிசம் பழகுவதும் சிரிக்க சிரிக்க நிறைந்த நிகழ்வுகள் சட்டென மாறுகின்றன.
டோராவை பள்ளியில் இறக்கிவிட்டு, ஜோஷ்யாவோடு புத்தகக் கடையைத் திறக்கிறான்.'யூதனுக்கும் நாய்க்கும் அனுமதி இல்லை' என்ற வாசகங்கள் குழந்தையை கேள்வி கேட்க வைக்கின்றன. 'அவரவர் இஷ்டம் போல இப்படி சொல்லிக்கொள்வார்கள். நாளை சிலந்திகளுக்கும், தூசிகளுக்கும் அனுமதி இல்லை என்று நாம் சொல்லலாம்’ என கைடோ அந்த பயங்கரத்தை மிகச் சாதாரணமாக குழந்தையிடம் தெரிவிக்கிறார். இந்த இடத்திலிருந்து குழந்தைக்கு ஒரு தளத்திலும், பார்வையாளனுக்கு இன்னொரு தளத்திலும் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் பினைனி. ஒரு தந்தையாகவும், ஒரு யூதனாகவும் காட்டுகிற சித்தரிப்பில்தான் படத்தின் ஆன்மாவும், அர்த்தமும் இருக்கிறது.
ஜோஷ்யாவுக்கு அன்று பிறந்தநாள்.சின்ன பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு காலையில் டோராவிடம் விளையாடுகிறான். பள்ளிக்குச் சென்றுவிட்டு டோரா திரும்பி வரும்போது வீடே அலங்கோலமாய் கிடக்கிறது. கைடோவும், ஜோஷ்யாவும் இல்லை. விஷயமறிந்து பதறி டோரா புகைவண்டி நிலையத்திற்கு விரைகிறாள். கைடோ, கைடோவின் சித்தப்பா, ஜோஷ்யா, இன்னும் பல யூதர்களும் ஒரு டிரக்கில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. 'உன் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு' என்று கைடோ சொல்கிறான். டிரக்கிலிருந்து இறக்கப்பட்டு புகை வண்டி ஒன்றில் சரக்குகள் ஏற்றும் அறையில் மீண்டும் அடைக்கப்படுகிறார்கள். யூதப்பெண் இல்லையென்றாலும் டோரா தானும் அந்த வண்டியில் இன்னொரு அறையில் ஏறிக்கொள்கிறாள். கைடோவும், ஜோஷ்யாவும் அதைப் பார்க்கிறார்கள். கொலை நெடி வீசும் நாஜிக்கள் முகாம் ஒன்றை நோக்கி அவர்கள் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த முகாமிலும் குழந்தைக்கு ஒரு அழகான உலகத்தை காட்டுவதிலேயே சித்தமாயிருக்கிறான் கைடோ. அங்கு ஒரு விளையாட்டு நடக்கும் என்றும், அதில் 1000 புள்ளிகள் எடுத்தால் கடைசியில் ஒரு டாங்கியை பரிசாக தருவார்கள் என்றும் குழந்தையின் கற்பனை உலகத்தை தனதாக்கிக் கொள்கிறான். வயதானவர்களும், குழந்தைகளும் தேவையில்லையென்று நாஜிக்கள் கொன்று விடுவார்கள் என்ப்தால் குழந்தையை அந்த கொட்டடிக்குள் ஒளித்து வைக்கிறான்."நீ யார் கண்ணிலாவது பட்டால் நாம் விளையாட்டில் தோற்றுவிடுவோம்." என்று நம்பவைக்கிறான். மரணத்தின் விளிம்பில் நின்று, குழந்தையின் சித்திரத்தை தக்க வைப்பதற்கு ஒவ்வொரு பிரச்சினைகளையும் கைடோ சமாளிக்கும் விதத்தில் நகைச்சுவையைத் தாண்டி இறுக்கமான துயரங்களே பொதிந்து இருக்கின்றன.
பகலெல்லாம் தீக்கொழுந்துகள் வீசும் உலைக்களத்தில் கடினமான வேலைகளை செய்து களைத்து இருந்தாலும், கொட்டடிக்கு வந்ததும் மகனிடம் உற்சாகமாக தனக்கு அன்றைக்கு கிடைத்த புள்ளிகள் எவ்வளவு என்பதை பிரஸ்தாபிக்கிறான் கைடோ. டோராவின்னைவில் வாடி சுவர்களைத் தாண்டி காற்றின் வழியாக அவளது நினைவுகளை வருடிக் கொடுக்க அவனால் முடிகிறது. வயோதிகரான அவன் சித்தப்பாவின் கடைசிக் கணங்கள் ஒரு சிறு காட்சியில் புரிய வைக்கப்படுகிறது. சாப்பட்டுத் தட்டினை வைத்துக் கொண்டு மூடப்பட்ட கொட்டடிக்குள் தனியாக விளையாடிக்கொண்டு டாங்கியின் கனவில் இருக்கிறான் ஜோஷ்யா.
ஒருநாள் எங்கும் பரபரப்பாக இருக்கிறது. நாஜிக்கள் அங்குமிங்குமாய் விரைந்துகொண்டு இருக்கிறார்கள். உலகப்போரின் கடைசிக்கணங்கள் அவை. இதுதான் தருணம் என கைடோ ஜோஷ்யாவை பத்திரமாக வெளியே அழைத்து வந்து பீரோ மாதிரி இருக்கும் சின்ன பெட்டிக்குள் ஒளிந்து கொள்ளச் சொல்கிறான். ஜோஷ்யாவை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் 60 புள்ளிகள் கிடைக்கும் என்றும், தாங்கள் இதுவரை 940 புள்ளிகள் எடுத்தாகிவிட்டது என்றும் சொல்கிறான். டோராவை பார்க்க புறப்படுகிறான். நாஜிக்களால் பிடிக்கப்படுகிறான். துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்படும்போதும் அது ஒரு விளையாட்டு என்பது போலவே, ஒளிந்து பார்த்துக்கொண்டிருக்கும் மகனுக்கு சித்தரித்து கடக்கிறான். கொஞ்சதூரம் நடந்து இருட்டிற்குள் சென்ற பிறகு இயந்திரத்துப்பாக்கியின் சத்தம். அமைதி.
நாஜிக்கள் ஓடிவிடுகிறார்கள். உயிரோடு இருக்கும் யூதர்கள் நடக்க முடியாமல் அங்கிருந்து செல்கிறார்கள். எங்கும் அமைதி. இப்போது அங்கு யாருமில்லை. ஜோஷ்யா மெல்ல வெளிப்படுகிறான். தனியாக நிற்கிறான். தூரத்தில் எதோ வாகன சத்தம் கேட்கிறது. மிகுந்த அலறலோடு அது பக்கத்தில் வருகிறது. டாங்கி! அவனது கனவு டாங்கி. கைடோவின் கற்பனை நனவாகி ஜோஷ்யா முன்னால் வந்து நிற்கிறது. உள்ளிருந்து யாரோ வேறோரு நாட்டு வீரன் அவனைப் பார்த்து இறங்கி டாங்கியின் மீது உட்கார வைத்துக் கொள்கிறான். புறப்படுகிறார்கள். கொஞ்சதூரத்தில் டோரா கூட்டத்தில் செல்வதைப் பார்த்து 'அம்மா' என்று கூவி அழைக்கிறான். டாங்கியிலிருந்து தாவி அம்மாவின் மீது பாய்கிறான். "அம்மா..நாம் ஆயிரம் புள்ளிகள் எடுத்துவிட்டோம். கடைசியில் ஜெயிச்சிட்டோம். " மூச்செல்லாம் வாங்க சந்தோஷத்தில் கத்துகிறான். அந்த சிரிப்போடு படம் முடிவடைகிறது. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யாரும் பக்கத்தில் இருப்பவரோடு பேச முடியாத உறைந்து போன கனம் நிலவுகிறது. தொண்டை அடைக்கிறது. வேதனை நிறைந்த அனுபவங்கள் நிழலாடுகிறது. ஆனால் கைடோ தனது குழந்தைக்கு 'உலகம் அழகானது' என்று மட்டுமே புரிய வைத்திருக்கிறான்.
நாஜிக்களின் கொடுமையை சித்தரிக்காமல், அந்த கொடுமையை கேலி செய்வது போல இருக்கிறது என்றெல்லாம் இந்த படத்திற்கு பின்னாளில் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால் பார்வையாளர்களின் மனிதத்தன்மையை சோதித்து வெல்லக்கூடிய அற்புதமான படமாகவே இருக்கிறது. உறைந்திருக்கும் பாறைகளை உருகவைக்கிறது. டோராவையும் ஜோஷ்யாவையும் உட்காரவைத்து சைக்கிள் ஒட்டுகிற கைடோ கடைசியில் இல்லை. ஆனால் நம் எல்லோர் நெஞ்சிலும் இருக்கிறான்.
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் .இப்போதும் இனவெறி கொண்ட நிலங்களிலெல்லாம் கைடோக்களும், டோராக்களும், ஜோஷ்யாக்களும் இருக்கிறார்கள். உண்மைகளை உயிரோட்டமான வாழ்க்கையே வலிமையாக உணர்த்துகின்றன. வாழ்க்கை அழகானது என்பது ஒரு கனவாக மட்டும் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
பி.கு : பழைய டைரியின் பக்கங்களிருந்து எடுத்து இங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
*
வெயில்
ஓட்டமும் நடையுமாய் மெயின் ரோட்டுக்கு வந்து பெட்டிக்கடையில் போய் நின்று “திருச்செந்தூர் பஸ் போய்ட்டா” கேட்டேன்.
“இப்பத்தா அஞ்சு நிமிசத்துக்கு முன்னால போச்சு”
“அடுத்த பஸ் இனும எப்ப”
“முக்கா மண்ணேரத்துக்கும் மேல ஆவுமே தம்பி”
என் ஏமாற்றம் பெட்டிக்கடைக்காரரை பாதித்திருக்க வேண்டும். பாவமாய்ப் பார்த்தார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இதே இடத்தில் வந்து இறங்கும் போது அவரிடம்தான் ஊருக்குள் பூவலிங்கம் வீட்டை விசாரித்தேன். கூடவே திருச்செந்தூருக்கு அடுத்த பஸ் எப்போது வரும் என்று கேட்டும் வைத்திருந்தேன். இந்த சின்ன நெருக்கத்தில் அவரிடமிருந்து இரக்கம்.
வெயில் இரக்கமே இல்லாமலிருந்தது. கண்களை எப்போதும் போல் போல் விரித்துப் பார்க்க முடியாதபடிக்கு உக்கிரம். காலையில் ஷேவ் செய்தது காந்தலெடுத்தது. காய்ந்து போன உதடுகளை ஈரப்படுத்திய நாக்கில் கரிப்பு. தலைமுடிக்குள்ளிருந்து வேர்வை வழிந்து புருவத்தில் நிதானித்தது. மூக்கு நுனியில் வந்து சொட்ட நின்றது. காதோரம், பிடரி பூராவும் கசகசவென்றிருந்தது. தொப்பலாய் சட்டை. எரிச்சலூட்டும் பிசுபிசுப்பு. கைக்குட்டையால் அழுந்த துடைத்தேன். காலையில் வீட்டிலிருந்து புறப்படும்போது சுத்தமாய் மடித்து வைத்திருந்த கைக்குட்டை கசங்கி ஈரமாய். வேர்வை நின்றபாடில்லை.
இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள். சொல்ல முடியாது. ஒரு மணி நேரம் கூட ஆகலாம். நாம் தாமதமாகும் போது பஸ்கள் சரியான நேரத்துக்கு வந்துவிடுகின்றன. நாம் சரியான நேரத்துக்கு வரும்போது பஸ்கள் தாமதமாகின்றன. பூவலிங்கம் வீட்டிலிருந்திருந்தால் இன்னேரம் பஸ்ஸை பிடித்திருக்கலாம். வீட்டில் விசாரித்து சொஸைட்டிக்கு முன்னால் வேப்ப மரத்தடியில் நாலைந்து பேரோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவரை கண்டுபிடிப்பதற்குள் லேட்டாகிவிட்டது. சரி... பஸ்தான் போனது, பணமாவது வசூலானதா என்றால் அதுவுமில்லை. லோலோவென்று அலைந்ததுதான் மிச்சம்.
நிழலுக்கு என்று இடம் இல்லை. ரெண்டு பெட்டிக்கடை. புகை மண்டிய டீக்கடை. வரிசையாய் வேப்பமரம். காகரஸ் மரங்கள். அவைகளில் சுடுகுஞ்சு கூட இல்லை. கிழேச் சின்னச்சின்னதாய் பேருக்கு நிழல்கள். இப்போது பார்க்கும் வேலையும் இது போலத்தான். சிட்பண்டில் தரும் நானூறு ருபாயில் அப்பா, அம்மா, தம்பி, நான். இப்படி வெளியூருக்கு போனால் பஸ் காசோடு பேட்டா ஐந்து ருபாய். இன்று இந்த சொற்பக் காசைத் தரும்போது முதலாளி எரிச்சலடைவார். வசூலாயிருந்தால் கொஞ்சம் சிரிப்பு முகத்தில் இருக்கும்.
டீக்கடையில் ‘யமுனை ஆற்றிலே... ஈரக்காற்றிலே... கண்ணன் இல்லையோ பாட’ பாட்டு. சோமுவின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு சாயங்காலம் மிதந்து வந்த இதே பாட்டு எவ்வளவு அமைதியையும், சாந்தத்தையும் தந்தது. தாயின் உள்ளங்கையிலிருந்து குழந்தைக்கு கிடைக்கும் அனுபவம் அது. இசையின் இனிமையையும் வெயில் உறிஞ்சி விடுகிறது.
விசுக்கென்று ஒரு சின்ன சத்தத்தில் மாருதி கார். சரியாக பார்ப்பதற்குள் தூரம் போய் விட்டது. கண்ணாடி ஏற்றிவிட்ட மாதிரி இருந்தது. ஏ.சி செய்யப்பட்டிருக்க வேண்டும். வெயிலையே உறிஞ்சி விடுகிற சக்தி. உள்ளே இருப்பவர்களுக்கு வெளியுலகம் சாயங்காலமாய் இருக்கும். ரோட்டின் குறுக்கே அலைஅலையாய் மிதக்கிற தோற்ரம். வெயில் காட்டும் ஜாலம். எங்காவது போய் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து கிடக்க வேண்டும் போலிருக்கிறது.
யோசித்துப் பார்க்கும் போது சவுகரியங்களும், சொகுசுத்தனங்களும் கற்பனைகளில் மட்டுமே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு பருவமும் கஷ்டங்களில் கழிந்தாலும் ஒன்றுக்கொன்று மோசமாகிக்கொண்டே வருகிறது. சின்ன வயசில் பட்டன் அறுந்த கால்ச்சட்டை போட்டுக்கொண்டு ஊர்க்காடெல்லாம் சைக்கிள் டயரை ஒட்டிக்கொண்டு திரிந்த காலங்கள் என்னவோ சுகமாய்த்தான் இருக்கின்றன. நாளுக்கு நாள் வெயில் ஏறிக்கொண்டே இருக்கிறது. இரவுகளில் கூட வெயிலின் நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. ரோட்டில் உருகிய தாரின் வெக்கை முகத்தலடிக்கிறது.
ரோட்டின் மறுபக்கம் நீண்டு பரந்த வயல்வெளி. அறுப்பு முடிந்து வெறும் நிலம் பாத்தி பாத்தியாய். மூனு பேர் காய்ந்து போன வரப்புகளில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். போன மழைக்காலத்தில் பூவலிங்கம் கடன் வாங்கியிருந்தார். இப்போது நான் என்ன செய்ய என்று இந்த நிலம் போல விழிக்கிறார். பணம் தரவில்லையென்றால் மரியாதையில்லாமல் பேசிவிட்டு வா என்று சொல்லியிருந்தார் முதலாளி. எப்படிப் பேச. பூவலிங்கத்திற்கு அப்பா வயசு இருக்கும்.
“யப்பா... என்ன எழவு வெயில் இது” வெறும் மார்பில் துண்டு துடைத்தபடி மூனுபேரில் ஒருவர் ரோட்டுக்கு ஏறி வந்தார்.
“சர்பத் போடுங்கண்ணே” பனை ஓலை விசிறியால் காற்று ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த கடைக்காரர் உற்சாகமானார். வெயில் வியாபாரம்.
“நல்லா வெயிலடிக்கட்டும் அப்பத்தான் இந்த வருசம் விதைப்புக்கு மழை வரும்”
வீடு இப்படித்தான் என்னையும் நம்புகிறது. அழுகையாய் வந்தது. மங்கிய நிலாவொளியில் ஒரு பெரிய கல்லின் மீது கைவைத்தபடி மோன நிலையில் அமர்ந்திருக்கிற ஏசுவின் படமும், கொஞ்சம் தள்ளி ‘வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே... என்னிடம் வந்து இளைப்பாறுங்கள்’ என்னும் வாசகத்தோடு இருக்கும் வீட்டின் முன்னறையும் ஞாபகத்துக்கு வந்தன.
டீக்கடை முன்னால் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து உட்கார்ந்து, அந்த பழைய பெஞ்ச் வழுவழு என்றாகியிருந்தது. வெயிலில் பளபளத்தது. வாட்சைப் பார்த்தேன். பத்து நிமிஷங்கள்தான் ஆகியிருந்தது.
கடகடவென அந்தப் பிரதேசமே அதிரும்படி லாரி ஒன்று ரோட்டில் போனது. பின்னால் குவிந்திருந்த மணலில் கைகால்களை பரத்திப் போட்டு வானம் பார்க்க ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த வெயிலிலா! எங்கிருந்து வருகிறான்..! கண்ணிலிருந்து லாரி மறைந்த பிறகும் அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதனுக்கு எது வெயில்?
பி.கு: 1992ல் நான் எழுதிய சிறுகதை இது.
***