இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியாவா காரணம்?

india-pakistan நேற்று நடந்த அந்தச் சம்பவம் பாகிஸ்தான் மீதான பிம்பத்தை உலகநாடுகளிடையே அழுத்தமாக பதித்திருக்கிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் நடந்த  பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானின் கைகள் இருப்பதாக சொல்லப்படும் நேரத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் பாகிஸ்தானில் வைத்தே நடந்திருக்கிறது. ஏற்கனவே அந்த மண்ணிலேயே சமீப காலங்களில் நடந்திருக்கும் குண்டுவெடிப்புகளும், உயிர்ப்பலிகளும் கொடுமையானவை. உள்ளும் வெளியுமாக நடந்து வரும் இந்த உயிர்பலி கேட்கும் வெறி கொண்ட காரியங்கள், பாகிஸ்தானுக்குள்ளிருக்கும் சில அமைப்புகளால் விதைக்கப்படுகின்றன அல்லது தூண்டப்படுகின்றன என்பது இப்போது உறுதியாய்த் தெரிகிறது.

இந்த செய்திகள் எப்போதும் எனக்கு கவலையளிக்கின்றன. இதில் சந்தோஷப்படவும், “ஆஹா..பாகிஸ்தான் அம்பலப்படுகிறது” என்று வேக வேகமாய் செய்திகளைப் பரப்பிக் கொண்டாடவும் என்ன இருக்கிறது (அதற்கென்று சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்). பாகிஸ்தானில் உள்ள மக்கள் இதுகுறித்தெல்லாம் என்ன சிந்திக்கிறார்கள் என்பதே என் முன் உள்ள கேள்வியாய் இப்போதும் இருக்கிறது. அவர்களது சில வலைப்பக்கங்கள், இணையதளங்கள், பத்திரிக்கைகளைப் படித்த போது பெரும் அதிர்ச்சியும், கனத்த மௌனமும் என்னை சூழ்ந்து கொண்டன.

இந்தியா மீது அப்படியொரு வெறுப்பு அங்கே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் சீன யுத்தங்கள் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் வரலாறும், அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட வரலாறும் வெவ்வேறாய் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து இந்தியா சதிகளில் ஈடுபடுவதாக அங்குள்ள மக்கள் மனதில் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அதன் விளைவுதான், “இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியாவின் சதிதான் காரணம். இலங்கையில் நடந்து வரும் யுத்தத்தையொட்டி இந்தியாவுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை திசை திருப்பவும். பாகிஸ்தானை வேறு விதமாக சித்தரிக்கவும், ஆப்கானிஸ்தானிலுள்ள் தலிபான்களை மறைமுகமாக இந்தியா பயன்படுத்தி இந்தச் சதியை நிறைவேற்றி இருக்கிறது” என்று அங்கு செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரே இப்படியொரு கருத்தை சொல்லியிருப்பது நமது நாளிதழ்களில் இன்று வெளியாகி இருக்கின்றன.

இருபக்க மக்களிடமும், இரண்டு நாடுகள் குறித்தும் அண்டை நாடுகள் என்ற உணர்வை ஏற்படுத்தாமல், எதிரி நாடுகள் என்றே வரலாற்றில் வெறுப்பினைக் கலந்து ஊட்டி விடப்பட்டிருக்கிறது. அரசுகள், அரசியல், தலைவர்கள் எல்லாரையும் விட மக்கள் மகத்தனாவர்கள். உன்னதமானவர்கள். அவர்களைக் கூறாக்கி, எதிரெதிரே நிறுத்தி வைப்பது நம் காலத்தின் மிக சோதனையான பக்கங்கள். இருதரப்பு மக்களுமே பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒவ்வொரு உயிர் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் போதும் துடித்து கலங்கித்தான் போகிறார்கள். ஆனால் இந்திய மக்கள் அழ வேண்டுமானால், இறந்து போனவர்கள் இந்தியராக இருக்க வேண்டும். பாகிஸ்தான் மக்கள் அழவேண்டுமானால் இறந்து போனவர்கள் பாகிஸ்தானியராக இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில், உலகப்புகழ் பெற்ற பாகிஸ்தான் வரலாற்று ஆசிரியர் இக்பால் அகமது 1998ல் டெல்லியில் வந்து பேசிய வார்த்தைகளை நாம் மனதில் வாங்கியாக வேண்டும்.

“இந்திய பாகிஸ்தான் நல்லுறவை வளர்க்கப் பாடுபடுவேன் என்று எந்தக் கட்சி வாக்குறுதி தருகிறதோ, அதக் கட்சிக்குத்தான் எங்கள் பாகிஸ்தான் மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள். அது பெனாசிர் பூட்டோவானாலும் சரி, நவாஷ் ஷெரிப்பானாலும் சரி. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தவறான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக மக்களிடம் செல்வாக்கு இழக்கும் போது, மதவாதத்திடம் தஞ்சம் புகுந்து இஸ்லாமிய ஆட்சி, ஷரியத் சட்டம் என்கிறார்கள்.

முஸ்லீம் தீவீரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாம் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறது. முதலில் அது 17% வாக்குகள் பெற்றது. அடுத்த தேர்தலில் 5% வாக்குகள் கிடைத்தன. பிறகு 3% ஆகி கடைசியாய் 1.8% வாக்குகள்தாம் பெற்றது. வகுப்புவாதிகளுக்கு எதிர்காலம் கிடையாது என்பதை இந்தியாவிலுள்ள நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவிலுள்ள உங்களுக்கு மிகப்பெரும் பாரம்பரியம் கிடைத்திருக்கிறது. மிகத் தொன்மையான கலச்சாரப் பிண்ணனி கொண்ட தேசம் இந்தியா. ஆனால் யார் செய்த சதியோ பாகிஸ்தான் என்ற புதுநாடு உருவானது. எங்கள் பாகிஸ்தான் மக்களுக்கு எந்தப் பாரம்பரியத்தின் மீதும் உரிமை கொண்டாடி பெருமை கொள்ள எந்த அடையாளமுமில்லை என்ற உணர்வு இருக்கிறது.

இந்த உணர்வுள்ள எங்கள் மக்களிடம் மதம்தான் உங்கள் அடையாளம் என்று சொல்லும் போது சில சமயம் அந்தக்குரல் ஒருபகுதி மக்களிடம் எடுபடுகிறது. இதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?”

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல், இந்தியா இது போன்ற சதிகளால் ஒருபோதும் ஈடுபடாது என்று அந்த மக்களும் நம்ப வேண்டும். பரஸ்பரம் மக்கள், வெறுப்பினை நீக்கி செய்திகளை உள்வாங்குவது இந்த நேரத்தின் அவசியமாகப் படுகிறது. தங்கள் கட்சி, தங்கள் ஆட்சி என்னும் எண்ணங்களைத் தாண்டிய அரசியல் வரும்போதுதான் அதுவும் சாத்தியம். நம் கண்ணெதிரே நிகழும் இந்த அனுபவங்கள் வரலாற்றில் சாத்தியங்களை வெகுவாக யோசிக்கச் செய்கிறது. பகைமையும், வெறுப்பும் ஊறிக்கிடக்கும் இந்த நிகழ்வுகளுக்கு எது தீர்வு என்று மானுடம் நேசிக்கும் யாவரும் யோசிக்கின்றனர். சரி. நாளை தமிழ் ஈழம் மலர்ந்து,  தனித்தனி நாடானாலும், அந்த குட்டித் தீவுக்குள்ளும் இந்த அரசியலும் வெறுப்பும் தானே நீடிக்கும். அப்போதும் மக்கள்தானே பாதிக்கப்படுவார்கள்?

 

 

*

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //

    இந்தியாவிலுள்ள உங்களுக்கு மிகப்பெரும் பாரம்பரியம் கிடைத்திருக்கிறது. மிகத் தொன்மையான கலச்சாரப் பிண்ணனி கொண்ட தேசம் இந்தியா. ஆனால் யார் செய்த சதியோ பாகிஸ்தான் என்ற புதுநாடு உருவானது. எங்கள் பாகிஸ்தான் மக்களுக்கு எந்தப் பாரம்பரியத்தின் மீதும் உரிமை கொண்டாடி பெருமை கொள்ள எந்த அடையாளமுமில்லை என்ற உணர்வு இருக்கிறது.

    இந்த உணர்வுள்ள எங்கள் மக்களிடம் மதம்தான் உங்கள் அடையாளம் என்று சொல்லும் போது சில சமயம் அந்தக்குரல் ஒருபகுதி மக்களிடம் எடுபடுகிறது. இதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” //

    நியாயமான வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  2. ithu oru Naalaikku wanku vedikkum sir. irandu ethiri naanudukaLum kuroothaththai vaLarththuk koLkinRana. solla mudiyaathu.... muunRaam ulaka yuththathiRku kuuda ithu vazi vakukkalaam.Pakistan makkaLin aRiyaamai avarkaLukkoo allathu iNdia'vukkoo pirsachanaiyaaka irukkalaam...

    sariyaana Neeraththil sariyaana kaddurai.

    பதிலளிநீக்கு
  3. //இந்தியா இது போன்ற சதிகளால் ஒருபோதும் ஈடுபடாது என்று அந்த மக்களும் நம்ப வேண்டும்.//

    ஏ! அவ்வளவு நல்லவனாய்யா நீ...கேட்கிறவன் வாயால சிரிக்க மாட்டான்யா.

    அண்மையில் மக்கள் தொ.கா வில் நடந்த விவாதத்தில், ஈழத்தின் சகோதர கொலைகளின் காரணகர்த்தா இந்திய 'ரா' தானே என்ற கேள்விக்கு, பீட்டர் அல்போன்சா கொடுத்த பதிலை மறந்து விட்டீர் போலும். ஈழத்தில் மட்டுமல்ல, ரா-வானது பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர் என்று தன் அண்டை நாடுகள் பூராவிலும் வியாபித்துள்ளது, என்றார்.

    அண்டை நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதா இந்திய உளவுத்துறைக்கு வேலை என்பதை ப.சிதம்பரத்திடம் வேண்டாம், தோழர் மாதவ் அவர்களிடமே கேட்கலாம் சொல்வார்.

    //தமிழ் ஈழம் மலர்ந்து, தனித்தனி நாடானாலும், அந்த குட்டித் தீவுக்குள்ளும் இந்த அரசியலும் வெறுப்பும் தானே நீடிக்கும். அப்போதும் மக்கள்தானே பாதிக்கப்படுவார்கள்?//

    ஆகவே...? அதையும் சொல்லிவிடுங்கள். தனி ஈழ குடியரசை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க மாட்டோம் என்றுதான் உ.ரா.வரதராசன் எப்பவோ சொல்லிவிட்டாரே!

    அது சரி, இது எதற்கு?

    //தங்கள் கட்சி, தங்கள் ஆட்சி என்னும் எண்ணங்களைத் தாண்டிய அரசியல் வரும்போதுதான் அதுவும் சாத்தியம்.//

    இப்போதுதான் கருணாநிதிக்கு கைப்புள்ள பட்டம் கொடுக்கப்பட்டதை படித்தேன்.
    பட்டம் பெற, பெரிய வரிசையே வரும் போல இருக்கே.

    ஆனா ஒன்னு, ஜெமோவின் 'எனது இந்தியா' வுக்கப்புறம் இதுதான்யா சூப்பர் இந்திய பஜனை. அதுவும் முற்போக்கு பஜனை.

    பதிலளிநீக்கு
  4. >>இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல், இந்தியா இது போன்ற சதிகளால் ஒருபோதும் ஈடுபடாது என்று அந்த மக்களும் நம்ப வேண்டும்.<<<<<

    ஓஒ, இது வேறயா? நெசமா இத நீங்க நம்பறீங்கள? இந்தியா பண்ணின வென நெறயவே இருக்கு.தன் சுயலாபங்களுக் காக இந்தியா என்னும் பார்ப்பனியக் கட்டமைப்ப பேணுறதுக்காக உள் நாட்டிலும் சரி வெளிநாடுகள்ளயும் சரி இந்தியா பண்ண அட்டகாசங்கள
    எல்லாம் ஒரு வரில மூடி மறைச்சுட்டு போகப் பார்க்கறீங்க. ரா வண்டவாளம் தெற்காசியாவுல தண்டவாளம் ஏறினது தானே?
    காமடி பண்ணாம சீரியசா எழுத முயற்சிங்க! சே பற்றிய கட்டுரை எழுதியவரா இதை எழுதியதுனு யோசிக்க வைக்குது!கட்சி சார்ந்து சிந்திச்சு, அதையே எழுதணும்னு இருந்தா இப்டித் தான் வரும்போல!

    பதிலளிநீக்கு
  5. //முஸ்லீம் தீவீரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாம் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறது. முதலில் அது 17% வாக்குகள் பெற்றது. அடுத்த தேர்தலில் 5% வாக்குகள் கிடைத்தன. பிறகு 3% ஆகி கடைசியாய் 1.8% வாக்குகள்தாம் பெற்றது. வகுப்புவாதிகளுக்கு எதிர்காலம் கிடையாது என்பதை இந்தியாவிலுள்ள நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.//

    அந்தப் பாகிஸ்தான் நண்பருக்கு யாராவது சொல்லுங்கள்:

    இந்தியாவில் அதற்கு மாறாகவும் துரதிருஷ்டவசமாகவும் மதவெறி சக்திகளே வலுப்பெற்று வருவதை.

    பதிலளிநீக்கு
  6. தேசம் என்பதை “மக்கள்” என்று புரிந்துகொள்ளவேண்டும், ஆனால் இரு தேசங்களிலும் மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு போர் மேகம் சூழப்பட்டது போல் செய்திகள் வந்தன, சிலர் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக இந்தியா பாகிஸ்தான் மீது போர்தொடுத்து லஷ்கர் முகாமை அழிக்கவேண்டும் என் கூறினர். இங்கு போரை தேர்தலுக்காகவும் தங்கள் மதவெறி அரசியலுக்காகவும் சில அரசியல் கட்சிகள் முயன்றன, இதைத்தான் தீவிரவாத அமைப்புகளும் விரும்புகின்றன ஆனால் போருக்குப் பின்னால் தீவிரவாதம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடுமா என்ன? இதனால் பாதிக்கப்படபோவது இந்த நாட்டில் “குப்பனும் சுப்பனும்” தான். கார்கில் போரை தேர்தலுக்காக பயன்படுத்த அப்போதைய ஆளுங்கட்சி தவறவில்லை உளவுத்துறை சரியாக செயல்பட்டிருந்தால் அப்போரை தவிற்திருக்கலாம்.தீவிரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்கா ஆப்கனில் துவங்கி ஈராக் வரை நடத்தி இன்னும் ஓய்ந்தபாடில்லை, அமெரிக்கா பாதுகாப்பான “புவிஅமைப்பில்” இருந்துகொண்டு நடத்திவருவதால் அஙு பிரச்சனை இல்லை, இந்தியா இறங்கினால்? யோசிக்கவேண்டும்.

    எல்லா தேசங்களிலும் எம்மக்கள் என்ற சிந்தனை வளரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. //இந்தியா இது போன்ற சதிகளால் ஒருபோதும் ஈடுபடாது என்று அந்த மக்களும் நம்ப வேண்டும்.//

    நம்பிட்டோம் நம்பிட்டோம்.....
    இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்யவில்லை என்று சொன்னதை ஏழு கோடி தமிழனும் நம்பிட்டோம்.

    பதிலளிநீக்கு
  8. ஓகஸ்ட் 14, 2006 இல் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட் மீது கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலின் இலக்காக தூதுவரே இருந்தாலும் அவர் நூலிழையில் உயிர் தப்பியிருந்தார்.

    இந்தத் தாக்குதலில், சிறிலங்கா அதிரடிப்படையினர் நால்வர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்திருந்தனர்.

    வழக்கம் போலவே, புலிகளே தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் என சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியது.

    ஆனால், சிறிது காலத்திற்குப் பின்னர் சிறிலங்காவின் ஊடகவியலாளர் குழுவொன்று பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்து.

    இந்த பயணத்தின் ஓர் அங்கமாக, சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட்டையும் ஊடகவியலாளர்கள் சந்தித்திருந்தனர்.

    இன்னொரு வகையில் கூறப்போனால், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தது.

    ஏனெனில், கொழும்பில் பாகிஸ்தானிய தூதுவர் மீதான தாக்குதலின் பின்னணியில் றோவே இருந்தது என்பதற்கான போதிய ஆதாரங்களை ஐ.எஸ்.ஐ திரட்டியிருந்தது.

    அதன் அடிப்படையிலேயே, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக தன்மீதான தாக்குதலுக்கு றோவே பின்னணியிலில் இருந்தது என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்த பசீர் வலி முகமட், விடுதலைப் புலிகளுக்கும் தன் மீதான தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என வெளிப்படையாகத் தெரிவித்து, விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டை அடியோடு மறுத்திருந்தார்.

    பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்குமான நெருக்கமான உறவின் உயிர்நாடியாக பசீர் வலி முகமட் விளங்கினார்.

    இலங்கையில் பாகிஸ்தான் ஆழமாக காலுன்றுவது தனது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் எனக் கருதிய இந்தியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நடவடிக்கைகளின் ஆணிவேராகத் திகழ்ந்த பசீர் வலி முகமட்டை கொழும்பில் வைத்து தீர்த்துக்கட்ட முனைந்து தோல்வியடைந்தது.

    இருப்பினும், தனது புலனாய்வுப் பணியை தொடர்ச்சியாக முனைப்படுத்தியது.

    இலங்கையை பொறியாக வைத்து, பாகிஸ்தானை நெருக்கடிக்குள் தள்ளுவதன் ஊடாக பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவில் விரிசலை ஏற்படுத்தி, தனது கொல்லைப்புறத்தில் தனக்கு எதிரான சக்திகள் காலுன்றுவதை நிறுத்த முடியும் என 'றோ' திடமாக நம்புகிறது.

    புடவை வியாபரிகள் போல வேடம் தரித்து, மட்டக்களப்பில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் உளவுத் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த றோவின் இரு முகவர்கள் ஐ.எஸ்.ஐ முகவர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை 'றோ' சிறிலங்காவில் இறுக்கமாக்கியிருந்தது.

    இருந்தபோதும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவுகள் வலுப்பட்டனவே தவிர, வலிமை இழக்கவில்லை. இது றோவுக்கு கடும் எரிச்சலை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

    அதேவேளையில், ஐ.எஸ்.ஐயின் பின்னுதவியுடன் பாகிஸ்தானை தளமாகக்கொண்ட லஸ்கார் - ஈ - தைபா என்ற தீவிரவாத அமைப்பு மும்பாய் மீது மேற்கொண்ட தாக்குதல் றோவுக்கு தலைகுனிவை மட்டுமல்ல, தடுமாற்றத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

    குறிப்பாக, பெருமளவான அமெரிக்க, ஐரோப்பா சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டமை, அனைத்துலக ரீதியில் இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டு பண்ணியிருந்தது.

    அதற்கு இராணுவ ரீதியில் பதிலடி கொடுப்பதற்கு இந்தியா திட்டமிட்டது. ஆனால், கொண்டலீசா றைசின் தலையீடு அதற்கு இடமளிக்கவில்லை.

    ஆனால், தனக்கு ஏற்பட்ட தலைக்குனிவுக்கு எதிராக பழிவாங்குவதற்கு 'றோ' துடியாய் துடித்து தருணம் பார்த்திருந்தது.

    இதேவேளை, சிறிலங்காவுக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் தானே வழங்குவதனூடாக பாகிஸ்தானின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கலாம் என செயற்பட்ட புதுடில்லிக்கு கடந்த பெப்ரவரி 27 ஆம் நாள் தொடங்கிய வெளிநாட்டு அமைச்சர்களின் 31 ஆவது சார்க் மாநாட்டில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவுகள் மென்மேலும் வலுப்படத்தக்க வகையில் இணங்கப்பட்ட உடன்பாடுகள் கடும் விசனத்தையும், சினத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

    அதன் காரணமாகவே, தமிழ்மக்களை கொன்றொழிப்பதற்கு முதுகெலும்பாக இருந்து வந்த காங்கிரஸ் விற்பன்னர்கள் திடீரென தமிழ்மக்கள் மீது அக்கறை உள்ளது போல் வெளிக்காட்ட முற்பட்டார்கள்.

    கடந்த ஜனவரி 28 ஆம் நாள் மகிந்த ராஜபக்சவுடனாக சந்திப்பைத் தொடர்ந்து இராணுவ வெற்றிகள் அரசியல் தீர்வுக்கு வழிகோலுவதோடு, வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலை தோன்றுவதற்கு அடிப்படையாகும் என்ற சாரப்பட கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சரியாக ஒரு மாதம் கழிந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி, புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    பிரணாப் முகர்ஜியின் கருத்து என்பது, சிறிலங்கா தொடர்பான காய்நகர்த்தலில் 'றோ' மீண்டும் ஒருதடவை தோற்றுப் போனது என்ற கருத்தின் மறுவடிவம் எனக் கொள்ளலாம்.

    இதுவும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய வகையில், லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது தாக்குதலை நடத்துவதற்கு 'றோ' திட்டமிட்டமைக்கான பிரதான காரணம்.

    அத்துடன், தம்புள்ளையில் நடைபெற்ற போட்டிகளின் போது, இந்திய துடுப்பாட்ட அணி; சிங்கள காடையர்களின் கல்லெறிக்கு தொடர்ச்சியாக இருமுறை உட்பட்டது.

    இது, தனது நாட்டு அணியினருக்கு சிறிலங்கா உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்ற மனோபாவத்தை புதுடில்லி அதிகார வர்க்கத்தினருக்கு உண்டு பண்ணியிருந்ததாக அறிய முடிகிறது.

    அது மட்டுமன்றி, இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததற்கு பதிலாகவே, சிறிலங்கா அணி குறித்த ஆட்டங்களில் பங்குபற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது.

    இவையும், றோவின் தரவு சேகரிப்பு கோவைகளில் துணைக்காரணிகளாக அடையாளமிடப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு பெருமளவில் உள்ளது.

    இவை அனைத்தையும் தாண்டிய உச்சக் காரணியாக, அனைத்துலக மட்டத்தில் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக வெளிப்படுத்துவதற்கு, உலகளாவிய ரீதியல் அனுதாபத்தை ஈட்டக்கூடிய ஒரு தாக்குதல் அவசியம் என திட்டமிட்ட 'றோ', அதற்கான மிகச்சிறந்த இலக்காக சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தெரிவு செய்தது.

    இதன் ஊடாக ஒரே கல்லில் இரு மாங்காயை உடைத்துள்ளது.

    அதேவேளை, இந்தப் பழியையும் புலிகள் மீது போடக்கூடிய கைங்கரியங்களில் 'றோ' ஈடுபடத் தொடங்கிவிட்டது.

    ஆனால், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பிணைப்பை விரும்பாத எதிரிகளே லாகூர் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

    அவதானங்களை கோர்வையாக்குகின்ற வாசகர்களுக்கு லாகூர் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது தெளிவாக புரிந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  9. இங்கு கருத்து தெரிவித்திருக்கும் நண்பர்கள் சிலர் என்னுடைய கருத்துக்களில் ஒரு வரியை {//அதுபோல், இந்தியா இது போன்ற சதிகளால் ஒருபோதும் ஈடுபடாது என்று அந்த மக்களும் நம்ப வேண்டும்.//)
    மேற்கோள் காட்டி நான் என்னமோ, இந்திய அரசு புனிதமானது என்று சொல்வது போல் சித்தரித்து இருக்கிறார்கள். அப்படியெல்லாம் மூட நம்பிக்கை எனக்கு இல்லை எனபதை முதலில் தெளிவுபடுத்துகிறேன்.

    அதேநேரம் தயவு செய்து நான் முழுமையாக என்ன சொல்லியிருக்கிறேன் அல்லது என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    நான் சொல்லியிருப்பது இப்படித்தான்.
    //அதுபோல், இந்தியா இது போன்ற சதிகளால் ஒருபோதும் ஈடுபடாது என்று அந்த மக்களும் நம்ப வேண்டும். பரஸ்பரம் மக்கள், வெறுப்பினை நீக்கி செய்திகளை உள்வாங்குவது இந்த நேரத்தின் அவசியமாகப் படுகிறது. தங்கள் கட்சி, தங்கள் ஆட்சி என்னும் எண்ணங்களைத் தாண்டிய அரசியல் வரும்போதுதான் அதுவும் சாத்தியம். //

    எப்போது அது சாத்தியமாகும் என்பதைச் சொல்ல வந்தால், அதற்குள் ஏன் இந்த அவசரம்.

    பதிலளிநீக்கு
  10. நந்தா!

    ஆதவா!

    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஹரிஹரன்!

    //தேசம் என்பதை “மக்கள்” என்று புரிந்துகொள்ளவேண்டும், //

    தங்கள் புரிதல் மிகச்சரி. இவ்விஷயத்தை அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்,

    பாகிஸ்தான் அமைச்சரோ இந்தியா காரணம் என்கிறார், இலங்கை அமைச்சரோ விடுதலைப்புலிகள் காரணமாக இருக்கும் என்கிறார், ஆனால் பாகிஸ்தான் அமைச்சரின் வார்த்தைகளுக்கு விளக்கமளிக்க மறுக்கிறார்...

    அடுத்த தலைமுறைக்கு நாம் பெரிதாக ஒன்றும் செய்துவிட வேண்டாம், அவர்கள் மனதில் குரூரத்தை விதைக்காமல் இருந்தாலே போதும் என்ற நிலையை அடைந்து விட்டோமோ என்ற அச்சமாய் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  13. நரேஷ்!

    தங்கள் வருகைக்கும், எதிர்காலம் குறித்து கவலையோடும், வேதனையோடும் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. The present day Indian Disposition is capable of all ugly deeds.Still due to illiteracy, ignorance and blind nationalism people are refusing to see the truths.
    Belligerent characters are in the indian establishments and the stature of leaders have come down drasticaly.Pygmies are running this country and we can expect nothing better from these jokers, sorry criminals in disguise.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!