ஓரினச்சேர்க்கைகளும் ஒற்றை வார்த்தை நிராகரிப்புகளும்.

party

 

சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடியதையும், அவர்கள் சங்கம் அமைத்திருப்பதையும் அதிர்ந்து போய் எழுதியிருக்கிறார் சொல்லரசன். இந்தக் கண்றாவிகளுக்கெல்லாம் சங்கமா, அதற்கு அங்கீகாரம் தேவையா என்பதுதான் அவரது எழுத்துக்களின் தொனியாக இருக்கிறது. பின்னூட்டம் எழுதப் போய், அதுவே கொஞ்சம் அதிகமாகிவிட, பேசாமல் இதையும் ஒரு பதிவாக எழுதிவிடுவது என்று முடிவுக்கு வந்தேன்.

ஓரினச்சேர்க்கை என்றவுடன், “சே”, “த்தூ”, “ஐய்யே..” என்று முகம் சுளித்து நிராகரிப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். நானும் அருவருப்படைந்திருக்கிறேன். அதெல்லாம் முகத்தளவிலான எதிரொலிகளாகவே இருக்கின்றன. அதைத் தாண்டி உள்ளே செல்வதற்கு அனுமதிக்காமல்  இந்த சமூகம் சில மனத்தடைகளை காலம் காலமாய் ஏற்படுத்தி வைத்த்திருக்கிறது. அதுதான் ஃபயர் படம் வந்தவுடன், கடுமையான கிண்டல்களும், கண்டனங்களும் இந்த மண்ணில் நடந்தன. வெறும் போர்னோ படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதும் நடந்தது. அந்தப் படம் எழுப்பிய ஆழமான கேள்விகளுக்கு பதில்கள் மௌனங்களில் உறைந்து போய்க் கிடக்கின்றன.

பலரும் எதோவொரு தருணத்தில், எதொவொரு காலக்கட்டத்தில், இது போன்ற அனுபவங்களைப் பெற்று சமநிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். ஆனல் சிலர் அங்கேயே தங்கி விடுகிறார்கள். பல பிரபலமானவர்களும் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். எனக்குத் தெரிந்த வரையில், நடிகவேள் எம்.ஆர்.ரராதா மட்டும்தான் நான் அப்படித்தான் என பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

அதுகுறித்து வரலாற்றில் தென்படும் காட்சிகளும், மனோரீதியான காரணங்களும், உடல் சார்ந்த சிக்கல்களும் இன்று விவாதங்களாய்க் கிளம்பி வருகின்றன. சமூகத்தில் நிலவி வருகிற, காலம் காலமாய் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிற பிரச்சினைகள் மீது பெருத்த ஒசையுடன் கேள்விகள் எழும்பிய காலமாய் இருபதாம் நூற்றாண்டையொட்டிய வாழ்க்கை இருக்கிறது.

ஆயிரம் மனைவிமார்கள் வைத்திருப்பதாய் மார்தட்டிச் சொல்லும் அரசர்களின் அந்தப்புரங்களில் உள்ள பெண்களின் பெருமூச்சை யார் அணைத்திருப்பார்கள். மாதக்கணக்கில் வீட்டை விட்டுப் பிரிந்து எதிரிகளோடு போரிடச் சென்ற படைவீரர்களின் கூடாரங்களில் உள்ள வெறுமையை யார் கலைத்திருப்பார்கள். இன்றைக்கும் அது இராணுவ முகாம்களில், லாட்ஜ்களில்,  ஹாஸ்டல்களில், சர்ச்சுகளில், மடங்களில் என்று நீண்டு கொண்டே இருக்கிறது.

ஓரினச்சேர்க்கை என்றவுடன் வெறும் காமமாகப் பார்க்கத்தான் நமக்கு வருகிறது. காமத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற புரிதலோடு பார்த்தால் இன்னும் சில கதவுகள் திறக்கக்கூடும் என எண்ணுகிறேன். ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் தங்களில் ஒருவரையே புரிந்து கொள்வதில், பரஸ்பரம் அன்பைத் தெரிவிப்பதில் சிக்கல்கள் இல்லாமல் இருப்பதாய்ப் படுகிறது. அதுபோல உடல்ரீதியாக ஆணுக்குப் பெண்ணை திருப்திப் படுத்துவதிலும், பெண் திருப்தியடைவதிலும் குறைகள் இருக்கின்றன. அதற்கான ஆற்றாமையாகவும், வடிகாலாகவும் ஓரினச் சேர்க்கைகள் இருக்கின்றன. இன்னொன்று குழந்தை பெறுவது, உடல் பாதிக்கப்படுவது தாண்டிய பாதுகாப்பு உணர்வும் இதில் அடங்கியிருக்கிறது.

அடுத்ததும் மிக முக்கியமானது. உடற்கூறுகளிலேயே சிலருக்கு ஏற்பட்டிருக்கும் ஹார்மோன்களின் கூடுதல் குறைவுகளால், தங்கள் இனம் சார்ந்தவர்கள் மீதே ஈர்ப்பு உண்டாகிறது. டாக்டர் ருத்ரன் சார் இன்னும் இந்த விஷயத்தை எனக்கும், பலருக்கும் தெளிவுபடுத்த முடியும் என நினைக்கிறேன்.

இப்படியாக பல அர்த்தங்கள் கொண்டிருக்கிற ஒரு பிரச்சினைய ஒற்றை வரிகளால் நிராகரிப்பது சரியல்ல. சமூகம் எதைப் புறக்கணிக்கிறதோ, ஒப்புக்கொள்ள மறுக்கிறதோ, அதிலுள்ள நியாயங்களை பகிரங்கப்படுத்துவதற்கு சங்கம் அமைக்கிறார்கள்.

உயிரினப் படைப்புக்கும், இயல்புக்கும், இயற்கைக்கும் மாறான இந்த வழக்கத்தை சரி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முதலில் சமூகம் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

 

*

கருத்துகள்

70 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நீங்கள் சொல்வது சரியே ..எதிர்தரப்பு வாதங்களை பாராமல் வழக்குக்கு தீர்ப்பிடுதல் நல்லதல்ல.

    பதிலளிநீக்கு
  2. அந்த கட்டுரை படித்தேன். எனது பின்னூட்டம் அங்கே பதியப்படுமா என்று தெரியவில்லை. எனவே இங்கே இணைக்கிறேன்.

    "அடப்போங்கய்யா? நீங்களும் உங்க எழுத்தும், சிந்தனையும். சக மனிதனுக்கு டீ கடையில் அலுமுனிய டம்ளரில் டீ குடுக்கும் பொழுது உமது கலாச்சாரம் கக்கூசில் நரகலா தின்றுகொண்டிருந்தது? உமது அருமை கலாச்சாரம் யோனிகளாலும், ஆணுறுப்புகளிலும் தான் இருக்கிறது என்று தெரிந்தபோது புலகாங்கிதம் அடைந்தேன் நண்பா? தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு சேவை!"

    அன்புடன்
    ஓசை செல்லா

    பதிலளிநீக்கு
  3. \\நீங்கள் சொல்வது சரியே ..எதிர்தரப்பு வாதங்களை பாராமல் வழக்குக்கு தீர்ப்பிடுதல் நல்லதல்ல\\

    வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  4. இதைப் பற்றிப் பேசலாம்; தவறில்லை அறிவு பூர்வமாகக் கூட இதை அணுகலாம் என்ற நம்பிக்கையை ஏற்ப‌டுத்தியதற்கு முதலில் பெரிய நன்றி!
    உங்கள் பதிவு அத்தனை அழகாக, வெளிப்படையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. இந்த தலைப்பை பற்றி தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    நமக்கு புரியாவிட்டால் அதைப்பற்றி கேலி செய்வதும் புறக்கணிப்பதும் இயல்பு.

    இப்போது ஓரினச்சேர்க்கை பற்றி எத்தனையோ ஆராய்ச்சி
    கள் தெளிவாக பதிக்கப் பட்டுள்ளன. ஆனால் நம் நாட்டில் விவாதிப்பதற்க்கு கூட பெரும்பான்மையோர் தயாராக இல்லை!

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க வைத்த, துணிச்சலான பதிவு!!!!
    மிக அருமை!!!!!

    பதிலளிநீக்கு
  7. இவர்கள் (சொல்லரசன் மற்றும் இன்ன பிற கலாச்சாரக் காவலர்கள்) மனதில் "ஃபாஸிஸம்" எங்கோ ஒரு மூலையில் அதிகமாக / கொஞ்சமாவேனும் ஒளிந்துள்ளது...

    அதுதான் தன்னை விடுத்து வித்தியாசமாக நடக்கும் மற்றவரை மட்டம் தட்டவோ, அடக்கி ஆளவோ, வேரோடு கறுவறுக்கவோ முற்படுகிறது... கலாச்சாரம் என்ற வார்த்தை ஒன்று இவர்களுக்கான மொன்னை ஆயுதம்.

    திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை சமமாக நடத்தி அவர்களின் மனித உரிமையைக் காப்பதே, ஒரு நல்ல கலாச்சாரமாகும்.

    பதிலளிநீக்கு
  8. சரியான பதிவு, உணர்வுகள் மீதான மதிப்பு இன்னும் நம் நாட்டில் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை, இது போன்ற பதிவுகளும் சிந்தனைகளும் மன நிலையை மாற்ற தொடங்கியுள்ளன.

    பதிலளிநீக்கு
  9. உடல்ரீதியான காரணமும், மனரீதியான காரணமும் உள்ள ஒரு விஷயத்தை இப்படி பொத்தாம் பொதுவாகப் புறந்தள்ளுவது தவறு. உடலுறுப்பு ஊணம் போலத்தான் இதுவும் என மருத்துவ முறையில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

    நேற்றைக்குச் சரி என்பதெல்லாம் இன்று தவறாகவும். இன்றைக்குச் சரி என்பதெல்லாம் நாளை தவறாகவும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் காலத்தில் இன்னும் பழமைவாதிகளாக இருப்பது மூடத்தனம். பிறருக்குத் தீங்கிழைக்கா வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறில்லை என்பது என் எண்ணம்.

    பார்வைக் குறுகலே காரணம்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் கருத்துகளுக்கு இந்த கட்டுரையும் ஆதரவளிக்கலாம்.

    (link)http://www.makkal-sattam.org/2008/08/blog-post.html(/link)

    பதிலளிநீக்கு
  11. மாதவராஜ் அவர்களெ,

    உங்கள் எழுத்தில் மனிதாபிமானம் தெரிகிறது,,, வாழ்த்துகள்
    ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவெ சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது(இதற்கு யார் கார்ணம் கடவுளா?,,இயற்கையா?)
    அந்த குறைகளின் காரணமாய் அவன்
    ஆணலொ,பெண்ணாலொ ஈர்க்கப் படுகிறான்,இது படைப்பின் குறை.
    ஓசைச்செல்ல சொன்னதுபோல் கீழ்சாதிகாரனுக்கு வாழை மட்டையின் சரிவில் டீயை ஊற்றி பெறச் செய்த
    மட்டனான கலாச்சாரத்தைப் பெரியார் ஒருவர் இருந்திராவிட்டால் நாம் களைந்திருக்க முடியாது.இது ஒரு வகையில் அவர்களின் ஊனம் என்பதைக் கூட அறியாத சொல்லரசர் போன்ற தற்குரிகளை என்ன செய்வது?,,,நல்லவேளை இதை எதிர்த்து குறல் கொடுக்க இத்தனைப் பேர் இருக்கிறார்களெ என்று நிணைக்கும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது.தொடரட்டும் உங்கள் பனி.

    பதிலளிநீக்கு
  12. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  13. நமக்கு புரியாத அறிவியல் பேயாகிறது.
    நாம் அறியாத உணர்வுகள் இழிவாகிறது.
    நாம் அணுகாத மக்கள் தாழ்வாகிறார்கள்.
    இன்னும் வெகு இயல்பாக விளிம்பு மக்களை
    கேலி பேசுகிற, இகழ்ந்து ஒதுக்குகிற
    கருத்து திரைப்படம் மூலமாக விஸ்தரிக்கப்படுகிறது.
    உதாரணம் திருநங்கையர்.
    நமக்கு அதுதான் கலாச்சாரம்.

    பதிலளிநீக்கு
  14. ஆண்ட்ரு சுபாசு!

    தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ஓசை செல்லா!
    ரொம்ப ஓசைதான்! உங்கள் கோபம் புரிகிறது.வருகைக்கு நன்றி.

    முரளிக்கண்ணன்!

    வாங்க. ஆதரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. தோழர் மாதவராஜ், நான் ஆனந்த விகடனில் 2007-8ல் வளர் இளம் பருவத்தினரின் உடல் நலம் மன நலம் பற்றி எழுதிய அறிந்தும் அறியாமலும் தொடரில் சுய பால் விழைவு பற்றி விவரமாக எழுதியுள்ளதை கவனித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். தற்போது அந்தத்தொடரை நூலாக வெளியிட்டுள்ளேன்.

    சுயபால் உறவு பற்றி நான் எழுதிய நாடகத்தை எங்கள் பரீக்‌ஷா குழு 1979ல் ( 30 வர்உடம் முன்னால்) அரங்கேற்றியுள்ளது. இதே விஷயம் பற்றிய என் சிறுகதையும் 1976ல் தினமணி கதிரில் வெளியாகியுள்ளது.

    பாலியல் அடையாளம் என்பது ஒவ்வொரு மனிதரும் தேர்வு செய்துகொள்ளும் சுதந்திரமும் உரிமையுமாகும்.இதை பிறர் மதிக்கக்கற்றுக் கொள்வது அவசியம்.

    அன்புடன் ஞாநி

    பதிலளிநீக்கு
  16. தீபா!

    முதலில் சிறு தயக்கம் இருந்தது. சில உண்மைகளை பொதுவெளியில் போட்டு உடைக்க வேண்டியிருக்கிறது. அதுதான்...
    கருத்துக்கு நன்றி.


    வெற்றி மகள்!

    //நமக்கு புரியாவிட்டால் அதைப்பற்றி கேலி செய்வதும் புறக்கணிப்பதும் இயல்பு. //

    சரியாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. ஜான் பொன்ராஜ்!
    செங்கதிர்ச்செல்வன்!
    தவநெறிச்செல்வன்!

    தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ஊனமில்லை என்று சொல்லியிருந்தால் நீங்க இதை ஏற்றுக்கொள்ள மறுப்பீர்களா..

    ஓரிணச்சேர்க்கைக் குறித்து, ஏகப்பட்ட ஆராய்ச்சிக்கள் நடந்திருக்கின்றது..ஆனால்..இதுவரை இதன் பின்னனி உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

    எது எப்படியிருப்பினும், அது ஒரு தனி மனிதர் தேர்வு..அதற்குள் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை.


    //வடகரை வேலன் said..
    உடலுறுப்பு ஊணம் போலத்தான் இதுவும் என மருத்துவ முறையில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.//

    பதிலளிநீக்கு
  19. வடகரைவேலன்!

    இதை ஊனம் என்பது உடற்கூறுகளைப் பொறுத்தவரையில் சரி. மற்றபடி... யோசிக்கலாமே!

    பதிலளிநீக்கு
  20. சுந்தராஜன்!

    வருகைக்கு நன்றி. அவசியம் படிக்கிறேன்.

    moulefrite!

    நிச்சயமாக, பலர் இருக்கிறார்கள். மேலும் அடியெடுத்து வைப்போம்.

    வலைப்பூக்கள்!

    ஆதரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. காமராஜ்!

    கவிதையாய் உண்மைகளை முன்வைத்திருக்கிறாய். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. சிலர் இங்கே ஊனம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

    சுய பால் விழைவு என்பது உடல், மன ஊனமல்ல. அது தவறான கண்ணோட்டம். எதிர்பால் விழைவு, சுயபால்விழைவு, பாலியல் விழைவின்மை எல்லாமே வெவ்வேறான வாழ்க்கை முறைகள். அதில் எதிஅயும் தேர்வு செய்துகொள்ளும் உரிமை அவரவருடையது. இந்த அணுகுமுறையில் மட்டுமே இதை அணுக வேண்டும். - ஞாநி

    பதிலளிநீக்கு
  23. TBCD!

    முக்கியமான கேள்வி.

    தனிநபர் தேர்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    சமூகம் சார்ந்தவர்களாய் நாம் இருக்கிறோம். தான் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் கோடுகளை மீறும் போது அது, ஒப்புதலை சகலரிடமும் கோருகிறது.
    அப்போது விவாதங்கள் எழும்புகின்றன.பேசவே மறுக்கும் விஷயங்களை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறோமே, இதுவே முக்கியமானது என நினைக்கிறேன். அது நிச்சயம் இந்த சமூகத்திற்கு வெளிச்சங்களை கொண்டு வரும்.

    பதிலளிநீக்கு
  24. பாலியல் இச்சை மன ரீதியான என்ற அளவில் ஓரின சேர்க்கை அனுமதிக்கலாம்.

    ஆனால் 'நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்பதெல்லாம் டூ மச்...'

    திருமணம் என்பது குடும்ப உறவுகளுக்காக சமூகம் ஏற்படுத்திய அமைப்பு. அதை தனி நபர் பாலியல் ஓரின இச்சையில் இருப்பவர்களும் அந்த அங்கீகாரம் கேட்பது கலாச்சார சீரழிவாக எனக்கு தெரிகிறது. ஆனால் நான் அதை தீவிரமாக எதிர்க்கவில்லை. எனது கருத்து ஓரின திருமணம் ஏற்கமுடியாது என்பதே

    பதிலளிநீக்கு
  25. கோவியாரே,
    பேண்ட் என்பது ஆண்களுக்காக சமுகம் உருவாக்கியது..அதனால்...பெண்கள் அணியக்கூடாது என்று சொல்லுவதுப் போல் இருக்கு..

    இராம சேனா உறுப்பினர் அட்டை வாங்கிட்டீங்களா...

    பதிலளிநீக்கு
  26. ஞானி சார்!

    எனக்குப் பிடித்த எழுத்தாளர் என் வலைப்பக்கம் வந்து உட்கார்ந்து பேசுவது சந்தோஷத்தைத் தருகிறது. ஆனந்த விகடனில் தங்களது அந்தக் கட்டுரையை நான் படிக்கவில்லை. சில வாரங்கள் தப்பிவிடும். ஆனால் வேறு ஒரு இடத்தில் (தீம்திரிகிட வாக இருக்கலாமோ) இது போன்ற தங்கள் கருத்துக்களை படித்ததாக ஞாபகம்.

    இங்கு தாங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் மேலும் யோசிக்க வைக்கின்றன.

    ரொம்ப நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  27. //TBCD said...
    கோவியாரே,
    பேண்ட் என்பது ஆண்களுக்காக சமுகம் உருவாக்கியது..அதனால்...பெண்கள் அணியக்கூடாது என்று சொல்லுவதுப் போல் இருக்கு..

    இராம சேனா உறுப்பினர் அட்டை வாங்கிட்டீங்களா...
    //

    ரவிக்கையும் உள்ளே போடும் பாடி கூட ஆண்கள் தான் வடிவமைக்கிறார்கள், அதற்காக அதை நாங்களும் அணிவோம் என்று சொல்கிறார்களா ?

    போய்யா போ......

    பதிலளிநீக்கு
  28. நீங்கள் சொல்லுவது போல் இதை உளவியல் ரீதியாக அணுக வேண்டும் என்றாலும் இந்த அங்கிகாரம் பலருக்கு இதன் மேல் நாட்டத்தை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்வது சமுதாயத்தின் கடமை யாகும். குறிப்பாக டீன் ஏஜ்-ஜில் உள்ளவர்கள் are more Vulnereble to this. என்னெனில் இது சமுதாய சீர்கேட்டிற்கோ அல்லது குடும்ப அமைப்பின் (family structure) சிதைவிற்கோ நம் பிற்கால சந்ததியரை வழிநடத்த கூடும். இதை பற்றி அதிக அளவில் பேசக்கூடிய மேற்கத்திய உலகத்தில் கூட இதற்கு சமுக அங்கிகாரம் இன்றளவும் இல்லை. பிரபல பிரிதானிய பாடகர் எல்டன் ஜான் ஒர்றின திருமணம் கனடா வந்து செய்துகொண்டார் பிரிட்டினில் இதற்கு சட்ட அனுமதியில்லை. ஆனால் சட்ட அனுமதி உள்ள கனடா வில் இதற்கு சமுக அங்கிகாரம் இல்லை. யாரும் வெளிபடையாக சொல்லிக்கொள்ள முடியாது. ஆகவே இவர்கள் சமுக அந்தஸ்திற்காக சமூகத்தினுள் மறைத்தே வாழ்கின்றனர். Gay என்னும் சொல்லே இங்கு சாதரணமாக தன் நண்பர்களை கேலி செய்யவே பயன்படுத்துகின்றனர். Nithy Toronto

    பதிலளிநீக்கு
  29. சிந்திக்க வைத்த, துணிச்சலான பதிவு!!!!
    மிக அருமை!!!!!

    p.suthan

    பதிலளிநீக்கு
  30. பயர் படத்தை போர்னோவாகப்பார்த்த வர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் தீபாமேத்தா எழுப்பிய கேள்விகளில் நிறைய பதில் சொல்லப்படாமலே இருப்பது அவற்றை எதிர்க்கிற மற்றும் மௌனமாய் ஆதரிக்கிற அனேகம் பேருக்கு தெரியும்...

    உளரீதியான புரிதல்கள் கட்டாயமாய் இருக்கவேண்டும்....

    பதிலளிநீக்கு
  31. காமம் என்பது சமுதாயம் சார்ந்தது அல்ல. அது தனிநபர் உரிமை. அவரது விருப்பம். இதில் தடை/ஏளனம் இதர இத்யாதி செய்ய நமக்கு உரிமை கிடையாது..

    வழக்க கூடல்களை விடுத்து, மாறுப்பட்ட சேர்க்கைகள் சிலருக்கு சுளிப்பைத் தர்லாம்.. சமுதாயம் அவர்களையும் நிலையான தட்டில் வைத்துப் பார்க்கவேண்டும்.... இன்னும் சொல்லப் போனால், இது ஒரு விசயமே கிடையாது...

    (இப்படி எழுதறேனேன்னு என்னை அந்த லிஸ்டில் சேர்க்காதீங்க.. எனக்கு வழக்கமான கூடலில்தான் விருப்பம்.... :D)

    பதிலளிநீக்கு
  32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  33. கோவி கண்ணன்!

    குடும்ப வாழ்வில் உள்ள பிரச்சினைகளே சிலருக்கு, அதன் மீது தயக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். சதா நேரமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் பெற்றோர்களைப் பார்த்த பல குழந்தைகளுக்கு குடும்ப வாழ்வு குறித்து என்ன கனவுகள் வரும். ஆண் பெண் உறவுகள் குறித்து என்ன பிம்பங்கள் ஏற்படும். தனக்கு இணக்கமான அல்லது இசைவான துணை தேடுகிற போது, நெருக்கமானவர்களை மனம் நாடுகிறது... பால் பேதமில்லாமல். இங்கு சமூகம் உருவாக்கியிருக்கும் குடும்ப அமைப்பு தகர்ந்து போவதற்கு சம்பந்தப்பட்ட அந்தக் குழந்தைகள் மட்டுமா காரணம்?

    இன்றைய குடும்ப அமைப்பில் ஆண் பெண் பாலாருக்கிடையே அசமத்துவம் இருப்பதை ஒப்புக் கொள்வீர்கள். ஆதிக்கம் செலுத்துபவர்கள், செலுத்தப்படுபவர்களாக பால் வேற்றுமை புரிந்து கொள்ளப்படுகிறது. இதை மீறுகிற போது, பால்வேற்றுமை அற்ற சுயபால் விழைவு ஏற்படக் கூடும்.

    நம் குடும்ப அமைப்புகள் குறித்து புதிய பரிசீலனைகளும், பார்வைகளும் தேவைப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  34. Anonymous!

    சமூக அங்கீகாரம் குடும்ப அமைப்பை சீர்குலைத்து விடும் என்னும் பயம் சரியானது. கோவி கண்ணனுக்குச் சொன்ன கருத்தையே திரும்பவும் சொல்கிறேன்.

    அதே நேரம் நம் குடும்ப அமைப்பு சில வலுவான உறவுகள் மீது கட்டப்பட்டு இருப்பதையும் அறியலாம். தாய், தந்தை, மாமா, சித்தப்பா, அக்கா, தங்கை, தம்பி, அண்ணன் என பெரும் உறவுகள் நம்மைச் சுற்றி கட்டியிருக்கின்றன. இதனை அத்தனை எளிதில் குலைத்து விட முடியாது.

    இதுதான் ஓரினச்சேர்க்கை உள்ளவர்களுக்கு அங்கீகாரம் அளிக்க மறுக்கிறது, சட்டங்கள் அனுமதித்தாலும்.

    பதிலளிநீக்கு
  35. பொன்னையா!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    தமிழன் கறுப்பி!

    //உளரீதியான புரிதல்கள் கட்டாயமாய் இருக்கவேண்டும்....//

    மிகச்சரி.

    பதிலளிநீக்கு
  36. ஆதவா!

    //இப்படி எழுதறேனேன்னு என்னை அந்த லிஸ்டில் சேர்க்காதீங்க.. //

    லிஸ்ட் முக்கியமல்ல. உங்கள் கருத்துத்தான் முக்கியமானது.

    பதிலளிநீக்கு
  37. திரு.மாதவராஜ் அவர்களுக்கு முதலில் உங்களுக்கு நன்றி.நேற்று வந்த இந்த தற்குறியை வலைப் பூ உலகம் அரிய செய்தமைக்கு. துணை தேடலை குறை சொல்லவில்லை,அதற்கான அங்கீகாரம் குடும்பம் என்ணும் இயற்கை நியதியை கெடுத்துவிடும்,இதை சொன்னால் வடகரை வேலன் பார்வைக் குறுகலே என்பார் எனவே அவர் நண்பர் திரு.கோவியின் பின்னூட்டம் “பாலியல் இச்சை மன ரீதியான என்ற அளவில் ஓரின சேர்க்கை அனுமதிக்கலாம்.
    ஆனால் 'நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்பதெல்லாம் டூ மச்...'திருமணம் என்பது குடும்ப உறவுகளுக்காக சமூகம் ஏற்படுத்திய அமைப்பு. அதை தனி நபர் பாலியல் ஓரின இச்சையில் இருப்பவர்களும் அந்த அங்கீகாரம் கேட்பது கலாச்சார சீரழிவாக எனக்கு தெரிகிறது. ஆனால் நான் அதை தீவிரமாக எதிர்க்கவில்லை. எனது கருத்து ஓரின திருமணம் ஏற்கமுடியாது என்பதே”.
    மேலும் ஏதாவது சொன்னால் என்னை "ஃபாஸிஸம்"வாதி என்பர்கள்,எனவே . திரு Nithy Toronto
    பின்னூட்டம் “நீங்கள் சொல்லுவது போல் இதை உளவியல் ரீதியாக அணுக வேண்டும் என்றாலும் இந்த அங்கிகாரம் பலருக்கு இதன் மேல் நாட்டத்தை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்வது சமுதாயத்தின் கடமை யாகும். குறிப்பாக டீன் ஏஜ்-ஜில் உள்ளவர்கள் are more Vulnereble to this. என்னெனில் இது சமுதாய சீர்கேட்டிற்கோ அல்லது குடும்ப அமைப்பின் (family structure) சிதைவிற்கோ நம் பிற்கால சந்ததியரை வழிநடத்த கூடும். இதை பற்றி அதிக அளவில் பேசக்கூடிய மேற்கத்திய உலகத்தில் கூட இதற்கு சமுக அங்கிகாரம் இன்றளவும் இல்லை. பிரபல பிரிதானிய பாடகர் எல்டன் ஜான் ஒர்றின திருமணம் கனடா வந்து செய்துகொண்டார் பிரிட்டினில் இதற்கு சட்ட அனுமதியில்லை. ஆனால் சட்ட அனுமதி உள்ள கனடா வில் இதற்கு சமுக அங்கிகாரம் இல்லை. யாரும் வெளிபடையாக சொல்லிக்கொள்ள முடியாது. ஆகவே இவர்கள் சமுக அந்தஸ்திற்காக சமூகத்தினுள் மறைத்தே வாழ்கின்றனர். Gay என்னும் சொல்லே இங்கு சாதரணமாக தன் நண்பர்களை கேலி செய்யவே பயன்படுத்துகின்றனர்" எனது கருத்தை பதிவாக்கினேன்,கருத்துகூற மேதாவியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஓசைக்கு ஆத்திரம் என் மீதா அல்லது என் நாட்டியின் மீதா ஓசைக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன்.விமர்சனம் நாகரீகமாக இருந்த நல்லயிருக்ங்கோ.

    பதிலளிநீக்கு
  38. தோழரே,அருமையாகப் போட்டு உடைக்கிறீர்கள் சமூகச் சீரழிவுகளை.உண்மையில் அதற்கென்று ஓர் தைரியம் வேணும்.வாழ்த்துக்கள்.நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு
  39. //பாலியல் அடையாளம் என்பது ஒவ்வொரு மனிதரும் தேர்வு செய்துகொள்ளும் சுதந்திரமும் உரிமையுமாகும்.இதை பிறர் மதிக்கக்கற்றுக் கொள்வது அவசியம்.//

    என ஞானி பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஞானியின் பின்னூட்டம் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. பாலீயல் தனிமனித சுதந்திரத்தை சார்ந்த விடயம் தான். ஆனால் தனி மனித சிந்தனைகள் தான் சமூகத்தின் அறநெறி கோட்பாட்டின் கட்டமைப்பில் நெறிபடுத்திக் கொண்டிருக்கின்றன.

    ஓரினச்சேர்க்கையில் தனிமனித சுதந்திரம் அவை. அவற்றில் தலையிடும் உரிமை அரசுக்கு கிடையாது என்று 20- வருடங்களுக்கு முன்பு கனடாவில் அனுமதி கொடுத்த மாநிலங்கள் எல்லாம் இன்று முழி பிதுங்கிப் போய் இருக்கின்றன.
    சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஓரினச்சேர்க்ககை திருமணங்கள் சென்ற வருடத்தில் இருந்து ரத்து செய்யப்பட்டுவிட்டன. காரணம் ஓரினச்சேர்ககையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துப் போனது தான். அவை சமூகத்தில் வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறது.


    "இயற்கையின் பரிணாம சக்தியின் மாபெரும் படைப்பு -
    மனிதனை உருவாக்கி வைத்திருப்பது.
    மனிதனின் உடல்கூறு வேகமும் (Somatic)மரபுக்கூறு வேகமும் (Genetic)ஒன்றுக்கொன்ரு முரண்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதே,
    இன்றைய ஆராய்ச்சியின் மையப்புள்ளி" என்று உயிரியல் ஆராய்ச்சி பேரறிஞர் ஜோனாஸ் சால்க் சொல்வார்.

    இங்கே முரண்பாடுகளைப் பற்றிதான் நாம் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறோம். அங்கீகரிப்பு தனிமனித சுதந்திரம் போன்ற வாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு சமூக நாசங்களை பார்த்தால் ஓரினச்சேர்க்கைகளின் ஆபத்துக்கள் தெரியும். சென்ற வருடம் இந்தியாவில் ஓரினச்சேர்ககையின் மூலம் எய்ட்ஸ் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்களுடன் வெளியிடப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=555

    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=564

    கலவி குறித்து இரு பதிவுகள் எழுதியிருக்கிறேன். ஒரினச்சேர்க்கையாளர்கள் பற்றியும் இருக்கிறது. நேரமிருப்பின் வாசித்து பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  40. வன்முறையில் மிகப்பெரும் வன்முறை ஒருவருக்கு அடிப்படை தேவைகள் மறுக்கப்படுதலே ஆகும்.

    செக்ஸ் என்ற அத்யாவசிய உரிமை ஓரினச் சேர்க்கையாளர்கள்க்கு (ஒ.சே) காலம் காலமாக மறுக்கப்பட்டே வந்துள்ளது. அதனால் இவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி, தங்களுக்கென்று ஒரு அண்டர்கிரவுண்ட் உலகை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பெண்ணோடு பழகும் உரிமை மறுக்கப்பட்டால் மாற்றின சேர்க்கையாளரான (மா.சே) பலரும் இதுபோல் அண்டர்கிரவுண்ட் உலகை ஏற்படுத்திக் கொள்ளத்தான் செய்வார்கள்.சமூகத்தில் இவர்களுக்கு உரிய அங்கீகாரமும், சட்டபூர்வமான பாதுகாப்பும் அளிக்கப்பட்டால் இந்த அண்டர்கிரவுண்டை விட்டு இவர்கள் வெளியே வந்துவிடுவார்கள்.

    தற்போது இவர்கள் பூங்காக்கள், பொதுகழிப்பிடங்கள், பாழடைந்த மண்டபங்கள் ஆகிய இடங்களில் சமூக விரோதிகளைபோல் பதுங்கி தமது அடிப்படை தேவையான செக்ஸ் உணர்வை பூர்த்தி செய்துகொள்ள நேருகின்றது.இவர்கள் இப்படி இருப்பதால் சமூகம் இவர்களைப் பார்த்து பயந்து ஒதுங்குவதும் நடக்கிறது.

    ஓ.சே (Homosexuality & lesbian) என்பது ஒரு மனிதனின் இயல்பான உணர்வு என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. பெண்ணை பார்த்து காதல் கொள்வது எப்படி மா.சேகளுக்கு இயல்போ அதேபோல் ஆணைப் பார்த்து காதல் கொள்வதும் ஓ.சேக்களுக்கு இயல்பு. ஓரினசேர்க்கை இயற்கைக்கு மாறானது என்ற (முட்டாள்தனமான) வாதத்தை வைப்பவர் பலர் உண்டு. உலகின் அனைத்துவகை மிருகங்கள், பறவை இனங்களிடம் ஓரினசேர்க்கை பழக்கம் உண்டு.எந்த மிருக,பறவை இனங்களிலும் 2 அல்லது 3% தொகை ஓரின சேர்க்கையாளர்தான்.மனித இனத்திலும் அதுபோலவே 2 அல்லது 3% பேர் எந்த காலத்திலும், எந்த சமூகத்திலும் ஓரினசேர்க்கையாளராகவே இருந்து வந்துள்ளனர்.

    ஓரினசேர்க்கை சட்டம் போட்டு தடுக்க கூடியதல்ல. சட்டம்போட்டு ஆண்-பெண் காதலை தடுக்க முடியுமா என்ன?இவர்களை சட்டத்தால் தடுக்க முடியாது என்றாலும் ஒடுக்க அல்லது பழிவாங்க முடியும்.காலம் காலமாக சமூகம் செய்து வந்திருப்பது இதைத்தான்.

    ஓரினசேர்க்கை என்பது மனோவியாதி அல்ல. அமெரிக்க மனோதத்துவ டாக்டர்கள் சங்கம் ஓரின சேர்க்கை மனோவியாதி அல்ல என தெளிவாக அறிவித்துள்ளது. இதை மருத்துவம் மூலமாக 'குணப்படுத்துவது' முடியாத ஒன்று. பெண்கள் மீது ஆண்கள் விருப்பம் கொள்வதை மனோவியல் ரீதியாக குணப்படுத்த முடியுமா என்ன?இது அவர்களின் இயல்பான உணர்ச்சி.

    ஓரினசேர்க்கையால் எய்ட்ஸ் வரும் என்பது தவறான புரிதல். எய்ட்ஸ் உள்ள ஒருவருடன் உடலுறவு கொண்டால் (அது ஆணோ பெண்ணோ) அல்லது ரத்த பரிமாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே எய்ட்ஸ் வரும். எய்ட்ஸ் இல்லாத இரு ஆண்கள் ஓரினசேர்க்கையில் எத்தனை முறை ஈடுபட்டாலும் அவர்களுக்கு எய்ட்ஸ் வராது. எய்ட்ஸுக்கு முன்னர் GRID (Gay related immune defeciency) என்ற பெயர் இருந்து அது பிறகு மாற்றப்பட்டதும் இதனால்தான்.

    ஓரினசேர்க்கையாளர்கள் நம்மைப்போல் சாதாரண மனிதர்களே. அவர்களுடன் பழகும் நண்பர்களையும் உறவினர்களையும் ஓ.சேக்கு பழக்கப்படுத்தி விடுவார்கள் என்பது தவறான புரிதல். ஒரு ஆணோடு ஒரு பெண் நட்புகொண்டிருப்பது அவர்களுக்கிடையே இருக்கும் ஈர்ப்பையும் தாண்டி நிகழ்கிறதல்லவா?அதுபோல் ஓரினசேர்க்கையாளரோடு மா.சேக்கள் நட்புகொள்வதும் பழகுவதும் சாத்தியமே.

    ஓ.சே தம்பதியினர் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகள் ஓ.சேக்களாக ஆவதில்லை.'நார்மலான' குழந்தைகளாகத்தான் வளர்கின்றனர்.ஓ.சே தம்பதியினர் சிறந்த பெற்றோராக இருக்கமுடியும் என்பதை சமூகம் மெதுவாக உணர்ந்துவருகிறது.

    ஓ.சேக்களை அங்கீகரிப்பதன்மூலம் அந்த பழக்கம் சமூகத்தில் பரவிவிடும் என்பது தவறான புரிதல். ஓரினசேர்க்கை ஒட்டுவாரொட்டி வியாதி அல்ல.அவர்களை நாம் அங்கீகரித்தாலும், மறுத்தாலும் (மனித)மிருக/பறவை இனங்களில் 2 அல்லது 3% எப்போதும் ஓ.சேக்களாகத்தான் இருப்பார்கள்.

    சமூக கட்டுப்பாட்டுக்கு பயந்து பெயருக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவளை திருப்திபடுத்த முடியாத இரட்டை வாழ்வை இவர்கள் வாழவேண்டியது தவிர்க்கப்பட இவர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்குவது முக்கியம்.ஓரினசேர்க்கையில் ஈடுபாடு கொண்ட ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து இயல்பாக வாழ்வது காரியசாத்தியமற்ற ஒன்று.

    இவர்களை நம்மால் தடுக்கவோ மாற்றவோ முடியாது எனும்போது இவர்களை ஒடுக்குவதை நாம் தொடர்ந்து செய்யவேண்டுமா என்ற கேள்வியை சமூகம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

    American Pyschologists association

    http://www.apa.org/topics/sorientation.html

    Is homosexuality a mental disorder?

    No, lesbian, gay, and bisexual orientations are not disorders. Research has found no inherent association between any of these sexual orientations and psychopathology. Both heterosexual behavior and homosexual behavior are normal aspects of human sexuality. Both have been documented in many different cultures and historical eras. Despite the persistence of stereotypes that portray lesbian, gay, and bisexual people as disturbed, several decades of research and clinical experience have led all mainstream medical and mental health organizations in this country to conclude that these orientations represent normal forms of human experience. Lesbian, gay, and bisexual relationships are normal forms of human bonding. Therefore, these mainstream organizations long ago abandoned classifications of homosexuality as a mental disorder.

    பதிலளிநீக்கு
  41. இந்திய சூழலில் ஓரின சேர்க்கையாளர்களை சமூகம் அருவருப்புடன் நோக்குவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆணாதிக்கம் நிலவும் எந்த சமூகத்திலும் ஆண்களின் ஓரினசேர்க்கை அறுவறுப்புடன் உற்று நோக்கப்படும். பெண்களீன் ஓரினசேர்க்கை கண்டுகொள்ளப்படாது. செக்ஸ் விடியோ கடைகளின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பெண்-பெண் விடியோவை விரும்பி வாங்குவார்கள். ஆண்-ஆண் விடியோ என்றால் காத தூரம் ஓடுவார்கள்.

    ஓரினசேர்க்கையாளர்களுக்கு ஆண்மையும் வீரமும் இல்லை என்பது தவறான புரிதல். ஓரினசேர்க்கை ஒருவரின் குனாதிசயத்தில் எந்த மாறுதலையும் ஏற்படுத்துவதில்லை. உலகை வென்ற அலெக்சாந்தர் ஒரு ஓரினசேர்க்கையாளன் தான். தனது நண்பன் ஹெபாஸ்டியனுடன் அலெக்சாந்தருக்கு இருந்தது கிட்டதட்ட தெய்வீக காதல் என்றே சொல்லலாம்.ஹெபாஸ்டியன் இறந்த பிறகு அலெக்சாந்தர் வெகு நாள் உயிர் வாழவில்லை.ஹெபாஸ்டியன் அலெக்சாந்தரின் படையில் இருந்த ஒரு சிறந்த தளபதியாகவும் மாவீரனாகவும் கருதப்பட்டான்.

    பண்டைய கிரேக்க ரோமானிய சமூகங்களில் ஓரினசேர்க்கை இழிவான பழக்கமாக கருதப்படவில்லை. பல ரோமானிய பிரபுக்களும் மன்னர்களும் ஆசைக்கு ஆணுடனும் இனவிருத்திக்கு பெண்ணுடனும் கூடுவதை பழக்கமாக வைத்திருந்தனர். இப்படி ஓரினசேர்க்கை சகஜமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோமானிய பேரரசுக்கும் மக்களுக்கும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    பண்டைய இந்தியாவிலும் ஓரினசேர்க்கையாளர்களும் அரவாணிகளும் சமூகத்தில் மதிப்புடனே வாழ்ந்தனர்.கஜுராஹோவில் ஓரினசேர்க்கை சிற்பங்கள் ஏராளம் உள்ளன.காமசூத்திரத்தில் வாத்சாயனர் ஓரினசேர்க்கையாளரின் உடலுறவு முறைகளையும் வாய்வழி உறவையும் விவரிக்கிறார்.காமசூத்திரத்தில் ஓரினசேர்க்கை புரியும் பெண்கள் ஸ்வாரினி (சுதந்திர மங்கையர்) என்று அழைக்கப்பட்டனர்.நாரத ச்மிரிதி ஓரினசேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் பெண்களை மணக்க தடை விதித்துள்ளது.(ஆனால் ஓரினசேர்க்கையை தடை செய்யவில்லை)மகாபாரதத்தில் கண்ணனும் அரவானும் கூடுவது போன்ற ஸ்தல புராணம் கூவாகம் அரவான் கோவிலிலும், கோவை சிங்காநல்லூர் அரவான் கோவிலிலும் காணப்படுகிறது.

    இதனால் எல்லாம் பண்டைய சமூகங்களில் ஓசேக்களும், இருபால் சேர்க்கையாளரும், அரவாணிகளும் சம உரிமை பெற்றிருந்தனர் என்று பொருளல்ல.பொதுவாக பண்டைய சமூகங்களில் அவர்களுக்கும் ஒரு இடம் இருந்தது, ஒடுக்குதல் இன்றி ஓரளவு உரிமைகளுடன் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.சமூகத்தில் அவ்வப்போது ஏற்படும் கலாச்சார மாற்றங்களுக்கேற்ப அவர்கள் நிலை மாறி வந்துள்ளது.

    பண்டைய சமூகத்தில் அவர்களுக்கு இருந்த நிலையை விட 21ம் நூற்றாண்டில் அவர்களின் நிலை மோசமடைய நாம் விடலாமா? நமது மூதாதையருக்கு இருந்த சகிப்புதன்மையும், தாராளமனமும் நமக்கு வேண்டாமா என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்து பார்க்க வேண்டும்.தானாக விரும்பி எவனும் ஓரினசேர்க்கையாளன் ஆவதில்லை. கடவுளாக கொடுத்த நிலை அது. ஓரினசேர்க்கையாளன் ஆகும் ஒவ்வொருவனும் மனதளவில் அதற்கு ஒரு கட்டத்தில் மிகவும் அஞ்சுகிறான், பயப்படுகிறான், தனது மனதை மாற்ற பல வழியிலும் முயல்கிறான். ஆனால் இயற்கையை வெல்ல அவனால் முடிவதில்லை.

    சட்டபூர்வமாக இருக்கும் தடைகளை விட சமூகரீதியில் காணப்படும் புறக்கணிப்பே ஓசேக்களை மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாக்குகிறது. அவனது ஆண் நண்பர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் அவன் ஆளாகிறான். ஓசேயின் நண்பனாக நாம் இருந்தாலே நம்மையும் மற்றவர்கள் சந்தேகப்படுவார்கள் என்ற நிலைமை நமது சமூகத்தில் நிலவுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் நட்பு கொண்டு வாழமுடியும் என்பதை ஏற்கும் நமது சமூகம் ஒரு ஓசேவும் இன்னொரு ஆணும் நண்பர்களாக பழகமுடியும் என்பதை ஏற்க மறுக்கிறது.

    சட்டபூர்வமாக இவர்களுக்கு செய்ய வேண்டியது பல இருந்தாலும் முதல் மாற்றம் சமூகரீதியாகத்தான் துவங்க வேண்டும். சமூகரீதியான மாற்றம் வந்தால் சட்டம் தானே மாறிவிடும்.ஓசேக்கள் நம்மைப்போல் மனிதர்கள் என்பதை நாம் முதலில் உணரவேண்டும். நமது நண்பர்கள் ஓசேக்கள் என தெரியவந்தால் அதற்காக அவர்களை வெறுத்து ஒதுக்ககூடாது. நமது தொழிலகங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படகூடாது.

    ஓசேக்கள் பலருக்கும் எய்ட்ஸ், பாலியல் வியாதிகள் பற்றிய விழிப்புணர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது.பாலியல் தொழிலாளர்களுக்கு காண்டம் வழங்கி விழிப்புணர்வு ஊட்டும் சமூக நல அமைப்புகள் இவர்களை கண்டு கொள்வதில்லை.இந்தியாவில் அண்டர்கிரவுண்டில் செயல்படும் சூழலில் இயங்கும் ஓசேக்களுக்கு பாலியல் வியாதிகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த சமூக நல அமைப்புக்கள் முன்வர வேண்டும்.ஓரினசேர்க்கையால் எய்ட்ஸ் வரும் என்பது தவறான தகவல் என்பதை இங்கே மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாதுகாப்பற்ற எந்த உறவிலும் எய்ட்ஸ் வரும் என்றாலும் ஓசேக்களிடயே பாதுக்காப்பற்ற உறவு இந்திய/ஆசிய சூழலில் நிலவுவதால் இவர்களுக்கு விழிப்புணர்வும் பாலியல் கல்வியும் அளிப்பது மிக முக்கியம்.

    பதிலளிநீக்கு
  42. அபாரம் செல்வன்..
    மிக அபாரம்.

    இங்கு கோடிக்கணக்கான தடைகள்
    இருக்கிறது. கணவன் செத்தவுடன்
    உறுப்புகள் செத்துப் போவதில்லை.
    ஆனால் ஒதுக்குதல் மிக மிக புனிதமானதாகக்
    கருதப்படுகிறது. பசியும் காமமும் நட்பும் இறந்து
    போவதற்கு முன்னர் எல்லோருக்கும் தேவைப்படுகிறது.
    பலுறவுக்குத் தயாராகிற வரை குழந்தைகள் விளையாட
    அனுமதிக்கப் படுகிறார்கள். பின்னர் ஒரு பெரும்
    சுவரெழுப்பபடுகிறது. தொடுதல் உணர்வு ஆண்,பெண்
    பேதமற்றது. எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கோருகிற
    மனதை கலாச்சாரத்திரை போட்டு மறைக்கிறோம்.
    ஒடுக்குதல் இறுக்கமானால், மீறல்கள் எல்லாவற்றையும் உடைக்கும்.
    பசியோடு பத்து நாள் கிடந்தபின் தட்டில் வைக்கப்பட்டது
    தண்ணீர் தெளிக்கப்பட்ட புனிதமானதா அசுத்தமானதா
    என்று ஒரு போதும் வயிறு கேட்காது.
    தொடுதல் உணர்வு ஆண்,பெண் பேதமற்றது.
    அந்தரங்கம் அருவருப்பானதல்ல, அதே நேரம்
    புனிதமானதுமல்ல..இயல்பானது.

    பதிலளிநீக்கு
  43. மனதில் உள்ள - ஏற்கனவே எழுதப்பட்ட - சிந்தனைகளைப் புறந்தள்ளி - புதுமையாக, மற்றொரு கோணத்தில், இன்றைய நிலையில் இருந்து சிந்திக்க வேண்டிம் - அருமையான விவாதத்திற்குரிய பதிவு. இன்னும் பல காலம் பிடிக்கும் அங்கீகாரம் கிடைக்க - தேவை எனில்.

    இயற்கைக்கு மாறான எதையும் ஏற்றுக் கொள்ள தயங்குவது சகஜமே !

    பதிலளிநீக்கு
  44. சொல்லரசன்!

    தங்களுக்கும் நன்றி...
    உங்களால் இங்கு ஒரு உரையாடல் நடந்ததற்கு.

    பதிலளிநீக்கு
  45. ஹேமா!

    நன்றி.

    கவின்!
    எதற்கு சிரிப்பு? வருகைக்கு நன்றி.

    சீனா!
    //இன்னும் பல காலம் பிடிக்கும் அங்கீகாரம் கிடைக்க - தேவை எனில்.//

    மிகுந்த எச்சரிக்கையாக சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  46. அருமை செல்வன்.

    மிக நிதானமாகவும் ஆழமாகவும் உங்கள் கருத்தை எடுத்து வைத்திருக்கிறீர்கள்.

    //ஓ.சே (Homosexuality & lesbian) என்பது ஒரு மனிதனின் இயல்பான உணர்வு என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. //

    இதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனரே என்பதுதான் என் வாதம்.

    எல்லா சமுதாயத்திலும் எல்லாக் காலாத்திலும் இருந்து வரும் ஒரு விஷயம்தான். நாம் இப்பொழுது பெற்றுவரும் கல்வியினாலும் அதிகத் தகவல்களாலும் இதைப் பற்றிய ஒரு அடிப்படை புரிதலுடன் அங்கீகரிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். நான் மீண்டும் சொல்கிறேன் பொத்தாம் பொதுவாக இதை ஒதுக்க முடியாது.

    திருநங்கையருக்கான அங்கீகாரம் வழங்கி அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் சமீபகால நடவடிக்கைகள் நல்ல பலனைத் தருவதைப் பாருங்கள்.

    அதைபோல இதையும் அங்கீகரித்து அது ஒன்றும் குற்றமல்ல இயல்பானதே என்ற ஆறுதலை ஏற்படுத்தினால், அவர்களது மற்ற திறமைகள் வெளியே வரும். இல்லையெனில் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகிப் போய்விடுவார்கள்.

    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடலாமே?

    பதிலளிநீக்கு
  47. தமிழச்சி!

    //இங்கே முரண்பாடுகளைப் பற்றிதான் நாம் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறோம். அங்கீகரிப்பு தனிமனித சுதந்திரம் போன்ற வாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு சமூக நாசங்களை பார்த்தால் ஓரினச்சேர்க்கைகளின் ஆபத்துக்கள் தெரியும்.//

    உங்களின் இந்தக் கருத்தோடு எனக்கு உடன்பாடு. அறிவு முதிர்ச்சியும், மனப்பக்குவமும் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகத்தில் இந்த ‘தனி மனித உரிமை’ சரியாய் இருக்கலாம். இங்கே வெறும் உடல் கிளர்ச்சிகளை மட்டுமே குறிவைத்து, காய்கள் நகர்த்தப்படுகிற அமைப்பில் மிகுந்த எச்சரிக்கையோடும், நிதானத்தோடும்தான் நாம் இது போன்ற விஷயங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  48. செல்வன்!

    பல முக்கிய தகவல்களோடும், தெளிவோடும் உங்கள் வாதங்கள் இருக்கின்றன. நன்றி.
    //இவர்களை நம்மால் தடுக்கவோ மாற்றவோ முடியாது எனும்போது இவர்களை ஒடுக்குவதை நாம் தொடர்ந்து செய்யவேண்டுமா என்ற கேள்வியை சமூகம் கேட்டுக்கொள்ள வேண்டும்.//

    ஒப்புக் கொள்கிறேன். வெளிப்படையான விவாதங்கள் தெளிவையும், புரிதலையும் ஏற்படுத்தும். அது தேவையான மாற்றங்களை சமூகத்திற்குள் உருவாக்கும்.

    //தானாக விரும்பி எவனும் ஓரினசேர்க்கையாளன் ஆவதில்லை. கடவுளாக கொடுத்த நிலை அது. //

    இதை என்னால் முழுமையாக ஒப்புக்கொள்ள இயலவில்லை. பெரும்பாலும் ஒருவரின் செக்ஸ் வாழ்வில் முதல் தீண்டுதல் சுயபால் மூலமே நிகழ்கிறது. சுயபால் மக்களிடமே நெருக்கமாக ப்ழக கிடைக்கும் வாய்ப்பில் இது அமைகிறது. அதில் ஒரு புரிதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மனோ ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ வர நேரிடுகிறது.

    உங்கள் கருத்துக்கள் என் பதிவிற்கு நிரைய அர்த்தங்களைத் தந்திருக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  49. காமராஜ்!
    //பாலுறவுக்குத் தயாராகிற வரை குழந்தைகள் விளையாட
    அனுமதிக்கப் படுகிறார்கள். பின்னர் ஒரு பெரும்
    சுவரெழுப்பபடுகிறது.//

    அதுதான் இங்கு ஒழுக்கம் என்று அறியப்படுகிறது. அதுதான் இங்கு குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. சுவரை உடைக்க வேண்டும். அத்தோடு விளையாடுவதற்கான விதிமுறைகளையும் தெளிவாக அறிதல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  50. வேலன்!
    //அதைபோல இதையும் அங்கீகரித்து அது ஒன்றும் குற்றமல்ல இயல்பானதே என்ற ஆறுதலை ஏற்படுத்தினால், அவர்களது மற்ற திறமைகள் வெளியே வரும். இல்லையெனில் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகிப் போய்விடுவார்கள்.//

    வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  51. திரு. செல்வன் சொல்லுவது போல் ஒரு உயிரினத்தின் 97% போல் இல்லாமல் வேற்று குணதிசயங்களை கொண்டிருப்பது ஊனம் or Mental Disorder இல்லாமல் வேறு என்ன சொல்லுவது. இது மற்ற ஊனத்திற்கு சமமாகவே கருதி அங்கிகாரம் கொடுக்கப்பட வேண்டுமே தவிர இதுதான் எல்லா உயிர்களின் அடிப்படை என்று சொல்லவது சரியாகாது. அதே நேரத்தில் தமிழச்சி அவர்கள் சொல்லுவது போன்று இதை "கலவியல் வக்கீரங்கள்" என்றும் இவர்களை வரம்புக்கு மீறிய புணர்ச்சி உணர்வு கொண்டவர்கள் என்ற வகைப்படுத்த முடியாது. அவ்வகை மக்கள் பாலியல் அடிமைகள் (sexual addicts) என்ற வகையில் கையாளப்படவேண்டும். ஆனால் இதை mainstream ஆக்க முயற்சிப்பது தவறான எதிர் விளைவுகளையே கொண்டு வரும். அப்படி செய்யும்போது இது பரவலாக்கப்படும்போது இருபலுனர்ச்சியளர்கள் (Bisexual) அங்கிகாரத்தை முன்வைக்கப்படும் இதும் பரவலாக்கப்படும்போது யார் யாருடன் வேண்டுமானாலும் புணர்ச்சி கொள்ளலாம் என்ற விபசார சமுதாயமே உருவாகும். ஆகவே இவர்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்காமல் அதேநேரத்தில் இதை பரவலாக்க (mainstream) செய்ய முயற்சிக்காமல். மற்ற ஊனமுற்றோர்களை போல் இவர்களுக்கும் சமுகத்தில் அங்கிகாரம் கொடுத்து நம்மோடு வாழவைப்பது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். மேற்கத்திய உலகத்தி இதை பரவலாக்க முயன்று அதன் எதிர் விளைவுகளை சந்தித்து இப்பொழுது பல நாடுகளில் இதன் சட்ட அனுமதியை ரத்து செய்து வருகின்றனர் இதை இப்பொழுது நம் நாட்டில் பரவலாக்க முயற்சிப்பது வேண்டாத விபரீதத்தையே கொண்டுவரும். - Nithy Toronto

    பதிலளிநீக்கு
  52. காமராஜ் சார்!

    //அந்தரங்கம் அருவருப்பானதல்ல, அதே நேரம்
    புனிதமானதுமல்ல..இயல்பானது.//

    அச‌த்த‌ல்!

    பதிலளிநீக்கு
  53. இந்த‌ப் ப‌திவு நிறைய‌ சிந்திக்க‌ வைக்கிற‌து. மிக‌வும் சிக்க‌லான‌ விஷ‌‌ய‌ம் தான். ஒட்டி மொத்தமாக அவர்களை அருவருப்பவர்களை விடுங்கள். மனிதாபிமானத்தோடு அவ‌ர்க‌ளைப் புரிந்து கொள்ள‌ முற்ப‌டுப‌வ‌ர்க‌ளிடையே கூட‌ இங்கே இர‌ண்டு வித‌மான‌ க‌ருத்து நில‌வுகிற‌து.

    1. எப்படியும் இது இய‌ற்கைக்கு முர‌ணான‌து அவ‌ர்க‌ள் பாவ‌ம், ஒரு வித ம‌னோ வியாதிக்கோ அல்ல‌து என்ன காரணத்தினாலோ ம‌னோ வ‌க்கிர‌த்துக்கோ ஆளான‌வ‌ர்க‌ள். அந்த‌க் கார‌ண‌ங்க‌ளைக் க‌ண்டுபிடித்து அவ‌ர்க‌ளை மாற்ற‌ வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள்.என் கருத்தும் அது தான். அப்படியென்றால் இதைக் கையாள்வ‌து அவ்வளவு கடினமல்ல‌. புகழ் பெற்ற மனோதத்துவ நிபுணர்கள் நம்மிடையே இருக்கின்றனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையானோரின் மறுவாழ்வு மையம் போல் தொடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 2. திரு. செல்வ‌ன், திரு.ஞானி ஆகியோர் கூறுவ‌து போல் இது இய‌ற்கையான‌து தான். சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளுக்கும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ பால்விருப்ப‌ம் இருக்கும் எனில், I am sorry, விழிப்புண‌ர்வு ந‌ம‌து நாட்டில் ந‌ம‌து ச‌முக‌த்தில் வ‌ர‌ மிக‌வும் போராட‌ வேண்டும். அப்ப‌டி இருக்க‌ கூடாதே என்ப‌தே என‌து எண்ண‌மாகக் கூட‌ இருக்கிற‌து.

    பதிலளிநீக்கு
  54. தற்குறி,பார்வை குறுகலே பழமைவாதி பாஸிசவாதி என வசைபாடிய,மெத்தபடித்த படித்த மேதாவிகளுக்கு
    இந்திய தண்டனை சட்டம் 377 பிரிவு தெரியுமா

    பதிலளிநீக்கு
  55. இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு : 377



    இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது பத்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்"

    பதிலளிநீக்கு
  56. இயற்கைக்கு மாறன உறவை இந்திய அரசியல் அமைப்பு 2006 வரை எதிர்த்துள்ளது.
    தற்போது தடைப்பெற பட்டுள்ளது.ஒரினசேர்க்கையை எதிர்த்த இந்திய சட்ட மேதைகளை என்னவென்று சொல்லாம்

    பதிலளிநீக்கு
  57. ஒரின சேர்க்கை ஊனமா எந்த மருத்துவத்தில் உள்ளது?ஆதாரம் தரமுடியுமா?

    பதிலளிநீக்கு
  58. ஓசை செல்லா இரட்டை தமளர் முறை எங்கு உள்ளது எங்கள் நாட்டில் வா போகலாம் களம் அமைத்து போராட நான் தயார் நீ தயார?

    பதிலளிநீக்கு
  59. இதை படியுங்கள் முதலில் அப்புறம் வாதிப்போம்
    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=555%20

    நன்றி தமிழச்சி

    பதிலளிநீக்கு
  60. செல்வன்!
    நன்றி.

    தீபா!
    நன்றி.

    சொல்லரசன்!
    நன்றி.
    முதலில்,
    இங்கே தங்களை புண்படுத்தும்படி எதேனும் வார்த்தைக் குறிப்புகள் இருப்பின், நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சட்டமும், சமூக அங்கீகாரமும் இல்லை எனப்து அனைவருக்கும் தெரியும். அதுவே அவர்களை ஒடுக்குவதாய் ஆகக் கூடாது. இதை எப்படி பார்ப்பது என்றுதான் நாம் அனைவரும் விவாதிக்கிறோம்.

    இரட்டை டம்ளர் முறை தமிழகத்தின் பல கிராமங்களில் இருக்கிறது. போராட்டங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாங்கள் எடுத்திருக்கும் ‘இது வேறு இதிகாசம்” ஆவணப்படம் பாருங்கள்.

    காதல் குறித்து யார் யார் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்று ஒரு பதிவிட்டிருக்கிறேன். அங்கும் வாருங்கள்.பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  61. 'உயிரினப் படைப்புக்கும், இயல்புக்கும், இயற்கைக்கும் மாறான இந்த வழக்கத்தை சரி செய்ய வேண்டும். '


    எது இயற்கைக்கு மாறான வழக்கம் என்று யார் தீர்மானிப்பது.உயிரினங்கள்
    பலவழிகளில் reproduce செய்கின்றன.அதில் எப்போதும் எல்ல உயிரினங்களிடம் பாலினசேர்க்கைதான்
    ஒரே முறை என்று இல்லை.இந்த அடிப்படை அறிவியல் உண்மையை
    நீங்கள் இன்னுமா அறியவில்லை.

    சரி செய்ய வேண்டும் என்பதே நீங்கள் இன்னும் இது குறித்த புரிதல் இல்லாத
    பழமைவாதியாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.homosexuality
    = deviation/disease/unnatural/anti-natural போன்ற புரிதல்களை அறிவியல் இன்று ஏற்பதில்லை.

    இதில் உங்களுடைய புரிதல் கலாச்சார
    காவலர்களின் புரிதலுக்கு இணையாக
    இருப்பதில் வியப்பில்லை.ஏனெனில்
    பொது உடமை பேசுபவர்களின் முற்போக்கு பல நேரங்களில் அப்படித்தான் இருக்கிறது.
    தயவு செய்து கொஞ்சம் படித்துவிட்டு,
    377 பிரிவு குறித்த விவாதங்களை
    புரிந்து கொள்ள முயற்சி செய்துவிட்டு
    நீங்கள் எழுதியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  62. anonymous!

    //homosexuality
    = deviation/disease/unnatural/anti-natural போன்ற புரிதல்களை அறிவியல் இன்று ஏற்பதில்லை.
    //
    இதையும் நீங்கள்தாண் சொல்கிறீர்கள்.

    பிறகு,//எது இயற்கைக்கு மாறான வழக்கம் என்று யார் தீர்மானிப்பது.உயிரினங்கள்
    பலவழிகளில் reproduce செய்கின்றன.அதில் எப்போதும் எல்ல உயிரினங்களிடம் பாலினசேர்க்கைதான்
    ஒரே முறை என்று இல்லை.இந்த அடிப்படை அறிவியல் உண்மையை
    நீங்கள் இன்னுமா அறியவில்லை.//

    கொஞ்ச நிதானமாக, புரிகிற மாதிரி பேசுங்களேன்.

    பொது உடமை, முற்போக்கு உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் புர்கிறது நண்பரே!

    பதிலளிநீக்கு
  63. ///உயிரினங்கள் பலவழிகளில் reproduce செய்கின்றன.அதில் எப்போதும் எல்ல உயிரினங்களிடம் பாலினசேர்க்கைதான் ஒரே முறை என்று இல்லை. இந்த அடிப்படை அறிவியல் உண்மையை நீங்கள் இன்னுமா அறியவில்லை.///
    ....உண்மைதான் ஆனால் அதுபோன்ற பாலில்லஇனபெருக்கம் (Asexual-reproduction) அடுகேற்ற இனபெருக்கம் செய்யக்கூடிய உயிரினகளுக்குதான் பொருந்தும் மனிதன் இனப்பெருக்கம் செய்ய ஆணின் விந்தும் பெண்ணின் ஓவ-வும் சேர்வதால் மட்டுமே சாத்தியம் என்ற இந்த 5-ஆம் வகுப்பு உண்மையை இன்னுமா நீங்கள் அறியவில்லை?
    //எது இயற்கைக்கு மாறான வழக்கம் என்று யார் தீர்மானிப்பது//
    உண்மைதான்ஒருவேளை இதே இயற்கை நாளை ஒரு ஆணுடன் மற்றொரு ஆண் கூடும்போது அந்த ஆண்களால் "இயற்கையாகவே" குழந்தை பெற்று கொள்ள முடியும் என்று மாற்றியமைக்கும்போது இயற்கையான வழக்கத்தை யாராலும் தீர்மானிக்க முடியாது Nithy Toronto

    பதிலளிநீக்கு
  64. most of the comments have gone on to discuss the various aspects, so i may be redundant now. my personal opinion is that if (and only if) a person is uncomfortable about his/her homosexual interests and acts we should intervene or help. i am sorry that it took me so much time to reply. as usual you are writing with clarity, keep going

    பதிலளிநீக்கு
  65. பாலியல் அடையாளம் என்பது ஒவ்வொரு மனிதரும் தேர்வு செய்துகொள்ளும் சுதந்திரமும் உரிமையுமாகும்.இதை பிறர் மதிக்கக்கற்றுக் கொள்வது அவசியம்.//

    கண்டிப்பாக மதிக்க வேண்டியது அவசியம்!
    ஆனால் தேர்வு செய்யும் முறையில் சில வன்முறைகளும் இருக்கின்றன!
    அவற்றிர்க்கும் உங்களது கண்டங்கள் தேவை!

    தற்போது ஒரீன சேர்க்கையாளர்கள் ஒற்றினைந்து கூட்டம் போட்டது வரவேற்கதக்கது, அதே நேரம் அந்த கூட்டம் தமக்கு தேவையான இணையை தேடி கொள்ள என்றால் அது செக்ஸ் விழிப்புணர்வு அற்றவர்கள் செய்யும் வேலை.

    அதே நேரம் அவர்களுக்குள் ஒரு அடையாளம் வைத்து கொண்டு மற்றவர்களை தொந்தரவு செய்யாதிருத்தல் நலம், என்ன தான் நீங்கள் பக்கம் பக்கமாக எழுதினாலும் தோழர் மாதவராஜ் அதை படிக்கவில்லை என்கிறார், அதே நேரம் பாலியிலில் குறைந்த விழிப்புணர்வு உள்ளவர்கள் இதை எப்படி புரிந்து கொள்வார்கள்.

    குறிப்பாக சுய இன்பம் என்பதை கொலை குற்றத்திற்கு சமமாக தொலைகாட்சியில் மருந்து விற்கிறார்கள், கூடவே வயது மூத்த பெண்ணுடன் உறவு என்றால் உடல் உருகி விடுமாம்(உடல் என்ன ஐஸ் கட்டியா).

    நீங்கள் என்ன தான் விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தாலும், மறுபக்கம் மூடநம்பிக்கைகளும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

    ஓரீன சேர்க்கையாளர்களை ஒத்து கொள்ளலாம், காரணம் ஏற்று கொள்ளுதல் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் வேறு, அவர்களுடன் இணைந்து பேசலாம், என்னவென்று தெரியாத காலத்தில் இதனால் எவ்வாறு அவதியுற்றேன் என்று விளக்கம் அளிக்கலாம்.

    ஓரின சேர்க்கையாளர்கள் அனைவரும் பிறப்பாலேயே அப்படியல்ல, சிலர் உங்களலால் எதிர்பாலனித்தின் மேல் பற்றற்று இருக்கிறார்கள் என்பதை விளக்கலாம்.

    ஒர்ரினசேர்க்கையாளர்கள் மேல் எனக்கு எந்த கோபமுமில்லை, அதே நேரம் நான் ஒரு இயற்கை விரும்பி.

    இன்று ஒரினசேர்க்கை முறையை அவர்களுது உரிமை என்று சொல்லும் நண்பர்கள் நாளை விலங்குகளுடன் உறவு கொள்வதையும் bondage முறை கலவியையும் அவர்களது உரிமை என்று சொல்லலாம்.

    ஓரினசேர்க்கை அவர்களது உரிமையாக இருக்கலாம், அதே நேரம் மற்றொரு அப்பாவியை ஓரினசேர்க்கையாளனாக மாற்ற வேண்டாம் என்று கேட்க எனக்கு உரிமை இருக்கிறதா!

    இது பற்றி தனி பதிவாகவும் போடத் தயார்.

    பதிலளிநீக்கு
  66. ருத்ரன் சார்!

    நீங்கள் சொன்னது போல பல கோணங்களில் நம் மக்கள் இந்தப் பிரச்சினையை பார்த்திருக்கிறார்கள். ஆரோக்கியமாகவும் இருந்தது, நம்பிக்கையளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  67. வாலபையன்!
    //அதே நேரம் அந்த கூட்டம் தமக்கு தேவையான இணையை தேடி கொள்ள என்றால் அது செக்ஸ் விழிப்புணர்வு அற்றவர்கள் செய்யும் வேலை.//

    //ஓரினசேர்க்கை அவர்களது உரிமையாக இருக்கலாம், அதே நேரம் மற்றொரு அப்பாவியை ஓரினசேர்க்கையாளனாக மாற்ற வேண்டாம் என்று கேட்க எனக்கு உரிமை இருக்கிறதா!//

    இன்னொரு கோணத்தில் மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.ஆமாம், அடுத்தவர்களின் இயல்பான செக்ஸ் உணர்வில் தலையிடவும் யாருக்கும் உரிமையில்லைதான்.

    பதிலளிநீக்கு
  68. கண்ணுக்குத் தெரிகிற, கவனத்தை ஈர்க்கிற ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் அழுக்குப்படாமல் இருக்க வேண்டும்; ஒளிந்து கொண்டிருக்கும் உள்ளத்துக்குள்ளே எத்தனை அழுக்குகள் இருந்தாலும் யார் கண்ணுக்கும் தென்படுவதில்லை. அதனால் தான் உடலுறவுக்கான வரைமுறைகள் மீறப்படுகிற போது, அது கலாச்சாரச்சீரழிவாகக் கருதப்படுகிறதோ என்று ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. பள்ளிகளில் பாலியலைக் கட்டாயப்பாடமாக வைத்து, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சில விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த முனையாமல், எதற்கெடுத்தாலும் ’இது அசிங்கம்; அருவருப்பு,’ என்று கூக்குரல் இட்டு யாரும் எதையும் சாதிக்கப்போவதில்லை.

    வேணு

    பதிலளிநீக்கு
  69. உங்களின் துணிசலனா பதிவுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்
    சில விறுப்பங்கள் அவர்களின் விருப்பத்தியும் மீறி விடுகிறது இதனால் மிக உணர்ந்து யோசிக்கவேண்டும்
    ச்சீ த்ஹூ என எல்லாரூம் சொல்லிவிடலாம் ஒரு நாள் உங்கள் குழந்தையோ இல்லை உடன் பிறப்புகளோ இப்படி ஆனல்????????? தயவு செய்து யோசிக்கவும் ......

    பதிலளிநீக்கு
  70. யாரும் பேச தயங்குகிற விசயத்தில் இவ்வளவு செய்திகளா?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!