யாருக்காக மணி அடிக்கிறது

for whom the bell tolls இந்த நாவலின் தலைப்பு புகழ்பெற்ற ஜான் டோன்னின் கவிதையிருந்து  பிறந்தது. "எந்த மனிதனும் தீவு அல்ல, இந்த பெரும் நிலப்பரப்பின் ஒரு அங்கம்தான்'  என்று ஆரம்பித்து, இந்த மனித சமூகத்தோடு கலந்து இருப்பதால் ஒவ்வொரு மனிதனின் மரணமும் என்னை கலங்கச் செய்கிறது. அதனால், யாருக்காகவோ  இந்த மணியடிப்பதாக தெரியவில்லை, எல்லோருக்காகவும்தான் கேட்கிறது " என்று வரும் அதன் இறுதி வரிகள். மரணத்தின் ஓசையை அனைவருக்குமாக  உணர்ந்து வேதனைப்படும் ஆன்மாவின் செய்தியே இந்தக் கவிதையின் அடி நாதமாக இருக்கிறது. நாவல் நெடுக மரணம் குறித்த சிந்தனைகள் மேலெழும்பி  கொண்டிருக்கின்றன. அதற்கான களமாக ஸ்பானியப் போர்க் காலம் நம்முன் விரிகிறது.

 

ஸ்பானியப் போர் என்றதும் பிகாசோவின் கூர்னிகா நினைவுக்கு வரும். உருக்குலைந்து கதறும் மனிதர்களின் முகங்களும், மிருகங்களின் மிரட்சியும் காட்சிப்  படலங்களாக ஊடுருவும் ஓவியம் அது.  வேட்டையாடப்பட்டு வீழ்ந்த மனிதர்களின் இறுதித் துடிப்புகள் அந்த நிலமெங்கும் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு  உலகம் முழுவதும் நீடிக்கும் இரண்டு பெரும் முகாம்களின், தத்துவங்களின் முரண்பாட்டை, பகைமையை அன்றைக்கு அந்த நாடு சுமந்து கொண்டிருந்தது.

வரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள்

பற்றிய ஒரு தொடர்-5

 

1930களில் ஸ்பெயினில் அரசியல் குழப்பங்கள் தொடர்ந்து நிலவுகின்றன. 1931ல் அரசன் அல்போன்ஸா தலைமறைவாகிவிடுகிறார். இடதுசாரி அரசு ஏற்படுகிறது.   இருந்தும் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. 1933ல் வலதுசாரி பழமைவாதிகள் அதிகாரத்துக்கு வருகின்றனர். 1936ல் ஜோஸ் கால்வாஸ் ஒட்டெல்லோவின்  மரணத்திற்குப் பிறகு மக்கள் வாக்களித்து இடதுசாரி அரசை தேர்ந்தெடுக்கின்றனர். மாறி மாறி நிகழ்ந்த வரலாற்றுத் திருப்பங்களின் உச்சக்கட்டமாக 1936ல்  ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் ஏற்படுகிறது. கம்யூனிசத்திற்கும், பாசிசத்திற்கும் ஏற்பட்ட மோதலாக உருவெடுக்கிறது.

 

இடதுசாரிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், சர்வாதிகார வலதுசாரிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியும் இத்தாலியும் ஸ்பெயினுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.  இரண்டாம் உலகப் போருக்கான பரிசோதனைக் களமாக அந்த நாடு மாறுகிறது. சர்வாதிகார சக்திகளுக்கு எதிராக பல ஜனநாயக நாடுகளிலிருந்து உதவிகள்  கிடைக்கின்றன. 1939ல் யுத்தம் முடிவுக்கு வருகிறது. படைபலமிக்க சர்வாதிகார சக்திகளே வெற்றி பெறுகிறார்கள். இரத்தம் தோய்ந்த இந்த காலமே 'For  Whom the bell tolls    ' என்னும் நாவலாக ஹெம்மிங்வேயிடமிருந்து வெளிப்படுகிறது.

 

ஹெம்மிங்வேயின் வாழ்க்கையே  போர்க்கள அனுபவங்களாலும், பயணங்களாலும்  நிரம்பியதாக இருக்கிறது. 1899ல் தங்கள் இரண்டாவது மகனாக பிறந்த  அவரை இசை ஆர்வம் மிக்கவராக வளர்க்க ஆசைப்படுகின்றனர் அவரது பெற்றோர். அவருக்கோ வேட்டைக்குச் செல்வதில்தான் நாட்டம் இருக்கிறது. பள்ளியில்  கால்பந்து விளையாட்டிலும், குத்துச்சண்டையிலும் ஆர்வம் காட்டுகிறார். 1918ல் முதல் உலகப் போரில் ரெட் கிராஸ் அமைப்பின் hemmingway சார்பில் ஒரு ஆம்புலன்ஸ்  டிரைவராக பணியாற்றுகிறார். 1920ல் 'டொரண்டோ ஸ்டார்' பத்திரிக்கைக்காக துருக்கிப் போரைப் பற்றிய செய்தியாளராக இருக்கிறார். 1921லிருந்து  ஐரோப்பியாவில் அந்நியச் செய்தியாளராக பாரிஸிலிருந்து பணியாற்றுகிறார். முசோலினி போன்ற பெரும் தலைவர்களிடம் பேட்டி காண்கிறார். 1926ல் Farewell to arms   அவரது  முக்கிய நாவலான எழுதுகிறார். இரக்கமற்ற உலகமாக போர்க்களம் இருப்பதைப் பார்க்கிறார். 1929ல் அவர் எழுதிய the sun also rises என்னும் நாவலுக்கும்  இந்த அனுபவங்களே பின்புலமாக இருக்கின்றன.  1937ல் போர்க்கள செய்தியாளராக ஸ்பெயினுக்குச் செல்கிறார். அப்போதுதான் for whom  the bell tolls     நாவலுக்கான களமும், காட்சிகளும், கதாபாத்திரங்களும் அவருக்குள் படருகிறார்கள். வசீகரமான நிலப்பரப்பை சத்தங்களாலும், ராட்சச  உருவங்களாலும் பிளந்து செல்லும் டாங்கிகளை அவர் வேதனையோடு பார்க்கிறார்.

 

ஸ்பானிய உள்நாட்டுப்  போரில் பாசிச சக்திகளுக்கு எதிராக, இடதுசாரிகள் ஆதரவு பெற்ற ஜனநாயகவாதிகளுக்கு உதவி செய்ய அமெரிக்காவிலிருந்து  ஸ்பெயினுக்கு ராபர்ட் ஜோர்டான் வருகிறான். அவன் ஒரு அமெரிக்க ஸ்பானியன். டைனமேட் நிபுணன். சர்வதேச படைகளின் தலைவரான ரஷ்யாவின்  ஜெனரல் கோல்ஸ் ஆணையின் பேரில் ஒரு பாலத்தை தகர்க்கும் பணி அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டிய சம்பவங்களோடு அவனுடைய  வாழ்வின் கடைசி நான்கு நாட்களை நாவல் சொல்ல ஆரம்பிக்கிறது.

 

காட்டில் அடர்ந்த தேவதாரு மரங்களடியில் நிலத்தில் கிடந்தபடி ஜோர்டான் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறான். ஒரு விவசாயி போல அவனது உடைகள்  இருக்கின்றன. அன்செல்மோ என்னும் வயதான மனிதன் தூரத்தில் இருக்கும் ஆலையொன்றைக் காண்பித்துக் கொண்டு இருக்கிறான். அதன் அருகில்  சாலையை பழுது பார்த்துக் கவனிப்பவனின் குடிசையொன்றும் இருக்கிறது. எதிரிகளின் முக்கிய தளங்கள் அவை.

 

வேகமாக மலை ஏறும் அன்செல்மோதான் அவனுக்கு வழிகாட்டி. தாக்குதல் ஆரம்பித்த பிறகே பாலத்தை தகர்க்க வேண்டும். அப்போதுதான் எதிரிப்படைகளின்  டாங்கிகளும், படைகளும் அந்தப் பாலத்தின் வழியே நகர முடியாது. நிலைகுலைந்து போகும் நேரத்தில் வான்வழி தாக்குதல்கள் எதிரிகள் மீது தொடரப்பட  வேண்டும். இதுதான் திட்டம். வெற்றியோ, தோல்வியோ ஜெனரல் கோல்ஸுக்கு நேரிடையாக இராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதில்தான்  நாட்டமிருக்கிறது. மொத்த நடவடிக்கைக்கும் ஸ்பானிய விவசாயிகளை நம்ப வேண்டியிருக்கிறதே என்று எரிச்சலுமிருக்கிறது.

 

காடுகளின் ஊடே மலைப் பாதையில் ஏறி ஜோர்டானை ஒரு குகைக்கு அழைத்துச் செல்கிறான் அன்செல்மோ. கொரில்லாக் கூட்டம் ஒன்றின் பிரதேசம் அது.  அகஸ்டினையும், ரபேலையும் பார்க்கிறார்கள். ரபேல் இதற்கு முன்பு ஒரு ரயிலை குண்டு வைத்து தகர்ப்பதற்காக வந்து அதில் தானே மாட்டிக் கொண்டு இறந்து  போன கஷ்கினைப் பற்றி சொல்கிறான்.

 

அந்தக் கொரில்லாக்களின் தலைவனான பாப்லோ சிடுமூஞ்சியாகவும், மன தைரியமற்றவனாகவும் காணப்படுகிறான்.  கிராமத்திற்கு சென்று, தான் சம்பாதித்து  இருக்கும் குதிரைகளை வைத்து அமைதியான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற கனவோடு பாப்லோ இருக்கிறான். ஜோர்டானின் நடவடிக்கைகளில்  நம்பிக்கையில்லாமல் வாதிடுகிறான். அவனது வாழ்வையும், கூட்டத்தையும் ஆபத்தில் மாட்டி விடுகிற காரியத்தை அந்த அந்நியன் செய்யச் சொல்வதாகத்  தோன்றுகிறது.

 

அந்தக் கூட்டத்தில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். ஒருத்தி பிளர். பாப்லோவின் மனைவி. இன்னொருத்தி மரியா. போர்க்கைதிகளை கொண்டு சென்ற  ரெயிலில் இருந்து காப்பாற்றப்பட்டவள். பாசிஸ்டுகளால் பலாத்காரம் செய்யப்பட்டு முடி முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் மிகுந்த பரிதாபமான முறையில்  வந்தவளுக்கு இப்போது முடி கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. அழகான தோற்றம் கொண்டவளாயிருக்கிறாள். பிளர் அழகற்றவளாயிருந்தாலும், அவளது  துணிச்சலுக்காக போற்றப்படுகிறவள். போர் ஆரம்பமானதும், பாப்லோவின் நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயிருந்த அந்தக் கூட்டத்தை அவளே  பாதுகாத்திருந்தாள். நாடோடிப் பெண்ண்ணான அவள் ஜோர்டானின் உள்ளங்கையைப் பார்த்து ஜோசியம் சொல்ல ஆரம்பிக்கிறாள். முழுவதையும் சொல்லாமல்  மறைக்கிறாள்.

 

பாப்லோ தனது கோழைத்தனத்தால் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொள்கிறான். பாலத்தை தகர்ப்பதில் தனக்கு சம்மதமில்லை என  பகிரங்கமாக பேச ஆரம்பிக்கிறான். பிளர் கூட்டத்தின் தலைவியாக நின்று ஜோர்டானுக்கு ஆதரவளிக்கிறாள். பாப்லோவை கொன்றுவிடலாமா என்று ரபேலுக்கு  ஆத்திரம் வருகிறது. பாப்லோ தொடர்ந்து நம்பிக்கையற்றும், அவமானப்படுத்தியும் பேசிக்கொண்டே இருக்கிறான். ஜோர்டானுக்கே தான் இறங்கியிருக்கும்  செயல் சரியா, தப்பா என்று தோன்ற ஆரம்பிக்கிறது.

 

அந்த முதல் நாள் இரவில், குகைக்கு வெளியே இருக்கும் அவனது கூடாரத்திற்கு மரியா வருகிறாள். சிதைந்தும், நொந்தும் போயிருந்த அந்த சின்னஞ்சிறு  பெண் ஜோர்டானிடம் அன்பு செலுத்துவதற்கு யோசிக்கவில்லை. இருவரும் கலந்து, கரைந்து போகிறார்கள். பாவப்பட்ட தன்னை, இந்தக் காதல்  புனிதப்படுத்துவதாக மரியா நம்புகிறாள். மெல்ல தன்னிலைக்குத் திரும்புகிற ஜோர்டான், வாழ்வில் முதன்முதலாக ஒரு பெண்ணோடு ஏற்பட்ட உறவின்  சிலிர்ப்பில் சந்தோஷம் கொள்கிறான்.

 

இந்த புதிய உறவை கண்டு, களிப்படையும் காலம் ஜோர்டானுக்கு இருக்கவில்லை. தான் இறங்கியிருக்கும் பாதையில் எதிர்கொள்ளும் தடைகளே முன்னுக்கு  வந்து நிற்கின்றன. இரண்டாம் நாள் காலையில் உயரத்தில் பறந்த எதிரியின் விமானங்கள் அந்த முகாமில் பெரும் குழப்பத்தையும், அதிர்வையும்  ஏற்படுத்துகின்றன. மரியா, பிளர், ஜோர்டான் மூவரும் எல்சோர்டோ என்னும் கொரில்லாத் தலைவனைச் சந்திக்க மலைப் பாதையில் ஏறிச் செல்கிறார்கள்.  பாலத்தை தகர்ப்பது என்பது கடும் ஆபத்தான செயல் என்று சொன்னாலும், அவன் உதவ சம்மதிக்கிறான். அவர்கள் முகாமைவிட்டு கிளம்பவும் பனி பொழிய  ஆரம்பிக்கிறது. அந்த சமயத்தில் பயணிப்பது எதிரிகளுக்கு எல்சோர்டோவின் தடங்களைக் காட்டிக் கொடுத்து விடும்.

 

அன்செல்மோதான் ஒரே நம்பிக்கையாக இருக்கிறான். ஒரு செயலில் காட்டுகிற ஈடுபாட்டையும், விசுவாசத்தையும் மீறி, அவனுக்குள் மனிதாபிமானம் நிறைந்து  இருக்கிறது. பாலம் தகர்க்கும் பணியில் இன்னொரு மனிதனை கொல்வதற்கு ஜோர்டான் கட்டளையிடுவானோ என்றுதான் கவலைப்படுகிறான். எதிரிகள்  எல்லோரையும் பாசிஸ்டுகளாக அவன் பார்க்கவில்லை. தன்னைப் போல சாதாரண, எளிய நாட்டுப்புற மனிதர்கள்தான் அவர்களும் என்றுதான் தோன்றுகிறது.

 

கொரில்லாக்கள் உட்கார்ந்து பேசுகிறார்கள். மரியாவைப்பற்றி ஜோர்டானிடம் பாப்லோ கொச்சையாகப் பேகிறான். இதையேச் சாக்காக வைத்து அவனைச்  சண்டைக்கு அழைத்து கொன்றுவிடலாமா எனத் தோன்றுகிறது. பிளர் அவனைக் கடுமையாகப் பேசி விரட்டி விடுகிறாள். மெல்ல பாப்லோ தணிந்து விடுகிறான்.  நாடோடிகளுக்கு மரணத்தின் வாசனை தெரிந்துவிடும் என்கிறாள் பிளர். தான் அங்கு மிகக் குறைவான அவகாசமே இருக்க வேண்டியிருக்கும் என்பதை  உணர்ந்திருக்கும் ஜோர்டான் அன்றும் மரியாவோடு தாபத்தோடு உறவு கொள்கிறான். 'என் முயலே, உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்' என  பிதற்றுகிறான். மாட்ரீட்டில் அவர்கள்  நடத்தப் போகும் குடும்பத்தைப் பற்றிய கனவுகளில் ஆழ்ந்து போகிறார்கள். தானும் மரியாவும், அந்தக் காட்டில் ஒரே  விலங்காகி விட்டதைப் போல இருக்கிறது. மரணத்திற்கு எதிரான ஒரு கூட்டாகவும் அது புலப்படுகிறது.

 

மூன்றாம் நாள் காலை, எதிரிப்படையின் குதிரைகளின் சத்தத்தில் விழிக்கிறான். ஓளிந்து நின்று பார்க்கிறார்கள். சத்தங்கள் கரைகின்றன. மரியாவை தான்  காதலித்தாலும் அவளை ஜோர்டானுக்கு கொடுத்து விட்டதாக அகஸ்டின் கருதுகிறான். மிக நாகரீகமாக ஜோர்டானிடம் அதை வெளிப்படுத்துவதோடு  பெருந்தன்மையாகவும் நடந்து கொள்கிறான்.

 

கொஞ்ச நேரத்தில் எல்சோர்டோவின் முகாமிலிருந்து சத்தங்கள் கேட்கின்றன. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஜோர்டானுக்குத் தோன்றவில்லை.  பாலத்தைத் தகர்ப்பதே அவனுக்கு பிரதான பணியாக முன் நிற்கிறது. அதுவரை கண்டுபிடிக்கப்படாமலிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாயிருக்கிறது.  எல்சோர்டாவின் முகாமில் ஜாக்குவின் என்னும் இளைஞன் கம்யூனிஸக் கோஷங்களை முழக்கமிட்டவாறே தன் சகாக்களை உற்சாகப்படுத்துகிறான்.  முடிந்தவரையில் எதிரிகளைக் கொல்வது என போரிடுகிறார்கள். மேலிருந்து வீசப்பட்ட சக்திவாய்ந்த அதற்கு அவகாசம் அளிக்கவில்லை. அங்கிருந்த  அனைவரும் கொல்லப்படுகிறார்கள். 

 

அடர்த்தியான மரங்களுக்கு ஊடேயிருந்து சூரியனின் கதிர்கள் பாய்ந்துகொண்டிருக்க அல்சென்மோ பிரார்த்தனை செய்கிறான். ஜெனரல் கோல்ஸுக்கு தாக்குதலை  தாமதப்படுத்த வேண்டும் என ஒரு செய்தியை ஆண்ட்ரூஸ் மூலம் ஜோர்டான் அனுப்புகிறான். அந்தப் பயணத்தில் பார்க்கும் காட்சிகள் படைகளிடம் காணப்படும்  அலட்சியத்தையும், தலைவர்களின் அசிரத்தையையும் விவரிக்கின்றன. மரணம் பற்றிய கவலையற்ற மனிதனாயிருந்த ஜோர்டானுக்கு இப்போது அடிக்கடி  மரணம் பற்றிய சிந்தனைகள் வருகின்றன. தன் தந்தை தற்கொலை செய்து கொண்டதும், தன் தாத்தா போர்க்களத்தில் வீரமரணம் அடைந்ததும் ஞாபகத்துக்கு  வருகின்றன.

 

அன்று இரவு மரியாவும், ஜோர்டானும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். உயிரோடு இருப்போமா, இல்லையா என்று  தெரியாத நிலையில் அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள். விரைவில் எல்லாவற்றையும் முடித்து விடுபட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். மரியாவோடு  சந்தோஷமாக வாழும் ஆசை அவனை அலைக்கழிக்கிறது. அவனது மொத்த காலத்தையும் இந்த மூன்று நாட்களில் வாழ்ந்துவிட்டதாகத் தெரிகிறது.

 

வெடிமருந்துகளை எடுத்துக் கொண்டு பாப்லோ ஓடிவிட்டதாக  காலையில் பிளர் வந்து எழுப்புகிறாள். தனது திட்டம் பலிக்குமா என்று தெரியாமல் தவிக்கிறான்  ஜோர்டான். பாலத்தை தகர்ப்பதற்கு போதுமான உபகரணங்கள் குறைவாக இருக்கிறது. தாக்குதல் தொடுப்பதை தாமதப்படுத்த ஜெனரல் கோல்ஸுக்கு அனுப்பிய  தகவல் தாமதமாகப் போய்ச் சேருகிறது. எப்படியும் பாலத்தை உடனடியாக தகர்த்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறான் ஜோர்டான்.

 

தான் ஒன்றும் கோழையல்ல என்று ஐந்து புதிய கொரில்லாக்களோடு வந்து சேருகிறான் பாப்லோ. குதிரைகளுக்காக தனது புதிய சகாக்களை பலியிட  தயாராகிவிட்டானோ என்று சந்தேகம் வருகிறது. பாலத்தை வந்தடைகிறார்கள். அதன்  காவலாளியைக் கொல்லும்படி அன்செல்மோவுக்கு கட்டளையிடுகிறான்  ஜோர்டான். கண்ணில் நீர் பெருகியபடி அதனை நிறைவேற்றுகிறான் அவன்.

 

பாலத்துக்கு வெடி வைக்கிறார்கள். உருண்ட பாறையின் அடியில் சிக்கி அன்செல்மோ இறந்து போகிறான். எதிரிகளோடு நடக்கும் சண்டையில் ஜோர்டான்,  பாப்லோ, பிளர், மரியா, பிரிமிட்டிவோ, அகஸ்டின் ஆகியோரே மிஞ்சுகிறார்கள். குதிரையில் ஏறித் தப்ப முயற்சிக்கும்போது ஜோர்டான் மீது குண்டு பாய்கிறது.  கால் ஒடிந்து அவனால் நகர முடியவில்லை. "நாமிருவரும் ஒருவரே... நீ தப்பியாக வேண்டும். நமக்காக வாழ வேண்டும்" என்று மரியாவை அனுப்புகிறான்.  எதிரிகளோடு சண்டைபோட இயந்திரத் துப்பாக்கியொன்றைக் கொடுத்து விட்டு அவர்கள் புறப்படுகிறார்கள்.

 

வலியில் துடிக்கும் ஜோர்டானுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள் தலை தூக்குகின்றன. ஆனால் எதிரிகளோடு கூடுமான வரை சண்டை போட்டு  நேரத்தை கடத்துவதன் மூலம், தன் சகாக்கள் தப்பிக்க முடியும் என காத்திருக்கிறான். முதல் அத்தியாயத்தில் அவன் தேவதாரு மரங்களடியில் படுத்திருந்தானே  அதே நிலையில் இருந்தபடி உற்று கவனித்துக் கொண்டு இருக்கிறான். அவனது இதயத்துடிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. கதை முடிவடைகிறது.

 

விவசாயிகளும், கொரில்லாக்களும் எப்படி போரைப் பார்த்தார்கள், தலைவர்கள் குறித்த சிந்தனைகள், கம்யூனிஸம் குறித்த ஜோர்டானின் பார்வை, ஒரு பெரும்  காரியத்துக்காக தன்னை இழக்கப் போகிறோம் என்னும் போராளிகளின் தியாகங்கள், பாசிஸ்டுகளின் வக்கிரங்கள் என ஒரு பெரும் அரசியல் களத்துக்குள்  அழைத்துச் செல்கிறது நாவல். ஹெம்மிங்வேயின் கவிதை தோய்ந்த வரிகளில் காதலும், போரும் எதிரெதிர் நிலையிலிருந்து மனிதனை ஆட்டுவிப்பதை காண  முடிகிறது.

 

மரணத்தை எதிர்பார்த்திருக்கும் மனிதனின் கண்கள் எதையெல்லாமோ சொல்லிக் கொண்டே இருக்கிறது. அவனுக்கான இறுதி மணி அடிக்கப்பட்டுவிட்டது  என்பது புரிகிறபோது, வாகனுக்குள்ளும் அந்த ஓசை கேட்டு சலனப்படுத்துகிறது. கதை முடிந்த பிறகும் அது ரீங்காரமிடுகிறது. இழப்பைத் தவிர வேறு எதையும்  போர் மூலம் பெற முடியாது என்பதை உணர்த்தியபடி இருக்கிறது.

 

நாவலில் போரைக் கடுமையாக எதிர்த்த போதும், ஹெம்மிங்வே இடதுசாரிகளுக்கு ஆதரவான நிலையில் நின்றிருப்பதை உணரமுடியும். அவர்கள்தான்  மக்களால் இறுதியாக ஸ்பெயினில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். சாதாரண எளிய மனிதர்களுக்கான அரசாக அது அமைந்திருந்தது. சர்வாதிகார சக்திகளுக்கு  எதிராக இயங்கும் கொரில்லாக்களில் பெரும்பாலோர் விவசாயிகளாக இருப்பதை நாவலில் காட்டியிருக்கிறார். போராடும் மக்களுக்காக, ஆரம்பத்தில்  ஹெம்மிங்வே நிஜ வாழ்க்கையிலும் நிதி திரட்டி கொடுத்திருக்கிறார். சர்வாதிகாரி பிராங்கோவுக்கு ஆதரவாக படையனுப்பிய ஹிட்லருக்கும், முசோலினிக்கும்  எதிரான கருத்துக்கள் கொண்டிருந்தார்.

 

போர் நடந்து கொண்டிருக்கும் போது அதை நேரில் பார்த்தவருக்கு, போருக்கு காரணமான இரண்டு சக்திகள் மீதும் விமர்சனம் ஏற்பட்டது. பிராங்கோ  ஸ்பெயினின் அதிகாரத்துக்கு வந்த பிறகு இந்த நாவலை தடை செய்தார். பாசிசத்திற்கு எதிரான இந்த நாவலை தனக்கு எதிரானதாக அவர் கருதினார். அவர்  மரணமடைந்த பிறகு, 1975ல் இந்த நாவல் ஸ்பெயினுக்குள் விற்பனையானது. ஆனால் அதற்குள் உலகம் முழுவதும் இந்த நாவல் பெரும் அளவில் பேசப்பட்டு  விட்டது. ஏராளமான வாசகர்கள் விவாதித்து விட்டிருந்தனர். பிராங்கோவுக்கு வந்த மரணம் இந்த புத்தகத்திற்கு வரவில்லை.

 

சதாம் உசேன் கொல்லப்பட்ட போது, இந்த நாவலின் தலைப்பில் ஒரு கட்டுரை பாக்தாத்தில் இருந்து எழுதப்பட்டு இருக்கிறது. சதாமுக்காக அடிக்கப்பட்ட மணியா  ஈராக் போர் என்ற கேள்வியையும், இதுவரை இந்த போரில் இறந்து போன லட்சக்கணக்கான சாதாரண மனிதர்களுக்கான அனுதாபத்தையும், இதற்கு  காரணமான புஷ்ஷை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்று நியாயத்தையும் வலியுறுத்துகிறது அந்த கட்டுரை. 'யாருக்காக  மணியடிக்கிறது' சர்வாதிகாரிகளுக்கு எதிராக தனது ஓசையை எழுப்பிக்கொண்டே இருக்கிறது காலகாலமாய்.

 

இதற்குமுன் இந்தத் தொடரில் இங்கே எழுதியுள்ள தடைசெய்யப்பட்ட நாவல்கள்:

1.முன்னுரை

2.மேற்கு முனையில் அமைதியாக இருக்கிறது

3.ஹக்கிள்பெரிபின்னின் தீரச்செயல்கள்

4.அக்னி திராட்சைகள்

5.பரிசுத்தமானவன்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //'யாருக்காக மணியடிக்கிறது' சர்வாதிகாரிகளுக்கு எதிராக தனது ஓசையை எழுப்பிக்கொண்டே இருக்கிறது காலகாலமாய். //

    நல்ல பதிவு சாவு மணி இங்கு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சேர்த்துஅடிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. விடுதலை!

    அடிக்கும் நிச்சயமாய்...!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!