சொந்த மண்ணும், சொந்தக் கால்களும்

 

sornathai

 

'என்ன பாட்டி சேமியா ஐஸ் சாப்பிடுறீங்களா?'

 

கேட்டதும் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் வெட்கமும் , சந்தோஷமும் வந்துவிட்டது.  அப்போது கிளையில் அவர்கள் ஒருவர் மட்டுமே வாடிக்கயாளராக  இருந்தார்கள்.

 

'ஆமா..தம்பிக்கு எப்பவுமே வெளையாட்டுத்தான்.பாட்டிக்கிட்டே கேக்குற கேள்வியப் பாரு?'

 

'பாட்டி..ஒங்கக் கிட்ட முறுக்கு வேணுமா, கடலை உருண்டை வேணுமான்னு கேட்டா நா வெளையாடுறதாச் சொல்லலாம். ஐஸ்தான கேட்டேன். கடிக்க கிடிக்க  வேண்டியதில்லையே'

 

'அ..போங்க தம்பி.'  செல்லமாய் கோபப்பட்டார்கள்.  வாங்கிக் கொடுத்த போது மிகுந்த வாஞ்சையோடு பார்த்தார்கள். சொர்ணத்தாயம்மாள். வயசு  அம்பதுக்கு  மேலிருக்கும். நரை கலந்த முடி  ஒழுங்கற்று எனக்கென்ன என்று கலைந்திருக்கும். சாதாரணமாய் பேசும்போதே லேசாய் மூச்சிறைக்கும். எப்போதும் சின்ன  சுருதியோடு அசைந்தபடி இருக்கும் விரல்கள். ஒற்றை ஆளாய் குடும்பத்தை இழுத்த களைப்பு அந்த உடலிலும், மனசிலும் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும்.

 

முப்பது வருஷத்துக்கு மேலிருக்குமாம். ஒரு அதிகாலையில்  கருப்பட்டி கடித்து நீத்துப்பாகத்தை குடித்துவிட்டு  குருசாமி தலைக்கயிறையும், சுண்ணாம்பு கலந்த  குடுவைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பியவன்தான்.

 

பனைமரத்திலிருந்து கீழே விழுந்து  பேச்சு மூச்சற்று போனான். இதை இப்போது சொர்ணத்தாயம்மாள் சொல்லும்போதும் குரல் கரகரத்துவிடுகிறது. பார்வை  நிலைகுத்தி விடுகிறது. இரண்டு  ஆண்பிளைகளை வாழ்வின் அர்த்தமாகக் கொண்டு சொர்ணத்தாயம்மாள் சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


ஊருக்கு வெயே ஒற்றையடிப்பாதையாய் இழுத்துச் செல்லும் தேரிக்காட்டுக்குள் மூன்றுபேரின் வயிற்றுக்கான பிழைப்பு இருந்தது.. முட்களும் புதர்களுமாய்  அடர்ந்து கிடக்கும் ஒடை மரங்கள்தான் அந்த குடும்பத்திற்கு நிழல் தந்தன. காய்ந்த மரங்களை வெட்டி முள் அடித்து  ஒரு சுமை கொண்டு வந்து  ஊருக்குள்   பானைக்காரர் வீட்டிற்கு,  பட்டாணித் தாத்தா வீட்டிற்கு என்று மாற்றி மாற்றி  விறகு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கால்களில் மாறி மாறி புண்களும்,  கைகளில் சிராய்ப்புகளும் இருந்து கொண்டே இருக்கும். தேகம் முழுவதும், வெயிலும், முட்களும் பாய்ந்திருக்கும்.

 

இன்று இரண்டு பையன்களில் மூத்தவன் பம்பாயில் கடலை மிட்டாய்க் கடையிலும், இரண்டாவது மகன் வண்டலூரில் ஒரு பலசரக்கு கடையிலும் வேலை  பார்த்து கொண்டிருக்கிறார்கள். சொர்ணத்தாயம்மாள் அதே ஒற்றையடிப்பாதையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். வாரத்துக்கு இரண்டு நாள் வங்கிக்கு  வருவார்கள். இருபது ருபாயோ, பதினைஞ்சு ருபாயோ போடுவார்கள்.  ஒருநாளும் பணத்தை திரும்ப எடுத்ததே கிடையாது.

 

'பாட்டி.. எதுக்கு இங்க கிடந்து சங்கடப்படுறீங்க...பேசாம எதாவது ஒரு பையங்கிட்டப் போயி இருக்க வேண்டியதுதான?'
ஒருநாள் கேட்ட போது முதலில் கவனிக்காத மாதிரி இருந்தார்கள். பணத்தை போட்டு விட்டு  கிளம்பும்போது 'அது வந்து தம்பி... நமக்கு இந்த மண்ணுதான்  ஒட்டும்.  இங்கதான் இந்த கட்டை வேகணும்.' என்றார்கள். முகம் அழுத்தமாயிருந்தது.

 

'இல்ல..ஒடம்பை கவனிக்க...கடைசிக் காலத்துல ஒத்தாசையா இருக்க.. பிள்ளைங்க கூட இருக்குறது நல்லாயிருக்கும்னு  சொன்னேன்.'

 

'பாவம்யா.. எங்கயாவது அதுக நல்லாயிருக்கட்டும். நம்ம என்ன அவுங்களுக்கு பெரிய படிப்பா படிக்க வச்சுட்டோம். எதோ ஆளாக்கியிருக்கோம். இனும அதுக  பாடு. நாம  தொந்தரவா இருக்கக் கூடாது'

 

'நீங்க இந்தப் பணத்த எடுத்து ஒங்க காலுக்கு வைத்தியம் பாக்கலாம்ல. கொஞ்சம் சத்தான ஆகாரம் எதாவது  சாப்பிடலாம்ல'

 

'ஆமா..இதச் சாப்புட்டுத்தான் உயிர் வாழப்போறமா. போகுறதுன்னா எப்படியும் போகும். ஆனா அம்மா ஈமச் செலவுக்குன்னு கூட எம்புள்ளைக நாளைக்கு  கலங்கி நிக்கக்கூடாது. யாரையும் எதிர் பார்க்கக் கூடாது. அதுக்குத்தான் இதெல்லாம்' பாஸ் புத்தகத்தை கண்ணில் ஒத்திக் கொண்டு  காலை கொஞ்சம்  நொண்டியபடி சொர்ணத்தாயம்மாள் நடந்து சென்றார்கள்.

 

வாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாம் புதைந்து இருக்கிறது. இத்தனை வயதுக்கு பிறகும்  தன் காலில் நிற்க வேண்டும் என்கிற ரோஷமும்,  இந்த மண்ணோடு உயிரைப் பிசைந்து வைத்திருக்கிற  உறவும் கிராமங்களில், எளிய மனிதர்களிடம்தான்  இருக்கிறது.

 

என்ன நேரத்தில் அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டுச் சென்றார்களோ  இரண்டு மாதத்துக்குள் சொர்ணத்தாயம்மாள் இறந்து போனார்கள்.  மத்தியானம் போல  கிளையில் பணிபுரிந்த மூன்று பேரும் பார்க்கச் சென்றோம். மிகச் சின்ன குடிசையின் வாசலில் சொர்ணத்தாயம்மாளை படுக்க வைத்திருந்தார்கள். கட்டை  விரல்கள் இரண்டும் கட்டப்பட்ட அந்தக் கால்கள் ஒய்வெடுத்து இருந்தன. எத்தனை முறை இந்தக் கால்கள் வங்கியின் வாசலை மிதித்து இருக்கும். கண்கள்  கலங்கின.' மூத்த பையன் வர்றதுக்கு நாளாகும். இளையவன் சாயங்காலம் வந்துருவான். வந்தவுடன் எடுக்க வேண்டியதுதான்' யாரோ சொல்லிக் கொண்டு  இருந்தார்கள். நாங்கள் திரும்பினோம்.

 

எத்தனையோ  வாடிக்கையாளர்கள்..எத்தனையோ மனிதர்கள்...எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் என்று காலம் வேகமாக தாவிச் சென்றாலும் சிலர் நமது  கண்களுக்குள்ளேயே நிறைந்து விடுகிறார்கள்.எப்போதாவது  லெட்ஜரை புரட்டும்போது முடிக்கப்பட்ட கணக்கு உள்ள  அந்தப் பக்கம் சொர்ணத்தாயம்மாளை  ஞாபகப்படுத்தி மறையும். துயரமும், வைராக்கியமும் நிறைந்த உருவமாக நினைவுகளில் படிந்திருந்தார்கள்.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமையான பதிவு.. மனதை நெகிழச் செய்தது..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் மாதவராஜ்.. படித்ததும் அதன் பாதிப்பு எனக்குள்ளே இருப்பதை உணர்கின்றென்.. அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள்.. முடிந்தால் என் வலையில் வாருங்கள், உங்களின் வருகையில் என் எழுத்துக்களும் அருள் பெறுகட்டும்.

    அன்புடன் இளங்கோவன், அமீரகம்

    பதிலளிநீக்கு
  3. காலம் உதிர்த்த இலைகளாய் சிலர் மண்ணிலிருந்து மறைந்திருந்த்தாலும், மனதிலிருந்து மறைவதில்லை.

    பதிலளிநீக்கு
  4. ///..........துயரமும், வைராக்கியமும் நிறைந்த உருவமாக நினைவுகளில் படிந்திருந்தார்கள்.///

    அருமையான பதிவு...
    உங்கள் உண்ர்வுகளைப் படிக்கையில் நிறைய முகங்கள் நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.....

    பதிலளிநீக்கு
  5. யதார்த்தமான பதிவு. சுவைபடச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. கார்த்திகைப் பாண்டியன்!

    இளங்கோவன்!

    வேலன்!

    ஜீவராஜ்!

    செலவராஜ்!

    அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  7. death has its own impact with our hearts ever..But we shall try to love the others /all while they are living in the world..We are, many times,remembering and glorifying the past only..
    specifically see the faces of old persons and particularly old women>>>mothers>>in the trains>>buses>>in the streets>>>Dont you feel, the governments totally failed to take care of their lives?? All they are ignoring the welfare of the old people.One section of educated middle class exploiting the old age persons pensions.Are we going to allow those bastards>>>in the name of colleagues>>>friends>>>union members>>>supervisers>>.superiors?? All Readers ! you comments please.>>>>.vimalavidya

    பதிலளிநீக்கு
  8. dear mathav

    Sornathayammal would have just like any other woman of her very identically disturbing background lived and left this world. But the moment she entered into your writing, she stands immortalised - living for ever...

    deeply moving piece. I believe I have also seen her and I also shed tears when you shed at her feet.


    s v venugopalan

    பதிலளிநீக்கு
  9. விமலாவித்யா அவர்களுக்கு!

    உங்கள் வருத்தமும், கோபமும் மிகச் சரியானது, நியாயமானது. முதியவர்களையும், குழந்தைகளையும் இந்த அமைப்பு தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. வேணுகோபாலன்!

    ரொம்பநாள் கழித்து வந்திருக்கிறீர்கள். தங்களைப் போன்றவர்களின் கண்ணீர்த்துளிகளில் வாழ்க்கை நம்பிக்கையோடு தளிர் விடுகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!