யாரும் யாருடனும் கை குலுக்கலாம்

 

udhaya மின்னும்
நட்சத்திரமாக
பால்வெளியில்
அற்புதத்தில்
அந்தரமாய்
அனந்தகோடி வருடங்களுக்கு
தொங்கும் ஆசை
எனக்கில்லை
வீட்டு முற்றத்தில்
வெயிலில்
உயிர் வதங்கும்
அந்தச் செடிக்கு
ஒரு சிரங்கை நீரானால்
போதும். 

 

நண்பர் உதயசங்கர் எழுதிய கவிதை இது. தொடர்ந்து எழுத்துலகில் இயங்கி வரும் இவரின் படைப்புகள் வித்தியாசமாகவும், நுட்பமாகவும் இருப்பதை படித்தவர்கள் சட்டென உனர்ந்து கொள்வார்கள். இவருடைய 'யாவர் வீட்டிலும்' சிறுகதைத் தொகுப்பின் கதைகளைப் படித்து பிரமித்துப் போயிருக்கிறேன். எழுதுகிறவர்கள் யாரும் வார்த்தைகளோடு தயாராவதில்லை. இதை எழுதலாம் எனத் தோன்றுமே தவிர, இப்படி எழுத வேண்டும் என்பது திட்டமிட முடியாது.  எழுதும் அந்த நேரத்தின் மன ஒட்டமாக, மிக அந்தரங்கமான ஒரு வெளியில் இயங்குவது போல, வார்த்தைகள் கோர்க்கப்படுகின்றன. பிரக்ஞையோடு பிறகு அவை சரிபார்க்கப்படுகின்றன என வேண்டுமானால் சொல்லலாம். உதயசங்கருக்கு இந்த நிலை  அற்புதமாக கூடி வருவதை வாசிக்கும் போது நம்மால் உணர முடியும். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளும்,  இரண்டு கவிதைத் தொகுப்புகளும், குழந்தைகளுக்கான கவிதைத் தொகுப்பு ஒன்றும், மேலும் பல மொழி பெயர்ப்புகளும் படைத்திருக்கும் எழுத்தாளர் உதயசங்கரை தமிழ் இலக்கிய உலகம் சரியாக கொண்டாடவில்லையென வருத்தம் எனக்குண்டு. ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிகிறார் அவர். அவருடைய எழுத்துக்களைப் படிக்கும் போது, ஆளரவமற்ற இரவு நேர ரெயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து அவர் எழுதிக்கொண்டிருப்பது போல எனக்கு பிரமைகள் ஏனோ ஏற்படும். அவரை ஏற்றிச் செல்ல இன்னும் ரெயில் வராமலிருக்கிறது.

 

அவரது கவிதைகளில் சிலவற்றை உங்கள் முன்வைத்து ஒதுங்கிக் கொள்கிறேன். நீங்கள் அவரை ஏற்றிச் செல்வீர்கள் எனும் நம்பிக்கையுடன்....

 

யாரும் யாருடனும்

யாரும் யாருடனும் கை குலுக்கலாம்
யாரும் யாருடனும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை
யாரும் யாருடனும் பேசிக் கொள்ளலாம்
யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை
யாரும் யாரையும் நேசிக்கலாம்
யாரும் யாரையும் நேசிக்கவில்லை
யாரும் யார் பொருளையும் எடுத்துக் கொள்ளலாம்
யாவரும் யாவர் பொருளையும்
அபகரித்து மறைந்தனர்

 

உரையாடல்

இப்போது
என்வீடும் நானும்
உரையாடிக்கொண்டு இருக்கிறோம்
தனிமைகளில்
மனைவி  மக்கள்
ஊர் சென்ற பொழுதுகளே
அந்தரங்கமான
எங்கள் தனிமைப் பொழுதுகள்
நூலாம் படைகளினால்
தன்னை அலங்கரித்த வீடு
புழுதியை வாசனைப் பவுடராய்ப்
பூசி மினுமினுக்கிறது
இருளும் ஒளியும் கலந்த
விநோத நிறத்தில் உடை உடுத்தி
சுவர்க்கோழிகளைத்
தூதனுப்பி அழைக்கிறது என்னை
நம்பவில்லை நான்
நடுநிசியில்
எப்படியோ ஒன்றிரண்டு முறை
தன்னைப் பார்க்க
நிர்ப்பந்திக்கிறது என்னை எழுப்பி
ஹேங்கரில் ஆடியது என் உடல்
நாற்காலியில் முதுகுக்கு மேல்
சுழன்றது என் தலை

 

 

பூப்பூவாய்..

பூப்பூவாய்ப்
பூப்பதே
உன் வாழ்க்கை
பறிக்கும் கைகளையோ
சூடும் தலைகளையோ
மிதிக்கும் காலகளையோ
பற்றியென்ன கவலை?

 

 

இருத்தல்

கதவைத் திறந்து
வெளியை
விழுங்கி விழுங்கிப் பார்க்கிறது
வீடு,
வெளியின் வயிற்றுக்குள்
தான் இருப்பது
அறியாமல்

 

 

முரண்

நான் நினைத்தபடி
நீயில்லை
நீ நினைத்தபடி
நானில்லை
ஆசை
தர்க்கமில்லாத
கவித்துவக் குமிழ்
ஆனால் யதார்த்தம்
அழகான குமிழ்களைப்
படீரென
வெடிக்கச் செய்யும்
குரூரமான
கூர்முனை கொண்டது சகியே

 

 

சிறுகல்

புழுங்கிப் புழுங்கித் தேய்ந்த
சொற்களால் கட்டிய கவிதையிது
நைந்து கிழிந்த அர்த்தங்களினால்
தடுமாறி நிற்கும் கவிதையிது
பசித்து மெலிந்த எழுத்துடல்கள்
கூனிக்குறுகி வரிசையில் நடக்கும்
வார்த்தைகள் கொண்ட கவிதையிது
நலிந்து நசிந்த
இந்தைக் கவிதையினால்
என்ன செய்ய முடியுமென்று
சிரிக்காதீர்கள்.
பகாசுரனான கோலியாத்தை
வீழ்த்தியது
சிறிய தாவீது வீசிய
சிறுகல்
என்று அறிவீர்களாக.

 

udhaya book

 

கவிதைத் தொகுதி:


தீராத பாடல்
காலம் வெளியீடு
25, மருது பாண்டியர் 4வது தெரு
கருமாரியம்மன் கோவில் எதிர்
மதுரை- 625002

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. dear mathav

    Your cherishing Uthayasankar's poems with an absorbing intro
    proves your warmth for fellow comrades...

    Thaam Inburuvathu
    ulagu inburak kandu
    kaamuruvar....

    what else can one say..

    s v venugopalan

    பதிலளிநீக்கு
  2. முரண், வீடு இரண்டு கவிதைகளும் வெகு யதார்த்தம்.
    நன்றி மாதவராஜ்.

    என்னுடைய அதிர்ஷ்டம் எனக்கு நல்ல் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
    உங்களைப்போல் மதுமிதா போல் எழுத்துக்களை அறிமுகம் செய்வதால் மனம் நிரம்புகிறது. திரு.உதயசங்கருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதைகள் திரு.உதயசங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    நல்லதொரு பணி உங்கள் தளம் மூலம் இலகுவாக எனக்கான வாசிப்புக்களை இனங்கண முடிகிறது... நன்றிகள்


    /////இதை எழுதலாம் எனத் தோன்றுமே தவிர, இப்படி எழுத வேண்டும் என்பது திட்டமிட முடியாது. எழுதும் அந்த நேரத்தின் மன ஒட்டமாக, மிக அந்தரங்கமான ஒரு வெளியில் இயங்குவது போல, வார்த்தைகள் கோர்க்கப்படுகின்றன. பிரக்ஞையோடு பிறகு அவை சரிபார்க்கப்படுகின்றன என வேண்டுமானால் சொல்லலாம்.///

    உண்மை...
    இப்படி எழுதவேண்டும் என அடம்பிடித்து எழுதியவற்றுக்கு மனங்களை வெல்லும் வலு இருப்பதில்லை....

    பதிலளிநீக்கு
  4. Ananthen!

    தங்கள் வருகைக்கும், புன்னகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எஸ்.வி.வி

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.தொகுப்பில் இன்னும் அற்புத கவிதைகள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. வல்லிசிம்ஹன்!

    ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். உதயசங்கரின் எழுத்துக்களின் சில பொறிகளை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன்.

    //என்னுடைய அதிர்ஷ்டம் எனக்கு நல்ல் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
    உங்களைப்போல் மதுமிதா போல் எழுத்துக்களை அறிமுகம் செய்வதால் மனம் நிரம்புகிறது.//

    ரொம்ப சந்தோஷம். எனக்கும்தான். உங்களைப் போல நல்ல உள்ளங்கள் நண்பர்களாய் வாய்க்கப் பெற்றதற்கு.

    பதிலளிநீக்கு
  7. தங்கராஜ ஜீவராஜா!

    நன்றி.

    எழுதுகிறவர்களின் மனநிலை குறித்து இன்னும் விரிவாக எழுதணும். அது ஒரு அற்புதமான கணங்களாகவே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான். இவ்வளவு எழுதியுள்ளவர் பரவலாக அறியப்படாதது துரதிர்ஷ்டமே. எல்லாக் கவிதைகளும் நன்று எனினும், 'முரண்' பிடித்தது.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  9. அனுஜன்யா!

    உதயசங்கரின் கவிதைகள் குறித்து நீங்கள் பாராட்டும் போது, நான் கவலைப் பட்டது நியாயம்தான் என்பது உறுதியாகிறது.

    பதிலளிநீக்கு
  10. //பூப்பூவாய்ப்
    பூப்பதே
    உன் வாழ்க்கை
    பறிக்கும் கைகளையோ
    சூடும் தலைகளையோ
    மிதிக்கும் காலகளையோ
    பற்றியென்ன கவலை? //
    போராட்ட‌க்க‌ள‌த்தில் நிற்கும் யாருக்கும் இவ்வுரைவீச்சு பொருந்தும்! உத‌ய‌ச‌ங்க‌ரை எங்க‌ளைப்போன்றோருக்கு அறிமுக‌ப்ப‌டுத்திய‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!